Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் யாரால் வந்தது? - அமித்ஷா கேள்விக்கு திமுக 'புது' விளக்கம் - உண்மை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமித் ஷா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை வழக்கம் போல் அரசியல் ரீதியாக பல்வேறு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் பலவித யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெல்ல வேண்டும் என்ற அவரது பேச்சு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி குறித்த யூகங்களை எழுப்பியுள்ள அதே வேளையில், எய்ம்ஸ் குறித்த அமித்ஷாவின் கேள்வியும், அதற்கு திமுக அளித்த பதிலும் புதிய கேள்விகளுக்கு வித்திட்டிருக்கிறது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு தேசிய அளவில் 'அரசியல் சாணக்கியர்' என்று பெயர் பெற்றுவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதன் பிறகு இந்தியாவின் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அங்கே அரசியல் பூகம்பங்கள் வெடிப்பது வாடிக்கை. தமிழ்நாட்டிற்கு அவரது வருகையும் அவர் டெல்லி திரும்பிய பிறகும் கூட எப்போதும் ஏதாவதொரு வகையில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய அளவில் கட்சிகள் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், அமித்ஷாவின் ஒவ்வொரு நகர்வுமே அரசியல் பார்வையாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஏனெனில், அரசு நிகழ்ச்சிக்காக என்றாலும் கூட அமித்ஷாவின் ஒவ்வொரு வருகையும் மறைமுகமாக ஏதாவது ஒரு அரசியல் நோக்கங்களை கொண்டிருக்கும் என்பதே அவர்களின் கணிப்பு.

தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வருகை தந்த அமித்ஷா, சென்னை விமான நிலையத்திற்கு வெளியே வரும் போதே மின்சாரம் தடைபட்டது. ஆனாலும், அமித் ஷா காரிலிருந்து இறங்கி தொண்டர்களைச் சந்தித்தார். இதையடுத்து அங்கிருந்து அமித் ஷா புறப்பட, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் விமான நிலையத்துக்கு வெளியே சாலையின் இருபுறமும் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே மின்சாரத்தை தடை செய்துவிட்டது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

 

இவ்வாறு, சர்ச்சையில் தொடங்கிய அமித்ஷா பயணம் பல்வேறு யூகங்களையும் கேள்விகளையும் இங்கே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது.

 

மதுரை எய்ம்ஸ் - திமுகவுக்கு அமித்ஷா கேள்வி

வேலூரில், பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட முடியுமா? என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்தார்.

"9 ஆண்டு கால மோதி ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. சிஆர்பிஎஃப் தேர்வாகட்டும், நீட், சிவில் சர்விஸ் போன்ற தேர்வாகட்டும் தமிழ் மக்கள் தமிழ் மொழியில் அந்த தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது. மோதி ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழில் தேர்வு எழுத முடிகிறது. 9 ஆண்டுகால நரேந்திர மோதி ஆட்சியில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் இன்னும் ஏன் திறக்கப்படவில்லை என்று என்னிடம் கேள்வி கேட்டனர் . ஆனால் நான் இந்த கேள்வியை திமுகவினரை நோக்கி கேட்க விரும்புகிறேன். 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தும் ஒரு எய்ம்ஸை கூட திறக்க வேண்டும் என திமுகவிற்கு ஏன் தோன்றவில்லை" என்றார் அவர்.

உரையைத் தொடர்ந்த அவர், "இன்று காலையில் கட்சியின் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில தலைவர் அண்ணாமலை அதை வழிநடத்துவதை பார்த்து எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கும் மேலாக பாஜக வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்தது." என்று கூறினார்.

அமித் ஷா

பட மூலாதாரம்,TWITTER/AMIT SHA

"தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் திமுகவால்தான் வந்தது"

அமித்ஷா திமுக மீது முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, குறிப்பாக எய்ம்ஸ் பற்றி திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்தியில் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்த போதுதான் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. 2000 முதல் 2004 வரையிலான கால கட்டத்தில், மத்திய அமைச்சரவையில் ஆ.ராசா சுகாதாரத்துறை இணையமைச்சராக பதவி வகித்த போதுதான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனை சென்னையில் அமைப்பதா அல்லது தஞ்சையில் அமைப்பதா என்பது மட்டுமே தீர்மானிக்கப்படாமல் இருந்தது. ஆனால், திமுகவின் முயற்சிகளுக்கு அன்றைய தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக ஒத்துழைக்கவில்லை.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அடுத்து வந்த, இன்றைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எய்ம்ஸ் மருத்துவமனையை சேலத்தில் அமைக்க முயற்சி செய்தார். இதுதான் வரலாறு. இப்படித்தான், அது தாமதமானது. இப்போது, பா.ஜ.க. ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? மதுரை எய்ம்ஸ் மருத்துவனை ஏன் இன்னும் அமையவில்லை? ஆகவே, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைய திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பா.ஜ.க.தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு அதனை செயல்படுத்தாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது." என்று அவர் பதிலளித்தார்.

மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாததை முன்னிறுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒற்றைச் செங்கல்லைக் காட்டி திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் செய்த பிரசாரம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்விக்கு திமுக அளித்து விளக்கம், தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை யாரால் வந்தது? என்ற கேள்விக்கான விடையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

டிகேஎஸ் இளங்கோவன்

பட மூலாதாரம்,TKS ELANGOVAN

2 தமிழர்கள் பிரதமராவதை திமுக தடுத்ததா?

வேலூர் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்கள் உருவாவதை திமுக தடுத்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக கட்சியினர் உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

பா.ஜ.க. சார்பில் வெளிப்படையாக அப்படியான ஒரு கருத்து வரவில்லை என்ற போதிலும், ஊடகங்களில் கூறப்படுவது போல் அவர் பேசியிருப்பாரானால் இதுவே எனது பதில் என்று கூறி அவர் தொடர்ந்தார்.

"அமித்ஷா சொல்ல வருவது காமராஜர், மூப்பனார் ஆகிய இருவர் குறித்தும் என்ற ஊகத்தின் அடிப்படையில் இதனைச் சொல்கிறேன். காமராஜர் பிரதமராக விரும்பியிருந்தால் அவரை யாராலும் தடுத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்த அவர், தாமாகவே முன்வந்து இந்திராகாந்தியை பிரதமராக்கினார். மூப்பனார் விஷயத்தில் இதுபோன்ற ஊகங்கள் அப்போதே ஊடகங்களில் வெளியான போது 'நான் பிரதமராக விரும்பவில்லை. அதுகுறித்து யாரிடமும் பேசவும் இல்லை. கேட்கவும் இல்லை. ஆகவே, தேவையின்றி இதுகுறித்து மேற்கொண்டு பேச வேண்டாம்' என்று அவரே விளக்கம் கொடுத்துவிட்டார்.

பசுவைக் காப்பாற்றுவதற்காக காமராஜரை கொல்ல முயன்ற இயக்கத்தினர் இன்று அவருக்காக பரிந்து பேசுவதும், எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததற்காக 1998-ம் ஆண்டு எங்களை விட்டு மூப்பனார் விலகிப் போனாரோ அவருக்கு ஆதரவாகவே அதே கட்சி பேசுவதும் கேட்பதற்கு விசித்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. காரணம், இப்போதாவது தமிழர்கள் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்களே" என்று கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் முடித்துக் கொண்டார்.

தமிழ்நாடு பா.ஜ.க. என்ன சொல்கிறது?

2 தமிழர்கள் பிரதமராவதை திமுக தடுத்துவிட்டதாக வெளியான ஊடக செய்தி குறித்து தமிழ்நாடு பாஜ.க. தலைவர்களின் கருத்தை அறிய முயன்றோம். "2 பிரதமர்கள் உருவாவதை திமுக தடுத்துவிட்டது என்று அமித்ஷா பேசியதாக யார் சொன்னது? ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அதேநேரத்தில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து வெளிப்படையாக பேசவும் முடியாது" என்று பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

பாஜக

பட மூலாதாரம்,TWITTER/KARU.NAGARAN

இதேபோல், நம்மிடம் பேசிய அக்கட்சியின் மற்றொரு துணைத் தலைவர் கரு.நாகராஜனும், "அமித்ஷா அவ்வாறு பேசியதாக நான் கேள்விப்படவில்லை. அண்மையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது அவரை சந்தித்திருந்த நான், இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆகவே அதுகுறித்து நான் ஏதும் கூற இயலாது" என்று கூறினார்.

அதேநேரத்தில், வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க. சார்பில் 25 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பேசியிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் பா.ஜ.க. சார்பில் 25 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை எங்களது மாநிலத் தலைவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அது மீண்டும் ஒருமுறை அமித்ஷாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது அதிமுக கூட்டணியிலா? அல்லது தனித்தா? என்பதை இப்போதே கூற முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய அவகாசம் இருக்கிறது." என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் போட்டியிட மோதி திட்டமா?

அமித்ஷாவின் சுற்றுப்பயணம் தமிழ்நாடு அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். 2 தமிழர்கள் பிரதமராவதை திமுக தடுத்துவிட்டது, தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக பாடுபடுங்கள் என்று பா.ஜ.க. நிர்வாகிகளிடையே அமித்ஷா பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கருத்துக் கூறிய அவர்,

"காமராஜர் பிரதமராவதை திமுக தடுத்தது என்று என்ன அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், 1996-ம் ஆண்டு மூப்பனார் பிரமராகும் வாய்ப்பு கனிந்து வந்த போது திமுக தடுத்துவிட்டது என்பது போன்ற குற்றச்சாட்டு உண்டு. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்று எதன் அடிப்படையில் அவர் பேசியிருப்பார். தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க.வுக்கு பேர் சொல்லும் வகையில் ஒரு தலைவர் கூட இல்லையே. ஒருவேளை வாரணாசியுடன் சேர்த்து, தமிழ்நாட்டிலும் ஒரு தொகுதியில் மோதி போட்டியிடுவார் என்ற அடிப்படையில் அவர் அதனை சொல்லியிருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும், கடந்த தேர்தலில் ராகுல்காந்தி எதிர்கொண்ட அதே விமர்சனங்களை மோதியும் சந்திக்க நேரிடும். தோல்வி பயத்தால்தான் மோதி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய வசதியாய் போய்விடும். அதேநேரத்தில், ராமநாதபுரத்தில் மோதி போட்டியிடுவார் என்ற பேச்சு தொடர்ந்து இருந்தே வருகிறது." என்று தெரிவித்தார்.

கார்த்திகேயன்

பட மூலாதாரம்,KARTHIKEYAN

25 தொகுதிகளில் பா.ஜ.க. வெல்லும் என்ற அமித்ஷா பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கார்த்திகேயன், "தமிழ்நாட்டில் அதற்கான செல்வாக்கு பா.ஜ.க.வுக்கு கொஞ்சமும் கிடையாது. 2014-ம் ஆண்டு திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல் கன்னியாகுமரி தொகுதியில் வென்ற பா.ஜ.க.வால் அதன் பிறகு 2019-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக துணையிருந்தும் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. காரணம், மோதி பிரதமரான பிறகு அவர் மீதிருந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதால், தமிழ்நாட்டில் அவர் மீது அதிருப்தி அதிகமாகிவிட்டது.

பலவீனமாக இருக்கும் அதிமுக தலைமையை அச்சுறுத்தி, ஓபிஎஸ், தினகரன், ஏ,சி,சண்முகம், கிருஷ்ணசாமி ஆகியோரை பா.ஜ.க. வசம் வைத்துக் கொண்டு 25 தொகுதிகளை வாங்க வாய்ப்பு இருக்கிறது. அவர்களை பா.ஜ.க சின்னத்தில் போட்டியிடச் செய்வது என்ற திட்டத்தின் பேரில் அமித்ஷா அவ்வாறு கூறியிருக்கலாம்.

ஆனாலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பார்க்கையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. மீது அதிக அளவில் அதிருப்தியே நிலவுகிறது. திமுக அரசு மீது அதிருப்தி தலை தூக்கியிருந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எதிர் முகாமில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற வலுவான தலைவர் இல்லை. அத்துடன், பா.ஜ.க. மீதான மக்களின் அதிருப்தியும் சேர்ந்து கொள்ள அந்த அணி தோல்வியடையவே வாய்ப்பு அதிகம்" என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/crglzjnn3yvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது – வேலூரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

12 JUN, 2023 | 03:02 PM
image
 

தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என  வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  பாஜக அரசின் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில்  தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாவது..

“ காங்கிரஸ் திமுக ஆட்சியில் 12,000 கோடி ரூபாய் ஊழல் நடைப்பெற்றது. பாஜக ஆட்சியில் ஊழல் இன்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று கொண்டு இருக்கிறது. பாஜக அரசு புதிய பாராளுமன்றத்தில் சோழர்களின் செங்கோல் வைத்து சாதனை புரிந்துள்ளது.

உலகில் எந்த நாட்டிற்கு சென்றாலும் பிரதமர் தமிழ் மொழி பற்றியும் இலக்கியத்தை பற்றியும் பேச மறப்பதில்லை. காசி தமிழ்சங்கத்தில் திருக்குறளை 23 மொழிகளில் மொழி பெயர்த்து பிரதமர் வெளியிட்டு தமிழை பெருமைப்படுத்தி உள்ளார். பாஜக அரசு வந்த பிறகு தான் நீட் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு உள்ளிட்டவை தமிழ் மொழியில் நடைப்பெறுகிறது.

 

தமிழகத்திற்கு நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகள் 2,47,000 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். அதேபோல கடந்த 9 ஆண்டுகளில்  2,31,000 கோடி ரூபாய் மானியமாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 58,000 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.  சென்னை- பெங்களூருக்கு விரைவு பாதை அமைக்க 50,000 கோடி வழங்க்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர், காட்பாடி ,மதுரை ரயில் நிலையங்களை சீரமைக்க 3,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் செலவில் நெய்வேலியில் புதிய மின் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.  84,00,000 லட்சம் குடிநீர் இணைப்புகள் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. 62,00,000 கழிப்பறைகள் தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

18 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் அங்கம் வகித்த  திமுக ஏன் ஒரு  எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. காங்கிரஸ், மற்றும் திமுக ஊழல் செய்யும் கட்சி.  திமுக 3 தலைமுறையாக குடும்ப ஆட்சி செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் 4 தலைமுறையாக குடும்ப ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. 2024 தேர்தலில் 25 பேர் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்று செங்கோல் கீழே அமர செய்யுங்கள். 2024 ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்  25  தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் . வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும். ” என மத்திய உள் அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள் – மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி

12 JUN, 2023 | 03:08 PM
image
 

எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள்  என  அமித்ஷாவின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார்.

வேலூரில் பேசிய மத்திய  உள்துறை அமைச்சருக்கு திமுகவின் பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.

“தமிழ்நாடு முதலமைச்சர் நேற்றைய தினம் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா , முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் “கானல் நீர்” தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். தமிழ்நாடு, பா.ஜ.க. ஆட்சியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அக்மார்க் உண்மை என்பதை அமித் ஷாவே புரிந்து கொண்டு, திசை திருப்பி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார்.

 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக பங்கேற்றிருந்த போது தமிழ்நாட்டிற்கு சாதித்த திட்டங்களை மிக அழகாக பட்டியலிட்டார் முதலமைச்சர். அதுபோன்ற சாதனைமிக்க சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட இந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்பதுதான் எங்கள்  தலைவரின் அடிப்படையான குற்றச்சாட்டு.

தன்னுடைய பேச்சில் அப்படியொரு சிறப்புத் திட்டத்தை சுட்டிக்காட்ட முடியாமல் திணறிப் போன உள்துறை அமைச்சர், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசி, “தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஒரு சிறப்புத் திட்டமும் நிறைவேற்றவில்லை” என்று வேலூரில் வெளிப்படையாகப் பேசிக் கைவிரித்துள்ளார்.

 

தமிழ்நாட்டை எப்படி மத்திய  அரசு வஞ்சித்துள்ளது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். மத்திய அரசின் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஆணையம் பகிர்ந்தளிப்பது குறைக்கப்பட்டுள்ளது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில்தான்!

தமிழ்நாட்டிற்கு கடந்த 9 வருடத்தில் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் அளித்ததாக கூறும் பொழுது, அதே காலகட்டத்தில் உத்தரபிரதேசத்திற்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை அள்ளித் தந்ததை ஏன் மறைக்க வேண்டும்? நிதிப் பகிர்வில் முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தலைநகர் தில்லி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. அண்ணாவின் மொழியில் சொன்னால் “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்ந்து கொண்டே போகிறது”

 

 

தமிழ்நாட்டிற்கு ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி வழங்கியது இந்தித் திணிப்பு, தமிழ்மொழியைப் புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு தாலாட்டு, திருப்பூர் கண்டெய்னர் மறைப்பு, அம்மையார் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஓபிஎஸ்-இபிஎஸ் என ஆளவிட்டு தமிழ்நாட்டின் நிர்வாகத்தை அடியோடு சீரழித்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னால் இருந்த தமிழ்நாட்டைத் திட்டமிட்டு வீழ்த்தியது, நீட் கொண்டு வந்து தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது, உதய் திட்டத்தில் மிரட்டி கையெழுத்திட வைத்து தமிழ்நாட்டு மக்கள் மீது மின்கட்டண உயர்வை ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும் என்று கெடுபிடி செய்வது, ஒரு பயோமெட்ரிக் கேமிரா வேலை செய்யவில்லை என்பதற்காக ஸ்டான்லி உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழ்நாட்டை அவமானப்படுத்தியது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

ஒன்றிய அரசில் தமிழை ஒன்றிய ஆட்சி மொழியாக்க மாட்டார்கள். ஏன் உயர்நீதிமன்றத்தில் கூட ஆட்சி மொழியாக்க அனுமதிக்க மாட்டார்கள். மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீடு செய்ய மாட்டார்கள். ஏன், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளில் கூட தமிழ்நாட்டிலிருந்து சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளை நியமனம் செய்ய மாட்டார்கள். ஆனால் தமிழ் மீது பாசம் இருப்பது போல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேஷம் போடுவது எந்த ஆட்சி? அது சாட்சாத் பா.ஜ.க. ஆட்சிதான்!

ஒன்பதாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் இல்லை என்கிறார். வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ என அனைத்தையும் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக்கி விட்டு, நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

 

உள்துறை அமைச்சரே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, நீதிமன்றங்கள் ஆகியவற்றை உங்கள் “கோரப்பிடியில்” இருந்து விடுவியுங்கள். அப்புறம் தெரியும் உங்கள் 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் நடந்ததா அல்லது ஊழல் கோப்புகள் ஒவ்வொரு துறையிலும் உறங்கிக் கொண்டிருக்கின்றனவா என்று? ஊழலே செய்யாத ஆட்சியில் ஏன் அதானி பற்றி நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு பயப்பட வேண்டும்? ஊழலே இல்லை என்றால் ஏன் ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திலேயே “நாட்டின் ரகசியம்” என வாதிட வேண்டும்?

நாட்டு மக்கள் குஜராத் கலவரத்தையும் – அந்த வழக்குகள் எப்படி நீர்த்துப் போக வைக்கப்பட்டன என்பதையும் – சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு நீதிபதிக்கு என்ன ஆனது என்பதையும் இன்னும் மறந்து விடவில்லை என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருப்பதே மத்திய பா.ஜ.க. அரசுதான். அந்த அரசின் முகமூடியை நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிழித்தெறிந்துவிட்டார். அந்த ஆதங்கத்தில் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா  இந்தந்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட முடியாமல் வேலூரிலிருந்து திரும்பியிருக்கிறார் என்பதே எங்களின் முதலமைச்சருக்கு கிடைத்த முதல் வெற்றி.

இதே வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் அளிக்கத்தான் போகிறார்கள்.

 

எனவே, “மூழ்கும் கப்பலாக” இருக்கும் பா.ஜ.க. இன்னும் எத்தனைக் கற்பனை கதைகள், ஏவல் படைகளுடன் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலும் – தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட கொடுக்க மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157548

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.