Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலுவற்ற இலங்கையின் விவசாயக் கொள்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலுவற்ற இலங்கையின் விவசாயக் கொள்கை

 

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும்  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது.

அறிமுகம்

இலங்கை போன்ற இயற்கை வளங்களையும், பொருத்தப்பாடான காலநிலையையும்  செழிப்பாகக் கொண்ட ஒரு வளர்ந்துவரும் சிறிய தீவு நாட்டுக்கு விவசாயம் சமூக-பொருளாதாரத்தின் நிலைத்திருப்புக்கும், வேலைவாய்ப்பு, உணவு மற்றும் போசாக்கை வழங்குகிற ஒரு “முழுமையான” வகிபாகத்தையும் கொண்ட துறையாகும். மேலும் விவசாயத்துறை தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முதுகெலும்பாகவும்  மற்றும் நாட்டின் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்து  பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற பிரதான துறையாகவும் பரிணமித்திருக்கிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில், விவசாயத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.0% யும்  மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி வருவாயில் 21.7% யும் பங்களிப்புச் செய்வதோடு தேசிய தொழிலாளர் படையில் 23.73% வேலைவாய்ப்பை வழங்கி  தற்போதைய இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 45% ஐ ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும், நாட்டின் சமூக-பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு மத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பை மதிப்பிடுவது கடினம். இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் விவசாயத்துறை வீழ்ச்சி அடையும் போக்கையே காட்டுகின்றது. குறைந்த விவசாய உற்பத்தித்திறன் மற்றும் நிலம், நீர் மற்றும் மண் போன்ற வளங்களின் மோசமான மேலாண்மை, குறைந்த பண்ணை வருமானம், பலவீனமான பண்ணை – சந்தை இணைப்புகள் மற்றும் அறிவு, தொழில்நுட்பம் மீதான முதலீடுகள் இல்லாமை, அரசு நிதியுதவி மற்றும் அதிகப்படியான  மானியம், மற்றும் தனியாட்களின் பாரிய முதலீடுகள் இன்மை  உட்பட பல காரணங்களைக் குறிப்பிட்டாலும், இதற்க்கு மிகப் பிரதானமான காரணிகளாக இலங்கையின் விவசாயக் கொள்கையில் காணப்படுகிற குறைபாடுகளும், வெளிநாட்டு அரசியல் கொள்கைகள், இனமுரண்பாடுகள் மற்றும் முறையற்ற தாராள இறக்குமதிக் கொள்கைகளுமே காரணமாகும். இவ் அத்தியாயம் இலங்கையின் விவசாயக் கொள்கைகள் ஏன் வலுவற்றதாகக் காணப் படுகின்றது என்பதை தர்க்கித்து விரிவாக விளக்க முற்படுகிறது.

நெற்பயிர்

இலங்கையின் தேசியவிவசாயக் கொள்கை (Sri Lankan National Agriculture Policy)  

தேசிய விவசாயக் கொள்கை (A National Policy on Agriculture (NAP)) என்பது, விவசாயத்துறை இப்போது அல்லது எப்போதும் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ளும் சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் பலவீனங்களை அகற்றுவதற்கு ஆதார அடிப்படையிலான கண்காணிப்பு அல்லது சான்று-மையக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டின் (evidence-based monitoring and evaluation) பின்பற்றப்படும் முடிவுகள் அடிப்படையிலான செயலாக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் அமைச்சரவை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்ட தேசத்தை வளமாக்குவதற்கான நிலையான உணவுப்பாதுகாப்பு என்ற தூர நோக்குச் சிந்தனையுடன் “செழிப்பு மற்றும் சிறப்பு: Vistas of Prosperity and Splendor” என்ற தேசிய கொள்கைக் கட்டமைப்பில் அடையாளம் காணப்பட்ட கூறுகளை பிரதானமாக  வெளிப்படையான முறையில்  கருத்தில் கொண்டு விவசாய அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வெளிப்படையான மற்றும் நன்கு ஒருங்கிணைந்த பொறிமுறையின் மூலம் விரிவான மற்றும் முறையான செயல்முறையைப் பின்பற்றி நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால்  உருவாக்கம் பெறும் இலங்கையின் தேசியவிவசாயக் கொள்கை வரைபு, விவசாயிகள் மற்றும் விவசாய உணவு அமைப்பில் உள்ள பிற முக்கியமான பங்குதாரர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் (சுயாதீனமான மற்றும் நியமிக்கப்பட்ட நிறுவனங்கள்), சிவில் சமூகம், வளர்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றுடனான கொள்கை விளக்கக் கலந்துரையாடல்கள் மூலம் அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி விவசாயத் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படுகிறது.

இலங்கையின் தேசிய விவசாயக் கொள்கை இரண்டு முக்கியமான பிரிவுகளைக் கவனத்தில் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.  அவையாவன :  

  1. உணவு மற்றும் தீவனப் பயிர்கள்
  2. தரத்தில் உயர்ந்த உணவு மற்றும் நிலையான உணவுப் பாதுகாப்பு

இவ்வாறு 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விவசாயக்கொள்கையானது பின்வரும்  8  விவசாயப் பரப்புக்களில் காணப்படும் இடர்பாடுகளை அல்லது குறைபாடுகளைச் சீர்செய்து  நிலைபேறான விவசாய உற்பத்தியை 2030 இல் எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளது, அவையாவன:

  1. பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தி மேம்பாடு
  2. அடிப்படை உணவு மற்றும் தீவனத் தேவைகளில் தன்னிறைவு மற்றும் தாராளத்தன்மை
  3. திட்டமிட்ட வளப்பயன்பாடு
  4. சந்தைப் போட்டித்திறன்
  5. காலநிலை நெகிழ்தன்மை
  6. அனைத்து அபாயங்களையும் நிச்சயமற்ற தன்மைகளையும் குறைத்தல்
  7. விவசாயத்தில் பாலினம் மற்றும் இளைஞர்களை இணைத்தல்
  8. கேந்திர சுற்றுவட்டார உறவுகளை  வலுப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்

இலங்கையின் விவசாயக் கொள்கையை  வலுவற்றதாக்கும் காரண காரணிகள்

யாழ்ப்பாணம்-பலாலி-விவசாய-பண்ணை-2

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடர்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் கீழ் விபரிக்கப்பட்டிருக்கும்  விவசாயக் குறிக்கோள்கள் மூலம் முனைந்தாலும்  பல காரண காரணிகள் செல்வாக்குச் செலுத்தி, விவசாயக் கொள்கையை வலுவற்றதாக்கி வருகிறது.

குறிக்கோள் 1 – நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நேய  விவசாய நடைமுறைகளைக் கடைப்பிடித்து வள உற்பத்தித்திறனை (2020 மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது) இரட்டிப்பாக்கல்: மூல வளங்களின் பாவனை எவ்வாறு நடைமுறையில் இருக்கின்றது என்பதனைக் கணக்கிடும் மற்றும் தரவுகளைச் சேமிக்கும் முறை மற்றும் திட்டங்கள் தற்போதைய நடைமுறையில் வினைத்திறனாக இல்லை. அதுமட்டுமன்றி, சூழல் நேய விவசாய நடைமுறையான “Good Agricultural Practices (GAP)” இனை எல்லா விவசாயிகளும் நடைமுறைப்படுத்துவதும் இல்லை மற்றும் சிபார்சு செய்யப்பட்ட அளவிலான உர மற்றும் பீடைநாசினிகள் விவசாய நிலங்களுக்கு இடப்படுகின்றன என்பதும் வினைத்திறனாகக் கண்காணிக்கப்படுவதில்லை.

குறிக்கோள் 2 – விவசாயிகள்/விவசாய உற்பத்தியாளர்களின் பொருளாதார இலாபத்தை இரட்டிப்பாக்குதல் (2020ன் மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது):
விவசாயிகளின் இலாபத்தை இரட்டிப்பாக்க வேண்டுமானால் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதோடு விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி கணிசமான அளவு நிகழ்வதோடு இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்தல் தடுக்கப்படவேண்டும் அல்லது இறக்குமதித் தீர்வை அதிகரிக்கப்படவேண்டும்.  ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் அறுவடை செய்யப்படும் காலத்தில் குறைந்த விலையில் கணிசமான அளவு இறக்குமதி நடைபெறுவதால், உள்நாட்டுச் சந்தைவாய்ப்புக் குறைவு  மற்றும் விலைத்தளம்பல் ஏற்பட்டு விவசாயிகள் அதிகளவோடு நட்டமடைகின்றதோடு விவசாயத்தையும் கைவிடுகின்றனர்.

Good-Agricultural-Practices

குறிக்கோள் 3 – விவசாய உணவு முறையின் பங்களிப்பை தேசிய பொருளாதாரத்தில் 15% வரை உயர்த்துதல்: இதனை அடைய வேண்டுமானால் நாடு முழுவதும் காணப்படும் விவசாய நிலங்களில் வினைத்திறனாக உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெறவேண்டும். இதனை அடைவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே, நிலையான இறக்குமதிக் கட்டுப்பாடு மற்றும் உள்நாட்டு விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல், நிலையான விலை நிர்ணயம் மற்றும் களஞ்சியப்படுத்தல் தேவைகளை சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் உற்பத்தியாளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்.

குறிக்கோள் 4  வேளாண்-உணவு மதிப்பு சங்கிலியுடன் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை தற்போதைய நிலையில் இருந்து குறைந்தபட்சம் 50% அதிகரிக்கவும்: உள்நாட்டுத் தொழில்நுட்பங்களுக்கு கடந்த அரசுகள் பெரியளவில் மதிப்பளிக்கவில்லை. அதுமட்டுமன்றி உள்நாட்டுத் தொழில்நுட்ப முடிவுப் பொருட்களின் விலை இறக்குமதி செய்யப்படும் தொழினுட்பத்தை விட மிக அதிகம், காரணம்,  பெரும்பாலும் பாரிய முதலீடுகள் இல்லாமல் அவற்றைப் பாரியளவில் உற்பத்தி செய்ய முடியாது. அதுமட்டுமன்றி திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக அதிநவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து இலகுவாகவும் மலிவாகவும் கிடைப்பதால் பண்ணையாளர்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பெரியளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்று இருக்கும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் இறக்குமதித்தடை உள்நாட்டுத் தொழில் துறையை மேம்படுத்த ஒரு சிறந்த காலமாகும். இதனைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தினால் கொள்கைக் குறிக்கோளை அடையமுடியும்.

குறிக்கோள் 5 – உயர்தர மற்றும் உயர் விளைச்சல் தரக்கூடிய விதை மற்றும் நடவுப் பொருட்களின் உற்பத்தியை உள்நாட்டில் தேசியத் தேவையில் 50% அதிகரித்தல்: அரச விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் விதை உற்பத்திப் பண்ணைகளில் உயர் விளைச்சல் தரக்கூடிய உள்நாட்டு இனங்களின் மேம்பாடு குறிப்பிடக்கூடிய அளவில் இல்லை. பல பயிர்களின் குறிப்பாக சிறுதானியங்கள், குளிர் காலநிலையில் நன்கு வளரும்  மரக்கறிப் பயிர்களான கரட், பீற்றூட், லீக்ஸ், கோவா மற்றும் உருளைக் கிழங்கின் விதைகள் வேறு நாடுகளில் இருந்தே பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் விவசாயத் திணைக்களத்தினால் ஊக்குவிக்கப்படும் பல ஏற்றுமதி நோக்கம் கொண்ட பழப்பயிர்களான Red lady பப்பாசி மற்றும் கவிண்டிஸ் (Cavendish) ரக வாழைப்பழம் போன்றவற்றின் விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதோடு அவற்றின் உற்பத்தியும் ஊக்குவிக்கப்படுகிறது. மேல் விளக்கப்பட்ட செயற்பாடுகள்  மூலம் இக் குறிக்கோளை அடைய முடியாமல் விவசாயக் கொள்கை வலுவற்றதாக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

யாழ்ப்பாணம்-பலாலி-விவசாய-பண்ணை

குறிக்கோள் 6 – பயிர் உற்பத்தியில் சுற்றுச்சூழல் நட்பு உள்ளீடுகளின் பயன்பாட்டை தேவையின் 100% வரை அதிகரித்தல்: சுற்றாடல் நேய விவசாய உள்ளீடுகளின் பாவனையை  100% வரை அதிகரித்தல் எனும்போது, இது முற்றுமுழுதான சேதன விவசாயத்தையே வலியுறுத்துகிறது.  கடந்த வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட முற்றுமுழுதான சேதன விவசாய மாற்றத்தின் விளைவை நாம் அனைவரும் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் உணவுத்தட்டுப்பாட்டின் மூலம் உணர்ந்திருப்போம். எனவே இந்தக் குறிக்கோளை அடைவது சாத்தியமற்றது.

குறிக்கோள் 7 – நாட்டின் உணவு மற்றும் தீவனக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க பாதுகாப்பான மற்றும் தரமான உணவு மற்றும் தீவனத்தை வழங்குதல்: இந்தக் குறிக்கோளை அடைய உயர் வினைத்திறன் வாய்ந்த கண்காணிப்புப் பொறிமுறை அவசியம். ஆனால் நடைமுறையில் உணவு மற்றும் தீவனக் கட்டுபாட்டு அதிகாரிகளின் உயர் கண்காணிப்பு நடைமுறையில் இல்லை என்றே கூறலாம்.

குறிக்கோள் 8 – சான்றிதழ், தரப்படுத்தல் மற்றும் ஏனைய பொருட்கள் சேவைகள் நிமித்தம் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட உணவு மற்றும் தீவனக் கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவுதல்: உணவு மற்றும் தீவனக் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் இருந்தாலும் தீவனப் பொருட்களின் தர நிர்ணயம் மற்றும் சான்றிதழ் வழங்கல் சேவைகளை சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடைப்பிடிப்பதில்லை.

குறிக்கோள் 9 – திறமையான சந்தை அமைப்புகளுடன் இணைந்து, தொழில் வாண்மை ஆற்றலுடைய கமக்கார/விவசாய உற்பத்தியாளர் குழுக்களை நிறுவுதல்: இந்தக் குறிக்கோள் பெயரளவில் மாத்திரமே இருக்கிறது. இதனாலேதான் பல உற்பத்தியாளர்களால் உற்பத்தி அதிகரித்த நேரத்தில் சந்தைப்படுத்த முடியாமல் உற்பத்திப் பொருட்களை குப்பையில் வீசுகிறார்கள் மற்றும் விவசாயத்தைக் கைவிடுகிறார்கள். தொழில் வாண்மை ஆற்றலுடைய கமக்கார/விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் வினைத்திறனாகச் செயற்படுமாயின் ஒரே பயிரை  அனைத்து விவசாயிகளும் செய்யாமல் எந்த விவசாயி எந்தப் பயிரை இந்த வருடத்தில் எந்த அளவில் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்து பயிர் செய்து மற்றும் அறுவடையின் போது  விற்பனை விலையையும் தீர்மானித்தல்  நல்ல விலை கிடைப்பதோடு இலகுவாகச் சந்தைப்படுத்தவும்  முடியும்.

குறிக்கோள் 10  முடிவெடுக்கும் செயற்பாட்டில் விவசாயிகள்/விவசாய உற்பத்தியாளர்களின் உறுதியான பங்கையும் கட்டாயப் பங்கேற்பையும் நிறுவுதல்: இந்தக் குறிக்கோளும் பெயரளவிலேதான் இருக்கிறது. காரணம் இன்றுவரை விவசாய உற்பத்தியாளன் ஒருவன் சந்தைப்படுத்தும்போது இடைத்தரகர்களே விலையை நிர்ணயிப்பவர்களாகவும் அதிக லாபம் பெறுபவர்களாகவும் காணப்படுகின்றனர். அதுமட்டுமன்றி கிலோவுக்கு 5% அல்லது 10% கழிவும் சந்தைக் குத்தகைக்காரர்களால் விதிக்கப்படுகிறது, இதன்மூலமும் விவசாயி ஒருவரின்  இலாபம் பறிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்றால் குறிக்கோள் 9 ஐ இறுக்கமாகப் பின்பற்றினால் மாத்திரமே சாத்தியம்

இது தவிர நவீன தொழில்நுட்ப விவசாயம், படித்த இளைஞர் மற்றும் யுவதிகளை விவசாயத் தொழில்வல்லுநர்களாக உள்ளிழுத்தல் போன்றன விவசாயக் கொள்கையினால் ஊக்குவிக்கப்படாதது விவசாயக் கொள்கையின் மிகப் பெரிய குறைபாடாகும். மேல் விவாதிக்கப்பட்ட குறிக்கோள்களை அடைவதற்கு சிறந்த தந்திரோபாயங்களுடன் கூடிய திட்டமிடலை மேற்கொண்டு அவற்றை வினைத்திறனாக நடைமுறைப்படுத்தும்  போது விவசாயக் கொள்கையின் வலுவற்ற தன்மையை நீங்கி வலுப்பெறும்.

தொடரும்.

 

ஒலிவடிவில் கேட்க

 
  • spotify.png
  • google-podcast.png
  • amazon-music.png
  • cast-box.png
  • radio-public.png
  • apple-podcast.png
 
WhatsApp-Image-2022-09-20-at-07.51.44-1-

About the Author

கந்தையா பகீரதன்

கந்தையா பகீரதன் அவர்கள் 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் விவசாய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டுமுதல் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பிற்கான விவசாய நிறுவகத்தில் தாவர பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தனது முதுமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். பின்னர் இவரின் ஆராய்ச்சித் திறமைகளுக்காக 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பட்டப்பின் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில் மற்றும் அவுஸ்திரேலியன் முதுகலை விருதையும் (IPRS&APA) பெற்று அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்றியல் தாவர பாதுகாப்புப் பிரிவில் கலாநிதிப் பட்டத்தை 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் மற்றும் விவசாய உயிரியல் துறையின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். இவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை 30இற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளில் முன்னிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சஞ்சிகைகளிலும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளார். இவர் எழுதிய ‘அந்நியக்களை பாதீனியம்: அடங்க மறுப்பது ஏன்? அறியாததும் புரியாததும்’ என்ற நூல் வெளிவரவுள்ளது.

https://ezhunaonline.com/a-weak-sri-lankan-agricultural-policy/?fbclid=IwAR1JEDkA9bA3TD66YDKHTRN0AWCDoXn6ooHzCKfUwq-EwU0BlcwIiSqIbJ8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.