Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?

ஊட்டச்சத்து, உடல்நலம், வைட்டமின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,Dr. பிரதீபா லட்சுமி
  • பதவி,பிபிசிக்காக
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபகாலமாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக உடல்நலம் சார்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்தும் பல விஷயங்களைப் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுடன் கஷாயம், லேகியம், பானங்கள், பொடிகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அதில் கூறப்படுகிறது.

நிபுணர் என்று அதில் வரும் சிலர் அனுபவ அறிவைப் பகிர்கின்றனர். இன்னும் சிலர் இவை எதுவும் தெரியாமல் பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் தகவலை உண்மை என ஏராளமானோர் நம்புகின்றனர்.

ஏன் சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? எது சிறந்தது? எது நல்லது எது கெட்டது?

 

இவை முழுமையாகத் தெரியாத ஒரு குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியின் பயன் என்ன?

நம் உடலை அனைத்து நோயிலிருந்தும் பாதுகாக்க, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. நமது உடலிலுள்ள வெள்ளை ரத்த அணுக்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நோயிலிருந்து பாதுகாப்பது, நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு நோய்க்கிருமியைக் கொல்வது தான் நமது உடலில் வெள்ளை ரத்த அணுக்களின் முக்கிய வேலை. இத்துடன் நோய்த்தொற்று மீண்டும் வராமல் இருக்க அவை உருவாக்கும் ஆன்டிபாடிகளின்(antibodies) செயல்பாடு முக்கியமானது.

இதுமட்டுமின்றி, தடுப்பூசிகளும் நம் ரத்த அணுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நாம் தினசரி "சமமான விகிதத்தில் உணவு" சாப்பிட வேண்டும்.

குறிப்பாக, நமது உணவில் போதுமான புரதங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஊட்டச்சத்து, உடல்நலம், வைட்டமின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கலாம்?

தினமும் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் உடலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்த முடியும். யோகா, தியானம் போன்ற முறைகளையும் நாம் பின்பற்றலாம்.

ஆனால் இதைச் செய்யாமல், நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரிக்கலாம் என்னும் விளம்பரங்களைப் பார்த்தும், கேட்டும் ஏமாறுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

நம் நோய் எதிர்ப்பு சக்தியை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க தினமும் சிறிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அதைச் செய்ய எளிமையான வழிமுறைகள் ஏதுமில்லை. நம் வாழ்வின் கடைசி நாள் வரை செயல்படப் போகும் இந்த உடலுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்.

ஊட்டச்சத்து, உடல்நலம், வைட்டமின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உணவை உணவாகக் கருத வேண்டும். அதில் மருத்துவ குணம் இருக்கிறது என்று சொல்வதைக் கேட்டு ஏமாறாதீர்கள்.

Infusion எனப்படும் தண்ணீரில் மூலிகை, பழங்களை வைத்து அருந்துவது எந்த நன்மையையும் அளிக்காது. இப்படிச் செய்வதால் அமிலத்தன்மை உடலில் அதிகரிக்கிறது. அதனால் தேவையில்லாமல் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளவேண்டாம்.

ஆவி பிடிப்பது, கொதிக்க வைப்பது போன்ற முறைகளால் வைரஸ் இறக்காது. வைரஸ் கிருமிகள் நமது உடலுக்குள் மூக்கு, வாய், தொண்டை வழியாக நுழையாது.

வைட்டமின் மாத்திரைகளை தினமும் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை. உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாதவரை அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் எந்தப் பயனும் கிடைக்காது.

இருப்பினும், வைட்டமின் குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

காய்கறி, பழங்கள் எப்படி விளைவிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஊட்டச்சத்தில் சில மாறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் அதன் அளவு மிகச் சொற்பமானதே.

பிரதானமாக நமது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையால் தான் ஊட்டச்சத்துக் குறைபாடு சிலருக்கு ஏற்படுகிறது.

ஊட்டச்சத்து, உடல்நலம், வைட்டமின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது?

ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படப் பல காரணிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளை உண்பது.

அதேபோல போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது, உதாரணமாக அலுவலகத்தில் சேரில் அமர்ந்து 8 மணி நேரம் வேலை பார்க்கும் நபர்கள் நடை பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது.

இது மட்டுமின்றி, குளிர்பானங்கள்(Carbonated drinks) அருந்துவது, வெயிலில் அதிகம் செல்லாமல் இருப்பது, புகையிலை, மதுபானம் உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையாவது போன்ற காரணங்களும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட முக்கிய காரணிகளாக உள்ளன.

மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ அல்லது அதற்கும் மேற்பட்ட பழக்கங்களோ நமது தினசரி வாழ்க்கை முறையில் இருந்தால் அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும்.

தினசரி வாழ்வியல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வராமல், ஒரு மாத்திரையின் மூலமாக மட்டும் ஆரோக்கியமாக இருக்க முடியாது.

ஊட்டச்சத்து, உடல்நலம், வைட்டமின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கவனிக்க வேண்டியவை

உடல்நலத்தை மேம்படுத்துவதற்காக செம்புக் கோப்பையில்(Copper bottle) தண்ணீர் குடித்துவிட்டு செம்புப் பாத்திரங்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது என்று சிலர் நம்புகிறார்கள்.

ஆனால் அப்படிப் பயன்படுத்தும் நபர்கள், தாமிரக் குறைபாடு(copper deficiency) இருக்கிறதா, அதை அதிகரிக்க வேண்டுமா என யோசிக்கத் தவறுகிறார்கள்.

மேலும், பிளாஸ்டிக் கொள்கலன்களைப்(plastic containers) பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. குறிப்பாக சூடான உணவு, பானம் ஆகியவற்றை அதில் வைத்து சாப்பிடுவது, குடிப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று நாம் கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம். ஏனெனில் அவை எளிதில் கிடைக்கின்றன.

சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்திலிருந்து கிடைக்கும் சில வைட்டமின்கள் குறைபாடு இருப்பது இயற்கையானது.

வயதானவர்கள், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், செரிமான அமைப்பில் பிரச்னை உள்ளவர்களுக்கு, சில ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவது இயற்கையானது. குறிப்பாக இவர்களுக்கு வைட்டமின் B12 குறைபாடு ஏற்படும்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வைட்டமின் B1, ஃபோலிக் அமிலம் போன்றவை அதிகம் தேவை. எனவே, அந்தக் குறைபாடுகளை மாத்திரைகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

ஆயினும், மேற்கூறிய பல காரணங்களால் உடல் மற்றும் மன வளர்ச்சி குறைபாடு வளரும் பருவத்தில் உள்ள சில குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக உப்பு சத்துக் குறைபாடு காரணமாக இந்த பிரச்னை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

எனவே குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அவர்களின் தினசரி உணவில் வழங்கும் காய்கறி, பழங்கள் மூலமாக வழங்க வேண்டும்.

உணவு மூலமாக ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ள முடியாத நபர்கள் மட்டும் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் மாத்திரை மூலம் எடுத்துக் கொள்ளலாம்.

(கட்டுரையாளர் ஒரு மருத்துவர், இதில் இடம்பெற்றுள்ளவை அவரின் சொந்தக் கருத்துகள் ஆகும்)

https://www.bbc.com/tamil/articles/cp0jqen6l29o

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவரின் ஆலோசனையின்றி வைட்டமின்களை உட்கொள்வது நன்மையா, தீமையா?

ஊட்டச் சத்து

பட மூலாதாரம்,MIRAGEC/GETTYIMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சுசீலா சிங்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்க ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது புதிய விஷயம் அல்ல.

வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், இரும்புசத்து மற்றும் புரதம் போன்ற உங்கள் உடலின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை தீர்ப்பதாக கூறிக்கொள்ளும் இந்த சப்ளிமெண்ட்ஸ் பல்வேறு வடிவங்களில் சந்தையில் கிடைக்கின்றன சிரப்கள், மாத்திரைகள், எனர்ஜி பார்கள், பானங்கள் அல்லது பொடிகள் இவற்றில் அடங்கும்.

இருப்பினும், சமச்சீர் உணவின் பற்றாக்குறையை இந்த சப்ளிமெண்ட்ஸ் ஈடுசெய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் இதுபோன்ற சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

"சைவ உணவு உண்பவர்களுக்கு மல்டிவைட்டமின்கள் அவசியம்தான். ஆனால் 'ஒரே டோஸ், அனைவருக்கும் பொருந்தாது'. எனவே நோயாளிகள் தாங்களாக இல்லாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்."என்று டாக்டர் சுனிலா கர்க் பிபிசியிடம் தெரிவித்தார்.

   

”தாங்களாகவே மல்டிவைட்டமின்களை எடுத்துக்கொள்ளும் 30 முதல் 40 வயதுடைய பெண்கள் என்னிடம் வருகிறார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஏனெனில் இது பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது,” என்று டாக்டர் ராஜ் ஆரோன் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பொதுவாக நகரங்களில் மக்கள் சுயமாக மருந்துகளை சாப்பிடுகின்றனர் அல்லது நோய் பற்றித்தெரிந்துகொண்டு மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்துகளை வாங்கிக்கொள்கிறார்கள். வலி போன்ற உடல் உபாதைகள் அல்லது வைட்டமின்கள் விஷயத்திலும் இது நடக்கிறது. இது சில நேரங்களில் குணமடையாது." என்று தேசிய நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அறக்கட்டளையின் (NDOC) டாக்டர் சீமா குலாட்டி கூறுகிறார்.

"கூகுள் மூலம் தகவல் பெற்று அல்லது சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை எடுத்துக்கொண்டு மருந்துகளை உட்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கூட, மருந்துகள் அல்லது வைட்டமின்கள் இந்தியாவில் கிடைக்கின்றன, அவை பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

உடலில் சப்ளிமெண்ட்ஸின் விளைவுகள்

மருத்துவர் பரிந்துரைக்கும் சப்ளிமெண்ட் மற்றும் டோஸை மட்டுமே உட்கொள்ளவேண்டும். அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் எந்தப் பலனும் இல்லை என இந்த மருத்துவர்கள் அனைவருமே சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்த சப்ளிமெண்ட்ஸின் அதிகப்படியான பயன்பாடு உடலின் மீது தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஊட்டச்சத்து

பட மூலாதாரம்,OKSANA SHUFRYCH

வைட்டமின்கள்- வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா த்ரீ போன்ற கொழுப்பில் கரையக்கூடிய பல வைட்டமின்கள் உள்ளன என்று டாக்டர் சீமா குலாட்டி விளக்குகிறார். மருத்துவரின் ஆலோசனையின்றி இந்த வைட்டமின்களை உட்கொள்வதால், அவை உடலில் படிந்துவிடும் அல்லது சேர்ந்துவிடும். அவை உடலில் இருந்து வெளியேறாமல் இருக்கும். இது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ - வைட்டமின் ஏ அதிகமாக உட்கொள்வதால் வாந்தி, மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதே நேரத்தில் வைட்டமின் ஈ காரணமாக ரத்த அழுத்தம் குறைகிறது. இது நுரையீரலையும் பாதிக்க்கூடும். மருத்துவரின் ஆலோசனையின்படி அவற்றை உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர் சீமா குலாட்டி குறிப்பிட்டார்.

டாக்டர் சீமா குப்தா சி-நெட்டின் தலைவர். இந்த மையம் ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

”பல வைட்டமின்கள் உடலில் கலந்துதுவிடுகின்றன. அவை அதிக அளவில் உடலில் நுழைந்தால் மலம் வழியாக வெளியேறிவிடுகின்றன,” என்கிறார் அவர்.

வைட்டமின் பி - இந்த வைட்டமின் உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. இது மூளை மற்றும் நரம்பு செல்களை வலுப்படுத்தும் வேலையையும் செய்கிறது.

ஊட்டச்சத்து

பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY

• அதன் குறைபாட்டால், தோல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது.

• பலவீனம் உணரப்படுகிறது.

• வாயு, மலச்சிக்கல் மற்றும் பசியின்மையும் ஏற்படுகிறது.

• இதயத் துடிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனை ஏற்படும்.

இவை இரண்டு வடிவங்களில் கிடைக்கின்றன, அவற்றின் டோஸ் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் அத்தகைய வைட்டமின்கள் நீரிழிவு நோயாளிகளுக்கும் அளிக்கப்படுகின்றன. ஆனால் நீண்ட காலத்திற்கு தேவையில்லாமல் அத்தகைய கூடுதல் மருந்துகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கக்கூடும்.

வைட்டமின் டி- குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை அதன் குறைபாடு காணப்படுவதாக டாக்டர் ராஜ் ஆரோன் விளக்குகிறார். இதற்கு முக்கிய காரணம் அதிகமாக வெளியே செல்லாமல் இருப்பதாகும்.

வைட்டமின் D இன் இயற்கையான ஆதாரமாக சூரியன் கருதப்படுகிறது. ஆனால் இப்போது மக்கள் அதிகமாக வெளியே செல்வதில்லை. உடல் உழைப்பின் போது சூரியனின் கதிர்கள் உடலை சென்றடைந்தால் அந்த வைட்டமின் டி, உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

மூன்று மாதங்கள் வரை மட்டுமே வைட்டமின் டி உட்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். ஆனால் மக்கள் இந்த காலத்தை நீட்டிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், சுவாசிப்பதில் சிரமம், செரிமானம் குறைவது, சோர்வு, தலைச்சுற்றல், குழப்பம், அதிக சிறுநீர் கழித்தல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம்.

இரும்பு சத்து - இந்தியாவில் 50 சதவிகித்திற்கும் அதிகமான பெண்கள் இரும்புச்சத்து பற்றாக்குறை பிரச்சனையுடன் போராடுகிறார்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS) தரவுகள் கூறுகின்றன. எனவே இரும்புச்சத்து உட்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்று டாக்டர் சுனிலா கர்க் கூறினார். .

ஊட்டச்சத்து

பட மூலாதாரம்,PETER DAZELEY/GETTYIMAGES

டாக்டர். சுனிலா கர்க் NIHFW இன் திட்ட ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார். மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகவும் அவர் இருந்துள்ளார்.

கால்சியம் - கால்சியம் என்பது பற்கள் மற்றும் எலும்புகளுடன் கூடவே இதயம் மற்றும் தசைகளையும் வலுப்படுத்த உடலுக்கு தேவையான ஒரு கனிமமாகும். பொதுவாக 40 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு கால்சியத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியத்தை நீண்ட காலத்திற்கு உட்கொண்டால், அது கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது இதயத்தின் தமனிகளை கடினப்படுத்துகிறது. அவற்றில் கொழுப்பு அதாவது கொலஸ்ட்ரால் சேரத்தொடங்குகிறது. இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் பலவீனமடைகின்றன. அவற்றின் அடர்த்தி குறைகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோஃபீனியா போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

2022 ஆம் ஆண்டில், உணவு சப்ளிமெண்ட் சந்தை, 43,650 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்று தி இன்டர்நேஷனல் மார்க்கெட் அனாலிசிஸ் ரிசர்ச் அண்ட் கன்சல்டிங் (ஐஎம்ஆர்சி) குழுமம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. 2028 ஆம் ஆண்டில் இந்த சந்தை .95,810 கோடி ரூபாயை எட்டும் என்று IMARC நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துகிறார்கள். சுறுசுறுப்பாக ஆகிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கிறார்கள். இதன் காரணமாக உணவின் சமச்சீர்தன்மை குறைகிறது. வைட்டமின்களும் உணவில் இருந்து மறைந்துவிடுகின்றன என்று டாக்டர் சீமா குலாட்டி கூறுகிறார்.

சத்தான உணவு எல்லா குறைபாடுகளையும் சமாளிக்க உதவுகிறது என்பதால் சமச்சீர் உணவை சப்ளிமெண்ட்ஸுடன் ஒப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பெண்ணின் வயது 30 க்கு மேல் செல்லத் தொடங்கும் போது இந்த சப்ளிமெண்ட்ஸ் நிச்சயமாக உதவும். ஆனால் அவை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ளப்பட வேண்டும். இது தவிர யோகா மற்றும் உடற்பயிற்சிகளையும் செய்யவேண்டும் என்று டாக்டர் சீமா குலாட்டி அறிவுறுத்துகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c9xe6y5n3k9o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.