Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

whatsapp-image-2022-04-21-at-10.23.57-pm

மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவின் வீட்டிற்கு நானும் ஜெயனும் பலமுறை சென்றிருக்கிறோம். அவர் ஜெயனுக்கு குருவும் தந்தையுமானவர். கேரளத்தில் திருச்சூரில் இருந்தார். எங்களுக்கு திருமணமாகி நான்கைந்து வருடங்கள் கழித்து ஒருமுறை அங்கு சென்றபோது, அவர் வீட்டு முற்றத்தில், மாமரத்தடியில் அமர்ந்து அவருடன் தனியே பேசும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. அப்போது ஆற்றூர் என்னிடம் ஜெயன் பற்றி ஏதோ கேட்டார். நான் என் வழக்கப்படி உணர்ச்சி பரவசத்துடன் பதில் கூறினேன்.
அப்போது அவர் “மலையாளத்தில் ’பிரகாசம் பரத்துந்ந பெண்குட்டி’ என்றொரு சொற்பிரயோகம் உண்டு. நீயும் ஜெயமோகனும் உங்கள் திருமணம் நடந்த மறுநாள் இங்கு வந்து பத்து நாட்கள் போல தங்கினீர்கள். .அப்போது உனக்கு சிறிதும் மலையாளம் தெரியாது. எனக்குத் தெரிந்த குறைந்தபட்ச தமிழில் உன்னுடன் உரையாடுவேன். நீ பேசும் அதிவேகமான தமிழை நான் உன் கையசைவை வைத்து ஓரளவு புரிந்து கொள்வேன். அப்போது தோன்றிய அந்த எண்ணம் இப்போது வரை எனக்கு அப்படியே உள்ளது. நீ உன்னைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவள்” என்றார்.

எனக்கு அப்புகழ்ச்சி பிடித்திருந்தாலும் கூச்சமாக இருந்தது. அவர் அப்படி உணர்ச்சிகரமாக பேசுபவரே அல்ல. அவர் கவிதைகள் கூட மலையாள உரத்த கவிதைகளுக்கு மத்தியில் அடக்கப்பட்ட உணர்வு வெளிப்பாடும், ஒரு முரண் நகைச்சுவையும் அமையப் பெற்றவை.

நான் உடனே ”எனக்கு எப்போதும் இந்த சந்தேகம் வரும். எப்படி சிலர் வாழ்வில் மட்டும் இந்த இயற்கையின் நியதி சற்று கருணையோடிருக்கிறது என்று? ஒத்த ரசனையுள்ள, மனமொத்த தம்பதிகளை நான் மிக அரிதாகவே கண்டிருக்கிறேன். திருமணம் குறித்த அச்சம் என்னை வெகுவாக ஆட்டிப் படைத்து ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் மிகச் சராசரியான, உலகியல் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் ரசனையற்ற மனிதன் ஒருவன், எனக்கு அமைந்து விட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதே என்னால் தாள முடியாததாக இருந்திருக்கிறது . ஆனால் என்னிடம் அந்த நியதி அளவுகடந்த கருணை காண்பித்திருக்கிறது என்று தோன்றும். அந்த வியப்பு எனக்கு இன்றும் தீரவில்லை. எது எங்களை ஒன்றிணைத்தது?” என்றேன் அடங்கிய குரலில்.

நான் அறிந்தவர்களிலேயே மிகச் சிறந்த ஆசிரியர் ஆற்றூர். நீட்டி முழக்கி எதையும் விரிவாக போதிக்க மாட்டார். அவர் எனக்கு சொல்லித் தந்த சாக்ரடீஸின் ’கேவ் அலிகரி’யை இப்போது முப்பது வருடம் கழித்தும் என்னால் துல்லியமாக நினைவுகூர முடிகிறது. அவர் எதையும் எப்போதும் காட்சிகளாலோ படிமங்களாலோ தான் விளக்க முற்படுவார். சிறிதுநேரம் கண்மூடி யோசித்துவிட்டு இவ்வாறு கூறினார்.

 

“அருண்ண்மொழி, ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மூட்டை முழுவதும் நிறைய நெல்லிக்காய்கள் இருக்கின்றன. அவற்றில் இரு நெல்லிக்காய்கள் அருகருகே உள்ளன. அந்த மூட்டையை உதறிவிட்டு வேறொரு சாக்கில் எல்லா நெல்லிக்காய்களையும் திரும்பவும் போட்டு கட்டுகிறார்கள். அப்போது முன்பு அருகருகே அமைந்த அந்த நெல்லிக்காய்கள் இரண்டும் மீண்டும் அதேபோல் அமையப் பெற என்ன நிகழ்தகவு [probability] உண்டோ அதுபோல் தான் ரசனையொத்த தம்பதிகள் அமைவது” என்றார். புன்னகையுடன் தலையசைத்தேன். அவரும் புன்னகைத்தார்.

நம் வாழ்வில் புனைவை மிஞ்சும் தருணங்கள் எப்போதாவது நிகழ்வதுண்டு. என் வாழ்விலும் அப்படிப்பட்ட தருணம் ஒன்று நிகழ்ந்தது. எந்த சந்தர்ப்பத்தில் நினைத்துக் கொண்டாலும் புன்னகையை வரவழைப்பது அது. எல்லா விதிகளுக்கும் ஒரு தேவதை உண்டு என்பார் என் பாட்டி. உதாரணமாக விளக்கு வைத்தபின் அபசகுனமாக பேசக்கூடாது .அது அந்த தேவதை காதில் விழுந்து பலசமயங்களில் நடந்துவிடும் என்பார்.

1990 ஜூனில் நான்காம் வருடம் கல்லூரி திறந்ததிலிருந்து நானும் கலைச்செல்வியும் பல முயற்சிகள் வழியாக சிற்றிதழ்களை சந்தா கட்டி வரவழைக்க தொடங்கி விட்டோம். கணையாழி, நிகழ், முன்றில், கல்குதிரை போன்றவற்றையும், ஓரளவு தீவிர இலக்கிய ஆசிரியர்களையும் படிக்க ஆரம்பித்து விட்டோம். அசோகமித்ரன், லா.ச.ரா, மௌனி, வண்ண நிலவன், ஆதவன், இப்படி…. கலைச்செல்வி என் உற்ற தோழி. என் தம்பிக்கு புரட்சிக்கனலை ஊட்டியது போலவே அவளுக்கும் இலக்கிய ஆர்வத்தை ஊட்டியிருந்தேன். அவளும் என் நிழலாக எப்போதும் என்னை வழிபடும் மனநிலையுடன் அலைந்தாள். சேர்ந்து படித்தோம். விவாதித்தோம்.

ஆனாலும் நிறைய கிளாசிக்குகள் என்று எல்லோராலும் அடிக்கடி குறிப்பிடப்படும் படைப்புகளோ, நாவல்களோ பொதுவெளியில் கிடைக்காமல் இருந்தன. மதுரையில் பல கடைகளில் ஏறி இறங்கியும் அ.மி யின், சு.ரா. வின் நாவல்கள் கிடைக்கவில்லை. அது எங்களுக்கு கோபத்தை வரவைத்தது. இவர்கள் ஏன் இவ்வாறு பொதுவெளிக்கு வரமறுக்கிறார்கள். நம்மை தவிக்க வைக்கிறார்கள் என்று.

அப்போது சிறுபத்திரிகை எழுத்தாளர் யாரிடமாவது இதை எழுதிக் கேட்டால் என்ன என்று எங்களுக்கு ஒரு எண்ணம் வந்தது. அதுவரை முகவரி ஏதும் கிடைக்காததால் எங்கள் கோபத்திற்கு ஒரு வடிகால் அமையவில்லை. எதேச்சையாக கணையாழி பத்திரிகை குறுநாவல் போட்டி ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரியோடு பிரசுரித்திருந்தது. அதில் தமிழில் அப்போது எழுதிக் கொண்டிருந்த நான்கு பேரின் முகவரிகள் தரப்பட்டிருந்தன.

நான் கலையிடம் சொன்னேன் ‘ இவர்களில் யாருக்காவது எழுதி நம் சந்தேகத்தைக் கேட்டால் என்ன’ என்று. ’சரி, எழுதலாம்’ என்று முடிவு செய்து யாருக்கு எழுதுவது என்று தீர்மானிக்க ஒரு யோசனை செய்தோம். ’கண்ணை மூடிக்கொண்டு நான் தொடுகிறேன். யார் வருகிறதோ அவருக்கு எழுதலாம்’ என்றேன். அவள் உடனே’ கண்ணை மூடு’ என்றவள் கணையாழியை கவிழ்த்து பின் நிமிர்த்தி விரித்தாள். அதாவது நாம் வழக்கமாக படிக்கும்படி இல்லாமல் அது தலைகீழாக திரும்பியிருந்தது.

கண் திறந்து பார்த்தால் நான் தொட்டிருந்த பெயர் ஜெயமோகன். அப்போது காதலின் தெய்வம் புன்னகையுடன் ’உனக்கு இவன் வேண்டுமா? நான் தருகிறேன்’ என்று நினைத்திருக்கக் கூடும் என்று நான் கற்பனை செய்து கொள்வேன். அது எப்போது நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பையும் பெரு நியதி ஒன்றின்மேல் நம்பிக்கையையும் ஏற்படுத்துவது.

கடிதம் சேர்ந்தே எழுதினோம். அடக்கப்பட்ட கோபம் வார்த்தைகளில் வெளிப்பட எழுதிய கடிதத்தில் ’ஏன் சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் அனைவரும் இந்த 300 பிரதிகள் என்ற எண்ணிக்கையை வைத்துள்ளீர்கள்.? நிறைய பேரிடம் இலக்கியம் செல்ல வேண்டாமா? நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இதைக் கண்டுபிடித்தோம், தெரியுமா?. இன்னும் அனேக எழுத்தாளர்களின் படைப்புகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நீங்கள் ஏதாவது விசேஷ குறுங்குழுவா? நக்சலைட் இயக்கம்போல்?’ என்றெல்லாம் எழுதியிருந்தோம். கீழே இருவரும் கையெழுத்திட்டு அனுப்பிவிட்டு காத்திருந்தோம்.

டிசம்பர் பாதியில் எழுதிய அக்கடிதத்துக்கு ஜனவரி முதல்வாரம் வரை பதில் ஏதும் வராததால் நாங்கள் நம்பிக்கை இழந்தோம். நம் கடிதம் வழக்கம்போல் குப்பைத் தொட்டிக்கு போயிருக்கும். எழுத்தாளன் என்றால் தன்னைச் சுற்றிலும் கசக்கி எறிந்த காகித குப்பைகளுக்கு மத்தியில் அமர்ந்து எழுதுபவன் என்ற ஒரு பிம்பம் நம் திரைப்படங்கள் வழியாக கட்டமைக்கப் பட்டிருந்தது. அதை நாங்கள் நம்பினோம். நாமும் அடக்க ஒடுக்கமாக எழுதாமல் கோபமாக எழுதியது அவர் கோபத்தை தூண்டியிருக்கலாம். அதனால் அவர் அதை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டோம்.

இதற்கிடையில் மதுரை சர்வோதய இலக்கிய பண்ணை புத்தகக் கடையில் அவரது ரப்பர் நாவல் வந்திருந்தது. வாங்கி வந்து படித்தோம். முதலில் அந்த வட்டார வழக்கு சற்று புரியாவிட்டாலும் போகப் போக நாவல் எங்களை உள்ளிழுத்துக் கொண்டது.

whatsapp-image-2022-04-21-at-10.08.34-pm

ஜனவரி இரண்டாம் வாரத்தில் எங்களுக்கு ஒரு பெரிய கடிதம் வந்தது. முகவரியில் என் பெயரும், கலையின் பெயரும் இருந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தோம். ஜெயமோகன், தொலைபேசி நிலையம், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம். இருவரும் பரபரப்புடன் படித்தோம். கிட்டத்தட்ட இருபது பக்கங்கள். அன்புள்ள அருண்மொழி, கலைச்செல்வியையும், கடைசி வரியையும் எடுத்து விட்டால் அப்படியே தினமணி தமிழ்மணியில் பிரசுரிக்கத் தகுந்த கட்டுரை அது. கல்கி தொடங்கி தமிழில் உள்ள கேளிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வணிக எழுத்துக்கும் புதுமைப் பித்தன் தொடங்கி இன்று வரை தொடரும் சீரிய இலக்கிய எழுத்துக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டி விரிவான தரவுகளுடன் எழுதப்பட்டிருந்தது. எங்களுக்கு ஒருவாறு விளங்கியது.

கடைசி வரியில் ’டிசம்பர் இரண்டு வாரங்களாக ரப்பர் வெளியீடும், கூட்டமும் நடந்தது. அதற்கு சென்னை, கோவை சென்றிருந்ததால் பதில் எழுதத் தாமதம். உங்கள் இருவருக்கும் தூய அழகிய தமிழ்ப் பெயர்கள். என் பெயரின் அந்நியத்தன்மை குறித்து எனக்கு எப்போதுமே மனக்குறைதான்’, என்று எழுதியிருந்தார்.

நாங்கள் இதற்கு பதிலாக நன்றிசொல்லி எழுதிவிட்டு ரப்பர் பற்றிய எங்கள் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்திருந்தோம். அதற்கு ’நாவலின் சாரத்தை நெருங்கிவிட்டீர்கள். மொழி கொஞ்சம் முதிர்ச்சியற்று இருக்கிறது. எழுத எழுத சரியாகும்’ என்று பதில் வந்தது. இப்படியாக கடிதங்கள் எழுதிக்கொண்டோம். எல்லாமே ஒரு ஆசிரியரிடம் நாம் கேட்கும் சந்தேகங்கள், வினாக்கள், விளக்கங்கள்.

’ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் எனக்கு மதுரையில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதற்கு வருவேன். நீங்கள் இருவரும் வர இயலுமா?’ என்று எழுதியிருந்தார். நாங்கள் ’வார இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. மாதத்தில் இரு வியாழன் மட்டுமே அதுவும் மாலைகளில் அனுமதிப்பார்கள்’ என்று எழுதினோம். ’சரி, முடிந்தால் நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்’ என்று எழுதினார்.

நாங்கள் ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் அவர் குறிப்பிட்ட தேதியை ஆவலுடன் பார்த்திருந்தோம். அன்று எங்களுக்கு மிட்டெர்ம் எனப்படும் இடைத்தேர்வு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை. அதில் அக்ரிகல்ச்சுரல் எகனாமிக்ஸ் அன்றைய தேர்வு. அந்தப் பாடத்தில் தியரி அதிகம் படிக்க இருக்காது. கணக்குகள் போல பாலன்ஸ் ஷீட் டாலி செய்வதுதான் இருக்கும். எனக்கு அது மிக எளிதான பாடம். ஆகவே புத்தகத்தை ஒப்புக்கு வைத்துக் கொண்டு காதைத் தீட்டிக்கொண்டு அறையில் இருந்தேன். கலைச்செல்வி வேறு அறை.

எங்கள் விடுதியின் பெயர் மரியக்குழந்தை இல்லம். மூன்றாம் வருட, நான்காம் வருட மாணவிகள் அதில் இருந்தோம். ஐம்பது அறைகள் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடம். ஒரு அறையில் மூவர். வசதியான அறை . அனைவருக்கும் தனித் தனி கட்டில், மேஜை, நாற்காலி, அலமாரிகள் உண்டு. வார்டன் எப்போதும் இங்கு இருக்கமாட்டார். இரண்டு, மூன்று ஹாஸ்டலுக்கு அவர் மட்டுமே என்பதால் அவ்வப்போது வருவார். மீதி நேரங்களில் எங்களை கவனித்துக் கொள்ள ஒரு வயதான அம்மாள் உண்டு. அவரை நாங்கள் எல்லோரும்’ மாமி’ என்று அழைப்போம். அவர் ஒரு பிராமண விதவை.

காலை பதினொரு மணி இருக்கும். மாமி என் அறை வாசலில் வந்து நின்று “ அருண்மொழி, ஒன்னப் பாக்க ஒத்தர் வந்துருக்கார். யாரோ ஜெயமோகனாம்” என்று சொன்னாள். நான் புத்தகத்தை வைத்து விட்டு வாசலை நோக்கி விரைந்தேன். மாமி காரிடாரில் என் வேகத்துக்கு இணையாக நடந்துகொண்டே ”அவர் பாட்டுக்கு நேரே உள்ள வர்ரார். நான் இது லேடிஸ் ஹாஸ்டல். இப்டி வரப்படாதுன்னு தடுத்து நிறுத்தி வெளிய நிக்க சொன்னேன். நீ சொல்ல வேண்டாமோ” என்றாள்.
நான் சமாளிக்கும் புன்னகையுடன் ”அவர் புதுசு, மாமி. இதெல்லாம் தெரியாது. நான் சொல்லிடறேன்” என்று கிட்டத்தட்ட ஓடினேன். பார்த்தால் வாசலில் கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்து ஸ்டைலாக நின்று கொண்டிருந்தார். லைட் வயலட் நிற உயர்தர சட்டை, பிஸ்கட் நிற பேண்ட் அணிந்து அழகாக இன் செய்து, உயர்தர காலணிகளுடன், செக்கச்சிவந்த நிறத்தில் ஏதோ மலையாள நடிகர் சாயலில் இருந்தார். கலைந்த தலையும், ஜோல்னாப் பையும், ஒருவாரத் தாடியுமாய் இருப்பார் என்று எண்ணிய எனக்கு அதிர்ச்சி. நான் ஏதோ சுமாரான புடவையுடன் இருந்தேன்.

படிகளில் இறங்கியபடியே “ வாங்க… ஹாஸ்டல் கண்டுபிடிக்க கஷ்டமாயிருந்துச்சா?’’ என்று முகமன் கூறினேன். அவர் என்னைப் பார்த்துக் கொண்டே ”நீங்க…அருண்மொழி?” என்றார்.

”ம்ம்… கலை வருவா. மாமி, கலையை வரச் சொல்லுங்க” என்றேன்.

மாமி கலையை கூப்பிடச் சென்றாள். நான் வாசலுக்கு நேராக நிற்காமல் கொஞ்சம் தள்ளிவரச் செய்தேன். என்ன பேசுவது என்று தெரியாமல் வழக்கமான சொற்றொடர்களே மனதில் வந்தன. அவர் பேசாமல் நின்றிருந்தார். நான் ”நேத்து மீட்டிங் நல்லா நடந்துச்சா?’’ என்றதற்கு” ம்ம்..” என்றார்.

கலை வந்தவுடன் அவளையும் அறிமுகம் செய்து பக்கத்தில் இருந்த விசிட்டர்ஸ் ஹாலில் அமரலாம் என்று அங்கு அவரை கூட்டிச் சென்றோம். மூவரும் நாற்காலிகளில் அமர்ந்ததும் இயல்பானார். கூலிங்கிளாசை கழட்டினார். அப்பாடா என்றிருந்தது. அதுவரை தோன்றிய அந்நியத் தன்மை மறைந்து ஒரு அணுக்கம் உண்டானது.

அவர் கையில் வைத்திருந்த பத்திரிகையை சுட்டி ’என்ன’ என்று கேட்டேன். அவர் ’சுபமங்களா என்று ஒரு நடுவாந்தர இலக்கிய பத்திரிகை. கோமல் சுவாமிநாதன் ஆரம்பித்திருக்கிறார். என் சிறுகதை ஒன்று இதில் பிரசுரமாயிருக்கிறது” என்றார்.

அதைப் பார்க்க விழையும் என் ஆவல் அவருக்கு புரிந்திருக்கவேண்டும். என்னிடம் நீட்டினார். நான் வாங்கி உள்ளே பொருளடக்கத்தை புரட்டினேன். அதில் ஜெயமோகன் சிறுகதை’ ஜகன்மித்யை’ என்று இருந்தது. படபடவென்று பக்கத்தை புரட்டி கொஞ்சம் படிக்க ஆரம்பித்தபின் தான் எனக்கு உறைத்தது. மூடிவிட்டு நிமிர்ந்தேன். முதல்முறையாக புன்னகைத்தார். நாங்களும் சிரித்தோம். ’’நான் வேற காப்பி வாங்கிக்கிறேன்” என்றார்.

ana_9615-1.jpg?w=320

பின் தயக்கம் குறைந்து நன்றாக பேசினோம். வழக்கம்போல் எவ்வாறு ஆர்வம் வந்தது என்றும் புத்தக வேட்டை நிகழ்த்திய கதைகளையும் பகிர்ந்து கொண்டோம். அவரும் அவரது சிறுவயது வாசிப்பனுபவம் குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டார். அவருடைய உச்சரிப்பு மலையாள உச்சரிப்பு கலந்து இருந்தது. மதியம் ஒன்றரை மணிக்கு நாங்கள் உண்டுவிட்டு தேர்வுக்கு செல்ல வேண்டியிருப்பதை சொன்னோம். அவரும் கிளம்பினார். மாலை நான்கு மணிக்கு தேர்வு முடிந்துவிடும் என்றோம். மாலை ’முடிந்தால் வருகிறேன்’ என்றார். மாலையும் வந்தார்.

மாலையில் எங்களிடம் உள்ள புத்தக சேகரிப்புகள் அனைத்தையும் காட்டி உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் விடுதிக்கு பக்கவாட்டில் உள்ள மிகப் பெரிய வாகைமரத்தடியில் நாற்காலியிட்டு அமர்ந்து கொண்டோம். அவருடைய விரிந்து பரந்த அறிவும், புத்திகூர்மையும், சரளமான உரையாடலும் எங்களுக்கு வியப்பையும், மதிப்பையும் ஏற்படுத்தின. தேனீர் நேரம் நெருங்கியது. தேனீர் எடுத்துவர கலை விடுதிக்குள் சென்றாள். உரையாடல் நின்று அமைதி நிலவியது. என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் எதையாவது சொல்லி அந்த மௌனத்தை கடக்க யோசித்தேன். ஒன்றும் தோன்றவில்லை.

நான் மரத்தின் உச்சியைக் காட்டினேன். அது மிகுதியாக பறவைகள் கூடடையும் மரம். ”அப்பா, எவ்வளவு சத்தம்” என்றார். நான் உடனே ”அதுங்களோட லேடீஸ் ஹாஸ்டல்” என்றேன். ரசித்து சிரித்தார். நானும் ’அப்பாடா, ஜோக் சொல்லி சிரிக்கவைத்து விட்டோம்’ என்று மகிழ்ந்தேன்.

பிறகு நேரமானதும் கிளம்பினார். நாங்கள் பிரதான நுழைவாயில் வரை போய் பஸ் ஏற்றிவிடச் சென்றோம். விடுதியிலிருந்து ஒரு சாலை, விரிவுரையாளர்கள் குவார்ட்டர்ஸிருந்து வரும் ஒரு சாலை , பிரதான நுழைவாயிலை நோக்கி செல்லும் ஒரு சாலை மூன்றும் இணையும் இடத்தில்தான் எங்கள் கல்லூரியின் முக்கிய கட்டிடம் இருந்தது. சாலைகளின் இருபுறமும் மஞ்சள் கொன்றை மரங்களும், வாகை, தூங்குமூஞ்சி மரங்களும் நிழல் பரப்பி நின்றுகொண்டிருக்கும். நான் பார்த்த கல்லூரிகளிலேயே மிக அழகானது எங்கள் கல்லூரி.

விடுதிச் சாலையிலிருந்து மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரங்கள் இருபுறமும் அணிவகுத்த சாலை வழியே வரும்போது, சங்கப் பாடலில் ’பூ உதிரும் ஒலியைக் கேட்டவாறு தலைவனை நினைத்துக் கொண்டே துயிலாமல் இருந்ததாக’ தலைவி கூறியதை சொல்லிக் கொண்டே வந்தார். நான் அப்போதுதான் எம்பி ஒரு கிளையை புத்தகத்தால் தட்டினேன். பூக்கள் உதிர்ந்தன. பிற்பாடு இந்த தருணத்தை பல இடங்களில் ஜெயன் சொல்லியும், எழுதியும் உள்ளார்.

பஸ் ஏற்றிவிட்டு திரும்பும்போது நிறைவாக உணர்ந்தோம். ”பந்தாவா டிரெஸ் பண்ணாலும் பந்தா காட்டல, இல்லடி?. நல்லா பேசினார் இல்ல, எவ்வளவு விஷயங்கள் ” என்று பேசியபடியே திரும்பினோம்.

நாலைந்து நாட்கள் கழித்து ஒரு சிறிய கடிதம். ’நான் மதுரையிலிருந்து கிளம்பி சு.ரா வைப் பார்த்துவிட்டு, அப்படியே திருவனந்தபுரம் போய் பி.கெ. பாலகிருஷ்ணனை சந்தித்து விட்டு பாலக்கோடு வந்து சேர்ந்தேன். உங்களை சந்தித்ததும், உரையாடியதும் நல்ல அனுபவங்கள்.’ என்று எழுதியிருந்தார்.

ஒருவாரம் கழித்து ஒரு மதிய உணவு இடைவேளையின் போது கலையின் சைக்கிள் ஏதோ பஞ்சர் என்று அவள் அதை சரிசெய்யப் போனாள். எங்கள் கல்லூரி வளாகம் முந்நூறு ஏக்கர்கள் கொண்ட விரிந்த பரப்பு. ப்ராக்டிகல்ஸ் எனப்படும் நடைமுறை வகுப்புகள் பெரும்பாலும் காலை வேளைகளில் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ப்ளாக்கில்[block] இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இடையே மூன்று, நான்கு கிலோமீட்டர் தொலைவு. ஏ, பி,சி, டி, ஈ பிளாக் என்று ஒவ்வொரு ஏரியா. அனைவருக்கும் சைக்கிள் கட்டாயம். நான் மட்டும் மதிய உணவுக்காக விடுதி வந்தேன். 12.45 முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை. மீண்டும் இரண்டு மணிக்கு தியரி வகுப்புகள் பிரதான கட்டடத்தில் இருக்கும்.

பன்னிரெண்டரை மணிக்கு மாமி கடிதங்களைக் கொண்டு வந்து விடுதியின் முகப்பறையில் உள்ள மேஜையில் வைப்பாள். நாங்கள் அவரவருடையதை எடுத்துக் கொள்வோம். அன்றைக்கு சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு விரைந்து படிகளில் ஏறி அவசரமாக கடிதங்களை ஒரு பார்வை பார்த்தேன். பெரும்பாலும் எல்லோருக்கும் அதிகமாக வருவது இன்லேண்ட் கடிதங்கள் தான். சிலருக்கு போஸ்டல் என்வலப் வரும். என் அப்பா, அம்மா இருவரும் இன்லேண்டில் தான் எழுதுவார்கள். அம்மாவின் கடிதம் வந்திருந்தது. தடித்த பழுப்பு உறையைப் பார்த்ததும் ஜெயமோகன் கடிதம் என்று ஆவலுடன் எடுத்தேன். இரண்டு கடிதங்கள் போட்டிருந்தார். ஒன்றில் வழக்கம்போல் என் பெயரும், கலை பெயரும். மற்றொன்றில் அருண்மொழி நங்கை[ personal ] என்று முகவரி எழுதப்பட்டிருந்தது.

அதை கையில் எடுத்ததும் ஒருகணம் எனக்கு கண் இருண்டு, கை வியர்த்தது. வேகமாக எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தேன். அறையில் அமுதா இருந்தாள். அங்கு வைத்துப் படித்தால் சிக்கல். எப்படியும் கலை அவள் அறைக்குப் போகும் முன் சாப்பிட அழைக்க என் அறைக்கு தான் வருவாள். அமுதாவிடம் ”கலை வந்தால் சாப்பிட மெஸ்ஸுக்கு போகச் சொல்.நான் பிறகு வருவேன் என்று சொல்”. என்று சொல்லிவிட்டு குளியலறை நோக்கி சென்றேன். அதில் ஒன்றில் நுழைந்து தாழிட்டு நடுங்கும் கைகளுடன் பிரித்தேன்.

அன்புள்ள அருண்மொழி, அதற்குப் பிறகு வரிகளில் என் கண் போகிறது. மனதிற்குள் ஒன்றும் அர்த்தமாகவில்லை. படபடப்பு, நிற்க முடியாமல் என் கால்கள் துவள்கின்றன. அங்கிருந்த அலுமினிய வாளியை கவிழ்த்துப் போட்டு அமர்ந்து கொண்டேன்.

’உன்னைச் சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு வந்த உணர்வுகளை திரும்பிப் பார்க்கிறேன். அவற்றை நான் எவ்வளவு தர்க்கம் கொண்டு விளங்கிக் கொள்ள முயன்றாலும் அதற்குள் சிக்க மறுக்கின்றன. என் உணர்வுகளின்மேல் எனக்கு இருந்த கட்டுப்பாடு முற்றிலும் அறுந்துவிட்டது. ஆம், என் மனதை பூரணமாக நீ எடுத்துக் கொண்டுவிட்டாய். உன் நினைவுகளே என்னை முழுதும் ஆள்கின்றன. என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. இதை எழுதி உனக்கு தெரிவிக்காவிடில் என் தலை சுக்குநூறாகி விடும் போல் தெறிக்கிறது. நான் இதை தபாலில் சேர்ப்பேனா என்று கூடத் தெரியவில்லை. நான் என்னை மிகுந்த தர்க்க பூர்வமான அறிவுஜீவி, இந்த உணர்வுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

உன்னை சந்தித்துவிட்டு மதுரையிலிருந்து நாகர்கோவில் சு.ரா. வீடு போகும் வரை ஒரு கணம் கூட இடைவெளியின்றி நீ பேசிய தருணங்களை மீட்டி மீட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். விலக்க விலக்க ஆவேசமாக வந்து மூடும் குளத்துப்பாசி போல் உன் நினைவுகள் என்னை சூழ்ந்து மூடிக்கொள்கின்றன. உன் கண்கள், உன் முகம், உன் அசைவுகள், உன் சிரிப்பு, உன் மாநிறம், உன் துள்ளல் நிறைந்த பேச்சு… இவையேதான் திரும்பத் திரும்ப. நான் உன்னைக் காதலிக்கிறேன் அருணா. உன்னை மணம் செய்துகொள்ள விரும்புகிறேன். ஒரு பெண்ணும், ஆணும் இணைந்து வாழ, திருமணம் தவிர வேறு எந்த வகையான உறவையும் நம் சமூகம் அனுமதிப்பதில்லை.

இக்கடிதம் உன்னைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். நிதானமாக யோசி. யோசித்து விட்டு சொல். நான் இப்போது ஒரு மத்திய அரசு கிளரிக்கல் வேலையில்தான் இருக்கிறேன். மேலும் பரிட்சைகள் எழுதி பிரமோஷனில் செல்லமாட்டேன். சிறு பத்திரிகைகளில் மட்டும் தான் எழுதுவேன். இதில் பெரும்புகழோ, வருமானமோ கிடைக்காது. இதையும் நீ கணக்கில் எடுத்துக் கொள். உன் பதிலுக்கு காத்திருக்கும் ஜெயமோகன்.’’

படித்து முடித்து வெளியில் வந்தபோது என் கால்கள் துணியாலானவை போல் இருந்தன. கீழே ஊன்ற முடியவில்லை. வியர்வை ஊறிப் பெருகியது. என் இதயத் துடிப்பு எனக்கே பெரும்சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது. பயம், படபடப்பு, குழப்பம், இவற்றையெல்லாம் மீறி அது சந்தோஷமா, துக்கமா? இல்லை இரண்டும் ஒன்றுதானா? எனக்கு எதையும் இனம் பிரிக்க இயலவில்லை.

போய் கட்டிலில் கண்மூடி படுத்துக்கொண்டேன். படுக்கவும் தோன்றவில்லை. உடனே எழுந்தேன். தொண்டை வறண்டு, ஒரு ஜாடி தண்ணீர் முழுவதையும் பருகினேன். கை நடுங்கி உடையை நனைத்துக் கொண்டேன். திடீரென்று நினைத்துக் கொண்டு மெஸ்ஸுக்கு போனேன். இல்லையென்றால் கலை கேள்விகளால் துளைப்பாள். சாப்பிடத் தோன்றவில்லை. கையால் அளைந்து கொண்டிருந்தேன். என் முகத்தைப் பார்த்து ”ஏண்டி, என்னமோ மாரி இருக்க?” என்றாள். ”ஒண்ணுல்ல, தலவலி.” என்றேன்.

மதியம் வகுப்புக்கு சென்றேன். விரிவுரையாளர் எடுக்கும் பாடத்தை கவனிக்கவோ, அதை எழுதி எடுக்கவோ என்னால் முடியவில்லை. கையிலும் அதே படபடப்பு, நடுக்கம். பின்வரிசையில் அமர்ந்திருந்தேன். ஒரு கையால் தலையைத் தாங்கியபடி நோட்டுப் புத்தகத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்.

ஒருகணம் ஜெயமோகனின் முகம் என் நினைவில் புன்னகையுடன் மின்னி மறைந்தது. உடனே உடலெங்கும் ஒரு பரவசமும், கூச்சமும், நடுக்கமும் ஒருங்கே எழுந்தது. ஒரு இனிமை உடல், மனம் முழுவதையும் தழுவிச் செல்வதை உணர்ந்தேன். ஆம், அது எப்படி என்றால் விரல்நுனி வரை பரவும் இனிமை. நிரம்பி வழிந்து என்னால் தாள முடியாமல் ஆகியது. அய்யோ, எத்தனை பெரிய பரவசத்தை நான் வைத்திருக்கிறேன். ஒரு மாபெரும் பொக்கிஷப் புதையல் போல. இவர்கள் யாரும் இதை அறியமாட்டார்கள். என் உடல் அதைத் தாளாமல் நடுங்கியது.

இரவு அமுதா உறங்கியதும் கடிதம் எழுதத் தொடங்கினேன். என் பதிலுக்காக ஒரு இதயம் அங்கே துடித்து காத்திருக்கிறது. ‘’அன்புள்ள ஜெயமோகன், எனக்கு என் உணர்வை முதலில் அனுமானிக்க இயலவில்லை. நான் உங்களை ஒரு குருவின் பீடத்தில் வைத்திருக்கிறேன். என் அறிவும், அகங்காரமும் முற்றிலும் பணிந்தது உங்களிடத்தில் தான். இதுவரை நான் யாரிடமும் தாழ்வாக உணர்ந்ததேயில்லை. உங்கள் கடிதம் படித்ததும் எனக்கு வந்த முதல் எண்ணம் நான் உங்களுக்கு பொருத்தமானவள்தானா? என்று. நான் முதிர்ச்சியற்ற ஒரு வாசகி மட்டும்தான் .உங்கள் அறிவுத் தளத்தில் நீங்கள் புழங்கும் எல்லோரும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் இல்லையா? நான் எப்படி அச்சூழலில் பொருந்துவேன்? நிறைய சந்தேகம், பயம் வந்தது எனக்கு. என்னை மிகையாகக் காட்டிகொண்டு விட்டேனா?.

ஆனால் ஆயிரம் திரையிட்டு மறைத்தாலும் என் உள்ளே உங்கள் மேல் தீராத விருப்பம் இருந்திருக்கிறது. அதை நான் எந்தத் தயக்கமும், வெட்கமுமின்றி ஒப்புக்கொள்கிறேன். மனம் முழுவதும் இனித்து நிறைந்து வழிகிறது .நானும் உங்களை மனப்பூர்வமாக விரும்புகிறேன். திருமணம், அப்பா, அம்மா, கலை எனக்கு இதெல்லாம் எப்படி நிகழும் என்று சஞ்சலமாயிருக்கிறது. அதை உங்கள் கைகளில் விட்டுவிடுகிறேன். இதை நாளை சனியன்று தபாலில் சேர்ப்பேன். உங்கள் கைகளில் திங்கள்தான் கிடைக்கும். உங்கள் அருணா.

மறுநாள் அக்கடிதத்தை தபாலில் சேர்த்தேன். என் மனம் அடங்கவில்லை. அய்யோ, அவர் வியாழன் போட்ட கடிதம். என் பதிலுக்கு அவர் மூன்று நாட்கள் தவித்துக் கொண்டிருப்பாரே என்று மனம் பதறியது. என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு யோசனை உதித்தது. எங்கள் வளாகத்திலேயே ஒரு சிறிய அஞ்சலகம் உண்டு. அங்கு போய் ஒரு தந்தி கொடுக்கலாம் என மதிய இடைவேளையில் சென்றேன். படிவத்தை வாங்கி நிரப்பினேன். ’ஆம். எனக்கும் அதே உணர்வுநிலை தான். உங்கள் அருண்மொழி.’ படிவத்தை வாங்கிப் பார்த்த அந்த அலுவலர் என்னை குழப்பத்தோடு பார்த்தார். ”தெளிவா இல்லயேம்மா” என அவர் சொல்ல நான் ”புரிஞ்சுப்பாங்க, எப்போ போகும்?’’ “ சாயந்தரம் நாலு மணிக்குள்ள கிடச்சிடும்”.என்றார்.
இப்போது மணி ஒன்றரை. எனக்கு ஆசுவாசமாக இருந்தது. மறுநாள் ஞாயிறு முழுவதும் கனவில் மிதந்து கொண்டிருந்தேன். திங்கள் காலை அவருக்கு என் கடிதமும் கிடைத்திருக்கும். என்ன பதில் எழுதுவார்? திங்கள் காலை எங்களுக்கு ’ப்ளாண்ட் பேத்தாலஜி’ ப்ராக்டிகல் வகுப்பு. லேபில் இருந்தோம். ஏதோ ஒரு ஃபங்கஸின் குறுக்குவெட்டுத் தோற்றம் எடுத்து ஒவ்வொருவரும் நுண்ணோக்கியின் கீழ்வைத்து பேராசிரியரை அழைத்து காண்பிக்க வேண்டும். எனக்கு அன்று மிக எளிதாக அழகிய குறுக்குவெட்டுத் தோற்றம் வந்துவிட்டது. நான் பேராசிரியரை அழைத்து காண்பித்து விட்டு விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனம் தெரிந்ததுபோல் மகிழ்ச்சியில் இருந்தேன்.

சும்மா பக்கவாட்டு ஜன்னல் வழியாக கொன்றைமரத்தின் உச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். பொன்னிறப் பூக்கள் அடர்ந்திருந்தன. சட்டென்று ஜெயமோகன் நினைவும் அவர் சொன்ன சங்கக் கவிதையின் நினைவும் வந்து யாருக்கும் தெரியாமல் புன்னகைத்துக் கொண்டேன். அட்டெண்டர் ஒருவர் வந்து எங்கள் பேராசிரியரிடம் ஏதோ சொல்ல அவர் ”அருண்மொழி, யூ ஹாவ் எனி ரிலேட்டிவ்ஸ் இன் தர்மபுரி? யூ ஹாவ் அ ட்ரங்க் கால் ஃப்ரம் தேர்.” என்றார்.

எனக்கு திக்கென்றது, ‘’யெஸ் சார்” என்றேன் பலகீனமாக. என் கண்கள் சட்டென்று கலையை தொட்டு மீண்டன. அவள் என்னை குழப்பத்துடனும், புதிருடனும் பார்த்தாள். பொதுவாக யாருக்குமே கல்லூரிக்கு ஃபோன் வருவதில்லை. ஹாஸ்டலுக்கு தான் வரும். அதுவும் பெரும்பாலும் லோக்கல் கால். ட்ரங்க் கால் செலவு மிக்கது. நான் விரைந்து மாடிப்படிகளில் இறங்கி வந்து முகப்பின் விரிந்த வராண்டாவில் இருந்த அந்த ஃபோன் கேபினுக்குள் புகுந்து கொண்டேன்.

”ஹலோ, யார் பேசுறது?’’

”அருணா, நாந்தான் ஜெயமோகன். ஒன் லெட்டர் கெடச்சுது. இப்பதான் உயிர் வந்துச்சு எனக்கு. சனிக்கெழம தந்தி வேற கொடுத்திருக்க. எப்டி ஐடியா வந்துச்சு?

அதுவந்து… நீங்க மூணுநாள் தவிச்சு போய்டுவீங்கன்னு நெனச்சேன்.

ஆமா… நான் ரெண்டு வாரமா தவிச்சுட்டுதான் இருந்தேன். இங்க ஆஃபிஸ்ல ஒரே கலாட்டா, தெரியுமா? டிரீட் கேக்குறாங்க”.

எதுக்கு?

லவ் சக்ஸஸ் ஆனதுக்கு. ஆஃபீஸ்ல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

அய்யோ… எப்டி? நீங்கதான கையெழுத்து போட்டு வாங்கிருப்பீங்க.

ஆமா, நம்ம ஊர்ல தந்தின்னாலே கெட்ட சேதிதான. என் ஃப்ரெண்ட் ரமேஷ் ஓடிவந்து வாங்கி படிச்சான். ’லவ் பண்றேன்னு தந்தி கொடுத்த ஒரே ஆள் ஒன் ஆள்தாண்டான்னு நக்கல் வேற. எவ்ளோ நாசுக்கா சொல்லியிருக்கா பாரு ‘ன்னான்.

ப்ச்.. தப்பாயிடுச்சு. நான் அவசரபட்டுருக்கக் கூடாது.

ஏய்…அருணா. இதெல்லாம் எனக்கு ஜாலியா இருக்கு. பெருமயா இருக்கு. அப்றம் ஒரு விஷயம்…

நான் சீக்கிரம் போகணும்.

ஏன்?

ட்ரங்க் கால் இவ்ளோ நேரம் யாரும் பேச மாட்டாங்க.

அது இருக்கட்டும். எங்களுக்கு ஒரு நாளைக்கு ரெண்டு ஃப்ரீ கால் உண்டு. இத பார். லெட்டர்ல என்ன பூசி மெழுகி விரும்புறேன்னு எழுதுறே. லவ் யூ ந்னு எழுதுனா கொறஞ்சு போய்டுவியா?

அதில்ல… வெக்கமா இருந்துச்சு.

இப்ப சொல்லு. என் காதுல சொல்ற மாதிரிதான்.

நா மாட்டேன். நேர்ல சொல்றன்.

சொல்லுடி… ப்ளீஸ்.

ஒங்க காதுக்கு வரதுக்கு முன்னாடி இங்க குறுக்கால ஒருத்தர் இருக்கார். அவர் காதுல தான் விழும்.

யார் அவர்?

எல்லா டிபார்ட்மெண்ட் ஃபோனுக்கும் இந்த ஃபோனுக்கும் கனெக்‌ஷன் கொடுப்பார். இங்க ஒரு கண்ணாடி ரூம்ல ஒக்காந்துட்டு ஒரு ஆள். இப்ப கூட அவர் என்ன மொறச்சு பாக்குறமாதிரி இருக்கு.

ஓ, அப்பசரி. வர ஞாயித்துக்கெழம வருவேன். சொல்லணும்.

இந்த சண்டேயா?

ஏன்? எனக்கு இப்பவே வரணும் போல இருக்கு.

சரி, போதும். வைக்கிறேன்.

ஏய்… வைக்காத. இத எதிர்பார்த்திருந்தியா அருணா. நான் இப்டி எழுதுவேன்னு.

whatsapp-image-2022-04-23-at-9.37.20-am.

’’ஆச்சரியமா இருந்துச்சி. ஆனா ரொம்ப ஆச்சரியமா இல்ல. சரி, போதும். நான் வைக்கிறேன்.’’ வைத்துவிட்டேன். துள்ளிக் குதித்து கும்மாளமிட்டது மனம்.

மதியம் சாப்பிடப் போகும்போது கலை முறைத்துக் கொண்டே இருந்தாள். முடித்து வந்தபின் “கால் பண்ணது யாரு, ஜெயமோகனா”? என்றாள்.

ஆமா, கலை. அதுவந்து…

நீ ஒண்ணும் சமாளிக்க வேண்டாம். எனக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு.

சொல்றத முழுசா கேளுடி, அவர் என்ன மனப்பூர்வமா விரும்புறார். நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.

கல்யாணமே வேண்டாம்னு சத்தியம் பண்ணியிருந்தோமே ரெண்டுபேரும். அதெல்லாம் காத்துல பறக்க விட்டுட்டியா?

அது அப்ப… இப்ப எனக்கு ஆச வந்துருச்சி. எனக்கு அவர ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு கலை.

சரி, என்ன கூத்தோ அடிங்க. ஆனா இந்த ரெண்டு பேருக்கும் பொதுவா லெட்டர் போடறத நிறுத்த சொல்லு அவர. எனக்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.

அவர் ஒனக்கும் ஃப்ரெண்டு இல்லையா?

எனக்கு புடிக்கல. அவர்ட்ட சொல்லிடு. நாம ரெண்டுபேரும் எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸ். அவரப் பத்தி எந்த சேதியையோ, ஒங்க லவ்வையோ என் காதுல போடாத.

கறாராக சொல்லிவிட்டு சென்றாள். அவள் உறுதியை மாற்ற முடியாது. நானும் விட்டுவிட்டேன். வருத்தமாக இருந்தது எனக்கு. நான் செய்தது ஒருவகையில் திருட்டுத்தனம்தான். அவளிடம் எதையுமே தெரிவிக்காமல் அவருக்கு சம்மதம் சொல்லி பதில் போட்டது, தந்தி கொடுத்தது எல்லாமே அவளை புண்படுத்தியிருக்கும். இனிமேல் அவளுக்கு என் மனதில் ஜெயனுக்கு அடுத்த ஸ்தானம்தான் என்பதும் அவளை எரிச்சலூட்டும். மனதிற்குள் ’என்னை மன்னித்துவிடு, கலை’ என்றேன்.

சிறிது நாட்களுக்கு முன் கலையின் அப்பா பிரமோஷன் ட்ரான்ஸ்ஃபெரில் அருப்புக்கோட்டையிலிருந்து மேலூர் வந்துவிட்டார். அதனால் கலை எல்லா வார இறுதிகளிலும் அவள் வீட்டிற்கு போய்விடுவாள். நான் சனியன்று உட்கார்ந்து ஜெயமோகனுடைய ஜகன்மித்யை, படுகை, போதி சிறுகதைகளை படித்தேன். மறுநாள் அவர் வரும்போது சொன்னால் சந்தோஷப்படுவார் என்று நினைத்தேன்.

ஞாயிறு காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துக் கிளம்பினேன். இப்போதெல்லாம் அதிகாலை நான்கு மணிக்கு ஒரு விழிப்பு வருகிறது. முதல் நினைவே ஜெயனின் நினைவுதான். வேறு எந்த சிந்தனைகளுமற்று மனம் தேரும் ஒரு முகம். நிர்மலமான மனதில் எழுந்துவரும் முதல் எண்ணம். காதல் எப்படிப்பட்ட ஒரு உணர்வு. மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரங்களில் முதன்மையானது . மனிதனுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட தேன். அதைப் பருகாதவர்கள் துரதிருஷ்டசாலிகள். தூங்கும் நேரம் தவிர மற்றெல்லா நேரமும் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்க முடியும் என்று யாராவது முன்பு சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன்.

இருப்பதிலேயே நல்ல புடவையை உடுத்திக் கொண்டேன். அந்த நிகழ் பத்திரிகையை எடுத்துக் கொண்டேன். அதில் போதி கதையில் ஒன்றைக் கேட்கவேண்டும் அவரிடம். ஒன்பது மணிக்கு வருகிறேன் என்று எழுதியிருந்தார். எட்டரைக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு எங்கள் கல்லூரியின் முகப்பை நோக்கி செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் ஒரு கல்வெர்ட்டின் மேல் அமர்ந்துகொண்டேன்.

தூரத்தில் ஒரு அசைவு. சட்டென்று மனம் பொங்கியது. அவர்தான். அவரை நோக்கி பரபரப்புடன் நடந்தேன். கிட்டேபோனதும் கையைப்பற்றி கோர்த்துக் கொண்டார். இருவரும் சிரித்துக் கொண்டே நடந்தோம்.

அருணா, எங்க போறோம்?

எங்கன்னா? ஒண்ணு பண்ணுவமா? மீனாட்சி கோவிலுக்கு போவமா?

இல்ல, ஒரே சந்தடி அங்க. நிம்மதியா பேசமுடியாது. இங்க ஏதாவது தனிமையான இடம் இருக்கா?

இருக்கே. சிட்டன்குளம்னு ஒரு அழகான குளம் ’டி’ பிளாக்ல இருக்கு. சுத்திவர நல்ல மரநிழல். கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் வயல்வெளி. லோன்லியான இடம்தான்.

அப்ப அங்க போலாம்.

மெதுவாக கையை விடுவித்துக் கொண்டேன்.

இந்த ரோட்ல முழுசும் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ். சண்டே எல்லாரும் வீட்ல இருப்பாங்க. கைகோத்துட்டு போனா தப்பா நெனப்பாங்க.

ம்ம்…. இப்ப சொல்லு.

என்னது?

லவ் யூ.

சொல்றேன். அதுக்குமுன்னாடி இதுக்கு பதில் சொல்லுங்க.

என்னது? புக்கெல்லாம் தூக்கிட்டு வந்துருக்க?

நிகழைப் பிரித்து அவருடைய ’போதி’ கதையில் நான் சிகப்பு மையினால் அடிக்கோடிட்ட வரிகளைக் காட்டினேன். அதில் ’அறிவு ஜீவிகளால் யார்மீதும் அன்பு செலுத்த முடியாது. அன்பே ஒருவகை பேதமையிலிருந்து வருவது. என்னால் எந்த உயிரையும் என்னைவிட மேலாக நேசிக்க முடியாது’.. என்று கதைசொல்லி சொல்வதுபோல எழுதியிருந்தார்.

இதுக்கு என்ன அர்த்தம்? அதுவும் இந்த கதையில நான்னு நீங்களே சொல்றமாதிரி கத போகுது.

அருணா, ஒனக்கு இதுகூட புரியலயா? நான்னு தன்மை ஒருமையில கத எழுதுறது ஒரு டெக்னிக். ஈசியா உணர்வுகள சொல்லமுடியும். அந்த ’நான்’ ஜெயமோகன் கிடயாது. எவனோ ஒருத்தன்.

சரி, நீங்க அறிவுஜீவி தானே. அப்போ இந்த ஃபாக்ட் ஒங்களுக்கும் பொருந்தும்தானே?

அது அந்த காரக்டரோட லாஜிக், அருணா. நான் எழுதுற, எழுதப் போற எல்லா காரக்டரையும் என்னோட இணச்சு நீ பாக்க ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இல்ல. வாழ்நாள் முழுசும் இதான் ஒடீட்டுருக்கும் நமக்கிடயில. என் லெட்டர்ஸ்ல எப்டி உருகி உருகி எழுதுறேன். அப்பகூட ஒனக்கு புரியலயா. என் உயிரே நீதாண்டி.

கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இலேசாக புன்னகைத்தேன்.

அப்டி பாத்தா நீ ரப்பர்ல என்ன ஃப்ரான்சிஸ்ஸோட கனக்ட் பண்ணிப் பாத்துருப்பியே.

ஆமா, நீங்க குடிப்பீங்கன்னு நெனச்சேன். எப்டி தத்ரூபமா காது மடல் சூடாகுது, உள்ள ஒரு ஆவி எழுது, மூளை நரம்புகள் பட்பட்னு வலுவிழக்குதுன்னு எழுதியிருக்கீங்க.

மனப்பாடமே பண்ணிட்டியா?. நான் இருமலுக்கு கிளைக்கோடின் காஃப் சிரப் குடிச்சாலே மறுநாள் மப்படிச்சுட்டு கெடப்பேன். என்னப் போய் லிக்கர் குடிப்பேன்னு நெனச்சியா நீ? எல்லா அனுபவத்தையும் எழுத்தாளன் அனுபவிச்சு பாத்து தான் எழுதனும்னா அவனுக்கு ஒரு வாழ்நாள் போதாது, அருணா. மத்தவங்க சொல்லிக்கேட்டது, அப்றம் கற்பனையில அவன் ரொம்பதூரம் போக முடியும். நான் பாக்காத சைபீரியப் பனியையும், சஹாராவையும் கூட எழுத முடிஞ்சாதான் நான் எழுத்தாளன். சரி, ஃப்ரான்சிஸ் ப்ராஸ்டிடியூட் கிட்ட போவானே, அப்ப என்ன நெனச்சே?

சே சே, அப்டி நெனக்கல.

சரி, இப்ப புரிஞ்சுதா. இனிமே இப்டி சில்லி கற்பனயெல்லாம் பண்ணாத. அடிக்கோடு போட்டதுல அந்த பேஜ் ஓட்ட விழுந்துருக்கு. அவ்ளோ ஆத்திரமா?

ம்ம்… எனக்கு பயங்கர கோவம் வரும்.

அருணா, நாம புருஷன் பொண்டாட்டி மாதிரி ஆயிட்டோம்.

எப்டி சொல்றீங்க?

சண்ட போட ஆரம்பிச்சுட்டோம்.

சிரித்து பேசிக்கொண்டே வந்துவிட்டோம். குளக்கரை அமைதியாக நிச்சலனமாக இருந்தது. அவருக்கு அச்சூழல் பிடித்திருந்தது. மிகவும் ரசித்தார். இருவரும் பேச ஆரம்பித்தோம். பேசி புரிந்துகொள்ளவோ, அறிந்துகொள்ளவோ முயலாமல் தோன்றியதையெல்லாம் பேசினோம். அதில் பரவசமும், உணர்ச்சியும்தான் மேலோங்கியிருந்தன. நீ என்னை முதன்முதலில் பார்த்தபோது என்ன நினைத்தாய்? அந்தக் காதலின் தளிர் எப்போது முளைவிட்டது என்று அறிந்துகொள்ளும் பரவசத்தில் இருவருமே இருந்தோம்.

பையிலிருந்து டைரி ஒன்றை எடுத்தார். ” ஒன்ன வந்து மொதமொதல்ல பாத்துட்டு போனதுக்கப்பறம் எழுதுன கவிதைகள் இதுல இருக்கு’’.

எங்க காட்டுங்க? பப்ளிஷ் பண்ணக் குடுக்கலயா?

சீ, இது மோர் பர்சனல்டி. படிச்சு பாரு.

லெட்டரே கவித்துவமா எழுதுறீங்க. டெய்லி ஒண்ணு. எத்தன பேஜஸ். எப்டி இவ்ளோ எழுதுறீங்க? நான் ஒங்களுக்கு எழுத எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? நிறய நேரம் மோட்டுவளய பாப்பேன். ஒண்ணும் வர மாட்டேங்குது.

நீ தோண்றத எழுது, அருணா. ஆனா இன்லேண்டில மட்டும் எழுதாத. கடுப்பாயிடுவேன்.

ஆனா பரீட்சை சமயம், அசைன்மெண்ட் இருந்தா கம்மியாதான் எழுதுவேன்.

லெட்டெர் எப்ப படிப்ப?

மதியம் வந்ததும் படிப்பேன். அப்றம் சாயந்தரம் வந்தோன்ன. அப்றம் நைட் படுக்கப் போறதுக்கு முந்தி.

கவிதை காட்டினார். அதில் சில வரிகள்…

’மழையீரம் கொண்டுவந்து என் வீட்டில் குடிவைப்பேன்

தளிரில்லா என் வீட்டில் விதையெல்லாம் முளையாகும்.’

இது எத சொல்லவருது?

யோசி.

புரியல.

அன்பில்லாத ஒரு வீடு, உன் அன்பு என்னும் மழையீரம் வந்தபிறகு எல்லாம் தளிர்த்துவிட்டது. புரிஞ்சுதா?

இப்ப புரியுது. அடுத்த கவிதை.?

படித்துக்காட்ட வாகாக மிக அருகே வந்து அமர்ந்து கொண்டார். எனக்கு படபடவென்று இருந்தது. ஆனால் உள்ளே குதூகலம், ஒரு கிளர்ச்சி.

’அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்தபடியிருக்கிறேன்.

வெகு நளினமான ஒரு கழுத்துச்சொடுக்கலுடன், சரிந்த இமைகளுடன்

சூழல் பற்றிய இயல்பான எச்சரிக்கையுடன்

ஒரு சிறு குருவி போல் அமர்ந்திருக்கிறாள்.

தான் வெறும் ஒரு பெண் மட்டுமல்ல என்பதுபோல…’

நான் மௌனமாக இருந்தேன்.

புடிச்சிருக்கா அருணா?

‘எனக்கு புடிக்கல’, டைரியைத் தள்ளிவிட்டேன்.

ஏன் அருணா?

அமைதி காத்தேன். ’என் சக்கரக்குட்டில்ல, செல்லக் கண்ணம்மால்ல. ப்ளீஸ் சொல்லுடி’. கையைப் பற்றிக் கொண்டார்.

’’கவித இப்டியா எழுதுவாங்க. நிலா, தாமரப்பூன்னு எப்டியெல்லாம் வர்ணிச்சு எழுதுவாங்க.’’

’அது பழய பாணி அருணா. அதெல்லாம் யூஸ் பண்ணி தேஞ்சு போன உவமைகள். மாடர்ன் பொயட்ரில புது இமேஜஸ் தான் வச்சு எழுதணும். . ஒனக்கு குருவி புடிக்கும்ல. அத நீ கூர்ந்து கவனிச்சிருக்கியா? அது ஒரு சூழல்ல அவ்ளோ இயல்பா, தன்னிச்சையா, இயற்கையான அசைவுகளோட இருக்குற அதே சமயம் ஒரு வெளித் தெரியாத சின்ன எச்சரிக்கை உணர்வோடயும் இருக்கும். எந்த எஸ்ஸென்சதான் நான் ஒன்னோட பொருத்திப் பாக்குறேன். இப்ப கோவம் போச்சா?

’’ம்ம்ம்… குருவின்னு எழுதுனதால தப்பிச்சீங்க, கருங்குருவின்னு எழுதியிருந்தா அப்டியே திரும்பிப்பாக்காம போயிருப்பேன்.’’

’’ராட்சசி…. ஆத்தா… நீ போனாலும் போவ…’’

இடையில் பசியில்லை. தாகமில்லை. பேச்சு… பேச்சு…பேச்சு… அவர் அப்பா, அம்மா, என் அப்பா, அம்மா பற்றி பேசினோம். அவர்களைப்போல் மட்டும் வாழக்கூடாது என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டோம். பிறகு சுந்தர ராமசாமி, ஆற்றூர் பற்றி சொல்லி அவர்கள் இருவரிடமும் எங்கள் காதலை தெரிவித்து விட்டதை சொன்னார். அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ந்ததையும் தெரிவித்தார்.

என்ன அவசரம், ஏன் இப்பவே சொன்னீங்க?

ஏன்? அவங்ககிட்ட நான் எதையுமே மறச்சதில்ல. அதுவும் ஆற்றூர என் அப்பா ஸ்தானத்துல வச்சுருக்கேன் அருணா. அப்பதான் ஆற்றூர் வொய்ஃப் எனக்கு பொண்ணு பாக்கறத நிறுத்துவாங்க.

அதான் போய் பாத்தீங்களே. என்ன பாக்கவரதுக்கு முந்தி. ஒரு நம்பூதிரிப் பொண்ணு, டீச்சரா இருக்குறவ. நல்ல கலரா, அழகா இருந்தான்னு வேற சொன்னீங்க. அவளயே கட்டிக்க வேண்டிதுதானே?

என்ன பண்றது? ஆண்டவன் எனக்குன்னு ஒரு தஞ்சாவூர் முண்டக்கண்ணிய தானெ வச்சிருக்கான். கட்டிப் போட்டுட்டாளே.

சமாளிக்காதீங்க. நான் அவ்வளவு கலர் இல்லல்ல. எப்டி புடிச்சுது ஒங்களுக்கு? எல்லா மலையாளிஸும் நல்லா செவப்பா இருப்பாங்க தானே. எங்க காலேஜ்ல கூட மலையாளி ஒருத்தி இருக்கா, பிந்து பணிக்கர்னு. அப்டி இருப்பா செவ செவன்னு.

எல்லாரும் அப்டி இல்ல, அருணா. பாதி பேர் அப்டி இருப்பாங்க. அங்கயும் மாநிறம், கறுப்பு எல்லாம் உண்டு.

சரி, எப்டி பிடிச்சுது?

இது என்ன கேள்வி? வெவரம் தெரிஞ்சப்பலேர்ந்தே எனக்கு செவப்பு அவ்வளவா புடிக்காது. கண்ல அடிக்குற மாதிரி தோணும். மாநிறம்தான் அழகோட நெறம். அதுலதான் ஸ்கின்னோட மென்மை தெரியும்.அதுல எவ்ளோ ஷேட்ஸ் இருக்கு, மண்ணின் நெறம் அது, தேக்கு மர கலர், செப்பு சிற்பம், வெண்கலம், தாமிரம், தேன் யோசிச்சு பாரு. மாந்தளிரின் நிறம். மாமை நிறம்னு கபிலனும், கம்பனும் மாஞ்சு, மாஞ்சு எழுதியிருக்காங்க. பெயிண்டிங்ல கூட பழுப்பு நெறத்த அதிகமா வரையுற க்ளாட் மோனே தான் எனக்குப் பிடிக்கும். கறுப்பும் பிடிக்கும்.

நல்லா பேசி பேசி என்ன கவுத்துட்டீங்க.

நீ மட்டும் என்னவாம். மொதநாள் வந்து பாத்த அன்னிக்கு தலய தலய ஆட்டி, பேசி, கண்ண சொழட்டி என்ன கவுத்துட்ட. அன்னிக்கு ஒன்னோட
மொகத்தையும் கழுத்தையும்தான் நான் பாத்துட்டே இருந்தேன். நீ பேசுனது எதுவுமே என் மண்டைக்குள்ள போகல.

அய்யே, சீ…

அவர் இரண்டு மேங்கோ ஃப்ரூட்டி வாங்கி வந்திருந்தார். இடையில் அதை மட்டும் குடித்தோம்.

சரி, கெளம்பலாம். அஞ்சு மணியாச்சு. இருட்டுனப்றம் போனா மாமி கேப்பா.

இருவரும் எழுந்து கிளம்பினோம். காலையில் நடையில் இருந்த வேகம் இப்போது இல்லை இருவருக்கும். ஒரு பெரிய மரத்தடியருகே வரும்போது எங்களுக்கு முன்னால் இரு அணில்கள் பொத் பொத்தென்று விழுந்து பரபரப்பாக ஓடின. இருவரும் திடுக்கிட்டு நின்றோம். சட்டென்று என்னை இழுத்து அணைத்துக் கொண்டார். முத்தமிட்டார்.

கொஞ்சநேரம் சூழல் மறந்தது. சுயநினைவே இல்லை. ஏதோ அணிலின் அரவம் கேட்டு விடுவித்துக் கொண்டோம். பிறகு அதிகம் பேசாமல் புன்சிரிப்புடன் நடந்துவந்தோம். நான் விடைபெற்றுக் கொண்டேன்.

கடிதங்கள் தினமும் வரும். சிலசமயம் ஒரே நாளில் இரண்டு கடிதங்களும் வந்ததுண்டு. எல்லாவற்றிலும் உச்சகட்ட உணர்ச்சிநிலைகள். அப்போது ஜெயன் படைப்பாக்கத்தின் உச்சத்தில் இருந்தார். ஒருபுறம் ஷெல்லி, பைரன், கீட்ஸ் எல்லாம் தோற்கும் அளவு ரொமாண்டிக் கற்பனைகள், இன்னொரு புறம் அறிவார்ந்த விவாதங்கள் , பகிர்தல்கள் என கடிதங்கள் எனக்கு மிகுந்த பரவசத்தை தந்துகொண்டிருந்தன. அப்போது அவர் அண்டோனியோ கிராம்ஷி என்ற இத்தாலிய மார்க்ஸிய அறிஞரையும், எரிக் ஃப்ராமையும் ஒரே சமயம் வாசித்துக் கொண்டிருந்தார்.

கிராம்ஷி முசோலினியால் சிறையில் இடப்பட்டு அவர் அங்கே எழுதிய சிறைக் குறிப்புகள்[ Prison notebooks] பிறகு புத்தகமாக வெளிவந்தது. அதை அப்போது ஜெயன் படித்துக்கொண்டிருந்தார். அதில்தான் ஆதிக்க கருத்தாண்மை [Hegemony] என்ற கருதுகோளை முன்வைக்கிறார் கிராம்ஷி. கலாச்சார, சித்தாந்த, மதம் சார்ந்த கருத்துகள் ஒரு பெரிய அதிகாரமாகத் திரண்டு மக்களை அடிமைப் படுத்த முடியும். காலனியாதிக்கம், மதம் சார்ந்த அரசுகள், சர்வாதிகாரம் என்று பல உதாரணங்கள் தந்து அதை நிறுவுகிறார் கிராம்ஷி.

1855385058.01._sclzzzzzzz_sx500_.jpg?w=3

எரிக் ஃப்ராமின் ‘ஆர்ட் ஆஃப் லவிங்’[Art of loving] என்ற புத்தகமும் அப்போது ஜெயனை மிகவும் வசீகரித்திருந்தது. அதில் இருவர் காதலில் விழும்போது ஏற்படும் அந்த உணர்ச்சிகரமான உச்சகட்ட காதலை எப்படி தொடர்ந்து வரும் காலங்களிலும் நீட்டித்து கொண்டு செல்லமுடியும் என்பதை ஃப்ராம் விரிவாக ஆராய்கிறார். இருமனங்கள் இணைய விழையும் உணர்வென்பதே மனிதனில் வரும் ஆதி உணர்வுகளில் ஒன்று என்கிறார் ஃப்ராம். மனிதனின் இருத்தலியல் பிரச்னையின் முக்கிய அம்சமான வெறுமை, தனிமையுணர்வுகளை வெல்லும் ஒரே தர்க்கரீதியான தீர்வு அன்பிலும் காதலிலுமே உள்ளது. தன் துணைமேல் கொள்ளும் அக்கறை, மரியாதை, பொறுப்பு, அறிவு இவற்றினாலேயே காதலை நீண்டகாலம் தக்கவைக்கமுடியும் என்கிறார். அது ஒரு இடைவிடாத பயிற்சி. One should culture or cultivate love என்று குறிப்பிடுகிறார்.

அதில் பற்றியெரியும் உணர்ச்சிகரத்துக்கு இடமில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அது நேர் எதிர்நிலைக்கும் செல்லும். காதலிக்கும் ஆரம்ப நாட்களில் அது உணர்ச்சிகரமானதுதான். முதன்முதலாக இன்னொரு மனதை, ஆளுமையை நுணுகி அறிவதன் பரவசம். நாள் போகப் போக அது சமனப்படவேண்டும். சுயநலவாதிகளால் ஒருபோதும் காதலிக்க முடியாது. தன்னைப் பற்றியே சிந்திப்பவர்களுக்கும் அது வாய்க்காது. காதல் ஒருவித சமர்ப்பணமும் கூட. உன் அகந்தையை, அறிவை, தன்னிலையை ஒருவரிடமாவது கழற்றி வைக்க வேண்டும் என்கிறார் ஃப்ராம். ஒருவரிடம் காதல்கொள்ள நீ ஒட்டுமொத்த மனிதகுலத்தையே நேசிக்க வேண்டும். இரண்டும் வேறு, வேறல்ல.

ஜெயன் அந்த புத்தகத்தையே மனனம் செய்திருந்தார். அதில் உள்ள நிறைய வரிகளை எனக்கு எழுதுவார். மேற்கையே இருத்தலியல் சிந்தனைகளும், தனிமனித வாதமும், உறவுகள் பற்றிய அவநம்பிக்கைவாதமும் ஆண்டு கொண்டிருந்த போது எரிக் ஃப்ராம் இப்படியொரு புத்தகத்தை எழுதினார். எனக்கு படிக்க படிக்க பரவசமாக இருந்தது. இது என்ன? இப்படியொரு புத்தகம்? காதலின் பைபிள் போல.

மறுவாரம் நான் ஊர்செல்ல வேண்டியிருந்தது. ஜெயனுக்கு எழுதி தெரிவித்துவிட்டு சென்றேன். வீட்டின் நிலைமை மனதில் தீயை வாரி இறைக்கும்படி இருந்தது. வழக்கமான அப்பா, அம்மா சண்டை ஒருபுறம். தம்பிக்கு பனிரெண்டாம் வகுப்பு அரசுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் இரு வருடங்களுமே ஒழுங்காக படிக்கவில்லை. டியூஷன் ஒழுங்காக செல்லாமல், பள்ளியில் நடைமுறை பாடத்தேர்வுகள் , திருப்புதல் தேர்வுகள் எதற்கும் செல்லாமல் நண்பர்களுடன் திரிந்துகொண்டிருந்தான். பட்டுக்கோட்டையில் ஒளிந்து திரிய அவனுக்கு ஏகப்பட்ட மறைவிடங்கள். அப்பா உச்சகட்ட கோபத்திலும் அவனைப் பற்றிய கவலையிலும் இருந்தார். நான் அவனுக்கு அறிவுரை கூறினேன். அவன் அதை பொருட்படுத்தவே இல்லை. இம்முறை அரசுத் தேர்வு எழுதப்போவதில்லை என்று என்னிடம் தெரிவித்தான். நான் அவனுக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தேன். பத்தாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் ராங்க் எடுத்தவன் எப்படி இப்படி அதல பாதாளத்துக்கு போனான் என்று எனக்கு புரியவில்லை.

அவனிடம் வேறு விஷயங்கள் பேசும்போது எதேச்சையாக ஜெயனைப் பற்றி தெரிவித்தேன். சும்மா போகிறபோக்கில் ஜெயமோகன் என்று ஒரு எழுத்தாளர் ,எங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். கடிதங்கள் எழுதுவோம் என்று மட்டும் சொன்னேன். எங்கு இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டான். முதலில் பாலக்கோட்டில் இருந்தார், இப்போது தருமபுரிக்கு மாறுதல் கிடைத்து அந்த தொலைபேசி நிலையத்தில் வேலை பார்ப்பதாகக் கூறினேன். ஏன் அதைச் சொன்னேன் என்று இப்போது யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த திரில்லை நான் அப்போது விரும்பியிருக்கலாம்.

வீட்டிலிருந்து நான் மதுரை திரும்பி இருவாரங்கள் ஓடிவிட்டன. ஜெயனிடமிருந்து கடிதங்கள் தினம் ஒன்றுவீதம் வந்துகொண்டிருந்தன. நான் சிலசமயம் சிறிய கடிதம் எழுதினால் அங்கிருந்து விஷம் தோய்த்த அம்பாக ஒரு கடிதம் வரும். உனக்கு என்மேல் காதலே இல்லை என்று. மறுநாளே மனமுருகி மன்றாடி ஒரு கடிதம் எழுதுவார். எனக்கு இந்த உணர்ச்சி உச்சநிலைகளும் கொந்தளிப்புகளுமான ஒரு மனிதனை எப்படி கையாள்வது என்று தோன்றும். மலைத்து விடுவேன் சிலசமயம். இடையில் ஜெயன் ஒருமுறை விடுதி தொலைபேசி இணைப்புக்கு அழைத்தார். பேசிவிட்டு இனிமேல் இதில் கூப்பிட வேண்டாம் என்றேன். அதிக நேரம் பேசுவதால் வீணாக யாருக்காவது சந்தேகம் வரும். அதனால் வேண்டாம் என்றேன். ஏதோ பரீட்சை வேறு நடந்து கொண்டிருந்தது.

பரீட்சை என்ற ஒரு ஆயுதம் போதும். ஜெயன் சரணடைந்து விடுவார். நான் இந்த நான்கு வருடத்தில் பாடங்களில் அதிகமும் A கிரேட் தான் [90%] வாங்கியிருந்தேன் . சிலபாடங்களில் B. [80%] . C கிரேட் மதிப்பு குறைவு. F எடுத்தால் திரும்ப மறுபடி கோர்ஸ் படிக்கவேண்டும் என்று புளுகி வைத்திருந்தேன். அது திருமணத்தை தாமதப்படுத்தும் என்பதால் சொல்பேச்சு கேட்பார்.

திடீரென்று ஒருநாள் அப்பாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. பதறிப் போனேன். அப்பா திருச்சியில் படிக்கும்போது இருமுறை மட்டுமே தொலைபேசியில் அழைத்திருக்கிறார். மிக அவசரமான விஷயத்திற்கு. மதுரை கல்லூரி வந்தபிறகு அதுவும் இல்லை. ஆகவே பயத்துடன் எடுத்தேன்.

’’பாப்பா, தம்பியக் காணல. வீட்டவிட்டு போயிட்டான். நாள மறுநாள் கெமிஸ்ட்ரி பரீட்ச. சரியா அவன் படிக்கலன்னு அந்த டுயூஷன் சார் கம்ப்ளயிண்ட் பண்ணியிருந்தார். இப்ப எங்கன்னு தெரியல. பீரோல இருந்த கொஞ்ச ரூபாய எடுத்துகிட்டு போயிட்டான். அம்மா அழுது பொலம்பிகிட்டு இருக்கா. எனக்கு ஒண்ணும் புரியலப்பா’’ என்றார் அப்பா.

எனக்கு திக்கென்றது. எனக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை. ’’கவலப் படாதீங்க, அப்பா. அவன் எக்ஸாம் எழுதாம இருக்க தான் எங்காவது போயிருப்பான். மாமாகிட்ட சொல்லி ரெண்டுபேருமா தேடிப் பாருங்க. அம்மாவ கறம்பக்குடில அத்தைகிட்ட விட்டுட்டு போங்க’’ என்றேன்.

ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக இருந்தது. குழப்பத்துடன் தான் மறுநாள் கல்லூரி சென்றேன். காலையில் சீட் டெக்னாலஜி [seed technology] ப்ராக்டிகல்ஸ். அந்த பேராசிரியர் நிரம்ப கண்டிப்பானவர். சிடுமூஞ்சி என்று பேர் வைத்திருந்தோம். பதினொரு மணி இருக்கும். எனக்கு தருமபுரியிலிருந்து ட்ரங்க் கால் என்று தகவல் சொன்னார் ஒரு அட்டெண்டர். என்னை சிறிய முறைப்புடனே போக அனுமதித்தார் அந்த ஆசிரியர்.

நான் சிறிது கோபத்துடனும், குழப்பத்துடனும் ஃபோனை எடுத்தேன்.

ஹலோ, அருணா. நாந்தான் ஜெயமோகன்.

ஒங்களுக்கு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்? காலேஜுக்கு ஃபோன் பண்ணாதீங்கன்னு.

புத்திகெட்டவளே, பேசிட்டே போகாத. சொல்றதக் கேளு. ஒந்தம்பி என்னத் தேடி தருமபுரி வந்துருக்கான். காணலன்னு நீ பதட்டமா இருப்பன்னுதான் கூப்பிட்டேன், அருணா.

சாரி, ஜெயன். நிஜமாவே மனசே சரியில்ல நேத்திலேர்ந்து. கடவுளே, எப்டி கண்டுபிடிச்சு வந்தான்?

நீ தர்மபுரி டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் ந்னு அவண்ட்ட சொல்லியிருந்தியாம். ஊர்ல யாரக் கேட்டாலும் காமிச்சு குடுப்பாங்க.

இப்ப எங்க இருக்கான்?

என் ரூமில தான். நான் ஆஃபீஸ் வந்துட்டேன்.

அய்யோ, நான் போட்ட லெட்டர்ஸ் லாம் ஒழுங்கா பூட்டிட்டு வந்தீங்களா? ஆராய்ச்சி பண்ணுவான். ஈசியா கண்டுபிடிச்சுடுவான்.

பெட்டில வச்சு பூட்டி சாவிய எடுத்துட்டு தான் வந்துருக்கேன். போதுமா? ஆனா நாம லவ் பண்றத அவன் கெஸ் பண்ணிட்டாண்டி.

அய்யோ, எப்டி?

ஒன்னப் பத்தி பேசும்போது என் மூஞ்சப் பாத்து கண்டுபிடிக்கிறதா கஷ்டம்.

மாட்டிக்க போறோம். அவன நம்ப முடியாது,ஜெயன்.

சரி, இன்னக்கி நைட் கிளம்பி காலைல அவன மதுர கூட்டிட்டு வரேன். அவண்ட்ட பேசிட்டேன். ஒத்துக்கிட்டான்.

சரி, வாங்க. வக்கட்டுமா?

இரு. நீ ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல வந்து நில்லு. ஒந்தம்பிய பட்டுக்கோட்ட பஸ்ல ஏத்தி விட்டுட்டு நாம ரெண்டுபேரும் மீனாட்சி கோவில் போவோம். வேற திருப்பரங்குன்றம் எங்காவது போலாம்.

ஒண்ணும் புரியலயா? அவன் அப்டியே வேற எங்காவது போய்டுவான். நானே கொண்டுபோய் வீட்ல ஒப்படைக்கணும் அவன.

என் கண்ணுக்குட்டிய பாத்து ரொம்ப நேரம் பேசலாம்னு நெனச்சேனே.

அப்றம், அடுத்தவாரம். சரியா, இப்ப வைக்கிறேன்.

img820.jpg?w=900

வைத்து விட்டேன். அந்த ஃபோன் இணைப்பு கொடுப்பவரிடமே ஒரு கால் புக் செய்யச் சொன்னேன். பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு. ஹெச். எம். லைனில் வந்தார். நான் இன்னாரின் பெண் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தம்பி லெனின் கண்ணன் தருமபுரியில் இருக்கிறான் என்றும் நாளை நான் அவனை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை வருவதாகவும் இந்த தகவலை அப்பாவிடம் மறக்காமல் தெரிவிக்குமாறும் சொன்னேன். அவருக்கும் அவன் காணாமல் போன விஷயம் தெரிந்திருந்தது. மறக்காமல் தெரிவிக்கிறேன் என்றார்.

– தொடரும்…

***

https://arunmozhinangaij.wordpress.com/2022/06/01/நிலத்தினும்-பெரிதே-வானின/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவரின் காதல் வாழ்க்கை சுவாரஸ்யமாகத்தான் இருக்கு, அடுத்த பகுதியையும் போடவும்.......!  😁

நன்றி ஏராளன் .....! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, suvy said:

அவரின் காதல் வாழ்க்கை சுவாரஸ்யமாகத்தான் இருக்கு, அடுத்த பகுதியையும் போடவும்.......!  😁

நன்றி ஏராளன் .....! 

உங்கள் கதைகளை வைத்துப்பார்த்தால் பல பூக்களை காதலித்துவிட்டுதான் கடைசியில் மாமன் மகளை கட்டியிருக்கின்றீர்கள்😂

ஏராளன் கிருபனுக்கு போட்டியாக வந்துவிட்டார்😎

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 2

nithya-jeyan.jpg?w=469

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு -1 வாசிக்க…

மறுநாள் சனிக்கிழமை. காலையில் முன்னதாகவே போய் ஸ்டேஷனில் காத்திருந்தேன். இருவரும் வந்தார்கள். ஜெயன் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார். தம்பி இறுகிய முகத்துடன் வந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு கண் கலங்கியது. அவன் முன்னே நடக்க நாங்கள் இருவரும் பின்னே நடந்தோம். ஜெயன் ஒரு கடிதத்தை என் கையில் திணித்தார். நான் அவன் பார்க்கும் முன்பு கைப்பையில் ஒளித்தேன். அவன் பார்த்திருப்பான். ஜெயன் கையை பற்றிக்கொண்டார். நான் தம்பியை கண்ணால் ஜாடை காண்பித்து விலக்கிக் கொண்டேன்.

ஒரு டீக்கடையில் தேனீர் குடித்தோம். பிறகு நான் மெல்ல அவனை பெரியார் பஸ் நிலையம் நோக்கி கொண்டு செல்ல முயன்றேன். அவன் அப்போது முரண்டு பிடித்தான். அங்கே வைத்து தான் பட்டுக்கோட்டை வர முடியாது என்றான். நான் பலவித சமாதானம் கூறினேன். நான் அப்பாவை சமாதானம் செய்துவிடுவேன் என்றும், ஒன்றுக்கும் அவன் பயப்பட வேண்டாம் , பரீட்சை வரும் அக்டோபரில் எழுதிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தேன். கண்கலங்கி நான் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்ததை சிலர் கவனிக்க ஆரம்பித்தனர். ஜெயன் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவர் முகம் கோபம் கொண்டிருந்தது. அவனது பிடிவாதத்தால் அவர் பொறுமையிழந்திருந்தார்.

நான் பேசிக் கொண்டிருக்கும்போதே சாலையில் நின்று கிளம்பிய ஒரு பேருந்தில் ஓடிச்சென்று ஏறிவிட்டான் என் தம்பி. நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன். ஜெயன் அருகில் வந்தார்.

அருணா, விடு, அவன் கைல காசு இருக்குற வரைக்கும் சுத்துவான். அதுக்கப்பறம் தானா வீடு வந்து சேர்வான்.

அவனுக்கு பணம் எதும் கொடுத்தீங்களா?

ஆமா, கேட்டான். கொடுத்தேன். மொத மொத மச்சான்கிட்ட கேக்குறான். இல்லன்னு சொல்லமுடியுமா? கருமின்னு நெனச்சுடுவானே.

’’மச்சான், ஆளப் பாரு’’, எனக்கு ஒரே சமயம் ஆத்திரமாகவும், அவர் முகத்தைப் பார்த்து சிரிப்பாகவும் வந்தது.

 

இப்ப என்ன பண்றது? அப்பா, அம்மா ரொம்ப எதிர்பார்த்திருப்பாங்க.

ஒண்ணும் இல்ல. போய் விஷயத்த சொல்லு. புரிஞ்சிப்பாங்க. சரி, வா, நாம மீனாட்சி கோவில் போகலாம்.

கோவில் எப்போதும் போல கூட்டமும், கூச்சலுமாக இருந்தது. எனக்கு மிகப் பழகிய இடங்கள், பிரகாரங்கள், சன்னதிகள், மீனாட்சி. அவளிடம் மனமுருகி தம்பிக்காக வேண்டிக் கொண்டேன். அவன் மனம் மாறவேண்டும் என்று. பிறகு எங்கள் இருவருக்காகவும். திருமணம் தடையின்றி நடக்க அவள்தான் அருள்புரிய வேண்டும் என்றும். ஜெயனின் அம்மாவையும் நினைத்துக் கொண்டு அவரின் ஆசியையும் மானசீகமாக வேண்டினேன்.

பிறகு தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சூழல் பற்றிய பிரக்ஞையே இல்லை. ஜெயன் என்னை வேறு வேறு விஷயங்கள் பேசி சிரிக்கவைத்தார். அந்த வருத்தமான மனநிலையிலிருந்து என்னை வெளிக்கொண்டு வந்தார். அப்போது நான் உடுத்தியிருந்த மஞ்சள் நிறத்தில் மெரூன் பார்டர் இட்ட காட்டன் புடவை ஜெயனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த அழகிய மஞ்சள் சேலையில் நெருங்கத் தொடுத்த மல்லிகைப் பூ வைத்து, சிறிய தீற்றலாக வைத்த குங்கும, திருநீற்று கீற்றலில் நான் அழகாக இருப்பதாக ஜெயன் கூறினார். திருமணத்துக்குப் பிறகும் அவருக்கு பிடிக்கும் என்று அதை அடிக்கடி உடுத்துவேன்.

மாலைக்குள் நான் பட்டுக்கோட்டை செல்லவேண்டும் என்பதால் கிளம்ப ஆயத்தமானேன். பட்டுக்கோட்டை வரை தானும் வருவதாக கூறினார். நானும் மறுக்கவில்லை. மாறி, மாறி பேருந்துகளில் போகத் தீர்மானித்தோம். மதுரையிலிருந்து திருப்பத்தூர்[ இது வேலூர் திருப்பத்தூர் அல்ல]. திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி. காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை. புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை.

கடைசி பஸ்சில் மட்டும் ஒன்றாக உட்கார்ந்து பயணம் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டேன். பட்டுக்கோட்டை பயணிகள் யாராவது அப்பாவுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் வம்பு என்று. இருவரும் கிளம்பினோம்.

தாகம் தொண்டையை வறட்டியதால் சர்பத் குடிக்கலாம் என்றார். நான் எனக்குப் பிடித்த ஆரஞ்சு எசென்ஸ் விட்ட எலுமிச்சை ஜூஸை ஐஸ் கட்டிகள் மிதக்க பெரிய கண்ணாடி டம்ளரில் கற்பனை செய்து ஆவலுடன் கடையை நெருங்கினேன். கடையை நெருங்கியதும் ஜெயன் ”ரெண்டு ஜூஸ் உப்பு போட்டு. ப்ளெயின்” என்றார்.

எனக்கு சிறிய அதிர்ச்சி. உப்பு போட்டு அதை குடிப்பார்கள் என்றே எனக்குத் தெரியாது. முதல் முதலாக எப்படி மறுப்பது? இந்த சிறுபத்திரிகைக் காரர்கள் எல்லாம் மாற்று ரசனை கொண்டவர்கள் போலிருக்கிறது. பொதுச் சமூகம் என்ன விரும்புகிறதோ அதை விரும்ப மாட்டார்கள் போல என்று நினைத்துக்கொண்டு மல்லுக்கட்டி மருந்து மாதிரி குடித்துவைத்தேன்.

whatsapp-image-2022-04-21-at-10.21.57-pm

பஸ்ஸில் ஏறி அமர்ந்து டிக்கெட் எடுத்து சூழல் மறந்து பேசிக் கொண்டே சென்றோம். யாரும் எங்கள் பார்வைப் புலத்தில் படவில்லை. நாங்கள் காதலர்கள் என்பதை பேருந்தே அறிந்திருக்கும். அவ்வளவு கூட்டமில்லை. வெயிலால் பாதிப்பேர் உறக்கத்தில் இருந்தார்கள். கையைப் பற்றிக்கோர்த்துக் கொள்வது, ஏதாவது ரகசியமாக சொல்வதுபோல் காதருகே வந்து மூக்கால் கன்னத்தை உரசுவது, தோள்மீது கைபோட்டுக் கொள்வது என்று ஒரே கிளர்ச்சியுடன் அந்தப் பயணம் இருந்தது. பிற்பாடு அவர் எழுதிய ’அந்த முகில், இந்தமுகில்’ குறுநாவலில் வரும் ராஜமுந்திரிவரை உள்ள பயணத்தை இதன் சாயலுடன் ஜெயன் அமைத்திருப்பார்.

காரைக்குடியில் மதிய சாப்பாட்டுக்காக ஹோட்டல் தேடிச் சென்றோம். சைவ ஹோட்டல். கைகழுவி, முகம் கழுவி மேஜையில் அமர்ந்தோம். பாட்டு ஒன்று ஒலித்தது. ’வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே’ சலங்கை ஒலியில் எனக்குப் பிடித்த எஸ்.பி.பியும் ஷைலஜாவும் பாடியது. ’எனக்கு புடிச்ச பாட்டு’ என்றேன். ’எனக்கு எஸ்.பி.பிய அவ்வளவா புடிக்காது, குரல்ல கிம்மிக்ஸ் பண்ணுவார்’, என்றார். ’என்ன இது, இந்த தீவிர இலக்கியவாதிகளுடன் வாழக் கொஞ்சம் கஷ்டம் தான் போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு பாட்டுகூட அவரோடது புடிக்காதா ஒங்களுக்கு?

இந்த சிரிப்பு, கிம்மிக்ஸ் இல்லாத ஆரம்ப கால பாட்டு புடிக்கும்.

’அய்யோ, அந்த சிரிப்புக்குத் தானே நாங்கள் காத்துக் கிடப்போம்’ என்று வருத்தத்துடன் நினைத்துக் கொண்டேன். ’சரி, அருண்மொழி, உன் காதலுக்கு முதல் பலி எஸ்.பி.பி தான் போலிருக்கிறது. மனதைத் தேற்றிக்கொள்’ என்று சொல்லிக் கொண்டேன்.

யேசுதாஸ் பிடிக்குமா?

ம்ம்… ரொம்ப.

அப்பாடா. யேசுதாஸ் பிழைத்துக் கொண்டார்.

வெளியில் வந்து பிஞ்சு வெள்ளரியை பார்த்ததும் எனக்கு ஆவல் வந்தது. எப்போது ஊருக்குப் போனாலும் வாங்கிப் போவேன். பஸ்சை சுற்றிவந்து ஜன்னலோரம் விற்பார்கள். தீவிர இலக்கிய ஆட்களின் பட்டியலில் வெள்ளரிக்காய் விலக்கப் பட்ட காயாக இருந்தால். எதற்கும் கேட்டு விடுவோம். “வெள்ளரிக்காய் அம்மாவுக்கு பிடிக்கும். வாங்கட்டுமா?” என்றேன்.

“ம்ம்.. வாங்கு . எனக்கும் பிடிக்கும்.” என்றார்.

யோசித்துக் கொண்டேன். திருமணத்துக்கு முன்பு வரை வாலைச் சுருட்டி, அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். பட்டுக்கோட்டையில் அறை எடுத்து அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் ஊர்போவதாக சொன்னார். முதல்நாள் தம்பியுடன் ரயிலில் வந்தபோது அவன் இடையில் எங்காவது இறங்கி சென்றுவிட்டால் என்ன செய்வது என்று சரியாகத் தூங்கவில்லை என்று தெரிவித்தார். எனக்கு பாவமாக இருந்தது.
புதுக்கோட்டை சென்றவுடன் நான் முன்புறம் சென்று அமர்ந்துகொண்டேன். அவர் பின்புறம் அமர்ந்து சிறிது நேரத்திலேயே உறங்கி விட்டார். பட்டுக்கோட்டை வந்ததும் இறங்கி அவரிடம் கண்களாலேயே விடைபெற்று வளவன்புரம் செல்லும் டவுன்பஸ்சில் போய் ஏறிக்கொண்டேன். வீட்டிற்கு தம்பியில்லாமல் செல்வது கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

வீட்டில் அம்மா, அப்பா, அத்தை, மாமா, பத்தூர் சித்தி, சித்தப்பா எல்லோரும் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். என்னை மட்டும் பார்த்ததும் எல்லோரும் குழம்பினர். அம்மாவின் கண் கலங்கியது. பொட்டுகூட வைத்துக் கொள்ளாமல் அம்மா முகம் அழுது, வீங்கி, வெறிச்சோடியிருந்தது. நான் சென்றவுடன் அம்மாமீது சாய்ந்து அழுதேன். அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பஸ் ஏறியதை சொன்னேன்.

’’நீ ஏன் பாப்பா அழுவுற? காசு இல்லன்னா போக்கத்தவன் தன்னால வருவான் பாரு’’ என்றார் அப்பா.

மாமா ’’அருணா, நீ அவன் தருமபுரி போயிருக்கான். மதுரையிலேர்ந்து கூட்டிட்டு வரேன்னு ஃபோன்ல சொன்னதா ஹெச்.எம் சொன்னாராமே. யார் அங்க அவனுக்கு தெரிஞ்சவுங்க?’’ என்றார்.

அவசரத்தில் ஹெச்.எம்மிடம் உளறி வகையாக மாட்டிக்கொண்டு விட்டோமே என்று தோன்றியது . இனி இதை பக்குவமாக டீல் செய்ய வேண்டும். ’’இல்ல மாமா, யாரோ அவனுக்கு தெரிஞ்ச ரைட்டர் ஒருத்தர் அங்க இருக்காராம். அதனால அவர தேடி போயிருக்கான். அவர்தான் அவன மதுர வர கூட்டிட்டு வந்து விட்டார். நான் காலைல ஸ்டேஷன்ல வச்சு பாத்தேன். அப்புறம் நான் அவன தனியா கூட்டிட்டுபோய் சமாதானம் பண்ணேன். அப்பாகிட்ட நான் சொல்லி சமரசம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லியும் கேக்காம போய் ஓடுற பஸ்ல போய் ஏறிட்டான். அவர் கூட எதிர்பாக்கல. அதிர்ச்சியாயிட்டார். அப்புறம் நீங்க போய் வீட்ல சொல்லுங்க, ஒங்க அப்பா, அம்மா எல்லோரும் எதிர்பாத்துட்டிருப்பாங்க என்றார். அவர் தருமபுரி கிளம்பினார். நான் இங்க வந்துட்டேன்’’ என்றேன்.

நான் சொன்ன இந்த பாதிகட்டுக்கதையை எல்லோரும் முழுவதும் நம்பினார்கள். எனக்கு இப்படி பொய் சொல்கிறோமே என்று குற்ற உணர்வு ஒருபுறமும், கிளுகிளுப்பு ஒரு புறமும் வந்தது. அப்புறம் வழக்கம்போல் மாறி, மாறி எல்லோரும் இதைப்பற்றியும், அவன் படிப்பில் சொதப்பியது குறித்தும், அப்பாவின் அதீத கண்டிப்பும், அம்மாவின் செல்லமும் அவனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது பற்றியும் பேசிக்கொண்டனர். ஒருவகையில் பேசிப்பேசி எளிதாக்கி அச்சூழ்நிலையை அவர்கள் கடக்கமுயல்வதை புரிந்து கொள்ளமுயன்றாலும் எனக்கு அது மிகுந்த ஆயாசத்தை தந்தது.

நான் தூக்கம் வருவதாக கூறி சாப்பிட்டுவிட்டு போய் படுத்துக் கொண்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை. மனம் முழுவதும் ஜெயன் நினைவுதான். மிக அருகே அமர்ந்து பஸ்ஸில் செய்த அந்தபயணம் தந்த கிளர்ச்சி என்னைத் தூங்கவிடவில்லை. அவர் முகம், புன்னகை, கையை வருடியபடியே அவர் பேசியவை, மூக்கால் கன்னத்தை உரசிய அந்தக் குறும்பு, வியர்வை மணம் எல்லாம் சேர்ந்து வெட்கத்தையும், புன்னகையையும் வரவழைத்தது. அவரும் இதே பட்டுக்கோட்டையில் என்னை நினைத்துக்கொண்டே தூக்கம் வராமல் என்னைப் போலவே இருப்பார் என்பதை கற்பனைசெய்து தலையணையில் குப்புற முகம் புதைத்து பிறகு எப்போதோ உறங்கிப்போனேன்.

whatsapp-image-2022-04-21-at-10.20.31-pm

மறுவாரம் மதுரையில் கல்லூரியில் தொடர்ந்து அசைன்மெண்ட்கள், சிறுதேர்வுகள் இருந்தன. சனிக்கிழமை பாதிநாள் தியரி வகுப்பு இருக்கும். வந்து சாப்பிட்டு ஒரு தூக்கம்போட்டு எழுந்தால் மாலை ஒரு திரைப்படம் ஆடிட்டோரியத்தில் இருக்கும். எல்லோரும் கண்டிப்பாக போகவேண்டும். மாமி எங்களை பத்திக் கொண்டு செல்வாள். நாசரேத், சாத்தான்குளம் தீவிர பெந்தகோஸ்து பிள்ளைகளுக்கும் விலக்கில்லை. அவர்கள் முணுமுணுத்தபடியே எங்களுடன் வருவார்கள்.

ஜெயன் அதற்கு அடுத்தவாரம் வருவதாக சொன்னார். எனக்கு ஒருநாள் முழுதும் செலவழிக்க நேரம் இல்லை. எனவே ஞாயிறு மீனாட்சி கோவிலில் சந்தித்து பேசி பிரிந்தோம். நேரம் சீக்கிரம் ஓடி விடுவதுபோல் இருக்கும். இந்த மூன்றுமணி நேரத்துக்காக அவர் ரயிலில் பயணம்செய்து வருவது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் குற்றவுணர்வையும் கொடுக்கும். ஆனால் காட்டிக் கொள்ளமாட்டேன். ஒருவாரம் விட்டு மறுவாரம் வருவதாக சொல்லிச் சென்றார். கடிதங்கள் வழக்கம்போலவே இருபுறமும் பறந்துகொண்டிருந்தன. கடிதங்களில் காதலன் பாவம் மறைந்து கணவன் பாவம் தென்பட்டது. உரிமையும் கொஞ்சலும் அடுத்தகட்டத்துக்கு சென்றுவிட்டிருந்தன. என்னை நாணிக் கண் புதைக்கச் செய்யும் வரிகள்.

திடீரென்று ஒரு நாள் ஹாஸ்டல் மீட்டிங்கின்போது எங்கள் விடுதியின் வார்டன் பெண்மணி ஒரு விஷயம் சொன்னார். ’’இனிமே ஒங்களுக்கு வரும் லெட்டர்ஸ பிரிச்சு ராண்டமா செக் பண்ணுவோம்’’ என்று. எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு வயிற்றைக் கலக்கியது. எப்படியும் அதிக எண்ணிக்கையிலும், பக்க அளவிலும் அசைன்மெண்ட்கள் போல் எனக்குதான் வந்துகொண்டிருந்ததால் நான் மாட்டி விடுவேன். நிச்சயம் அப்பாவுக்கு தெரிவித்துவிடுவார்கள். என் அப்பா வந்து வார்டனின் முன்பும், கல்லூரி டீன் முன்பும் தலைகுனிந்து என்னுடன் நிற்கும் காட்சியை கற்பனைசெய்து எனக்கு தலைசுற்றியது.

என் விடுதியிலேயே நான் ஜெயனைக் காதலிப்பதை பகிர்ந்துகொள்ளும் என்னுடைய ஒரே தோழி அனுராதாதான். அவளும் நானும், அமுதாவும் ஒரே அறைதான். அமுதா ஒழுங்கான பிள்ளை. காதல் என்பதெல்லாம் ஒழுங்கீனமானவர்கள் செய்வது என்று நினைப்பவள். அனுராதா பெங்களூரைச் சேர்ந்தவள். கன்னடம். ஆனால் தமிழ் நன்றாகப் பேசுவாள், படிப்பாள். அவள் பாட்டிவீடு தேனி அருகே உள்ள உத்தமபாளையம். அங்கு தங்கி படித்தவள்.

நான் சொல்லாமலேயே முதல் இரண்டு வாரத்தில் ஜெயனைக் காதலிப்பதை தெரிந்துகொண்டாள். என்னிடம் கேட்டாள்.

ஏய், பொண்ணே, லவ்ல இருக்கியாடி?

எப்டி கண்டுபிடிச்ச அனு?

இது பெரிய வித்தையா? ஒன் மூஞ்சப் பாத்தாலே தெரியுதே. எப்ப பாரு ட்ரீமடிச்சுட்டு இருக்க. கத்தை, கத்தயா லெட்டர்ஸ் வருது. மணிக்கணக்கா, படிக்கிற. சொல்லுடி.

ஆமா… அனு, ஒங்கிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். அவர் ரைட்டர், மலையாளி, தருமபுரில இருக்கார். நாங்க இப்போ இந்த கோர்ஸ் முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.

வீட்ல சொல்லிட்டியா?

இல்ல… சொல்லி கன்வின்ஸ் பண்ணனும்.

சரி… அதப்பத்தி இப்ப யோசிக்காத. எஞ்சாய்..

மறுநாள் நான் ஜெயனுக்கு ட்ரங்க் கால் புக் செய்து பேசினேன்.

ஹலோ, ஜெயன். நான் அருணா பேசுறேன்.

என்ன அருணா, பதட்டமா இருக்க? ஏதாவது பிரச்சனையா?

இங்க இனிமே லெட்டர்ஸ பிரிச்சு ராண்டமா செக் பண்ணப் போறாங்களாம். அனேகமா நாந்தான் மாட்டுவேன். அதுனால…

என்ன அராஜகமா இருக்கு. லெட்டர்ஸ் ஒருத்தங்களோட பிரைவஸி இல்லயா? நீங்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலயா?

நாங்க என்ன ஒங்கள மாரி தொழிற்சங்கமா வச்சுருக்கோம் போராடுறத்துக்கு. சொல்றத கேளுங்க. சின்ன கடிதம் போதும். அதுவும் டெய்லி வேண்டாம். அனுராதான்னு அட்ரஸ் போட்டு எழுதுங்க. நான் அவகிட்ட சொல்லிக்குறேன். ஃப்ரம் அட்ரஸ் ஜெயந்தின்னு போட்டு எழுதுங்க. கோட் வேர்ட்.

சே…சே… கேவலமா இருக்குடி.

காதல நம்ம சொசைட்டி கேவலமாத் தான் நெனைக்குது, ஜெயன்.

அனுவிடம் தெரிவித்தேன். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கடிதம் எழுதினார். நான் சொன்னமாதிரியே. ஆனால் ஃப்ரம் அட்ரஸ் மட்டும் மலையாள லிபியில் எழுதினார். அவள் பிரிக்காமல் என்னிடம் தந்தாள். எனக்கு ஜெயனை நினைத்து பாவமாக இருந்தது.

ஆனால் இருவாரங்களில் இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. முதுகலை படிக்கும் மாணவிகள் கடுமையாக இதை எதிர்த்து கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். ஏனெனில் அவர்களில் சிலர் காதலில் இருந்தனர். சிலர் திருமணம் முடித்து கணவனைப் பிரிந்து இங்கு விடுதியில் தங்கிப் படித்தனர்.

அடுத்த ஞாயிறு முழுநாளும் நாங்கள் காலை முதல் மாலை வரை சிட்டன்குளம் கரையில் அமர்ந்து பேசினோம். அதில் திருமணம் குறித்து ஜெயன் தீவிரத்துடன் பேசினார். நான் வழக்கம்போல் ஜோக்கடித்துக் கொண்டிருந்தேன்.

அருணா, சீரியஸா யோசிக்கணும். நீ நம்ம கல்யாணம் பத்தி என்ன ஐடியா வச்சிருக்க?

தாலி கட்டி, மால மாத்தி அப்டித்தான பண்ணுவாங்க.

அறிவுகெட்ட முண்டம், ஒழுங்கா சொல்லுடி.

எப்ப கல்யாணம் ஜெயன்?

ஒனக்கு இந்த கோர்ஸ் எப்ப முடியுது? டீடைல்ஸ் சொல்லு.

ஜூன் செகண்ட் வீக்ல இருந்து ஜுலை ஃபர்ஸ்ட் வீக் வர மூணுவாரம் ஆல் இண்டியா டூர் இருக்கு ஜெயன். அது முடிச்சு வந்து அனேகமா ஜூலை கடசி கோர்ஸ் முடிஞ்சிடும்.

ஃபைனல் எக்சாம் எல்லாம் முடிஞ்சிடுமா?

ஆமா. நாலு வருஷம் முடிச்சு நாங்க சுதந்திரப் பறவயா பறந்து போவோம்.

செர்டிஃபிகேட்ஸ்?

அது ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ கழிச்சு கெடைக்கும்.

சரி, நம்ம கல்யாணம் ஆகஸ்டில ரெண்டாம் வாரம் கழிச்சு நடந்தாகணும். ஏன்னா அப்ப தான் ஆவணி பொறக்குது.

எப்ப பொண்ணு பாக்க வருவீங்க?

வெளயாடுறியா? இல்ல சீரியசா பேசுறியா?

சீரியஸ் ஜெயன். அண்ணன்ட்ட சொல்லி அவரையும் கூட்டிட்டு வருவேன்னு சொன்னீங்கள்ள?

அப்ப சொன்னேன். இப்ப யோசிச்சு பாத்தேன். நாம யாருக்கும் தெரியாம ரெஜிஸ்டர் மாரெஜ் பண்றதுதான் நல்லதுன்னு தோணுது, அருணா.

ஏன் ஜெயன்? எங்க அப்பாக்கு பெரியார்மேல இண்டிரெஸ்ட் உண்டு. ஒத்துப்பாங்க. இல்லாட்டியும் எங்க அத்த, மாமா என்ன புரிஞ்சிப்பாங்க. நான் அவங்ககிட்ட சொல்லி அப்பாட்ட பேச வச்சு சம்மதிக்க வச்சிடுவேன்.

இல்ல. பெரியார் எல்லாம் கொள்கை அளவுலதான். ஒங்க அப்பா மாதிரி ஆளுங்களுக்கு ஜாதிப்பற்று, இனப்பற்று ரொம்ப இருக்கும். நான் மலையாளி என்பது அவங்களால ஜீரணிக்க முடியாததா இருக்கும். கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. அப்றம் எனக்கு அப்பா, அம்மா இல்ல. நெறய சொந்தங்கள் எதுவும் இல்ல. அண்ணன், தங்கச்சி மட்டும்தான். எல்லாமே மைனஸ் பாயிண்ட்ஸ்.

அப்டியா? அப்ப நான் தெரியாம பொறப்பட்டு வரணுமா?

ஆமா, ஆகஸ்ட்ல எப்ப வரணும்னு நான் அப்றம் சொல்றேன். மாரேஜ் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிட்டா நம்மள ஒண்ணும் பண்ண முடியாது. அப்றமா அவங்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி கால்ல விழுந்துடலாம். மன்னிச்சா மன்னிச்சு ஏத்துப்பாங்க.

எனக்கு கலக்கமாக இருந்தது. அப்பா, அம்மா, என் உறவுகள் என்னை வாழ்நாள் முழுவதும் புறக்கணித்துவிட்டால். நினைக்கவே நடுக்கமாக இருந்தது. ஜெயனும் புரிந்துகொண்டு மிக ஆறுதலாக பேசினார். ’உன் பெற்றோர் உன்மேல் உயிரையே வைத்திருப்பவர்கள். மன்னித்து விடுவார்கள். உடனே இல்லாவிட்டாலும் நமக்கு குழந்தை பிறந்தபிறகு சேர்ந்துவிடுவார்கள்’. குழந்தை என்றவுடன் எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நமக்கு கொஞ்ச ஒரு குழந்தை என்ற நினைவே தித்திப்பாக தோன்றியது.

’’அருணா, உனக்கு 21 வயது முடிந்துவிட்டதா? .அப்பதான் மாரேஜ் செல்லுபடியாகும்’’ என்றார்.

இருவரும் விரல்விட்டு எண்ணிப்பார்த்தோம். எனக்கு அந்த மார்ச்சோடு 21 வயது முடிந்திருந்தது. அப்போது மேமாதம் நடந்துகொண்டிருந்தது. அவர் அண்ணனிடமும் திருமணம் முடிந்தபிறகுதான் தெரிவிக்கப் போவதாக சொன்னார். அவர் இப்படியான திருமணத்துக்கு எதிரானவர். கொஞ்சம் பழமைவாதி என்றார்.

பிறகு நான் எங்கள் கல்லூரியின் இந்திய சுற்றுலா பற்றிக் கூறினேன். கடிதங்கள் போடமுடியாது என்றவுடன் அவர் முகம் வாடியது. ’’ஏன் மூணுவாரம் வச்சிருக்காங்க,’’ என்றார்.

’’நாக்பூர், ஜெய்ப்பூர், உதய்ப்பூர், ஜோத்பூர், லூதியானா, டெல்லி, ஆக்ரா, மதுரா, காசி, ஹரித்துவார், டேராடூன் எல்லாம் போறோம்’’, என்று அடுக்கிக் கொண்டே போனேன். பிறகு சுந்தரராமசாமி அவர்களின் கடிதம் எனக்கு வந்ததை தெரிவித்தேன். சு.ரா என்ன எழுதியிருந்தார் என்று கேட்டார்.

நீங்க என்னப் பத்தி நெறய அவர்ட்ட சொல்வீங்களாம். அப்றம் என்னோட வாசிப்பு பத்தி அவர்க்கு சந்தோஷம் என்றார். நீங்க இப்பதான் நெறய கிரியேட்டிவ்வா எழுத ஆரம்பிச்சுருக்கீங்க. அருண்மொழியின் கடாட்சம்தான் காரணம் என்று எழுதியிருக்கார். ஜெயன் புன்னகைத்துக் கொண்டே இருந்தார்.

மாலையில் திரும்பும்போது அதே மரத்தடியில் அணைப்பும், முத்தங்களும். தடித்த அடிமரம் கொண்ட அம்மரம் உண்மையில் ஒருபக்கம் கொடியடர்ந்த வேலியும் மறுபுறம் தனிமையான குளக்கரை சூழ இருப்பது ஒரு அடைக்கல உணர்வைத் தந்தது.

தொடர்ந்து இருவாரங்கள் வேலைகளும் படிப்பும் இருந்தன. மே 21, 1991. அன்று இந்திய அரசியலில் ஒரு துரதிருஷ்டமான நாள். அன்றுதான் மனித வெடிகுண்டினால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். எங்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. 1984 முதல் 1989 வரை பிரதமராக இருந்தவர். போஃபோர்ஸ் ஊழல் 1989ல் வெளிவந்து அது அவருடைய தோல்விக்கு காரணமாக அமைந்தது. வி.பி.சிங் வெற்றிபெற்று ஒரு வருடம் ஆட்சி செய்தார். அந்தக் கட்சிக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள். சந்திரசேகர் அடுத்த வருடம் பிரதமரானார். அரசில் நிலையின்மை நிலவி மீண்டும் 1991 ல் பாராளுமன்றத் தேர்தல் வந்தது.

அதற்கு காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு வந்தபோதுதான் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார். மனிதவெடிகுண்டான தனுவும் பலியானாள். நாங்கள் தூர்தர்ஷன் முன் பழியாய்க் கிடந்தோம். திரும்பத் திரும்ப அந்தக் காட்சிகளைக் காட்டியது எங்களுக்கு கலக்கத்தை உண்டுபண்ணியது. ‘அமுல் பேபி மாதிரி இருந்தாரே, போய் சேந்துட்டாரே’ என்று எல்லோரும் புலம்பினோம். தமிழ்நாட்டில் வைத்து கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. செய்தித் தாள்களும், ஜூனியர் விகடனும் மனமகிழ்மன்ற அறையில் கிழிபட்டன. போட்டிபோட்டு படித்தோம். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. போலீஸும் சி.பி.ஐயும் திணறின.

இருநாட்கள் கழித்து ஜெயனிடமிருந்து ஹாஸ்டலுக்கு ஃபோன்.

அருணா, நீ பத்திரமா இருக்கேல்ல.

என் பத்தரத்துக்கு என்ன கொறச்சல்?

இல்லடி. எங்க பார்த்தாலும் பரபரப்பா இருக்கு. நீ சும்மா கண்ட நேரத்துல டவுனுக்கு போகாத.

கண்ட நேரத்துல எங்கள வுட மாட்டாங்க. நா போமாட்டேன்.

சரி, டூர் உண்டா?

டூர் உண்டே. அது எங்க சிலபஸ்ல ஒரு பாடம்,ஜெயன். கடசி வருஷம், கடசி ட்ரைமஸ்டர்.

அது ரிஸ்க். இன்னம் குற்றவாளிகள புடிக்கல, தெரியுமா?

தெரியும். வேறென்ன? வைக்கவா?

அருணா. ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே?

என்ன சொல்லுங்க, கேட்டுட்டு முடிவு பண்றேன்.

அதுவந்து… நான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா ஒரு கட்டுரை மலையாளத்துலயும், காலச்சுவடுலயும் எழுதுனதால ரெண்டு போலீஸ்காரங்க ரெண்டு நாள் கழிச்சு என் ரூமுக்கு வந்து விசாரிச்சாங்க. என்ன ஒண்ணும் சொல்லல. ஆனா ரூம்ல இருந்த பத்திரிகைகள், துண்டு பேப்பர்கள், எழுதிய மானுஸ்கிரிப்டுகள், கடிதங்கள் எல்லாத்தையும் தொடச்சி எடுத்துட்டு போயிட்டாங்க.

whatsapp-image-2022-05-23-at-10.58.48-am

நான் எழுதுனது?

அதுவும்தான்.

பெர்சனல்னு சொல்ல வேண்டியதுதானெ? வாயில கொழுக்கட்டையா வச்சிருந்தீங்க.

நான் சொல்றத எங்க கேக்குறான்?

லவ் லெட்டர கொண்டுபோய் என்ன பண்ணப் போறாங்க? அய்யோ, சே , கேவலமா இருக்கு. கண்டவனும் படிப்பான். அவங்க எல்லாரும் டேபிள சுத்தி ஒக்காந்து என் லெட்டர படிச்சு சிரிக்கறத நெனச்சாலே நாக்க புடிங்கிக்கலாம் போல இருக்கு. ஒங்களுக்கு வீரமே இல்ல. துணிஞ்சு சொல்ல வேண்டியதுதான.

சொல்லிப் பாத்தேன். ஆனா ரொம்ப எதுத்தா சந்தேக கேஸ்ல என்ன உள்ள வச்சுட்டாங்கன்னா.

அய்யோ, சரி விடுங்க. போனாப் போகுது.

அ.மி, சு.ரா, கோணங்கி, பாவண்ணன், யுவன் எல்லாக் கடிதங்களும் போயிடுச்சி.

எனக்கு பாவமாக இருந்தது. ஆறுதல் சொல்லி ஃபோனை வைத்தேன்.

எல்லா சாலைகள் , வாகனங்கள், ரயில்கள், வான் வழி, கடல் வழி அனைத்தும் கண்காணிக்கப் பட்டன. ஆனால் முருகன், சாந்தன், ஒற்றைக்கண் சிவராசன், இன்னும் சிலரும் உட்பட அனைவரும் ஒரு பால் டேங்கர் லாரியில் அமர்ந்து பெங்களூருக்கு தப்பியது இருமாதங்கள் கழித்துதான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஒரு ஒட்டைவழியே ஏணிவைத்து அதில் இறங்கி உட்கார்ந்து பயணம் செய்யமுடியும் என்பதை நம் காவலர்களால் யூகிக்க முடியவில்லை. இந்த வழக்கை துப்புதுலக்கிய கார்த்திக்கேயன் என்னும் சி.பி.ஐயின் புலனாய்வு அதிகாரியின் உதவி அலுவலராக இருந்த ரகோத்தமன் எழுதிய ராஜிவ் காந்தி படுகொலை குறித்த புத்தகத்தை நான் திருமணத்திற்கு வெகு நாட்களுக்கு பிறகு ஒரு திரில்லர் நாவலின் பரபரப்புடன் படித்தேன்.

நாங்கள் டெல்லி செல்லும் நாளும் வந்தது. அதற்கு இருநாட்களுக்கு முன்  ஜெயன் ஃபோன் செய்தார்.

அருணா , ஒனக்கு எத்தன மணிக்கு ட்ரெயின்?

சாயந்தரம் நாலுமணி, வைகை எக்ஸ்பிரஸ். மதுரயிலர்ந்து மெட்ராஸ். அங்க செண்ட்ரல். அங்கருந்து டெல்லிக்கு.

நான் ஒரு மூணுமணிக்கு மதுர ஸ்டேஷன் வரேன்.

எதுக்கு?

ஒன்ன ஏத்திவிட. டாட்டா காமிக்க.

பைத்தியமா ஒங்களுக்கு. டாட்டா காமிக்க அவ்ளோதூரம் பயணம் பண்ணி வரணுமா?

இல்ல, வருவேன்.

என் ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சுபோயிடும்.

தெரியட்டும்.

பிடிவாதம் பிடித்தார்.

சரி, வாங்க.

காதலின் பித்துநிலை என்பது இதுதானா? எந்த தர்க்கங்களையும், ஒழுங்குகளையும் கைக்கொள்ள மறுக்கிறது அது. ஒப்பிட நான் கொஞ்சம் தரையில் நின்றிருக்கிறேன் எனத் தோன்றும். அவர் பிடிவாதத்தை உள்ளூர ரசித்தேன்.

ரயில் நிலையம் சென்றபோது காத்து நின்றிருந்தார். நான் லக்கேஜ்களை ரயில்பெட்டியில் வைத்துவிட்டு இறங்கி அவர் அருகே சென்றேன். ரயில் கிளம்ப இன்னும் அரைமணிநேரம் இருந்தது.

எதுவும் பேசத் தோன்றவில்லை. கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

ஜெயன், லெட்டர் எழுதமுடியாது. நீங்களும் போட வேண்டாம். கஷ்டமா இருக்கா?

ரொம்ப. ஒன் பழய லெட்டர் எல்லாம் திரும்ப படிக்கலாம்னா அதுக்கும் வழியில்ல.

என் கோழிசீச்ச கையெழுத்து லெட்டருக்கு இவ்ளோ மவுசா?

பின்ன, நான் எப்டி காத்திருப்பேன் தெரியுமா, அருணா? காலையில 6.30 மணிக்கு டீக்குடிச்சுட்டு போய் போஸ்ட் ஆஃபீஸ் வாசல்ல காத்திருப்பேன். ஒரு ஏழர மணிக்கு தான் பிரிச்சு போஸ்ட்மேன் தருவாரு. அங்கயே நின்னு படிச்சுருவேன்.[ இச்சம்பவத்தை பிறகு அந்த போஸ்ட்மேன் வாயாலேயே நான் ஒருமுறை கேட்டேன். திருமணத்துக்குப் பிறகு அதே தருமபுரி தலைமை அஞ்சலகத்தில் நான் வேலை பார்த்தபோது தபால்காரர் மாதேஸ்வரன் சொன்னார்.’ நீங்க மதுரையிலேர்ந்து போடற லெட்டருக்கு ஆறர மணிலேர்ந்து அந்த மரத்தடியே கதின்னு நிப்பார். நான் எல்லா லெட்டரும் பிரிச்சு அடுக்க ஏழர ஆயிடும். போய் குடுப்பேன். அங்கயே பிரிச்சு படிப்பார். ஒங்க காலேஜ் அட்ரஸப் பாத்து நான் லவ் லெட்டர்னு யூகிச்சுட்டேன். எடையில வெத்தல பாக்கு எச்சி துப்ப போனாகூட என்னயே பாப்பார். பாவமா இருக்கும்’. நான் அந்த நாவல்மரம் அடியில் நகம் கடித்தபடி நிற்கும் ஜெயனை கற்பனை செய்வேன். லலிதாங்கிக்காக மரமல்லி அடியில் காத்து நிற்கும் பித்துநிறைந்த திருவடியேதான்.] 

ஜெயன், எல்லாரும் பாக்குறமாதிரி இருக்கு. தெரிஞ்சா என்ன கிண்டலடிச்சே கொன்னுருவாளுங்க. அனுவுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். அவ புரிஞ்சிப்பா. அந்த கடைகிட்ட போய் நிக்கலாம். கொஞ்சம் மறைவாயிருக்கு.

ஹிக்கின்பாதம்ஸ் அருகே போய் நின்றுகொண்டோம். காஃபி வாங்கிக் குடித்தபடியே பேசினோம். அங்கு போனதும் வழக்கம் போல் புத்தகத்தை  பார்க்கத் தொடங்கிவிட்டார்.

என்ன பாக்க வந்தீங்களா? புத்தகம் வாங்க வந்தீங்களா?

உடனே திரும்பினார். நான் என் கையில் இருந்த கல்குதிரை தாஸ்தாவெஸ்க்கி சிறப்பு மலரைக் காண்பித்தேன்.

வந்துருச்சா? இதில நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கேன் . பாத்தியா?

நேத்துதான் வந்துச்சு. பாத்தேன். ஆனா மொதமொதல்ல சு.ரா கட்டுரை தான் படிச்சேன். இவான் பத்தி என்ன அழகா எழுதி இருக்கார், ஜெயன்.

அவர் முகம் கொஞ்சம் வாடியது. ’’அப்ப என் கட்டுரை இன்னும் படிக்கல நீ?’’

இல்ல, சீனியாரிட்டி பிரகாரம். ட்ரெயின் போய்ச் சேர மூணு பகல், ரெண்டு ராத்திரி ஆகும் ஜெயன். படிச்சிருவேன்.

சரி, அங்க வடக்கத்தி ஆளுங்க தமிழங்க மேல கோவத்துல இருப்பாங்க. எல்லா எடத்துலயும் ஜாக்ரதையா இரு. வெயில் அதிகம் இருக்கும். ஆரஞ்ச் நெறய, மத்த பழங்கள் வாங்கி சாப்பிடு.

ட்ரையின் கிளம்ப அஞ்சு நிமிஷம்தான் இருக்கு ஜெயன். நான் வரேன். அப்றம் ஒங்க கட்டுரைதான் மொதமொதல்ல படிச்சேன். மன்னிக்காதே நெல்லி. ரொம்ப நல்லாயிருக்கு. போகட்டா?

நான் ஓடிப்போய் ஏறிக்கொண்டேன்.

பிரமிப்புடன் பார்த்தார். மாலை ஒளியில் ஜெயனின் புன்னகைபூத்த முகம் சுடர்ந்தது. கடவுளே, நான் வாசிப்பது இவருக்கு இவ்வளவு இன்பத்தை தருகிறதா? மகிழ்ச்சியுடன் தலையாட்டி விடைபெற்றேன்.

ஒவ்வொரு ஊரும் எங்களுக்கு புது அனுபவத்தை தந்தது. ரயிலிலும் சோதனைகள். காவலர்கள் வந்துகொண்டே இருந்தனர். எங்கள் நூற்றி ஐந்து மாணவ, மாணவிகளில் கிருஷ்ணகுமாரி என்ற பெண் கொஞ்சம் சுருண்ட முடியுடன் தனு சாயலில் இருப்பாள். அவள் கொஞ்சம் அப்பாவி. நாங்கள் அவளிடம் ”கிருஷ்ணா, போலிஸ் வரும்போது நீ பெர்த்துக்கு அடில ஒளிஞ்சுக்கோ.’’எனச்சொல்ல அவள் உண்மையில் அதைநம்பி ‘’அடில போகமுடியுமா, பாக்கட்டா’’ என்று கேட்டு எங்களை சிரிப்புமூட்டினாள்.

கல்குதிரையில் படிக்க நிறைய இருந்தது. நான் அதில் மூழ்கிப் போனேன். டூரில் சுற்றும் சுற்றுலா இடங்கள் எல்லாமே பிடித்திருந்தன. ஏதாவது வேளாண் ஆராய்ச்சி இடங்கள், பல்கலைக் கழகங்கள், விதைப் பண்ணைகள் எங்களை சோதித்தன. அதில் வேலைபார்க்கும் பலருக்கும் ஆங்கிலம் வரவில்லை. முதலிரண்டு வாக்கியங்கள் ஆங்கிலத்தில் கூறிவிட்டு பிறகு ஹிந்திக்கு தாவினர். நாங்கள் அனைவரும் தலைகால் புரியாமல் விழித்தோம். எரிச்சலாக இருந்தது. கொடுக்கும் துண்டுப் பிரசுரம்போன்ற காகிதங்களை பத்திரப் படுத்திக்கொண்டோம். அதைவைத்து கல்லூரி சென்று அசைன்மெண்ட் செய்யவேண்டும் என யோசனை செய்தோம்.

தென்னிந்திய சாப்பாடு எங்கும் கிடைக்கவில்லை. சோற்றைப் பார்த்தே பத்துநாளாகியிருந்தது. மூன்றுவேளையும் சப்பாத்தி முகத்தில் அடித்தது. முதல்முதலில் ஹரித்துவாரில் தென்னிந்திய ஹோட்டலை பார்த்து மனம் மலர்ந்தோம். பாதி வெந்த அரிசிச் சோறு எங்களுக்கு தேவாம்ருதமாக இருந்தது. டெல்லி கரோல்பாக்கில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தோம். அங்குப் பக்கத்தில் ஒரு தபால்நிலையம் இருந்தது. போய் இரண்டு மூன்று என்வலப்புகள் வாங்கிக் கொண்டேன். சுற்றுலாவில் வைத்து கடிதம் எழுத தனிமை கிடைக்காது என்ற எண்ணத்தில் நான் ஊரிலிருந்து எதுவும் வாங்கி வரவில்லை.

ஐந்து நாட்கள் கரோல்பாக்கில் தங்கியதால் கடிதம் எழுத தனிமையும் கிடைத்து ஆசையும் வந்தது.

அன்புள்ள ஜெயன்,

ana_9638-1.jpg?w=320

கரோல்பாக்கில் இருந்து உன் கண்மணி எழுதுவது. [ஹை, எவ்ளோ கவித்துவமா வருது. இந்த இடத்தில் ஜெயன் புன்சிரிப்பார்].

ஜெயன், வந்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. உன்னை நினைக்காத நேரமில்லை. பொய்யில்லை. எல்லா தருணங்களிலும், சிந்தனைகளிலும் கலந்து விட்டிருக்கிறாய். முதலில் ஜெய்ப்பூர், உதய்ப்பூர் ,ஜோத்பூர் என ராஜஸ்தானில் சுற்றினோம். இந்த இடங்களுக்கு லோக்கல் டூரிஸ்ட் பஸ்ஸில் தான் சென்றோம். அரண்மனைகள், முக்கிய இடங்கள் பார்த்தோம்.

எல்லாமே அழகியவை. இந்த காய்ந்த பூமியில் அந்த ராஜபுத்திர மன்னர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் வந்தது என்ற வியப்பு வந்துகொண்டேயிருந்தது எனக்கு. அப்படிப்பட்ட ஆடம்பர அரண்மனைகள், குளிர்கால அரண்மனை தனி, கோடைக்கால அரண்மனை தனி. இங்கே வெயில் கொல்கிறது. மதுரை கூட சொர்க்கம்தான் இங்கு வந்தால். இரண்டு கைக்குட்டை வைத்து ஒன்றுமாற்றி ஒன்று நனைத்து முகத்தில் போட்டுக்கொள்வோம். பஸ்ஸின் காற்றில் ஐந்து நிமிடத்தில் உலர்ந்துவிடும். மூக்கு, நாக்கு, தொண்டையெல்லாம் எரிகிறது. தயிர்தான் எங்களைக் காக்கிறது. குட்டி மண்பாத்திரங்களில் அதிகம் கிடைக்கிறது. அது தான் இப்போது எங்களுக்கு அமிர்தம்.

பஞ்ஜாபில் லூதியானா வேளாண் பல்கலைக் கழகம் போனோம். மிகப்பெரிய அழகிய வளாகம். அமிர்தசரஸில் பொற்கோவில் பார்த்தோம். உள்ளே அனுமதியில்லை. 1984 க்கு பிறகு. மதுரா, ஆக்ரா எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது. தாஜ் மஹாலை மொட்டைமதிய வெயிலில் பார்த்தோம் ஜெயன். கண்கூசியது. அதை ஷாஜகான் தன் சிறையில் இருந்தவாறு பார்க்க ஔரங்கசீப் செய்த ஒரு ஏற்பாட்டைப் பற்றி கைடு கூறினார். எனக்கு கண்கலங்கியது. அவ்வளவாவது அவருக்கு கருணை இருந்ததே என்று நினைத்துக்கொண்டேன். ஜெயன், நம் திருமணம் முடிந்து இங்கு எப்போதாவது வந்தால் தாஜ்மஹாலை முழுநிலவில் யமுனைக் கரையில் அமர்ந்து பார்க்கவேண்டும். இதையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

டெல்லியில் ஜும்மா மசூதி, குதுப் மினார், செங்கோட்டை, அக்பர் ஃபோர்ட், மியூசியம், பார்லிமெண்ட் ரோட், இண்டியா கேட், நேரு, காந்தி, இந்திரா சமாதி உட்பட நிறைய இடங்கள் பார்த்தோம். இந்திரா காந்தி சமாதியில் இருந்த சிறிய மியூசியத்தில் அவர் அந்தக் காலைநடையில் உடுத்தியிருந்த சேலையை வைத்திருந்தார்கள் ஜெயன். பதிமூன்று குண்டுகள் துளைத்த பொத்தல்கள் அச்சேலையில். எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. முன்னே சென்ற தனது பாதுகாவலன்  திரும்பி தன்னைச் சுடும் அக்கணம் அவர் மனதில் என்ன சிந்தனை வந்திருக்கும். அவர் மனதில் எதைப் பற்றியிருப்பார்? மனிதனைப் பற்றிய அதிர்ச்சி, அவநம்பிக்கையுடனே அவர் போய் சேர்ந்திருப்பார் இல்லையா? வெகுநேரம் மீளமுடியவில்லை. இவரை ஒருகாலத்தில் நான் எப்படியெல்லாம் வெறுத்தேன்? எல்லாவற்றுக்கும் நான் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

இனிமேல் போக வேண்டியது எனக்கு மிகப் பிரியமான இடங்கள். கங்கையும், இமய மலையையும் பார்க்கப் போகிறோம். நாளை கிளம்பி விடுவோம். காசி, ஹரித்துவார், டேராடூன். இங்கே கோவில்கள் சலிப்பூட்டுகின்றன. நம்மூர் கரிய அழகிய சிற்பங்கள் இங்கு இல்லை. சிற்பங்கள் மார்பிள் பொம்மைகள் போல. பக்தியே வர மறுக்கிறது.

டூரிஸ்ட் பஸ்ஸில் எங்கள் ட்ரைவர் தேசாப், கயாமத் சே படப் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொல்கிறான். நாங்கள் மிரட்டி ஏக் துஜே கேலியே போட வைத்தோம். மக்கள் பரவாயில்லை. ஆனால் டூரிஸ்ட் இடங்களில் எல்லாம் தமிழர்கள் என்றால் ஒரு வெறுப்புடன் பார்க்கிறார்கள். ராஜீவ் காந்தியின் கொடிய மரணம் அவர்களால் தாள முடியாததாயிருக்கிறது. எங்களுக்கு பரிசோதனைகளும் அதிகம்.

மூலைக்கு மூலை பீடாவைப் போட்டு துப்புகிறார்கள். நம்மூரிலும் நம் பெரிசுகள் அடித்தொண்டையில் காறி சாலையில் துப்புவது போலத்தான். இங்கு நாங்கள் தங்கியிருப்பது ஒரு வயதான பாட்டி, தாத்தாவின் வீட்டின் மேல்மாடியில். பழைய வீடு. சாலையோர சிறிய ஆலமரம் வீட்டின் மேல் பாதி நிழல் விரித்திருக்கிறது. அப்படியும் உஷ்ணம் தாங்கவில்லை. மாலையில் மொட்டைமாடியில் போய் குடம் குடமாக தண்ணீர் ஊற்றிவிட்டு வருவோம். சாக்கையும் போட்டு பரத்திவிட்டு.

அந்தப் பாட்டியும் தாத்தாவும் மொழி புரியாவிட்டாலும் அவ்வளவு அன்போடு எங்களிடம் சைகையால் பேசுகிறார்கள். இருவரும் ஆதர்ச தம்பதிகள். நாம் வயதானால் அப்படி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேன். கீழே அந்த ஆலமரத்தடியில் ஒரு சாய் வாலா. பதினெட்டு வயது துறுதுறு பையன் ஜெயன். ஒரு பெரிய பெஞ்ச், ஒரு சிறிய பெஞ்ச். ஒரு கும்மட்டி அடுப்பு, கெட்டில், பாத்திரங்கள். முட்டையை அவித்து உடைத்து மிளகுத் தூள் தூவி தருவான். அதனுடன் டீ. மிக அருமை. சர்க்கரையை அள்ளி கொட்டுவதில்லை. அவனிடம் மாலை நேரங்களில் வண்டியை நிறுத்தி வரிசையில் நின்று குடித்துப் போகிறார்கள். பத்துக் கைகள் உள்ள மாதிரி பரபரப்பான். அவன் சுறுசுறுப்பையும் புன்னகையுடன் வாடிக்கையாளர்களை கவனிப்பதையும் நான் மாடியில் இருந்து கவனிப்பேன். அது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. நாங்கள் அவனிடம் பையா என்று அழைத்து அடிக்கடி டீ குடிப்போம். தீதீ என்று எங்களை அழைப்பான்.

இரவில் உறக்கம் வர மறுக்கிறது, ஜெயன். படுத்தவுடன் நினைவுகளாய் என்மேல் கவிந்து கொள்கிறாய். எப்படி இருக்கிறாய்? என்னை எப்போதெல்லாம் நினைக்கிறாய்? கடிதம் இல்லாமல் தவித்துப் போவாய் என்றுதான் இதை விரிவாக எழுதுகிறேன். இனிமேல் எழுத சந்தர்ப்பம் வாய்க்காது. அடுத்த வாரம் வந்துவிடுவேன். வந்த அந்த சனியன்று எங்களுக்கு விடுமுறைதான். எல்லோரும் ஊருக்குப் போவார்கள். எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும். கண்டிப்பாக வா. கட்டிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது. அன்பு முத்தங்கள். உன் அருணா.

அந்த சனிக்கிழமை ஜெயன் பலவித திட்டங்கள், யோசனைகள் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு கரும்பச்சை கலரில் பட்டுப்புடவை  சு.ரா வின் சுதர்சன் கடையில் எடுத்து விட்டதாகவும், சுராவின்  செலக்‌ஷன் தான் அந்த கரும்பச்சை கலர் என்றும், மூன்று பவுனில் செயினும் தாலியும் வாங்கி விட்டதாகவும் ஜெயன் சொன்னார். எனக்கு பெருமிதம் தாளவில்லை.

ஜெயன், உண்மையிலேயே நீங்க பொறுப்பான மாப்பிள்ளைதான். இத்தன நாளா வேற என்ன உருப்படியான விஷயம் பண்ணீங்க?

நான் போட்டிக்கு அனுப்புன எல்லா கதைகளுக்கும் முதல்பரிசுதான். நெறய பணம் வந்துச்சு. ஏற்கனவே என் ஃப்ரெண்ட் குப்புசாமிகிட்ட சீட்டு போட்டிருந்தேன், சொன்னேன்ல.

யார்? அந்த மாரண்டஹள்ளிகாரரா?

ஆமா, அதை எடுத்து கட்டில், மெத்த ,ஃபேன், அத்யாவசிய பாத்திரங்கள், ஒனக்கு இன்னும் அஞ்சு பொடவ எடுத்தேன். குக்கர், மிக்ஸி மட்டும் ஆடித்தள்ளுபடில வாங்கலாம்னு ஒல்லி ரமேஷ் சொன்னான். அது வாங்கிடுவேன். எல்லா பர்ச்சேசுக்கும் அவந்தான் வந்து ஹெல்ப் பண்ணான்.  காஸ் புக் பண்ணியிருக்கேன். அது கனெக்‌ஷன் கெடைக்க ஆறுமாசம் ஆகும் அருணா. அதுவர கெரொசின் ஸ்டவ்தான். அதுல சமைக்க தெரியுமா, ஒனக்கு?

ம்ம், எங்க வீட்ல நாலு வருஷமா தான் காஸ். அதுக்கு முன்ன வெறகடுப்பும், கெரொசின் ஸ்டவ்வும்தான் ஜெயன். என்ன கேட்டீங்க? சமைக்கவா? வென்னீர் போடுவேன், டீ, காஃபி, முட்ட ஆம்லெட், உருளக் கெழங்கு வறுவல், சாதம் வடிப்பேன், சாம்பார், ரசம் அட்ஜஸ்ட் பண்ணுவீங்கள்ள? காதலி கையால கஞ்சி குடுத்தாலும் அமிர்தம்னு சொல்லிட்டு குடிக்கணும்.

கட்டுனா அப்றம் என்ன காதலி, பொண்டாட்டிடி, கழுத.

தாலி என்ன டிசைன், ஜெயன்?

அது எனக்கு தெரியாததால எங்க மலையாள தாலி வாங்கிட்டேன். அரசிலை. ஹார்ட் ஷேப்ல இருக்கும். செயினும் எங்க ஊர்ல ஒல்லியா தான் போடுவாங்க. ஒங்களை மாதிரி கனத்த தாலி செயின் போட மாட்டாங்க.

ஒல்லி செயின்தான் எனக்கு புடிக்கும். எங்க ஊர்ல மாட்டுக்கு போடற தாம்புகயிறு மாரி போட்டுகிட்டு திரியுங்க. நான் இப்ப போட்டுருக்கேன் பாருங்க. இது ஒன்ற பவுனுதான். ஒம்பதாவதுலேர்ந்து போட்டுருக்கேன். கழுத்தோட கடக்கும் எப்பவும்.

நீ வரும்போது அதை கழட்டி வீட்ல வச்சுட்டு வந்துரு. ஆகஸ்ட் 17 கிளம்பி வா. மறுநாள் நல்லநாள் . நம்ம கல்யாணம். ட்ரெஸ் அதிகம் எடுத்துக்காத. சந்தேகம் வரும். செர்டிஃபிகேட்ஸ் வாங்க மதுர  போறதா சொல்லிட்டு வா. லெட்டர்ஸ், கையில உள்ள மத்த மார்க் ஷீட்ஸ், செர்டிஃபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடு.

ஏன் செயின கழட்டணும்?

அறிவுக்கொழுந்து. செயினுக்காக என் பொண்ண கடத்திட்டான்னு ஒங்க அப்பா கேஸ் கொடுக்கவா? வம்பு.

சரி… திக் திக் ன்னு இருக்கு ஜெயன். அங்க போனப்ப எல்லா சாமிகிட்டயும் இதான் உருக்கமா வேண்டுனேன்.

பயப்படாதே. ஊர்ல ஒனக்கு ஏதாவது பிரச்சனன்னா எனக்கு ஒடனே தெரியப்படுத்து. சின்ன லெட்டரோ, தந்தியோ கொடுத்துடு. நான் பாத்துப்பேன்.

’’கண்ண மூடுங்க’’, அவர் கையில் நான் வாங்கி வந்த ஒரு சந்தன நிற அழகிய பேனாவையும் ஒரு பென் ஸ்டாண்டையும் வைத்தேன்.

’’நல்லாருக்கு’’, என்று சரியாகக் கூட பார்க்காமல் ஓரமாக வைத்தார்.

கொஞ்சம் கூட ரசனயே இல்ல. சரியாக் கூட அதப் பாக்கல நீங்க.

எனக்கு இதெல்லாம்விட டெல்லிலேர்ந்து நீ போட்ட லெட்டர்தான் பரவசமா இருந்துச்சுடி. ரொம்ப நெனச்சுகிட்டியா?

ம்ம்.. இனிமே இப்டி பாக்க முடியாது ஜெயன். அடுத்தவாரம் ஊருக்கு போறேன். பாதி திங்ஸ் அங்க கொண்டு போட்டுட்டு வருவேன். கடசி ரெண்டு வாரம் ஃபைனல் எக்ஸாம். போலமா? நேரம் ஆயிடுச்சி. இந்த கொளத்தாங்கரையும், இந்த மரத்தடியும் நம்ம காதலின் சாட்சிகள், இல்ல? இனிமே இது ரெண்டும் நம்ம மெமரில மட்டும் தான்.

அருணா, இன்னும் கொஞ்ச நேரம்.

இருவரும் பார்த்துக் கொண்டே இருந்தோம். ஒரு யுகத்து சிந்தனைகள் அந்த ஒரு கணத்தில் நிகழ்வதுபோல. எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டுமே என்று என் இதயம் துடித்தது. ஏதும் தவறாகப் போய்விடக் கூடாது. அப்படி ஆகிவிட்டால் எனக்கு ஒருவழிதான் தெரிந்தது. என்னை மாய்த்துக் கொள்வது. கண்கலங்கி என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஜெயன் கலங்கிவிட்டார். ’’ஏண்டி, பயப்படுறியா? நமக்கு நல்லதுதான் நடக்கும் அருணா’’. அணைத்து முத்தமிட்டு தேற்றினார். விசும்பலுடன் விடைபெற்றேன்.

அடுத்தடுத்த வாரங்கள் றெக்கை கட்டிப் பறந்தன. தேர்வு முடிந்து, படிப்பு முடிந்து எங்கள் கல்லூரி வளாகத்தை விட்டுப் பிரிவதும், தோழிகளைப் பிரிவதும் இம்சையாக இருந்தது. நான்கு வருடங்கள். சைக்கிளில் கல்லூரிக்குள் சுற்றிய பிளாக்குகள், பழப்பண்ணை, நடைமுறை வகுப்புகள் நடந்த லேப்புகள், லைப்ரரி, வகுப்பறைகள், நூலகம், அழகிய சாலைகள், வயல்கள், ஆடிட்டோரியம்,கல்லூரிப் பேருந்துகள், கத்தி சண்டைபோட்டு விளையாடிய விடுதியறைகள், ஓடிப்போய் ஒலியும் ஒளியும் , மஹாபாரதம் பார்த்த தூர்தர்ஷன் மட்டுமே தெரியும் கலர் டிவி, மனமகிழ் மன்ற அறை என நினைவுகள் கொட்டிக் கிடந்தன.

வீட்டில் எப்போதும் போல் மௌனம் கனத்திருந்தது. தம்பி வந்திருந்தான். யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. நாட்கள் ஓடின. அம்மாவும் அப்பாவும் பள்ளி சென்றதும் தம்பியும் வெளியில் கிளம்பி செல்வான். நான் தனிமையில் எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். கடிதங்களை என் பெட்டியில் புத்தகங்களுக்கு அடியில் ஒளித்து வைத்து பூட்டி சாவியை யாருக்கும் தெரியாத இடத்தில் ஒளித்திருந்தேன்.

அப்பாவிடம் ‘செர்டிஃபிகேட்ஸ் விரைவில் கொடுத்து விடுவார்கள். போய் வாங்க வேண்டும்’ என்று கூறி வைத்தேன். அப்பா சரியென்றார். அப்பா கவலையில் இருந்தார். தம்பி அவனுடைய ஒருவருட படிப்பை வீணாக்கியதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் எதிர்காலம் பற்றிய கவலை அவரை அரித்தது. எனக்கு குற்ற உணர்வு கூடி வந்தது. இந்நிலையில் நானும் அப்பாவுக்கு பெரிய இடியை தரப்போகிறேனே என்று அவ்வப்போது மறுகினேன்.

அம்மா மெல்ல’’ பாப்பா, ஒனக்கு நக வாங்கணும். அடுத்தவாரம் தஞ்சாவூர் போலாமா’’ என்றாள்.

’’இப்ப என்ன அவசரம் ஒனக்கு, அப்பா கவலையில இருக்காங்க. கொஞ்ச நாள் போவட்டும்”’ என்று ஆத்திரத்துடன் சொன்னேன்.

அன்று காலை ஏதோ விஷயத்துக்காக எனக்கும் தம்பிக்கும் சண்டை வந்தது. அவன் என்னை தனியே அழைத்துப் போய் எச்சரிப்பதுபோல் சொன்னான். ’’அம்மா, அப்பாவுக்கு ஒன் விஷயம் தெரியாது. எனக்குத் தெரியும். அந்த பெட்டில இருக்குற லெட்டர்ஸ் வெளில தெரிஞ்சா எல்லாம் நாறிப் போய்டும். என்னிக்காவது தெரியாம போகாது’’ என்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். எனக்கு அடிவயிற்றிலிருந்து ஒரு நடுக்கம் வந்தது. நான் ஒரு சொல்லும் சொல்லாமல் நிராதரவாக அவனைப் பார்த்தேன்.

அவன் முன்பு மாதிரியில்லை. பதினொன்றாம் வகுப்பிலிருந்து தகாத மாணவர்களின் சேர்க்கையால் ஆளே மாறிப் போயிருந்தான். பத்தாம் வகுப்புவரை என்னையே சுற்றிவரும் அந்த கல்மிஷமில்லாத சிறுவன் அவனில் இருந்து மாயமாகி இருந்தான். இவன் முற்றிலும் வேறு என்பதுபோல் ஒரு கலக்கத்தை என்னுள் உண்டுபண்ணினான்.

அன்று ஆகஸ்ட் 7. மூவரும் வெளியில் சென்றபிறகு நான் தீவிரமாக யோசித்தேன். கடிதங்களுடன் நான் கையும் களவுமாக பிடிபடுவதாகவும், என்னை திருவோணத்தில் எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் சிறைவைப்பது போலவும், அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து எனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைப்பது போலவும் காட்சிகள் மனதில் வந்தன. அதற்கு என் வீட்டில் இரண்டு முன்னுதாரணங்கள் இருந்தன. என் இந்திரா அத்தை ஒருவரைக் காதலித்தபோது அவர் வேறு ஜாதி என்பதால் என் அப்பா கண்டிக்க அது போய் வயலில் இருந்த நல்ல தண்ணீர் கிணற்றில் குதித்து விட்டது. பிறகு காப்பாற்றி அதை திருவோணத்தில் சிறை வைத்தனர். எங்கள் தூரத்து சொந்த மாமா ஒருவர் போலீசில் வேலைசெய்தார். அத்தையை அவருக்கு கட்டிவைத்தனர். அவர் சரியான குடிகாரர். அதன் வாழ்க்கை நரகமானது.

ana_9641-1.jpg?w=210

இன்னொரு உதாரணம் என் ஒன்றுவிட்ட அத்தை அமராவதி .அது ஆசிரியையாக காரியாவிடுதியில் பணிபுரிந்தபோது அங்கு வேளாண் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த அலுவலருடன் காதல் வந்தது. அவர் அப்பகுதியில் உள்ள வேறு  ஒரு சமூகத்தை சேர்ந்தவர். உடனே என் தாத்தா அத்தையை நீண்டவிடுப்பு எடுக்கவைத்து வீட்டுக்காவலில் வைத்து அவசரமாக மாப்பிள்ளை பார்த்தார். ஆனால் என் அத்தையை காதலித்த அவர் வெட்டுகுத்துக்கு பேர் போன சமூகத்தை சார்ந்தவர். ஒரு காரில் நான்கு ஆட்களும் அரிவாளுமாக வந்து எங்கள் தாத்தா வீட்டு வாசலில் நின்று ’’அமராவதி, எறங்கி வா’’ என்று குரல் கொடுத்தார். என் அத்தை ஏற்கனவே தயாராக எடுத்துவைத்த சூட்கேஸோடு வீட்டைவிட்டு இறங்கி பதவிசாகப் போய் காரில் ஏறிக்கொண்டது. எங்கள் வீட்டு வீரத் திருமகன்கள் எல்லோரும் வாயடைத்து நின்றனர். புதுக்கோட்டையில் அவர்கள் திருமணம் சிறப்பாக நடந்தது.

இதையெல்லாம் யோசிக்கையில் எனக்கு உள்ளங்கை வியர்த்தது. படபடவென்று மயக்கம் வருவதுபோல் இருந்தது. எந்த நேரத்திலும் தம்பி சொல்லிவிடலாம். அவனை நம்பமுடியாது. நான் கிளம்ப முடிவெடுத்தேன். அந்த பரபரப்பிலும் நிதானமாக யோசித்தேன். அப்பாவிற்கு இரண்டு வரியில் ஒரு குறிப்பு எழுதினேன். ’சான்றிதழ்கள் வாங்க வருமாறு அழைப்பு வந்துள்ளது. நான் மதுரை செல்கிறேன். இருநாட்களில் திரும்பி விடுவேன்’ என்று. நான்கு புடவைகள், அத்யாவசியத் துணிகள், சான்றிதழ்கள், அனைத்து கடிதங்கள், என்னிடம் மீதமிருந்த பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டேன். பெட்டியிலோ சூட்கேஸிலோ கொண்டுபோனால் சந்தேகம் வரலாம் என்பதால் லெதர் பேக்கில் எடுத்துக் கொண்டேன்.

கழுத்து செயினை கழற்றி வைத்து சென்றாலும் சந்தேகம் வரலாம் . அதனால் அதைப் போட்டுக் கொண்டேன். காலை உணவு சாப்பிட்டு வீட்டைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து மதுரை செல்வதாக சொல்லிக் கிளம்பினேன். ஜெயனுக்கு தகவல் கொடுக்க தொலைபேசி நிலையம் சென்று பேசலாம் என்று நினைத்த மறுகணமே என் அப்பா வேலை பார்க்கும் பள்ளியை அடுத்து அது இருப்பது நினைவுக்கு வந்தது. தலைமைதபால் நிலையமும் அங்குதான் இருந்தது. அங்கு சென்று தந்திகொடுத்தால் அதுவும் ஆபத்து. அப்பாவிற்கு தெரிந்த நிறைய ஊழியர்கள் அங்கு இருந்தனர். அடுத்த பஸ் பிடித்து அப்பா வந்துவிடலாம்.

ஆகவே நேரெதிர் திசையில் சென்று பஸ் நிலையத்தை ஒட்டியிருந்த சிறிய தபால் அலுவலகம் போய்’’ இங்கு தம்பியால் பிரச்சனை. கிளம்பிவிட்டேன். இன்று மாலை தருமபுரி வருவேன். அருணா.’ என்று ஜெயனுக்கு தந்திகொடுத்தேன். ஜெயன் என்ன நினைப்பார்? குழம்புவாரா? ஆனால் சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. ஆபத்து வரும்வரை காத்திருக்காமல் எடுத்த புத்திசாலித் தனமான முடிவு என்றுதான் நினைப்பார். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து யாரேனும் தெரிந்தவர்கள் உள்ளனரா என்று பார்த்தேன். யாரும் இல்லை. ஏனெனில் நான் மதுரைக்கு பதிலாக தஞ்சாவூர் அல்லவா செல்கிறேன். அங்கிருந்து திருச்சி, திருச்சியிலுருந்து சேலம், பிறகு தருமபுரி.

பேருந்து நகர ஆரம்பித்து காற்று முகத்தில் பட்டதும்தான் படபடப்பு குறைந்தது. ஆனால் சிறிதுதூரம் சென்றதும் நினைவுகள் பின்னோக்கி சென்றன. அப்பா, அம்மாவை பொய்சொல்லி ஏமாற்றிய குற்றவுணர்ச்சி என்னைக் கொன்றுகொண்டிருந்தது. என் பாட்டிகள், தாத்தா, அத்தை, மாமா பிற சொந்தங்கள் அனைவரையும் நினைத்துக் கொண்டேன். எல்லோரையும் என்றென்றைக்குமாக இழக்கவேண்டி வருமோ என்ற எண்ணம் மனதைப் பிசைந்தது. எனக்கு வேறு வழியுமில்லை. எல்லா தெய்வங்களையும் வேண்டினேன். பிறகு சமாதானம் ஆகிவிடவேண்டும் என்று. கண்ணீர் என்னையறியாது கன்னத்தில் வழிந்து பேருந்தின் காற்றில் உலர்ந்துகொண்டிருந்தது. ’என்னை மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்’ என்று மனம் பிதற்றியது.

ஆனால் ஜெயனின் நினைவு எனக்கு ஆறுதல் அளித்தது. அவருக்காக உலகையே நிகர்வைக்க என் மனம் தயாராக இருந்தது. துலாக்கோலின் ஒரு தட்டில் அவரை வைத்தால் மறுதட்டில் எதைவைக்கவும் நான் சித்தமாக இருந்தேன். என் அனைத்து சொந்தங்களையும், ஆசை, அபிலாஷைகளையும் கூட. என் உடல்,பொருள், ஆவி அனைத்தையும். காதலின் வல்லமையை அதுவரை நான் காவியங்களில்தான் கற்றிருந்தேன். அதை முழுமையாக உணர்ந்தது அந்நாட்களில்தான்.

அடுத்தடுத்த பேருந்துகளில் களைப்பினால் தூங்கிவிட்டேன். இடையில் சாப்பிடவில்லை. திருச்சியில் இறங்கி ஒரு தேனீர் மட்டும் குடித்தேன். மாலை ஒரு நான்கு மணிபோல சேலம் சென்று இறங்கியபோது நல்ல மழை. அப்போது இப்போதைய பெரிய பேருந்துநிலையம் இல்லை. சேலத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் அப்போது இருந்தன. திருச்சி பஸ் என்னைக் கொண்டு விட்ட நிலையத்தில் தருமபுரி பஸ் வராது என்றனர். நான் அங்கு விசாரித்து வேறு ஒரு டவுன் பஸ் பிடித்து இந்த சிறிய பஸ் நிலையம் வந்தேன். மழைக்கு ஒதுங்கிய நிறையபேர் ஒரு சிறிய ஒதுங்குமிடத்தில் முண்டியடித்தனர். நானும் போய் அவர்களுடன் நின்றுகொண்டேன்.

பத்தே நிமிடத்தில் தருமபுரி, தருமபுரி என்று நடத்துநர் கூவியபடி ஒரு பேருந்து வந்து நின்றது. அதில் இடம் இருந்தது. நனைந்தபடியே ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டேன். காதடைக்கும் சத்தத்துடன் பாடல் ஒலிக்க அந்தபஸ் அதிவேகமாக சென்றது. சிறிதுநேரத்தில் பாடல் நின்றது. மழையில் நனைந்த மலைகளும், அந்த ஈரமான சாலைகளும் என் மனதில் ஆசுவாசத்தையும், அமைதியையும் கொண்டுவந்தன. என் ஜெயனை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சற்றுநேரம்தான். என் வாழ்நாள் முழுவதும் என் இனியவனின் அருகிலிருப்பேன்.

தருமபுரி பேருந்துநிலையத்தில் இறங்கி தொலைபேசி நிலையத்தின் வழியை விசாரித்தேன். நேர்ச்சாலையைக் காட்டினார்கள். இத்திசையில் சென்றால் பெரிய கட்டிடம் அதுதான். அருகில்தான் என்றனர். வாசலில் ஒரு சீருடை அணிந்த ஒருவர் ’நீங்கள் யாரைப் பார்க்கவேண்டும்’ என்றார். ’ஜெயமோகன்’ என்றதும் ஒரு பேரேட்டைக் காட்டி அதில் பேர் எழுதி ஒப்பம் இட்டு உள்ளே போகச்சொன்னார்.

மாடியில்தான் அலுவலகம் இருந்தது. அது மூன்றுமாடிக் கட்டிடம். நான் சென்றதும் அங்கு ஒரு அட்டெண்டர் இருந்தார். அவரிடம் நான் ’ஜெயமோகனைத் தேடிவந்திருப்பதாக கூறி அவரை பார்க்கவேண்டும் ’என்றேன். அவர் ’ஜெயமோகன் மதியம் ஒரு மூன்று மணிக்கு வெளியில் சென்றார். இப்போது இங்கு இல்லை’ என்றார். எனக்கு ஒரு சிறிய ஏமாற்றம் வந்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் ’’ஏ. ரமேஷ் இருக்கிறாரா?’’ என்றேன். ஏ.ரமேஷ் ஜெயனின் நெருங்கிய நண்பர் என்று எனக்குத் தெரியும்.’’ இருக்கார். கூப்பிடுறேன்’’ என்றவர் ரமேஷை அழைத்து வந்தார். அவர்தான் ஜெயனுக்கு நான் பதிலாக அனுப்பிய காதல் தந்தியைப் பார்த்து கிண்டலடித்தவர்.

வெளியில் வந்தவர் மிகுந்த பரிச்சயமானவர் போல என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

வாங்க, மோகன் ஒங்க தந்தியப் பார்த்து மூணுமணிக்கு கிளம்பி சேலத்துக்குப் போனான் ஒங்கள ரிசீவ் பண்ண.

நான் வரும்போது நல்ல மழ. ஒடனே பஸ் ஏறிட்டேன்.

சரி, வாங்க. இங்க லேடீஸ் டோர்மெட்ரில வெயிட் பண்ணுங்க. வந்துருவான்.

நான் போய் அங்கு அமர்ந்துகொண்டேன். அங்கு யாரும் இல்லை. பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து அமர்ந்துகொண்டேன். எனக்கு அந்த அட்டெண்டர் தேனீர் கொண்டுவந்து தந்தார். குடித்ததும் தெம்பாக இருந்தது. நான் அங்கு கிடந்த பத்திரிக்கைகளை புரட்டியபடியே காத்திருந்தேன். ஏழுமணி ஆகியது. ரமேஷ் வந்து ’’அவன் அங்குதான் காத்து நிற்கிறான் போலிருக்கிறது. நீங்கள் இனி இங்கு இருக்கவேண்டாம். என் வீட்டில் கொண்டு விடுகிறேன். என் அம்மா, அப்பா இருவரும் இருக்கிறார்கள். நீங்கள் அங்கு காத்திருங்கள். நான் அவன் வந்தவுடன் அழைத்துவருகிறேன்”’ என்றார்.

ரமேஷ் வீடு அருகிலேயே இருந்தது. நடுவில் அங்கணம் வைத்த வீடு. ரமேஷின் அம்மா எனக்கு காஃபியும், தின்பண்டமும் தந்தார். ரமேஷின் அம்மாவும் அப்பாவும் என்னைக் கேள்விகளால் துளைத்தனர். வீட்டிற்கு தெரியாமல் வந்த ஒரு பெண்ணை இச்சமூகம் எப்படிப் பார்க்குமோ அப்படியே இருந்தது அவர்கள் பார்வையும் மனோபாவமும். சிறிய ஒரு குற்றவுணர்வும் சங்கடமும் எனக்கு வந்தாலும் பொறுத்துக் கொண்டேன். நேரம் மெதுவாக ஊர்வதுபோல் எனக்குத் தோன்றியது.

ஒரு எட்டேமுக்கால் மணி இருக்கும். வாசலில் பேச்சுக்குரல்கள். வேகமாக திண்ணையை நோக்கி சென்றேன். ஜெயன் உள்ளேவந்தவர் என்னைப் பார்த்து விரைந்துவந்தார். அருகில் சென்றதும் சூழல் மறந்து என்னைத் தழுவிக்கொண்டார். பக்கத்திலேயே ரமேஷும், அவர் தந்தையும் இருப்பதை உணர்ந்து நான் விடுவித்துக்கொண்டேன். சிறிதுநேரத்தில் அங்கிருந்து ஒரு காரில் ரமேஷின் அக்கா லக்‌ஷ்மி அவர்கள் இருக்கும் செந்தில் நகருக்கு சென்றோம். ரமேஷ் அக்காவின் கணவர் எங்களை அழைத்துசென்றார். ரமேஷின் அக்கா கலப்பு திருமணம் செய்துகொண்டவர் வீட்டாரின் சம்மதமின்றி. ரமேஷின் அம்மா, அப்பா இருவரும் மிக ஆசாரமான பிராமணர்கள்.

காரில் போகும்போது ஜெயன் சேலத்தின் முந்தைய பேருந்துநிலையத்தில் எனக்காக காத்திருந்ததையும், பிறகு விசாரித்து இங்கு வரும்போது நேரமாகி விட்டது, நான் கிளம்பியதை அறியாமல் அங்கும் காத்து நின்றதையும், பிறகு மிகுந்த கவலையுடன் தொலைபேசி நிலையம் கூப்பிட்டு ரமேஷிடம் சொல்ல, அவர் நான் ஐந்தரை மணிக்கே இங்கு வந்த தகவலை தெரிவித்ததையும் சொன்னார். ஜெயன் தான் பதறிப்போனதாகச் சொன்னார். உண்மையில் அந்த பதற்றமும், துடிப்பும் அவரிடம் இருந்ததை நான் உணர்ந்தேன்.

 ”’நான் என்ன சின்னப் பிள்ளயா, எனக்கு வரத்தெரியாதா?’’

’’ஒனக்குத் தெரியாது, அந்த பஸ் ஸ்டாண்ட் அவ்ளோ சேஃப் கெடயாது’’

அவர்கள் வீட்டில் சென்றவுடன் நான் மிக இயல்பானேன். லக்‌ஷ்மி மிக அன்பானவர். அவர்கள் வீட்டினரின் அந்நியோன்யம் நம்மை சொந்தம்போல் உணரவைக்கும். அவர்களின் இருகுழந்தைகளோடும் நான் கேரம் விளையாடி சிரித்துக் கொண்டிருந்தேன். ஜெயன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாக் கவலைகளையும், பொறுப்புகளையும் நான் ஜெயனிடம் விட்டுவிட்டேன். அவர்கள் வீட்டு ஃபோனில் இருந்து மாறி, மாறி பலரையும்  அழைத்து மறுநாள் நடக்கவேண்டிய எங்கள் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.

அன்றைய இரவின் தனிமையில் நான் ஜெயனிடம் வீட்டில் நடந்த நிகழ்வுகளை சொன்னேன். நான் கிளம்பி வந்ததுதான் புத்திசாலித்தனம் என்றார். கொந்தளிப்பான இரவு அது.

மறுநாள் ஆகஸ்ட் 8. அன்று குளித்துக் கிளம்பி பட்டுப் புடைவை உடுத்து , ஜெயன் வேட்டி சட்டை அணிந்து காமாட்சி கோவில் சென்றோம். அங்கு ஜெயனின் அலுவலக நண்பர்கள் ஒரு பத்துபேர், யூனியன் தலைவர் நாராயணசாமி , லக்‌ஷ்மி வீட்டினர் முன்னிலையில் ஜெயனுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் முழு அர்த்தம் கூடப் புரியாத விளையாட்டுத் தனமான சந்தோஷத்துடன் நான் இருந்தேன்.

 பிறகு சில நண்பர்களுடன் நாங்கள் திருமணப் பதிவு அலுவலகம் சென்றோம். மாலையும், கழுத்துமாக அங்கு போனோம். பதிவு முடிந்து அனைவருக்கும் ஸ்ரீராமா ஹோட்டலில் விருந்து சாப்பாடு. பிறகு ரமேஷ் அக்கா வீடு சென்றோம். போனதும் ஜெயன் என் அப்பாவுக்கும், அவர் அண்ணாவுக்கும் மன்னிப்பு கோரி ஒரு நீண்ட விளக்கக் கடிதம் எழுதினார். அதைக் கொரியரில் சேர்ப்பித்தோம்.

மறுநாள் அதிகாலை கிளம்பி சேலம் சென்று அங்கிருந்து திருச்சூர்க்கு ரயிலில் சென்றோம். ஆற்றூர் ரவிவர்மா வீட்டிற்கு. பத்து நாட்கள் அங்கு. பிறகு நாகர்கோவில் சு.ரா இல்லத்தில் ஒரு பத்து நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.

நாகர்கோவிலில் சு. ரா. வீட்டில் தங்கியிருந்தபோது ஜெயனின் அண்ணன் பாலசங்கர் எங்களை நேரில் பார்க்கவந்தார். ஒரு பூங்காவில் வைத்து சந்தித்து பேசினார். ஜெயனும் அவரும் மலையாளத்தில் மாறி மாறி பேசிக்கொண்டனர். ஒரு வார்த்தைகூடப் புரியாமல் நான் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் ஜெயனிடம் கோபமான முகத்துடன் பேசியவர் மெல்ல மெல்ல தணிந்தார். என்னிடம் ஒரு சிறிய புன்முறுவலுடன்’’ ஒண்ணும் பயப்படாதீங்க, ஒங்க அப்பா, மாமா எல்லாரும் சமாதானம் ஆயாச்சு. ஜெயன் எல்லாத்தையும் சொல்லுவான்’’ என்று கூறிக் கிளம்பிவிட்டார்.

நான் மிகப்பெரிய ஆசுவாசம் அடைந்தேன். ஜெயன் எல்லாவற்றையும் விளக்கினார். ஜெயனின் கடிதம் கிடைத்ததும் அப்பாவும் மாமாவும் கிளம்பி தருமபுரி தொலைபேசி நிலையம் வந்திருக்கின்றனர். நாங்கள் அங்கு இல்லையென்பதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். அப்போது நாங்கள் திருச்சூரில் ஆற்றூர் வீட்டில் இருந்தோம். ரமேஷ் அவர்களை ஓர் அறை எடுத்து தங்கவைத்து , ஆற்றூர் வீட்டு தொலைபேசியில் ஜெயனைத் தொடர்பு கொண்டார். ஜெயன் நாகர்கோவிலில் இருக்கும் தன் அண்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் அப்பாவிடம் சென்று தருமபுரியில் பேச்சுவார்த்தை நடத்துமாறு சொன்னார்.

அவர் அண்ணன் தருமபுரி சென்று என் அப்பாவிடமும், மாமாவிடமும்  ’’என் தம்பி செய்தது மிகப் பெரிய தவறு. நான் முதலில் உங்கள் இருவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். உங்கள் பெண்ணை நான் குறை சொல்லவில்லை. அவள் சின்னப்பெண். தம்பி சொல்லிவிடுவான் என்ற பயத்தில் அவள் கிளம்பி வந்திருக்கிறாள்.  இவனுக்கு எங்கே போயிற்று புத்தி? என்னிடம் கூட அவன் ஆலோசனை கேட்கவில்லை. எல்லாம் அவசரமாக நடந்துவிட்டது. ஆனால் ஒரு உறுதியை மட்டும் என்னால் கொடுக்கமுடியும். உங்கள் பெண்ணை அவன் தங்கம் போல் தாங்குவான். அவனுக்கு குடி, சிகரெட் எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லை. திருமணம் வேண்டாம் என்று காலத்தைக் கடத்தியவன் இப்போது அவனாக விரும்பி செய்து கொண்டதால் நான் சந்தோஷப் பட்டேன். ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்தது மிகப்பெரிய தவறு.’’ என்று கூறினாராம்.

என் அப்பா அவர் சொல்லச் சொல்ல கண்கலங்கி துண்டால் துடைத்துக் கொண்டே இருந்தாராம். கடைசியில் அண்ணாவின் பேச்சில் சமாதானம் ஆகி திருமணம் சொந்தக்காரர்களுக்காக மீண்டும் நடத்தவேண்டும் என்றாராம் அப்பா. அதற்கான ஏற்பாடுகளை நானே செய்கிறேன் என்று இவர் அண்ணா கூற வரவேற்பை மட்டும் பட்டுக்கோட்டையில் வைக்க வேண்டும் என்று அப்பா சொன்னாராம்.

அருணா, என் அண்ணா ஒங்க அப்பாவப் பத்தி என்ன சொன்னார் தெரியுமா? தங்கமான மனுஷண்டா, அவரப் போய் ஏமாத்திட்டியேன்னு. அப்புறம் ஒன்னப் பத்தியும் அவருக்கு திருப்திதான். நல்ல ஃபேமிலிலர்ந்து வந்த பொண்ணு. நல்ல குணமா தெரியுது. நீ படிச்ச பொண்ணு. அதனால என்ன கண்கலங்காம வச்சு காப்பாத்துவன்னு.

அய்யே…ஆளப்பாரு…

எனக்கு அப்பாவும், மாமாவும் சமாதானம் ஆகி சென்றதும், என் அம்மாவையும் அப்பா சமாதானம் செய்து விடுவார் என்று தோன்றியது. நான் என் உறவுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுவிடுவேன் என்பது அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. மீண்டும், மீண்டும் கடவுளுக்கு நன்றி சொன்னேன் மனதிற்குள்.

செப்டம்பர் 5 அன்று குமாரகோவில் முருகன் கோவிலில் திருமணமும்,  செப்டம்பர் 7 அன்று பட்டுக்கோட்டை மினிப்பிரியாவில் வரவேற்பும் நடந்தது. செப்டம்பர் மூன்றாம் தேதியே எங்கள் பெற்றோர் , நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் நாகர்கோவில் வந்துவிட்டனர்.

அம்மா என்னைப் பார்த்தபோது ’பாப்பா’ என்று அழுதபடி வந்து தழுவிக்கொண்டாள். அப்பாவிடம் நான் மெல்லிய குரலில் ’’எனக்கு வேற வழி தெரியல, சாரிப்பா’’ என்றேன். அப்பா ’’சரி, விடு கழுத’’ என்றார். அத்தையும் மாமாவும் ’’ஒன்ன ஒதைக்கணும்,’’ என்று உரிமையும் கண்டிப்புமாக கூறினர். பார்க்கப்போனால் ஜெயன் என் அப்பாவிற்கு எழுதிய கடிதம் அப்பாவின் கையில் கிடைக்கும் வரை தனக்குத் தெரிந்த எந்த உண்மையையும் என் தம்பி கூறியிருக்கவில்லை. நான்தான் அவசரப்பட்டு அவனைத் தவறாக நினைத்துவிட்டேன்.

img-20220422-wa0011.jpg?w=320

உண்மையில் நான் ஜெயனின் பொருட்டு பெருநியதியுடன் எந்த ஆட்டத்தையும் ஆடத்துணியவில்லை. அதன் காலடியில் என்னை முழுவதும் அர்ப்பணித்து சரணடையவே விழைந்தேன். ஆற்றூர் சொன்னது போல் அந்த இரு நெல்லிக்காய்களும் அருகருகே அமைவது பெருநியதியின் பெருங்கருணையால் நிகழ்வதே. வாழ்வெனும் மாபெரும் புதிரான சதுரங்க ஆட்டத்தில் விழும் பகடைகளின் நிகழ்தகவுகள் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை, எண்ண ஒண்ணாதவை, எண்ணில் அடங்காதவை. ஆனாலும் பெருநியதி என்னிடம் மிகுந்த கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும். ஆம், அது அவ்வாறேயிருக்கும்.

***

https://arunmozhinangaij.wordpress.com/2022/06/15/நிலத்தினும்-பெரிதே-வானி-2/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – கடிதங்கள்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கடிதம்

 

kesavamani_amuttu.webp?w=213

வணக்கம் அருண்மொழி,

உங்கள் ’நிலத்தினும் பெரிதே’ கட்டுரையை படித்தேன். நான் தொடங்கும் போது ஏழு, எட்டு பக்கமிருக்கும் என நினைத்தேன். என்னால் யோசிக்கவே முடியவில்லை. அறுபத்தி மூன்று பக்கம் எழுதியிருக்கிறீர்கள். அதனை தொடங்கிய பிறகு கீழே வைக்க முடியவில்லை. அப்படியே ஒரே இடத்திலிருந்து அதனைப் படித்து முடித்துவிட்டு தான் அடுத்த வேலை பார்த்தேன். நீங்கள் இதனையே பிடித்துக் கொள்ளுங்கள், அருமையாக இருந்தது, அற்புதமாக இருந்தது. இந்த எழுத்தை தான் நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல வடிவாக, நல்ல லாவகமாக வருகிறது.

நீங்கள் ஆரம்பித்த விதம், ஆற்றூர் ரவிவர்மாவிடம் போனது அதில் தொடங்கி அதிலிருந்து உங்கள் கல்லூரி வாழ்க்கைக்குள் செல்கிறது. 1990 ஜூன் அதிலிருந்து உங்கள் கல்யாணம் வரை சிறப்பாக சொல்லியிருந்தீர்கள். எழுத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் இடையிடையே நீங்கள் சொல்வது போலிஸ்காரர்கள் கடிதங்களை எடுத்து சென்றுவிட்டார்கள் எனச் சொன்னதும் உங்களது கடிதங்கள் அவங்க கையில கிடைக்க போகுது என நீங்கள் பதறும் இடம் நன்றாக வந்திருக்கிறது. அணில் பாய்ந்த போது இருவருக்குமான நெருக்கம், நீங்க வடநாடு போன போது என எல்லா இடங்களும் நன்றாக வந்திருக்கிறது.  இதே மாதிரி எழுதுங்கள்.

You have got it. இனி உங்களுக்கு ஒருவித பிரச்சனையும் இல்ல. You are a Senior Writer. உங்கள் எழுத்து அவ்வளவு முதிர்ச்சியாக இருந்தது. இதில் முக்கியமான விஷயமென்றால் சுவாரஸ்யம், எடுத்து படிக்கத் தொடங்கின உடனே கடைசி வரைக்கும் உங்கள் எழுத்துக் கொண்டு போறதுயிருக்கில்ல அது ரொம்ப முக்கியம். தொடர்ந்து செய்யுங்கள். பெரிய வாழ்த்துக்கள். அவரது பிறந்தநாள் பரிசாக இதை கொடுங்கள். பெரிய சந்தோஷமாக இருக்கு, நல்லது. இதே போல் எழுதுங்கள். வணக்கம்.

உங்கள் காதல் கதை உலகையே சுற்றிவருகிறது. சுனாமி அலையாக மற்ற எல்லாவற்றையும் அடித்துவிட்டது.

அ. முத்துலிங்கம்,

டொராண்டோ

https://arunmozhinangaij.wordpress.com/2022/07/01/நிலத்தினும்-பெரிதே-வானி-3/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரொம்ப பிரச்சினை இல்லாத அழகான ஒரு காதல் கதை.......வாழட்டும் காதல்......!  👍

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரியாக தான் சொல்கிறார். இது தமிழர்களின் எதிர்காலம் சார்ந்த பொதுமுடிவாக இருக்கணும்.
    • கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ மாவை மீது குற்றம்    ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது.   ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள்.  எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால்  திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும்   என குறிப்பிட்டுள்ளார்.  மாவை மீது குற்றம்    ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது.   ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள்.  எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால்  திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும்   என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/tamil-arasuk-katchi-internal-politics-1734860121?itm_source=parsely-detail
    • நோர்வேயும் ஒரு ஆணியும் புடுங்கவில்லை இந்த விசர் சுமத்திரனும் ஒன்றும் புடுங்கவில்லை இதை ஒரு செய்தியாய் போடுபவர்களை தான் குற்றம் சொல்லனும் .
    • தேர்தலில் தோல்வியுற்ற, “முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்” “சுத்துமாத்து சுமந்திரனுக்கு”, நோர்வே தூதரகத்தில் என்ன  வேலை. 😂 கடந்த 15 வருசமாய் புடுங்கின ஆணி காணாது என்று, வெட்கம் இல்லாமல்… இப்பவும் புடுங்க நிற்கிறார். 🤣
    • எலான் முன்னர் அறிவித்தது போல் முதலில் கலிபோர்னியா   நகரங்களான லொஸ்  ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே மணிக்கு 700 மைல் வேகத்தில் செல்லும் ஹப்பர் லூப் திட்டத்தை நிறைவேற்ற எலானிடம்  சொல்லுங்க அதன் பின் பார்க்கலாம் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.