Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி மீதான பெருநடவடிக்கை:

Featured Replies

வன்னி மீதான பெருநடவடிக்கை:

தாமதிக்கப்பட்டதா? தவிர்க்கப்பட்டதா?

சேனாதி (தாயகம்)

படலையின் பின்னே நின்று மண்ணை விறாண்டிக் குரைப்பது போன்ற மிக நீண்ட கட்டியங்களின் பின்னணியில், வன்னிப் படையெடுப்பிற்கான இறுதி ஆயத்தங்கள் என்று தோன்றக்கூடிய சில செயற்பாடுகளில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

படைத்துறையின் முதன்மை அதிகாரிகளும் பாதுகாப்புச் செயலரும் குடாநாட்டிற்கு வருகை தந்து சில ஏற்பாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதான செய்திகள் பரவலாக உலாவுகின்றன.

மணலாறு மாவட்டத்தின் சில கிராமங்களில் அடிக்கடி எறிகணைப் பரிமாற்றம் நடந்துவருவது கூட அங்கே ஒரு முறுகல் நிலை விரிவதற்கான அடையாளமே என கொழும்பு ஆய்வாளர் சொல்கிறார்கள்.

கிழக்கில் படைநகர்வுகளைச் செய்த கட்டமைப்பும் அதன் கட்டளைத் தளபதியும் மணலாற்றுக்கு அனுப்பப்படுவது மற்றும் 58 ஆவது டிவிசனின் உருவாக்கம் என்பன அங்கே ஒரு முனை திறக்கப்படுவதற்கான நிச்சயமான குணங்குறிகள் எனவும் பேசப்படுகிறது.

இங்கனம், வன்னிப் பெருநிலப்பரப்பைச் சுற்றி தனது வியூகத்ததை இறுக்கி வருவது போன்ற தோற்றப்பாட்டை அரசாங்கம் வெளிக்காட்டும் நிலையில், அரசாங்கத்தைச் சுற்றியும் ஒரு வியூகம் இறுகி வருவது அவதானிப்பிற்குரியது.

இத்தகைய புறச்சூழலின் பின்னணியில் வன்னிக்கான பெருநடவடிக்கை அறிவித்தல்கள் திசைதிருப்பல் முயற்சியா, அல்லது அது தாமதிக்கப்படுகிறதா அல்லது தவிர்க்கப்படுகிறதா என்ற கேள்வி இப்போது மேலெழத் தொடங்கியிருக்கிறது.

இயல்பான தேர்தலுக்கான காலம் அண்மைக் காலத்தில் இல்லை என்ற யதார்த்தத்தை மீறி எதிர்க்கட்சிகள் பலத்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் காட்டிவருகின்றன, ராஜபக்சர்களின் ஆட்சிக்கான முடிவுக்காலத்தையும் ஆரூடம் கூறுகின்றன.

அவ்வாறான நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுவதற்கான வலுவான காரணம் என்ன, தமது சொந்தக்கட்சிக்குள் தமக்கான அரசியல் எதிர்காலம் முற்றுப்பெற்று விட்ட நிலையிலும் மங்கள சமரவீர மற்றும் சந்திரிகா போன்றோரைக் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு குஸ்தியில் இறங்கத் தூண்டிய விடயம் என்ன என்ற புதிரின் இடைவெளிகள் இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை.

மங்களவைப் பொறுத்தளவில், உள் அதிருப்தியால் வெளியேறியவர் என்றாலும், வெறுமனே கட்சிதாவும் மட்டத்தில் அல்லாது மேல்நிலை ஒப்பந்தம் ஒன்றை ஐ.தே.க.வுடன் செய்திருக்கிறார். அவர் ஒரு நல்ல தேர்தல் குதிரை என்பதே ஐ.தே.க. அவருக்குக் கொடுத்த மரியாதைக்குக் காரணம். எஸ்.பி.திசநாயக்கவும் இவரும் ஒரே கூட்டணியில் செயற்பட்டால் குறிப்பிடத்தக்களவு விளைவு கிடைக்கும் என்பதை வேறு அணிகளில் இருப்பவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.

சந்திரிகா அம்மையார் சிறிலங்காவின் உச்சநிலைக் குடிமகளாக இருந்து, இரண்டு தவணைகள் தனது ஆட்சிக்காலத்தை ஆண்டனுபவித்த பின் நாட்டைவிட்டு வெளியே சென்று இருந்தவர். இலங்கையின் நடைமுறை அரசியல் அமைப்பின்படி அவருக்கு இன்னுமோர் தடைவை அந்தப் பேறு கிடைக்கும் வாய்ப்பில்லை. பண்டாரநாயக்கர்களின் கைகளில் இருந்து நழுவி ராஜபக்சர்களின் காலில் விழுந்து கிடக்கும் சுதந்திரக் கட்சியை மீண்டும் வலைவீசி வசப்படுத்த முனையலாம் என்ற எதிர்பார்ப்பு வெளிப்படையானது.

அதையும் தாண்டி, ஒரு அரசியல் அமைப்பு மாற்றத்தையும், அதன்பின்னர் பிரதமராகும் வாய்ப்பையும் அவர் எதிர்பார்கிறார் என்றும் கொழும்பை அவதானிக்கும் சிலர் வாதிடுவதுண்டு. நோக்கம் என்னவாக இருந்தாலும், சுதந்திரக் கட்சிக்குள் அதற்குரிய அரசியல் வெற்றிடம் உருவாவதற்கான ஏதுநிலையைக் கணிக்காமல், உள்ளிருந்து சமிக்ஞை கிடைக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் இறங்கியிருக்க மாட்டார்.

ஆட்சியில் இருக்கும் கட்சியினர் இனப்பிரச்சினையைக் கையாளும் முறையைக் குறை கூறும் எதிர்ப்பு அரசியலையை நம்பியிருந்த ஜேவிபி, ராஜபக்ச அரசாங்கம் எதையுமே மிச்சம் வைக்காது உச்ச கதியில் இனவாதப் படமெடுத்து ஆடியபோது இடையில் கொஞ்சம் குழம்பி நின்றது என்னவோ உண்மைதான். இப்போது மெல்லச் சுதாகரித்துக்கொண்ட ஜே.வி.பி. விலைவாசி நடனத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. தேவைப்படின், அது தொழிற்சங்க நடவடிக்கையாக விசுவரூபமெடுக்கும் ஏதுநிலையும் உண்டு.

தமிழருக்கான தீர்வொன்று ஏற்படும் பட்சத்தில், அந்தத் தீர்வுக்கால அரசாங்கத்தை அல்லது தேசியக் கட்டமைப்பைக் குறைகூறியவாறே அதையடுத்து நடக்கும் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற நப்பாசை ஜே.வி.பியிடம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதுவரை தன்னைத் தக்;கவைத்துக் கொள்வதற்காகவாவது எதிர்ப்பரசியலைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு உண்டு.

ஆனால், இதையெல்லாம் துரும்பாக்கும் விதத்தில், இந்த அரசாங்கத்திற்குக் கொடுக்கும் கடனுக்கு நாங்கள் அமைக்கப்போகும் அரசாங்கம்; பொறுப்பாளியல்ல என்று போட்டுத் தாக்கியிருக்கிறது ஐ.தே.க. அத்தோடு நில்லாமல், ஐ.தே.க.வின் தலைவர் ரணில், நிதியைக் கட்டுப்படுத்தும்படி வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது கொஞ்சம் எல்லை தாண்டிய எகிறல் என்று தோன்றினாலும், அந்த நகர்வுகள் அரசாங்கத்தின் நம்பகத் தன்மையைப் பாதிக்கவே செய்தன.

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரின் கருத்துக்கள் பன்னாட்டிலும் உள்நாட்டிலும் வழக்கத்திற்கு மாறான மரியாதையுடன் கவனத்தில் எடுக்கப்படுவது கவனிப்பிற்குரியது. தலைநகர் கொழும்பிலும் மகிந்தவின் ஆதாரத் தளமான தெற்கின் மையத்தில் இருக்கும் மாத்தறையிலும் ஐ.தே.க. கூட்டணியின் பேரணிகள் பெருவெற்றி பெற்றுள்ளதால் ஐ.தே.க. தலைவரின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவருக்குப் பின்னால் நிற்கும் ~பெரிய| சக்திகளுக்குத் தரப்படும் மரியாதையே அது என்பதையும் மறுப்பாரில்லை.

மறுவளத்தில், அரசாங்கத்தில் அங்கம் வகித்தவாறே அதிருப்தியை வெளிக்காட்டி வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை, செத்த மட்டில் இருந்து உண்ணிகள் உதிர்வது போலக் கழன்றுகொள்ளத் தயாராக இருக்கின்றன. அவர்கள் அடம்பிடிக்கும் போதெல்லாம், அந்த மட்டத்திற்கு இறங்கிச் சமாதானம் செய்கையில், தனது ராஜகளை பாதிக்கப்படுவது மகிந்தவிற்குத் தெரியும்.

இதைவிட, கல்விப் பகுதியினரின் சீற்றம், தனியார் வாகன உடைமையாளரின் வெறுப்பு போன்ற சில்லறைச் சிக்கல்களும், வியூகம் அமைத்துத் தாக்குவதுபோலக் கருத்துப்போர் நடத்தி வரும் தென்னிலங்கைப் பத்திரிகைச் சமூகத்தின் சவால்களும் அவர் முன்னே சிறுதுளி பெருவெள்ளமாக விரிந்து கிடக்கின்றன. குறிப்பாக, மாணவரின் மீதான கண்ணீர்ப் புகைப் பிரயோகம் போன்ற நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் நினைவில் வைக்கப்பட்டு அடுத்த தேர்தலின்போது தண்டிக்கப்படுவதே வரலாறு.

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான மகிந்தவின் நகர்வுகள் ஒன்றும் புதியனவோ மறைமுகமானவையோ அல்ல. அது கிட்டத்தட்ட பிரேமதாசவின் பாணி என்று சொல்லப்படுகிறது. வெல்வெற் உறையிடப்பட்ட இரும்புக் கரம் என ஊடகச் சமூகத்தின் மீதான பிரேமதாசவின் கிடுக்கிப்பிடி வருணிக்கப்பட்டது. பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களினதும் அவ்வந்த நாடுகளினதும் நேரடியான அழுத்தங்களின் மத்தியில் மகிந்தவின் முயற்சி இரும்புச்; சாயமிட்ட வெல்வெற்றாகத் தொய்ந்து போய்விட்டது.

இதைத் தவிர, உள்நோக்கம் என்னவாக இருந்தாலும், போருக்கு எதிரானது போன்ற ஒரு புள்ளியில் நின்றுகொண்டு, மனித உரிமையை ஒரு கருவியாக்கி மகிந்தவை நோகடித்து வருகிறது மேற்குலகம். இருபுறமும் கருக்குள்ள பட்டயமான மனித உரிமை விடயமானது, ~பெரிய| சக்திகள் ~சிறிய| சக்திகளை ஏய்ப்பதற்குப் பயன்படும் பன்னாட்டுப் பிரம்பு என்பதைச்; சொல்லவேண்டியதில்லை.

இந்த எதிர்ப்பலைகளின் மத்தியில் சரிந்து கொண்டே போகும் பொருளாதார நிலையானது இடுப்பிலே கட்டிய கல்லாக அரசாங்கத்தை இருத்தி வைத்திருக்கிறது.

களமுனையைப் பொறுத்தளவில், அறுவடையின் பின் முதலீடு செய்வது போன்ற நிலையே கிழக்கில் ஏற்பட்டிருக்கிறது. குடும்பிமலையைக் கொண்டாடிய பின் கிழக்கிலே ஏற்படப்போகும் சிறு சம்பவத்தைக்கூட எதிரணியினர் தூக்கி வைத்து ஆடுவார்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. சம்பவங்கள் அற்ற நிலையில் கிழக்கை வைத்திருப்பதற்கான படைத்துறை முதலீடு என்பது மேலும் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை.

வடக்கில் அரசாங்கம் நடத்த விரும்பிய பெருநடவடிக்கையை நாடி பார்க்கும் செயலாக மன்னாரை எடுத்துக்கொண்டால், ஊடக அளவில் அதை ஒரு வெற்றியாகப் பேணுவதிலும் இழப்புக்களை இருட்டடிப்புச் செய்வதிலும் அரசாங்கம் நல்ல நிலையில் இருக்கிறது. இருந்தாலும், படையினரின் சடலங்கள் என்று வரும்போது, குறிப்பாக புலிகளிடமிருந்து படைச்சடலங்கள் பெற்றுக்கொள்ளும் தருணங்களில் தவிர்க்கமுடியாச் சங்கடங்கள் எழவே செய்கின்றன.

ஏனைய அனைத்துச் சிக்கல்களையும் படைத்துறை வெற்றிகளின் மூலம் தற்காலிகமாவது வலுவிழக்கச் செய்வதை ஒரு உத்தியாகவன்றி மூலோபாயமாகவே கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார் மகிந்த. குடும்பிமலையின் சாயம் மீண்டும் மீண்டும் பிழியப்பட்டு வெளிறியிருக்கும் தருணத்தில் வடக்கில் வெற்றிமுகம் காட்டவேண்டிய தவிர்க்கமுடியா நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆயினும், தடாலடியான நடவடிக்கைகள் படைத்துறைப் பிறழ்சாகசங்கள் ஆகிவிட்டால் என்ன நேரும் என்பதை நினைத்துப்பார்க்கவே அஞ்சுகிறது ராஜபச்ச அணி. படைத்துறை இழப்புக்களை இரை தேடும் ஓநாய்களின் வெறியோடு எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்திருக்கின்றன என்பதையும் இடைநிலைப் படை அதிகாரிகளிடையே அதிருப்தியாளர்களும் ஐ.தே.க. ஆதரவாளர்களும் இருப்பர் என்ற உண்மையையும் கருத்திலெடுக்கவேண்டிய தருணமாக இது அமைந்திருக்கிறது.

ஆகவே, மன்னாரைப்போன்ற கையடக்கமான நடவடிக்கையொன்றை ஊடக வகையில் கையாளக்கூடிய இடமான மணலாற்றில் செய்யும் நோக்கமும் இருப்பதாக அறியப்படுகிறது.

இவ்வகையில் வன்னி மீதான படையெடுப்பைத் தவிர்க்கவோ தாமதிக்கவோ முடியாத ஒரு தவிப்பு நிலவுவதே உண்மை. நிதியிலும் இராஜதந்திரத்திலும் சோபையிழந்து போன மகிந்தவின் தவிப்பானது, வழக்காளியா பங்காளியா என்ற விளிம்பு வரை மகிந்தரைத் தள்ளும் வலுவுள்ளதாயும் இருக்கிறது.

தென்னிலங்கையின் சமகால அரசியல் அறிநிலையில் சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாடு தவிர்;க்க முடியாதது. அந்நிலைப்பாட்டு வீரியத்தை வெளிக்காட்டும் அணுகுமுறைகள் மாறினாலும் எந்தவொரு தென்னிலங்கைக் கட்சியும் அந்த நிலைப்பாட்டிற்கு வெளியே உயிர்வாழ முடியாது. சிறிலங்காவின் ஆட்சிப்பீடத்தை நிறுத்தவிரும்பும் எந்த அணுகுமுறையும் அந்த எதார்த்தத்;திற்கு வெளியே அமைய முடியாது. இந்நிலையில் மகிந்தவின் முன்னுள்ள தேர்வுகள் அதிகமல்ல.

நன்றி: வெள்ளிநாதம் (24.08.07)

http://www.tamilnaatham.com/

  • தொடங்கியவர்

புலிகளுக்கு பேச்சில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவே வடக்கில் தாக்குதலை அரசாங்கம் நடத்தவில்லை

சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு புலிகளுக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும் நோக்கத்திலேயே அரசாங்கம் வடக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தாமல் இருக்கின்றது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசியல் தீர்வை சர்வகட்சி பிரதிநிதி குழுவின் ஊடாக வெளியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கின்றார். எனவே விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞையை வெளிப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

வடக்கில் உடனடியாக யுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்தால் தற்போதைய நிலைமையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கவேண்டிவரும். அதேவேளை, இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் உயரிய நோக்கம் காரணமாக இதுவரை வடக்குப் பகுதியில் தாக்குதலை நடத்தாமல் இருக்கின்றோம். இதனை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:

அரசாங்கம் முடியுமானால் வடக்கு மீது தாக்குதலை நடத்தட்டும் என்று முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சவால் விடுத்துள்ளார். அவர் அரசாங்கத்தை தாக்குதல் நடத்தும் வகையில் தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபடுகின்றார். ஆனால், அவரின் சதிமுயற்சியிலான கருத்துக்களை கண்டு நாங்கள் நிலைத்தடுமாற மாட்டோம்.

கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து மீட்டெடுத்துள்ளோம். இந்நிலையில் வடக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுபிரதேசங்களை மீட்பது குறித்து அரசாங்கம் நிதானமாக சிந்திக்கின்றது. அதாவது தற்போதைய நிலைமையில் வடக்கு பகுதி மீது தாக்குதல் நடத்தக்கூடிய அளவுக்கு பொருளாதார வசதிகள் இருக்கின்றதா? என்பதனை நாம் ஆராயவேண்டும். முதலில் பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தால் மட்டுமே யுத்தத்தை முன்னெடுக்கமுடியும். எனவே, அவ்விடயம் குறித்து சிந்திக்கவேண்டும்

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.