Jump to content

ஏன் 13வது திருத்தச்சட்டத்தை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் 13வது திருத்தச்சட்டத்தை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும்? - யதீந்திரா


13வது திருத்தச்சட்டமானது, இந்தியாவின் நேரடியான தலையீட்டின் விளைவு. இதன் காரணமாகவே இன்றும் இந்தியா அது தொடர்பில் பேசிவருகின்றது. தமிழ் அரசியல் சூழலை பொறுத்தவரையில், இது தொடர்பில் பலவாறான குழப்பங்கள் உண்டு. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுகின்றவர்களை பின்வரும் மூன்று பிரிவுகளாக நோக்கலாம். ஒரு பிரிவினர், 13வது திருத்தச்சட்டத்தின் போதாமை தொடர்பில் பேசுகின்றனர். இன்னொரு பிரிவினர் 13வது திருத்தச்சட்டமென்பது, இந்தியாவின் தேவைக்காக பேசப்படுவதாக கற்பனை செய்கின்றனர். இன்னொரு பிரிவினரோ, 13வது திருத்தச்சட்டத்தை ஒரு தீண்டத்தகாத விடயமாக பார்க்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வாதிடும் ஒரு தரப்பினருமுண்டு. அவர்கள் மிகவும் சிறுபான்மையினர். தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் பலர் மதில் மேல் பூனையாக இருக்கின்றனர்.

முதலாவது இந்தியா தொடர்பில் பார்ப்போம். இந்தியா 13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதாக பேசுவோர் உண்டு. குறிப்பாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, இவ்வாறானதொரு பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றது. இது அடிபபடையிலேயே தவறானது. அரசியல் தொடர்பில் போதிய புரிதலின்மையின் விளைவு. இந்தியாவிடம் தமிழ் கட்சிகள் உதவி கோருகின்ற காரணத்தினாலேயே, இந்தியா இந்த விடயம் தொடர்பில் பேசுகின்றது. இதனை தாண்டிச் செல்லும் வல்லமை தமிழர்களிடம் இருந்தால், அதன் பின்னர் இந்தியாவிற்கு அவசியமில்லை. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் உதட்டளவில் பேசிவிட்டே, இந்தியா அமைதியாக இருக்க முடியும்.

ஏனெனில் கடந்த 35 வருடங்களாக 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக இல்லாமலாக்குவதற்கு கொழும்பின் ஆட்சியாளர்கள் முயற்சிக்கவில்லை. சீன சார்பான மகிந்த ராஜபச்சவின் ஆட்சிக்காலத்தில், கொள்கையளவில் சீனாவிற்கு ஆதரவான ஜனதா விமுக்கி பெரமுனவின் (ஜே.வி.பி) ஊடாகவே, வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 13வது திருத்தச்சட்டம் பெரியளவில் பலவீனப்படுத்தப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முதலாவது நகர்வு, பிரேமதாச காலத்தில் இடம்பெற்றது. மேற்படி இரண்டு சந்தர்பங்களையும் நோக்கினால் ஒரு விடயத்தை காணலாம். அதாவது, 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்பட்ட முதலாவது நகர்வு, விடுதலைப் புலிகள் – பிரேமதாச உடன்பாட்டின் கீழ் இடம்பெற்றது. ஏனெனில் எதிரிக்கு எதிரி நண்பண் என்பது போல், இந்தியாவிற்கு எதிரான இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து, இந்தியாவை வெளியேற்றுவதில் வெற்றிபெற்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பரம எதிரியான பிரேமதாச, இந்த சந்தர்ப்பத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு, 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தினார்.

இதன் பின்னர், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் சாத்தியப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை, நிரந்தரமாக பிரிக்கும் நோக்குடன், 2006இல், இந்திய எதிர்ப்பு ஜே.வி.பி வழக்கொன்றை தாக்கல் செய்து, அதனை சாத்தியப்படுத்தியது. 1990களுக்கு பின்னரான சூழலில், இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்யவில்லை. இந்தக் காலத்தில், வடக்கு கிழக்கு இணைப்பை இல்லாமலாக்குவற்கான முயற்சிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு எவருமே முயற்சிக்கவில்லை. இந்திய எதிர்ப்பு சக்திகள் தங்களை பலமாக ஒன்றிணைத்திருந்த சூழலிலேயே, 13வது திருத்தச்சட்டம் பாரதூரமாக பலவீனப்படுத்தப்பட்டிருப்பதை இப்போது ஒரு தெளிவாக புரிந்துகொள்ள முடியும். 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் முன்னோக்கி பயணிக்க முடியுமானால், அது, தமிழ் மக்களுக்கு மட்டுமே நன்மையானது. இந்தியாவிற்கு அல்ல. ஏனெனில் இந்தியா இப்போதிருப்பது போன்றே, உதட்டளவில் பேசிக்கொண்டிருக்க முடியும். ஏனெனில் 13வது திருத்தச்சட்டத்தை இலங்கை முழுமையாக இல்லாமலாக்க முயற்சிக்கப் போவதில்லை. ஆனால் தமிழர்கள், 13வது திருத்தச்சட்டம் வேண்டாமென்று வாதிடுகின்ற போது, கொழும்பு 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க முடியும்.

இரண்டாவது 13வது திருத்தச்சட்டம் போதாது – அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாதென்று வாதிடும் தரப்பினர் பற்றியது. 13வது திருத்தச்சட்டத்தில் சில குறைபாடுகள் உண்டு என்பது தொடர்பில்; முரண்பாடுகள் இல்லை. அந்தக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதும் முக்கியமானது. ஆனால் இங்கு பிரச்சினை அதனை எவ்வாறு முன்னெடுப்பது என்பதாகும். 13வது திருத்தச்சட்டமே தமிழர்களுக்கு அதிகமென்று தென்னிலங்கையின் தரப்புக்கள் வாதிடுகின்ற போது, அதனை இல்லாதொழிக்க வேண்டுமென்று வாதிடுகின்ற போது, 13வது திருத்தச்சட்டத்தை விடவும் ஒரு சிறந்த அரசியல் ஏற்பாட்டை எவ்வாறு நம்மால் அடைய முடியும்? 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலேயே இந்தளவு சிக்கல்கள் இருக்கின்ற போது, எவ்வாறு அதனைத் தாண்டிய, ஒரு அரசியல் தீர்வை உடனடியாக அடைய முடியும்?

13இன் போதைமை தொடர்பில் பேசுகின்றவர்கள் எவரிடமும் இந்தக் கேள்விகளுக்கு பதிலில்லை. புதிய அரசியல் யாப்பு மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்று கூறுவோருமுண்டு. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி அரசியல்வாதிகள் அவ்வாறான பார்வையே முன்வைத்து வருகின்றனர். ரணில்-மைத்திரி ஆட்சிக்காலத்தில் அவ்வாறானதொரு நம்பிக்கையுடன்தான், காலம் கழிந்தது. ஆனால் புதிய அரசில்யாப்பிற்கு என்ன நடந்தது?

spacer.png

இப்போதும் ரணில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுகின்றார். அதே போன்று, சந்திரிக்கா குமாரதுங்க போன்றவர்களும் பேசுகின்றனர். ஆனால் புதிய அரசியல் யாப்பின் மூலம் 13இற்கு அப்பால் செல்வதற்கான சாத்தியப்பாடு என்ன என்பதுதான் இங்குள்ள கேள்வி? 13இலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களே பிரச்சினைக்குரியதாக நோக்கப்படுகின்றது. ஏற்கனவே 13இலுள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் அவ்வாறான அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை வழங்கக் கூடியதொரு அரசியல் யாப்பிற்கான சாத்தியப்பாடு என்ன? புதிய அரசியல் யாப்பை கொண்டுவர வேண்டுமாயின், சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் – கூடவே அதில் வெற்றிபெறவும் வேண்டும். ஒரு வேளை சர்வசன வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் அனைத்து முயற்சிகளும் கிடப்பிற்கு சென்றுவிடும். சர்வசன வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டுமாயின், சிங்கள மக்கள் பெரும்பாண்மையாக ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறான விடயங்களுக்கான அரசில் சூழ் தென்னிலங்கையில் இருக்கின்றதா?

மூன்றாவது 13இல் ஒன்றுமில்லை, அது ஒரு தீண்டத்தகாதென்று வாதிடும் தரப்பினர் பற்றியது. இவர்கள் அடிப்படையில் அரசியலை அறிவுரீதியாக நோக்கத் தெரியாதவர்கள். அனைத்தையும் உணர்சிகரமாக நோக்குபவர்கள். இவ்வாறானவர்களிடம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வில்லை ஆனால், இவர்களோ அனைவரையும் குற்றவாளிகளாக காண்பிக்க முயற்சிப்பார்கள். அரசியலை அறிவுரீதியாக நோக்குபவர்களை இந்திய முகவர்களென்றும், அடிவருடிகள் என்றும் பிரச்சாரம் செய்வார்கள். சமூக ஊடகங்களை மிகவும் அனாகரிகமாக பயன்படுத்துபவர்களும் இவ்வாறானவர்களே. இவர்களின் உணர்சிகரமான செயற்பாடுகள், மறுபுறும், தமிழ் மக்களுக்கான அரசியல் அடித்தளத்தையே இல்லாதொழிக்க வேண்டுமென்று எண்ணும், தென்னிலங்கை சிங்கள-பௌத்த தேசியவாத தரப்புக்களுக்கே பயன்படுகின்றது.

இப்போது, 13வது திருத்தச்சட்டத்தை ஏன் கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டுமென்னும் கேள்வியை நோக்குவோம். 13வது திருத்தத்தை எதிர்ப்பவர்கள், அதன் போதாமை தொடர்பில் பேசுபவர்கள் அனைவருமே, 13வது திருத்தச்சட்டத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். ஒரு வேளை இதனை ஆதரிக்கும் சில தரப்புக்கள் கூட இருக்கும் ஒன்றையும் இழந்துவிடக் கூடாதென்னும் நோக்கில் பேசக் கூடும். ஆனால் இந்தக் கட்டுரை 13வது திருத்தச்சட்டத்தை கெட்டியாக பற்றிக்கொள்ளுமாறு கூறுவதற்கு பிறிதொரு காரணமுண்டு. அதவாது, தற்போதுள்ள சூழலில் 13வது திருத்தச்சட்டத்தில் என்ன இருக்கின்றது – என்ன இல்லையென்பதற்கு அப்பால், இலங்கைத் தீவில், ஈழத் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை பேசுவதற்கான ஒரு அடிப்படையான விடயமாக, 13வது திருத்தச்சட்டம் மட்டுமே இருக்கின்றது. இங்குள்ள அடிப்படையான விடயம் கொழும்பு 13வது திருத்தச்சட்டத்தை படிப்படியாக அமுல்படுத்த வேண்டும் – அல்லது முழுமையாக இல்லாமலாக்க வேண்டும்.

ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதன் ஊடாக 13வது திருத்தச்சட்டத்தை இல்லாமலாக்கலாம் ஆனால் அந்தப் புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்களின் ஆதரவுடன் கொண்டுவந்தால் மட்டுமே, இனப்பிரச்சினைக்கான தீர்வை வெற்றிகொண்டதாக அரசாங்கம் அறிவிக்க முடியும். இல்லாவிட்டால், 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புக்களை தமிழ் மக்கள் நிராகரித்தது போன்று, இதனையும் நிராகரித்தால், நல்லிணக்க முயற்சியில் அரசாங்கம் வெற்றியை கொண்டாட முடியாது. அதே வேளை, புதிய அரசியல் யாப்பின் மூலம், 13இற்கு அப்பால் செல்லக் கூடிய அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கினால், அதனை சிங்கள கடும்போக்குவாதிகள் எதிர்ப்பார்கள். தென்பகுதியில் மீண்டும் சிங்கள – பௌத்த சக்திகள் பலமடையும். இந்த பின்புலத்தில் புதிய அரசியல் யாப்பு முயற்சி வெற்றிபெறாது. 13வது திருத்தத்தை இல்லாதொழித்தால் அதனை விடவும் சிறந்த ஒன்றை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடாக முன்னோக்கி செல்லும் பாதை அறிய வேண்டும்.

சிங்கள ஆளும் தரப்பை பொறுத்தவரையில் இது ஒரு சிக்கலான அரசியல் முடிச்சு. இதனை சிங்களவர்களாக, தனித்து அவிழ்க்க முடியாது. ஆனால் ஒரு வழியுண்டு. தமிழர்களே இதனை வேண்டாமென்று கூறினால், 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியும். 13வது திருத்தத்தை இப்போதிருப்பது போன்றே பேணிப்பாதுகாத்துக் கொண்டு செல்லலாம். முழுமையான அமுலாக்கத்திற்கான காலத்தை இழுத்தடிக்கலாம். ஒரு அரசாங்கம் கூறுவதை பிறிதொரு அரசாங்கத்தின் மூலம் மறுப்பதாக விடயங்களை கையாளலாம்.

spacer.png

இதற்கு அரசாங்கத்திற்கு பலமானதொரு இந்திய எதிர்ப்பு தமிழர் தரப்புத் தேவை. ஏனெனில் இந்திய எதிர்ப்பு தமிழர் தரப்பொன்றாலேயே 13வது திருத்தச்சட்டத்திற்கான எதிர்ப்பை பெரியளவில் மக்கள் மயப்படுத்த முடியும். தற்போதுள்ள சூழலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) மட்டுமே, முதன்மையான இந்திய எதிர்ப்பு தமிழ் கட்சியாகும். ஆனால் அந்தக் கட்சி இன்னும் பலமடையுமாக இருந்தால்தான், இந்த விடயத்தை பெரியளவில் மக்களுக்குள் கொண்டுசெல்ல முடியும். அவ்வாறாயின் அந்தக் கட்சி பலமடைவதே தென்னிலங்கைக்கு குறிப்பாக, 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்று எண்ணும் தரப்புகளுக்கு நன்மையானது. நான் இவ்வாறு கூறுவதற்கு ஒரு வலுவான காரணமுண்டு. அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தமும், அதன் அங்கமான 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்பட்ட இரண்டு சந்தர்பங்களிலும் இந்திய எதிர்ப்பு சக்திகளே முன்னணியில் இருந்திருக்கின்றன.

13வது இல்லாமல் போனால் என்ன? 13வது திருத்தச்சட்டம் இல்லாமலாக்கப்படுமாக இருந்தால், அதன் பின்னர், இலங்கைத் தீவில், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்விற்கான உரையாடல் முற்றிலுமாக இல்லாமலாக்கப்படும். அதே வேளை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தியாவின் தலையீட்டுக்கான கதவு மூடப்படும். 13வது திருத்தச்சட்டத்தின் ஊடாக, இந்தியாவின் தலையீட்டுக்கான சூழல் பாதுகாக்கப்படுகின்றது என்பதற்காகவே, தென்னிலங்கை கடும்போக்கு சக்திகள் 13வது திருத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றன. பிரதான அரசியல் கட்சிகள் இது தொடர்பில் வெளிப்படையாக பேசாவிட்டாலும் கூட, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தாமல் விடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால், அதனை பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிப்பர் ஏனெனில் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்பதில் எவருக்குமே உண்மையான கரிசனையில்லை.

இந்த பின்புலத்தில் சிந்தித்தால், சிங்கள தரப்புக்கள் எதிர்க்கும், இல்லாதொழிக்க வேண்டுமென்று எண்ணும் ஓரு விடயம்தானே, மறுபுறும் தமிழர்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்க முடியும்! அதுதானே தமிழர்களின் அரசியலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அடிப்படையாக இருக்க முடியும். அது ஒன்றுதானே, தமிழர்கள், பிராந்திய சக்தியான இந்தியாவுடன் உறவாடுவதற்கான கருவியா இருக்க முடியும். இதனை கருத்தில் கொள்ளாமல் உணர்சிவசப்படுவதால், தமிழ் மக்களின் வாழ்வில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

இந்த பின்புலத்தில் 13வது திருத்தச்சட்டம் தொடர்பான எனது புரிதல் அதன் உள்ளடக்கம் தொடர்பானதல்ல – மாறாக, அதன் அரசியல் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் தொடர்பானது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் பலர், மூலோபாய ரீதியாக விடயங்களை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். உலகம் அதிகம் பிராந்தியமயப்பட்டுவருகின்றது. இந்த பின்னணியில் இந்தியாவின் முக்கியத்துவம் முன்னர் என்போதுமில்லாதவாறு அதிகரித்திருக்கின்றது. இந்த பின்புலத்தில், இந்தியாவினால் ஆர்வம் காண்பிக்கப்பட்டுவரும், ஒரு விடயத்தை, பாதிக்கப்பட்ட தமிழர்களே எதிர்ப்பது அரசியல் ரீதியில் முதிர்சியற்ற செயலாகும். எனவே 13 எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் நிச்சயம் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. அவர்களின் சேவை வேறு யாருக்கோ தேவைப்படுகின்றது
 

 

http://www.samakalam.com/ஏன்-13வது-திருத்தச்சட்டத்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13ம் வேணாம், கேடயமும் வேணாம். மெல்ல, மெல்ல, வெளியக சுஜ நிர்ணயம் என்று சம்பந்தர் தொடங்கியதை, இறுக பிடித்து தொங்க வேண்டும்.

அப்போதுதான் சிங்களம் இதுக்கு இணங்கி ஓடி வரும். ஆனால் அது தாமதம் ஆன விடயம் என்று சொல்லி நிற்க வேண்டும்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.