Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஓட்டத்தால் இங்கிலாந்தை டெஸ்ட்போட்டியில்தோற்கடித்தது நியுசிலாந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓட்டத்தால் இங்கிலாந்தை டெஸ்ட்போட்டியில்தோற்கடித்தது நியுசிலாந்து

Published By: RAJEEBAN

28 FEB, 2023 | 11:07 AM
image

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்;ட்போட்டியில் ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்று நியுசிலாந்து அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வெலிங்டனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட்போட்டியில் நியுசிலாந்து அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டாவது டெஸ்டில் பலோஒன்முறையின்மூலம் பின்தங்கியிருந்த நிலையிலேயே நியுசிலாந்து அணி இந்த வெற்றியை பெற்றுள்ளது.

இதன் காரணமாக பலோ ஒன்னில் பின்னிலையிலிருந்து டெஸ்ட்டில் வெற்றிபெற்ற நான்காவது  அணியாகவும் ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்ற இரண்டாவது அணியாகவும் நியுசிலாந்து மாறியுள்ளது.

FqB8uKcWwAE4Ydn.jpg

டெஸ்ட்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 435 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது முதலாவதுஇனிங்சை டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஹரிபுரூக் 186 ஓட்டங்களை பெற்றார் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்றார்

நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 209 ஓட்டங்களை பெற்றது  ஸ்டுவார்ட் புரோட் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.

பலோ ஒன் முறையில்இரண்டாவது இனிங்சை ஆடிய நியுசிலாந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 483 ஓட்டங்களை பெற்றது 

கேன் வில்லியம்சன்  183 ஓட்டங்களை பெற்றார்

இந்நிலையில் வெற்றிபெறுவதற்கு 257 ஓட்டங்கள் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துஅணி நெய்ல்வோக்னரின் சோர்ட் பிச்பந்துகளிற்கு தடுமாறி 256 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.

பரபரப்பான சூழ்நிலையில் நெய்ல் வோக்னர் இங்கிலாந்தின் இறுதிவிக்கெட்டை கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்களைஆரம்பத்தில் இழந்த போதிலும் ஜோ ரூட் மிகவும சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்,அவர் 95 ஓட்டங்களைபெற்றார்.

இங்கிலாந்து அணி நான்கு வி;க்கெட்களை இழந்து 62  ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஜோடிசேர்ந்த ரூட்டும் பென்ஸ்டோக்சும் ஒரு சந்தர்ப்பத்தில்அணி நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.

மீண்டும் பந்து வீச வந்த வாக்னர் பென்ஸ்டோக்சைஆட்டமிழக்கசெய்தார்,அடுத்த ஓவரில் ஜோ ரூட்டும் ஆட்டமிழக்க  இங்கிலாந்து அணி மீண்டும் தடுமாற தொடங்கியது.

ஸ்டுவர்ட் புரோட் ஆட்டமிழந்ததை தொடர்ந்து  பென்போக்சும் ஜக்லீச்சும் இணைந்து இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர்,இதன் பின்னர் போக்ஸ் ஆட்டமிழந்தார்.

ஜேம்ஸ் ஆன்டர்சன் ஒரு பவுன்டரி அடித்ததன்காரணமாக இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கு இரண்டு ஓட்டங்கள் அவசியம் என்ற நிலை காணப்பட்டது.

எனினும் வெற்றிக்கு ஒரு ஓட்டம் அவசியம் என்ற நிலையில் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஆட்டமிழந்தார் - நியுசிலாந்து அணி வரலாற்று வெற்றியை பெற்றது.

இதன் மூலம் நியுசிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/149316

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட்: நியூசிலாந்து நிகழ்த்திய 'மேஜிக்' - திகைத்து நின்ற இங்கிலாந்து

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விவேக் ஆனந்த்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
கிரிக்கெட், நியூசிலாந்து, இங்கிலாந்து

பட மூலாதாரம்,PHIL WALTER

ஃபாலோ ஆன் வாங்கிய பிறகும் ஒரு ரன் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் 'திரில்' வெற்றி பெற்று மெகா சாதனை படைத்திருக்கிறது நியூசிலாந்து. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிசிறந்த போட்டிகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது இந்த மேட்ச். இதுதான் இக்கட்டுரையின் சாராம்சம்.

ஆனால், ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்கில் இருந்துதான் இந்த கட்டுரையை சற்று விரிவாக எழுத வேண்டும்.

2019 ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆட்டம் 'டை' ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரும் 'டை'யில் முடிவடைய, பவுண்டரிகள் கணக்கை அடிப்படியாக கொண்டு இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒருநாள் உலக கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படித்தான் இங்கிலாந்து கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதுவும் அதன் சொந்த மண்ணில்.

 

ஒருமுறையாவது உலகக்கோப்பையை தொட்டுப்பார்த்து, தனது ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நியூசிலாந்து வீரர்களின் கனவு, அன்றைய தினம் லார்ட்ஸ் மண்ணில் தவிடுபொடியானது.

அதன்பின்னர் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறித்து முணுமுணுப்புக்கள் எழுந்தது வேறு கதை.

அந்த போட்டி முடிந்து கிட்டதட்ட இன்னும் சில மாதங்களில் நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஆனால் இன்னமும் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் எந்தவொரு ஒருநாள் போட்டியிலும் மோதவில்லை.

இத்தகைய சூழலில் இங்கிலாந்துக்கு இன்று ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது நியூசிலாந்து. ஆனால் அது டெஸ்ட் ஃபார்மெட்டில்.

நியூசிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அமர்க்களப்படுத்தியது ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி.

இத்தனைக்கும் ஒருவர் கூட இங்கிலாந்து அணியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசவில்லை. ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் கூட்டணியை வைத்தே இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்தின் கதையை முடித்தது ஸ்டோக்ஸ் அணி.

இத்தகைய பிரமாண்ட வெற்றிக்கு காரணம் வெறும் இங்கிலாந்து அணி மட்டுமல்ல, ஒரு நியூசிலாந்து வீரரும் தான்.

ஆம், அவர் பெயர் பிரெண்டன் மெக்குல்லம். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி சரவெடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றவருமான பிரெண்டன் மெக்குல்லம் தான் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் ஃபார்மெட்டுக்கான பயிற்சியாளர்.

மீண்டும் ஒரு 'குட்டி' ஃபிளாஷ்பேக்

2015 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு மோர்கன் தலைமையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புதிய உத்தியுடன் பட்டையை கிளப்பி வரும் இங்கிலாந்து அணி, டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

பாரம்பரிய கிரிக்கெட் ஃபார்மெட் என அழைக்கப்படும் டெஸ்ட் ஃபார்மெட்டில் இங்கிலாந்து கூடுதல் கவனம் செலுத்தாதது குறித்து அந்நாட்டின் முன்னாள் வீரர்கள், ஊடகங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரை இழந்தது இங்கிலாந்து.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடியது.

அதில் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்தது. 2-1 எனும் முன்னிலையோடு நாடு திரும்பியது.

இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை ஏற்பட்டதால் ஜோ ரூட் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்னர் ஆஸ்திரேலியா சென்று ஆஷஷ் தொடரில் 4-0 என மிகமோசமான தோல்வியை பெற்றுத்திரும்பியது இங்கிலாந்து.

 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் 'அடி' தான். மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட வெல்லவில்லை. தவிர, டெஸ்ட் தொடரையும் வெஸ்ட் இண்டீசிடம் இழந்தது.

 

2012-க்கு பிறகு பத்து ஆண்டுகளில் ஜிம்பாப்வே, வங்கதேசம் தவிர வெஸ்ட் இண்டீசால் டெஸ்ட் தொடரில் தோற்கடிக்கப்பட்ட 'முன்னணி' அணி இங்கிலாந்து மட்டுமே.

அடிமேல் அடி வாங்கிய இங்கிலாந்து அணியின் தலைமை முற்றிலுமாக மாற்றப்பட்டது. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக பிரண்டன் மெக்குல்லம் நியமிக்கப்பட்டார்.

ஸ்டோக்ஸ் - மெக்குல்லம் இணையில் மீண்டும் இங்கிலாந்து 'கம்பேக்' தரத்தொடங்கியது. முதல் 'அசைன்மென்ட்' நியூசிலாந்து தொடர்.

கிரிக்கெட், நியூசிலாந்து, இங்கிலாந்து

பட மூலாதாரம்,HAGEN HOPKINS

2022 ஜூன் மாதம் இங்கிலாந்து வந்த நியூசிலாந்து அணியை முற்றிலுமாக 'பதம்பார்த்து' அனுப்பியது. மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வென்று 'ஒயிட் வாஷ்' செய்து 2021 தோல்விக்கு பதிலடி தந்தது.

அதன்பின்னர் இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லும் கனவோடு வந்த விராட் கோலி அணிக்கு பேரதிர்ச்சி தந்தது.

ஐந்தாவது டெஸ்டை டிரா செய்தாலே தொடர் கைக்கு வந்துவிடும் என்ற நிலையில் விளையாடியது இந்தியா. ஆட்டத்தின் நான்காவது இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து, சேஸிங்கில் டெஸ்ட் ஆட்டத்தை 'ஒருநாள்' கிரிக்கெட் பாணியில் விளையாடி, 77 ஓவர்களிலேயே சேசிங் செய்து அசத்தியது.

அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-1 என வென்றது, பாகிஸ்தானை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.

ஸ்டோக்ஸ் - மெக்குல்லம் அணியின் இந்த மிரட்டல் ஃபார்ம் நியூசிலாந்து மண்ணிலும் தொடந்தது. முதல் போட்டியையே அபாரமாக வென்றதால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்லுமா என எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே ஜோ ரூட், ஹேரி ப்ரூக் கூட்டணி அதிரடி காட்டினர். அவர்களின் வேகத்தை பார்த்தபோது இரண்டாவது நாளிலேயே ஆட்டம் இங்கிலாந்து பிடிக்குள் முழுமையாக வந்துவிடுமோ என தோன்றியது.

ஆனால் இந்த இரு பேட்ஸ்மேன்களை தவிர வேறு யாரும் முப்பது ரன்களை கூட எடுக்கவில்லை, தவிர, ஜோ ரூட் 153 ரன்களுடன் அவுட்டாகாமல் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோதே முதல் இன்னிங்க்ஸை தைரியமாக டிக்ளேர் செய்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். அப்போது எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 435 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி.

ஆனால், தமது கேப்டன் எடுத்த முடிவு ஒன்றும் தவறல்ல என்பதை காட்டும் விதமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் செயல்பட்டனர். குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் போட்டி போட்டுக்கொண்டு விக்கெட் வேட்டையில் இறங்கினர். நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கிரிக்கெட், நியூசிலாந்து, இங்கிலாந்து

ஏற்கனவே முதல் இன்னிங்ஸை 450 ரன்களுக்குள்ளாகவே டிக்ளேர் செய்த நிலையில், மீண்டும் ஒரு ரிஸ்க் எடுத்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

இந்த போட்டியை டிரா செய்தாலே இங்கிலாந்து தொடரை வென்றுவிட முடியும். ஆனால், நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினம் எனும் சூழலில் 224 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்த வேளையில் நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் தந்தது மெக்குல்லம் - ஸ்டோக்ஸ் கூட்டணி. ஆனால், இந்த முடிவை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது நியூசிலாந்து.

ஏற்கனவே கடந்த டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது நியூசிலாந்து. ஆகவே நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்துக்கு ஓரளவு சவாலான இலக்கு நிர்ணயித்ததாலே வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டது .

நியூசிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை மிக மெதுவாக விளையாடியது. ஆட்டத்தை ஐந்தாவது நாளுக்கு கடத்திவிட வேண்டும் என்ற உத்தியோடு கவனமாக பேட்டிங் செய்தது.

அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் வில் யங் தவிர அனைவருமே சிறப்பாக விளையாடினர். குறிப்பாக கேன் வில்லியம்சன் களத்தில் நங்கூரம் போல ஒரு முனையில் நின்றார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் தற்காப்பு ஆட்ட அரணை குலைக்க முடியாமல் திணறினர். சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் மட்டுமே போராடி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில் 162 ஓவர்கள் விளையாடி 483 ரன்களை எடுத்து இன்னிங்ஸை இழந்தது நியூசிலாந்து. வில்லியம்சன் 282 பந்துகளை சந்தித்து 132 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பிளன்டல் 166 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி நான்காவது நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது.

கிரிக்கெட், நியூசிலாந்து, இங்கிலாந்து

பட மூலாதாரம்,HAGEN HOPKINS

இன்று ஐந்தாவது நாள் ஆட்டம். இங்கிலாந்து 90 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலை. கைவசம் ஒன்பது விக்கெட்டுகளை வைத்திருந்து. சமீப காலங்களில் நான்காவது இன்னிங்சில் 'மிரட்டல்' ஆட்டங்களை வெளிப்படுத்தியிருந்ததால் நம்பிக்கையுடன் களமிறங்கியது.

அதே சமயம் உள்ளூர் மைதான சாதகங்கள், கடைசி நாள் ஆட்டம் பேட்டிங் செய்ய எந்த அளவுக்கு சிரமமானது என்பதை அறிந்து வைத்திருந்ததால் நியூசிலாந்தும் தெம்புடன் களமிறங்கியது.

ஒரு முனையில் சௌதி மறுமுனையில் மேட் ஹென்றி என தனது நட்சத்திர பந்துவீச்சாளர்களை களமிறக்கினார் வில்லியம்சன்.

காலையில் ஆட்டம் தொடங்கிய பின், மூன்றாவது ஓவரிலேயே சௌத்தி ராபின்சன் விக்கெட்டை பறித்தார். ஆறாவது ஓவரிலேயே தன் பங்குக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் மேட் ஹென்றி. நேற்று முதல் களத்தில் இருந்த இரு பேட்ஸ்மேன்களும் இப்போது அவுட்.

காலையிலேயே சொற்ப ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை காலி செய்துவிட்டதால் கூடுதல் தெம்புடன் மேற்கொண்டு ஆட்டத்தை விளையாடியது நியூசிலாந்து.

ஓலி போப்பை பொறிவைத்து வேக்னர் வீழ்த்த, அதற்கு அடுத்த பந்திலேயே மெகா தப்புக் கணக்கை போட்டார் ரூட். இதனால் முதல் இன்னிங்ஸ் நாயகன் ஹேரி ஃப்ரூக் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே ரன் அவுட் ஆனார்.

இன்று காலை முதல் பத்து ஓவர்களிலேயே நான்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியது நியூசிலாந்து.

இந்த ஒருமணி நேர ஆட்டம் இங்கிலாந்தின் கனவு கானல்நீராவதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

80 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இங்கிலாந்தின் கடைசி நம்பக பேட்டிங் ஜோடியான ஸ்டோக்ஸ் - ரூட் இணை அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் இறங்கியது.

பிரேஸ்வெல் வீசிய ஒரு ஓவரில், இரு பௌண்டரிகள் & ஒரு சிக்ஸர் வைத்து ஜோ ரூட் 17 ரன்கள் குவித்தார். அதன் பின்னரும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தவர் 50 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

முதல் ஒரு மணி நேர ஆட்டம் அபாயகரமான சூழலுக்கு இட்டுச் சென்றாலும் ஜோ ரூட்டின் அதிரடி ஆட்டத்தால் முதல் செக்ஷனில் நான்கு விக்கெட்டுகளை இழந்தபோதும் 120 ரன்கள் குவித்தது இங்கிலாந்து.

மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் பொறுப்பாக விளையாடியது இந்த ஜோடி, இதனால் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. இன்னும் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி; கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருக்கிறது; ஏராளமான ஓவர்களும் மீதமிருக்கிறது என்பதால் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.

கிரிக்கெட், நியூசிலாந்து, இங்கிலாந்து

பட மூலாதாரம்,PHIL WALTER

அப்போது நீல் வாக்னரை பந்துவீச அழைத்தார் கேன் வில்லியம்சன். ஸ்டோக்ஸுக்கு ஷார்ட் பால் உத்தியை கையாண்டார். அது கைமேல் பலன் தந்தது. அந்த ஓவரிலேயே ஸ்டோக்ஸ் வீழ்ந்தார்.

116 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து கவனமாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டோக்ஸ் வீழ்ந்ததும், இங்கிலாந்தின் அரண் தகர்ந்தது. வாக்னர் தமது அடுத்த ஓவரிலேயே முதல் பந்தில் அபாரமாக விளையாடிக்கொண்டிருந்த ஜோ ரூட்டை வீழ்த்தினார். 113 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் ரூட். 201/5 என இருந்த ஸ்கோர் சில நிமிடங்களில் 202/7 என்றானது.

இதன் பின்னர் ஆட்டத்தில் சுவாரஸ்யம் எகிறியது. ஒவ்வொரு பந்தும் உன்னிப்பாக கவனிக்கப்ட்டது. ஹென்றியின் பந்தில் பிராட் வீழ்ந்தாலும் பென் ஃபோக்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்தார். குறிப்பாக லீச் அதிகம் பந்தை எதிர்கொள்ளாதபடி பார்த்துக்கொண்டார்.

21 பந்துகளை சந்தித்தும் லீச் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. இங்கிலாந்து அடி மேல் அடி வைத்து 250 ரன்களை கடந்தது. இன்னும் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவை கைவசம் இரண்டு விக்கெட்டுகள் இருக்கின்றன எழும் சூழலில் சௌத்தி பந்தில் வீழ்ந்தார் ஃபோக்ஸ்.

நகம் கடித்துக் கொண்டே, இதயத் துடிப்பு எகிற ரசிகர்கள் ஆட்டதை கவனிக்க, வேக்னர் வீசிய ஓவரில் லீச் தனது முதல் ரன்னை எடுக்க, ஆண்டர்சன் ஒரு பௌண்டரி அடித்தார்.

இப்போது இங்கிலாந்தின் வெற்றிக்குத் தேவை இரண்டே ரன்கள். நியூசிலாந்தின் வெற்றிக்குத் தேவை ஒரே ஒரு விக்கெட். எந்த பந்து இந்த தொடரின் விதியை தீர்மானிக்கப் போகிறது என எதிர்பார்ப்பு எழுந்தது. அப்போது லீச்சுக்கு ஒரு சோதனை காத்திருந்தது. 25 பந்துகளை சந்தித்து ஓர் ரன் மட்டுமே எடுத்திருந்த லீச், சௌத்தி ஓவரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சௌத்தியின் அத்தனை முயற்சிகளையும் அந்த ஓவரில் தவிடுபொடியாக்கினார் ஜேக் லீச். ஒரு ரன் கூட எடுக்கவில்லை. இப்போது வேக்னர் பந்துவீச வந்தார், பேட்டிங் முனைக்கு ஆண்டர்சன் வந்தார். ஒரே ஒரு ரன் எடுத்தால் கூட ஆட்டம் டையில் முடிந்துவிடும், இங்கிலாந்து வசம் கோப்பைச் சென்றுவிடும் என்ற நிலை.

75வது ஓவரின் முதல் பந்தை வீசினார் வேக்னர், வைடாக அறிவிக்கப்பட வேண்டிய சூழலில் இருந்து தப்பித்தது அந்த பந்து. இரண்டாவது பந்தை வீசினார் வேக்னர். நாற்பது வயதிலும் தெம்புடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலித்து இங்கிலாந்துக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுத்தந்த ஆண்டர்சன், இந்த முறை சோடை போனார்.

ஆண்டர்சன் பேட்டில் உரசிச் சென்ற பந்தை விக்கெட் கீப்பர் ப்லண்டல் கச்சிதமாக பிடிக்க, அந்த நொடியில் இங்கிலாந்தின் கனவு தகர்ந்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று காட்டியது நியூசிலாந்து. இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே இரண்டாவது முறை.

1993-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. அதன்பின்னர் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் 'ஒரே ஒரு ரன்' இரு அணிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயித்திருக்கிறது.

மேலும் ஃபாலோ ஆன் பெற்ற அணி டெஸ்ட் போட்டியில் வெல்வதும் இதுவே நான்காவது முறையாகும். இப்படியொரு வெற்றியைச் சாதித்த மூன்றாவது அணி நியூசிலாந்து தான்.

முன்னதாக, 132 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 19-வது நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஃபாலோ ஆன் பெற்றும் மீண்டுவந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

1981-ம் ஆண்டு லீட்ஸில் ஆஸ்திரேலியாவிடம் ஃபாலோ ஆன் வாங்கியும் 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. அதன்பின்னர், கடந்த 2001-ம் ஆண்டு லட்சுமண், டிராவிட், ஹர்பஜன் கூட்டணியின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவிடம் ஃபாலோ ஆன் வாங்கியும் மீண்டு வந்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றது இந்திய அணி.

இதோ, 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மெகா சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஃபாலோ ஆன் வாங்கி மீண்டுவந்தது மட்டுமின்றி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது நியூசிலாந்து அணி.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இப்படியொரு ஆட்டத்தில் பங்கேற்றதில் மிகப்பெரிய கௌரவமாக உணர்கிறேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/ce73p2zdddlo

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க நல்ல விறுவிறுப்பு......நன்றி ஏராளன்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் வீடியோ பார்த்தேன்.அருமை.பார்க்க துனடிய பதிவுக்கு நன்றி ஏராளன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.