Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பாமக, பாஜக உள்ள அணியில் ஒருபோதும் இருக்க மாட்டோம்" - திருமாவளவனின் பேச்சு திமுகவுக்கு எச்சரிக்கையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பாமக, பாஜக உள்ள அணியில் ஒருபோதும் இருக்க மாட்டோம்" - திருமாவளவனின் பேச்சு திமுகவுக்கு எச்சரிக்கையா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
திருமாவளவன்
 
படக்குறிப்பு,

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது பிறந்த நாளில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் தொல். திருமாவளவன்.

பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கும்போது தி.மு.க. கூட்டணியில் பாமக இடம்பெறலாம் என பேசப்படும் நிலையில், திருமாவளவனின் இந்தப் பேச்சு தீவிரமாக கவனிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகள் முயற்சிப்பதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

திருமாவளவன் வலியுறுத்திய 3 விஷயங்கள்

இந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசிய பேச்சு தமிழக அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீண்ட அவரது உரையில், முக்கியமாக மூன்று - நான்கு விஷயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார் திருமாவளவன்.

"தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களின் பேச்சைப் பாருங்கள். அவை எல்லாம் வன்முறையைத் தூண்டுகின்றனவாக இருக்கின்றன. சமூக பதற்றத்தை உருவாக்குவதாக இருக்கின்றன. திடீரென்று திருவள்ளுவருக்கு காவி துணியைப் போர்த்துவார்கள். திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என உரிமை கோருவதற்காக அல்ல. திருவள்ளுவர் மீது நன்மதிப்பு உள்ளவர்களைச் சீண்டுவதற்காக.

பாஜகவில் பதவி வாங்க வேண்டுமென்றால், நீங்கள் இரண்டு, மூன்று நோஞ்சான்களைக் கொன்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் துரோகியாக இருக்க வேண்டும். இதெல்லாம்தான் அங்கே தகுதி. பெரியாரிசத்தையோ, அம்பேத்கரிசத்தையோ பேசினால் அது தகுதி கிடையாது. தேடப்படக்கூடிய எல்லாக் குற்றவாளிகளும் அங்கேதான் அடைக்கலமாகியிருக்கிறார்கள்.

ஹெச். ராஜா வாயைத் திறந்தாலே வார்த்தைகள் எப்படி வருகின்றன? ஏனென்றால் அதுதான் வளர்ப்பு. ஆர்.எஸ்.எஸ்சின் வளர்ப்பு முறை அதுதான்.

"இது கருத்தியல் யுத்தம்"

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

தமிழ்நாட்டிலே கருத்தியல் யுத்தம் தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையிலானது அல்ல, அ.தி.மு.க. அவர்களுடன் இருக்கிறது. கம்யூனிஸ்ட்களுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையிலானது அல்ல கருத்தியல் யுத்தம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கருத்தியல் யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையிலான யுத்தம். கருத்தியல் ரீதியாக பா.ஜ.கவினர் விவாதிக்கத் தயாரா? மோதத் தயாரா? ஓட, ஓட விரட்டியடிப்போம். தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட கொடியேற்றவிடாமல் எங்களால் தடுக்க முடியும்.

பதவியை பார்த்து பல் இளிப்பவன் அல்ல நான். பதவியை தலையில் இருக்கும் முடிக்குச் சமமாகக் கருதுகிறவன். சட்டமன்ற உறுப்பினர் பதவியை இரண்டே ஆண்டுகளில் தூக்கியெறிந்துவிட்டு வந்தவன் நான். நாடாளுமன்றத் தேர்தலின்போது அண்ணன் ஸ்டாலின், நான் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னார்கள். தோற்றாலும் பரவாயில்லை தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என சொன்னவன் நான்.

பதவிக்கு ஆசைப்படுகிறவனாக இருந்தால், 'நீங்கள் சொல்றபடி கேட்கிறேன் அண்ணே' என தலைகுனிந்து வந்திருப்பேன். 'I dont Care'. நாளைக்கே என் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாலும் செய்வேன். ஆனால், உங்களை (பாஜகவை) எதிர்ப்பதை விடமாட்டேன். கருத்தியல் ரீதியாக பாஜகவை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்" என்று கடுமையாகப் பேசினார்.

"பாமக உள்ள இடத்துக்கு போக மாட்டோம்"

திருமாவளவன்

எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு வாழ்த்துத் தெரிவித்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் வகையில் பேசிய திருமாவளவன், "இந்தப் பக்கம் போகலாமா, அந்தப் பக்கம் போகலாமா என்ற அரசியலை நான் செய்யவில்லை.

பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். இவர்கள் இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இருக்காது. இந்தியாவில் எந்த அரசியல் கட்சித் தலைவனுக்கு இந்த தில் இருக்கிறது? நான் சொல்வேன். என்னைப் போலச் சொல்வதற்கு இந்தியாவில் ஒருத்தனைக் காட்டு. அரசியல் ரீதியாக எவ்வளவு பின்னடைவு ஏற்பட்டாலும் அவர்களோடு இருக்க மாட்டோம். அகில இந்திய அளவிலான கூட்டணியை தி.மு.க. ஏற்படுத்த வேண்டும். தி.மு.கவோடுதான் இருப்போம் என தேர்தல் கூட்டணி தொடர்பாக தமது நிலைபாட்டையும் திட்டவட்டமாக அறிவித்தார்.

 

மேலும், "சில பேர் தெலுங்கர்களை எதிர்த்துக்கிட்டு உட்கார்ந்து கிட்டிருக்கான். கன்னடர்களை எதிர்த்துக்கொண்டிருக்கிறான். What nonsense? என்ன முட்டாள்தனமான அரசியல். தில்லியில் இருக்கிறவன் இந்தி பேசுகிறான். பிராமணன் உட்கார்ந்திருக்கிறான். அவன்தான் இந்திய தேசியம் என்ற பெயரில் தமிழ்தேசியத்தை எதிர்க்கிறான்.

அண்டை மாநிலத்தில் உள்ள தெலுங்கு பேசுகிறவனும் கன்னடம் பேசுகிறவனுமா எதிரி? இதெல்லாம் மக்களை முட்டாளாக்குகிற அரசியல். இதை வேடிக்கை பார்க்க முடியாது? மோதி, அதானியை எதிர்க்காமல் தமிழ்நாட்டில் பார்ப்பனியம், இந்து தேசியம், சாதியத்தை எதிர்க்காமல், கூலி வேலைக்கு வரும் வட மாநிலத்தவர்களை எதிர்ப்பது எந்த விதத்தில் சரி? கூலிக்கு வரும் வடமாநிலத்தவர்களா உங்கள் எதிரி? என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

இது தவிர, "தி.மு.க. ஆட்சியில் கி. வீரமணியின் காரை பா.ஜ.கவினர் சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும்போது தமிழ்நாட்டில் காவல்துறை பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழ்நாட்டில் காவல்துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், அ.தி.மு.கவை போல அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருந்துவிடக்கூடாது" என்றும் குறிப்பிட்டார்.

திருமாவளவனின் நேற்றைய பேச்சு பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம் என்பதை திருமாவளவன் உறுதிப்படுத்தியிருந்தாலும், அந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறுமானால், தாங்கள் அந்தக் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சி, தி.மு.க. மீது மென்மையான போக்கைக் கடைப்பிடித்துவரும் நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அந்தக் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெறலாம் எனக் கூறப்படும் நிலையில், திருமாவளவன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளிலேயே தங்களுடைய கட்சி மட்டுமே கருத்தியல் ரீதியாக பா.ஜ.கவைத் தொடர்ந்து எதிர்க்கக்கூடிய கட்சி என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இம்மாதிரியான சூழலில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்று, விடுதலைச் சிறுத்தைகள் விலகுமானால், அந்தக் கூட்டணியின் முற்போக்கு முகத்தில் சேதம் ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் வசிக்கும், வேலை பார்ப்பதற்காக வரும் பிற மொழி பேசுபவர்களின் மீது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் கருத்துகளை இந்தக் கூட்டத்தில் முன்வைத்திருக்கிறார் திருமாவளவன்.

2019ஆம் ஆண்டில் இருந்ததைவிட, அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் ஒரு பலமான கட்சி என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே அந்தப் பேச்சு அமைந்திருந்தது.

"சமீபத்தில் அன்புமணி கோட்டைக்கு வந்து முதலமைச்சரைச் சந்தித்தார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்குவது குறித்து அவர் பேசியதாக வெளியில் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையான பின்னணி என்ன என்று யாருக்கும் தெரியாது.

ஆனால், அன்றைய தினம் இரண்டு தொலைக்காட்சிகளில் பா.ம.கவும் தி.மு.கவும் நெருங்குகின்றனவா என விவாதம் வைக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றால்தான், நாடாளுமன்றத் தேர்தலில் சில இடங்களையாவது பெற முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. சமீப காலமாக பா.ம.க. அ.தி.மு.க. பக்கமோ, பா.ஜ.க. பக்கமோ இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த பின்னணியில்தான் தி.மு.கவிற்கு ஒரு செய்தியைச் சொல்ல வி.சி.க. நினைத்திருக்க வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

மேலும், தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. இடம்பெற்றிருப்பதுதான் அந்தக் கூட்டணிக்கு பலம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அ.தி.மு.க. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு அளித்த பிறகும் வட மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி பெரிய அளவில் வெற்றிபெற்றதற்குக் காரணம், வி.சி.க. என்பதை மறுக்க முடியாது என்கிறார் அவர். இந்த நிலையில்தான் தன் நிலைப்பாட்டை உறுதியாகச் சொல்லியிருக்கிறார் திருமாவளவன் என்கிறார் குபேந்திரன்.

அன்புமணி ராமதாஸ் கருத்து

அன்புமணி ராமதாஸ்
 
படக்குறிப்பு,

பாமக நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இதற்கிடையில், தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முயற்சித்து வருவதாக கூறப்படுவது வதந்தி என செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணியைப் பொருத்தவரை, 2009ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.கவுடன் வி.சி.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அ.தி.மு.கவுடன் ம.தி.மு.க., பா.ம.க., இடதுசாரிகள் இடம்பெற்றிருந்தனர். இதில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.

2011ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், வி.சி.க., பா.ம.க., கொங்கு நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., இடதுசாரிகள், ம.தி.மு.க. உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க., வி.சி.க., ம.ம.க. ஆகியவை ஒரு கூட்டணியாகவும் அ.தி.மு.க. தனியாகவும் தே.மு.தி.க., பா.ம.க. பா.ஜ.க. ஆகியவை ஒரே அணியாகவும் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.

2016ஆம் ஆண்டு தேர்தலில் சிறிய கட்சிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு தனித்துப் போட்டியிட்டது. தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததோடு, சிறிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டது. இடதுசாரிகள், ம.தி.மு.க., வி.சி.க., தே.மு.தி.க. ஆகியவை மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றது.

2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள்,வி.சி.க. ஆகியவை இணைந்து போட்டியிட்டன. அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. இதில் பெரும்பான்மை இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. அதே கூட்டணியோடு தொடர்ந்த நிலையில், வெற்றியைப்பெற்றது.

அதாவது, 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு, தி.மு.கவும் பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்ததில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை, 2016ஆம் ஆண்டைத் தவிர, 2009ஆம் ஆண்டில் இருந்து தி.மு.க. கூட்டணியில் நீடித்து வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cnlrpl87g4go

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.