Jump to content

பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள். (மௌன உடைவுகள் 08)

பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள். (மௌன உடைவுகள் 08) 

            — அழகு குணசீலன் — 

இலங்கையின் ஆயுதப்போராட்ட வரலாறு இருதுருவங்களைக் கொண்டது. ஒன்று வடதுருவம், மற்றையது தென்துருவம். எப்படி ஒன்றுக்கு ஒன்று எதிர்த்திசையில் உள்ள இத்திசைகள் இணைய முடியாதோ, அப்படியே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனதும், ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜயவீரவினதும் அரசியலும் அமைந்து இருந்தன. 

தமிழ்த்தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் 2009 மே.18 /19 இல் முடிந்தது போன்று ஜே.வி.பி.யின் சிங்கள தேசியத்தை மையப்படுத்திய ஆயுதம் தாங்கிய வர்க்கப்போராட்டம் (?) ரோகணவின் மரணத்துடன் 1989 நவம்பர் 13 இல் முடிவுக்கு (?) வந்தது என்று கொள்ளவேண்டி உள்ளது. 

இந்த இரு தலைமைத்துவங்களும் தங்கள் போராட்டத்தை நேர்கோட்டு அரசியலாகவே முன்னெடுத்தனர். வளைவு, நெளிவுகள் விட்டுக்கொடுப்புக்கள் இருக்கவில்லை. இதனால் நேர்கோட்டு அரசியல் முறிந்துபோனது. இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையை எதிர்த்தல், இராஜதந்திர மூல உபாய அரசியல், போராட்டத்தில் மரணித்த போராளிகளின் நினைவேந்தல்கள், சுயநிர்ணய உரிமை போன்ற அரசியல் செயற்பாடுகளில் கூட ஒரு புள்ளியில் சந்திக்க இவர்களால் முடியவில்லை. சமாந்தரமான இரு நேர்கோடுகளாகவே அவை நகர்த்தப்பட்டன. இன்று கூறப்படுகின்ற இவர்கள் விட்டுச் சென்ற ஜனநாயக அரசியலின் நிலையும் அதுதான். ஒருபுறம் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் மறுபுறம் சிங்களத் தேசிய ஜே.வி.பி. அரசியல். 

இதனால் இவர்களின் அரசியல் என்றுமே ஒன்றுக்கொன்று துணையானதாக அல்லது ஒன்றின் நிரப்பியாக மற்றொன்றாக அல்லது ஒரு புரிந்துணர்வு, இணக்கப்பாட்டை கொண்டதாக ஒரு புள்ளியில் சந்திக்கவில்லை. இந்த நேர்கோட்டுப் பாதையூடான அரசியல் பயணம் இருதரப்பினரதும் அரசியல் பலவீனமாகவும், தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். ஒருவகையில் ஒரு எதிர்ப் புரட்சி அரசியலின் விளைவுகளையே இவர்களின் அரசியல் “எச்சமாக” விட்டுச் சென்றுள்ளது.  

1970களின் ஆரம்பம் ஒரு உந்துசக்தியாக- போராட்டத்திற்கான சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலையை இருதரப்புக்கும் வழங்குவதாக அமைகிறது. ஜே.வி. பி.யை. பொறுத்தமட்டில் இதற்கான கருக்கட்டல் 1960களின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்து. அதேபோன்று தமிழர் பக்கத்தில் குட்டிமணி போன்றவர்கள் 1970 களுக்கு முன்னரே ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்று அறியமுடிகிறது. ஆனாலும் அது ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றாக அன்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக சிதறிக்கிடந்திருக்கிறது. 

 பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சையில் சித்தியடைந்த ரோகண பல்கலைக்கழகம் செல்லமுடியவில்லை. இலங்கையின் பல்கலைக்கழக அனுமதி முறையானது ஒரு பகுதியினரை உள்வாங்கி விட்டு, மிகுதியானோருக்கு கதவை மூடுகிறது. இவ்வாறு கதவுக்கு வெளியே நின்ற ஆயிரக்கணக்கான இளையோரில் பட்டசன்தி டொன் ஜினதாச நந்தசிறி விஜயவீர என்ற இயற்பெயரைக் கொண்ட ரோகணவும் ஒருவர். 

1943 யூலை 14ம் திகதி கம்யூனிஸ்ட் கட்சி குடும்பத்தில் பிறந்த இவர், வாலிபப் பருவத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிரச் செயற்பாட்டாளர். இதனால் ரஷ்யாவில் பல்கலைக்கழக கல்வியை கற்பதற்கான வாய்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியின் சிபாரிசுடன் அவருக்கு கிடைக்கிறது. ரஷ்ய புலமைப் பரிசில் பெற்று லுமும்பா (LUMUMBA) பல்கலைகழகத்தில் வைத்திய கற்கை நெறியை 1960இல் ஆரம்பித்தார் ரோகண. ஆனால் சுகவீனமுற்ற நிலையில் 1963இல் இடைநடுவில் நாடு திரும்பினார். 

இந்தக்காலப்பகுதி சீனத் தலைவர் மாவோ சேதுங்கின் (MAO -TSE -TUNG) சிந்தனைகள் கம்யூனிஸ்ட் உலகில் பரவியகாலம். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்ய சார்பு, சீனச் சார்பு எனப் பிளவுபடுகிறது. ரோகண மாவோ சிந்தனைகளால் கவரப்படுகிறார், அந்த அணியில் செயற்படுகிறார். ரஷ்யாவுக்கு திரும்பிச் செல்ல விசா வழங்க மறுக்கிறது ரஷ்யா. அரசியல் பழிவாங்கல்.1965இல் அல்பானியாவின் ஸ்டாலினிஸ்ற் தொழிலாளர்கள் கட்சி உறுப்பினர்களை இலங்கையில் சந்தித்த ரோகண 1965 மே 14இல் புதிய இடது (சாரி) இயக்கத்தை (NEW LEFT MOVEMENT) ஆரம்பித்தார். பின்னர் வட கொரியா சென்று தமது போராட்டங்களுக்கு ஆதரவு கோரினார் ரோகண. 1971 கிளர்ச்சியின் போது வடகொரியப் படகுகளில் ஆயுதம் இறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

1965 இல் என்.சண்முகதாசனை சந்தித்த ரோகண அவரின் சீனச் சார்பு நிலைப்பாட்டால் கவரப்பட்டார். 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் பின்னணியில் சண்முகதாசன் இருந்தார் என்று நம்பப்படுகிறது. 1983 இனக்கலவரம் வரையும் தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத சண்முகதாசன் கலவரத்திற்குப் பின்னர் அதனை ஏற்றுக் கொண்டார். அது வரை ஒன்றுபட்ட இலங்கைக்குள்  -இலங்கைத் தேசிய பொது அடையாளத்திற்குள் ஒரு சமத்துவமான தீர்வை அவர் நம்பினார். ஆனால் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ரோகண பின்வந்த காலங்களில் அதை நிராகரித்தார். 

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் எவ்வாறு பல்கலைக்கழக கல்வி ஒரு திசைமாற்றத்தை ஏற்படுத்தியதோ, அவ்வாறான ஒரு பொதுப்பண்பை ஜே.வி.பி. யின் ஆரம்பக்கட்ட வளர்ச்சியிலும் காண முடிகிறது. ரோகணவிஜயவீர வறிய, விவசாய, கிராமிய, குடும்பங்களை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தமது விரிவுரைகள் மூலம் கவர்ந்தார். பல்கலைக்கழக கதவு மூடப்பட்ட இளைஞர்களும் ரோகணவின்பால் கவரப்பட்டனர். இங்கு முக்கியமாக  கிராமிய வேலையின்மையும், பல்கலைக்கழக கல்வி மறுப்பும் இனங்களைக் கடந்து இலங்கை மக்களின் பொதுப் பிரச்சினையாகிறது. இருதரப்பு சமூக, பொருளாதார பொதுப்பிரச்சினைகள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அதற்கான தீர்வுகள் ஒரு புள்ளியில் சந்திக்கவில்லை. தமிழர் அரசியல் இவை வெறுமனே தமிழருக்கான பிரச்சினைகள் எனக் காட்ட முற்பட்டது. இதனால் இருதரப்பு அரசியலும் ஒரு புள்ளியில் இணையவில்லை என்பது துரதிஸ்டவசமானது. 

 புதிய இடதுசாரி இயக்கம் பின்னர் ஜே.வி.பி (JANATHA VIMUKTHI PERAMUNA) மக்கள் விடுதலை முன்னணி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் ரோகணவின் விரிவுரைகளில் கூடினார்கள். இந்த வயதுப் பிரிவினர்தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்குப் பின்னாலும் அணிவகுத்தார்கள். ஒரு வித்தியாசம் தமிழ் இளைஞர்கள் குறிப்பிட்ட காலம்வரை மரபு ரீதியான தமிழ் பாராளுமன்ற அரசியலுக்கு பின்னால் கொடி பிடித்தார்கள். குறைந்தபட்சம் மாவட்ட சபை தேர்தல் வரை இந்த அண்ணன்மார், தம்பிமார் சகோதரபாச அரசியல் பண்பு இருந்தது. ஜே.வி.பி. இளைஞர்களோ ஆரம்பத்திலேயே மரபு ரீதியான இடதுசாரி பாராளுமன்ற அரசியலை நிராகரித்து சுயாதீனமாக புரட்சிகர சக்தியாக செயற்பட்டார்கள். 

1983 இனக்கலவரம் ஈழவிடுதலை இயக்கங்களில் ஒரு வீக்கத்தை ஏற்படுத்தியது. இயக்கங்கள் ஊதிப் பெருத்தன. ரோகணவின் அல்லது ஜே.வி.பி.யின் ஐந்து விரிவுரைகள் ஜே.வி.பியை கட்டி எழுப்புவதிலும், 1971 ஏப்ரல் கிளர்ச்சிக்கு வித்திடுவதிலும் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றது. அந்த ஐந்து வகுப்புக்களும் இவை. 

(*) இலங்கையின் முதலாளித்துவ அமைப்பு முறையூடான நெருக்கடிகள். 

(*) இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் வரலாறு. 

(*) சோஷலிசப் புரட்சியின் வரலாறு. 

(*) இந்திய விரிவாக்கம். 

(*) இலங்கையில் புரட்சிக்கான பாதை. 

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஜே.வி.பி.யின் சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது ரோகணவின் அரசியல் அஜெண்டா. ஆயுதப்போராட்டமே சோஷலிசப் புரட்சிக்கான ஒரேவழி என்பதை ரோகண தனது விரிவுரைகளில் இளைஞர்களுக்கு போதித்து அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். 

இங்கு நாம் கவனிக்கக்கூடிய விடயம் என்னவெனில் ஈழப்போராட்ட அமைப்புக்களின் தலைவர்கள் இந்தியாவில் குந்தியிருந்து (இந்திய இராணுவம் வரும்வரை) தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். ரோகணவோ நாட்டிலேயிருந்து போராடினார். அதிலும் முக்கியமானது என்னவென்றால் ஜே.வி.பி.யின்  இரண்டு கிளர்ச்சிகளின் போதும் (1971) ரோகண சிறையிலும், ( 1987) தலைமறைவு வாழ்விலும் இருந்தார்.  

1971 மார்ச் 13இல் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் ரோகரண கைதுசெய்யப்பட்டார். அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போதே 1971 ஏப்ரல் 5ம் திகதி கிளர்ச்சி வெடித்தது. 

ஒரே நாளில் 73 பொலிஸ் நிலையங்கள் கைப்பற்றப்பட்டன. அடுத்து வந்த நாட்களில் மேலும் 18 பொலிஸ் நிலையங்கள் ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் வீழ்ந்தன. 35 பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை பூரணமாக ஜே.வி.பி. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. 1971 மார்ச் 16ம் திகதி அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. பின்வந்த நாட்களில் 16,000 க்கும் அதிகமான இளைஞர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். 

அரச இயந்திரத்தைப் பாதுகாக்கும் கூலிப்படை இனம், மதம், மொழி பார்த்து தனது இராணுவ நடவடிக்கைகளை வேறுபடுத்துவதில்லை என்பதற்கு ஜே.வி.பி. யினருக்கும், சிங்கள இளைஞர்களுக்கும், சிங்கள மக்களுக்கும் எதிரான படையினரின் செயற்பாடுகள் ஒரு உதாரணம். அதே போன்று ஈழவிடுதலை இயக்கங்கள் போன்றே ஜே.வி.பி.யும் சொந்ந சிங்கள மக்களுக்கு எதிராகவும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை ஜே.வி.பி. 1987-1989 காலப்பகுதியில் தேர்வு செய்து சிங்கள மாற்றுக்கருத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகளுக்கு எதிராக மேற்கொண்டது.  

  1972 யூன் 12 முதல் 1974 டிசம்பர் 20 வரை இரண்டரை வருடங்கள் நீடித்த குற்றவியல் நீதி ஆணைக்குழு (CJC) விசாரணையில் ஜே.வி.பி. இளைஞர்கள்   நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இதில் ரோகணவுக்கு சீவியமறியல் தீர்ப்பளிக்கப்பட்டு மேன்முறையீட்டின் பின்னர் தண்டனை 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 

1977 இல் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான முரண்பாட்டில் அவசரகால சட்ட நீடிப்பு தோல்வியில் முடிந்தது. இதனால் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யவேண்டி ஏற்பட்டது. ரோகண விஜயவீர 1977 நவம்பர் 2ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். 1977 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஜே.ஆர். ஜெயவர்த்தன சிறிமாவை பழிவாங்கும் வகையிலும், ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி முன்னணிக்கு அரசியல் களத்தில் ஒரு சவாலாக அமையும் வகையிலும் ரோகரண விஜவீரவுக்கு மன்னிப்பளித்து, விடுதலை செய்தார். 1982 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோகண விஜயவீர 2,50,000 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்தார். 

1987 இல் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து   தென்னிலங்கையில் ஜே.வி.பி. யினால் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக வன்முறைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் தலைமறைவு வாழ்க்கைக்கு திரும்பிய ரோகண 1989 ஒக்டோபரில் உலப்பன தேயிலைத் தோட்டத்தில் அத்தநாயக்க என்ற பெயரில் தோட்டத் தொழிலாளி வேடத்தில் மறைந்திருக்கும் போது கைது செய்யப்பட்டார். 1989 நவம்பர் 13ம் திகதி கொழும்பில் அன்றைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜயவர்தனவின் உத்தரவின் பேரில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இரு போராட்டங்களுக்கும் இடையே ஒரு இணைப்பு இருந்திருந்தால் ரோகணவுக்கு வடக்கும், பிரபாகரனுக்கு தெற்கும் பாதுகாப்பான இடங்களாக அமைந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். அத்தோடு இந்தியப் படைக்கு எதிராக தனித்தனியாக வெவ்வேறு காரணங்களுக்காக போராடாது ஒட்டு மொத்த இலங்கையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கும். இனங்களுக்கு இடையிலான குரோதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கவும், தமிழ், சிங்கள இளைஞர்களின் இழப்புக்களை குறைக்கவும், மக்களின் இறப்புக்களை குறைக்கவும், இலங்கை இராணுவ இயந்திரத்தை இலகுவாக ஆட்டம் காணச் செய்யவும் முடிந்திருக்கும். ஒரு பகுதியில் அமைதியும் மறுபகுதியில் போராட்டமும் இலங்கை அரசுக்கே களத்தில் சாதகமான நிலைமையை ஏற்படுத்தியது. இந்தியா ஒருமுறை ரோகணவையும், மறுமுறை பிரபாகரனையும் தோற்கடித்திருக்கிறது. இதற்கு காரணம் இருவரும் தனித்து ஓடியதும், தங்கள் கூடைக்கு வீசியதும் தான் காரணம். 

1970 ம் ஆண்டுகள் முதல் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் போக்குகளை அவதானிக்கும்போது அல்லது திரும்பிப் பார்க்கும் போது பிரபாகரனும், ரோகண விஜயவீரவும் ஒட்டு மொத்த இலங்கையின் விடுதலை என்ற புள்ளியில் சந்தித்திருப்பார்களேயானால் அது தென்கிழக்காசியாவில் மற்றொரு வியட்னாமைப் படைத்திருக்கும். அல்லது இந்து சமுத்திரத்தில் ஒரு “கியூபாவை” தந்திருக்கும். ஆனால் இரு தரப்பு இனவாதமும், சந்தர்ப்பவாதமும், பெரும், குறுந்தேசிய வாதங்களும், ஒட்டு மொத்த இலங்கையின் விடுதலைக்குமாறாக இரு இனங்களினதும் தனித்தனியான விடுதலை சார்ந்து குறுகி, பிரிந்ததால் ஈழவிடுதலை, தென்னிலங்கை வர்க்க விடுதலை இலக்குகள் அந்தந்த நேர்கோட்டில் பயணித்து ஒரு பொதுப்புள்ளியில் சந்திக்க முடியாமல்  சிதைந்து போயின. 

இலங்கையின் இன்றைய இருதரப்பு பாராளுமன்ற அரசியலும் இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. தனித்து ஓடுவது விளையாட்டுப் போட்டியில்  இலக்கில் கொண்டு விடலாம். ஆனால் அரசியலில் குழுவான அஞ்சல் ஓட்டம் அல்லது அதற்கு சமமான குழு விளையாட்டு தேவை. இல்லையேல் அது பிரச்சினைகளுக்குள் இழுத்து விடுமே அன்றி தீர்வுகளை நோக்கிய இலக்கில் கொண்டு சேர்க்காது. இன்றைய ஜனநாயக அரசியலிலும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஒரு பொதுப்புள்ளியில் சந்திக்காதவரை தீர்வு என்பது வெறும் கனவு. 
 

 

https://arangamnews.com/?p=8273

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.