Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக சட்டப் போராட்டம்: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக சட்டப் போராட்டம்: சீமான்

monishaApr 29, 2023 10:25AM
kalaignar pen monument

மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய நிபுணர் குழு அனுமதி வழங்கியதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு 234 அடி உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் இருந்து கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருந்தது.

மேலும் இதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.

அதோடு பேனா நினைவுச் சின்னத்திற்கான சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுவிடம் சமர்ப்பித்திருந்ததது.

இந்நிலையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு அனுமதி வழங்கி உள்ளது.

பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல்.

சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனை எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மக்கள் விரோத – சூழலியல் விரோத திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், ”கடலுக்குள் பேனா வைத்துப் பாருங்கள். ஒரு நாள் நான் வந்து உடைப்பேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://minnambalam.com/political-news/legal-struggle-against-kalaignar-pen-monument-seeman/

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் பெயர் இங்கே வந்திருப்பதால் இந்த இணைப்பு விரைவில் நீக்கப்படும் அபாயம் இருக்கிறது. 😀

  • கருத்துக்கள உறவுகள்

பேனா சிலைக்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு பரிந்துரை: தொடரும் விமர்சனங்களும், விளக்கங்களும்

கருணாநிதி பேனா சிலை

பட மூலாதாரம்,@MKSTALIN

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 34 நிமிடங்களுக்கு முன்னர்

சென்னை மெரீனா கடற்கரையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக பேனா நினைவுச்சின்னத்தை அமைப்பது தொடர்பாக இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 15 வழிகாட்டுதல்களை பட்டியலிட்டு இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு பரிசீலிப்பதற்கு வகை செய்யும் பரிந்துரையை செய்திருக்கிறது.

இந்த நினைவுச்சின்னம் தொடர்பான முழு திட்ட வடிவம், 15 வழிகாட்டுதல்கள் எவ்வாறு பின்பற்றப்படும் என்ற விளக்க அறிக்கை ஆகியவற்றை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த பின்னர்தான், விதிகளுக்கு உட்பட்டு முழு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ள இந்த முதல்கட்ட பரிந்துரை என்பதே தவறு என்றும் பொதுமக்களின் எதிர்ப்புக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் மத்திய அரசின் மதிப்பீட்டுக்குழு அளிக்கவில்லை என்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் விமர்சித்துள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழுதான் பேனா நினைவுச் சின்னத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி, இந்த திட்டத்திற்கு தொடர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.

 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக ரூ. 81 கோடி செலவில், பேனா நினைவுச் சின்னம் ஒன்றை மெரீனா கடல்பரப்பில் அமைப்பது, அந்த நினைவுச்சின்னத்திற்கு சென்று வருவதற்கான பாதையை கரையில் அமைப்பது என்ற வகையில், இந்த திட்டம் பற்றிய அறிவிப்பை 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை வெளியிட்டது.

இந்நிலையில் இந்த நினைவுச்சின்னத்திற்கான பொருட்செலவு மற்றும் திட்டத்தைச் செயல்படுத்தினால் கடற்கரைப் பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு, பலவிதமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பன உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், நாம் தமிழர் கட்சி, சில மீனவர் குழுக்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த திட்டத்தின்படி, சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து சுமார் 360 மீட்டர் தூரத்தில் இந்த பேனா நினைவுச் சின்னம் அமையும். அதை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்குப் பாலம் அமைக்கப்படும்.

இந்த திட்டத்துக்காக ஒட்டுமொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்திருந்தது.

இந்த நினைவுச் சின்னம் அமையும் இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011இன்படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது என்பதால், அந்த பகுதியில் புதிதாக எந்தக் கட்டுமானத்தையும் எழுப்ப முடியாது என்ற விதி உள்ளது. இருந்தபோதும், தற்போது, நிபுணர் மதிப்பீட்டுக் குழு வழிகாட்டுதல்களை வழங்கி மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள்.

சிவாஜி சிலையை பின்பற்றி பேனா சின்னம் திட்டம்

சுற்றுச்சூழல் தினம்

பிபிசி தமிழிடம் பேசிய 'பூவுலகின் நண்பர்கள்' சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள பரிந்துரையை 'அனுமதி' என பலரும் செய்தி வெளியிடுவது தவறு. 'பரிந்துரை' என்பது முதல்படி, மேலும் இரண்டு படிநிலைகளுக்கு பின்னர்தான் நினைவுச்சின்னம் நிறுவப்படுமா என்று தெரியவரும் என்கிறார்.

''மத்திய அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு திட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டது என்கிறார்கள். ஆனால் தற்போது பரிந்துரைதான் செய்திருக்கிறார்கள். அந்த பரிந்துரை செய்தது கூட எங்களை பொறுத்தவரை சரியல்ல. கடற்கரைப் பகுதியில் எந்த புதிய கட்டமைப்பையும் சட்டப்படி நிறுவ முடியாது. ஆனால், 15 வழிகாட்டுதல்களை அளித்துவிட்டு, நினைவுச்சின்னம் திட்டத்தை பசுமை தீர்ப்பாயத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.

திட்டம் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்களைக் கூட இந்தக் குழு உள்வாங்கவில்லை. அதோடு, மணல் அரிப்பு தொடர்பாக, எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

முதல் கூட்டத்தில் திட்டத்தின் முழு வடிவத்தை ஏற்றுக்கொண்டு, வழிகாட்டுதல்களை கொடுத்து விட்டு பரிந்துரை செய்திருக்கிறார்கள். மணல் அரிப்பு குறித்து 2016ல் எடுக்கப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் அந்த ஆய்வு கூட பழைய தரவுகளை வைத்து தயாரிக்கப்பட்டது. 2016க்கு பின்னர் பலவிதமான மாறுதல்கள் கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. அதனால், புதிய ஆய்வுதான் தேவை. அதை மதிப்பீட்டுக்குழு கண்டுகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது,''என்கிறார் வெற்றிச்செல்வன்.

பேனா சின்னத்தை தற்போது கட்டி முடித்துவிடலாம் என்றாலும், பிற்காலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக அந்த நினைவுச்சின்னமே பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார் வெற்றிச்செல்வன்.

''கரைப்பகுதியில் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டால், அது மணல் அரிப்புக்கு வித்திடும். பாரம்பரியமாக அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும்.

முதலில், மும்பை கடல்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சிவாஜி சிலைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த பேனா சின்னத்தை நிறுவ தமிழ்நாடு அரசு அனுமதி கேட்டது. தற்போது அனுமதி வழங்கப்பட்டால், பேனா சின்னம் போலவே பலரும் எதிர்காலத்தில் வரிசையாக பல கட்டுமானங்களை கடல் மற்றும் கரை பகுதிகளில் கட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதனால், மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்,''என்கிறார் வெற்றிச்செல்வன்.

ஒன்றாக எதிர்க்கும் பாஜக, நாம் தமிழர் கட்சி

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

பேனா சின்னம் நிறுவப்படுவதை வலுவாக எதிர்த்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்ற நேரத்தில், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டால் அதனை உடைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மக்களின் கருத்துக்களைக் கேட்கவில்லை என்றும் போதிய நேரத்தை எதிர்கருத்துள்ள நபர்களுக்கு வழங்கவில்லை என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் சீமான்.

இந்த விவகாரத்தில் நினைவுச்சின்னத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி.

சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில், ''கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோத போக்கினைக் காட்டுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்'' என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

பிபிசி தமிழிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில் குமார்,சட்ட ரீதியாக வழக்கு தொடுப்பது குறித்தும், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கடலோர பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் மத்திய அரசாங்கம் பரிந்துரை செய்தது தவறு என்றும் காலநிலை மாற்றத்திற்கு வித்திடும் வகையில் கட்டாயம் சிலை அமைக்கப்படவேண்டுமா என்ற கேள்வியை நிபுணர் குழு எழுப்பியிருக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

''மக்கள் பயன்பெறும் பல திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குவதைவிட இந்த நினைவுச்சின்னத்திற்கு பணம் ஒதுக்குவது தேவையா? மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதற்கு யோசிக்கிறார்கள்,

ஆனால் நினைவுச்சின்னத்திற்கு பணம் ஒதுக்குகிறார்கள். அதேபோல, மத்திய அரசும் தமிழ்நாட்டிற்கு பயன்தரும் திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதற்கு பதிலாக, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்கு வேகமாக ஒப்புதல்களை தருவது சரியா?,'' என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

தமிழக பாஜகவைச் சேர்ந்தவர்களும் கருத்து கேட்புக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தற்போதும் அந்த எதிர்ப்பு நிலை தொடர்வதாக பாஜகவினர் கூறுகின்றனர். மத்திய அரசின் பரிந்துரை பற்றிக் கேட்டால், அரசாங்கமும், கட்சியும் இருவேறு அமைப்புகள் என்கிறார்கள்.

இது தொடர்பாக தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் பேசுகையில், நினைவுச்சின்னம் திட்டம் முன்வைக்கப்பட்ட சமயத்தில் இருந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்கிறார்.

''சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நினைவுச்சின்னத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது மத்திய அரசாங்கம் பரிந்துரை செய்திருக்கிறது. அதாவது விதிகளை பின்பற்றி அமைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற நினைவுச்சின்னம் தேவையற்றது என்பதுதான் எங்கள் கருத்து. மேலும், இந்த திட்டத்தில் திமுக என்ற கட்சி பாஜக என்ற கட்சியிடம் அனுமதி கேட்கவில்லை. ஒரு மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கத்திடம் ஒரு திட்டத்திற்கு அனுமதி கேட்கிறது என்றுதான் பார்க்கவேண்டும். கட்சி வேறு, ஆட்சி வேறு என்பதை தெளிவுபடுத்த இதைவிட வேறு சான்று வேண்டுமா?எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவோம். மத்திய அரசாங்கத்திடமும் எடுத்துச் சொல்வோம்,''என்கிறார் நாராயணன்.

அமைச்சர் பதில்

பேனா சின்னம்
 
படக்குறிப்பு,

சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

பேனா நினைவுச்சின்னத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள் குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"மத்திய அமைச்சகம் அளித்துள்ள பரிந்துரையை ஏற்று, வழிகாட்டுதல்களை பின்பற்றி நினைவுச்சின்னம் அமைக்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

மக்களிடம் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து கேட்டபோது, எல்லாவித உரிய அனுமதிகளுடன்தான் தமிழ்நாடு அரசு நினைவுச்சின்னத்தை நிறுவும் என்று பதிலளித்தார்.

அடுத்ததாக, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளரான கார்த்திகேய சிவசேனாபதியிடம், பேனா சிலை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது என கேட்டோம்.

"இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான அனுமதிகளுடன் திட்டம் செயல்படுவதைதான் கட்சி விரும்பும் என்றும் எதிர்ப்புகள் குறித்து எந்த பயமும் இல்லை," என்றும் சொல்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு முன்வைத்துள்ள 15 வழிகாட்டுதல்களை படித்தேன். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. அதனால், பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒவ்வொரு திட்டங்கள் செயல்படுத்தப்படும்போதும் சுற்றுச்சூழல் மதிப்பீடு தேவை என்பதை எங்கள் கட்சியில் சுற்றுச்சூழல் அணி மூலமாக மேலும் வலுவாக ஆதரிக்கிறோம். இந்த நினைவுச்சின்னம் திட்டத்திலும், அரசாங்க வரையறைகளுக்கு உட்பட்டு திட்டம் செயல்படுத்தபடுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதவகையில் செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்கிறார்.

நாம் தமிழர் கட்சி மற்றும் சில மீனவர் குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்துக் கேட்டபோது, தமிழ்நாடு அரசாங்கத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வலுவான எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்றும் ஒவ்வொரு எதிர்ப்புகள் எழும்போது அதற்கான நியாயமான பதில்களை தெரிவிக்க திமுக தயங்கியதில்லை என்கிறார் சேனாபதி.

''நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், மீனவர் குழுக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெரும்பாலும், இந்த திட்டத்திற்கு செலவிடப்படும் பணத்தை பற்றித்தான் விமர்சிக்கிறார்கள். பொருட்செலவைத்தாண்டி, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியுடன் செயல்படுத்துவதால் சட்டரீதியாக நாங்கள் தவறுகள் இழைப்பதாக சொல்லமுடியாது,'' என்கிறார்.

முக்கிய நிபந்தனைகள் என்ன?

பேனா சின்னம்
  • மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு விதித்துள்ள நிபந்தனைகளில் குறிப்பிடபட்டுள்ள அறிக்கைகள் மற்றும் திட்டங்களை தமிழ்நாடு அரசு பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது.
  • பேனா சின்னம் அமைப்பதற்கு முன் சென்னையில் உள்ள இந்திய கடற்படை - அடையாறு தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.
  • பேனா சின்னம் கட்டுமான பணிக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது.
  • திட்டத்தை செயல்படுத்தும்போது கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
  • பேனா சின்னத்தை மக்கள் பார்வையிட வரும் நேரத்தில், கூட்ட மேலாண்மைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை எல்லா நேரத்திலும் பராமரிக்க வேண்டும்.
  • ஆமைகள் கூடு கட்டும் காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.
  • சாலை இணைப்பு, போக்குவரத்து மேலாண்மை திட்டம் மற்றும் அவசரகால வெளியேற்றத் திட்டம் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தின்படி செயல்படுத்தப்பட வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/crgln68xkpno

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.