Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைக்கூத்தல்: முதியவர்களை கொலை செய்யும் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்த கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கூத்தல்: முதியவர்களை கொலை செய்யும் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்த கதை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 பிப்ரவரி 2023
சமுத்திரகனி

பட மூலாதாரம்,@THONDANKANI

தலைக்கூத்தல் என்ற பெயரில் தமிழில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. 13ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக தலைக்கூத்தல் என்ற சொல்லை நான் எதிர்கொண்டபோது, எனக்கு அது அதிர்ச்சியைத் தந்தது.

விருதுநகர் மாவட்டத்தில், நோய்வாய்ப்பட்ட முதியவர்களை அவர்களின் பிள்ளைகளே எண்ணெய் குளியல் மூலமாக கொலை செய்யும் வழக்கத்திற்குப் பெயர்தான் தலைக்கூத்தல்.

இந்த கொலை பழக்கத்தை 2010ல் முதன்முதலில் செய்தியாக வெளியிட்டபின்னர், பல முதியவர்கள் தங்களது குடும்பத்தினர் விரித்த கொலை வலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

 

 

பெண் குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் பழக்கம் தமிழ்நாட்டில் 1990களில் பரவலாக இருந்தது. அதுபோலவே 2010ல் விருதுநகர் மாவட்டத்தில் பல கிராமங்களில் தலைக்கூத்தல் என்ற முதியவர்களை கொலைசெய்யும் பழக்கம் இருந்தது.

இது பற்றி தெரிய வந்ததும் முதியவர்களுக்குக் கொடுக்கப்படும் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளதாகக் கூறி, கிராமங்களில் உள்ள முதியவர்கள் பலரிடம் பேசி தகவலைச் சேகரித்தேன்.

 

பல வீடுகளுக்கு ஏறி, இறங்கினேன். தலைக்கூத்தல் பற்றி கேட்டபோது, அது ஒரு சமூகப்பழக்கம், முடியாத நேரத்தில் தலைக்கூத்தல் செய்து முதியவரை 'அனுப்பி' வைப்பதில் தவறில்லை என்று பலரும் சொன்னார்கள்.

அதை கருணைக் கொலை என்றும் சொன்னார்கள். சில முதியவர்கள் தங்களது பெற்றோருக்கு தலைக்கூத்தல் செய்ததையும், தங்களது பிள்ளைகள் தங்களுக்கு செய்தாலும், அதில் தவறில்லை என்றும் சொன்னார்கள்.

 

இந்த செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பல நாட்களில் எனக்கு என் தாத்தாவின் பிம்பம் என் கண் முன் வந்துவந்து போனது. வேலை காரணமாக சென்னையில் குடியேறியிருந்தாலும், அவரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசுவது, அவரை நலம் விசாரிப்பது என்ற புதிய பழக்கம் எனக்குள் வந்தது.

மூன்று மாதங்களில் நான் விருதுநகரில் சந்தித்த பல முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரிடம் பேசியபோது, தலைக்கூத்தல் என்ற பழக்கம் இருப்பதை உறுதிப்படுத்த பல சான்றுகள் கிடைத்தன.

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது, தனது நண்பர் ஒருவர் தனது மகன்கள் தலைக்கூத்தல் செய்யவுள்ளதைத் தெரிந்துகொண்டு தன்னிடம் அழுத கதையைச் சொன்னார்.

''இரண்டு நாட்கள் கழித்து என் நண்பர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவர் தனது பிள்ளைகளால் கொல்லப்பட்டிருந்தார் என்று ஊரில் பலருக்கும் தெரியும். ஆனால் யாரும் புகார் கொடுக்கமாட்டார்கள். அப்படி புகார் கொடுத்தால் எங்கள் கிராமத்தில் பாதிப் பேர் இந்த பிரச்னையில் மாட்டிக்கொள்வார்கள்,'' என்றார்.

 

தனது இரண்டு மகன்கள் தனக்கு தலைக்கூத்தல் நடத்தப்போவதை உணர்ந்த பெருமாள் என்ற முதியவர் விருதுநகரில் இருந்து வெளியேறி பரமக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக சொன்னார்.

''என் மகன்கள் எனக்கு தலைக்கூத்தல் நடத்த முடிவு செய்திருந்தார்கள். கொஞ்சம் நடமாடும் நிலையில் இருப்பதால், நான் ஊரில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டேன். என்னை போல வாய்ப்பு கிடைக்காத பல முதியவர்கள் கொல்லப்படுவார்கள்,''என்றார். முதியவர் பெருமாளின் உரையாடல் என்னை உறையவைத்தது.

 

அடுத்ததாக நான் சந்தித்த ஒரு நபர், தீபாவளி பண்டிகையின்போது தனது தந்தையை 'அனுப்பி'வைத்ததாகவும், பொங்கல் வந்தால் அம்மாவை 'அனுப்பி'வைக்கலாம் என்று முடிவுசெய்திருப்பதாகச் சொன்னார். ''எத்தனை காலத்திற்குதான் போகும் உயிரை பார்த்துக்கொண்டு இருப்பது...பண்டிகை தினங்களில் உறவினர்கள் பலர் இறப்புக்கு வரமாட்டார்கள், செலவு குறையும்,'' என்றார்.

இந்த பயணத்தில் பெற்றோரை கொலை செய்த பலரை நான் சந்தித்தேன். அவர்கள் அதிர்ச்சியை இரட்டிப்பாக்கினார்கள்.

@thondankani

பட மூலாதாரம்,@THONDANKANI

எண்ணெய் குளியல் மட்டுமே அல்ல பலவிதங்களிலும் முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். ஒரு சிலர் போலி மருத்துவர்களைக் கொண்டு ஊசி செலுத்துவதும் உண்டு. அதுபோன்ற ஊசி போடும் பெண் ஒருவரையும் சந்தித்தேன்.

என்னுடன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பூங்கோதை என்ற தன்னார்வலர் என் அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். எனக்கு டெல்லியில் வேலை கிடைத்துவிட்டது என்பதால், நானும், அம்மாவும் செல்கிறோம், ஊரில் தாத்தாவை விட்டுச் செல்லமுடியாது, ஊசி போடமுடியுமா என்று கேட்டேன். அவரும் ஒத்துக்கொண்டார்.

 

''தாத்தாவை 'அனுப்பி'வைக்க நல்ல நேரம் பார்த்துவிட்டு வா, உன் தாத்தா எப்படி இருக்கிறார் என்று பார்த்துவிட்டு, எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்கிறேன். நான்கு நாட்களுக்கு முந்திதான் ஒரு தாத்தாவுக்கு ஊசிபோட்டேன்,'' என்றார் அந்த பெண். இவற்றை ஆடியோ பதிவு செய்துகொண்டேன்.

 

விருதுநகர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான அசோகன் தனது உறவினர் குடும்பத்தில் நடந்த கொலையைப் பற்றி என்னிடம் வலியுடன் பகிர்ந்துகொண்டார். அவரின் உதவியால் கிராமங்களில் பல போலி மருத்துவர்கள் இருப்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது. அவரது உறவினர் 76 வயதான முதியவர் ஒருவரை அவரது குடும்பத்தினர் போலி மருத்துவரின் உதவியால் கொலை செய்திருந்ததை என்னிடம் தெரிவித்தார்.

 

பல சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு, கிராமங்களில் முதியவர்களை அவர்களின் குடும்பத்தினர் கொலை செய்வதைச் செய்தியாக வெளியிட்டவுடன், விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் ஊசி போடும் போலி மருத்துவர்களை முதலில் கைது செய்தார்கள். கிராமங்களில் தலைக்கூத்தல் பழக்கத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முதியவர்களின் இறப்பை கிராம நிர்வாக அதிகாரிகள் கண்காணித்தனர்.

செய்தி வெளியிட்ட பிறகு எனக்கு சொந்தங்கள் பெருகின. பல முதியவர்கள் எனக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார்கள். அவர்கள் குடும்பங்களில் நடந்த கொலைகளைப் பற்றி விவரித்தார்கள். விருதுநகரில் இருந்து பல அழைப்புகள். அதில் ஒரு அழைப்பை இன்றும் என்னால் மறக்கமுடியாது.

மும்பையில் வசிக்கும் ஒரு மகன், வயதான தாய் ஒருவருக்கு தலைக்கூத்தல் நிகழ்த்த முடிவுசெய்திருந்தார் என்றும் தலைக்கூத்தல் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்ததால், அந்த நிகழ்வை நிறுத்திவிட்டார் என்றும் தகவல் வந்தது. எனக்கு பெரிய திருப்தி கிடைத்தது.

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

பல முதியவர்கள் தங்களது நட்பு வட்டத்தில் உள்ள முதியவருக்கு தலைக்கூத்தல் ஏற்பாடு செய்வது பற்றிய தகவல் தெரிந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார்கள். அதனால், பல கொலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த செய்தியை தொடர்ந்து, பல முறை விருதுநகருக்குச் சென்றேன். எனக்கு ஒரு நட்பு வட்டம் உருவாகியிருந்தது. தன்னார்வலர் இளங்கோ மூலமாக ஹெல்ப்ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் முதியவர்கள் சுயஉதவி குழுக்களை ஏற்படுத்தியது.

100க்கும் மேற்பட்ட அந்த சுயஉதவி குழுக்கள் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் முதியவர்களுக்கு, நல்ல உடல்நலத்துடன் இருக்கும் முதியவர்கள் நண்பர்களாக மாறினார்கள். அந்த சுயஉதவி குழுக் கூட்டங்களுக்கும் சென்றுவந்தேன். முதியவர்கள் தங்களது பிள்ளைகளிடம் அஞ்சி இருந்த நிலை மாறி, தங்களது உரிமைகளைக் கேட்டுப் பெறும் முதியவர்களாக மாறியிருந்தனர்.

 

அடுத்தடுத்த பயணங்களில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதியவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, தேர்தல் காலங்களில் முதியவர்களின் உதவித்தொகை குறித்து அரசியல் தலைவர்களை சந்திக்க அவர்களை அழைத்துச்செல்வது என பல நிகழ்வுகளில் தொடர்ந்து அவர்களுடன் பயணித்தேன்.

பல பாட்டிகளின் அன்பு முத்தங்கள், பல தாத்தாக்களின் கனிவான அழைப்புகள் இன்றும் தொடருகின்றன. அவர்கள் சமீபமாக எனக்குப் பரிசளித்த ஒரு கைத்தறி துண்டு எனக்குக் கிடைத்த பெரிய விருதாக பார்க்கிறேன்.

2012ல் வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடத்திய 'சத்தியமேவ ஜெயதே' என்ற நிகழ்ச்சியில் தலைக்கூத்தல் குறித்த செய்தியை பற்றி பேசவேண்டும் என்று கேட்டனர். என்னுடைய அனுபவத்தைக் கேட்ட அமீர்கான், நிகழ்ச்சி முடிந்த பின்னர், என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, கண்கலங்கினார்.

''பெற்றோர்களைக் கூட கொலை செய்ய துணிந்துவிட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று முதலில் தோன்றியது. ஆனால் அதுபோன்ற சமூக அவலங்களை வெளிக்கொண்டுவர உங்களை போன்ற பேத்திகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது,''என்றார்.

சமீபமாக தன்னார்வலர் பூங்கோதையிடம் பேசியபோது, ''அந்த செய்தி வந்தபிறகு, தலைக்கூத்தல் குறைந்துவிட்டது. இப்போது அதுபோல யாரும் கொலை செய்வது இல்லை. முதியவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு வந்துவிட்டது,''என்றார். அதேபோல, முதியவர்கள் தங்களது வீடுகளில் ஏதாவது துன்புறுத்தல்கள் இருந்தால்,காவல் நிலையத்திற்குச் செல்லவும் தயங்குவதில்லை என்றார்.

இந்த செய்தி சேகரிப்பின் ஊடாக சமூக மாற்றம் ஏற்பட்டதில் பெரிய மகிழ்ச்சி, அதேநேரம், எனக்குள் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருந்தது. முதியவர்களை நேசிக்கத் தொடங்கிய நான், என் தாத்தா ராமுவுக்கு பிரியமான தோழியாக மாறினேன். அவருக்காக நேரம் ஒதுக்கினேன். அவரின் இறுதிக் காலங்களில், அவருக்கு வாசிப்புப் பழக்கத்தில் ஆர்வத்தை ஊட்டி, அவரை கதை எழுத வைத்தேன், ஒரு புத்தகம் வெளியிடவைத்தேன். அவர் இறப்புக்கு முன்தினம் அவர் எழுத்தாளராக இருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cv24l184vxyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கே.டி. (எ) கருப்புத் துரை 2020 இன் தொடக்கத்தில் வந்த திரைப்படம் இந்த நிகழ்வுகளை சித்தரிப்பதால் அத்திரியை இங்கே இணைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி முன்வந்து கருணைக் கொலை செய்யும் முறை இருந்தது என்பது அதிர்ச்சியான செய்தி. ஆனால், பல வடிவங்களில் இது நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் DNR என்ற சுருக்கச் சொல்லுக்கு அர்த்தம் "do not resuscitate". ஒரு நிலைக்குப் பிறகு உயிரைத் தொடர்ந்து பிடித்து வைத்திருப்பது ஒருவருக்குச் செய்யும் துன்புறுத்தல் என்று மருத்துவர் கருதினால், இதயம் நிற்கும் போது மீள இயங்க வைக்கும் முயற்சியை எடுக்க மாட்டார்கள். சிலர் இங்கே தாம் நீண்ட கோமா நிலைக்கும் போனாலும் மீள உயிர்ப்பிக்க முயலக் கூடாதென உயில் போல DNR எழுதி வைத்து விட்டுப் போவர். ஆனால், உறவினர்கள் அதை எதிர்த்தால் மருத்துவர்கள் செய்ய முடியாது!

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

[பெண் குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் பழக்கம் தமிழ்நாட்டில் 1990களில்  பரவலாக இருந்தது. அதுபோலவே 2010ல் விருதுநகர் மாவட்டத்தில் பல கிராமங்களில் தலைக்கூத்தல் என்ற முதியவர்களை கொலைசெய்யும் பழக்கம் இருந்தது.
தலைக்கூத்தல் பற்றி கேட்டபோது, அது ஒரு சமூகப்பழக்கம், முடியாத நேரத்தில் தலைக்கூத்தல் செய்து முதியவரை 'அனுப்பி' வைப்பதில் தவறில்லை என்று பலரும் சொன்னார்கள்.]

படிக்க படிக்க பயங்கரம் ☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.