Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைட்டன் நீர்மூழ்கி பற்றிய எச்சரிக்கைகளை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என நிராகரித்த ஓஷன்கேட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டைட்டன் நீர்மூழ்கி: எச்சரிக்கைகளை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என நிராகரித்த ஓஷன்கேட்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரெபெக்கா மோரெல், ஆலிசன் ஃபிரான்சிஸ், கேரெத் எவான்ஸ்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 32 நிமிடங்களுக்கு முன்னர்

ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்ததன் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. இதற்கிடையே அந்த நீர்மூழ்கி தொடர்பான எச்சரிக்களை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என்று அதன் தலைமை செயல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதாக மின்னஞ்சல் தகவல்கள் காட்டுகின்றன.

ஓஷன்கேட் நிறுவனத்தினுடைய டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை அந்த நிறுவனத்தின் தலைவரால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக, ஒரு முன்னணி ஆழ்கடல் ஆய்வுப் பயண வல்லுநருடனான மின்னஞ்சல் பரிமாற்றங்கள் காட்டுகின்றன.

பிபிசியால் பார்க்கப்பட்ட அந்த மின்னஞ்சல்களில், ராப் மெக்கல்லம் என்ற வல்லுநர் ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரஷ்ஷிடம் "அவர் தனது வாடிக்கையாளர்களை அபாயத்தில் தள்ளுவதாக" கூறியுள்ளார். மேலும், ஒரு சுயாதீன நிறுவனத்தால் சான்றழிக்கப்படும் வரை டைட்டன் நீர்மூழ்கியைப் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறும் ராப் மெக்கல்லம் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு, “புதுமையை நிறுத்தி வைக்க பாதுகாப்பு என்ற வாதத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயலும் இந்தத் துறையைச் சேர்ந்த ஆட்களால் நான் சோர்வடைந்துள்ளேன்,” என்று ஸ்டாக்டன் ரஷ் பதிலளித்துள்ளார்.

 

ஓஷன்கேட்டின் வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக அவரை அச்சுறுத்தியதைத் தொடர்ந்து அந்தப் பதற்றம் மிகுந்த மின்னஞ்சல் பரிமாற்றம் முடிவுக்கு வந்ததாக ராப் மெக்கல்லம் கூறினார்.

 

டைட்டன் நீர்மூழ்கிக்கு சுயாதீன நிறுவனத்தின் சான்றிதழைப் பெற வலியுறுத்தல்

“நீங்கள் உங்களையும் உங்கள் வாடிக்கையாளர்களையும் ஓர் அபாயகரமான நிலைக்குள் தள்ளுகிறீர்கள்,” என்று அவர் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவருக்கு எழுதியுள்ளார்.

மேலும், “டைட்டானிக் கப்பலை நோக்கிச் சென்றாக வேண்டுமென்ற உங்கள் பந்தயத்தில், அந்தக் கப்பலுக்குச் சொல்லப்பட்ட ‘அவள் மூழ்கடிக்கவே முடியாதவள்’ என்ற கூக்குரலையே உங்களுடைய டைட்டன் நீர்மூழ்கிக்கும் கூறுகிறீர்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டைட்டன் நீர்மூழ்கி உட்புறமிருந்து உடைந்து நொருங்கியதில் இறந்த ஐந்து பயணிகளில், இந்த மின்னஞ்சல்களில் அதன் பாதுகாப்பு அம்சங்களைத் தற்காத்துப் பேசிய ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவரான ஸ்டாக்டன் ரஷ்ஷும் ஒருவர். அவர், இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களில், இந்த நீர்மூழ்கிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களுக்குத் தனது விரக்தியை வெளிப்படுத்துகிறார்.

“நீங்கள் யாரையாவது கொன்றுவிடுவீர்கள்’ என்ற ஆதாரமற்ற கூச்சல்களை அடிக்கடி கேட்டிருக்கிறோம். நான் இதைத் தனிப்பட்ட முறையில் ஒரு தீவிர அவமானமாகவே எடுத்துக்கொள்கிறேன்,” என்று ரஷ் பதிலளித்துள்ளார்.

ராப் மெக்கல்லம் பிபிசியிடம் பேசியபோது, "டைட்டனை வணிகப் பயணங்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்பாக, அதற்கான சான்றிதழை வாங்குமாறு நிறுவனத்தைத் தொடர்ந்து தான் வலியுறுத்தியதாக" கூறினார். அந்த நீர்மூழ்கி வகைப்படுத்தப்படவோ அல்லது சுயாதீன நிறுவனத்தால் சான்றழிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

கடல் பயண நிறுவனத்தை நடத்தி வரும் வல்லுநரான ராப் மெக்கல்லம்
 
படக்குறிப்பு,

ஆழ்கடல் பயண நிறுவனத்தை நடத்தி வரும் வல்லுநரான ராப் மெக்கல்லம்

“ஒரு நீர்மூழ்கி வகைப்படுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டு நிரூபிக்கப்படும் வரை, அதை வணிகரீதியிலான ஆழ்கடல் பயணங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது,” என்று மெக்கல்லம் ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

மேலும் அதில், “உங்கள் சோதனைகள், ஆழ்கடல் பயண சோதனைகள் ஆகியவற்றில் மிக மிக அதிக கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், பாதுகாப்பு விஷயத்தில் மிகத் தீவிரமாக இருக்குமாறும் உங்களிடம் வலியுறுத்துகிறேன். தொழில்முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை நான் எந்த அளவுக்குப் பாராட்டுகிறேனோ, அதே அளவுக்கு நீங்களும் இந்தத் துறை முழுவதையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள்,” என்றும் அந்த மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டைட்டன் நீர்மூழ்கி குறித்த எச்சரிக்கைக்கு விரக்தியாக பதிலளித்த ஸ்டாக்டன் ரஷ்

சில நாட்களுக்குப் பிறகு அதற்குப் பதிலளித்த ஸ்டாக்டன் ரஷ், தனது தொழிலையும் டைட்டனின் பாதுகாப்பு குறித்தும் தற்காத்துப் பதிலளித்துள்ளார்.

ஓஷன்கேட் நிறுவனத்தின் “பொறியியல் சார்ந்த, புதுமையான அணுகுமுறை, நீர்மூழ்கி துறையிலுள்ள பழைமைவாதத்திற்கு முன்பாக உயரப் பறக்கிறது. அதுதானே புதுமையின் இயல்பு,” என்று ரஷ் கூறியுள்ளார்.

இந்த மின்னஞ்சல் பரிமாற்றம் முழுவதும், ஸ்டாக்டன் ரஷ் தனது தகுதிகளைத் தற்காத்துப் பேசியதோடு, ஆழ்கடல் பயண்களைச் சுற்றித் தற்போது நிலவும் கட்டமைப்புகளைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார்.

ஸ்டாக்டன் ரஷ் உடனான மின்னஞ்சல் பரிமாற்றத்தில், டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த கவலைகளை ராப் மெக்கல்லம் வெளிப்படுத்தினார்
 
படக்குறிப்பு,

ஸ்டாக்டன் ரஷ் உடனான மின்னஞ்சல் பரிமாற்றத்தில், டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த கவலைகளை ராப் மெக்கல்லம் வெளிப்படுத்தினார்

இந்தத் துறையில் “முன்னணியிலுள்ள நபர்கள்” அதில் “புதிதாக நுழைபவர்களை இந்தச் சிறிய சந்தையில் நுழைவதைத் தடுக்க முயல்வதாக” அவர் கூறியுள்ளார்.

“புதிய நீர்மூழ்கியில் கடலுக்கு அடியில் ஆய்வு செய்வதில் இருக்கும் ஆபத்துகள், சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு நான் நன்கு தகுதியானவன்தான்,” என்றும் ரஷ் பதிலளித்துள்ளார்.

பிறகு மெக்கல்லம், வெளிப்படையான வார்த்தைகளில், “கடலில் நடத்தப்படும் சோதனைகள்தான் நீங்கள் செய்ய உத்தேசித்துள்ள விஷயத்தை அந்த நீர்மூழ்கியால் கையாள முடியுமா என்பதைத் தீர்மானிக்கும். டைட்டன் மற்றும் டைட்டானிக்கைவிட அதில்தான் இந்த முயற்சி வெற்றி பெறுவதே அடங்கியிருக்கிறது; கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்,” என்று பதிலளித்துள்ளார்.

ஸ்டாக்டன் ரஷ், 2009ஆம் ஆண்டு ஓஷன்கேட் நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனம், 250,000 டாலர் செலவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலில் கிடக்கும் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை நேரில் காணும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.

இந்த மின்னஞ்சல் பரிமாற்றம் குறித்து ஓஷன்கேட் நிறுவனம் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

டைட்டானிக் பயணத்தின் பாதுகாப்பு குறித்து கவலை

டைட்டன் நீர்மூழ்கி: எச்சரிக்கைகளை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என நிராகரித்த ஓஷன்கேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வல்லுநர்கள் டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆழ்கடல் பயணங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். டைட்டன் நீர்மூழ்கியின் சோதனை முறை வடிவமைப்பு, அதை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கார்பன் ஃபைபர் போன்றவை குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஓஷன்கேட் நிறுவனத்தின் அணுகுமுறை ‘பேரழிவு மிக்க’ சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்து, இந்தத் துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முன்னணி தலைவர்கள் 2018ஆம் ஆண்டில் ஸ்டாக்டன் ரஷ்ஷுக்கு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ராப் மெக்கல்லமும் ஒருவர்.

“இந்தத் துறையைச் சேர்ந்த முக்கிய தொழில்முனைவோர்கள், இரண்டு காரணங்களுக்காக ஸ்டாக்டன் ரஷ்ஷின் திட்டத்தை நிறுத்தப் பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர்,” என்று தனது சொந்த கடல் பயண நிறுவனத்தை நடத்தி வரும் வல்லுநரான மெக்கல்லம் வெள்ளிக்கிழமையன்று பிபிசியிடம் தெரிவித்தார்.

“கார்பன் ஃபைபர் ஆழ்கடல் பயணத்திற்கு உகந்த பொருள் அல்ல என்பது முதல் காரணம். இதுதான் வகைப்படுத்தப்படாமல், சுயாதீன நிறுவனத்தால் சான்றழிக்கப்படாமல், வணிகரீதியிலான ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்ளும் ஒரே நீர்மூழ்கி என்பது அவரது முயற்சியை நிறுத்த முயன்றதற்கான இரண்டாவது காரணம்,” என்று விளக்குகிறார் மெக்கல்லம்.

டைட்டன் நீர்மூழ்கி: எச்சரிக்கைகளை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என நிராகரித்த ஓஷன்கேட்

நீர்மூழ்கி வடிவமைக்கப்பட்ட விதம்

நீர்மூழ்கிகள், கடலியல் நிறுவனங்களால் சான்றளிக்கப்பட வேண்டும் அல்லது “வகைப்படுத்தப்பட வேண்டும்.” எடுத்துக்காட்டாக, அமெரிக்கன் பியூரோ ஆஃப் ஷிப்பிங், நார்வேவில் உள்ள உலகளாவிய அங்கீகார அமைப்பு அல்லது லாயிட்ஸ் ரெஜிஸ்டர் போன்ற சுயாதீன அமைப்புகள் சான்றளிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், உறுதிப்பாடு, வலிமை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்களில் குறிப்பிட்ட தரத்தை நீர்மூழ்கி எட்ட வேண்டும். ஆனால், இந்தச் செயல்முறை ஒரு கட்டாயமான செயல்முறை இல்லை.

கடந்த 2019இல் ஒரு வலைப்பதிவில், ஓஷன்கேட் நிறுவனம் இந்த நீர்மூழ்கி வடிவமைக்கப்பட்ட விதம் இப்போது நிலவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு உள்ளதாகக் கூறியது. ஆனால், “அதற்காக ஓஷன்கேட் நிறுவனம் அந்த அமைப்பு கூறும் தரநிலைகளை எட்டவில்லை என்று அர்த்தமல்ல,” என்றும் கூறியது.

“ஸ்டாக்டன் தன்னை ஒரு பெரிய தொழில்முனைவோராகக் கருதினார். அவர் இப்போது நிலவும் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு சிந்திக்க விரும்பினார். அவர் விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. ஆனால், விதிமுறைகள் உள்ளன. அதோடு, ஆழமான பொறியியல் கொள்கைகளும் இயற்பியல் விதிகளும் உள்ளன,” என்று கூறுகிறார் மெக்கல்லம்.

டைட்டன் நீர்மூழ்கியில் யாருமே பயணம் செய்திருக்கக்கூடாது என்ற தனது வாதத்தில் மெக்கல்லம் உறுதியாக இருக்கிறார்.

“உறுதியான வெற்றி அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் கொள்கைகளில் இருந்து நீங்கள் விலகிச் சென்றால், அதற்குச் செலுத்த வேண்டிய விலை பயங்கரமானதாக இருக்கும். எனவே அது மீண்டும் நடக்க அனுமதித்துவிடக்கூடாது. இந்த முறையே இது நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது,” என்று மெக்கல்லம் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cd1n2vr4vnxo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டைட்டன் நீர்மூழ்கி விபத்து : ஆழ்கடல் மர்மம் தாண்டிய விசாரணையின் சிக்கல்

Published By: VISHNU

02 JUL, 2023 | 08:55 PM
image
 

சதீஷ் கிருஷ்ணபிள்ளை                                                                

டைட்டன் நீர்மூழ்கி ஆழ்கடலுக்குள் காணாமல் போன செய்தியை உலகம் அறிந்து இரு வாரங்களாகின்றன. கடற்கலம் வெடித்து நொருங்கியிருக்கிறது. இதில் பயணித்த ஐந்து பேரும் ஜல சமாதியாகி இருக்கிறார்கள் என்பது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

SATHEES_TOP_02.jpeg

நீர்மூழ்கிக்கு இந்தக்கதி நேரக்காரணம் என்ன, இனிமேலும் இதுபோன்ற அனர்த்தங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன.

SATHEES_TOP_01.jpg

கேள்விகளுக்கு விடை காணும் முயற்சிகளை அமெரிக்க, கனடிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளார்கள். இரு நாடுகளும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த விசாரணைகள் சிக்கலானவையாக இருக்கப் போகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள்.

இது அடைய முடியாத ஆழ்கடலில் நிகழ்ந்த விபத்து என்பது முதற்காரணம். ஆழ்கடல் என்பது அசாத்தியங்களும், மர்மங்களும் நிறைந்த பிரதேசம்.

இங்கு தடயங்களையும், தகவல்களையும் திரட்டுவது மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தின் ஆற்றல்களுக்கும் சவால் விடுக்கும் விடயமாக இருக்கிறது.

இந்த விசாரணைகளை யார் வழிநடத்துவது என்பது இரண்டாவது காரணம். அரசியலும், சட்டங்களுக்கும் வரையறுக்கும் அதிகாரங்கள் சிக்கலானவை.

விசாரிக்க வேண்டியது அமெரிக்காவா, கனடாவா? எந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன.

கடந்த 18ஆம் திகதி டைட்டானின் கப்பலின் சிதைவுகளை நேரில் காணும் சாகச சுற்றுலாப் பயணத்திற்காக டைட்டன் நீர்மூழ்கி ஆழ்கடலுக்கு அனுப்பப்பட்டது.

பயணத்தின் ஒருகட்டத்தில் நீர்மூழ்கி வெடித்துச் சிதறியது. டைட்டானிக்கின் சிதைவுகளில் இருந்து 1,500மீற்றர் தூரத்தில் நீர்மூழ்கியின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

விபத்துக்கு உள்ளான கலம், இலாப நோக்கத்துடன் இயங்கும் வணிக நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இவ்விபத்து சர்வதேச கடலில் நிகழ்ந்தது.

கடற்கலம் வெடித்துச் சிதறியதில் பலியானவர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் கடற்கலத்தை இயக்கிய கம்பனியின் ஸ்தாபகர், உரிமையாளர்.

எனவே, சம்பவம் பற்றி விசாரிக்கும் தரப்புக்கள் எந்தத் தகவலை வெளியிடுவது என்பதில் அதிக கரிசனை காட்டக்கூடும். வெளியிடாமலும் இருக்கலாம்.

இவ்விசாரணையில் எழும் முதலாவது கேள்வி, டைட்டன் நீர்மூழ்கி கடல்மட்டத்தில் இருந்து 4,000மீற்றர் ஆழம் வரை செல்லக்கூடிய அளவு உறுதியானதா என்பதாகும்.

ஆழ்கடலில் அழுத்தம் அதிகம். அங்கு செல்லும் கடற்கலமொன்று அழுத்தத்திற்கு தாக்குப்பிடிக்க வேண்டுமாயின், அது உறுதியாக இருக்க வேண்டும்.

ஒருகடற்கலம் உறுதியானது என்பதை அத்தாட்சிப்படுத்திய பின்னர், அதனைக் கடலுக்குள் செல்ல அனுமதிக்கலாம். அதற்கு அரச அமைப்புக்கள் உள்ளன.

 

ஒரு கடற்கலத்திற்குள் துறைமுகத்தில் இருந்து பயணிகள் ஏறுவார்களாயின், அந்தக் கடற்கலம் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பது சோதிக்கப்படும்.

டைட்டன் நீர்மூழ்கி வேறு கப்பலின் மூலம் கடலுக்கு எடுத்து செல்லப்பட்டு டைட்டானிக்சிதைவுகள் உள்ள இடத்திற்கு மேலுள்ள கடற்பரப்பில் இருந்து செலுத்தப்பட்டது.

இதன்பிரகாரம், நீர்மூழ்கி பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பதை சோதிக்க வேண்டிய சட்டரீதியிலான கடப்பாடு இருக்கவில்லை.

இந்நீர்மூழ்கி எந்தவொரு ஒழுங்குறுத்தல் அமைப்பாலும் அத்தாட்சிப்படுத்தப்படவோ, அனுமதிக்கப்படவோ இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நீர்மூழ்கிக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு பயணியும், இது அத்தாட்சிப்படுத்தப்படவில்லை என்பதை தாம் அறிவோம் என்ற பத்திரத்தில் கைச்சாத்திடுவது அவசியம்.

இதற்கு முன்னர், இதேநீர்மூழ்கியில் ஆழ்கடலுக்கு சென்று வந்த டேவிட் போக் என்ற செய்தியாளர், தாமும் பத்திரத்தில் கைச்சாத்திட்டதாக கூறியுள்ளார்.

டைட்டன் நீர்மூழ்கியை வடிவமைத்து இயக்கிய ஓஷன்கேட் நிறுவனம், இதன் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை புறங்கையால் ஒதுக்கியத் தள்ளியதாகவே தோன்றுகிறது.

இந்நிறுவனத்தில் பணியாற்றிய டேவிட் லொஷ்ரிட்ஜ் என்பவர், 2018ஆம் ஆண்டு குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார். நீர்மூழ்கியின் தரத்தை முறையாக அத்தாட்சிப்படுத்தி, அதற்கு அனுமதி பெறுவது அவசியமென டேவிட் கோரியிருக்கிறார்.

இதற்கு செலவாகுமெனக்கூறி, ஓஷன்கேட் நிறுவனம் தமது கோரிக்கையை நிராகரித்ததாக டேவிட் குற்றம் சாட்டுகிறார்.

 

டேவிட் தயாரித்த ஆவணங்களைப் பார்த்தால், இந்த நீர்மூழ்கி 1,500மீற்றர் ஆழத்தைத் தாண்டிச் செல்ல அறுகதை அற்றதெனத் தெரிகிறது.

ஓஷன்கேட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஸ்ரொக்டன் ரஷ், அப்போதே குற்றச்சாட்டுக்களை கேலியாக நிராகரித்துள்ளார்.

சகலதுக்கும் பாதுகாப்பு, பாதுகாப்பு என்று அனத்திக் கொண்டிருந்தால், கட்டிலிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியது தான், காரில் கூற ஏற முடியாதென அவர் கூறியிருக்கிறார்.

துரதிருஷ்டவசமாக, டைட்டன் நீர்மூழ்கி விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரில் ஒருவர் ஸ்ரொக்ட்டன் ரஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது, இவ்விபத்து பற்றி கனடிய போக்குவரத்து பாதுகாப்பு சபையும், அமெரிக்க கரையோர காவற்படையும் தனித்தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

ஓஷன்கேட் கம்பனி அமெரிக்காவை மையாகக் கொண்டு இருந்தாலும், அதற்கு சொந்தமான நீர்மூழ்கியின் சிதைவுகளை கனடிய அமைப்பு ஆராய்கிறது.

மறுபுறத்தில், நீர்மூழ்கி வெடித்துச் சிதறியத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதை அமெரிக்க அமைப்பு விசாரணை செய்கிறது.

நீர்மூழ்கி வெடித்ததற்குரிய காரணத்தை கண்டறிய, அதன் சிதைவுகளை ஆராய்வது போன்று, தவறைக் கண்டுபிடிக்க சட்ட ஏற்பாடுகளையும் ஆராய்வது அவசியம்.

இவ்விரு ஆய்வுகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இருந்தால் மாத்திரமே, தவறுக்கு யார் பொறுப்பு என்பதை குற்றவியல் விசாரணையின் மூலம் அறியலாம்.

 

இக்குற்றவியல் விசாரணையை எங்கே நடத்துவது, எந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் நடத்துவது என்ற சிக்கலைத் தவிர்க்க முடியாது.

நீர்மூழ்கி வெடித்துச் சிதறுவதற்கு முன்னதாக அதன் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டதெனில், இங்கு ஓஷன்கேட் நிறுவனம் அசட்டை காட்டியிருக்கிறது என்று அர்த்தம்.

இந்நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை நிரூபிக்கப்படுமாயின், நீர்மூழ்கியில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தவர்கள் சார்பில் வழக்குத்தொடுக்கக் கூடிய சாத்தியம் உள்ளது.

கடல் மாலுமிகள் சம்பந்தப்பட்ட நியதிச்சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க நீதியமைச்சு குற்றவியல் வழக்கை தொடுக்கலாம்.

இச்சட்டம் 1800ஆம் ஆண்டுகளில் வரையப்பட்டது என்பதால், இதன்மூலம் கடற்கலத்தின் உரிமையாளர்களை சட்டத்தின் முன்கொண்டுவர முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

இதனைச் செய்வதற்கு முன்னதாக, இந்த விவகாரம் அமெரிக்க நீதிமன்றங்களின் நியாயாதிக்க எல்லைகளுக்கு உட்பட்டதை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

டைட்டன் நீர்மூழ்கிச் சம்பவம் பற்றிய விசாரணை மிகவும் முக்கியமானது. அதனையொரு பலப்பரீட்சையென்று சொல்ல முடியும். அரசியல், பொருளாதார, வணிக நோக்கங்களுக்காக நாடுகளும், நிறுவனங்களும், ஏன் தனிமனிதர்களும் தார்மீகத்திற்கு முரணான வகையில் கடலையும், வான்பரப்பையும் பயன்படுத்தி வருவது கண்கூடு.

இப்பயன்பாட்டில் சட்டங்களோ விழுமியங்களோ மதிக்கப்படுவது கிடையாது. மீறும் நபர்களைத் தண்டிக்கக்கூடிய ஏற்பாடுகளில் நிறைய ஓட்டைகளும், குறைபாடுகளும் உள்ளன.

ஏதோவொரு பேராபத்து நிகழ்ந்த பின்னர் ஓட்டைகளை அடைப்பதை விடுத்து, வருமுன் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது.

டைட்டன் நீர்மூழ்கி விவகாரத்தைப் பொறுத்தவரையில், இது ஒட்டுமொத்த உலகமும் கரிசனை காட்டிய பேரவலமாக திகழ்கிறது. இதில் என்ன நடந்தது என்பதை கண்டறிய சமுத்திரவியல் பாதுகாப்பு அமைப்புகளும், கரையோர காவல் படைகள், தேடுதல் நிறுவனங்கள் அடங்கலாக சகல தரப்புக்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு அவசியப்படுகிறது.

நாடுகளின் சட்ட நியாயாதிக்க எல்லைகள் விசாரணைகளுக்கு முட்டுக்க்ட்டையாக இருக்கும் பட்சத்தில், எல்லைகளை பாலங்களாக மாற்றி தீர்வு காணக்கூடிய ஏற்பாடுகள் அவசியம்.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சமவாயங்களை முறையாக பயன்படுத்துவது அவசியம். ஐ.நா.வின் கடல் சட்டங்களுக்கான சமவாயம் என்ற ஏற்பாடு உள்ளது.

இதன் பிரகாரம், ஒரு கப்பல் எந்த நாட்டுக் கொடியை ஏந்தியிருந்தாலும் கூட, கடலில் கஷ்டத்தை எதிர்கொள்ளும் எந்தவொரு நபருக்கும் உதவி செய்ய வேண்டிய சட்டரீதியான கடப்பாடு அந்தக் கடற்கலத்திற்கு உண்டு.

இச்சமவாயம் மதிக்கப்படுமாயின், உலகின் மாற்றங்கள் நிகழும். ஒரு பழைய கப்பலின் சிதைவுகளைக் காணச்சென்ற சமயம் ஆழ்கடலுக்கு சென்ற நீர்மூழ்கி வெடித்துச் சிதறிய தினத்திற்கு முன்னர், பசுமை தேடி வேறுநாடு நோக்கிப் பயணித்த சமயம் மத்திய தரைக்கடலில் 500இற்கு மேற்பட்ட அகதிகள் மூழ்கிப் பலியான சம்பவம் ஞாபகமிருக்கிறதா?

அந்த அகதிகளைப் போன்றவர்களைக் காப்பாற்றவேனும் உலகப்பொதுநலன் கருதிய சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும். புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

https://www.virakesari.lk/article/159077

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.