Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன?

IT-Raid.jpg

 ராஜன் குறை

இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் சென்ற வாரம் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை சோதனையிட்டது கடுமையான விமர்சனங்களுக்கும், கண்டனங்களும் உள்ளாகியுள்ளது. இது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

திடீரென சென்று சோதனை செய்யுமளவு பிபிசி என்ன அதானி நிறுவனம் போல லட்சம் கோடிகளில் புரளும்  நிறுவனமா என்ன? அது குறைந்த அளவே இந்தியாவில் செயல்படும் ஒரு சர்வதேச ஊடக நிறுவனத்தின் கிளை. அதனுள் சென்று ஊழியர்களின் செல்பேசிகளைப் பறிமுதல் செய்து முற்றுகையிட்டு விசாரிக்கும் அளவு அது என்ன பெரிய வரி மோசடி செய்திருக்க முடியும் என்பதே கேள்வி. முதலில் பிபிசி என்றால் என்னவென்று பார்ப்போம்.

இங்கிலாந்து நாட்டின் நூறு ஆண்டுகள் கண்ட புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனம் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங்க் கார்ப்பரேஷன் (British Broadcasting Corporation- BBC) என்பது. இது உலகின் பல மொழிகளிலும் பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. இதன் செய்தி தொலைக்காட்சி சேனல் உலகம் முழுவதும் பார்க்கப்படும் முக்கிய செய்தி தொலைக்காட்சி சேனல் ஆகும்.

இந்த நிறுவனத்தின் சார்பில் “மோடி என்ற கேள்விக்குறி” (The Modi Question) என்ற ஆவணப்படம் இரு பாகங்களாக ஜனவரி 17 மற்றும் 24ஆம் தேதிகளில் ஒளிபரப்பப்பட்டன. இந்த ஆவணப்படங்களே திடீர் வருமான வரி சோதனை என்ற துன்புறுத்தல் நடவடிக்கைக்கு காரணம் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

இந்திய அரசு இந்த ஆவணப்படத்தை வன்மையாகக் கண்டித்தது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை அதிகாரபூர்வமாகத் தடுத்துள்ளது. வலைதளங்களிலும் தொடர்ந்து இந்தப் படம் இந்தியாவினுள் பார்க்க முடியாதபடி தடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் பல்வேறு மாணவர் அமைப்புகள், அரசியல், சமூக இயக்கங்கள் இந்தப் படத்தை பல்வேறு இடங்களில் திரையிட்டு வருகின்றன. உதாரணமாக  தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தப் படத்தை தமிழில் மொழியாக்கம் செய்து திரையிட்டுள்ளது. இந்தப் படம் தடை செய்யப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக அமைச்சர்கள், கட்சியினர் ஆகியோர் இந்த ஆவணப்படம் குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகிறார்கள். நாம் இந்த ஆவணப்படத்தை குறித்து சில அடிப்படை அம்சங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம்.

BBC News IT Raid

இந்தியாவுக்கு ஏன் மோடி ஒரு கேள்விக்குறி?

ஆங்கிலத்தில் மோடி குவிஸ்டின் என்றால் மோடி குறித்த கேள்வி என்றோ, மோடியே ஒரு கேள்வியாகிறார் என்றோ பொருள். தமிழில் மோடி என்ற கேள்விக்குறி என்று கூறலாம்.

அது என்ன கேள்வி? இந்தியாவின் மதச்சார்பின்மை நீடிக்குமா, இந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து இந்தியாவில் பிறருக்கு இணையான குடியுரிமையுடன், அச்சமின்றி, பாதுகாப்புடன் வாழ முடியுமா என்பதுதான் கேள்வி.

மோடி பிரதமராக ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் அவர் இதுவரை இந்திய முஸ்லிம்களை எப்படி உணரச் செய்கிறார், அவர் மீண்டும் பிரதமரானால் இந்திய சமூகத்தில் மத நல்லிணக்கம் நீடிக்குமா, அரசு மதச்சார்பற்று இருக்குமா என்ற கேள்விகள் இன்று தவிர்க்க முடியாதவை ஆகின்றன. அது ஏன் என்பதை இந்த ஆவணப்படம் விளக்குகிறது.

அந்த விளக்கத்துக்கு இரண்டு பாகங்கள். ஒன்று அவர் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அங்கு நிகழ்ந்த முஸ்லிம்கள் படுகொலை.

மற்றொன்று கடந்த நான்கு ஆண்டுகளாக மாட்டு இறைச்சி பிரச்சினைகள், குடியுரிமை சீர்திருத்தச் சட்ட எதிர்ப்பு, காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம் ஆகிய பிரச்சினைகளை ஒட்டி எப்படி முஸ்லிம்கள் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்பது.

அதாவது குஜராத்தில் 2002ஆம் ஆண்டு தொடங்கியது, இருபது ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களில் தொடர்வதுடன், இந்திய அரசியலின் எதிர்காலம் குறித்த முக்கிய கேள்வியாகவும் மாறுகிறது.

அதன் மூலாதாரம் என்னவென்றால் இந்துத்துவ கோட்பாட்டின், ஆர்எஸ்எஸ் அமைப்பின் லட்சியமான இந்து ராஷ்டிரம்தான். அதன்படி முஸ்லிம்கள் இந்த நாட்டில் இரண்டாம்தர குடிமக்களாகவே இருக்க முடியும். அதை நோக்கி இந்தியா செல்கிறதா என்பதே கேள்வி.

BBC News IT Raid

குஜராத்தில் நடந்தது என்ன அல்லது மோடி அரசியலின் துவக்கம்

நரேந்திர மோடி ராஷ்டிரிய சுவம்சேவக் சங்க் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை ஊழியராக இருந்து அந்த அமைப்பின் பல்வேறு படி நிலைகளில் உயர்ந்து, அதனால் பாரதீய ஜனதா கட்சிக்கு நியமிக்கப்பட்டு இறுதியில் 2001ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றவர்.

அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகப் பெரிய கலவரம் மூண்டு, இஸ்லாமியர்கள் கடுமையாகக் கொன்று குவிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்தக் கலவரத்துக்கு காரணமாக கூறப்பட்ட நிகழ்வு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்ற நிகழ்வாகும். சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் அயோத்திக்குச் சென்று விட்டு திரும்பிய கர சேவகர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கும் ரயில் நிலையத்தில் இருந்த சில முஸ்லிம்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக முஸ்லிம்கள் ரயில் பெட்டிக்கு தீ வைத்ததாகவும், 59 பேர் அதில் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.  

பல கட்ட வழக்குகள், விசாரணைகளுக்குப் பிறகு 31 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளார்கள் என்றாலும், பல்வேறு ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் அந்தப் பெட்டியில் தீ பற்றியது ஒரு விபத்துதான் என்றும், யாரும் வேண்டுமென்றே தீ வைக்கவில்லை என்றும் கருதுகிறார்கள்.

ஆனால் சம்பவம் நடந்த உடனேயே குஜராத் மாநிலம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வதந்திகள் பரவின. சங்க பரிவார அமைப்புகள் மக்களிடையே கோபத்தை, பழிவாங்கும் வெறியைத் தூண்டின. முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் தொடங்கின.

முதல்வராக இருந்த நரேந்திர மோடி கலவரக்காரர்களைத் தடுக்க வேண்டாமென காவல்துறை அதிகாரிகளிடம் கூறியதாக ஒரு சிலர் கூறினார்கள். மூன்று தினங்களுக்குத் தலையிட வேண்டாம் என்று கூறப்பட்டதாக தகவல். அதன் விளைவாகவோ, என்னவோ வன்முறை வெறித்தாண்டவம் நிகழ்ந்தபோதும் காவல்துறை தலையிடாமல் செயலற்று இருந்ததாக ஏராளமான சாட்சிகள் கூறுகிறார்கள்.  

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து ஓடினார்கள்; நூற்றுக்கணக்கான முகாம்களில் உள்நாட்டு அகதிகளாகத் தங்கினார்கள்.

நரேந்திர மோடி வேண்டுமென்றே கட்டுப்படுத்தாமல் விட்டாரா அல்லது அரசு இயந்திரம் தோல்வியடைந்ததா என்ற கேள்விகளைத் தாண்டி இவ்வளவு பெரிய சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு முதலமைச்சரான அவர் பொறுப்பேற்க வேண்டுமா, இல்லையா என்பதே கேள்வி.

உதாரணமாக சமீபத்தில் கோவையில் ஒரு காரில் குண்டு வெடித்தவுடன், காவல்துறை திறம்பட செயல்பட்டு குற்றவாளியை அடையாளம் கண்டு தேசிய பாதுகாப்பு முகாமையிடம் வழக்கை ஒப்படைத்த போதும் கூட, அதில் ஏன் தாமதம், அரசு ஏன் மெத்தனம் காட்டியது என்றெல்லாம் பாஜக விமர்சிக்கிறது.

யாருமே உயிரிழக்காத ஒரு குண்டு வெடிப்புக்கே மாநில அரசின் திறமையின்மை என குற்றம் சாட்டும் கட்சி, எப்படி ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படும்போது ஓர் அரசு எப்படி வேடிக்கை பார்த்தது என கேட்க வேண்டாமா? முதல்வர் மோடி பொறுப்பேற்க வேண்டாமா?  

அவர் பொறுப்பேற்கவில்லை என்பது மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளில் குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் சிறந்த நிர்வாகி என்றும் அழைக்கப்படத் தொடங்கினார்.  

நரேந்திர மோடி கலவரத்தைத் தடுக்க வேண்டாம் என்று கூறியதற்கு பத்திரிகைகளிடமும், குடிமக்கள் விசாரணை மன்றத்திலும் சாட்சி அளித்ததாகக் கூறப்படும் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா 2003ஆம் ஆண்டு பொதுவெளியில் காலை நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குஜராத் நிகழ்வுகள் குறித்த வழக்கெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் தனி அமரவில் விசாரிக்கப்பட்டு மோடி எதிலும் குற்றமற்றவர் என்று கிடைத்த, கிடைக்காத ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் பொதுக்களத்தில் ஐயங்களும், கேள்விகளும் மறையவில்லை.

BBC News IT Raid

பழைய கதையைப் பேசலாமா?

பாஜக அரசாங்கமும், பாஜக கட்சியும் என்ன கேட்கின்றன என்றால் இதெல்லாம் விவாதிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு முடிந்து போன பழைய கதை; பி.பி.சி ஏன் அதை இப்போது பேசுகிறது என்றுதான் கேட்கிறார்கள்.

அதற்கு மனித உரிமை சார்ந்தவர்கள் சொல்லும் பதில் அந்தக் கதையே பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது என்பதுதான். குடியுரிமை சீர்திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது போன்ற திட்டங்கள் தங்கள் குடியுரிமையை பாதிக்கும் திட்டங்கள் என முஸ்லிம்களும், பொதுவான மனித உரிமை ஆர்வலர்களும், முற்போக்காளர்களும் நம்புகிறார்கள்.

அந்தக் குடியுரிமை சீர்திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில், பிப்ரவரி 2020இல் இந்துத்துவ சக்திகள் புகுந்து கலவரம் செய்தன. டெல்லியில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் மீண்டும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், கொல்லப் பட்டார்கள். இவை குஜராத் கொலைகளின் தொடர்ச்சி போலவே அமைந்தன. இத்துடன் காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் அங்கு  நடக்கும் ராணுவத்தினரின் வன்முறையும் சேர்ந்துகொள்கின்றன.

மாட்டிறைச்சி வைத்திருந்தார் என அக்லுக் என்பவர் கொல்லப்பட்டதும், பசு பாதுகாவலர்களால் பல முஸ்லிம்கள் பசுக்களைக் கொல்வதற்காகக் கொண்டு செல்கிறார்கள் என்ற காரணம் காட்டி கும்பல் படுகொலை செய்யப்படுவதும் நாடெங்கும் பதற்றத்தை உருவாக்குகின்றன.

இதையெல்லாம் இந்த ஆவணப் படம் இரண்டு பாகங்களாகத் தொகுத்துக் காட்டுகிறது. மோடி என்னும் கேள்விக்குறி என்பது இந்தியாவில் மதச்சார்பின்மையின், மத நல்லிணக்கத்தின், முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்த கேள்விதான்.

அந்நிய நாட்டு ஊடகம் நம் நாட்டு பிரச்சினையைப் பேசலாமா?

ஊடகங்கள் பரவத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே உலகில் எந்த நாட்டில் அரசு மக்களை ஒடுக்கினாலும், பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரை ஒடுக்கினாலும் உலகெங்கும் உள்ள ஊடகங்கள் அதை கண்டித்தே வந்துள்ளன.

இந்திய சுதந்திரப் போரின்போது, பிரிட்டிஷ் ஆட்சி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டபோது அமெரிக்க ஊடகங்களும், பிற ஐரோப்பிய ஊடகங்களும் அதைக் கண்டிக்கவே செய்தன.

ஜெர்மனியின் ஹிட்லர் ஆனாலும், ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின் ஆனாலும், இத்தாலியின் முசோலினி ஆனாலும் உள்நாட்டில் அவர்கள் மக்கள் உரிமைகளைப் பறித்தால், மக்களில் ஒரு பகுதியினரை தாக்கினால் உலக நாடுகளின் ஊடகங்கள் கண்டிக்கத்தான் செய்தன. ஏன் தமிழ் நாட்டு இதழ்கள் கூட கண்டிக்கவே செய்தன.

உலகளாவிய குடிமைச் சமூகம் என்ற கருத்தாக்கம் நவீன அரசியலின் தவிர்க்க முடியாத அங்கம். அதாவது குடிமை சமூக பிரதிநிதிகள், ஊடகங்கள் எந்த ஒரு அரசின் வன்முறையையும், அத்துமீறலையும், மனித உரிமைமீறலையும் கண்டிக்கவே செய்வார்கள்.

ஒரு நாட்டின் அரசு, இன்னொரு நாட்டின் அரசை விமர்சித்தால், இன்னொரு நாட்டின் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட்டால் அதைக் கண்டிக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் குடிமைச் சமூகமோ, ஊடகமோ எந்த நாட்டின் பிரச்சினையையும் பேசலாம், எழுதலாம். அதைக் கண்டிக்க முடியாது.

ஏனெனில் குடிமைச் சமூகம் உலகப் பொதுவானது. மனித உரிமைகள் உலகப் பொதுவானவை. அதனால் ஊடகங்களும் அந்த உலகப் பார்வையை கொண்டே இயங்கும்.

அதனால் பிபிசி இந்திய முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசக் கூடாது, ஆவணப்படம் எடுக்கக் கூடாது, ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தில் பொருளாதாரக் குற்றங்களை அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் கூறுவது சாத்தியமில்லை.

இதையெல்லாம் ஊடகங்கள் எடுத்துக்கூறக் கூடாது என்றால் மக்களாட்சியின் பொருள்தான் என்ன? பிரதமரை விமர்சிக்கக் கூடாது, கேள்வி கேட்கக் கூடாது என்றால் இது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்?  

அதனால்தான் பிபிசி நிறுவனத்தில் வரிமான வரி சோதனை என்ற பெயரில் ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டதை இந்திய, உலக பொது மன்றம் கண்டிக்கிறது. பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்படுவதைக் கண்டிக்கிறது. இதெல்லாம் கருத்து சுதந்திரத்தின் மீதான, மக்களாட்சியின் மீதான தாக்குதல்கள் என்பதில் ஐயமில்லை.  

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
 

https://minnambalam.com/political-news/bbc-news-it-raid-rajan-kurai/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.