Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா வரையறைக்குள் சிக்காத 'ஆச்சர்ய கலைஞன் அஜித்' - நெருக்கமானவர்கள் கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆச்சர்ய கலைஞன் 'அஜித்'

பட மூலாதாரம்,AJITH PR TEAM

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ச. பொன்மனச்செல்வன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 1 மே 2023, 05:18 GMT
    புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

அஜித்... தமிழ் சினிமா கண்ட தனித்துவமான கலைஞர்களில் ஒருவர். ‘அமராவதி’ படம் தொடங்கி இப்போதைய ஏகே62 வரை தன் ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்தது என அவரது முடிவுகள் அனைத்தும் அவரது ரசிகர்களைத் தாண்டியும் பலரால் பாராட்டப்படுபவை.

சமகால நடிகர்களைப் போல் அரசியல் வருகை குறித்தோ, ஆட்சியாளர்களை விமர்சித்தோ அஜித் ஒருவார்த்தை பேசியதில்லை. அதுமட்டுமின்றி, தனக்கு அரசியல் ஆசையில்லை என்பதையும் வெளிப்படையாக அறிக்கையின் மூலமே அவர் அறிவித்து விட்டார். ஆனாலும், அஜித் படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள், திரையில் தோன்றும்போதெல்லாம் கொண்டாடித் தீர்க்கிறார்கள், ஒரே ஒருமுறை அவரை நேரில் பார்த்துவிட துடிக்கிறார்கள். அதுதான் அஜித் மேஜிக் என்கின்றனர் அவரோடு பழகிய கலைஞர்கள்.

விளம்பர படங்களில் இருந்து சினிமாவுக்கு...

பதின் பருவத்திலேயே பைக், கார் ரேஸ் மீது அவர் கொண்டிருந்த அதீத ஆர்வம், பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட வைத்தது. அதன் காரணமாக பைக் மெக்கானிக்காக வேலையில் சேர்ந்தார். தொடர்ந்து, பைக் ரேஸில் கலந்துகொள்ள பணம் தேவைப்பட்டதால் விளம்பர படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்க தொடங்கினார்.

பைக் ரேஸ், விளம்பரம் என தன் வேலையை செய்துகொண்டிருந்த அஜித்துக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில், முதன் முதலாக ‘என் வீடு என் கணவர்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதன் பின் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அந்தப் படத்தை முடித்துவிட்டு சினிமா வாய்ப்பு தேடிய அதேசமயத்தில், வருமானத்திற்காக மீண்டும் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கியபோதுதான், அஜித்துக்கு அமராவதி பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘அமராவதி’ படத்திற்குப் பிறகு நடந்தவை எல்லாம் தன் முயற்சியால் மட்டுமில்லை, தன்னை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்று அஜித் கூறுகிறார்.

 
ஆச்சர்ய கலைஞன் 'அஜித்'

பட மூலாதாரம்,BAYVIEW PROJECTS LLP

வெற்றி நாயகனாக அடையாளப்படுத்திய 'காதல் கோட்டை'

முதல் நான்கு படங்களும் தோல்வி. மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் வெளியான ’ஆசை’ படத்தில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தது. த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த படம் அஜித் என்ற நடிகனை திரும்பி பார்க்க வைத்தது. அதன்பிறகு, ’காதல் கோட்டை’ திரைப்படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.

“நான் என் கல்லூரி காலத்தில் முதல்முதலில் திரையரங்கில் பார்த்தப் படம் ’காதல் கோட்டை’. இந்தப் படத்தின் பல காட்சிகளும், வசனங்களும் இப்போதும் எனக்கு மனப்பாடமாக இருக்கிறது. இரயிலில் கமலி தவறவிட்ட அவளது சான்றிதழ்களை அவளுக்கு திரும்ப அனுப்பி வைக்கும் காட்சியிலேயே, அந்தக் கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பு தொடங்கிவிடும்.

உயிருக்குயிராய் காதலிப்பதும், அப்பாவித்தனமாய் தேடித் திரிவதுமான காட்சிகளால், அஜித்தும், தேவயானியும் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டே படம் பார்த்தேன். இரயில் நிலையத்தில், அவர்கள் சேர்ந்ததும் என் கண்களில் இருந்து கொட்டிய கண்ணீர் நிற்க நெடு நேரமானது” என காதல் கோட்டை நினைவுகளை மகிழ்ச்சியோடு பகிர்கிறார் அஜித்தின் தீவிர ரசிகையான தேவிகா.

ஆச்சர்ய கலைஞன் 'அஜித்'

பட மூலாதாரம்,BAYVIEW PROJECTS LLP

'வாலி' தந்த திருப்புமுனை

1993-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1998 வரை வெறும் நான்கு வெற்றி படங்களோடு போராடிக் கொண்டிருந்த அஜித்துக்கு 1999-ல் வெளியான ‘வாலி’ திரைப்படமே திருப்புமுனையாக அமைந்தது. தனது ‘ஆசை’ படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த எஸ்.ஜே சூர்யாவை வாலி படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார் அஜித். இதில், ஹீரோ - வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் முதன் முறையாக நடித்தார் அஜித்.

வாய் பேச முடியாத அண்ணனாக அஜித் நடித்த வில்லன் கதாபாத்திரம் சிறந்த நடிகர் எனும் பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து மென்மையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த அஜித் ஒருகட்டத்திற்குப் பிறகு ஆக்‌ஷன் ஹீரோவானார். அதன்பிறகு, அவருடைய மெனக்கெடல்கள் திரைத்துறையிலேயே பலருக்கும் வியப்பை ஏற்படுத்துபவை என்கிறார் சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன்.

எப்போதும் படத்தின் கதைக்கேற்ப சண்டைக் காட்சிகளை தயார் செய்யும்போது, அஜித் எந்தவித மாற்றமும் சொல்லாமல் என்னால் முடிந்தளவு முயற்சி செய்கிறேன். இல்லை என்றால் வேறுவிதமாக படமாக்கலாம் என சொல்லிவிட்டே படப்பிடிப்பில் பங்கேற்பார் எனக் குறிப்பிடும் திலீப் சுப்பராயன், அதுதான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இத்தனை ஆண்டுகள் அவர் நிலைப்பதற்கு காரணம் எனவும் குறிப்பிடுகிறார்.

ஆச்சர்ய கலைஞன் 'அஜித்'

பட மூலாதாரம்,DHILIP SUBBARAYAN

 
படக்குறிப்பு,

நடிகர் அஜித்துடன் திலீப் சுப்பராயன்

புதிய இயக்குநர்களை உருவாக்கிய அஜித்

காட்சிகளுக்காக மட்டுமல்ல, தனது படங்களின் தேர்விலும் தொடர்ந்து ரிஸ்க் எடுத்திருக்கிறார் அஜித். அந்தவகையில், முக்கியமானது முதல்பட இயக்குநர்களுக்கு அவர் கொடுத்த வாய்ப்புகள். முன்னணி நடிகர்கள் பலரும் செய்யத் தயங்கும் இதை, அஜித் தொடர்ந்து முயன்றிருக்கிறார். பலமுறை அந்த முடிவுகள் சறுக்கியபோதும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் அஜித். அப்படியான அவரது முடிவுதான் தன்னை இயக்குநராக்கி அழகு பார்த்து, இந்த இடத்தில் வைத்திருக்கிறது என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் அதே கருத்தை முன்மொழிகிறார் ’வலிமை’, ‘துணிவு’ படங்களின் படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி. அஜித்தின் படத்தில் பணியாற்றும்போது தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கிடைக்கும் அங்கீகாரங்கள் வாழ்க்கையே மாற்றிவிடும் சக்தி வாய்ந்தது. அதை அவரது படங்களில் பணியாற்றுவதன் மூலம் நானும் அடைந்திருக்கிறேன் என்கிறார்.

அஜித்தின் படங்களை திரையரங்கில் மட்டுமே பார்த்து வந்த என்னிடம் முதல்முறையாக வலிமை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வந்தபோது ஒருவித வியப்பை ஏற்படுத்தியது. ஒரு நட்சத்திரமாக, திரையில் பார்த்து சிலிர்க்கும் அவர், அதற்கு எவ்வளவு உழைப்பைக் கொட்ட வேண்டும் என்பது பிரமிப்பாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் அவருடைய மெனக்கெடல்களும், மேம்படுத்திக் கொள்ளும் திறனும் இன்னும் ஆச்சர்யம் நிறைந்தது எனவும் விஜய் வேலுக்குட்டி குறிப்பிடுகிறார்.

ஆச்சர்ய கலைஞன் 'அஜித்'

பட மூலாதாரம்,VIJAY VELUKUTTY

 
படக்குறிப்பு,

நடிகர் அஜித்துடன் விஜய் வேலுக்குட்டி

பார்முலா-2 போட்டியாளரான ஒரே இந்திய நடிகர்

ஆச்சர்ய கலைஞன் 'அஜித்'

பட மூலாதாரம்,AJITH PR TEAM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கிய நேரத்தில், கார் ரேஸ் பக்கம் அஜித்தின் கவனம் திரும்பியது. வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், தொழில்முறை கார் பந்தய வீரரானார் அஜித். நேர்த்தியான பயிற்சிகள் மூலம் புகழ்பெற்ற பார்முலா-2 கார் பந்தயத்தில் கலந்துக்கொண்ட ஒரே இந்திய நடிகர் என்ற புகழைப் பெற்றார். அதோடு, 2003ம் ஆண்டு ஆசிய அளவில் நடைபெற்ற BMW பார்முலா பந்தயத்தில் நான்காம் இடம் பிடித்து சாதனையும் படைத்திருக்கிறார்.

கார் பந்தயங்களில் ஏற்பட்ட விபத்துகளால் முதுகுத் தண்டில் பல்வேறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை அஜித்துக்கு ஏற்பட்டது. ஆனால், அதை எல்லாம் காரணம் காட்டி, எந்தவொரு சண்டைக் காட்சிக்கும் ‘டூப்’ போடகூட அனுமதிக்க மாட்டார். தன்னால் முடியாத சண்டைக்கு பதில், வேறுவிதமாக மாற்றித்தரும்படி கேட்டு அதை அவராகவே நடித்துக் கொடுப்பார் என்கிறார் ‘துணிவு’ பட சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தர்.

படப்பிடிப்புத் தளத்தில் அஜித் எப்படி?

ஆச்சர்ய கலைஞன் 'அஜித்'

பட மூலாதாரம்,SUPREME SUNDAR

 
படக்குறிப்பு,

நடிகர் அஜித்துடன் சுப்ரீம் சுந்தர்

படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் அங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று வணக்கம் தெரிவிப்பது அஜித்தின் பழக்கம். அதோடு, அவர்கள் குடும்பத்தினர் குறித்தும் விசாரித்து வைத்துக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் யாரேனும் அவரிடம் பேசத் தயங்கி நின்றால்கூட, அவர்களிடம் தானே சென்று பேசிவிடுவார். அப்படித்தான் தன்னிடமும் பேசியதாக குறிப்பிடும் படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி, ரஷ்யாவில் நடந்த ‘வலிமை’ படப்பிடிப்பின்போது எங்கள் வாகனத்தில் ஏறிய அஜித், ஊரை சுற்றிப்பார்க்க எங்களையும் கூட்டிச் சென்றார்.

அடுத்த நாளே என்னிடம் வந்து “சார், ஷூட்டிங் முடிஞ்சு எல்லோரும் டையர்டா இருந்திருப்பீங்க, உங்கள எல்லாம் ரெஸ்ட் எடுக்கவிடாம வெளியே கூட்டிட்டு போயிட்டேன், சாரி” என்றார். அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் கலைஞனின் அந்த செயல் இப்போது நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவிக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் 'ரிஸ்க்'

கதைக்கு ஏற்ப சண்டைக் காட்சிகளை உருவாக்கினாலும், அஜித்துக்காக சில பிரத்யேகங்களை உருவாக்கும் முயற்சிகளையும் அவரது படத்தில் பணியாற்றும்போது செய்து பார்க்க முடியும் என்கிறார் திலீப் சுப்பராயன். அப்படித்தான், ‘வலிமை’ படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்காக சிறப்பு உபகரணங்களை உருவாக்கியதை அஜித் வெகுவாக ரசித்ததாகவும், அதனால் இன்னும் ஈடுபாட்டுடன் அந்தக் காட்சிகளில் நடித்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

துணிவு படத்தில் வங்கிக்குள் நடக்கும் ஒரு சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சியை 13 முறை படமாக்கியபோதும் எந்தவிதமான சலிப்புமின்றி, நடித்து கொடுத்ததாக சொல்கிறார் சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தர்.

'சினிமா கலைஞர் ' வரையறைக்குள் சிக்காதவர்

ஆச்சர்ய கலைஞன் 'அஜித்'

பட மூலாதாரம்,AJITH PR TEAM

’பில்லா’ படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித், ’மங்காத்தா’ திரைப்படத்தில் கொடூர வில்லனாக மிரட்டினார். பொதுவாக ஹீரோக்கள் தயங்கும், முழுநீள வில்லன் கதாபாத்திரம் அஜித் மீதான ஈர்ப்பை அவரது ரசிகர்களுக்கு இன்னும் அதிகப்படுத்தியது.

புகைப்படக் கலை, துப்பாக்கி சுடுதல் தொடங்கி இப்போதைய பைக் டூர் டாக்குமெண்ட்ரி வரை ஏதோவொன்றை அவர் கற்றுக் கொண்டே இருக்கிறார். ஒரு நடிகர் தன் தொழிலில் மட்டுமே நேர்த்தியாக இருந்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவர்கள் தன் கலையின் மீதும் ரசிகர்கள் மீதும் மரியாதையுடன் நடந்துகொண்டால் அந்த கொண்டாட்டம் இன்னுமின்னும் அதிகமானதாகவே இருக்கும். அதனாலேயே, சினிமா கலைஞர்களுக்கேயான வரையறைகளுக்குள் சிக்காத அஜித் அடுத்தடுத்த உயரங்களுக்கு சென்று கொண்டே இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cjkzxxpzzkxo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.