காவல் மரணத்தில் கணவரை இழந்து 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் மதுரை பெண்
கட்டுரை தகவல்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கால் நூற்றாண்டிற்கு முன்பு மதுரை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதி கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்தார்.
அந்தச் சம்பவம் நடந்தபோது பள்ளி மாணவராக இருந்த அவரது மகன் இப்போது வழக்கறிஞர். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டுமென தாயும் மகனும் இன்னமும் விரும்புகின்றனர். 27 ஆண்டுகளைத் தாண்டித் தொடரும் ஒரு போராட்டத்தின் கதை இது.
Play video, "போலீஸ் காவலில் உயிரிழந்த கணவர் - 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் தாயும் மகனும்", கால அளவு 10,36
10:36
காணொளிக் குறிப்பு,
கணவரை தேடி வந்து மனைவியை கொண்டு சென்ற போலீஸ்
மதுரை நகரத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இருக்கும் உசிலம்பட்டியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது அந்த கிராமம். அங்கிருக்கும் குறுகிய தெரு ஒன்றில் உள்ள வீட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.
அவருடைய மெல்லிய தோற்றத்தைப் பார்த்தால், 27 ஆண்டுகளாகப் போராடும் ஒரு நபரைப் போலத் தெரியாது. ஆனால், அவர் பேசத் தொடங்கும்போது அவரது குரலில் தொனிக்கும் உறுதி அந்தச் சந்தேகத்தை உடைத்துவிடும்.
அது 1998ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 27ஆம் தேதி. காலை ஏழு மணி. தனது வயல்காட்டில் இந்தப் பெண்மணியும் வேறு சில பெண்களுமாக சுமார் பத்து பேர் சேர்ந்து பருத்தி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது உசிலம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த சில காவலர்கள், அங்கே வந்தனர்.
அந்தப் பெண்மணியை நெருங்கிய காவலர்கள், அவரது கணவரைப் பற்றிக் கேட்டனர். அவர் வெளியே சென்றிருப்பதாக அந்தப் பெண் சொல்லவே, ஒரு திருட்டு வழக்கைப் பற்றி விசாரிக்க வேண்டுமெனக் கூறி முதலில் அவரை உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பிறகு அங்கிருந்து மதுரை நகருக்கு அருகிலுள்ள ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அடுத்த நாள் காலை ஆறு மணிவரை அந்தப் பெண் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அன்று காலை 11 மணியளவில் அவரது கணவரும் சில காவலர்களால் ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதற்குப் பிறகு இருவருக்கும் சித்ரவதைகள் துவங்கின என்கிறார் அந்தப் பெண்மணி.
அடுத்த கால் நூற்றாண்டுக்கும் மேல் நீளவிருக்கும் ஒரு நீண்ட போராட்டத்தின் துவக்கமாக அந்த சித்ரவதைகள் அமைந்தன. அந்தக் கொடூரமான காலகட்டத்தை பிபிசியிடம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணீருடன் நினைவுகூர ஆரம்பித்தார் அந்தப் பெண்மணி.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,வயல்காட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது தனது கணவரைத் தேடி வந்த காவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார் அந்தப் பெண்மணி (சித்தரிப்புப் படம்)
காவல் நிலையத்தில் நடந்த கொடூர சித்ரவதைகள்
"ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் எங்கள் இருவரையும் அடித்து நொறுக்கினர். நண்பகல் 12 மணியளவில் மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் இருந்து வந்த சில காவலர்கள் என் கணவரை மட்டும் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கேயும் தாக்குதல் தொடர்ந்தது. அன்று மாலை ஆறு மணியளவில் கணவரை ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கே அழைத்து வந்த காவலர்கள், அவரை மீண்டும் தாக்கினார்கள்" என்கிறார் அந்தப் பெண்மணி.
ஜூலை 29ஆம் தேதியன்றும் தாக்குதல் தொடர்ந்தது. 30ஆம் தேதியன்று கணவரை மட்டும் ஒரு வண்டியில் ஏற்றி எம். கல்லுப்பட்டிக்குக் கொண்டு போன காவலர்கள் அங்கிருந்த ஒரு நகைக்கடையில், பத்து பவுன் நகையை விற்றதாக ஒப்புக்கொள்ளச் சொன்னதாகவும் கணவர் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார் அப்பெண்.
இதற்குப் பிறகு ஆகஸ்ட் 2ஆம் தேதி உசிலம்பட்டி டிஎஸ்பியிடம் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களது நிலை மிக மோசமாக இருந்ததால், இருவரையும் பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து உசிலம்பட்டியிலேயே இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர். ஆகஸ்ட் 2ஆம் தேதி கணவர் இறந்துவிட்டார்.
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட உசிலம்பட்டி மக்கள் போராட்டத்தில் இறங்க, கணவருடன் சேர்ந்து கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தப் பெண்மணி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
உடற்கூராய்வும் ஆர்.டி.ஓ விசாரணையும்
இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் வெளியான ஒரு சிறிய செய்தியைப் பார்த்து, மதுரையில் இருந்து செயல்படும் மக்கள் கண்காணிப்பகம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அரசு மருத்துவமனைக்கு வந்து அந்தப் பெண்மணியிடம் பேசியது. அதற்குப் பிறகு அவர், அரசு மருத்துவமனையில் இருந்து மதுரையில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆகஸ்ட் 12ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இறந்துபோன கணவரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர் ராதாகிருஷ்ணன், அடிபட்ட காயங்களால்தான் அவர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டார் என்கிறார் அப்பெண்.
ஆர்.டி.ஓ-வும் தனது அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். இதற்குப் பிறகு, அரசு அறிவுறுத்தலின் பேரில் உசிலம்பட்டி நீதிமன்ற நடுவரிடம் 1999 செப்டம்பரில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் முடிவால் நிலைகுலைந்த தாயும் மகனும்
காவல் நிலையத்தில் நடந்த சித்ரவதையை நேற்று நடந்ததைப் போல இப்போதும் நினைவுகூர்கிறார் அந்தப் பெண்.
"தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தார்கள். தண்ணீர் கேட்டால் தரமாட்டார்கள். என் கணவர் நிர்வாணமாகத்தான் கிடந்தார். அங்கே வந்தவர்கள், போனவர்கள் எல்லோருமே பார்த்தார்கள். யாரும் மீட்கவில்லை. நான்கு சுவற்றுக்கு இடையில் எந்தக் கடவுளைக் கூப்பிடுவது?"
"வருகிறவர்கள், போகிறவர்களெல்லாம் அடிப்பார்கள். எனக்குக் கை ஒடிந்தது. பின்பக்கம் முழுவதும் காயமாக இருந்ததால் எப்போதும் குப்புறவேதான் படுப்போம். கருப்பாயூரணி காவல் நிலையத்தில் இரண்டு பேரையும் விடிய விடிய கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள்."
"நான் பெரிய ஆஸ்பத்திரியில் (அரசு மருத்துவமனையில்) இருக்கும்போது பலர் எங்களை அணுகி ஏழு லட்சம் தருகிறோம், பத்து லட்சம் தருகிறோம் என்று கூறி, வழக்கை திரும்பப் பெறச் சொன்னார்கள். காசே எங்களுக்கு வேண்டாம். ஏழு நாட்களாக எங்களை ஏன் அடித்தீர்கள், அவரை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டேன். இனி தமிழ்நாட்டில் இப்படி நடக்கக்கூடாது. என்னையும்கூட அடித்துக் கொல்லுங்கள் பணத்தை வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்" என்கிறார் அவர்.
படக்குறிப்பு,இந்த வழக்கின் விசாரணை தொடங்குவதற்குப் பல ஆண்டுகள் ஆயின. இறுதியாக 2012ஆம் ஆண்டில்தான் விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கியது.
ஆனால், இந்த வழக்கில் விசாரணை துவங்குவதற்குப் பல ஆண்டுகள் ஆயின. ஒரு வழியாக 2012ஆம் ஆண்டின் துவக்கத்தில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
இதில் 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், வழக்கு முடிவதற்குள் பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பைக் கடுமையாக மறுத்தனர்.
அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 9 பேரையும் விடுவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கொல்லப்பட்டவரின் மனைவியின் சாட்சியத்தைத் தவிர, நேரடி சாட்சியங்கள் ஏதும் இல்லை என்றும் அவரது சாட்சியத்தை விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை எனவும் கூறி 2016 செப்டம்பரில் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது.
இது அந்தப் பெண்மணியை நொறுங்கச் செய்தது. அவர் மட்டுமல்ல, அவரது மகனும் துவண்டுபோனார்.
தனது தந்தையைக் கொன்று, தாயை சித்ரவதை செய்தவர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே சட்டம் படித்திருந்தார் அந்த மகன்.
அந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு வழக்கு நடந்த காலகட்டம் நெடுக உதவியாகச் செயல்பட்டார். இந்த நிலையில் வழக்கின் முடிவு அவர்களை நிலைகுலையச் செய்தது.
படக்குறிப்பு,ஊமச்சிகுளம் காவல் நிலையம்
சட்டம் படிக்கக் காரணமான தந்தையின் மரணம்
இந்தச் சம்பவம் நடந்த தருணத்தில், அதாவது 1998இல் அந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். அவர்களில் மூத்த மகன் 14 வயது சிறுவனாக இருந்தார். அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். தனது தந்தையின் நிலைக்குக் காரணமானவர்களை ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆத்திரம் அவருக்கு இருந்தது.
"என் தந்தையைக் கொன்றவர்களை ஏதாவது செய்ய வேண்டுமென கிராமத்து பாணியிலான கோபத்தில் இருந்தேன். அப்போதுதான் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் போன்றவர்கள், 'நீ நன்றாகப் படித்து இதுபோல பாதிக்கப்படும் பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்' என்றார்கள். எனக்கு அந்த நேரத்தில் அதைப் பற்றிய புரிதல் ஏதும் இல்லை.
என் அப்பாவையும் அம்மாவையும் கொடூரமாகச் சித்ரவதை செய்திருக்கிறார்கள். அது தொடர்பானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற கோபம் மட்டும் மனதில் இருந்தது. ஆனால், ஹென்றியும் அவருடன் இருந்தவர்களும் எனக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்தனர். நீ சட்டம் படித்து, இதுபோல பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்கள்" என அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார் அவர்.
இந்த விவகாரம் நடக்கும்போது அவர் பள்ளி மாணவராக இருந்தார். ஆனால், வழக்கின் விசாரணை முழுமையாகத் துவங்கியபோது அவர் தனது சட்டப் படிப்பையே முடித்திருந்தார். 2008இல் அவர் வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு, திருச்சி சட்டக் கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார்.
தமது பெற்றோர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கிற்காக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அரசு வழக்கறிஞரிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டார். வழக்கின் விசாரணை நடக்கும் நாட்களில் சாட்சிகளை பத்திரமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது போன்ற பணிகளை அவர் பார்த்துக்கொண்டார்.
"அடுத்த நாள் சாட்சியமளிக்க வேண்டுமென்றால், முதல் நாள் இரவே அவர்கள் (சாட்சிகளின்) வீட்டிற்குச் சென்று, அவர்கள் வீட்டிலேயே தங்குவேன். அவர்களைக் கையோடு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன். அதேபோல, அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று, என் தந்தையின் உடற்கூராய்வு அறிக்கையை வாங்குவது, அங்கு பதிவான அறிக்கைகளை வாங்கி, அரசு வழக்கறிஞருக்குத் தருவது போன்ற உதவிகளைச் செய்தேன்" என பிபிசியிடம் அந்த நாட்களை நினைவுகூர்ந்தார் அந்த இளைஞர்.
'போராடிக்கொண்டே இருப்பேன்'
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் கிடைத்த தொடர் தோல்விகளுக்குப் பிறகும் இந்த வழக்கை அப்படியே விட்டுவிட அவர்கள் விரும்பவில்லை.
"இந்த வழக்கில் காவல்துறையின் சித்ரவதை இல்லை என்று தீர்ப்பு ஏதும் வரவில்லை. சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதால்தான் ஒன்பது பேரும் விடுதலையாகி இருக்கிறார்களே தவிர 'அவர்கள் சித்ரவதை செய்யவில்லை, அந்தச் சித்ரவதையால் மரணம் ஏற்படவில்லை' என்று நீதிமன்றம் சொல்லவில்லை.
உடற்கூராய்வு அறிக்கையும், ஆரம்பக் கால சாட்சியங்களும் சித்ரவதையை உறுதிசெய்திருக்கின்றன. சித்ரவதை நடந்தது என்பதை விசாரணை நீதிமன்றத்தில் முதல் முதலில் சாட்சி சொல்லும்போது அங்கிருந்த சக கைதிகள் வலுவாகச் சொன்னார்கள்." என்கிறார் கொல்லப்பட்டவரின் மகன்.
"ஆனால், குறுக்கு விசாரணையில் அவர்கள் அதை மாற்றிச் சொன்னார்கள். நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்பதால்தான் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது. என் தாய்க்கும் தந்தைக்கும் சித்ரவதை நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறோம்" என்கிறார் அவர்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டப் போராட்டம் என்பது மிக நீண்டது என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன். ஆனால், தாயும் மகனும் இந்தப் போராட்டத்தை இப்போதைக்கு விடுவதாக இல்லை.
"நாங்கள் யார் சொத்துக்கும் ஆசைப்படவில்லை. நேர்மையாக உழைத்தோம். வண்டி மாடு ஓட்டுவோம். கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தோம். இதேபோலத்தானே மனிதர்கள் எல்லோரும் கஷ்டப்படுவார்கள்?"
"நான் இவர்கள் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு கரையேறிவிடலாம். ஆனால், நம்மைப் போன்ற அப்பிராணிகளைக் கொல்லக்கூடாது. இதுக்கு நீதி கிடைக்கனும். எனக்கு அந்த நீதி இதுவரை கிடைக்கவில்லை. 27 வருடங்களாகக் கிடைக்கவில்லை. இன்னமும் போராடுகிறேன். போராடிக்கிட்டே இருப்பேன்" என்கிறார் அந்தப் பெண்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cvgjerpg1mvo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.