Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூவினத்தொடும்  புள்ளினத்தொடும் - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                    பூவினத்தொடும்  புள்ளினத்தொடும்

                                                                                                               -  சுப. சோமசுந்தரம்

 

உலகில் எந்த ஒரு தொன்மையான மனித நாகரிகமானாலும், அந்த 'நாகரிக' மனிதர்களின் வரையறையின்படி இப்போதும் 'நாகரிகமடையாத' தொல் பழங்குடி இனமானாலும் தாவரங்களுடனும் விலங்குகளுடனும் மனிதன் ஒரு இயைந்த வாழ்வையே கொண்டிருக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. இந்த இணைப்பை நாம் தமிழ் இலக்கிய உலகில் நின்று ரசிக்கும்போது இது தொடர்பில் தமிழர்தம் மாண்பையே கூறுவதாய் அமைவது தவிர்க்க இயலாதது. இவ்வாறே ஏனைய மனிதர்க்கும் எனக் கொள்ளுதல் சிறப்பு -  அனைவரும் இவ்வாறு இலக்கியமாய் எழுதி வைக்கவில்லை என்பதைத் தவிர. மேலும் நமக்கு வாய்த்ததை நாம் அனுபவித்துப் பெருமிதம் கொள்ளாவிட்டால் இங்கு பிறந்துதான் என்ன பயன் !
         தமிழன் பூவினத்தோடு உரையாடுவதை

"நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்"
---------(குறள் 1111; நலம் புனைந்துரைத்தல்)

எனும் இடத்தால் அறியலாம். "அனிச்ச மலரே ! மிகவும் மென்மையான நீ நீடு வாழ்க ! உன்னை விட மென்மையானவள் யான் விரும்பும் என் தலைவி" என்கிறான் தலைவன்.
               அவன் புள்ளினத்தோடு உரையாடுவதற்கு மேற்கோளாய் நாரை விடு தூது எனும் சங்க காலப் பாடலில் சக்திமுத்தப் புலவர் தமது மனைவியிடம் நாரையைத் தூது விடுவதன் மூலம் அறியலாம். மழை பொய்த்து தம் ஊரில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக பாண்டிய மன்னன் மாறன் வழுதியைக் கண்டு தம் வறுமை போக்கச் செல்கிறார் புலவர். கூடல் மாநகரில் மன்னனைக் காணும் முன் தம்மை அந்நாரை கண்டதைத் தமது மனைவியிடம் சென்று கூறுமாறும், தமது துயர நிலையை எடுத்துரைக்குமாறும் நாரையிடம் புலம்புகிறார். சங்கப் பாடலேயாயினும் இன்றும் அனைவரும் உணரும் எளிய நடையில் விளங்கக் காணலாம். தற்காலத்துக்கேற்ற நடையில் அமைந்ததே இப்பாடலின் கூடுதல் சிறப்பெனவும் கொள்ளலாம்.

"நாராய்! நாராய்! செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் !
நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே".

பொருள் : நாரையே ! செங்கால் நாரையே ! பழுத்த பனங்கிழங்கைப் போல் பவளக் கூர்வாய் கொண்ட செங்கால் நாரையே ! நீயும் உன் துணையும் தென்திசையில் உள்ள குமரியில் களித்திருந்து வடதிசை நோக்கிச் செல்வீர் என்றால் எமது ஊரான சத்திமுத்தத்தின் குளத்தில் தங்கி, நனைந்த சுவற்றின் மீதுள்ள கூரையின் மேல்
இருக்கும் பல்லி எழுப்பும் சத்தத்தின் பலனைப் பார்த்திருக்கும் என் மனைவியைக் கண்டு (கணவன் வருவதற்கான அறிகுறி தென்படுகிறதா என்று பல்லியின் சத்தம் கேட்டிருப்பாளாம்), "மன்னன் மாறன் வழுதியின் கூடல் மாநகரில் நல்ல ஆடையின்றி குளிரினால் உடல் மெலிந்து கைகளைக் கொண்டு உடலினைப் போர்த்தி கால்களைக் கொண்டு மேனியைத் தழுவி பேழையுள் பாம்பினைப் போல் உயிருடன் இருக்கும் ஏழையான என்னைக் கண்டதைச் சொல்.
               பூவினம் வாட தன் மனம் வாடும் தமிழன் தகைமையினை, படர்தற்குக் கொழுகொம்பின்றி வாடிய முல்லைக்கொடிக்குத் தன் தேரினையே ஈந்த பாரிவேளிடம் காணலாம். இத்தகைசால் நிகழ்வு செவிவழிச் செய்தியாய்ப் பாமரரிடமும் ஆண்டாண்டு காலமாய் வழங்கி வருவதாயினும், புறநானூற்றில் கபிலர் கூற்றாய்க் காணக் கிடைப்பது. இலக்கியம் சார்ந்த எழுத்தில் இலக்கிய வழி நிறுவுதல் நம் கடமையாகிறது. தந்தையை இழந்த பாரி மகளிர்க்கு உற்ற தந்தையாய்த் திகழும் கபிலர் அவர்களை விச்சிக்கோன் என்னும் குறுநில மன்னனுக்கு மணம் பேச முனைகிறார். அம்மன்னனிடம் பாரி மகளிரை முன்னிறுத்தி,


"கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர்"
                      (புறநானூறு பாடல் 400)              


(பொருள் : ஒலிக்கின்ற மணியினைக் கொண்ட (கறங்குமணி) நெடுந்தேரைக் கொள்க எனக் (முல்லைக்கு) கொடுத்த, உலகிற் பரந்துபட்ட ஓங்கிய புகழ் என்னும் சிறப்பினைப் பெற்ற பாரியின் மகளிர்)
என்று பாரியின் புகழ் பாடி அன்னவன் மகளிர் என்று அன்னவர் சிறப்பைச் சொல்கிறார்.
              அடுத்து மன்னன் இருங்கோ வேளிடம் பாரி மகளிரை அறிமுகம் செய்கிறார்.

"இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்"
            புறநானூறு பாடல் 201.

பொருள் : இவர் யார் என கேட்பாய் ஆயின், இரப்போர்க்கு ஊரையும் முல்லைக்குத் தேரையும் ஈந்து அழியாப் புகழ் (செல்லா நல்லிசை) பெற்றவனும் ஒலிக்கும் மணியுடைய யானைகளைக் கொண்ட பறம்பு நாட்டின் அரசனும் ஓங்கிய புகழுடையவனும் ஆன பாரியின் மகளிர்.
                  முல்லைக்குத் தேர் தந்து பூவினம் பேணிய பாரியுடன், மயில் குளிரில் நடுங்குவதாய் எண்ணிப் பரிவுடன் அதற்குப் போர்வை அளித்துப் புள்ளினம் பேணிய பேகனும் பாடப் பெறுகிறான். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இருவரையும் சிறப்பிக்கும் பாடல் :

"வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் சுரும்புஉண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழும் சாரல் பரம்பின் கோமான் பாரியும் ........"
      (சிறுபாணாற்றுப்படை; வரிகள் 84-91).

பொருள் : வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் - மழை வளம் பொருந்திய மலைப் பக்கத்தில்;
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய - கான மயிலுக்குப் போர்வை தந்த;
அருந்திறல் - அரிய ஆற்றலுடைய;
அணங்கின் - அழகிய தோற்றமுடைய;
ஆவியர் பெருமகன் - ஆவியர் குலப் பெருமகனான;
பெருங்கல் நாடன் பேகனும் - பெரிய மலைநாட்டுத் தலைவனான பேகனும்;
சுரும்புஉண - வண்டு உண்ணும் தேனையும்;
நறுவீ உறைக்கும் - நறுமணத்தையும் கொண்ட பூக்கள் நிறைந்த; வீ - பூ;
நாக நெடுவழி - சுரபுன்னை மரங்கள் கொண்ட நெடுவழியில்;
சிறுவீ முல்லை - சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடிக்கு;
பெருந்தேர் நல்கிய - தனது பெரிய தேரினைக் (கொழுகொம்பாகக்) கொடுத்த;
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல் - பெருக்கெடுக்கும் வெள்ளிய அருவி விழும் மலைப்பகுதி;
பறம்பின் கோமான் பாரி - பறம்பு மலையின் தலைவன் பாரி.
             பேகனின் நற்செயலை நத்தத்தனார் பாடியது போதாதென்று பரணரும் பாடுகின்றார்.

"மடத்தகை மாமயில் பனிக்குமென்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக"
         (புறநானூறு;பாடல் 145; வரிகள் 1-3)

பொருள் : மடத்தகை  -  மென்மைத் தன்மையுடைய; மாமயில் - கருநீல நிற மயில்; பனிக்குமென்று அருளி - குளிரில் நடுங்குமென்று இரங்கி;  படாஅம் -  போர்வை; ஈத்த - கொடுத்த; கெடாஅ நல்லிசை - அழியா நற்புகழ்; கடாஅ யானைக் கலிமான் பேக - மதம் பொழியும் யானைகளும் வீரியமிக்க குதிரைகளும் உடைய பேகனே !
                இந் நிகழ்வுகள் பற்றி இத்துணை பேசிய பின் இது தொடர்பில் பின்வரும் சிந்தனையையும் குறிப்பெடுத்துச் செல்லுதல் பொருந்தி அமையும்.
பாரி மற்றும் பேகனின் இச்செயல்கள் பூவினத்தோடும் புள்ளினத்தோடும் அவர் கொண்ட பரிவிற்கான குறியீடேயாம். முல்லை படர்வதற்கு ஆவன செய்வதும் குளிரில் மயிலின் துன்பம் போக்க ஆவன செய்வதும் மன்னர்க்கு அரிதான ஒன்றல்ல. இருப்பினும் தம் தேரினை, தம் போர்வையினை ஈவது அல்லது உயர்வு நிகழ்ச்சியாய் அவர்கள் குறித்து இச்செயல்கள் ஏற்றப்பட்டது ஒரு தகைசால் பண்பின் மாண்பை மாந்தர்க்கு உணர்த்துதற்கே எனக் கொள்ள வேண்டும். அறிந்தும் அறியாதார் போல் அன்னார் நிஜத்திலோ கற்பனையிலோ செயல்பட்டமை அறிமடம் எனப்பட்டது. இவ்வறிமடமும் சான்றோர்க்கு அணி சேர்ப்பது என்பதைப் பின்வரும் பாடலால் அறியலாம்.

"முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் சொல்லின்
நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப
அறிமடமும் சான்றோர்க்கு அணி"
             (பழமொழி நானூறு; பாடல் 361).

(தொல்லை அளித்தாரை - முன்னொரு காலத்தில் அளித்தாரை; சொல்லில் - இதைப் பற்றிச் சொல்வதானால்; நெறிமடல் பூந்தாழை - முறையின் அமைந்த மடல்களையும் பூக்களையும் உடைய தாழைகளைக் கொண்ட; நீடு நீர் சேர்ப்ப - கடற்கரையின் தலைவனே !)
              பூவினத்தொடும் புள்ளினத்தொடும் மன்னர்தாம் பரிவு கொண்டார் என்றில்லை; சாமானியரும் கொண்டார் என்னும் வகையாகப் போர்க்களம் சென்று வினைமுடித்துத் திரும்பும் தலைவன் தேர் மணியின் நா ஒலிக்காதவாறு அதனைக் கட்டி வைத்துக் கிளம்புகிறான். அந்தக் கார் காலத்தில் வழியிலுள்ள சோலைகளில் மலர்களில் உள்ள தேனை உண்ணும் வண்டுகள் தத்தம் துணையுடன் கூடியிருக்க, மணியொலியானது அவற்றைக் கலக்கமுறச் செய்யும் என அஞ்சி அவ்வாறு மணிநாவைக் கட்டுகிறான். கார்காலத்தில் தலைவியைத் தேடிச் செல்லும் தலைவனின் உளவியலைக் கூறுவதோடு, பிறிதின் நோய் (துன்பம்) தன்நோயாகக் கொள்ளும் தகைமையும் புலனாகிறது.

"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்"
          (அகநானூறு பாடல் 4; வரிகள் 10-12)

(பூத்த பூங்கர் - பூத்துக் குலுங்கும் சோலையில்; துணையோடு வதிந்த - தன் துணையுடன் கூடிய; தாது உண் பறவை - (மலரில் உள்ள) தேனையுண்ணும் வண்டு; பேதுறல் அஞ்சி - கலக்கமுறும் என அஞ்சி; மணிநா ஆர்த்த - தேரின் மணியில் உள்ள நாவினைக் கட்டிய; மாண்வினைத் தேரன் -  மாட்சிமை பொருந்திய வினை செயல்வகை கொண்ட, தேரினையுடையவன்).
                 இது காறும் தாவரங்களோடும் பறவைகளோடும் வண்டினத்தோடும் தமிழன் ஒரு பரிவு சார்ந்த உறவே பேணக் கண்டோம். அதையும் தாண்டி அவற்றுடன் மேலும் உளப்பூர்வமான நெருக்கத்தை நற்றிணை, கலித்தொகை முதலிய சங்கப் பாடல்களில் காணலாம்.
          தலைவியைத் தேடி வந்த தலைவன் ஒரு புன்னைமர நிழலில் அவளுக்காகக் காத்திருக்கிறான். அப்போது தலைவியின் சார்பாக அவளது தோழி வந்து அவனிடம், தலைவியின் அன்னையால் பேணி வளர்க்கப்பட்ட இம்மரம் தலைவியின் தமக்கையாவாள் என்றும் இம்மரத்தின் கீழ் தலைவனைச் சந்திக்க தலைவி நாணுகிறாள் என்றும், ஆகையால் கடற்கரையில் வேறு மர நிழலில் தலைவன் - தலைவி இணைந்திருக்கலாம் என்றும் கூறுகிறாள். இம்மரம் தலைவியின் தமக்கை என்பது அன்னையின் கூற்றாகத் தோழியால் சித்தரிக்கப்படுகிறது. இஃது பூவினத்தோடு தாய்-மகள், தமக்கை-தங்கை உறவென தமிழனிடம் சூழலியல் அறிவும் உணர்வும் சங்க காலத்திலேயே வேரூன்றி இருந்ததன் அறிகுறி.

"விளையா டாயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை யகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கின்
நிறைபடு நீழற் பிறவுமா ருளவே".
                       (நற்றிணை; பாடல் 172)

பொருள் : தோழியரோடு (ஆயமொடு) வெண்மணலில் விளையாடும்போது  புன்னைக்காயை மணலில் அழுத்தி அதனை மறந்து விட்டோம். அதன் விதை (காழ்) முளைவிட்டுக் கிளை விட்டது (அகைய). "நெய்யும் சுவையான பாலும் (தீம்பால்) ஊற்றி (பெய்து) இனிதாய் வளர்த்து வந்தேன். அது உன்னை விடச் சிறந்தது; உனது தமக்கையாகும் (நுவ்வையாகும்)" என்று தலைவியிடம் அப்புன்னையின் சிறப்பை அன்னை கூறினாள். எனவே தலைவி அம்மர நிழலில் உன்னோடு சிரித்துக் கூடி மகிழ்ந்திருக்க (நும்மொடு நகையே) நாணுகிறாள் (அம்ம நாணுதும் - 'அம்ம' என்றது இங்கு வியப்பைக் குறிக்கும் சொல்). விருந்தினராக வந்த பாணர்தம் இனிய மெல்லிய இசை போல (விளர் இசை கடுப்ப) வலம்புரிச் சங்கானது உயர்ந்த இசையினைத் (வான்கொடு நரல்) தரும் கடற்கரைத் தலைவனே (இலங்குநீர்த் துறைகெழு கொண்க) ! நீ விரும்பினால் (நீ நல்கின்) நிறைந்த நிழல் (நிறைபடு நீழல்) வேறும் இங்கு உண்டு(பிறவுமார் உளவே) - அஃதாவது வேறு மரங்களும் இங்கு உண்டு என்று தோழி உரைக்கிறாள்.
              மனிதனின் எண்ணவோட்டத்தினால் அவனது முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூட அவன் வளர்க்கும் பிராணிகள் புரிந்து கொள்வது அநேகமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. அவனது எண்ண அலைகள் தாவரங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற அறிவியல் சங்க காலத்தும் புழக்கத்தில் இருந்தது போலும். தலைவி கூற்றாகப் பின்வரும் பாடலே சான்று.

"பிரிவுஅஞ்சா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவும்
கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி"
         (கலித்தொகை (பாலைக்கலி) பாடல் 34)

பொருள் : பிரிவிற்கு அஞ்சாத அவரது தீமையை (அத்தீய தன்மையை) வெளிக்காட்டாமல் இயன்றவரை மறைக்கிறேன். இருப்பினும் தனக்குக் கீழ் நின்று பொய்சாட்சி சொன்னவனை (கரிபொய்த்தான்) மரமானது தான் வாடிக் காட்டிக் கொடுப்பதைப் போல என் முகம் வாடி (கவின் வாடி) நான் மறைத்த அவரது தீமையை உலகோர்க்குப் பறைசாற்றுகிறது.
            பொய்சாட்சி சொன்னவனின் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்கள் மரத்தைப் பாதித்ததோ என்னவோ ! மோப்பக் குழையும் அனிச்சமும் தொட்டாற்சிணுங்கிச் செடியும் இது இலக்கிய ரசனை சார்ந்த மரபு மட்டுமன்றி அறிவியல் பூர்வமாகவும் சரியாக இருக்கலாம் என்னும் எண்ணத்தை தோற்றுவிக்கின்றன.
              அன்பின் வழியது உயிர்நிலை எனும் நோக்கில் இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை உலகோர்க்குச் சாற்றுவது தமிழர்தம் மாண்பு. 

 

Edited by சுப.சோமசுந்தரம்

பூவினத்தொடும்  புள்ளினத்தொடும் - அருமையான தமிழ் நயம்; தொல்காப்பியம் தொட்டு flora மற்றும் faunaவுடன் இயைந்த தமிழரின் தொல்மரபு பண்பாட்டு அசைவுகளை புறநானூறு, திருக்குறள் உள்ளிட்ட தொல்லிலக்கியங்கள் வழியே நம்மை இட்டுச் சென்ற பூவின- புள்ளின சங்ககால வாழ்வியல் உலா (flora and fauna Safari thorugh the passage of Sangam literature) என்றால் மிகையில்லை.  
ஒரு சிறிய பார்வை: "அம்ம நாணுதும் நும்மொடு நகையே" - என்பதில் வரும் "அம்ம" என்னும் சொல்லாடல், வியப்பைக் குறிப்பதைக் காட்டிலும்,  "ஐயோ! எனக்கு வெட்கமாயிருக்கு!, ஐயோ! எனக்கு அச்சமாக இருக்கு!, சேச்சே! என்னால அங்க வைச்சு இதைச் செய்ய முடியாது!" போன்ற உணர்ச்சிக் குறிகளைக் வெளிப்படுத்தும் சொல்லாடலாகும். காட்டாக, திருவாசகத்தில், மாணிக்கவாசகர் பெருமான், 
புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்! பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்!
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி 
மற்றும்ஓர் தெய்வம் உண்டென நினைந்து எம்பெம்மாற்கு 
அற்றில்லாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே!
என்ற அச்சப்பத்து பதிகத் திருவாசகத்தில் "அம்ம நான் அஞ்சுமாறே!" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்.  சங்க இலக்கியத்தின் மரபுகள் அவ்வாறே பக்தி இலக்கியங்களில் ஆளப்படுவதால், இப் பார்வையை முன்வைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாலத்துப் பாடல்களும் அவற்றுள் பொதிந்திருக்கும் அழகியலும் அழகாக இருக்கின்றன......!  👍

பகிர்வுக்கு நன்றி சுப.சோமசுந்தரம்......!   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

அச்சப்பத்து பதிகத் திருவாசகத்தில் "அம்ம நான் அஞ்சுமாறே!" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்.  சங்க இலக்கியத்தின் மரபுகள் அவ்வாறே பக்தி இலக்கியங்களில் ஆளப்படுவதால், இப் பார்வையை முன்வைக்கிறேன்

நீங்கள் சொல்வது சரி. மேற்கோளாக சங்கப் பாடலே என் நினைவுக்கு வருகிறது. 'கடலுள் பாய்ந்த பாண்டியன் இளம்பெருவழுதி' என்னும் (குறுநில ?) மன்னன் இயற்றிய புறநானூற்றுப் பாடல் அது (புறம் 182). (புலவர்க்குப் புரவலராய் மன்னர் பெருமக்கள் இருந்ததோடு சில மன்னரே புலவராய்த் திகழ்ந்தமை சங்க கால மற்றும் பக்தி இலக்கியச் சிறப்புகளில் ஒன்று). 

"உண்டால் அம்ம இவ்வுலகம்" என்று தொடங்குகிறது பாடல். அப்பாடலை இப்போது நான் குறிப்பிட்டுள்ளதால், முன்பு நான் வாட்சப் குழுமங்களில் பதிவு செய்ததை இங்கு மீள்பதிவு செய்கிறேன். அனைவரும் அப்பாடலையும் ரசிக்க ஏதுவாய் அமையும் :

"உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர்  அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி; புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,  உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !"
       ----புறநானூறு 182.
(பொருள் கருதி சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது)

பாடற்பொருள் :-

" இவ்வுலகம்  உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்)  எனத் தொடங்குகிறது பாடல்.  இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார். அவையாவன : இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்;  பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம்                             மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி, வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே  முயலும் தன்மையர்.

இத் தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.

பின்குறிப்பு:-

'தன் பெண்டு தன் பிள்ளை' என்று மட்டும் வாழாமல், பிறர்க்கெனவும் வாழ்பவரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பதுவே இப்பாடலில் சான்றோர் உலகத்துப் பேசுபொருள். அஃதாவது பொதுவுடைமைவாதிகளாலேயே இவ்வுலகம் இயங்குகிறது எனக் கொள்ளலாம் (மக்களுக்காக நிற்கும் எவரும் பொதுவுடைமைவாதி என்பதே அதற்கான  வரையறை). ஒரு கூட்டத்தில் இப்பாடலைப்  பின்வருமாறு குறித்த  நினைவு வருகிறது: மன்னரையும், நிலவுடமையாளரையும், முதலாளி வர்க்கத்தையும் பொதுவாக 'பூஷ்வா' (Bourgeoisie)  எனக் குறிப்பிடுவோம். அப்படி நாம் அழைக்கும் பூஷ்வாவான பாண்டியன் இளம்பெருவழுதிதான் முதல் மானிட பொதுவுடமைவாதியோ!

Edited by சுப.சோமசுந்தரம்

கட்டுரை ஆசிரியரின் 'உண்டால் அம்ம இவ்வுலகம்!" தந்த சிந்தனைகளின் தொடர் ஓட்டம்: இந்த 'அம்ம'-தான் எடுத்த மாற்றங்கள் :

தொல்காப்பியர், சங்க காலத்தில் அம்ம என்பது ஓர் வியப்பிடைச் சொல் (கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278). அச்சொல்லே ஓர் அதிசயக் குறிப்பாக, "விதியினார்க்கு யான் அம்ம செய்கின்றதோர் அளவுண்டோ" (கந்தபு. அசுரர்தோற். 14) என்று கந்தபுராணத்தில் ஆளப்பட்டது. நன்னூல் சூத்திரம் அம்ம என்பது ஓர் உரையசைச்சொல் என்கிறது. (நன். 437, மயிலை.) தொடர்ந்த காலங்களில், "அம்ம" என்ற சொல் அம்மோ(An interjection expressing pity -இரக்கக்குறிப்புச் சொல்) , அம்மவோ (An exclamation of pity-ஓர் வியப்பு இரக்கக்குறிப்பு- "அம்மவோ விதியே யென்னும்" (கந்தபு. அக்கினி. 194)), அம்மனோ, அம்மனே, அம்மகோ(An exclamation of pity-ஓர் வியப்பு இரக்கக்குறிப்பு - அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14), அம்மல் (An exclamation of concern or circumstance or condition - மேகம் மந்தாரமாயிருத்தல், தடிமன், தலைப்பாரம் போன்றவற்றைக் குறிக்கும்), அம்மாடி (An exclamation of surprise, pity, or relief - அதிசய, இரக்க, ஆசுவாசக் குறிப்பு) என்று பல மாற்றங்களை அடைந்து, சூழலுக்கு ஏற்ப அச்சம், இழிவரல், நகை, வியப்பு, பேரச்சம் . . எனப் பல பிறவும் குறித்தது.  மக்கள் இவ்வாறு மொழிவதால் மொழிவளம் ஆயிற்று போலும். -அம்ம நாம் வியந்தவாறே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.