Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் பொதுவெளியில் மேலாடையின்றி குளிக்க பெர்லின் அனுமதி: ஜெர்மன் மக்கள் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பொதுவெளியில் மேலாடையின்றி குளிக்க பெர்லின் அனுமதி: ஜெர்மன் மக்கள் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?

ஜெர்மனி மக்கள் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 மார்ச் 2023, 08:44 GMT
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

பெர்லின் நகர அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு விரைவில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் அவர் ஒரு நீச்சல் குளத்தில் இருக்கும்போது அவர்தம் உடலை மறைக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக இன்னொரு பெண் கூறினார்.

அவர்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதாக ஒப்புக்கொண்ட அதிகாரிகள், பெர்லினின் பொது நீச்சல் குளங்களுக்கு வரும் அனைவரும் மேலாடையின்றிச் செல்வதற்கு உரிமை பெற்றுள்ளதாகக் கூறினர்.

 

ஃப்ரீகோர்பர்குல்டுர் என்று ஜெர்மன் மொழியில் ‘சுதந்திர உடல் கலாசாரம்’ என்று அழைக்கப்படும் விஷயத்தை ஆதரிப்போர் இந்த முடிவை வரவேற்கிறார்கள்.

ஜெர்மனிக்கு வரும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள், அதன் ஏரிகளில் நிர்வாணமாக ஜெர்மன் மக்கள் பொழுதைக் கழிப்பது, பூங்காக்களில் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டு குறட்டை விடுவது, நீராவிக் குளியல் போடுவது போன்றவற்றைப் பார்த்து அடிக்கடி ஆச்சர்யப்படுவார்கள், சில நேரங்களில் அதிருப்தி அடைவார்கள்.

ஆனால், சில இடங்களில் பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பதைப் பொருத்தமான ஒன்றாகவும் ஆரோக்கியமான ஒன்றாகவும் கருதும் நாடாக ஜெர்மனி உள்ளது.

நகராட்சி நீச்சல் குளங்களில் இது அனுமதிக்கப்படுமா, ஆம் என்றால் எந்த அளவு வரை அனுமதிக்கப்படும் போன்ற கேள்விகள் உள்ளாட்சி அதிகாரிகளைப் பீடித்துள்ளது.

கடந்த கோடையின்போது, லோவர் சாக்சனியில் உள்ள கோட்டிங்கன், நார்த் ரைன் வெஸ்ட்பாலியாவில் உள்ள சீஜென் ஆகிய இடங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு அனுமதியளித்தனர்.

பெர்லினின் நீச்சல் குள ஆபரேட்டரான பெர்லினர் பேடர்பெட்ரீப் அதன் விதிகளை மாற்றவில்லை. குளியல் ஆடை பிறப்புறுப்புகளை மறைக்க வேண்டியது ஒன்று என்பதை வலியுறுத்துகிறது.

மேலும், அது பாலின பேதமின்றி ஒவ்வொரு பார்வையாளருக்கும் பொருந்தும் என்றும் பெர்லினர் பேடர்பெட்ரீப் தெளிவுபடுத்தியது.

ஜெர்மனி மக்கள் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெர்மன் மக்கள் பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?

ஜெர்மன் மக்கள் பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பதை ஏன் விரும்புகிறார்கள் என்பது குறித்து பிபிசி டிராவலில் கிறிஸ்டின் ஆர்னெசன் எழுதியுள்ளார்.

அவர் “சுதந்திர உடல் கலாசாரம்” இயற்கையுடன் இணக்கத்தை ஊக்குவிக்கிறது. இன்று சில ஜெர்மனியர்கள் நிர்வாணமாக சூரியக் குளியலில் ஈடுபடுகிறார்கள். ஆடைகள் இன்றி விளையாடுகிறார்கள் என்று கூறுகிறார்.

மேலும், “பெர்லினில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, மத்திய மேற்கு அமெரிக்காவில் நான் வளர்ந்த இடத்தைவிட, ஜெர்மனியில் நிர்வாணத்தின் மீது இருக்கும் சாதாரண அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொண்டேன்.

பிரதான அமெரிக்க கலாசாரத்தில் நிர்வாணம் பொதுவாக பாலியல்ரீதியானதாகக் கருதப்பட்டாலும், இங்கு ஜெர்மனியில் சில அன்றாட சூழ்நிலைகளிலேயே நிர்வாணமாக இருப்பது அசாதாரணமான விஷயமல்ல. நீராவிக் குளியலில், நீச்சல் குளங்களில் நிர்வாணமாக இருப்பதற்கு நான் பழகிவிட்டேன்.

ஜெர்மனி மக்கள் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொதுவெளியில் நிர்வாணமாக மக்கள் இருப்பதை முதன்முதலில் பார்த்ததை ஒருபோதும் மறக்க முடியாது.

பெர்லினின் தெற்கு நியூகோல்ன் மாவட்டத்தில் உள்ள ஹசென்ஹெய்ட் என்ற பூங்கா வழியாக நடைபயிற்சி செல்லும்போது, பிரகாசமான வெயிலில் நிர்வாணமாக மக்கள் குவிந்திருந்ததை நான் முதன்முதலாகக் கண்டேன்.

பிறகு, நண்பர்களிடம் கேட்பது, கூகுள் தேடல் ஆகியவற்றுக்குப் பிறகு பூங்கா அல்லது கடற்கரையில் நிர்வாணமாக இருப்பது பெர்லினில் நடைமுறையில் இருக்கும் விஷயம் என்பதைத் தெரிந்துகொண்டேன்," என்று குறிப்பிடுகிறார்.

ஜெர்மனியில் பொதுவெளியில் நிர்வாணமாக இருக்கும் பழக்கத்தை ஆராய்ந்தால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரைக்கும் நீள்கிறது. ஜெர்மனியில் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதன் மூலம் இயற்கை உலகில் இரண்டரக் கலப்பது, வரலாற்றுரீதியாக எதிர்ப்பு மற்றும் ஆசுவாசப்படுதல் ஆகிய இரண்டுக்குமான செயலாகக் கருதப்படுகிறது.

சுதந்திர உடல் கலாசாரம்

பெர்லினில் உள்ள ஃப்ரீ பல்கலைக்கழகத்தில் நவீனகால வரலாறு இணை பேராசிரியரான அர்ன்ட் பெளர்காம்பர், “ஜெர்மனியில் நிர்வாணத்திற்கு நீண்ட பாரம்பரியம் உள்ளது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லெபென்ஸ் சீர்திருத்தம் பேசுபொருளாகி வந்தது.

அது இயற்கை உணவு, பாலியல் விடுதலை, மாற்று மருத்துவம், இயற்கைக்கு நெருக்கமான எளிமையான வாழ்க்கை ஆகியவற்றுக்காக வாதிடும் ஒரு தத்துவம்.

“19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய புதிய சமுதாயத்திற்கு எதிராக, தொழில்துறை நவீனத்துவத்திற்கு எதிராக இயக்கப்பட்ட இந்தப் பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நிர்வாணம் இருந்தது,” என்று பௌர்காம்பர் கூறினார்.

சமகால வரலாற்றுக்கான லீப்னிஸ் சென்டரில் வரலாற்றாசிரியராக இருக்கும் ஹன்னோ ஹோச்முத், இந்த சீர்திருத்த இயக்கம் பெர்லின் உட்படப் பெரிய நகரங்களில் அதிகமாக ஈர்க்கப்பட்டது என்கிறார்.

வெய்மர் காலகட்டத்தில் (1918-1933) சுதந்திர உடல் கலாசாரம் கொண்ட “மிக மிகச் சிறியளவிலான சிறுபான்மையினர்” சூரிய குளியல் செய்யும் கடற்கரைகள் முளைத்தன.

ஜெர்மனி மக்கள் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

1926ஆம் ஆண்டில், ஆல்ஃபிரட் கோச் கலப்பு-பாலின நிர்வாண பயிற்சியை ஊக்குவிப்பதற்காக பெர்லின் ஸ்கூல் ஆஃப் நியூடிஸத்தை நிறுவினார்.

அது பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பது இயற்கை மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து ஊக்குவித்தது.

நாஜி சித்தாந்தம் ஆரம்பத்தில் சுதந்திர உடல் கலாசாரத்தை ஒழுக்கக்கேடாகக் கருதி தடை செய்தாலும், 1942 வாக்கில் பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பது குறித்த அதன் கட்டுப்பாடுகளை மென்மையாக்கியது. இருப்பினும் யூதர்கள், கம்யூனிஸ்டுகள் போன்ற நாஜிகளால் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு அந்தச் சகிப்புத்தன்மை நீட்டிக்கப்படவில்லை.

ஆனால், போருக்குப் பிறகு கிழக்கு, மேற்கு எனப் பிரிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் சுதந்திர உடல் கலாசாரம் முழுவதுமாக மலர்ந்தது. குறிப்பாக கிழக்கில் நிர்வாணமாக இருப்பது முதலாளித்துவ வர்க்கத்திற்கு மட்டுமே உரித்தான ஒன்றாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.

“மனிதர்களை நிர்வாணமாகப் பார்க்கப் பழகினால்...”

கிழக்கு பெர்லினில் தனது குழந்தைப் பருவத்தின்போது பெற்றோருடன் நிர்வாண கடற்கரைகளுக்குச் சென்ற ஹோச்முத், அங்கு வெளியுலக விஷயங்களில் இருந்து தப்பித்த உணர்வு இருந்ததாகக் கூறுகிறார்.

“கிழக்கு ஜெர்மனி மக்கள், கட்சிப் பேரணிகளுக்குச் செல்வது அல்லது வார இறுதி நாட்களில் ஊதியம் இல்லாமல் வகுப்புவாத பணிகளைச் செய்யும்படி கம்யூனிஸ்ட் கட்சிகளால் கோரப்பட்டனர்,” என்று அவர் கூறுகிறார்.

கிழக்கு ஜெர்மனி மக்கள் ரோந்து வரும் போலீஸ் குறித்து ஒரு கண் வைத்துக்கொண்டே நிர்வாணக் குளியலைத் தொடர்ந்தார்கள். பிறகு எரிச் ஹொனெக்கர் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகுதான் சுதந்திர உடல் கலாசாரத்திற்கு மீண்டும் அதிகாரபூர்வ அனுமதி கிடைத்தது.

1990இல் கிழக்கு ஜெர்மனி மேற்குடன் இணைந்தது. முன்னாள் கம்யூனிஸ்ட் நாட்டில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதில் இருந்து, சுதந்திர உடல் காலாசாரம் குறைந்துவிட்டது.

1970கள், 80களில் ஆயிரக்கணக்கான நிர்வாண மக்கள் மைதானங்கள், கடற்கரைகள், பூங்காக்களில் நிரம்பியிருந்தனர். 2019ஆம் ஆம் ஆண்டில், ஜெர்மன் அசோசியேஷன் ஃபார் ஃப்ரீ பாடி கல்ச்சர் 30,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அவர்களில் பலர் 50, 60 வயதுகளைச் சேர்ந்தவர்கள்.

ஜெர்மனி மக்கள் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்றும் ஜெர்மன் கலாசாரத்தில், குறிப்பாக முன்பு கிழக்கு ஜெர்மனியாக இருந்த பகுதியில் ஒரு தோற்றத்தை சுதந்திர உடல் கலாசாரம் விட்டுச் செல்கிறது.

இந்தக் கோடையில் பெர்லின் ஏரியில் சுதந்திர உடல் கலாசாரத்திற்காக நியமிக்கப்பட்ட பகுதியில் நிர்வாண மனிதர் ஒருவர் தனது லேப்டாப் பையுடன் காட்டுப்பன்றியைத் துரத்திய சம்பவத்தைப் போல் இந்த விஷயம் அவ்வப்போது வைரலான தலைப்புச் செய்தியாவதும் உண்டு.

உண்மையில், ஜெர்மனியில் உள்ள நிர்வாணம் குறித்த நீண்ட பாரம்பரியம், பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பதை ஆரோக்கியத்தின் ஒரு வடிவமாக நாடு முழுவதும் ஒரு பரவலான சகிப்புத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

“நீங்கள் மனிதர்களை நிர்வாணமாகப் பார்க்கப் பழகினால், தோற்றங்களைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்க மாட்டீர்கள். இது பொதுவாக கிழக்கு ஜெர்மனியில் மிகவும் பரவலான ஒன்று என நான் நினைக்கிறேன். நாங்கள் மக்களை அவர்களுடைய வெளித் தோற்றத்தை வைத்து அல்ல, அதையும் தாண்டி அவர்களுக்குள்ளே பார்க்க முயல்கிறோம்,” என்று கூறுகிறார் சில்வா ஸ்டெர்ன்கோஃப்.

https://www.bbc.com/tamil/articles/c6pn246ne29o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.