Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது - ஷோபாசக்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது

படைப்பு தகவு பிப்ரவரி -2023 இதழில் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ள நேர்காணலின் முழுமையான வடிவம் இங்கே.

நேர்கண்டவர் :அம்மு ராகவ்

-சினிமா, இலக்கியம், போராளி இவற்றில் எந்தவொன்றில் ஷோபாசக்தி நிறைவு பெறுகிறார்?

முதலில், நான் போராளி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பதின்ம வயதுகளில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற உறுப்பினனாக இருந்தேன். ஆனால், சனநாயக மத்தியத்துவமற்ற, இறுக்கமான அந்த அமைப்பில் தலைமையின் எண்ணங்களையும் கட்டளைகளையும் நிறைவேற்றும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன் மட்டுமே. விசுவாசத்தாலும் இயக்கக் கட்டுப்பாடு என்ற காரணத்திற்காகவும் இயக்கத்தின் எல்லாவித நடவடிக்கைகளையும் தவறுகளையும் கூட நியாயப்படுத்திப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தேன். இயக்கத்திலிருந்து வெளியேறும்போது கூட ஓர் உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுக்க எனக்குக் கருத்துப்பலமோ வலுவோ இருக்கவில்லை. உதிரியாகவே வெளியே வந்தேன்.

அதன் பின்னராக, அய்ரோப்பாவில் ‘ட்ராட்ஸ்கி’ய இடதுசாரி அமைப்பில் செயற்பட்ட காலத்தில், கம்யூனிஸத்தின் மீது கொண்ட தீவிரமான பற்றால் அந்த அமைப்பில் நான் இயங்கினேன். கட்சித் தோழர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என்றாலும், அந்தச் சோர்வான அமைப்பின் வேலைத்திட்டங்கள் குறித்து எப்போதுமே கேள்விகளை முன்வைக்கும் ஒரு சந்தேகப் புத்திக்காரனாகவே அங்கே நான் இருந்தேன். என்னுடைய சந்தேகங்களை; குறிப்பாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, தலித் அரசியலின் முக்கியத்துவம் போன்ற நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்று, வறட்டுவாத சிந்தாந்தத்திற்குள் அந்தக் கட்சியின் தலைமை மூழ்கியிருந்தது. அந்த அமைப்பிலிருந்து நான் தொடர்புகளை முறித்துக்கொண்டபோது ‘விட்டது சனி’ என்று அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.
இப்போது பிரான்ஸில் தேர்தல் கட்சியாக இருக்கும் Lutte ouvrière (தொழிலாளர் போராட்டம்) என்ற மிகச் சிறிய கட்சிக்கு ஆதரவாளனாக இருக்கிறேன். அவ்வப்போது நேரமிருக்கும்போது, அவர்களது ஆர்ப்பாட்டங்களிலும் மேதின ஊர்வலங்களிலும் கலந்துகொள்வதோடு என்னுடைய போராட்டமெல்லாம் முடிந்துவிடுகிறது. எனவே போராளி என்ற அரும் வார்த்தையால் நீங்கள் என்னை அடையாளப்படுத்தக் கூடாது.

கட்சியில் இல்லாத ஒருவர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ஒருபோதும் கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது என்பார் லெனின். அதுபோலவே போராட்டம் என்பது எப்போதுமே கூட்டுச் செயற்பாடு. ஒரு போராளி என்பவர் தன்னுடைய இலட்சியத்திற்காக இழப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு ஏராளமானோர் இப்போதும் இந்த உலகமெங்கும் போராட்ட வாழ்க்கையில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியிருக்கிறார்கள், கொலையுண்டிருக்கிறார்கள், சிறைகளில் கிடக்கிறார்கள். நான் அவர்களில் ஒருவன் கிடையாது. நான் இப்போது வெறும் எழுத்தாளன் மட்டுமே. என்னுடைய எழுத்துக் காரணமாக எனக்கு அதிகார சக்திகளால் ஏதாவது தொல்லை ஏற்பட்டால், அதை எழுத்தாளன் மீதான அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்வேனே தவிர, போராளியின் மீதான அடக்குமுறை என வெற்றுப் பகட்டோடு சொல்லிக்கொள்ள மாட்டேன். என்மீது போராளி விம்பத்தை ஏற்றிக்கொள்ள முன்னொரு காலத்தில் எனக்கும் ஓர் அரிப்பு இருந்திருக்கலாம். அது என்னுடைய பேச்சுகளில் கூட எங்காவது வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், இன்றைய நிலையில் அந்தத் தவறை நான் செய்யமாட்டேன். அப்படிச் செய்தால் அது உண்மையான போராளிகளை அவமதிப்பதாகும்.

சினிமாவும் இலக்கியமும் வேறு வேறல்ல என்றே நான் கருதுகிறேன். அடிப்படையில் இரண்டுமே படைப்புச் செயற்பாடுகள்தானே. நான் சினிமாவுக்குள் நுழைந்தபோதே, இலக்கிய எழுத்தாளன் என்ற உறுதியான அடையாளத்துடனேயே நுழைந்தேன். நான் நடிக்கும் எல்லாத் திரைப்படங்களிலும் என்னுடைய பாத்திரத்தின் உருவாக்கத்திலும், வசனங்களிலும் என்னுடைய பங்கும் தலையீடும் இருந்தேயாகும். இன்றைய இயக்குநர்கள் அதை அனுமதிப்பது மட்டுமல்லாமல், என்னுடைய கருத்தை அறிந்துகொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். நான் நாடகங்களில் நடிக்கும்போதும் அப்படித்தான். ஆனால், சினிமாவும் நாடகமும் கூட்டுச் செயற்பாடுகள் என்பதால் என்னுடைய கருத்துப் பிடிவாதத்திலிருந்து நான் சற்றுச் சறுக்கவும் விட்டுக்கொடுக்கவும் நேரிடும். இலக்கிய எழுத்து அப்படியல்ல. அது எனக்கு முழுமையான சுதந்திரத்தை அளிப்பது. என்னுடைய சிறுகதையையோ நாவலையோ எழுதிவிட்டு, பிரதி அச்சுக்குப் போவதற்கு முன்பாக இன்னொருவரிடம் படிக்கக் கொடுத்து இலக்கிய அபிப்பிராயமோ, பிரதியைச் செம்மை செய்யவோ கேட்கும் வழக்கம் கூட எனக்குக் கிடையாது. வரலாற்றுத் தகவல்களைச் சரி பார்ப்பதற்காக மட்டுமே சில சமயங்களில் ஓரிரு நண்பர்களிடம் காண்பித்துச் சரி பார்ப்பேன். எனவே எனக்கு முழுமையான சுதந்திரத்தை அளிப்பது மட்டுமல்லாமல், முழுப் பொறுப்பையும் சுமக்க வைக்கும் ஊடகமாகவும் இலக்கியம் இருக்கிறது. அதே வேளையில் நானொரு தீவிரமான சினிமாப் பார்வையாளன் அல்ல. இன்றைக்கு முக்கியமாக் கருதப்படும் பல உலகச் சினிமாக்களை நான் பார்த்தது கூடக் கிடையாது. ஆனால், தேடித் தேடிப் படிக்கும் தீவிரமான இலக்கிய வாசகன். எனவே எனக்கு இயல்பாகவே மிக நெருக்கமானதும் அந்தரங்கப் பிணைப்புள்ளதும் இலக்கியமே.

-1997 முதல் 2023 வரையிலான 25 ஆண்டுகளுக்கு மேலான இலக்கியப் பயணம் உங்களுடையது. எழுத நினைத்த எல்லாவற்றையும் எழுத முடிந்ததா? இல்லை எழுத முடியாமல் உள்ளுக்குள் அழுத்திக்கொண்டிருக்கும் ஏதாவது இருக்கிறதா?

நான் எண்பதுகளிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனால், அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த பின்பாகத்தான் எனக்கு எழுத்துச் சுதந்திரம் முழுமையாக வாய்த்தது. இப்போது நான் எழுத நினைக்கும் எதையும் எழுத எனக்குத் தைரியமும் சுதந்திரமும் வெளியீட்டு வாய்ப்பும் இருக்கின்றன. நான் எதையாவது எழுத நினைத்து எழுதாமல் இருக்கிறேன் என்றால் அந்தக் கதையைச் சொல்வதற்கான வடிவத்தையும் இலக்கிய மொழியையும் நான் இன்னும் கண்டடையவில்லை என்றே பொருள். அவ்வாறு மனதிற்குள் கிடந்து என்னை அலைக்கழிக்கும் பல கதைகள் உள்ளன.

-தமிழ் இலக்கியத்தில் உங்களை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் யார்? சமீபத்தில் வாசித்த முக்கியமான புத்தகங்கள் எவை?

தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதும் என்னைக் கவர்ந்த ஏராளமான இலக்கிய ஆசிரியர்கள் உள்ளனர். ஒரேயொருவரின் பெயரை மட்டும்தான் சொல்ல வேண்டுமெனில் அது எஸ்.பொன்னுத்துரை என்றே சொல்வேன். நான் என்னுடைய சிறிய வயதிலிருந்தே அவருடைய இலக்கிய எழுத்தை மிகவும் நேசித்தவன். அவரை எனது மானசீகக் குருவாகக் கருதி அவரது இலக்கிய ஊழியத்தைப் பின்தொடர்ந்தவன். அவரோ என்னை வெறுத்தவர். அதைப் பதிவும் செய்திருக்கிறார். ‘சனதருமபோதினி’ என்ற இலக்கியத் தொகுப்புக்காக அவரை நான் கண்ட நேர்காணலில், அவரது கண்மண் தெரியாத தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுக்காக நான் அவரைக் கடுமையாகத் தாக்கி கலாட்டா செய்துள்ளேன். அந்த நேர்காணல் குறித்து ‘நான் பன்றியின் முன்னே முத்துகளை எறிந்தேன்’ என்று அவர் எரிச்சலுடன் தன்னுடைய வாழ்க்கை வரவாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இந்த அரசியல் முரண்கள் எதுவுமே அவரை என்னுடைய இலக்கிய ஆசிரியர் என்ற பீடத்திலிருந்து இறக்க வல்லமையற்றவை. யாழ்ப்பாணத்தின் மிக ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்தும், பின்புலத்திலிருந்தும் எழுந்துவந்து, தன்னுடைய கூர்மையும் நுட்பமும் அங்கதமுமான இலக்கிய எழுத்தாற்றலால் நிமிர்ந்து நின்றவர் எஸ்.பொ. அவர் எங்கள் நிலத்தின் இலக்கிய சாட்சி. எங்கள் வாழ்வின் ஆவணப் பெட்டகம். சாதி, பாலியல் ஒழுக்கங்கள், நிறுவப்பட்ட கலாசாரங்கள், கடவுள்கள் எல்லாவற்றையும் தன்னுடைய கதைகளால் கவிழ்த்துப் போட்ட மகா கலகக்காரர்.

சமீபத்தில் வாசித்தவற்றில் யதார்த்தனுடைய ‘நகுலாத்தை’ நாவலையும் மாஜிதாவின் ‘பர்தா’ நாவலையும் முக்கியமானவைகளாகக் கருதுகிறேன். சமகால அரசியலைக் கதைகளில் எழுதக்கூடாது என்றொரு போதனை பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் நேரடியாகவும் உறுதியாகவும் சமகால அரசியல் – பண்பாட்டுப் பிரச்சினைகளை முன்னிறுத்தி எழுதப்பட்ட பிரதிகள் இவை.
இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் குறித்து எழுதப்பட்ட பிரதிகளில் ‘நகுலாத்தை’ மிக முக்கியமான பிரதி. தொன்மத்தையும் சமகாலத்தையும் ஊடும் பாவுமாக நெய்து எங்களின் வாதையையும் வலிகளையும் சொல்லும் இலக்கியப் பிரதி. போரை எழுதுகிறேன் என்ற கொக்கரிப்போடு புலிகளை வழிபாடு செய்யும் பிரதிகளுண்டு. இன்னொரு புறத்தில் புலிகளை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் தமிழ் மக்களது விடுதலை அரசியலையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தும், தனிநபர்கள் மீதான அவதூறுகளை அள்ளித்தெளிக்கும் பிரதிகளுண்டு. இவற்றை வாசிப்பது சித்திரவதைக்கு ஒப்பானது. ஆனால், யதார்த்தன் மிகுந்த நடுநிலையோடும் உண்மைத்தன்மையோடும் ஒரு காலத்தைச் சித்திரித்துக் காட்டியிருக்கிறார். நாவலின் மொழி கொஞ்சம் சிதறலாக இருந்தால் கூட, யதார்த்தனது தனித்தன்மையும் தேடலும் மொழியில் வெளிப்பட்டிருக்கிறது. அவருக்கான மொழியை முதல் நாவலிலேயே அவர் கண்டடைந்திருக்கிறார்.

மாஜிதாவின் ‘பர்தா’ நம்முடைய இலக்கிய வரலாற்றிலே முக்கியமான நிகழ்வு. இன்று உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகிறது. இன்னொருபுறத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இஸ்லாமிய மக்கள், குறிப்பாகப் பெண்கள் பல்வேறு அழுத்தங்களுக்குள்ளும் கட்டுப்பாடுகளுக்குள்ளும் தண்டனைகளுக்குள்ளும் நெரித்துத் தள்ளப்படுகிறார்கள். இவை இரண்டுக்கும் நடுவேயிருந்து ஒலிக்கும் தனிக்குரல் மாஜிதாவுடையது. அவர் சமூகச் செயற்பாட்டாளராவும் இருப்பதால் மேலும் விரிந்த பார்வை அவருக்கு நாவலில் சாத்தியமாகியுள்ளது. மொழியைத் திருகி வாசகர்களைத் துன்புறுத்தாமல் எழுதப்பட்டிருக்கும் எளிமையான ஆனால், ஆழமான பிரச்சினைகளைப் பேசும் நாவல் பர்தா. 

கிழக்கு இலங்கை முஸ்லிம்களிடையே எண்பதுகளின் தொடக்கத்திலே நிகழத் தொடங்கிய ஈரான் சார்பான மத அடிப்படைவாதிகளின் கடும்போக்கும், பின்னால் உருவாகிய சவூதி அரேபியா சார்பான மத அடிப்படைவாதிகளின் கடும்போக்குகளும் எவ்வாறு அந்தச் சமூகத்தை மீள முடியாதிருக்கும் பண்பாட்டு அடிமைத்தனத்திற்குள் சிக்கவைத்திருக்கிறது என்பதை சுரையா என்ற பெண்ணின் கதை வழியாக மாஜிதா சொல்லிச் செல்கிறார். நாவலைக் கருத்தூன்றி வாசிக்கும் போது, இது Autofiction எனப்படும் தற்புனைவு நாவலே என்பதை ஊகித்துவிடலாம். அதனாலேயே மிகுந்த நம்பகத்தன்மை பிரதியில் மிளிர்கிறது. பர்தா, ஹபாயா போன்றவை எவ்வாறு பெண்கள் மீது கட்டாயப்படுத்தித் திணிக்கப்பட்டது, அவர்களது பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களான குலவையிடல், கபுர் தரிசனம் போன்றவை கட்டாயமாகத் தடுக்கப்பட்டது போன்றவற்றை முஸ்லிம் பெண்களின் தரப்பிலிருந்து சித்திரிக்கும் குறுக்குவெட்டு ஆவணம் இந்த நாவல். உள்ளிருந்த எழும் தீர்க்கமான எதிர்க் குரல்.

-‘ஸலாம் அலைக்’ நாவல் பழையன கழிதலோடு ஸ்தம்பிக்கிறதே? நீங்கள் அப்படி கருதுகிறீர்களா?

எது பழையது? போரா? அகதி வாழ்வா? மனித குலம் எப்போது உபரிச் செல்வத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியதோ அன்றிலிருந்து இன்றுவரை மாறாதவையல்லவா இவை! காலங்களும் வெளிகளுமே வேறு வேறு.

‘ஸலாம் அலைக்’ நாவலில் நான் எழுதியிருப்பது சமகாலத்தில் அய்ரோப்பாவில் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். முன்னெப்போதையும் விட இப்போது இந்தப் பிரச்சினை உச்சத்தில் உள்ளது. அய்ரோப்பிய நாடுகள் தங்களது கதவுகளை அகதிகளுக்கு மூடிக்கொண்டுள்ளன. குறிப்பாக ஈழ அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு இப்போது இந்த நாடுகள் வந்துள்ளன. ஆனால், இலங்கையிலிருந்து இன்றுவரை அகதிகள் புறப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் முடிவுற்றாலும், அங்கே இன்னும் சிறுபான்மை மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் உள்ளன. ஊடகச் சுதந்திரமும், அரசியல் சுதந்திரமும் இறுக்கமான கண்காணிப்புக்கு உள்ளேயே இருக்கின்றன. இலங்கையில் மட்டுமல்லாமல், உலகளவில் அகதிகள் எவ்வாறு உருவாகக் கூடும் என்பதையும் நாவலில் சித்திரித்துள்ளேன். போரை மறுபடியும் மறுபடியும் நான் எழுதுகிறேன் என நீங்கள் கருதக்கூடும். என் ஆயுள் முழுவதும் எழுதினாலும் சொல்லித் தீராத கதைகளை யுத்தம் உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது. அவற்றை இனித்தான் கண்டடைய வேண்டும். எழுத வேண்டும்.

இந்த நாவலை எழுதும்போதே, அய்ரோப்பிய மொழி வாசகர்களையும் மனதில் வைத்தே எழுதினேன். அகதிகள் என்றால் யாரென்பதை வெள்ளைக்காரர்களின் செவிகள் கிழியக் கத்திச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லாவிட்டால் ‘Problemski Hotel’ போன்ற தட்டையான, இன வெறுப்பு உறைந்துள்ள நாவல்களின் வழியேதான் அவர்கள் அகதிகளை அறிந்துகொள்கிறார்கள். ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’ என்ற பெயரில் தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளில் அந்த நாவல் வெளிவந்திருக்கிறது. நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பெல்ஜிய எழுத்தாளரான டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் பெல்ஜியத்திலுள்ள அகதி முகாமொன்றில் பார்வையாளராகச் சில நாட்கள் தங்கிச் சேகரித்த அரைகுறைத் தகவல்களைத் தன்னுடைய அய்ரோப்பிய மேட்டிமைவாதப் பார்வையில் நாவலாக்கியிருக்கிறார். அகதிகளை முழு மடையர்களாகவும், வீணான சண்டைக்காரர்களாகவும், வேசிகளாகவும் சித்திரிக்கும் நாவலது. இன்னும் சொல்லப் போனால் பெல்ஜியம் நாட்டில் காலனிய காலத்தில் ‘மனிதக் காட்சிச்சாலைகள்’ அமைக்கப்பட்டு, ஆபிரிக்க மனிதர்கள் காட்சிப் பண்டங்களாக்கப்பட்டதைப் போன்றதே ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’ நாவல். நாவலில் கையாளப்பட்டிருக்கும் மொழி இனவெறுப்பிலும், பெண் வெறுப்பிலும் அருவருப்பாகப் புளித்துப்போயிருக்கிறது. அகதி முகாமின் கௌரவப் பார்வையாளர்களான, அகதிகள் ஆராய்ச்சியாளர்களான டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் போன்றோர் எழுதியிருக்கும் இத்தகைய கதைகளுக்கு எதிராக, முப்பது வருடங்களாக அகதி வாழ்வை வாழ்ந்த நான் அகதிகள் தரப்பின் குரலை ஒலிக்க வேண்டியிருக்கிறது. ‘ஸலாம் அலைக்’ நாவலை பிரஞ்சு மொழியில் வெளியிட பிரான்ஸின் பதிப்பகங்களில் ஒன்றான ZULMA என்னோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது. ‘ஸலாம் அலைக்’ நாவல் அய்ரோப்பிய மொழிகளில் வெளிவரும்போது, என்னால் உறுதியாக டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் போன்ற மேட்டிமைச் சக்திகளைச் சவால் செய்ய முடியும்.

-புலிகளுக்கு எதிரான நிலைதான் பெரும்பாலும் உங்கள் எழுத்தில் இருந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது ‘பாக்ஸ்’ நாவலில் வருவது போன்ற ஒரு கிராமத்தை உருவாக்கிய காரணம் என்ன? அப்படி புனைவுக்காக உருவாக்கும் போது உங்கள் எழுத்தின் மீதான நம்பகத்தன்மையும் உண்மைத்தன்மையும் போய்விடும் தானே

எத்தனை நேர்காணல்களில்தான் நான் இந்தக் கேள்விக்குத் திரும்பத் திரும்பப் பதிலளிப்பது? புலிகளுக்கு எதிரான நிலைதான் என்னுடைய எழுத்தில் பெரும்பாலும் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் என்ன நியாயம்? இலங்கை அரசின் மீதான விமர்சனங்களை என்னுடைய கதைகளில் தொடர்ச்சியாக வைத்திருக்கிறேன். அவற்றோடு ஒப்பிட்டால் புலிகள் மீது நான் வைத்திருக்கும் விமர்சனங்கள் பாதியளவும் இருக்காது. இலக்கியத் தளத்தில் புலிகள் மீதான விமர்சனத்தைப் புலிகள் இருந்த காலத்திலேயே முன்வைத்த மிகச் சிலரில் நானும் ஒருவன் என்பதால் ஒருவேளை இந்தத் தோற்றம் உங்களுக்கு ஏற்படுகிறதோ தெரியவில்லை. நான் புலிகள் இயக்கத்தின் மீது மட்டுமல்லாமல், இந்தப் போரை நடத்திய, போருக்கு ஆதரவளித்த அனைத்துச் சக்திகளுக்கும் எதிரானவன். இதொன்றும் இந்த நேர்காணலுக்கான வெறும் வாய் வார்த்தையில்லை. இதற்கான ஆதாரங்கள் எழுத்துகளாகவும், உரைகளாகவும், விவாதங்களாகவும் என்னுடைய இணையத்தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

‘பொக்ஸ்’ நாவலின் ‘பெரிய பள்ளன்குளம்’ கிராமம் மட்டுமல்லாமல், ‘இச்சா’ நாவலில் வரும் ‘இலுப்பங்கேணி’ கிராமம், ‘ம்’ நாவலில் வரும் ‘பனைத்தீவு’ எல்லாமே நான் கற்பனையில் உருவாக்கிய கிராமங்களே. இன்னும் சொல்லப்போனால் ‘இச்சா’ நாவலில் கற்பனையாக ஒரு துருவ நாட்டையும், கற்பனையாக உரோவன் என்ற மொழியையும் உருவாக்கியுள்ளேன். இலக்கியப் பிரதிக்கு மிக அடிப்படையானது தூலமான உண்மைத்தன்மை என நீங்கள் சொல்லக்கூடும். கற்பனையிலும் இருண்மையிலும் உண்மையை மட்டுமல்லாமல் வரலாற்றையும் கண்டறிய முடியும் என்பதுதான் மகத்தான இலக்கியவாதிகளின் கட்சி. இதற்கான எடுத்துக்காட்டுகளை நீங்கள் மிகெல் டி செர்வாண்டிஸ் முதல் போர்ஹேஸ் வரை கண்டுகொள்ளலாம். பப்லோ பிக்காஸோ இப்படிச் சொல்வார்: Art is a lie that makes us realize truth, at least the truth that is given us to understand.

-உலகமயமாக்கத்தைக் கொள்கையாகக் கொண்ட மேற்கத்திய நாடுகளில் இருந்துகொண்டு அந்தக் கொள்கைகளுக்கு நேரெதிரான சிந்தனைக் களத்தில் எப்படி உங்களால் தீவிரமாக இயங்க முடிகிறது?

மேற்கு நாடுகள் மட்டுமல்ல சீனா, கியூபா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளின் அரசுகளும் இப்போது உலகமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன. முதலாளியத்தின் அபரிதமான, வீக்கமான உற்பத்தியின் அடுத்த கட்ட நிலை இந்த உலகமயமாக்கல். அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் வீழ்ச்சி இந்த உலகமயமாக்கல். இன்று இலங்கையின் பொருளாதாரம் சிதைவுற்று அதல பாதாளத்தில் வீழ்ந்ததற்கும் இந்த உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையே மூல காரணம்.

நீங்கள் சொல்வது போல நான் இந்த உலகமயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாக எல்லாம் போராடவில்லை. உலகமயமாக்கலைக் கண்டித்து ஏதோ இரண்டு கட்டுரைகளை எழுதுவேன் அல்லது ஒன்றுபாதி நேர்காணல்களில் இப்படியொரு பதிலைச் சொல்லிக் கடந்து போகிறேன். அல்லது பிரான்ஸில் உலகமயாக்கலுக்கு எதிராக நடக்கும் ஏதாவதொரு ஆர்ப்பாட்டத்தில் போய் ஓரமாக நின்றிருப்பேன்.

அதேவேளையில், நீங்கள் குறிப்பிடும் மேற்கு நாடுகளிலும் உலகமயமாக்கலுக்கு எதிராக இடதுசாரிகளும், விவசாயிகளும், அனார்க்கிஸ்டுகளும் கடுமையாகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசாங்கமும் அவர்களை ஒடுக்கிக்கொண்டுதான் இருக்கிறது. உண்மையில் இப்போது உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்டிருப்பது தலைமை நெருக்கடி. உலக அளவில் அவர்களை இணைப்பதற்கு ஓர் அமைப்பு இல்லாதது வருந்தத்தக்கது. நம்முடைய வரலாற்றில் கடந்த காலங்களில் இயங்கிய கம்யூனிஸ அகிலங்களை மனது ஏக்கத்துடன் நினைவுகொள்கிறது.

-எழுத்தின் நோக்கமான சுதந்திரம் அடைந்துவிட்டாலும் எழுத்தின் போர் ஓயாதுதானே?

உங்களது கேள்வி எனக்குப் புரியவில்லை. ஆனாலும், எழுத்தில் கூட வீணான, வீம்பான போர் கூடவே கூடாது என்பதைச் சொல்லி வைக்கிறேன்.

-அடிப்படைவாத படைப்பாளிகள் /உணர்வாளர்கள் உங்களின் எழுத்தினை கொண்டாடினால், உங்களுக்குள் தன்னிச்சையாக ஓர் எச்சரிக்கை உணர்வு ஏற்படும் விதமாக உங்களைப் பழக்கியிருக்கிறீர்கள்தானே?

நான் எதற்காக எச்சரிக்கை அடைய வேண்டும்? எனது எழுத்துகளால் அடிப்படைவாதிகள்தான் எச்சரிக்கை அடைய வேண்டும். நானோ என்னுடைய எழுத்தோ ஒருபோதும் இன, மத, பால் அடிப்படைவாதிகளின் பக்கம் சாயாது என்ற தன்னம்பிக்கையும் அரசியல் தெளிவும் எனக்குண்டு. ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்… பிற்போக்குச் சக்திகளிடையே மட்டுமல்லாமல், முற்போக்குச் சக்திகளிடமும் தங்களது இறுக்கமான அமைப்பு விசுவாசம் காரணமாக இந்த அடிப்படைவாதம் தொற்றியிருக்கிறது. அதனால் தான் முகநூல் முழுவதும் சிவப்புச் சங்கி, நீலச் சங்கி, பச்சைச் சங்கி எனப் பல உருட்டல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆவேசமான ஆயிரமாயிரம் முகநூல் உருட்டல்களை விட, ஒரேயொரு நிதானமான உரையாடல் சாலச் சிறந்தது.

-வாழ்வு முழுக்க நீளும் இத்தனை அலைக்கழிப்புகளுக்கு மத்தியிலும் அந்தப் பகடி நிறைந்த கொண்டாட்டமான மனதை எழுத்தில் எப்படி தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடிகிறது?

என்னுடைய எழுத்திலுள்ள பகடியை நீங்கள் கொண்டாட்ட மனநிலையாக அடையாளம் காணத் தேவையில்லை. அது கையறு நிலையில் வெளிப்படும் கசப்பான எதிர்வினை. அதிகார சக்திகளை எதிர்த்துப் பேசும் சாமான்யனுக்கு எள்ளலும் கிண்டலும் ஆயுதங்கள். இந்த அம்சத்தை பேராசிரியர் ராஜ் கௌதமன் ‘தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு’ எனும் நூலில் மிக விரிவாக ஆய்வு செய்து பேசியுள்ளார்.

-யாழ்ப்பாண நூலகத்தினை உலகின் ஏதாவதொரு மூலையில் அதே மாதிரி கட்டமைக்க முடியுமா?

யாழ் நூலகத்தோடு சேர்த்து எரியூட்டப்பட்ட பழைமை வாய்ந்த நூல்களும், சுவடிகளும் நமக்கு இனிக் கிடைக்கப் போவதில்லை. யாழ்ப்பாண நூலகம் மீளக் கட்டியெழுப்பப்பட்டு, இப்போது அதே இடத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்துவதைப் பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

-யாவரும் விரும்பிய ஈழம் அமைவதற்கான சாத்தியங்கள் இன்னும் இருக்கிறதுதானே?

இன்றுள்ள அரசியல் சூழலில் சாத்தியங்கள் தென்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் மாறப்போகும் சர்வதேச அரசியல் சூழல்களில் ஈழம் அமைவதற்கான சாத்தியங்கள் தோன்றவும் கூடும். சர்வதேச வல்லாதிக்க அரசுகளின் சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் நாம் முன்கூட்டியே அனுமானித்துவிட முடியாது என்பது ஈழப் போராட்டம் நமக்குக் கற்றுத் தந்த பாடங்களில் தலையாய பாடம். இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. அது என்னவெனில் இன்றைக்கும் ஈழத் தமிழர்கள் தனி ஈழக் கோரிக்கையை ஆதரிக்கிறார்களா என்பதே. இதற்கு ஈழத்தில் வாழும் மக்களும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுமே பதில் சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்து ஈழத்தில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் அறிவுஜீவிகளோ, முன்னாள் போராளிகளின் அமைப்போ தனி ஈழக் கோரிக்கையை இப்போது முன்வைப்பதில்லை.

-படைப்பாளி என்பதால் எல்லாவற்றிற்கும் மாற்றுக்கருத்து பேசுகிறீர்களா?

நான் அவநம்பிக்கையாளன் அல்ல. மாறாக நான் எப்போதுமே நன்நம்பிக்கைவாதி. அதேவேளையில் நம்மைச் சூழ்ந்துள்ள அரசியல் நிலைமைகளையும், மக்களின் எண்ணங்களையும் நிதானமாகவும் சரியாகவும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற வேண்டுமென்று கருதுபவன். உணர்ச்சிவயப்பட்டோ, சமூக வலைத்தளங்களால் தூண்டப்பெற்றோ வார்த்தைகளைச் சிந்திவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இருக்கிறேன். அதேவேளையில் சரியான தருணத்திலும், இடத்திலும் என்னுடைய மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதில் நான் தயக்கம் காட்டுவதுமில்லை. 

சில நாட்களுக்கு முன்பு பழ. நெடுமாறன் ‘விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ எனத் தெரிவித்த கருத்தின்மீது பலர் எதிர்க் கருத்து வைப்பதையும், நெடுமாறனை இந்திய உளவுத்துறை ஏஜெண்ட் என்பது போலக் கரித்துக்கொட்டுவதையும், நெடுமாறனை மறுத்து சீமானும், தொல். திருமாவளவனும், வைகோவும் ‘பிரபாகரன் உயிரோடு இல்லை’ எனச் சொல்வதையும் பார்த்தவாறு இருக்கிறேன். மொத்தக் குற்றத்தையும் பழ. நெடுமாறன் மீது சுமத்துவதை என்னால் உண்மையில் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பொறுமையாக என்னுடைய கருத்தை உங்களிடம் தெரிவித்துவிடுகிறேன்.

புலிகளின் தலைவர் இறுதி யுத்தத்தில், மே 2009- இல் இறந்துவிட்டார் என்பதில் எனக்கு எந்த அய்யமும் கிடையாது. 2009 யூலை மாதம் நான் தீராநதி இதழில் ‘பிரபாகரன் ஜீவிக்கிறார்’ என்றொரு கட்டுரையை எழுதினேன். வன்னியின் போர்க்களத்தில் மடிந்த தங்களது தலைவரின் மரணத்தை ஒப்புக்கொள்ளவும் அறிவிக்கவும் எஞ்சியிருக்கும் புலிகளும், புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளும், புலிகளின் ஆதரவாளர்களும் மறுப்பதைக் கடுமையாக அக்கட்டுரையில் சாடியிருந்தேன். அப்போது புலிகளின் அமைப்புகள் மட்டுமல்லாது நெடுமாறனும், வைகோவும், சீமானும், தொல். திருமாவளவனும் பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களில் எவர் ஒருவரும் இன்றுவரை பிரபாகரனுக்கு ஓர் அஞ்சலி நிகழ்வை நடத்தியதில்லை. அவரது படத்திற்கு ஒற்றை மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றி வைக்கவில்லை. வருடா வருடம் தவறாமல் நவம்பர் மாதங்களில், பெரும் எடுப்பில் புலம் பெயர்ந்த நாடுகளில் நடத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிலும் இன்றுவரை எவருமே பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த ஒற்றை வார்த்தையைச் சொன்னதில்லை. 

சென்ற வருடம், அதாவது 2022-இல் நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லியில் நடத்திய ‘மாபெரும் இன எழுச்சிப் பொதுக் கூட்டம்’ என்ற நிகழ்வில் ‘வருவாண்டா பிரபாகரன் மறுபடியும் அவன் வரும்போது சிங்களவன் கதை முடியும்’ என்ற பாடல் மேடையில் பாடப்பட்டதையும், அதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் களிப்போடு நடனமாடியதையும் இப்போதும் நீங்கள் You Tube-ல் காணலாம். பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது சீமானுக்கு சென்ற வருடம்வரை தெரியாதா என்ன? 

ஆக ஒரு பெரும் கூட்டமே பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற மாயையை இதுவரை கட்டிக்காத்து வந்திருக்கிறது. அதன் விளைவுதான் நெடுமாறனின் இப்போதைய ‘உயிரோடு இருக்கிறார்’ அறிக்கை. கவனமாகப் பாருங்கள்! இப்போதுவரை புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் இயங்கிக்கொண்டும், மக்களிடம் பணம் சேகரித்தவாறுமே உள்ளன. அந்தக் கிளைகளில் ஒரு கிளை கூட இதுவரை பழ.நெடுமாறனை மறுக்கவில்லை. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற மாயையை அவர்கள் நீடித்து வைத்திருக்கவே விரும்புகிறார்கள். புலிகளின் வெளிநாட்டு அமைப்புகளே இப்படித் திருகுதாளம் செய்யும் போது, நெடுமாறனை நொந்து என்ன பயன்? நெடுமாறனை மறுக்கும் சீமானோ, திருமாவளவனோ, அல்லது தீபச்செல்வன் போன்றவர்களோ அடுத்த மாவீரர் தினத்தில் பிரபாகரனுக்குப் பகிரங்கமாக அஞ்சலி செலுத்தத் தயாரா? இல்லையெனில் நெடுமாறனைக் குற்றம் சொல்லாதீர்கள். நீங்கள் அமுக்கமான வாய்! நெடுமாறன் ஓட்டைவாய்! அவ்வளவுதான் வித்தியாசம்.

உண்மையில், புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட போதே, அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு இன்னொரு தலைமையை வெளிநாடுகளில் வாழ்ந்திருந்த புலிகளிடையே அந்த அமைப்புத் தேர்ந்தெடுத்திருந்தால் இன்றுவரை புலிகள் அமைப்பு ஆகக் குறைந்தது புலம்பெயர்ந்த நாடுகளிலாவது பலத்துடன் இருந்திருக்கும். நாடு கடந்த அரசாங்கம் என்பது இப்போது போலக் கேலிக்கூத்து ஆகாமல், ஒரு தீவிரமான அரசியல் செயற்பாடாக அமைந்திருக்கும். தலைவர் மரணித்த உண்மையை மறைத்ததால் இப்போது அந்த அமைப்பே மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது. புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் வெறுமனே வணிக நிறுவனங்களை நடத்தி லாபம் சம்பாதிக்கும் பிரைவேட் கம்பனிகளாக மாறிவிட்டன. இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் நெடுமாறன் மீது சாபம் விடுவது மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையே.

இன்னும் பல காலங்களுக்கு பழ. நெடுமாறன் போன்றவர்கள் ‘பிரபாகரன் ஜீவிக்கிறார்’ என்று பல்வேறு ரூபங்களில் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். உண்மையிலேயே கணிசமான மக்கள் இந்தப் பொய்யை நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நெடுமாறனின் அறிக்கையைத் தொடர்ந்து, சமூகவலைத்தளங்களில் எழுதப்பட்ட எண்ணற்ற உற்சாகமான பதிவுகளைக் கவனித்தாலே இது உங்களுக்குப் புரிந்துவிடும். இத்தகைய வீண் நம்பிக்கை அந்த மக்களை அரசியல் செயலின்மையில் தள்ளிவிடும். இன்று பேசப்படும் 13-வது திருத்தச் சட்டம், முழுமையான மாகாண சுயாட்சி போன்ற தீர்வுத் திட்டங்களை அவர்கள் இயல்பாகவே நிராகரித்துவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் பிரபாகரனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் உயிரோடு இல்லை என்பது இலங்கை அரசுக்கும் தெரியும். ஆனால், பிரபாகரனின் வழியை ஆதரிக்க இன்னும் கணிசமான ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். தமிழ் நிலங்களில் தங்களது கண்காணிப்பையும் இராணுவ முற்றுகையையும் மேலும் பலப்படுத்துகிறார்கள். 

-இராசபக்சேகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தைப் புலம்பெயர் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? பெரிய மகிழ்ச்சி எதுவும் வெளிப்பட்டதாகத் தெரியவில்லையே?

புலம் பெயர்ந்த தமிழ் மக்களோ, தாயகத்தில் வாழும் தமிழ் மக்களோ பெரும்பாலானோர் ஒருபோதுமே இராசபக்சேக்களை ஏற்றுக்கொண்டது கிடையாது. ஈழத் தமிழர்கள் ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் இராசபக்சேகளுக்கு எதிராக நின்ற வேட்பாளர்களுக்கே தங்களது வாக்குகளைச் செலுத்தினார்கள். குறிப்பாக கோத்தபய இராசபக்ச முதன்மையான இனப்படுகொலை யுத்தக் குற்றவாளி என்பதுவே தமிழ் மக்களின் கருத்தாகும். கோத்தபய இராசபக்ச அதிபர் தேர்தலில் வென்றதும் ‘சிங்கள மக்களின் வாக்குகளாலேயே நான் வென்றேன்’ எனச் சொன்னார். பெரும்பாலான தமிழ் மக்கள் எப்போதுமே இராசபக்சக்களை நிராகரித்தே வந்திருக்கிறார்கள். எனவே இராசபக்சக்களின் வீழ்ச்சியை அவர்கள் எப்போதுமே விருப்பத்துடன் எதிர்பார்த்தே இருந்தார்கள். 

ஆனால், சென்ற வருடம் சிங்கள மக்களால் வழி நடந்தப்பட்ட இராசபக்சேக்களுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே போராட்டத்தின் முதன்மைப் பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது.அந்தப் போராட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்தெல்லாம் யாரும் உறுதிபடப் பேசவில்லை. இன்று தமிழ் அரசியல் தரப்புகளால் கோரப்படும் 13வது திருத்தச்சட்டம், அதன் வழியான முழுமையான மாகாண சுயாட்சி போன்ற கோரிக்கைகளையெல்லாம் போராட்டத்தில் யாருமே முன்வைக்கவில்லை. யுத்தக் குற்றங்களுக்கு நீதி விசாரணையை வலியுறுத்தவில்லை. வெறுமனே இழவுத் துக்கம் கேட்டதுடனும், கொழும்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பருகியதுடனும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் இலகுவாகக் கடக்கப்பட்டன. ஆகவே இயல்பாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்திலிருந்து ஒதுங்கி நின்றதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவர்களைப் பொறுத்தவரை எந்தச் சிங்களக் கட்சியும், எந்தச் சிங்களத் தலைமையும் நம்பிக்கையானதல்ல. ஆனால், பெருமளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது தமிழ், முஸ்லிம் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். 

அதேவேளையில் பரந்துபட்ட தமிழ் மக்களுக்குச் சிங்கள அரசியல் சக்திகள் மீதிருக்கும் நியாயமான சந்தேகத்தையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் முக்கிய பாத்திரங்களை வகித்த அரசியல் சக்திகளான ஜே.வி.பியும், இன்றைய முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது, போருக்கும் இராசபக்சக்களுக்கும் ஒருமித்து ஆதரவளித்தவர்கள் என்பதை எப்படி நம்மால் மறந்துவிட முடியும். சிறுபான்மையினரின் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற வார்த்தையைக் கேட்டாலே காதுகளை மூடிக்கொள்ளும் அறப் படித்த மார்க்ஸியர்களல்லவா இவர்கள். இடதுசாரிப் போர்வைக்குள் மறைந்திருக்கும் பச்சை இனவாதிகள் இவர்கள். இதையெல்லாம் எற்கனவே கட்டுரைகளில் நான் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறேன். இந்த இனப்படுகொலைக்குப் பின்பாக நடந்த தேர்தல்களில் பெருவாரியான சிங்கள மக்கள் இராசபக்சேவை வெற்றிநாயகனாகக் கொண்டாடி வெற்றியை அளித்தார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்பு உண்டெனிலும், அதை விடவும் முக்கியமான அரசியல் உரிமைகள், காணாமலாக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், சிறுபான்மையினரின் நிலங்களில் நடுநிசியில் திடீரெனத் தோன்றும் புத்தர் சிலைகள், நில அபகரிப்பு, இனப்படுகொலைக்கான நீதி தொடர்பிலான பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன. அது குறித்துப் போராட்டக்காரர்கள் உண்மையான அக்கறையைக் கொண்டிருக்கவில்லை. 

நடந்து முடிந்த போராட்டத்தில் இந்தப் போதாமைகள் இருப்பினும் இராசபக்சவை வீழ்த்தியது பெரும் சாதனையே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஏன் இந்தப் போராட்டம் அத்தோடு முடங்கிப்போனது? புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டுவருவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டமா இது? இல்லையெனில் ஏன் போராட்டம் தொடரவில்லை? என்றெல்லாம் நிறையக் கேள்விகள் உள்ளன. இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டதா என்ன? உலக வங்கியினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும் ஒவ்வொரு அழுத்தத்துக்குப் பணிந்தும் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கிறார். பொதுமக்களுக்கான மானியங்களிலும் அரச ஊழியர்களது ஊதியத்திலும் வெட்டுக்களை ஏற்படுத்துகிறார். வேடிக்கையானது என்றாலும் ஒர் உண்மையைச் சொல்கிறேன். இராசபக்சக்களை விட ரணில் விக்கிரமசிங்கவே உலக ஏகாதிபத்தியத்திற்கும் மூலதனத்திற்கும் உலகமாயமாக்கலுக்கும் சிறப்பாகச் சேவை செய்யக்கூடியவர். இதை அவரதும் அவரது கட்சியினதும் வரலாறு கடந்த அய்ம்பது வருடங்களாக நிரூபணம் செய்திருக்கிறது.

-தாயகத்தின் இப்போதைக்கான தன்னெழுச்சியும் ஆட்சி மாற்றமும் தாயகம் திரும்புவதற்கான சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறதா?

அந்த மாற்றம் 2015-ல் அமைந்த ‘நல்லாட்சி’ என அழைக்கப்பட்ட மைத்திரிபால சிறீசேனா ஆட்சிக் காலத்திலேயே உருவாகிவிட்டது என்றே நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட போதுதான் ‘தமிழ் மக்களின் வாக்குகளால் நான் தோற்கடிக்கப்பட்டேன்’ என்று மகிந்த இராசபக்ச வன்மத்தோடு புலம்பினார். இராசபக்சக்கள் அல்லது ரணில் விக்கிரமசிங்கவோடு ஒப்பிடும்போது, மைத்திரிபால சிறீசேனாவது ஆட்சிக்காலம் ஒப்பீட்டளவில் பரவாயில்லை. வெள்ளை வேன் கடத்தல்களும், கொலைகளும், காரணமற்ற கைது நடவடிக்கைகளும் அந்த நான்கு வருடங்களில்தான் ஓரளவாவது கட்டுப்படுத்தப்பட்டன. அந்தக் காலத்தில்தான் புலம் பெயர்ந்த தமிழர்களில் ஏராளமானோர் நீண்ட காலங்களுக்குப் பின்பு தாயகம் திரும்பினார்கள். அப்போது இலங்கைக்குச் செல்லக்கூடிய கடவுச்சீட்டு என்னிடம் இல்லாததால் என்னால் தாயகத்துக்குச் செல்ல முடியவில்லை. 

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை நடந்ததாலும், என்னிடம் சரியான கடவுச்சீட்டு இருந்ததாலும், யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசிக்கும் என்னுடைய எண்பத்தொரு வயது தாயாரைப் பார்ப்பதற்காகத் திடீரென ஏற்பட்ட உந்துதலால் கிளம்பிச் சென்று, அம்மாவுடன் ஒரு வாரம் இருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். கண்டிப்பாக எந்த இலக்கியக் கூட்டத்திலும் பங்கு கொள்ளவில்லை. எந்த ஊடகத்திற்கும் நேர்காணல் வழங்கவில்லை.

நான் பிறந்து வளர்ந்த, என்னுடைய பல கதைகளில் இடம்பெறும் அல்லைப்பிட்டிக் கிராமம் இடிந்து விழுந்த வீடுகளுடன் காடாகிக் கிடக்கிறது. ஏறத்தாழ முக்கால்வாசிக் கிராமமும் இடம்பெயர்ந்துவிட்டது. இருக்கும் சொற்ப மக்களும் யுத்த வடுக்களுடனும், துன்ப நினைவுகளோடும் வாழ்கிறார்கள். இலங்கைப் படையினர் நடத்திய மூன்று கூட்டுப் படுகொலைகளைச் சந்தித்த சின்னஞ் சிறிய கிராமம் அது. முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்பாகத் தாயக நிலத்தில் கால் வைத்தபோது, உணர்ச்சியில் என்னுடைய மனது கொந்தளித்துக்கொண்டிருந்தது. திரும்பி வரும்போது துயரால் என்னுடைய மனம் செத்திருந்தது. என்னுடைய இயல்புக்கு மாறாக முதற்தடவையாக என்னை மிகப் பலவீனமாக உணர்கிறேன். வெறுமை!

 

 

https://www.shobasakthi.com/shobasakthi/2023/03/02/யுத்தம்-கதைகளை-உருவாக்கி/?fbclid=IwAR2M6o21KMHtWJVDNo4HzmpjwwsNjHPz__IbZgR0CaQ2P5CBRZ9rGDt7_Xw

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2023 at 09:48, கிருபன் said:

யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது

கிருபனவர்களே இணைப்புக்கு நன்றி,

சோபா சக்தியவர்களது புலிவெறுப்பை ஓரமாக வைத்துவிட்டு ஒரு வாசகனாக நேர்மையோடு வாசிப்புக்குட்படுத்தவேண்டிய பதிவு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.