Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் குற்றத்திலிருந்து தப்பிக்க 'மரண' நாடகம் நடத்திய ஆசிரியர் சிக்கியது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் குற்றத்திலிருந்து தப்பிக்க 'மரண' நாடகம் நடத்திய ஆசிரியர் சிக்கியது எப்படி?

பிகார் பாலியல் வன்புணர்வு

பட மூலாதாரம்,SWASTIK PAL

 
படக்குறிப்பு,

தன் மகளை பாலியல் வன்புணர்வு செய்தவரை தண்டிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்ததாக அச்சிறுமியின் தாயார் கூறினார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வட இந்திய மாநிலமான பிகாரில் கடந்தாண்டு ஒரு பெண்ணிடம் அவருடைய மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் இறந்துவிட்டதாகவும் அதனால் அவருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை எதிர்கேள்வி கேட்ட அந்த பெண் உண்மையை கண்டறிந்துள்ளார். இதனால், அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு அப்பெண்ணுடைய மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. அப்பெண்ணின் விடாமுயற்சி குறித்து பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம், இனிமையான காலை வேளையில் இந்தியாவின் புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள தகன மேடைக்கு இரண்டு ஆண்கள் வந்தனர்.

இந்து மத முறைப்படி இறுதிச்சடங்கு செய்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். அவர்கள் விறகு கட்டைகளை கைகளில் பிடித்திருந்தனர். ஆனால், அவர்களிடத்தில் சடலம் இல்லை.

தகன மேடை அருகே அவர்கள் வந்தவுடனேயே, அங்கு விநோதமான செயல்கள் அரங்கேறின.

 

அவர்கள் விறகுகளை அடுக்கினர். பின்னர் அவர்களில் ஒருவர் அந்த சிதையில் படுத்து, வெண்ணிற போர்வையால் போர்த்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டார். மற்றொருவர், சிதையில் படுத்தவரின் தலை மட்டும் வெளியே தெரியும் வகையில் மற்ற பகுதியைச் சுற்றி விறகுகளை அடுக்கினார்.

இந்த நிகழ்வின்போது இரண்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அந்த புகைப்படங்களை எடுத்தது யார் என்று தெரியவில்லை. அல்லது மூன்றாவது நபர் யாராவது அங்கிருந்தார்களா என்பதும் தெரியவில்லை.

போலியாக சித்தரிக்கப்பட்ட மரணம்

“இறந்த” அந்த நபர் 39 வயதான, அரசுப்பள்ளி ஆசிரியர் நீரஜ் மோதி என தெரிகிறது. மற்றொரு நபர் அவருடைய 60 வயது மதிக்கத்தக்க தந்தை, விவசாயியான ராஜாராம் மோதி.

பின்னர், ராஜாராம் மோதி அங்கிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள நீதிமன்றத்திற்கு தன்னுடைய வழக்கறிஞருடன் சென்று, தன் மகன் நீரஜ் மோதி பிப்ரவரி 27 அன்று தங்களின் கிராமத்து வீட்டில் உயிரிழந்துவிட்டதாக கையெழுத்திடப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் சத்தியம் செய்தார். தகனம் செய்ததற்கான இரு புகைப்படங்கள், விறகு கட்டைகளை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை ஆதாரங்களாக சமர்ப்பித்தார்.

பிகார் பாலியல் வன்புணர்வு

பட மூலாதாரம்,SWASTIK PAL

 
படக்குறிப்பு,

புகைப்படத்தில் இருக்கும் "இறந்த" நபர், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நீரஜ் மோதி என்று தெரிகிறது.

இது அனைத்தும் நீரஜ் மோதிக்கு எதிராக காவல்துறை பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்த ஆறு நாட்களில் நிகழ்ந்தவை. அக்டோபர் 2018ஆம் ஆண்டு தன்னுடைய 12 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக நீரஜ் மோதி மீது குற்றம்சாட்டப்பட்டது. அந்த சிறுமி கரும்பு தோட்டத்தில் தனியாக இருந்தபோது அவரை பாலியல் வன்புணர்வு செய்த நபர் அதனை படம்பிடித்ததாகவும் அதனை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது.

அச்சிறுமியின் தாயார் புகார் அளித்த உடனேயே நீரஜ் கைது செய்யப்பட்டார். ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

நீரஜ் மோதி கடந்தாண்டு “இறந்த” பிறகு பல சம்பவங்கள் வேகமாக அரங்கேறின. தன் மகனின் இறப்புச் சான்றிதழை உள்ளூர் அதிகாரிகள் வழங்கியதாக, இரண்டு மாதங்களுக்குப் பின் நீரஜின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இவ்வழக்கில் “குற்றம்சாட்டப்பட்ட ஒரேயொருவரும்” இறந்து விட்டதாக கூறி, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மே மாதத்தில் முடித்து வைத்தது.

‘மரணத்தை’ சந்தேகித்த சிறுமியின் தாய்

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆசிரியர், தண்டனையிலிருந்து தப்பிக்க தன் மரணத்தையே போலியாக சித்தரித்து, தலைமறைவானதாக ஒரேயொருவர் மட்டும் சந்தேகித்தார்.

அவர்தான் நீரஜின் கிராமத்திலேயே குடிசை வீட்டில் வசிக்கும் பலவீனமான அந்த சிறுமியின் தாயார்.

பிகார் பாலியல் வன்புணர்வு

பட மூலாதாரம்,SWASTIK PAL

 
படக்குறிப்பு,

புகைப்படத்தில் நீரஜ் மோதியின் தந்தையும் உள்ளார்.

“நீரஜ் மோதி இறந்துவிட்டதாக சொன்னபோதே அது பொய்தான் என எனக்குத் தெரியும். அவர் உயிருடன் இருக்கிறார் என எனக்குத் தெரியும்,” என நான் அந்த தாயை சமீபத்தில் சந்தித்தபோது தெரிவித்தார்.

இந்தியாவில் நிகழும் 10 இறப்புகளில் ஏழு இறப்புகள் நாட்டிலுள்ள 7 லட்சம் கிராமங்களில் நிகழ்கின்றன. அதுவும் நகரங்களை விட கிராமங்களில் பெரும்பாலும் வீடுகளிலேயே இறப்புகள் நிகழ்கின்றன. பிறப்பு, இறப்பு குறித்து கட்டாயம் பதிய வேண்டும் என 54 ஆண்டுகால சட்டம் சொல்கிறது, ஆனால் அதற்கு இறப்புக்கான காரணங்கள் தேவையில்லை.

பிகாரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் இறந்தால், அவருடைய குடும்ப உறுப்பினர் அவரது தனிப்பட்ட பயோமெட்ரிக் அடையாள எண் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் கையெழுத்துகளை சாட்சியமாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவற்றை கிராம சபையில் சமர்ப்பிக்க வேண்டும். உள்ளூர் பதிவாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், ஆவணங்களை சரிபார்த்து, எல்லாம் சரியாக இருந்தால் ஒரு வாரத்திற்குள் இறப்பு சான்றிதழை வழங்குவர். “எங்களின் கிராமங்கள் மிகவும் நெருக்கமானவை, இங்குள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாக உள்ளனர். ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் தான். அதனால், யார் இறந்தாலும் அது வெளியே தெரியாமல் இருக்காது,” என பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் ஜெய் கரண் குப்தா தெரிவித்தார்.

ராஜாராம் மோதி தன் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் கையெழுத்துகள் மற்றும் பயோமெட்ரிக் அடையாள எண்களை சமர்ப்பித்தார். மேலும், அவருடைய மகன் இறந்துவிட்டதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனின் இறப்பு சான்றிதழையும் வைத்துள்ளார். அதில், இறப்புக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. விறகு கட்டைகள் வாங்கப்பட்ட கடையின் ரசீதில், “நோயால்” உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளுக்காக நீதி வேண்டி போராட்டம்

நீரஜ் மோதி இறந்துவிட்டதால் அவருக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் சிறுமியின் தாயாரிடம் கடந்த மே மாதம் தெரிவித்திருக்கிறார்.

பிகார் பாலியல் வன்புணர்வு

பட மூலாதாரம்,SWASTIK PAL

 
படக்குறிப்பு,

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார்.

“ஒரு ஆசிரியரின் இறப்பு குறித்து எப்படி யாருக்குமே தெரிந்திருக்கவில்லை? இறப்புக்குப் பின் ஏன் எந்த சடங்குமே செய்யவில்லை? இறப்பு குறித்து ஏன் யாருமே பேசவில்லை?” என அந்த தாய் கேள்வி எழுப்புகிறார்.

நீரஜ் மோதி இறந்துவிட்டாரா என வீடு வீடாக சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளார் அவர். ஆனால், அதுகுறித்து யாருக்குமே தெரியவில்லை. பின்னர், வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீரஜ் மோதி உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை நீதிபதிகள் கேட்டனர்.

போலியான ஆவணங்களின் அடிப்படையில் இறப்பு சான்றிதழை கிராம சபை வழங்கியதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கூறி மூத்த உள்ளூர் அதிகாரியிடம் மே மாதம் மனு அளித்தார் சிறுமியின் தாய்.

அங்கிருந்து பல சம்பவங்கள் வேகமாக அரங்கேறின.

நீரஜ் மோதி சிக்கியது எப்படி?

அதுகுறித்து விசாரிக்க அந்த அதிகாரி உத்தரவிட்டார். கிராம பஞ்சாயத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. மகனின் இறப்பு குறித்த மேலும் பல ஆதாரங்களை ராஜாராம் மோதியிடம் அதன் உறுப்பினர்கள் கேட்டனர். “இறப்புக்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சிதை எரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இறுதிச்சடங்கு புகைப்படங்கள் மற்றும் புதிதாக ஐந்து பேரின் சாட்சியங்களை” அவர்கள் கேட்டனர்.

சுமார் 250 குடும்பங்கள் அடங்கிய அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களை கிராம சபை உறுப்பினர்கள் சந்தித்தனர். நீரஜ் மோதி மரணம் குறித்து அவர்களில் யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. நெருங்கிய உறவினர் இறக்கும்போது முடி இறக்குவது இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படும் துக்க சடங்காகும். ஆனால், நீரஜ் மோதியின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அவ்வாறு செய்யவில்லை.

பிகார் பாலியல் வன்புணர்வு

பட மூலாதாரம்,SWASTIK PAL

 
படக்குறிப்பு,

நீரஜ் மோதியின் இறப்பு சான்றிதழ் கடந்தாண்டு மே மாதம் ரத்து செய்யப்பட்டது.

“நீரஜ் மோதியின் உறவினர்கள் கூட அவருடைய இறப்பு குறித்தோ அல்லது அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தோ அறிந்திருக்கவில்லை. மரணம் நிகழ்ந்திருந்தால் வீட்டிலேயே இறுதிச்சடங்கு செய்திருக்கலாம் என அவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்,” என இவ்வழக்கின் விசாரணை அதிகாரி ரோஹித் குமார் பஸ்வான் தெரிவித்தார்.

கிராம சபை உறுப்பினர்கள் மீண்டும் ராஜாராம் மோதியிடம் கேள்விகளை கேட்டனர். தன் மகனின் இறப்பு குறித்து புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க அவர் தவறிவிட்டார். “நாங்கள் பல கேள்விகளை அவரிடம் கேட்டபோது, அவர் திருப்திகரமான பதில்களை அளிக்கவில்லை,” என கிராம சபை செயலாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.

இதையடுத்து, நீரஜ் மோதி தன் இறப்பை போலியாக சித்தரித்ததாகவும், அவரும் அவருடைய தந்தையும் போலியான ஆவணங்களை அளித்து இறப்பு சான்றிதழ் பெற்றதாகவும் விசாரணை நிறைவடைந்தது.

நீரஜ் மோதி தன்னுடைய மாணவர்கள் ஐந்து பேரின் பெற்றோர்களின் பயோமெட்ரிக் எண்களை எடுத்து, அவர்களின் கையெழுத்துகளை போலியாக போட்டு தன்னுடைய சொந்த இறப்பு சான்றிதழை பெற்றதாக காவல்துறையினர் கண்டறிந்தனர். மாணவர்களுக்காக தான் ஏற்பாடு செய்யும் உதவித்தொகைக்காக அவர்களின் அடையாள எண்கள் வேண்டும் என நீரஜ் மோதி பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

மே 23 அன்று, நீரஜ் மோதியின் இறப்பு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர். காவல்துறையினர் அவருடைய தந்தை மீது போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். “இப்படியொரு வழக்கை நான் இதுவரை சந்தித்ததில்லை,” என்கிறார் பஸ்வான். “இந்த சதி நேர்த்தியாக நடந்ததாக தோன்றலாம், ஆனால் அதுதான் இல்லை” என்கிறார் அவர்.

“தண்டனையிலிருந்து தப்பிக்க” குற்றம்சாட்டப்பட்ட நபர் இவ்வழக்கை “தவறாக வழிநடத்தியதாக” கூறி, ஜூலை மாதத்தில் வழக்கை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது. நீரஜ் மோதியை கண்டறியும் முயற்சியில் சற்றும் தளர்வடையாத அந்த தாய், நீரஜை கைது செய்ய வேண்டும் எனக்கோரி நீதிமன்றம் சென்றார்.

பிகார் பாலியல் வன்புணர்வு

பட மூலாதாரம்,THE NEWS POST

 
படக்குறிப்பு,

நீரஜ் மோதிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட நீரஜ் மோதி, ஒன்பது மாதங்களுக்குப் பின் அக்டோபர் மாதத்தில் தானாகவே நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையின்போது, தனக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளை மறுத்தார். நம்பிக்கையின்மையுடன் அமைதியாக நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக நீரஜ் மோதி மீது கடந்த மாதம் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஏமாற்றியது உட்பட குற்றச்சாட்டுகளுக்காக ராஜாராம் மோதியும் தற்போது சிறையில் உள்ளார். அதற்காக அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இறப்பு சான்றிதழ் குறித்த குற்றச்சாட்டுகளுக்காக தந்தை, மகன் இருவருமே வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

“என் மகளை வன்புணர்வு செய்தவருக்கு தண்டனை கிடைக்க மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்திற்கு சென்று வருகிறேன். ஒரு நாள் அவருடைய வழக்குரைஞர் அந்த நபர் இறந்துவிட்டதாக என்னிடம் கூறினார். அந்த நபர் எப்படி காற்றில் மறைந்து போக முடியும்?” என்கிறார் அச்சிறுமியின் தாய்.

“அவருடைய இறப்பு போலியானது என நிரூபிப்பதற்கான புதிய வழக்கை நடத்துவதற்கு அதிக பணம் தேவை என என்னுடைய வழக்குரைஞர் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறையிலிருந்து வெளியே வந்து என்னை பழிவாங்குவார் என பலரும் கூறினர்.

“ஆனால், நான் எதையும் பொருட்படுத்தவில்லை. பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என கூறினேன். எனக்கு பயம் இல்லை. ‘உண்மையை கண்டுபிடியுங்கள்’ என அதிகாரிகளிடமும் நீதிபதியிடமும் கூறினேன்.”

“மகளின் வாழ்க்கை அடைபட்டுவிட்டது”

பிகார் பாலியல் வன்புணர்வு

பட மூலாதாரம்,SWASTIK PAL

 
படக்குறிப்பு,

பிகாரின் தொலைதூர கிராமத்தில் சிறுமியின் குடும்பம் வசிக்கிறது.

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான பிகாரின் தொலைதூரத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், திறந்திருக்கும் சாக்கடைகள், குடிசைகள், மஞ்சள் நிற கடுகு வயல்கள் மற்றும் புகை மண்டிய செங்கல் சூளைகள் அடங்கிய பாதிக்கப்பட்டவரின் ஒழுங்கற்ற கிராமத்திற்கு பல மணிநேரம் பயணித்து சென்றடைந்தோம்.

குறுகிய தெருவில் செங்கற்களால் ஆன வீடுகளில் சாட்டிலைட் டிஷ் பொருத்தப்பட்டிருந்தன. ஜன்னல்கள் இல்லாத, செங்கல்லால் ஆன சிறிய அறையில் அச்சிறுமியின் தாயார் தன்னுடைய பள்ளி செல்லும் இரு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் கூரை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடைய மூத்த மகள் திருமணமாகி சென்றுவிட்டார்.

அந்த இருண்ட அறையில் வெற்று உடைமைகள் மட்டுமே இருந்தன. ஒரு கயிற்றுக் கட்டில், தானியங்களை சேமித்து வைப்பதற்கான இரும்பு பாத்திரம், தரையுடன் அமைக்கப்பட்ட களிமண் அடுப்பு, மோசமான நிலையில் உள்ள ஆடைகள் அங்கிருந்தன. அவர்கள் வாழ்வதற்கென சொந்த நிலம் கூட இல்லை.

அந்த கிராமத்தில் குடிநீர் குழாய், மின்சார வசதி இருந்தாலும் வேலைவாய்ப்பு இல்லாததால், சிறுமியின் தந்தை 1,700 கி.மீக்கும் அப்பால் தென்மாநிலத்திற்கு வேலைக்காக சென்றுவிட்டார். அங்கு சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து குடும்பத்திற்கு பணம் அனுப்புகிறார்.

கழிவறை கட்டுவதற்கான பெரியளவிலான திட்டத்தின் மூலம் இந்தியாவின் 100% கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்டதாக 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். ஆனால், சிறுமியின் வீடு உட்பட இக்கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் கழிவறை வசதி இல்லை.

அதனால்தான் அச்சிறுமி இயற்கை உபாதையை கழிக்க அருகிலுள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்குதான், நீரஜ் மோதி சிறுமியின் பின்னாலிருந்து அவருடைய வாயை மூடி, வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்ததாக, நீதிபதி லா குஷ் குமார் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியை அமைதியாக இருக்குமாறும் தான் இதனை படம்பிடித்து இணையத்தில் அதை வைரலாக்குவேன் என மிரட்டியதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

பிகார் பாலியல் வன்புணர்வு

பட மூலாதாரம்,SWASTIK PAL

 
படக்குறிப்பு,

"என் மகளின் வாழ்க்கை அடைபட்டுவிட்டது"

பயந்துபோன அச்சிறுமி, வன்புணர்வு நிகழ்ந்த 10 நாட்களுக்குப் பின் தன் தாயிடம் அது குறித்து தெரிவித்துள்ளார். பின் அந்த தாய் காவல்துறையிடம் சென்றார். அடுத்த சில தினங்களில் அச்சிறுமி ஆதாரங்களை வழங்கினார். “நீரஜ் மோதி பள்ளியில் என்னை அடிக்கடி அடிப்பார்” என காவல்துறையினரிடம் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.

நீரஜ் மோதி கைதான பின்பு பள்ளிக்கு சென்ற அச்சிறுமி, அவர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார். அவருடைய புத்தகங்கள் பழைய புத்தக கடையில் விற்கப்பட்டன.

பாலியல் வன்புணர்வால் பயந்த அச்சிறுமி இருண்ட அறையிலேயே தன் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார். “மாணவியாக அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது. அவளை வெளியே அனுப்ப எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறோம்” என அந்த தாய் கூறுகிறார்.

பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல் எப்படி கிராம சபை இறப்பு சான்றிதழ் வழங்கியது? “அதை கேட்டபோது, நாங்கள் தவறுதலாக அவ்வாறு வழங்கியதாக தெரிவித்தனர்,” என்கிறார் சிறுமியின் தாயார்.

டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரபாத் ஜா, உலகில் முன்கூட்டிய இறப்பு குறித்து மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றை கருத்தில் கொண்டு, நீரஜ் மோதியின் வழக்கு “மிகவும் அசாதாரணமானது, அரிதானது” என தெரிவித்தார். “இப்படியொரு வழக்கை நாங்கள் சந்தித்தது இல்லை,” எனக்கூறும் அவர், இந்தியாவின் லட்சிய ஆய்வான ‘மில்லியன் டெத் ஸ்டடி’யை குறிப்பிடுகிறார்.

பிகார் பாலியல் வன்புணர்வு

பட மூலாதாரம்,SWASTIK PAL

 
படக்குறிப்பு,

"ஒரு கிராமத்தில் நடக்கும் இறப்பு யாருக்கும் தெரியாமல் இருக்காது" என்கிறார் வழக்கறிஞர் ஜெய் கரண் குப்தா.

“இறப்பு பதிவுக்கு அதிக கட்டுப்பாடுகள் அல்லது தடைகளை விதிப்பதில் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அது நிலைமையை மோசமாக்கலாம்,” என ஜா தெரிவித்தார்.

காரணம்: இறப்புகளின் எண்ணிக்கையில் ஆண்களைவிட பெண்களும் பணக்காரர்களைவிட ஏழைகள் அதிகமாகவும் தவறவிடப்படுகின்றனர். இதனால் சொத்துக்களை மாற்றம் செய்வது உள்ளிட்டவை கடினமாகிறது.

வீட்டில் அச்சிறுமியின் தாய்க்கு பதற்றமும் வலியுமே நிறைந்திருந்தது.

“உண்மையை கண்டறிய கிராமத்தினர், அதிகாரிகளிடம் ஆதரவு திரட்டினேன். என் மகளை வன்புணர்வு செய்து, அவளின் வாழ்க்கையை அழித்த நபர் சிறையில் உள்ளார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.”

“ஆனால், என் மகளின் வாழ்க்கை அடைபட்டுவிட்டது. அவளுக்கு இனி என்ன நடக்கும்?”.

https://www.bbc.com/tamil/articles/c72l89ygg0lo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.