Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை! - ராஜன் குறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை!

Apr 03, 2023 07:02AM IST ஷேர் செய்ய : 
iYVFF0Y4-Untitled-1.jpg

ராஜன் குறை

வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். தாலுக்கா தலைநகர். இந்த ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்கள், தாழ்த்தப்பட்டோர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஒரு சத்தியாகிரக போராட்டம் நூறாண்டுகளுக்கு முன் 1924ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அறுநூற்று மூன்று நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், வெற்றிகரமாக தடை நீக்கப்பட்டவுடன் நிறைவடைந்தது.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை அழைத்தார். தமிழ் நாட்டு முதல்வர் சென்று கலந்துகொண்டார். இரண்டு முதல்வர்கள் நாட்டில் மீண்டும் தலையெடுக்கும் மதவாத சக்திகளை முறியடிக்க உறுதி பூண்டார்கள். திராவிட, பொதுவுடமை சித்தாந்த ஒருங்கிணைப்பின் வெளிப்பாடாக, முற்போக்கு இயக்கங்களின் ஒருமிப்பாக இந்த நிகழ்வு அமைந்தது சிறப்பானது.

இவ்வாறு தமிழ்நாட்டு முதல்வரை அழைக்க முக்கிய காரணம், தமிழ்நாட்டிலிருந்தும் பலர் அந்தப் போராட்ட த்தில் பங்கெடுத்தது. அதில் மிக முக்கிய பங்கினை செலுத்தியவர் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக அந்த ஆண்டு பதவி வகித்த பெரியார். வைக்கம் போராட்டத்துக்கு அவர் செய்த தீரமிக்க பங்களிப்புக்காக அவர் “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார்.  

அக்காலத்தில் அவரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றே குறிப்பிட்டார்கள். அவர் ஜாதிப்பட்டத்தை துறந்ததுடன், தமிழ்நாட்டில் யாருமே ஜாதிப் பெயரை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் சூழலையும் உருவாக்கினார். அவருடைய தன்னலமற்ற தொண்டுக்காக பெரியார் எனப் பெண்கள் மாநாட்டில் அழைக்கப்பட்டார். அந்தப் பெயரே இன்று அவரைக் குறிப்பிடும் பெயராக விளங்கி வருகிறது.  

பெரியாரின் வைக்கம் பங்கேற்பு அவரை ஜாதீய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளில் கூர்மைப்படுத்தியது. அதன் பிறகுதான் அவர் காங்கிரஸிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலமாக பார்ப்பனீய, ஜாதீய கருத்தியலுக்கு எதிரான கடுமையான, ஓய்வில்லாத பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

பெரியாரின் அந்த இயக்கமே தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை மக்கள் பேரியக்கமாக காலப்போக்கில் வடிவமைத்து, இன்று திராவிட மாடல் ஆட்சி என இந்தியாவே வியந்து நோக்கும் வரலாற்று திசைவழியை தீர்மானித்தது என்றால் மிகையாகாது. அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசும் வைக்கம் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடும் என அறிவித்துள்ளார்.

வைக்கம் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம்

வைக்கம் போராட்டத்தின் முக்கியத்துவம் என்பது என்னவென்றால் முதன் முறையாக இந்தியாவில் நவீன அரசியல் சக்தி பார்ப்பனீய சனாதன சக்திகளை, தர்ம சாஸ்திர ஒடுக்குமுறைகளை நேரடியாகப் போராட்டக்களத்தில் சந்தித்தது என்பதுதான்.

நவீன அரசியலின் அடிப்படை பாரதியின் வார்த்தைகளில் “எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்பதாகும். பார்ப்பனீயம், சனாதனம் என்பது என்னவென்றால் அது பிறப்பின் அடிப்படையில் வர்ணங்களையும், ஜாதிகளையும் பிரித்து உயர்வுதாழ்வு கற்பிப்பதாகும்.

வைக்கம் போராட்டத்தின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்து பழ.அதியமான் “வைக்கம் போராட்டம்” என்ற அருமையான நூலை எழுதியுள்ளார். இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அது மலையாள மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரின் முக்கிய பங்களிப்பினை சிறப்புற வெளிப்படுத்தும் அந்த நூலில், ஒரு சுவாரஸ்யமான பகுதி உள்ளது.

Periyar Vaikom Satyagraha special story RajanKurai

அது என்னவென்றால் வைதிகர்கள் எனப்படும் சனாதன சக்திகளுடன் காந்தி 1925 மார்ச் 10 அன்று இந்தன் துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பியாத்ரி இல்லத்தில் சந்தித்து உரையாடிய சம்பவம். அந்த உரையாடலில் காந்தி ஓர் இடத்தில் முக்கியமான கருத்தைக் கூறுகிறார். ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்களைக் கொன்று குவித்த ஜெனரல் டயர் எவ்விதமான மனப்போக்கில் இயங்கினானோ, அதே மனப்போக்கில்தான் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்கக் கூடாது என்று கூறுகிறீர்கள் என காந்தி சொல்கிறார்.

ஜெனரல் டயர் இந்தியர்களை ஆங்கிலேயர்களுக்கு சமமான மனிதர்களாக மதிக்கவில்லை. அதேபோலத்தான் பார்ப்பனீய மனோபாவமும், ஒடுக்கப்பட்ட ஜாதிகளை சமமான மனிதர்களாகவே நினைப்பதில்லை. இதை நாம் பார்ப்பனீய மனோபாவம், ஆரிய சிந்தனை என்று சொல்ல முக்கிய காரணம் சமஸ்கிருத நூல்களில்தான் இந்தக் கருத்துகள் வலுவாக எழுதப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது என்பதால்தான். மக்களின் இறை நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட பூசாரி வர்க்கம், இதை கடவுளின் சித்தமாக மக்களிடையே பரப்பியது.

உதாரணமாக காந்தியிடம் வாதிடும் நம்பூதிரி, முற்பிறவியில் செய்த பாவத்தினால்தான் ஒருவர் தாழ்ந்த ஜாதியில் பிறக்கிறார். அதனால் கடவுளின் எண்ணப்படி அவர்களுக்கு உரிமைகளை மறுப்பதுதான் சரியானது என வாதிடுகிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிறவியே ஒரு தண்டனைதான், அதை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் எண்ணம் என்பதே பார்ப்பனீயத்தின் பார்வையாகும். அதையே அனைவரும் ஏற்கும்படி பரப்பியதைத்தான் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கம் (Brahmin Hegemony) என்று அழைக்கிறோம்.

இந்தக் கருத்தியல் மேலாதிக்கத்துக்கு எதிராகத்தான் பொங்கியெழுந்தார் பெரியார். ஆனால், அவர் பண்டிதர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கவில்லை. வைக்கத்திலும் சரி, அதன் பிறகும் சரி, நேரடியாக பாமர மக்களிடம் சென்றார். அவர்களுக்குப் புரியும் எளிமையான மொழியில் இந்தக் கருத்தியலில் அடங்கியுள்ள சூதினை எடுத்துச் சொன்னார். பார்ப்பனர்களின் புராணங்களை கேலி செய்தார். கடவுள் நம்பிக்கைக்கு சவால் விடுத்தார்.

பெரியாரை வைக்கம் வீரர் என்பது வைக்கம் சத்தியாகிரகத்தில் அவர் என்ன பங்களித்தார் என்பதற்காக மட்டுமல்ல. அவர் வைக்கத்தில் ஏந்திய தீப்பந்தத்தை, சுயமரியாதை சுடரொளியை அதன் பிறகு அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து விடாமல் ஏந்தி வந்தார் என்பதற்காகவும், தொடர்ந்து பார்ப்பனீய, ஜாதீய, சனாதன கருத்தியலுக்கு எதிராக நவீன முற்போக்கு சிந்தனையை தளராமல் உயர்த்திப்பிடித்தார் என்பதற்காகவும்தான்.  

Periyar Vaikom Satyagraha special story RajanKurai

பார்ப்பனீயத்தின் மக்கள் வெறுப்பு

சூத்திர, பஞ்சம மக்களுக்கு பிறப்பே அவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்துக்கு தண்டனைதான் என்றும், தீண்டாமைக் கொடுமைகளை, சமூக விலக்கங்களை அவர்கள் அனுபவிப்பதுதான் கடவுளின் சித்தம் என்றும் கூறிய பார்ப்பனீயம் எவ்வளவு கடுமையான வெறுப்பை உழைக்கும் மக்கள் மீது செலுத்தியது என்பதை இன்று யாரும் பேசுவதில்லை. இன்றைக்கும் அந்த வெறுப்பு ஜாதீயவாதிகள் மனதிலே கனன்று கொண்டுதான் இருக்கிறது.

பெரியார் அத்தகைய உறைநிலை வெறுப்பை, மனிதனை மனிதனே கீழமைப்படுத்தும் வெறுப்பை, பெண்களை ஆண்கள் கீழ்மைப்படுத்தும் வெறுப்பை கடுமையாக இகழ்ந்தார், அந்த வெறுப்புக் கருத்தியலை எதிர்த்துப் போராடினார் என்பதற்காக பெரியாரை பார்ப்பன வெறுப்பாளர் என்று இன்றும் கூசாமல் சொல்கின்றனர்.

இன்றுவரை இந்து மத சாமியார்கள், குருமார்கள், பண்டிதர்கள் எனப்படுபவர்கள் வர்ண தர்மம் என்பது தவறான கற்பனை, நவீன காலத்துக்குப் பொருந்தாது, பிறப்பினால் யாரும் எந்த சமூக அடையாளத்தையும் பெற முடியாது என்று அறிவித்துள்ளார்களா?

இன்றும் கூட பிறப்பிலேயே ஒருவர் பார்ப்பனர், மற்றொருவர் இந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையைத்தானே ஆதரிக்கின்றனர்? அவ்வாறு பிறப்பிலேயே அடையாளம் இருக்க வேண்டும் என்றுதானே அகமணமுறையை தீவிரமாக ஆதரிக்கின்றனர்? இன்றும் இந்தியாவின் அதிகார மையங்களில் பார்ப்பன, பனியா குடும்பங்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றன?

திருவள்ளுவர் தெள்ளத் தெளிவாக சொன்னாரே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” என்று, அதுதான் இந்து மத தர்மமும் என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா? முடியாது. ஏனெனில் முற்பிறவியில் செய்த செயல்களின் பலனாகவே இந்தப் பிறவி அமைகிறது. எனவே பிறவியிலேயே ஏற்றத்தாழ்வு தீர்மானிக்கப்படுகிறது என்பதே பார்ப்பனீய சிந்தனை. இதைத்தான் நம்பூதிரி காந்தியிடம் வைக்கத்தில் சொன்னார். இன்றும் பலர் நம்புகிறார்கள்.

பிறவியே தண்டனை என்பதால் பலவித தீண்டாமைக் கொடுமைகளை, சமூக விலக்கங்களை சூத்திர வர்ணத்தவரும், பஞ்சமரும் அனுபவித்துதான் தீர வேண்டும் என்றும் முற்பிறவியில் செய்த புண்ணியங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுதான் பிராமணப் பிறவி என்றும் அதனால் அவர்களை உயர்ந்தவர்களாக நடத்த வேண்டும் என்பதுதான் தர்ம சாஸ்திரம். அதை எழுதியது பார்ப்பனர்கள்தான்.

உண்மையில் பெரியார் வெறுப்பை விதைக்கவில்லை. கடுமையாகப் பேசினாலும், மூட நம்பிக்கைகளைக் களைந்து சிந்திக்கும் ஆற்றலை உருவாக்கவே பேசினார். சுயமரியாதை கொடுத்த வலிமையில் ஒடுக்கப்பட்டவர்கள் பார்ப்பனர்களை எதிர்கொண்டு கேள்வி கேட்டார்களே தவிர, யாரும் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை. சுயமரியாதை என்பதே ஒருவர் தன்னுடைய சிந்திக்கும் ஆற்றலுக்கு மரியாதை அளிப்பதுதான்.

9DaEnBnX-image.jpg

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

வைக்கம் நூற்றாண்டு விழாவை ஒட்டிய இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு இரண்டு உலகப் புகழ் பெற்ற ஆளுமைகள் இணைந்து பெரியாரை சிறப்பிக்கும் வகையில் ஒரு கர்னாடக இசைப்பாடலை வெளியிட்டிருப்பதுதான். ஒருவர் இந்த பாடலை பாடிய கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. மற்றொருவர் இந்த பாடலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன்.

இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் பெரியாரின் இயக்கத்தை வெறுப்பியக்கமாகச் சித்திரிக்கும் இந்துத்துவ சக்திகளை மறுத்து பெரியாரின் இயக்கத்தை அறிவியக்கமாக அறிமுகம் செய்வதுதான். “சிந்திக்கச் சொன்னவர் பெரியார், சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடலின் பல்லவி எப்படி பெரியார் தமிழ் அறிவொளிக்காலத்தின் சுடரொளி என்பதை தெளிவாக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

சாதிப் பிரிவினைகள் ஏன்
சாத்திர விதிமுறைகள் ஏன்
ஆதிக்க நடைமுறை ஏன்
அநீதித் தீண்டாமை ஏன்
பாதிக்கப்படுவோர் யார்
பலனடைந்து வாழ்வோர் யார்
ஏதும் அற்றோர் யார்
ஏமாற்றிப் பிழைப்பவர் யார்
மோதி உடைத்து முழுதாய் இங்கே
மாற்றம் காண முருகாய் எதையும்
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

என்ற பாடல் வரிகள் மிகத் தெளிவாய் வைக்கத்தில் தொடங்கிய பெரியார் இயக்கத்தின் அடிப்படைகளை விளக்கிவிடுகின்றன.

இந்தப் பாடலின் முக்கியத்துவம் என்னவென்றால் இரண்டு முக்கியமான புலங்களை சார்ந்தவர்கள் பெரியாரின் பெருமையை பாடியுள்ளதுதான். ஒன்று நவீன தமிழ் இலக்கியப் புலம். நவீன தமிழ் இலக்கியம் என்ற புலம் திராவிட இயக்க இலக்கியம், பொதுவுடமை இயக்க இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு நுட்ப மொழி இலக்கிய புலமாகும்.

இந்தப் புலத்தினை சார்ந்தவர்கள் பலர் காந்தியவாதிகளாக, தேசியவாதிகளாக இருப்பார்கள். முற்போக்காளர்களாக இருப்பார்கள். நவீன சிந்தனைகளை ஆதரிப்பார்கள். மேல் நாட்டு இலக்கியங்களை, சிந்தனையாளர்களை கொண்டாடுவார்கள். ஆனால் பெரும்பாலும் பெரியாரை கொண்டாடுபவர்களாக இருக்க மாட்டார்கள். காரணம் என்னவென்றால், பெரியார் கடுமையான மொழியை பயன்படுத்தினார், பாமரர்களுக்கான மொழியைப் பேசினார் என்பதுதான்.

இந்தப் புலத்தினை சார்ந்த எழுத்தாளரும், தமிழ் இலக்கிய பேராசிரியருமான பெருமாள் முருகன் பெரும் இலக்கிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இவருடைய நாவல்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச அங்கீகாரமும், விருதுகளும் இவரைத் தேடி வருகின்றன. அப்படியான ஓர் எழுத்தாளர் பெரியாரின் இயக்கத்தை வியந்து கொண்டாடும்படியான கருத்தாழம் மிக்க பாடலை எழுதியுள்ளது சிறப்பு.

அதைவிட அபூர்வமான நிகழ்வு கர்னாடக சங்கீத புலம் சார்ந்தது. கர்னாடக சங்கீதம், பரத நாட்டியம் ஆகிய இரண்டையுமே இசை வேளாளர்கள், பிற பிற்பட்ட சமூகத்தினரிடமிருந்து சுவீகரித்துக் கொண்ட பார்ப்பன சமூகம் இருபதாம் நூற்றாண்டில் அவர்களது கலாச்சார அடையாளமாகவே இவற்றை நிறுவுவதில் பெருமளவு வெற்றி பெற்றது எனலாம். குறிப்பாக சென்னையில் டிசம்பர் மாதம் நடக்கும் இசை விழா என்பது பிராமண சமூக விழாவாகவே கடந்த நூறாண்டுகளில் உருவெடுத்துள்ளது எனலாம்.

அத்தகைய கர்னாடக சங்கீத புலம்சார்ந்த பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.கிருஷ்ணா. தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் ஈர்க்கப்பட்ட அவர் இப்படி இசையானது ஒரு ஜாதியின் வட்டத்திற்குள் சுருக்கப்படுவதை ஏற்கவில்லை. அதனால் கர்னாடக இசையை மக்களிடையே எடுத்துச் செல்வதை ஓர் இயக்கமாக மேற்கொண்டார். துணிகரமாக ஜாதீய மனோபாவத்தை எதிர்த்துப் பேசினார். அவருடைய முற்போக்கான கலாச்சார முயற்சிகளுக்காக மகஸேஸே விருது பெற்றார்.

அடுத்த கட்டமாக கர்னாடக இசைப்பாடல்கள் இறைவனைத்தான் பாட வேண்டும் என்ற விதியையும் தகர்க்க முற்பட்டார். சூழலியல் குறித்த அக்கறையை வெளிப்படுத்தும் தமிழ் தனிப்பாடல்கள், பல்வேறு பொருட்களை குறித்த தமிழ் தனிப்பாடல்கள் என்று பாடி வெளியிட்டார். இந்து மத தெய்வங்களைத்தான் பாட வேண்டுமா என கிறிஸ்துவையும், அல்லாவையும் குறித்தும் பாடினார்.  இதுபோன்ற முயற்சிகளுக்காக இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்பினை ஈட்டினார்.  

இசை என்பது ஒரு சாராரின், ஒரு மதத்தின், ஜாதியின் பிடிக்குள் இருக்கக் கூடாது என்பதற்காக தன் கலை வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கிருஷ்ணா. சமீபத்தில் புதுடெல்லி அசோகா பல்கலைக்கழகத்துடன் இணைந்து அசோகர் கல்வெட்டு வரிகளையும் பாடி வெளியிட்டார்.

இத்தகைய முற்போக்கு சிந்தனை கொண்ட இசைக்கலைஞர் வைக்கம் நூற்றாண்டை முன்னிட்டு பெரியார் குறித்த பெருமாள் முருகன் பாடலைப் பாடி வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். பெரியாரின் அறிவியக்கம் என்பது ஜாதீயக் கருத்தியலுக்கு எதிரானது, ஏற்றத்தாழ்வுக்கு எதிரானது என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்பதும், கொண்டாடுவதும் அவசியமானதாகும்.

இதனை முன்னிட்டே ஆசிரியர் வீரமணி டி.எம். கிருஷ்ணாவை, எழுத்தாளர் வ.ராமசாமி குறித்து அண்ணா கூறிய வார்த்தைகளில் “அக்ரகாரத்தின் அதிசய மனிதர்” என்று கூறியுள்ளார்.

வைக்கம் நூற்றாண்டில் பெருகும் பெரியார் பெருமையைக் கொண்டாடுவோம். சனாதான சக்திகளின் மீட்புவாத அரசியலை முறியடிப்போம்.
 

 

https://minnambalam.com/political-news/periyar-vaikom-satyagraha-special-story-rajankurai/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.