Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜராஜனும் வெற்றிமாறனும்: யார் இந்து?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜனும் வெற்றிமாறனும்: யார் இந்து?

ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜராஜ சோழன் இந்து மன்னனா அல்லது தமிழ் சைவ மன்னனா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் பலருக்கும், ‘இது என்ன புதுக்குழப்பம்?’ என்று வியப்பாக இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயம். பெயரில் அரசியல் இருக்கிறது.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மணி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் அதைத்தான் கூறினார். நமது இருப்பே அரசியல்தான் என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியதாகக் கூறினார். இதைத்தான் ‘ஆன்டு - பொலிடிக்கல்’ (onto-political) என்று கூறுவார் அரசியல் கோட்பாட்டாளர் வில்லியம் கனோலி.

வெற்றிமாறன் தன்னுடைய பேச்சில், எப்படி தமிழ் சினிமா திராவிட இயக்கத்தின் பங்கேற்பால் முற்போக்கான, மதச்சார்பற்ற அரசியலைப் பேசுவதாக மாறியது என்பதைக் கூறி, இன்றும் அந்த மரபைத் தொடர வேண்டிய அவசியம் ஏன் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். நமது அடையாளங்கள் களவாடப்படுகின்றன என்று கூறிய வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசப்படுகிறது, ராஜராஜசோழன் இந்து மன்னனாக மாற்றப்படுகிறான்’ என்றும் கூறினார். 

ஏன் பேசினார் வெற்றிமாறன்?

உலகெங்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகி பல்வேறு மொழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ‘ராஜராஜசோழன் இந்து மன்னனாக மாற்றப்படுகிறான்’ என்று வெற்றிமாறன் கூறியது பரவலாக விவாதத்தை உருவாக்கி உள்ளது. உள்ளபடி சொன்னால் வட இந்திய ஊடகங்களில் இந்தப் படத்தைக் குறித்து பேசும்போது, பலர் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளம் கண்டு பேசுவது உண்மை.  

இன்றுள்ள அரசியல் சூழலில் இந்து அடையாளம் என்பது இந்துத்துவ கருத்தியலில் ஒற்றை அகில இந்திய அடையாளமாக, பெரும்பான்மை அடையாளமாக மாற்றப்பட்டு சிறுபான்மை மக்களுக்கும், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் நலன்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அதிகாரக் குவிப்பிற்கு, பாசிஸ அணுகுமுறைக்கு துணைபோகிறது என்பதுதான் இதில் முக்கிய பிரச்சினையாகும். வெற்றி மாறன் நமது அடையாளங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதன் பொருள் தமிழகத்தில் இந்துத்துவ அரசியலின் ஊடுருவலைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.

ஆனால், இந்தக் கருத்தை வாசிக்கும் பலருக்கும் ஏற்படும் குழப்பம் இதுதான்: ‘சைவம், வைணவம் அனைத்தும் இந்து மதம் என்றுதானே இப்போது குறிப்பிடப்படுகிறது? அப்படி இருக்கும்போது சைவ சமயத்தை ஆதரித்த, தஞ்சை கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனை இந்து மன்னன் அல்ல என்று எப்படி ஒருவர் கூற முடியும்?’

இந்தக் கேள்விக்குச் சரியான பதிலை நாம் பெற வேண்டும் என்றால், நாம் இந்து மதம் என்ற ஓர் அடையாளம் எப்படி, எப்போது உருவாகியது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இந்து மதம் என்ற அடையாளத்தை உருவாக்கியது யார்?

சிந்து நதி தீரத்தை பாரசீக மொழியில் ‘ஹிந்த்’ என்று குறிப்பிட்டார்கள். அரேபிய மொழியில் ‘அல்-ஹிந்த்’ என்று குறிப்பிட்டார்கள். எட்டாம் நூற்றாண்டில் முஸ்லீம்கள் அங்கு குடியேறியபோது, முஸ்லீம் அல்லாதவர்களைக் குறிக்க பாரசீக மொழியில் ‘ஹிந்து’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார் புகழ்பெற்ற ஆய்வாளரும் லங்காஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியருமான காவின் ஃபிளட் (Prof.Gavin Flood). “பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சம்ஸ்கிருத நூல்களிலும் சிலர் இந்த ‘ஹிந்து’ என்ற அடையாளத்தைப் பயன்படுத்தினார்கள்” என்று அவர் சொல்கிறார்.

ஆனால், ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்பே பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த ஹிந்து என்ற சொல்லுடன் இஸம் என்ற மேற்கத்திய பின்னொட்டைச் சேர்ந்து, ‘ஹிந்துயிஸம்’ என்ற வரலாற்று மத அடையாளம் உருவாக்கப்பட்டது. புத்திஸம், ஜெயினிஸம், சீக்கிஸம் என்று எல்லாவற்றிற்கும் இஸம் என்ற பின்னொட்டைக் கொடுத்து உலக வரலாற்று மதங்கள் என்று அடையாளப்படுத்தினார்கள். மேற்கத்திய பல்கலைகழகங்களில் இவற்றைக் குறித்து பாடங்கள் நடத்த ஆரம்பித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் இந்தியர்கள் மெள்ள, மெள்ள இந்த வார்த்தையை ‘இந்துயிஸம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலானார்கள்.

இவ்வாறு ஐரோப்பியர்கள் ஒற்றை அடையாளமாக இந்து மதத்தை உருவாக்கியபோது வேதம், உபநிதடம், பிராமணம், புராணம் எனப் பல்வேறு சம்ஸ்கிருத நூல்களை மையப்படுத்தியே இந்த மதத்தை அடையாளப்படுத்தினார்கள். அதனால், அவற்றுடன் சேர்த்து சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட தர்மசாஸ்திரங்களும் இந்துக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சட்டங்களாகக் கருதப்பட்டன. இது சம்ஸ்கிருதத்தை பேசிய, எழுதிய பிராமணர்களை இந்து மதத்தின் சகல சக்தி வாய்ந்த பிரிவினராக மாற்றியது.

பிராமணர் அல்லாதோரின் பிரச்சினை

இது பிராமணர்கள் அல்லாத பல்வேறு சமூகப் பிரிவினர், அவர்கள் வழிபாட்டு முறைகள், இறையியல் கோட்பாடுகள் எல்லாவற்றையும் திடீரென்று ஒரே அடையாளத்தில் சேர்த்துக்கட்டுவதாக மாற்றியது. ஓர் உதாரணமாக, தமிழில் சைவ சித்தாந்தத்தை தனிப்பட்ட சிந்தனை முறையாக வளர்த்துவந்த வேளாளர்களை பிராமணர்களுக்கு அடுத்து நிலையில் வைத்து சூத்திரர்கள் அல்லது சற்சூத்திரர்கள் என்று அழைக்கப்படும் நிலை உருவானதைச் சொல்லலாம். 

தனது ‘ஆரிய மாயை’ நூலில் அண்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் 1941இல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றைக் குறிப்பிடுகிறார். அதில், ‘சூத்திரர்களை பிராமணர்கள் மணந்தால் அந்தத் திருமணம் இந்து தர்ம சாஸ்திரங்களின்படி செல்லாது’ என்று நீதிபதிகள் பாண்டு ரங்க ராவும், சோமையாவும் தீர்ப்பளித்துள்ளார்கள் (Appeal Number 33 of 1939) என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இது எத்தகைய சிக்கலை பிராமணரல்லாதோருக்கு ஏற்படுத்தும் என்பதே பிரச்சினை. அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்துக்கள் என்றுதான் அரசு அடையாளப்படுத்தும். அவர்கள் அப்படி இந்துக்கள் என்று ஒப்புக்கொண்டால் அவர்கள் பிராமணர்களுக்குத் தாழ்வான சமூக அந்தஸ்துடனேயே வாழ வேண்டும். மேற்சொன்ன வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆண்டு ஏதோ பண்டைய காலமல்ல. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஆறு ஆண்டுகள் முன்னர்தான் இது நிகழ்ந்துள்ளது என்பது இங்கு எண்ணிப் பார்க்கப்பட வேண்டியது ஆகும்.

இந்துத்துவ அரசியலின் ஒற்றை இந்து அடையாளம்

இந்த சூழ்நிலையில்தான் தமிழ் சைவர்கள் தங்கள் மதம் தனித்துவமானது இந்து மதத்தைச் சேராதது என்று சொல்வதற்கு குறிப்பான பொருள் தோன்றுகிறது. இதுபோலவே தமிழ் தென் கலை வைணவர்களும் என்று கூறலாம். பிற கிராம தெய்வங்களை வழிபடுவோரும் தாங்கள் இந்துக்கள் அல்ல; கருப்பண்ணசாமியை வழிபடுபவர்கள் என்று கூறலாம்.

எதனால் இவர்கள் எல்லாம் சம்ஸ்கிருத மொழி நூல்களையும், பிராமணர்களையும் மையமாகக் கொண்ட இந்து மத்தினை தங்கள் மதமாக ஏற்க வேண்டும் என்று கேள்வி எழுவது இயல்பானதுதானே?

இந்தப் பழைய பிரச்சினை போதாதென்று இப்போது இந்து மதம் சார்ந்த இந்தக் கேள்வியை அரசியல் அடையாளம் சார்ந்த கேள்வியாக இந்துத்துவம் மாற்றியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக வன்முறைக் கிளர்ச்சி நடத்த விரும்பிய சாவர்க்கர், கடுமையான சிறைவாசத்திற்குப் பிறகு 1920களின் துவக்கத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் இந்துத்துவம் என்ற கருத்தியலை விளக்கும் ‘தி எசன்ஷியல் ஆஃப் இந்துத்வா’ (The Essentials of Hindutva) நூலை எழுதினார். இதன் பின்னணியை விரிவாக அறிய கலிஃபோர்னியா இர்வைன் பல்கலைக்கழகப் பேராசிரியர் விநாயக் சதுர்வேதி  எழுதிய ‘ஹிந்துத்வா அண்டு வைலன்ஸ்: வி.டி.சாவர்க்கர் அண்டு தி பாலிடிக்ஸ் ஆஃப் ஹிஸ்டரி’ (Hindutva and Violence: V.D.Savarkar and the Politics of History) நூலைப் படிப்பது அவசியம்.

சாவர்க்கரால் ஈர்க்கப்பட்ட ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்தார். சாவர்க்கர் ஹிந்து மகா சபையின் தலைவரானார். படித்தவர்கள், பெரிய மனிதர்களை ஹிந்து மகா சபை பிரதான உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. மத்தியதர வர்க்கத்தினரை அணிதிரட்டியது ஆர்.எஸ்.எஸ். இரண்டு அமைப்புகளுமே இந்துத்துவம் என்ற கருத்தியலை ஏற்றுக்கொண்டவை. இன்று வரை இந்து அமைப்புகளின் அரசியல் சித்தாந்தமாக இந்துத்துவமே இருக்கிறது.

இந்துத்துவம் என்ன சொல்கிறது என்றால், ‘இந்தியா என்பது இந்துக்களின் தேசம். இந்திய அரசு என்பது இந்து ராஷ்டிரம். இந்து என்பது யாரென்றால் இந்தியாவை யாரெல்லாம் தந்தை பூமியாக, தாய் பூமியாக, புண்ணிய பூமியாக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களெல்லாம் இந்துக்கள்’ என்பதுதான் வரையறை. வாடிகன், ஜெருசலேம், மெக்கா போன்ற இந்திய நிலப்பரப்பிற்கு வெளியில் உள்ள இடங்களைப் புனிதத் தலங்களாகக் கருதினால் அவர்கள் இந்து தேசத்தின் உண்மையான குடிமக்களாக இருக்க முடியாது என்பதே இந்தக் கருத்தாகும்.

இதன்படி இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் விலக்கப்படுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினையென்றால், அனைவரும் இந்துக்கள் என்று ஒற்றை அடையாளமாக மாறும்போது பல்வேறு சமூகங்களின் நலன்கள், மாநில நலன்கள், மக்கள் தொகுதிகளின் கலாசார வேறுபாடுகள், அவர்களுடைய உரிமைகள் எல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. மிக முக்கியமாக பிராமணியத்துக்குக் கீழே இவை தள்ளப்படுகின்றன.

இப்படி பல்வேறு வித்தியாசங்களை, அடையாளங்களைக் கொண்ட மக்கள் தொகுதிகளை, பல்வேறு முரண்களைக் கொண்ட சமூக இயக்கத்தை, ஒற்றை அடையாளத்தில் கட்டுவதைத்தான் பாசிஸ அரசியல் என்று கூறுவார்கள். ‘ஃபஷாய்ரே’ (Fasciare) என்ற இத்தாலிய சொல்லுக்கு சேர்த்துக் கட்டுதல் என்பதே அடிப்படைப் பொருள்.

பலரும் என்ன நினைக்கலாம் என்றால், எல்லோரையும் இந்து என்று சேர்த்துக் கட்டுவது ஒற்றுமையைத்தானே வளர்க்கிறது என்று நினைக்கலாம். ஆனால், அது சரியான வழியல்ல. வித்தியாசங்களைப் புரிந்து ஏற்று நல்லிணக்கத்துடன் வாழ்வதுதான் நாகரிகமே தவிர வித்தியாசங்களை அழித்து, ஏதோ ஓர் அடையாளத்தின் கீழ் எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டுவது அல்ல.

நவீன அரசியலில் ஒவ்வொரு குடிநபரும் இறையாண்மை பொருந்தியவர். தனக்கென உரிமைகளும், சுதந்திரமும் கொண்டவர். நான் விரும்பினால் என்னை வைணவன் என்று அழைத்துக்கொள்ளும் சுதந்திரம் வேண்டும். நான் திருமாலைத்தான் வழிபடுவேன், சிவனை வழிபடமாட்டேன் என்று சொல்லும் சுதந்திரம் வேண்டும். வேறொருவருக்கு வேறொரு தெய்வம். இன்னொருவருக்கு தெய்வ நம்பிக்கையே கிடையாது. இப்படியிருக்க எல்லோரும் ஏன் இந்து என்று கூறிக்கொள்ள வேண்டும்?

எல்லோர் நலன்களும் ஒன்றல்ல!

ஒவ்வொரு வர்க்கத்தின் நலன்களும், ஒவ்வொரு மக்கள் தொகுதிகளின் நலன்களும் வேறுபட்டவை. தலித்துகளின் தேவைகள் வேறு; பிராமணர்களின் தேவைகள் வேறு. அவர்களுக்குள் முரண்கள் இருக்கலாம். முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் முரண்கள் நிலவத்தான் செய்யும். அந்த முரண்களையெல்லாம் ஒற்றை அடையாளத்தை முன்வைத்து புதைத்து வைக்க முயற்சிக்கக் கூடாது.

அதேபோல இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமிக்கவை. அவற்றின் அரசியல் தன்னுணர்வு தனித்துவமானது. அதனால் அந்தந்த மாநிலங்களின் அடையாளங்களையும் பொது அடையாளத்தில் அழித்துவிடக் கூடாது. மாநில சுயாட்சி உரிமைகளை மறுக்கக் கூடாது.

இதையெல்லாம் புரிந்துகொண்டால் ஏன் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் ராஜராஜன் தமிழ் சைவன் என்பதே சரியானது என்பதையும், அவன் வாழ்ந்த காலத்தில் இல்லாத சொல்லான இந்து என்ற அடையாளத்தை அவனுக்கு வழங்க ஒருவர் விரும்பாததையும் புரிந்துகொள்ள முடியும்! 

 

 

https://www.arunchol.com/rajan-kurai-krishnan-on-rajarajan-and-vetrimaran-issue

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.