Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரப் பங்கீடின்றி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்யலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பங்கீடின்றி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்யலாமா?

-தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன–

அ.நிக்ஸன்-

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வர்த்தகச் செயற்பாடுகள் போன்ற பல திட்டங்களை முன் அறிவித்தல்கள் இன்றி ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்பச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களைச் சிறிய தீவான இலங்கை ரத்துச் செய்யும் சூழலில், எந்தவிதமான அரசியல் அதிகாரங்கள் – பாதுகாப்புகள் இல்லாத புலம்பெயர் தமிழர்கள் எந்த நம்பிக்கையோடு இலங்கையில் முதலிட முடியும் என்ற கேள்விகள் நியாயமானவை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து குறைந்த பட்சமேனும் மீள புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை எதிர்பார்க்கும் நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் மக்களின் முதலீடுகளை எதிர்பார்க்கிறார் என்பது தெரிகிறது.

தமிழ் உறுப்பினர்களைப் பேச்சுக்கு வருமாறு அழைத்த பின்னணியும். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்கில் அமைந்தமை என்பதும் கண்கூடு.

ஆகவே இரண்டு விடயங்களை இங்கே அவதானிக்க வேண்டும். ஒன்று, புலம்பெயர் மக்களின் உதவிகளைப் பெறுவது. இரண்டாவது அரசியல் தீர்வுக்கான பேச்சு என்று கூறி, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் விரிவடைகின்றன என்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்குக் காண்பிப்பது.

ஆனால் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்ற பட்டறிவு தமிழர்களிடம் உண்டு. அதுவும் புலம்பெயர் தமிழர்களிடம் அந்தப் பட்டறிவு அதிகமாகவே உண்டு என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் நம்ப மறுக்கின்றனர் அல்லது அவர்கள் சார்பான தமிழ் முகவர்கள் உர மூட்டுகின்றனர் எனலாம்.

2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்திலேதான் சில சர்வதேச ஒப்பந்தங்கள் செயலிழந்தன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு செய்யப்பட்ட கொழும்புத் துறைமுக கிழக்கு முனை அபிவிருத்தி ஒப்பந்தம், ஜப்பான் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையுடன் இணைந்து அபிவிருத்தியை மேற்கொள்வதென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாகக் கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனை அபிவிருத்தி சீனாவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று 2018 இல் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் அபிவிருத்தி உடன்படிக்கை தன்னிச்சையாகவே ரத்துச் செய்யப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மிலேனியம் சவால்கள் நிறுவன தலைவருடன் உரையாடி இணக்கம் தெரிவித்த நிலையிலேயே ஒப்பந்தம் கைச்சாத்தாகியது

அதேபோன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜப்பான் அரசின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் சேவைத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக ரத்துச் செய்துள்ளது.

spacer.png

திட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக ஜப்பான் அரசுடன் எந்தவிதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. இலங்கைக் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் அறிக்கையின் படி செப்டம்பர் 24, 2020 அன்று அங்கீகாரம் பெற்றிருந்த நிலையில் இத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

அதேவேளை, பதினைந்து வருடங்களுக்கு முன்னா் இந்தியாவும் இலங்கையும் 2006 இல் சம்பூர் மின் உற்பத்தி மற்றும் 2009 இற்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தன. ஆனால் இவை உரிய முறையில் செயற்படவில்லை.

2002 இல் கொழும்பில் அமைக்கப்பட்ட இந்தியாவின் அப்பலோ மருத்துவனை, 2006 இல் இலங்கையினால் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச விதிகளுக்கு மாறாக இலங்கை வர்த்தகர் ஒருவர் மூலம் வெவ்வேறு பெயர்களில் அதிகளவு பங்குகளைக் கொள்வனவு செய்து அப்பலோ மருத்துவமனையை இலங்கைக்கு உரியதாக்கி லங்கா மருத்துவமனை என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அப்போது கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் நிருபன் சென், அமைச்சராக இருந்த அமரர் அனுரா பண்டாரநாயக்கவுடன் கடுமையாகத் தர்க்கப்பட்டார். இலங்கை நாடாளுமன்றத்திலும் இந்தியாவுக்கு எதிரான விமர்சனங்களை அனுரா பண்டாரநாயக்க அள்ளி வீசினார்.

சென்னை இராமச்சந்திர மருத்துவமனையைக் கொழும்பில் அமைக்க சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது 2004 இல் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தயாராகியிருந்தது. ஆனால் 2005 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதியாகப் பதவியேற்ற பின்னர் அதனை ரத்துச் செய்தார்.

கொழும்பு கொள்பிட்டி காலி வீதியில் இந்திய தூதரகம் அமைப்பதற்கு 2013 இல் இடம் ஒதுக்கிவிட்டுப் பின் அதனை மீளப் பெற்றுச் சீன விமான நிறுவனம் ஒன்றுக்குக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் மகிந்த  கைச்சாத்திட்டார்.

இவ்வாறு பல ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டும் வேறு சில வெளிநாட்டு வர்த்தக முதலீடுகள் அபகரிக்கப்பட்டும் உள்ள சூழலில், புலம்பெயர் தமிழர்கள் எதனை நம்பி இலங்கையில் முதலீடு செய்ய முடியும்? இலங்கை அரச நிறுவனங்களை அல்லது அரச – தனியார் கூட்டு நிறுவனங்கள் சிலவற்றைப் பொறுப்பேற்றுச் செயற்படுத்த முடியுமா என்ற கேள்விகளும் நியாயமானவை.

உதாரணமாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியே அதன் பங்குகள் எமிரேட்ஸ் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால் லாபம் ஈட்ட ஆரம்பித்ததும், பின்னர் அந்த நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் மீளவும் பெற்றுக் கொண்டது.

ஆகவே வல்லாதிக்க நாடுகளின் பிரபல சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் இலங்கையோடு நம்பிக்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களைத் தன்னிச்சனையாக ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், அதிகாரமே இல்லாத எந்த ஒரு நாடுகளினதும் ஆதரவு இல்லாத சூழலில், புலம்பெயர்ந்த தமிழ் வர்த்தகர்கள் முதலீடு செய்தால், அல்லது சில அரச – தனியார் கூட்டு நிறுவனங்களின் பங்குகளைக் கொள்வனவு செய்து இயக்கினால் அதனை மீண்டும் தட்டிப்பறிக்க மாட்டார்கள்  என்பதற்கு என்ன உத்தரவாதம்?

வல்லரசு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டமை குறித்து இன்று வரை எந்த ஒரு சிங்கள ஆட்சியாளர்களும்  பொறுப்புக்கூறவும் இல்லை.

ஆகவே புலம்பெயர் அமைப்புகள் இந்த அநீதிகளைச் சுட்டிக்காட்டியும், எழுபது வருடங்களாகத் தமிழர்கள் ஏமாற்றபட்டமை குறித்தும் பரப்புரை செய்ய வேண்டும்.

அத்துடன் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்ற அங்கீகாரத்துடன் சுயாட்சி அதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்படாமல், இலங்கையில் எந்த ஒரு முதலீட்டுக்கும் தயார் இல்லை என்ற உறுதியான தகவலை சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்தவும் வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாசாவோ, சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்ற விரும்பமாட்டார்கள் என்பது எழுபது வருட உண்மை.

முதலீடுகளைச் செய்யுமாறு ரணில் அழைப்பு விடுத்துள்ள நிலையில், உள்ளகப் பொறிமுறைதான் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் ஏழாம் திகதி புதன்கிழமை செய்தியாளர்களிடம் துணிவுடன் கூறியிருக்கிறார்.

ஆகவே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் மாற்றத்தைச் செய்யாமல், உள்ளக ரீதியான ஒற்றையாட்சிப் பொறிமுறைகள் ஊடே கொழும்பை மையமாகக் கொண்ட அதிகாரப் பரவலாக்கத்தை மாத்திரம் இலங்கை விரும்புகிறது.

அத்துடன் சிங்களவர்கள் விரும்பும் அரசியல் தீர்வின் மூலம் புலம்பெயர் மக்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமெனவும் சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர் என்பதும் இங்கே பகிரங்கமாகியுள்ளது.

ஆகவே தமிழர்களுக்குரிய அரசியல் – பொருளாதார பாதுகாப்பு அற்ற ஒரு சூழலில் துணிவோடு அழைப்பு விடுக்கப்படுகின்றது என்றால், இதன் பின்னால் வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பும் இல்லாமல் இல்லை.

ஏனெனில் தம்முடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் பலவற்றை மீறியதால். அதற்குப் பதிலாக இலங்கையோடு பேரம் பேசி இலங்கையில் தமக்குரிய வேறு ஏதேனும் லாபங்களை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லாதிக்க நாடுகள்,  அரசுக்கு அரசு என்ற இராஜதந்திர உறவுகளின் மூலம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே அரசற்ற சமூகமாகக இருக்கும் புலம்பெயர் தமிழர்களைச் சிங்கள ஆட்சியாளர்கள் கன கச்சிதமாக ஏமாற்றுவர்கள் என்ற நுட்பமான அடிப்படை  உண்மை இந்த வல்லாதிக்க நாடுகளுக்குத் தெரியாததல்ல.

இலங்கையைத் திருப்திப்படுத்தவே  ஈழத்தமிழர் தொடர்பான சிங்கள ஆட்சியாளர்களின் சமீபகால நகா்வுகளை அமைதியாக இந்த வல்லாதிக்க நாடுகள் அவதானித்தக் கொண்டிருக்கின்றன.

spacer.png

குறிப்பாகத் தமது புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார நோக்கில் செயற்படும் இந்த வல்லாதிக்கச் சக்திகள், இலங்கைத்தீவில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இன முரண்பாடுகள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை.

ஆனால் முடிந்தவரை சிங்கள மக்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்குத் தமிழர்கள் இணங்கிச் செல்ல வேண்டுமென வற்புறுத்தியும் வருகின்றன.

2002 சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலும் இந்த நிலைப்பாட்டோடுதான் குறித்த வல்லாதிக்க நாடுகள் செயற்பட்டுமிருந்தன.

ஆகவே இதற்குச் சரியான பதில் கொடுக்க வேண்டியது புலம்பெயர் தமிழர்கள்தான். குறிப்பாக இலங்கையில் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் சில புலம்பெயர் வர்த்தகர்கள், சிங்கள ஆட்சியாளர்களின் நுட்பமான காய் நகா்த்தல்களையும், அது பற்றிய வல்லாதிக்கச் சக்திகளின் கள்ள மௌனத்தையும் ஆழமாக நோக்க வேண்டும்.

தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல வடக்குக் கிழக்குச் சிவில் சமூக அமைப்புகளுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு. வெறுமனே ஆரவாரங்களுக்கும் பரபரபரப்புப் பேச்சுக்களுக்கும் இடமளித்து ஈழத்தமிழர்களின் சுயமரியாதையை இழக்கும் ஆபத்துக்களில் சிக்கிவிட முடியாது.

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலேதான் இலங்கை வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கே முன்னுரிமை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாக நம்பகமான உள்ளகத் கூறுகின்றன.

இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எட்டாம் திகதி வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதையும்  அவதானிக்க வேண்டும்.

இந்தியாவை இலங்கை பல சந்தா்ப்பங்களில் இராஜதந்திர ரீதியாகவும், வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டதன் ஊடாகவும் அவமானப்படுத்தியிருக்கின்றது என்று தெரிந்தும், “இலங்கைக்கு முக்கியத்துவம்” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார் என்றால், இந்தியாவுக்கான முக்கியத்துவத்தை இலங்கை கொடுத்திருக்கிறது என்ற பின்புலத்தை அறியலாம்.

ஈழத்தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கவும் புலம்பெயர் மக்களின் முதலீடுகளை உள்ளீர்க்கவும் இந்திய ஆதரவுத் தளத்தை நீட்ட வேண்டுமென ரணில் கருதியிருக்கலாம். இந்தியாவும் ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கைக்கு எதிரான ஆயுதமாக்கித் தமக்குரிய புவிசார் நலன்களை அடைந்து வருகிறது என்பதும் புதிய விவகாரமல்ல.

ஆகவே இக் காரண காரியங்களை ஈழத்தமிழர்கள் மிக நுட்பமாக அறிந்து காய் நகா்த்த வேண்டும். குறிப்பாக இந்தியாவைக் கையாளும் பொறிமுறை ஒன்றைக் கட்சி அரசியலுக்கு அப்பால் வகுக்க வேண்டும். வடக்குக் கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற கருத்தை அது பிரதிபலிக்கவும் வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கு, தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதை உறுதிப்படுத்த எடுத்த முயற்சிகள் பற்றி அப்போது கொழும்பில் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிற் ”கொழும்பு அசைமென்ற்” என்ற தனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்த்தன எப்படிப் பிடிவாதமாக நின்றார் என்பது பற்றி டிக்சிற் தனது நூலில் விபரிக்கிறார். ஆகவே மேலும் அது பற்றிய ஆழமான உள்ளக விபரங்களைப் பெற வேண்டியது தமிழ்த் தரப்புக்கு அவசியமானது. இன்றும் கூட அதே பிடிவாதத்துடனேயே சிங்கள ஆட்சியாளர்கள் நகருகின்றனர்.

ஆனால் தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன.

2009 மே மாதத்திற்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியல் பரப்பு திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட பொறிமுறை ஊடாகச் செயற்படவில்லை. இப் பலவீனங்களை அறிந்தே ரணில் புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு செய்ய வருமாறு அழைத்திருக்கிறார் என்பதும் பகிரங்க உண்மை.

 

http://www.samakalam.com/அதிகாரப்-பங்கீடின்றி-புல/

 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2022 at 11:02, கிருபன் said:

தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன.

 

On 27/12/2022 at 11:02, கிருபன் said:

இதற்குச் சரியான பதில் கொடுக்க வேண்டியது புலம்பெயர் தமிழர்கள்தான்.

இணைப்புக்கு நன்றி

பாவம் இந்தக் கட்டுரையாளரும் எத்தனை விடயங்களைச் சுட்டி எழுதுகிறார். ஆனால் இந்தத் தமிழ்க் கட்சி    **மண்டைகளுக்குப் புரிகிறதா என்றால் இல்லை. புலம்பெயர்ந்தோர் என்ன செய்வது? அதனையும் தேவையில்லை என்றல்லவா அறிவியக்கமோ ஏதோ அரசியல் இயக்கமோ  ஏதோ ஒன்று சொல்கிறதாமே.!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.