Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 1

 

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

உலக நாடுகள் பலவற்றின் வரலாறு பற்றிய ஆரம்பகால ஆய்வுகள் பெரும்பாலும் அந்நாடுகளில் நிலவிய  வரலாற்று வாய்மொழிக் கதைகள், வட்டார வழக்கில் உள்ள மரபுவழிச் செய்திகள், ஐதீகங்கள், பாரம்பரியச் சடங்குகள், நம்பிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. இவற்றின் அடியாகக் தோன்றி வளர்ந்த வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதில் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து  தோன்றி வளர்ந்த தொல்லியல், மானிடவியல், வரலாற்று மொழியியல் முதலான ஆய்வுகளுக்கு முக்கியமான இடமுண்டு. இது இலங்கைக்கும் பொருந்தும் என்பதை இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வெளிவரும் புதிய வரலாற்று முடிவுகளும்,  அரச வரலாற்றுப் பாட நூல்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் கோடிட்டுக் காட்டுகின்றன. பௌத்த மதத்தின் பரவலைத் தொடர்ந்து தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு தோன்றி வளர்ந்த நாடு என்ற  சிறப்பு இலங்கைக்கு உண்டு.  இவ்வரலாற்று இலக்கியங்களில் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து அநுராதபுரத்திற்கு வடக்கே திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிராந்தியங்கள் பாளி மொழியில் நாகதீபம் என்ற பெயரால் தனித்து அடையாளப்படுத்திக் கூறுவது சிறப்பாக நோக்கத்தக்கது. இப்பெயரே பழந்தமிழில் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் என்பவற்றில் தமிழில் நாகநாடு எனக் குறிப்பிடப்படுகின்றது. இப்பெயர்களே பதின்மூன்றாம் நுற்றாண்டிலிருந்து வன்னி, வன்னிப்பற்று யாழ்ப்பாணப்பட்டினம்  முதலான பெயர்கள் தோன்றும் வரை வடஇலங்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேச தனித்துவம் பௌதிக அடிப்படையில் மட்டுமன்றி பண்பாட்டு அடிப்படையிலும் தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதை தொல்லியல், இலக்கிய மூலாதாரங்களும் உறுதி செய்வதாக உள்ளன.

பாளி இலக்கியங்களில் வடபிரதேசம் தனித்து அடையாளப்படுத்திக் கூறப்பட்ட போதிலும் அநுராதபுரம், பொலநறுவை இராசதானிகள் கால ஆட்சியாளர்கள் இவ்வரச  தலைநகரங்களுக்கு தெற்கே மிகத் தொலைவிலுள்ள பிராந்தியந்தியங்களுடன்  கொண்டிருந்த அரசியல், பொருளாதார, பண்பாட்டு உறவுகளை விரிவாகக் கூறும் இப்பாளி இலக்கியங்கள்  இத்தலைநகரங்களுக்கு வடக்கே மிகக் கிட்டியதொலைவிலுள்ள வடஇலங்கையுடனான உறவுகள் பற்றி மிகக் குறைந்தளவு செய்திகளையே தருகின்றன. இதனால் பாளி இலக்கியங்களை முதன்மைச் சான்றுகளாகக் கொண்டு எழுதப்பட்ட பெரும்பாலான இலங்கை பற்றிய வரலாற்று நூல்களில் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வடபிராந்தியத்தின் வரலாறானது புகைபடர்ந்ததாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் 1970 களில் கந்தரோடையில் பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வார் விமலா பேக்கிளையின் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானபூர்வமான தொல்லியல் அகழ்வாய்வும், 1980 காலப்பகுதியில்   கலாநிதி இரகுபதி மேற்கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டின் பூர்வீக மக்கள் பற்றிய தொல்லியல் அகழ்வாய்வுகளும், மேலாய்வுகளும், அவரைத் தொடர்ந்து 1990 களின் பின்னர்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து வடஇலங்கையில் பூநகரி, சாட்டி, முள்ளியான், பெரிய புளியங்குளம், செட்டிகுளம், கட்டுக்கரை, நாகபடுவான் முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைப் போல் வடஇலங்கைக்கும் தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை எடுத்துக்காட்டியுள்ளன. அந்த உண்மைகளை மேலும் உறுதிப்படுத்துவதில் 2010 இல் இருந்து யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியமான இடமுண்டு.  

jaffna-fort

வட இலங்கையில் 327 ஆண்டுகள் ஐரோப்பியர் மேலாதிக்கம் நிலவியதன் அடையாளமாக காணப்படும் நினைவுச் சின்னங்களில் யாழ்ப்பாணக் கோட்டைக்கு தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு. யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு தெற்கே கடல் நீரேரியுடன் இணைந்துள்ள இக் கோட்டை இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாகக் காணப்படுகின்றது. கி.பி 1621 அளவில் மண், கல்லைப் பயன்படுத்தி வட்ட வடிவில் போர்த்துக்கேயரால் இக் கோட்டை கட்டப்பட்டாலும் 139 ஆண்டுகள்  (1658-1796) யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்த ஒல்லாந்தரால் மீளக் கட்டப்பட்ட தோற்றத்துடனேயே தற்போதைய கோட்டை காணப்படுகின்றது. அக்கோட்டையில் சில மாற்றங்களை பிரித்தானியர் தமது ஆட்சிக் காலத்தில்  ஏற்படுத்தியிருந்தாலும் அவை ஒல்லாந்தர் காலக்கோட்டையின் அடிப்படைத் தோற்றத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அதனால் தான் இக்கோட்டை ஒல்லாந்தர் காலக் கோட்டையென அழைக்கப்படுகின்றது.

போர்த்துக்கேயரால் நான்கு பக்கச் சுவர் கொண்டதாக அமைக்கப்பட்ட இக்கோட்டையை ஒல்லாந்தர் நட்சத்திர வடிவில் ஐந்து பக்கச் சுவர்களைக் கொண்டதாக மாற்றியமைத்தனர். இந்த வடிவில் இலங்கையிலுள்ள ஒரேயொரு கோட்டை இதுவாகும். 62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் ஒவ்வொன்றும் கீழ்ப்பகுதி 40 அடி அகலமும், மேற்பகுதி 20 அடி அகலமும், 30 அடி உயரமும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இக்கோட்டைமீது படையெடுத்து வரும் எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சுவரின் உயரம் மேலிருந்து கீழ்நோக்கிப் பதிந்து காணப்படுகின்றது. கோட்டையின் வெளிப்புறச் சுவர்களைச் சுற்றி 20 அகலத்தில் ஆழமான அகழிகள் காணப்படுகின்றன. நான்கு பக்கமும் பாரிய பீரங்கித் தளங்களையும், பாதுகாப்பு அரண்களையும், காவற்கோபுரங்களையும், சுரங்கங்களையும், சுடுதளங்களையும் கொண்ட இக்கோட்டையைச் சுற்றி இரண்டு மைல் தொலைவில் 200 போர்த்துக்கேயப் படைவீரர்களும், உள்ளூர் படைவீரர்களும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்ததாக போர்த்துக்கேய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 34 ஏக்கரில் அமைந்த கோட்டையின் உட்பகுதியில் நிர்வாக மையங்கள், படைவீரர்களின் இருப்பிடங்கள், ஆயுதக் களஞ்சிய அறைகள், ஒல்லாந்தர் மீளக்கட்டிய கிறிஸ்தவ தேவாலயம், இந்து  ஆலயம், பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆளுநர் மாளிகை, சிறைச்சாலைகள், பிற நிர்வாகக் கட்டடங்கள் என்பன காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியில் கொழும்பு, காலி முதலான இடங்களில் உள்ள கோட்டைகள் அந்தந்த மாவட்டங்களின் நிர்வாக மையமாகச் செயற்பட்ட போதும், யாழ்ப்பாணக் கோட்டை மட்டும் இராணுவப் பாதுகாப்பு மையமாகவே செயற்பட்டு வந்துள்ளது.

jaffna-fort-2

இந்து சமுத்திர நாடுகளில் உள்ள கோட்டைகளில் யாழ்ப்பாணக் கோட்டை கம்பீரமும், அழகும், சிறந்த தொழில்நுட்பத் திறனும், ஐரோப்பியர் காலக் கலை மரபும் கொண்ட கோட்டை என்ற சிறப்பிற்குரியது. 1984 இல் இலங்கையிலுள்ள ஒல்லாந்தர் காலக் கோட்டைகள் பற்றி  ஆய்வு மேற்கொண்ட நெல்சன் என்பவர் சமகாலத்து சிறந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையை இங்கிலாந்திலுள்ள தலைசிறந்த கோட்டைகளுடன் ஒப்பிடும் அளவிற்கு சிறந்த வடிவமைப்புக் கொண்டதெனப் புகழ்ந்து கூறுகின்றார் (Nelson 1984). இத்தகைய சிறப்புக்குரிய இந்தக்கோட்டை இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர், அதிலும் குறிப்பாக கடந்த மூன்று சகாப்த கால அனர்த்தத்தால் அதன் பொழிவையும், சிறப்பையும் இழந்து காணப்படுகின்றது. இந்தக்கோட்டையை வெளியில் நின்று பார்ப்பவர்களுக்கு சுற்றிவர அமைந்துள்ள பெரிய அரண்கள் கோட்டை என்பதனைப் புலப்படுத்தினாலும் உள்ளே இருந்த கட்டடங்கள் பெருமளவிற்கு அழிவடைந்து பல இடங்களில் கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறு விபரமாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய கோறல் கற்கள் அயலில் உள்ள வேலணை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு முதலான இடங்களில் இருந்து பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காங்கேசன்துறையிலிருந்து கோட்டை வரையில் உள்ளூர் மக்களை வரிசையாக நிற்கவைத்து காங்கேசன்துறையில் இருந்தும் கோட்டை கட்டுவதற்கான கற்கள் கொண்டுவரப்பட்டன. கோட்டையைச் சுற்றியுள்ள கடல்களில் இருந்து கோறல் கற்களைக் கொண்டுவந்த தோணிகள் ஒவ்வொன்றுக்கும் அக்காலத்தில் மூன்று பணம் கூலியாக வழங்கப்பட்டது. கடலில் இருந்து கற்களை சேகரித்து தோணியில் ஏற்றுவதற்கு அரைப்பணம் வழங்கப்பட்டது. தோணிகளுக்கு பாதுகாப்பாகச் செல்லும் அதிகாரிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 13 பணம் சம்பளமாக வழங்கப்பட்டது. கோட்டையைக் கட்டுவதில் போர்த்துக்கேய மேசன்மாருடன் உள்ளூர் மேசன்மாரும் பங்கு கொண்டனர். அவர்களுள் தலைமை மேசனுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு பணமும், அவனுக்கு கீழே வேலை செய்யும் மேசனுக்கு நாள் ஒன்றுக்கு அரைப் பணமும், சிற்றாள்களாக வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் சாப்பாட்டிற்கு வருடம் ஒன்றுக்கு 70 கரண்டி சாமி அரிசியும், கோட்டை கட்டுவோரை மேற்பார்வை செய்யும் பண்டாரத்திற்கு மாதம் ஒன்றுக்கு 8 பணமும் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் கோட்டை கட்டுவதற்கு சுதை தயாரிக்கும் சுண்ணாம்புக் கால்வாய்கள் குடாநாட்டின் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. அவை சுண்ணக் கற்களைப் பதமாக்கி பண்ணைக் கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றோடு கலப்பதற்கான சர்க்கரை மூடைகள் இந்தியாவின் கோவாவில் இருந்து தருவிக்கப்பட்டன. இவற்றோடு கலப்பதற்கான களிமண் குளங்களிலிருந்து பெறப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் யாழ்ப்பாணக் கோட்டை முழுக்க முழுக்க கோறல் கற்களைக் கொண்டே கட்டப்பட்டதென்ற கருத்தை புலப்படுத்துகின்றன.

ஆனால் கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளிலும், அழிவடைந்து காணப்படும் கிறிஸ்தவ ஆலயப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்விலும் கோறல் கற்களுடன் பல அளவுகளிலும், பல வடிவங்களில் அமைந்த சுண்ணாம்பு மற்றும் கருங்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் அவதானிக்க கூடிய முக்கியமான வேறுபாடு கோறல் கற்கள் குறிப்பிட்ட அளவுகளில் (10″ X 6″) வெட்டப்பட்டு பொழியப்பட்டு கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள போது கருங்கற்களும், சுண்ணக்கற்களும் வேறுபட்ட அளவுகளிலும், வடிவங்களிலும் ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்தக் கற்களில் பெரும்பாலானவை ஏற்கனவே இந்து ஆலயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் என்பதற்கு அவற்றில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், அலங்காரங்கள், கற்களின் வடிவ அமைப்புக்கள்  சான்றாகக் காணப்படுகின்றன. இந்தக்கற்கள் எங்கிருந்து பெறப்பட்டதென்பதற்கு போர்த்துக்கேய ஒல்லாந்த ஆவணங்களில் விபரமாகக் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் அவர்கள் ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பெரிதும், சிறிதுமாக இருந்த ஏறத்தாழ 500 ஆலயங்களும், பெரிய வசிப்பிடங்களும் இடிக்கப்பட்டு அவற்றிலிருந்த கற்கள் கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நல்லூர் இராசதானியை 1519 இல் வெற்றி கொண்ட போர்த்துக்கேயர் அங்கிருந்த ஆலயத்தை தமது பாசறையாகப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவ்வாலயத்தையும் இடித்தழித்து அந்தக்கற்களைக் கோட்டை கட்டப் பயன்படுத்தியதாக போர்த்துக்கேய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இதனால் கோட்டையில் கோறல் கற்கள் கலந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களின் கற்களின் முக்கியத்துவத்தை இந்தக்கோட்டை கட்டிய வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்னணியில் நோக்கப்படுவது பொருத்தமானதாகும்.

இந்நிலையில் இலங்கை – நெதர்லாந்து அரசுகளின் நிதி உதவியுடன் மூன்று ஆண்டுகால திட்டத்தில் இக்கோட்டையை பழைய நிலைக்கு கொண்டு வரும் புனர்நிர்மாணப் பணியை இலங்கை தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டது. இதற்காக  தொல்லியல் திணைக்கள அறிஞர்கள், யாழ்ப்பாண தொல்லியல் பட்டதாரி மாணவர்கள் பலதரப்பட்ட தொழில்நுட்பவியலாளர், தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டனர். இவர்கள் தமது ஆரம்ப புனர்நிர்மாணப் பணிகளாக கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மாதிரி அகழ்வாய்வுகளையும், இடியுண்ட கட்டிடப்பகுதிகளில்  தொல்லியல் மேலாய்வுகளையும் மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் போது கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் கோட்டையின் வரலாற்றுக்கு மட்டுமல்ல இப்பிரதேச பூர்வீக வரலாற்றுக்கும் புது வெளிச்சம் ஊட்டுபவையாக அமைந்தன. 

கோட்டைப் பிரதேசத்தின் தொல்லியல் ஆய்வுகள்

மட்பாண்ட ஓடுகள்

கோட்டைப் பிரதேசத்தில் இதுவரை நான்கு இடங்களில் மாதிரிக் குழி அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2011 இல் கோட்டை வாசற் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வின் போது போர்த்துக்கீசர் காலத்திற்கு  முந்திய சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு கோட்டை வாசல் தொடங்கும் இடத்திற்கும் கடற்கரைப் பக்கமாக உள்ள வீதிக்கும் இடையில் தற்போதைய கிறிஸ்தவ ஆலயத்திற்கருகில் முதலாவது அகழ்வாய்வு நடாத்தப்பட்டது. இவ் இடத்தில் 10 X 6 அடி நீள அகலத்தில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழியில் ஏறத்தாழ 2.5 அடி ஆழம் வரை நடாத்தப்பட்ட அகழ்வின் போது மூன்று வேறுபட்ட கலாசார மண் அடுக்குகளை அடையாளம் காணமுடிந்தது. இக்கலாசார மண் அடுக்குகளில் பல்வேறு வடிவங்களில் அமைந்த பலதரப்பட்ட மட்பாண்ட ஓடுகள் கிடைத்தாலும் மூன்றாவது கலாசாரப் படையில் மனித எலும்புக் கூடுகளுடன் பெருமளவு சீன மட்பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மட்பாண்டங்களின் காலம் கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதால் மூன்றாவது கலாசாரப் படையின் காலம் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணம் வருவதற்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதியாகத் தெரிகின்றது. ஆயினும் இவ்வாய்வுக் குழியில் இயற்கை மண்ணை அடையாளம் காணும் வரை தொடர்ந்து அகழ்வாய்வு நடத்தப்படாததால் அவ்வாய்வுக் குழியில் இருந்திருக்கக் கூடிய தொன்மையான ஆதாரங்களை வெளிக்கொண்டுவர முடியவில்லை. 

இரண்டாவது அகழ்வாய்வு கோட்டையின் உட்பகுதியில் ஆயுதக் களஞ்சிய அறைக்கு முன்னால் நடாத்தப்பட்டது. தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கலாநிதி நிமல் பெரேரா தலைமையில் நடாத்தப்பட்ட இவ்வகழ்வாய்வில் 6 X 6 அடி நீள அகலத்தில் இயற்கை மண்ணை அடையாளம் காணும் வரை அகழ்வு நடாத்தப்பட்டது. இவ்வகழ்வாய்வின் முழுமையான பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாவிட்டாலும் இவ்வகழ்வாய்வுக்கு பொறுப்பாக இருந்த தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கலாநிதி. நிமல் பெரேரா பத்திரிகைகளுக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் இவ்வகழ்வாய்வுக் குழியில் கிடைத்த தொடக்க கால ஆதாரங்கள் கி.பி 5 ஆம் நூற்றாண்டை அதாவது போர்த்துக்கீசர் யாழ்ப்பாணம் வருவதற்கு 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். 

தொடக்க-கால-ஆதாரங்கள்

மூன்றாவது அகழ்வாய்வு ஐரோப்பியப் படை வீரர்கள் தங்கியிருந்த கட்டடத்திற்கு முன்னால் நடாத்தப்பட்டது. இவ்வகழ்வாய்வு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதல்ல. இவ்விடத்தில் பிற தேவைக்காக 6 x 6 அடி நீள அகலத்தில் 7 அடி ஆழம் வரை குழி ஒன்று வெட்டிய போது வெளிவந்த அரிய தொல்லியல் சின்னங்கள் பின்னர் அவ்விடத்தில் அகழ்வாய்வு செய்ய காரணமாக அமைந்தன. இக்குழியில் கலாசார மண் அடுக்குகள் குழம்பிய நிலையில் காணப்பட்டாலும் இவற்றிடையே காணப்பட்ட ஆதாரங்கள் பூர்வீக குடியிருப்புக்களைத் தொடர்ந்து உரோமர், அரேபியர், சோழர், சீனர் யாழ்ப்பாண இராசதானி மற்றும் ஐரோப்பியர் காலத்திற்கு உரியவை என்பதை உறுதிப்படுத்த உதவியுள்ளது.

நான்காவது அகழ்வாய்வு இவ்வாய்வுக்குழிக்கு அருகே 2017ஆண்டின் பிற்பகுதியில் மத்திய கலாசார நிதிய யாழ்ப்பாண செயல்  திட்டத்தின்  அனுசரணையுடன், பிரித்தானிய டர்காம் (Durham) பல்கலைக்கழகமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் பிரிவும் இணைந்து மேற்கொண்டிருந்தது. இவ்வகழ்வாய்வு சமகால தொல்லியல் அறிஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான பேராசிரியர் கொனிகாம் வழிகாட்டலில் நடைபெற்றமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இதன்போது  நவீன தொழில் நுட்பக்கருவிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானபூர்வமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டதால்  இங்கு கிடைத்த தொல்பொருட்  சின்னங்களின் காலம், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான கணிப்பீடுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாய்வுக் குழியில் இயற்கை மண்படைவரை  மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் ஒன்பது வேறுபட்ட கலாசார மண் அடுக்குகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் இயற்கை மண்ணோடு ஒட்டிய கலாசார மண் அடுக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலப்பண்பாட்டிற்குரிய கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (Black and Redware) கி.மு.700க்கும் கி.பி.100 நூற்றாண்டுக்கும், நரைநிற மட்பாண்டங்கள் (Grey ware) கி.மு. 500க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டதெனவும் கணிப்பிடப்பட்டுள்ளன. இக்காலக்கணிப்புகள் போர்த்துக்கேயர் வருகைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே கோட்டைப் பிரதேசம் முக்கியமான குடியிருப்புகளைக் கொண்ட பிரதேசமாக இருந்துள்ளதை உறுதி செய்கின்றன. 

கோட்டையில்-மேற்கொள்ளப்பட்ட-அகழ்வாய்வில்-கிடைக்கப்பெற்ற-ஆதாரங்கள்

மேலும் இவ்வகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு காலகட்டத்திற்குரிய தொல்பொருட்  சின்னங்கள் ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட கோட்டைப் பிரதேசத்தின் தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. அவற்றுள் பல்வேறு காலத்தை சேர்ந்த பல நாடுகளுக்குரிய பலவகை மட்பாண்டங்கள் கிடைத்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவ்வாதாரங்கள் போர்த்துக்கேயர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தற்போதைய யாழ்ப்பாண நகரம் தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கால அடிப்படையில் உறுதிப்படுத்த உதவுகின்றன. பேராசிரியர் கொனிங்காம் அகழ்வாய்வில் கிடைத்த மட்பாண்டங்களை முக்கியமான ஆதாரமாகக் கொண்டு கோட்டைப் பிரதேசத்துடன் கடசார் வாணிபத்தில் ஈடுபட்ட நாடுகளையும், அவற்றின் காலங்களையும் கணித்துள்ளார். அவற்றுள் இந்திய Northern Black Polished Ware (500 BC to 100BC), உரோமநாட்டு Rouletted Ware (200 BC to 200AD), தமிழக  Arikkamdu Type – 10 (200 BC to 200AD), Arikkamdu Type – 18 (300 BC to 200AD), உரோம கிரேக்க நாடுகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட Omphalos Ware (200 BC to 100AD), உரோம நாட்டு Arretine Ware (100 BC to 100AD), Amphora (200 BC to 100AD), இந்திய Red Polished Ware (100 BC to 800AD), தமிழகத்திலும் இலங்கையிலும் பயன்பாட்டிலிருந்த Wite Slipped with Red Paint (600 AD to 1100AD), Appliqué Ware (1300 AD to 1400AD), ஈரான் ஈராக் நாடுகளுக்குரிய Sasanian Islamic Ware (200 BC to 700AD), Buff Ware(400 AD to 800AD), Lustre Ware (800 AD to 1000AD), Imitation Lustre Ware (800 AD to 1000AD), Wite Tin-Glazed Ware (800 AD to 1000AD), Lead- Glazed Ware(800 AD to 1000AD)மற்றும் சீன நாட்டுக்குரிய  Changsa Painted Ware (800 AD to 900AD), Xing Ding Wite Wares (800 AD to 1000AD), Yue green Ware (800 AD to 1000AD), Coarse Stone Ware(700 AD to 1100AD), Green Splashed Wite Ware (800 AD to 1000AD), Chinese Porcelain (1400 AD to 1700AD) முதலான நாடுகளுக்குரிய மட்பாண்டங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. 

. Jaffna Fort Artifacts and There Periods

மேற்கூறப்பட்ட அகழ்வாய்வைத் தவிர 1995 இற்கு முன்னர் கோட்டையை மையப்படுத்தி நடந்த போரில் பெரிதும் அழிவடைந்த கோட்டையின் உட்பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின் பெறுபேறுகள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.  வெளித்தோற்றத்தில் காணப்படும் அரண்கள், பீரங்கித் தளங்கள் முழுமையாக கோட்டையின் அடையாளமாக இருப்பினும் கோட்டையின் உட்பகுதியில் 35 ஏக்கரில் அமைந்திருந்த கிறிஸ்தவ தேவாலயம், போர் வீரர்களுக்கு, நிர்வாக அதிகாரிகளுக்கு அமைக்கப்பட்ட கல்லறைகள், நினைவிடங்கள், இராணி மாளிகை, படை வீரர் தங்கியிருந்த இடங்கள், நிர்வாக அலுவலகங்கள், சிறைச்சாலைகள், ஆயுதக் களஞ்சியங்கள், பாதுகாப்பு அரண்கள் என்பன பெருமளவுக்கு அழிவடைந்த நிலையில் காணப்பட்டன. இந்நிலையில் 2010 இல் இருந்து இக்கோட்டை மீள் புனரமைப்பு செய்வதற்காக புதையுண்டிருந்த கட்டட அழிபாடுகள் அகற்றப்பட்டு அவ்விடங்களில் களவாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின் போது ஐரோப்பியர் கால கட்டிட எச்சங்கள், பலவகை மட்பாண்டங்கள், நாணயங்கள் என்பவற்றுடன் ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட கால உள்நாட்டு வெளிநாட்டு மட்பாண்டங்கள், பலவகை நாணயங்கள், சிலைகள், சிற்பங்கள், ஆலயங்களின் கட்டட எச்சங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்கள் கோட்டை அமைந்துள்ள இடத்துக்கு 2000 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன. 

தொடரும்.

 

ஒலிவடிவில் கேட்க

 
WhatsApp-Image-2022-09-20-at-07.51.44-15

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

https://ezhunaonline.com/jaffna-fort/

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 2

 

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

கோட்டைப் பிரதேசத்தின் பூர்வீக மக்கள்

யாழ்ப்பாண நகரின் தொன்மையும் சிறப்பும் பற்றிய வரலாற்று ஆய்வில் அந்நியரான போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையுடன் முதன்மைப்படுத்திப் பார்க்கும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகின்றது. ஆனால் 2010 இல் இருந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் ஆதாரங்கள் கோட்டை அமைந்த இடத்திற்குத் தொன்மையான தொடர்ச்சியான நீண்ட பாரம்பரிய வரலாறு உண்டு என்பதும், அவ்வரலாற்றுப் பின்புலம் தான் இவ்விடத்தைக் கோட்டை கட்டுவதற்குப் பொருத்தமான இடமாகப் போர்த்துக்கேயர் தெரிவு செய்திருக்கலாம் என்பதும் தெரியவருகின்றது. கோட்டைக்கு மிகக் கிட்டிய தொலைவில் கிழக்கே அரியாலை, பூம்புகார், தென்கிழக்கே மண்ணித்தலை, கல்முனை, தெற்கே சாட்டி, மேற்கே ஆனைக்கோட்டை முதலான இடங்களில் யாழ்ப்பாணத்தின் தொடக்ககால மக்களான பெருங்கற்கால அல்லது ஆதி இரும்புக்காலப் பண்பாட்டுக்குரிய மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் அப்பண்பாட்டுக்குரிய மக்கள் கோட்டை அமைந்துள்ள பிரதேசத்திலும் வாழ்ந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. கந்தரோடையில் 1970களில் இந்தப் பண்பாடு பற்றி ஆய்வு நடாத்திய அமெரிக்க பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள்  ஆய்வாளர் விமலாபேக்கிலே கந்தரோடைப் பண்பாடு தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் கொண்டுள்ள நெருங்கிய ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி கந்தரோடையில் வாழ்ந்த பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம் அல்லது கந்தரோடையில் வாழ்ந்த மக்கள் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் எனக் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சுடுமண் சிற்பம் (2)

கோட்டைக்குள் ஐரோப்பியர் பயன்படுத்திய இருப்பிடங்களுக்கு முன்னால் நடாத்தப்பட்ட அகழ்வாய்வில் ஏறத்தாழ கி.பி1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோம மட்கலன்களைத் தொடர்ந்து அதன் கீழ் உள்ள கலாசாரப் படை கோட்டைப் பிரதேசத்தில் வாழ்ந்த தொடக்க காலக் குடியிருப்புகளுக்கு உரியதாகக் காணப்படுகின்றது. ஆயினும் இந்த அகழ்வாய்வின் போது பெருமளவு உரோம மட்கலன்களைக் கண்டுபிடித்த போதும் அதன் கீழ் அமைந்த கலாசாரப் படையை ஆய்வு செய்வதற்கு ஆய்வுக் குழிக்குள் கடல் நீர் உட்புகுந்தமை பெரும் தடையாகக் காணப்பட்டது. ஆயினும் இந்தக் கலாசாரப் படையில் இருந்தும், உரோம மட்கலன்களுடன் கலந்த நிலையிலும் பலவகை மட்கலன்களைக் கண்டறிய முடிந்தது. அவற்றுள் சில பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகளாகும். அந்த மட்பாண்ட ஓடுகளில் மென்மைத் தன்மை பெருங்கற்கால மட்பாண்ட ஓடுகளை விடக் குறைவடைந்து காணப்படுகின்றது. ஆயினும் இதன் மேற்படையிலுள்ள உரோம மட்கலன்களின் (Rouletted Wares) காலம் கி. பி 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததால் அதற்கு முற்பட்ட குடியிருப்புக்களுக்குரிய கலாசார காலம் கி. மு 3 ஆம் அல்லது கி. மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஆயினும் பேராசிரியர் கனிங்காம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கோட்டை அகழ்வாய்வில் கண்டுபிடித்த கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டத்தின் காலம் கி.மு 700 எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னரே கோட்டைப் பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின்போது-கிடைக்கப்பெற்றவை-1

இந்தக்குடியிருப்புக்கள் தொடர்ந்தும் இங்கு நிலைத்திருந்ததை இப்பிராந்தியத்தில் கிடைத்த சற்றுப் பிற்பட்ட காலத் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. அவற்றுள் இங்கு கிடைத்த நாட்டுப்புற தெய்வங்களுக்குரிய சுடுமண் சிற்பம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்தச்சிற்பம் கோட்டையின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள (Site-08) கோட்டை அரணின் (Rampart) அத்திபாரத்தின் கீழ் நிலமட்டத்திலிருந்து 4. 5 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டதாகும். முற்றாக அழிவடைந்த இவ்வரணின் அத்திபாரம் இயந்திரத்தின் உதவியோடு தோண்டியெடுக்கப்பட்டதனால் அதன் கீழ் அமைந்திருந்த கலாசார அடுக்குகள் குழம்பிய நிலையில் காணப்பட்டன. ஆயினும் இந்தச்சிற்பத்துடன் பலவகை மட்பாண்டங்களும், செங்கட்டிகளும்  வெளிவந்ததனால் இக்கோட்டை அரண் கட்டப்படுவதற்கு முன்னர் அவ்விடத்தில் குடியிருப்பு அல்லது ஆலயம் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. மண்ணோடு மண்ணாகக் காணப்பட்ட இச்சிற்பத்தின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்த இவ்விடத்தின் புனரமைப்புக்கு பொறுப்பாகவிருந்த ஆய்வு மேற்பார்வையாளர் திருமதி ராகினி, இச்சிற்பத்தை சரிவர அடையாளம் கண்டு உரியமுறையில் துப்பரவு செய்து அதைத் தொல்லியல் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார். சுடுமண்ணால் அமைந்த இச்சிற்பம் 6. 3 செ.மீ உயரமும் 6.6 செ.மீ அகலமும் 2. 5 செ.மீ சுற்றளவும் கொண்டது. இது அச்சினால் வடிவமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் என்பதை அதன் வடிவமைப்பும், அதன் உருவங்களும் உணர்த்துகின்றன. பெருமளவுக்கு வட்டவடிவில் அமைந்த இச்சுடுமண் தட்டின் ஒரு பக்கத்தில் மூன்று உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு பெண் உருவங்கள் என்பது தெளிவாகக் காணப்படுகின்றன. மூன்றாவது உருவம் ஆணுக்குரியதெனப் பேராசிரியர் இரகுபதி கூறுகின்றார். இச்சிற்பத்தை ஒரு இடத்தில் வைத்து வழிபடுவதற்கு ஏற்ற வகையில் அதன் கீழ்ப்பகுதியில் தட்டையான பீடம் காணப்படுவதுடன் அதன் மேற்பகுதி திருவாசி போன்ற வடிவில் செதுக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் சிறிய முடியொன்றும் காணப்படுகின்றது.

தமிழகத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து ஆகம மரபில் கற்களைப் பயன்படுத்தி ஆலயங்கள், தெய்வச் சிலைகள், சிற்பங்கள் வடிவமைப்பதற்கு முன்னர் சுடுமண்ணால் செய்யப்பட்ட சிலைகள், சிற்பங்களை அக்கால மக்கள் வழிபட்டு வந்தனர். இதற்கு தமிழகத்தில் மாளிகைமேடு, அரிக்கமேடு, மாமல்லபுரம் முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கிடைத்த சுடுமண் சிற்பங்கள் சான்றாகும். இதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இம்மரபு சமகால இலங்கை இந்துக் கலை மரபிலும் பின்பற்றப்பட்டதற்கு பல ஆதாரங்கள் உண்டு. அண்மையில் வவுனியா மாவட்டத்தில் சாஸ்திரிகூழாம்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இது போன்ற சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதனால் யாழ்ப்பாணக் கோட்டையில் கிடைத்த இச்சிற்பத்தை அக்காலத்தில்  கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்களால் வழிபடப்பட்ட நாட்டுப்புறத் தெய்வங்களாகக் கருத இடமுண்டு. 

இலங்கையில் புராதன குடியிருப்பு மையங்களில் காணப்பட்ட சான்றுகளுள் பெண் உருவம் பொறித்த நீள் சதுர நாணயம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். பல அளவுகளிலும், பல வடிவங்களிலும் அமைந்த இந்நாணயம் கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்ததாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. வட இலங்கையின் புராதன குடியிருப்பு மையங்களில் இவ்வகை நாணயங்களே அதிக அளவில் கிடைத்துள்ளன. இந்நாணயங்கள் இலங்கையில் வெளியிடப்பட்டதென்பதற்கு அந்நாணயங்களை வடிவமைப்பதற்குப் பயன்படுத்திய சுடுமண் அச்சுக்கள் புராதன குடியிருப்பு மையங்களில் கிடைத்திருப்பது சான்றாகும். இந் நாணயங்களை இலங்கையின் குறுநில அரசர்கள், வணிகக் குழுக்கள் வெளியிட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. 1917 இல் கந்தரோடையில் களவாய்வினை மேற்கொண்ட ’போல் பீரிஸ்’ இவ்வகை நாணயங்களைக் கண்டுபிடித்து அதில் உள்ள பெண் உருவம் தாமரை மலரில் நிற்பது போல் பொறிக்கப்பட்டுள்ளதை ஆதாரமாகக் காட்டி அதற்கு லக்சுமி நாணயம் என முதன் முதலாகப் பெயரிட்டுள்ளார். அவரால் இடப்பட்ட பெயரே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்விலும் இவ்வகை நாணயங்கள் கிடைத்துள்ளன. இவ்வாதாரம் இங்கு புராதன குடியிருப்புக்கள் இருந்ததற்கு மேலும் சான்றாகும். 

கோட்டைப் பிரதேசமும் அயல்நாட்டுத் தொடர்புகளும் 

யாழ்ப்பாணக் கடல்நீரேரியுடன் இணைந்துள்ள யாழ்ப்பாணக் கோட்டையின் அமைவிடம் தென்னிந்தியாவின் தென்பகுதியில் குறிப்பாக தமிழகத்திற்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. இலங்கை வரலாறு இந்தியப் பண்பாட்டுச் செல்வாக்கிற்குட்பட்டு வந்தாலும் அதன் ஆதிகால, இடைக்கால அரசியல் பொருளாதார பண்பாட்டு வரலாறு பெருமளவுக்கு தமிழகத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டு வளர்ந்ததற்கே அதிக சான்றுகள் காணப்படுகின்றன. அதில் இலங்கைத் தமிழக உறவின் குறுக்கு நிலமாக வட இலங்கை சிறப்பாக யாழ்ப்பாணம் காணப்படுவதனால் தமிழகத்தில் காலத்திற்கு காலம் தோன்றி வளர்ந்த பண்பாட்டை முதலில் உள்வாங்கிக் கொள்ளும் தொடக்க வாயிலாக இப்பிராந்தியம் இருந்துள்ளது எனலாம். ஆதியில் யாழ்ப்பாணக் கோட்டை அமைந்துள்ள பிரதேசத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலுள்ள தீவுகள் ஓர் இணைப்பு பாலமாக இருப்பதனால் தமிழகச் செல்வாக்கு இப்பிராந்தியத்திலும் அவ்வப்போது ஏற்பட்டிருக்கும் எனக் கூறலாம்.

நாட்டுப்புற-தெய்வங்களுக்குரிய-வழிபாட்டிடம்

இலங்கையின் ஆதிகால வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் இலங்கையின் அயல்நாட்டு உறவுகள் வட இலங்கையிலுள்ள மாதோட்டப்பட்டினம், ஜம்புகோளப்பட்டினம் ஊடாக நடந்ததாகக் கூறுகின்றன. இலங்கையின் ஏனைய துறைமுகங்களை “தொட்ட” எனப் பாளி மொழியில் கூறும் போது இவ்விரு துறைமுகங்களையும் ’பட்டின’ எனக் கூறியிருப்பதும் இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இந்த அயல் நாட்டு உறவில் குறிப்பாக வணிக உறவில் கோட்டையின் அமைவிடத்திற்கும் முக்கியமான பங்குண்டு என்பது தெரியவருகின்றது. இதன் அமைவிடம் மேற்கே இந்திய உரோம, அரேபிய நாடுகளுடனும், கிழக்கே தென்கிழக்காசியா, கிழக்காசிய நாடுகளுடனும் நடைபெற்ற கடல் சார் வாணிபத்தில் முக்கியமான பரிவர்த்தனை மையங்களில் ஒன்றாக இருந்துள்ளது. அதனையே கோட்டைப் பகுதியில் கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்களும் உறுதி செய்கின்றன.

இலங்கையின் நிலையமும் இங்கு இயற்கையாகக் கிடைத்த வணிகப் பொருட்களும் பண்டுதொட்டு அயல்நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. ஆதியில் வட இலங்கையின் வணிகத் தொடர்புகள் பெருங்கற்கால பண்பாட்டுடன் தோற்றம் பெற்றதை மாந்தை, பூநகரி, கந்தரோடை ஆகிய இடங்களில் கிடைத்த சிலவகை மட்கலன்கள், கல்மணிகள், உலோகப் பொருட்கள் என்பன உறுதிசெய்கின்றன. இவ்வர்த்தகத்தில் தென்னிந்தியா சிறப்பாகத் தமிழ் நாடு முக்கியமான பங்கு வகித்துள்ளது. கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த விலையுயர்ந்த மட்பாண்ட வகைகள் பெருங்கற்காலப் பண்பாட்டுக்காலத்தில் இருந்து தமிழகத்திற்கும் யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசத்திற்கும் இடையே வணிக உறவு இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. கி. பி 1 ஆம் நூற்றாண்டுக்குரிய பெரிப்பிளஸ் எனும் நூலில் உரோம வணிகர்கள் இலங்கைக்கு வராமலே ஆரம்பத்தில் தென்னிந்தியத் துறைமுகங்களில் இலங்கைப் பொருட்களைப் பெற்று திருப்தி அடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சகாப்தத்தில் உரோமப் பேரரசில் ஏற்பட்ட அமைதியும் உட்பலஸ் பருவக் காற்றின் உதவியைக் கண்டுபிடித்தமையும் உரோம அரசின் செல்வமும் அரசியல் அமைதியையும் கீழைத்தேய வாசனப் பொருட்களுக்கு மேற்கு நாடுகளில் மதிப்பை ஏற்படுத்தியது. அதனால் உரோம வர்த்தகர்களின் வருகை தமிழ் நாடு, ஆந்திரம், இலங்கை முதலான பிரதேசங்களில் அதிகரித்தது. உரோமரோடு தமிழ்நாடு கொண்ட வர்த்தக உறவை பட்டினப்பாலையும், மதுரைக் காஞ்சியும் சிறப்பித்துக் கூறுகின்றன. இதை அரிக்கமேடு, உறையூர், கரூர், காவிரிப் பூம்பட்டினம், காஞ்சிபுரம் முதலான இடங்களிற் கிடைத்த உரோம நாட்டுத் தொல்லியல் சின்னங்களும் உறுதி செய்கின்றன. தொலமி, பிளினி ஆகிய மேற்கு நாட்டவரது குறிப்புகளிலும் இவ்வர்த்தக உறவு பற்றிக் கூறப்பட்டுள்ளது.

தொடக்க காலத்தில் தமிழ்நாட்டு வணிகர்கள் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து ஏலம், கறுவா, மிளகு போன்ற வாசனைப் பொருட்களையும் முத்து, இரத்தினம், யானை, யானைத்தந்தம் முதலான பொருட்களையும் பெற்று தென்னிந்தியத் துறைமுகங்கள் ஊடாக உரோமுக்கும் ஏனைய நாடுகளுக்கும் அனுப்பி வைத்தனர். அதேபோல் இலங்கைக்குத் தேவையான குதிரை ,சில உணவுப் பொருட்கள், பலதரப்பட்ட மட்பாண்டங்கள், உலோகப் பொருட்கள், மது வகைகள் என்பன தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலை கி.பி 1ஆம் நூற்றாண்டளவில் மாற்றமடைந்தது. உரோம நாட்டு வர்த்தகர்களே இலங்கையில் நேரடியாக வணிக நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவ்வணிக நடவடிக்கை கி. பி 5 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருந்ததை அனுராதபுரம், பொம்பரிப்பு, மாந்தை, திருகோணமலை, கந்தரோடை, பூநகரி, பொலநறுவை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உரோம நாட்டுக்குரிய நாணயங்கள், மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள் என்பன உறுதிப்படுத்துகின்றன. சமகாலத்தில் இவ்வர்த்தகத் தொடர்பு யாழ்ப்பாணக் கோட்டைப் பிராந்தியத்திலும் ஏற்பட்டிருந்ததை அங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 

கோட்டைப் பிரதேசத்தில் உரோமரின் வர்த்தகத் தொடர்புகள் கி. பி 1ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்பதனை இங்கு மிகச்செறிவாகக் கிடைத்த உரோம மட்கலன்கள் உறுதிப்படுத்துகின்றன. கொட்றிங்டன் 1924 வெளியிட்ட தனது நூலில் யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் மட்குடம் ஒன்றில் சில பொன் நாணயங்களைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். உரோமர் பொன் நாணயங்களைத் தொடர்ந்து வெளியிட்ட செப்பு நாணங்கள் பெரும்பாலும் கி. பி 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதால் கோட்டைப் பிரதேசத்தில் கிடைத்த பொன் நாணயங்கள் இப்பகுதியில் உரோமருக்குள்ள தொடர்பு கி. பி 1ஆம் நூற்றாண்டளவில் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. 

கோட்டையின் உட்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வில் உரோம மட்பாண்ட சிதைவுகள் அடையாளம் காணப்பட்டாலும் ஐரோப்பியரின் இருப்பிடங்களுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த உரோம மட்பாண்டங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். ஆய்வுக் குழியில் ஐந்தாவது கலாசாரப் படையில் செறிவாகக் காணப்பட்ட மட்கலன்களில் சில அதற்கு முற்பட்ட குடியிருப்புக்களுக்குரிய மட்பாண்டங்களுடன் கலந்த நிலையிலும் காணப்பட்டன. இங்கு கிடைத்த மட்பாண்டங்களில் ரௌலடட் மட்பாண்டங்கள் (Roulette Ware), அரிட்டைன் மட்கலன்கள் (Arretine Ware) ஆம்போராச் சாடி (amphorae Jar) என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. உரோம வர்த்தகத்தில் மதுபானம், எண்ணெய் போன்ற திரவப் பொருட்களைப் பாதுகாக்க ஒருவகைச் சாடி பயன்படுத்தப்பட்டது. இவை ஆம்போராச் சாடிகள் என அழைக்கப்பட்டன. இவை மிருதுவான களிமண்ணால் வனையப்பட்டு பழுப்பு நிறத்தினை உடையனவாகவிருக்கும். இவற்றின் அடிப்பகுதி கூராகவும், வாய்ப்பகுதி மூடியதாகவும், கழுத்துப் பகுதியின் இருபுறமும் கைப்பிடிகள் உடையதாகவும் காணப்படும். இதிலே கைபிடிகள் இருப்பதால் ஓரிடத்திலிருந்த இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செல்லவும் கூர்மையான அடிப்பகுதி இருப்பதால் நிலத்தில் ஊன்றி வைப்பதற்கும் வசதியாக இருந்தது. இவை தமிழ்நாட்டில் அரிக்கமேடு, வசவ சமுத்திரம், கரூர் அகிய இடங்களில் கிடைத்துள்ளன. கோட்டை அகழ்வாய்வில் இவ்வகைச் சாடிகள் முழுமையாகக் கிடைக்காவிட்டாலும் சாடியின் உடைந்த பாகங்களும், அவற்றின் காற்பகுதிகள் சிலவும் கிடைத்துள்ளன. இவை உரோம நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதால் இலங்கையில் உரோமரின் நேரடி வர்த்தகம் நடைபெற்ற இடங்களில் கோட்டைப் பகுதியும் ஒன்று எனக் கருத இடமுண்டு. 

இலங்கை – தென்னிந்திய வர்த்தகத்தில் உரோமரின் செல்வாக்கு கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்து படிப்படையாக வீழ்ச்சியடைய மேற்காசியாவில் ஏற்பட்ட அராபியரின் வர்த்தக எழுச்சி இப்பிராந்தியங்கள் செல்வாக்குப் பெறக் காரணமாகியது. இவற்றை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்கள் வட இலங்கையில் மாந்தை, பூநகரி, கந்தரோடை போன்ற இடங்களிலும் தமிழகத்தில் அரிக்கமேடு, மாழிகைமேடு போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன. இந்த அராபியரின் வர்த்தக எழுச்சியில் மாதோட்டம் முக்கியமான துறைமுகமாக மாறியதை அங்கு கண்டுபிடிக்கப்பட்ட செறிவான மட்கலன்கள் உறுதி செய்கின்றன. சமகாலத்தில் அராபியரின் வர்த்தக நடவடிக்கைகள் கோட்டைப் பகுதியிலும் ஏற்பட்டிருந்ததை அகழ்வாய்விலும், தொல்லியல் மேலாய்விலும் கிடைத்த சிலவகை மட்பாண்டங்கள் உறுதிசெய்கின்றன. 

கி. பி 10 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இலங்கை வரலாற்றின் அயல்நாட்டு உறவுகளில் கோட்டைப் பிரதேசம் வட இலங்கையில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கலாம் என்பதனை இங்கு கிடைத்த நாணயங்கள்,மட்பாண்டங்கள், கல்வெட்டுக்கள் என்பன உறுதி செய்கின்றன. கோட்டையில் கிடைத்த அயல்நாட்டு நாணயங்களில் சோழ நாணயங்கள் எண்ணிக்கையில் அதிகமாகும். இங்கு சோழ நாணயங்களுடன் சோழரைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சிபுரிந்த சேர, பாண்டிய நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்துடன் கள ஆய்விலும், அகழ்வாய்விலும் கிடைத்த சிலவகை மட்பாண்டங்கள்  சோழர் கால மரபைச் சார்ந்தவையாகவுள்ளன. இம்மட்பாண்டங்கள் தமிழகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற இடங்களில் கிடைத்த சோழர்கால மட்பாண்டங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன. 1970 களில் கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கி. பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் இராஜேந்திர சோழனது கல்வெட்டு நல்லூரில் இருந்த ஆலயம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிக் கூறுகின்றது. இந்நல்லூர் தற்காலத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரைக் குறித்ததா அல்லது சோழர் காலத்தில் கோட்டைப் பகுதியில் ஓர் இடம் நல்லூர் என்ற பெயரில் இருந்ததைக் குறிப்பிடுகின்றதா என்பது தெரியவில்லை. பேராசிரியர் இந்திரபாலா மற்றும் பேராசிரியர் வி. சிவசாமி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட காலப்பகுதியில் கோட்டை அரணில் தெற்குப் பகுதியில் கி. பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தக் கல்வெட்டை அவதானித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாதாரங்களை நோக்கும் போது கோட்டைப் பிரதேசம் சோழரின் வணிக மையமாக மட்டுமன்றி அவர்களின் குடியிருப்பு மையமாகவும் இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் கி. பி 993 இல் இருந்து கி. பி 1070 வரை இலங்கையில் சோழரின் தலைநகராகப் பொலநறுவை இருந்த போது அவர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் செல்வாக்குக்கு பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே காணப்பட்டன. பேராசிரியர் க. இந்திரபாலா கி. பி 993 இல் முதலாம் இராஜராஜ சோழன் அனுராதபுர அரசை வெற்றி கொள்ள முன்னர் அவர்களின் ஆதிக்க மையம் யாழ்ப்பாணத்தில் அல்லது திருகோணமலையில் இருந்துள்ளது எனக் கூறியுள்ளார். இக்கூற்றைக் கோட்டையில் கிடைத்து வரும் சோழர் கால ஆதாரங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க இடமளிக்கின்றது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்பட்ட வணிக கலாசார உறவுகள் பற்றிச் சீன இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றில் வட இலங்கையுடனான உறவுகள் பற்றிக் குறிப்புக்கள் தெளிவற்றதாக இருப்பினும் வட இலங்கை முக்கியமான பங்கு வகித்ததை மாந்தை, பூநகரி, கந்தரோடை முதலான இடங்களில் கிடைத்த சீன நாணயங்கள், மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள் உறுதி செய்கின்றன. இவ்வணிக கலாசார உறவுகள் யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் அல்லது இப்பிரதேசத்தினூடாகவும் நடைபெற்றிருக்கலாம் என்பதனை இங்கு கிடைத்து வரும் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. அவற்றுள் அதிகளவானவை சீன மட்பாண்டங்களும், கண்ணாடிப் பொருட்களும் கோட்டை அகழ்வாய்வில் மட்டுமன்றி கள ஆய்வின் போதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றிடையே கண்டுபிடிக்கப்பட்ட சீன நாணயங்களின் காலம் கி. பி 10ஆம் நூற்றாண்டுக்கும் 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கணிப்பிடப்பட்டதனால் இக்காலப் பகுதியில் சீன நாட்டவர் கோட்டைப் பிரதேசத்தடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர் எனக் கூறலாம்.

சமகாலத்தில் பொலநறுவை அரசு வட இலங்கையில் உள்ள ஊர்காவற்றுறைத் துறைமுகம் ஊடாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் அரசியல், பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்தியதாக பாளி இலக்கியமான சூளவம்சம் கூறுகின்றது. இது உண்மையென்பதனை நயினாதீவில் கண்டுபிடிக்கப்பட்ட கி. பி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டும் உறுதிசெய்கின்றது. இக்கல்வெட்டு ஊர்காவற்றுறையில் துறைமுக நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிகள், வெளிநாட்டு வணிகருக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும், அவர்களிடம் பெறவேண்டிய வரிமுறைகளையும் குறிப்பிடுகின்றது. இந்நிலையில் கோட்டைப் பகுதியில் பொலநறுவை அரசு கால நாணயங்கள் பல கிடைத்திருப்பது பொலநறுவை அரசு கால வெளிநாட்டு வர்த்தகத்தில் கோட்டைப் பிரதேசமும் முக்கியமான பங்கு வகித்திருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. 

நகரமயமாக்கம்

தென்னாசியாவில் நகரமயமாக்கத்தின் தோற்றமும், அதற்கான வரலாற்றுப் பின்னணியும் இடத்திற்கு இடம் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. பொதுவாக நிலையான குடியிருப்புகள், நிரந்தர பொருளாதாரக்கட்டமைப்பு, மிகை உற்பத்தி, சிறுதொழில் நுட்பவளர்ச்சி, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம் என்பன நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள், நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன தோன்றியதன் தொடக்ககாலமாகக் கூறப்படுகின்றது. தமிழகத்தில் சேர நாட்டின் நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன உரோம நாட்டு வணிகத் தொடர்பால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டி நாட்டிலும், சோழ நாட்டிலும் இவை விவசாய உற்பத்தியால் தோன்றியதாகக் கூறப்படுகிறது. வடஇந்தியாவில் நகரமயமாக்கத்தின் தோற்ற காலம் கி. மு. 500 – 400 எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இலங்கையிலும் இதன் தோற்ற காலம் ஏறத்தாழ கி. மு. 200 எனக் கூறப்படுகிறது. இலங்கையில் புராதன நகரங்கள் தோன்றிய இடங்களாக அனுராதபுரம், மகாகமை, கந்தரோடை, மாதோட்டம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு இவ்விடங்கள் பிற நாடுகளுடன் குறிப்பாக உரோம நாட்டுடன் கொண்டிருந்த கடல்சார் வாணிபத் தொடர்பு  முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. 

யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசத்தில் மேற்கொண்ட மேலாய்வில் கிடைத்த பண்டைய நாணயங்கள், பலவகை மட்பாண்டங்கள் இப்பிரதேசம் தொடக்கத்தில் உள்நாட்டு வர்த்தகத்திலும் பின்னர் இந்தியாவுடனும் இவற்றைத் தொடர்ந்து உரோம அரேபிய, சீனா முதலான நாடுகளுடன் கடல்சார் வர்த்தகத்தில் ஈடுபட்டதை உறுதிசெய்கின்றன. இவற்றை அகழ்வாய்வில் கிடைத்த ஆதாரங்கள் மேலும் உறுதி செய்கின்றன. இவ்விடத்தில் கொட்றிங்ரன் என்ற அறிஞர் கோட்டைப் பிரதேசத்தில் இருந்து 20 உரோம நாட்டு தங்க நாணயங்களைச் கண்டுபிடித்ததாகக் கூறியிருப்பதும் இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது யாழ்ப்பாண நகர உருவாக்கம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கந்தரோடை, அனுராதபுர, மகாகமை முதலான நகரங்கள் தோன்றியதன் சமகாலத்தில் ஏற்பட்டதெனக் கூறலாம். 

தொடரும்.

 

ஒலிவடிவில் கேட்க

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 3

 

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

கோட்டைக்குள் மறைந்து காணப்பட்ட ஆலயங்களின் அழிபாடுகள்

கோட்டை மீள் புனரமைப்பு பணிகளின் போது கிடைத்து வரும் வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆதாரங்களுள் 16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர் வழிபாட்டிலிருந்த இந்து ஆலயங்களின் அழிபாடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு கோட்டைக்கு அயலில் உள்ள தீவுகளிலும், கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட கோறல் கற்கள் பயன்படுத்தியதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் கோறல் கற்களுடன் எந்தவித அளவுப் பிரமாணமம் இன்றி ஏற்கனவே பிற கட்டடங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கருங்கள் மற்றும் சுண்ணாம்புக் கற்றூண்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைக் காணமுடிகின்றது. இக்கற்கள் இந்து ஆலயங்களுக்குரியவை என்பதை அக்கற்களின் வடிவமைப்புக்களும் அவற்றில் செதுக்கப்பட்டுள்ள கலைவடிவங்களும் உறுதிசெய்கின்றன. அக்கற்கள் காணப்படும் இடங்களுள் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு ஒல்லாந்தரால் மீள்ளுருவாக்கம் செய்யப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தின் அழிபாடுகளிடையே கிடைத்த கற்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

JAFFNA-FORT-HOLLY-CROSS

1730 இல் ஒல்லாந்தர் ஆட்சியில் மீளக் கட்டிமுடிக்கப்பட்ட இவ்வாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவத்தில் அமைந்திருந்தது. ஏறத்தாழ 600 அடி சுற்றளவு கொண்ட இவ்வாலயத்தில் 50 அடி அகலமான இரு வாயில்கள் இருந்துள்ளன. வெளியில் சிறிதாக தோற்றமளித்த இவ்வாலயத்தின் உள்ளே மிக அலங்காரமான ஒல்லாந்தர்கால கலை மரபில் அமைந்த போதனைமண்டபமும், கலையரங்கும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இங்கு ஒல்லாந்தர் காலத் தேவாலய மணியோடு போர்த்துக்கேய மணியும் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.மேலும் இவ்வாலயத்தில் பல்வேறு காலகட்டத்திற்குரிய கல்லறைகளும் போர்த்துக்கேயக் கல்லறைகளும், போர்த்துக்கேய ஒல்லாந்து, ஆங்கிலேய கால போர் வீரர்கள், உயர் அதிகாரிகள் என்போருக்காக எழுப்பப்பட்ட நினைவுக் கற்களும், சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்கள் போர்த்துக்கேயர் கட்டிய கத்தோலிக்க தேவாலயத்தையே பின்னர் ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் புரட்டஸ்தாந்து தேவாலயமாக மாற்றினர் என்பதை உறுதி செய்கின்றன. ஆயினும் தற்போது இவ்வாலயத்தின் முழுமையான அமைப்பையோ அல்லது அவற்றின் தொழில்நுட்பக் கலை மரபினையோ தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவ்வாலயம் முற்றாக அழிவுண்டு கல் மேடாகக் காட்சியளிக்கின்றது. 

இவ்வாலய அழிபாடுகளிடையே கிடைத்த சான்றுகளைக் கொண்டு முருகைக்கல், செங்கட்டி, சுதை என்பவற்றைப் பயன்படுத்தி இவ்வாலயத்தைக் கட்டியுள்ளனர் என்பது தெரிகின்றது. ஆயினும் இவ்வாலயக் கட்டடக் கலைமரபுக்கு பொருந்தாத வகையில் சில கருங்கற் தூண்களும், சுண்ணாம்புக் கற்றூண்களும் இங்கு காணப்படுகின்றன. இவை அழிவடைந்த ஆலயத்தின் மேற்படையில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இந்த அழிபாடு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுமானால் மேலும் பல கற்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இங்கு கிடைத்த கற்களில் கருங்கல் மற்றும் முருகைக் கற்றூண்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. அதில் இரு கருங்கற்றூண்களும் இந்து ஆலயத்தின் கற்பக்கிருகம் அல்லது முன் மண்டபத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தூணாக இருக்கலாம். சற்சதுர வடிவில் நன்கு பொழிந்து வெட்டப்பட்ட தூண்களின் நடுப் பாகத்தில் தாமரைப் “பூ” வடிவம் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கருங்கற்றூணின் மேற்பாகத்தில் காணப்படும் தாமரை வடிவம் திராவிடக் கலை மரபிற்குரிய போதிகை வடிவமாகக் காணப்படுகின்றது. மற்றைய தூண் சுண்ணக் கல்லால் ஆனது. ஏறத்தாழ ஐந்து அடி நீளமும்  1 ½ அகலமும் கொண்ட இத்தூண் பலகை போன்ற வடிவில் நன்கு பொழியப்பட்டுள்ளது. இத்தூண் ஆலய முகப்பின் வாசல் படியின் அல்லது கபோதத்திற்கு மேல் வைக்கப்பட்ட கற்பலகையாக இருக்கலாம். 

ஆலயங்களுக்குரிய கற்கள் பயன்படுத்திய இன்னொரு இடம் மீள்புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட கோட்டையின் வாசல் பகுதியாகும். சுரங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட பாதையின் கூரை கோறல் கற்களைப் பயன்படுத்தி பிறை வடிவில் கட்டப்பட்ட போதும் அதன் கீழ்த்தள வாசல் பகுதி ஆலயங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கல் மற்றும் சுண்ணாம்பு கற்றூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட இத்தூண்களின் அளவு,வடிவமைப்பு, அலங்காரம் என்பவற்றின் ஒழுங்கற்ற தன்மைகள் இக்கற்கள் கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர் வேறுபட்ட கலை மரபுகளில் ஆலயங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை என்பதை நன்கு உறுதிப்படுத்துகின்றன. 

கோட்டையின் மேல் தளத்திலுள்ள பீரங்கித் தளங்களின் சுவர்கள் குறிப்பிட்ட அளவுகளில் வடிவமைக்கப்பட்ட கோறல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஆயினும் பீரங்கிகள் பொருத்தப்பட்ட இடங்களை அமைப்பதற்கு, ஆலயங்களுக்குரிய வைரமான தூண்களும் பிற கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இப்பீரங்கித் தளங்களில் பீரங்கிகள் பொருத்துவதற்கு அமைக்கப்பட்ட வாசல் பகுதிகள் மீள் கட்டுமானத்திற்காக அகழப்பட்ட போது அதன் கீழ்ப் பகுதிகளிலும் மேல் பகுதிகளிலும் கோறல் கற்களோடு சுண்ணக்கல் மற்றும் கருங்கல் தூண்களும் பயன்படுத்திக் கட்டப்பட்டதற்கான ஆதாரங்களைக் காணமுடிந்தது. அவற்றில் இரு சுண்ணக் கற்றூண்கள் நடுவில் சற்சதுரமாக வெட்டப்பட்டு ஒரு பக்கத்தில் ஒரு துவாரமும் மறு பக்கத்தில் இரு துவாரமும் இடப்பட்டு இருபக்க நுனிப்பாகங்களும் அலங்காரமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அலங்காரமாகச் செதுக்கப்பட்ட இத்தூண்களில் காணப்படும் துவாரங்கள் இரு தூண்களை ஒன்றாகப்பொருத்தி முன்னர் வேறொரு கட்டடத்திற்கு பயன்படுத்தப்பட்ட தூண்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

மேலும் சுடுதளங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுண்ணக்கற்கள் வளைவாக வெட்டப்பட்டு அவை பிற கற்களுடன் பொருத்திக் கட்டும் வகையில் அவற்றின் உட் பாகம் மூன்று படிகள் கொண்டதாகச் செதுக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இக்கற்கள் தூணின் மேற்புறத்தில் பலகைக்கு மிண்டு போல் அமைந்துள்ள வளைவான கொடுங்கையாக இருக்கலாம். இந்தச்சுடுதளங்களில் சற்சதுர வடிவில் நடுவில் பள்ளமாக அமைந்த கருங்கற் பலகைகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் மிகப் பெரிய கருங்கல்லின் நடுப்பகுதியில் பள்ளமிடப்பட்ட கருங்கல் ஒன்று கிடைத்துள்ளது. இக்கல் கர்ப்பக்கிருகத்தில் இருந்த ஆவுடையாக அல்லது தெய்வச்சிலை வைக்கப் பயன்படுத்திய பீடமாக எடுத்துக்கொள்ள இடமுண்டு. 

மேற்கூறப்பட்ட கற்களும் கற்தூண்களும் இந்து ஆலயங்களுக்குரியவை என்பதில் ஐயமில்லை. 16 ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணக் கோட்டை அந்நியரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததால் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்களை முன்னிலைப்படுத்திய அந்நியர் ஆட்சியில் கோட்டைக்குள் இந்து ஆலயங்கள் கட்டியிருக்க வாய்ப்பில்லை. இதனால் இவ்வாலயக் கற்கள் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட ஆலயங்களுக்குரிய கற்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவ்வாலயங்கள் போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னர் கோட்டை இருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தவையா அல்லது கோட்டைக்கு வெளியே கட்டப்பட்டிருந்தவையா என்பது ஆய்வுக்குரிய விடயமாகும். 

16 ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் மேலாதிக்கம் செலுத்திய போர்த்துக்கேயரும் பின் வந்த ஒல்லாந்தரும் தமது கத்தோலிக்க புரட்டஸ்தாந்து மதங்களைப் பரப்புவதற்காக சுதேச மதங்களுக்கு எதிரான கலை அழிவுக் கொள்கையைக் கடைப்பிடித்தனர். இதனால் இந்து ஆலயங்கள் மட்டுமன்றி அவர்களின் இருப்பிடங்களும் அழிக்கப்பட்டன. போர்த்துக்கேயர் தமது ஆட்சியில் யாழ்ப்பாணத்திலிருந்த சிறிதும் பெரிதுமான 500 மேற்பட்ட இந்து ஆலயங்களை அழித்தாக தமது நூலில் குறிப்பிட்டுள்ளனர். 1619 இல் நல்லூரை வெற்றி கொண்ட போர்த்துக்கேயப் படை வீரர்கள் அங்கிருந்த பெரிய ஆலயத்தை தமது பாதுகாப்பு மையமாகவும், நிர்வாக மையமாகவும் பயன்படுத்திவிட்டு பின்னர் அவ்வாலயத்தை அழித்ததாகவும் கூறியுள்ளனர். அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயக் கற்களைப் பயன்படுத்தியே கிறிஸ்தவ ஆலயங்களையும், கோட்டைகளையும் கட்டியதாகத் தெரிகின்றது. இதனால் யாழ்ப்பாணக் கோட்டையில் காணப்படும் கற்களை யாழ்ப்பாண அரசு காலத்திலிருந்த இந்து ஆலயங்களுக்குரிய கற்களாகக் கருதமுடியும். ஆயினும் தற்போது கோட்டையில் கிடைத்து வரும் ஆதாரங்கள் கிறிஸ்தவ சகாப்த காலத்திலிருந்து இவ்விடம் குடியிருப்பு மையமாகவும், வணிக நகரமாகவும் இருந்துள்ளதை உறுதிசெய்துள்ளதால் இப்பிரதேசத்திலும் போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னர் இந்து ஆலயங்கள் இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. இதை எதிர்கால ஆய்வுகளே உறுதி செய்யவேண்டும்.

OLD-FORT

யாழ்ப்பாணக்கோட்டை தோன்றிய வரலாற்றுப் பின்னணி

தற்காலத்தில் கீழைத்தேய நாடுகளிலுள்ள பெரும்பாலான கோட்டைகள் கி.பி 16 ஆம் நூற்றாண்டிலிருந்து வர்த்க நோக்கோடு வந்த போர்த்துக்கேயர், பின்வந்த ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டவையாகும். ஆனால் உலகில் நாகரிக உருவாக்கம் நிகழ்ந்த காலத்திலிருந்து ஆட்சியாளரையும், அரச வம்சத்தையும் பாதுகாக்கும் நோக்கில் பல அளவுகளிலும், பல வடிவங்களிலும் கோட்டைகள் கட்டப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு. இவற்றைக் குறிக்கும் பெயர்கள் அந்தந்த நாடுகளின் மொழி வழக்கிற்கு ஏற்ப பல பெயர் கொண்டு அழைக்கப்பட்டன. தென்னாசியாவில் தொடக்க கால கோட்டைகள் சிந்துவெளி நாகரிகத்திலும்,வேதகால நாகரிகத்திலும் இருந்ததற்கு தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் சங்க காலம் தொட்டு கோட்டைகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. சோழர் ஆட்சியில் அரசர்கள் கட்டிய ஆலயங்களையே அவர்களின் அரண்மனையாகவும், பாதுகாப்பு அரணாகவும், கோட்டையாகவும் பயன்படுத்தியமை தொல்லியல் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழில் கோட்டை என்ற சொல்லுக்கு மதிலரண், காடு, பரிவேடம், வீட்டின் உட்புறம் எனப் பொருள் காணப்படுகின்றது. யாழ்ப்பாணப் பேரகராதியில் கோட்டைப் போர் என்பதற்கு வைக்கற் போர் எனப் பொருள் காணப்படுகின்றது. தற்காலத்தில் இலங்கையிலுள்ள கோட்டைகளில் பெரும்பாலானவை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு பின்னர் அவை ஒல்லாந்தர் ஆட்சியில் அவர்களின் கலை மரபில் மாற்றி வடிவமைக்கப்பட்டு பிரித்தானியர் ஆட்சியில் சிறிய மாற்றங்களுக்குள்ளாகின. இந்தக்கோட்டைகள் தென்னிலங்கையில் கொழும்பு, காலி, மாத்தறை, கற்பிட்டி முதலான இடங்களிலும், வட இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், பூநகரி, இயக்கச்சி, ஆனையிறவு, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. போர்த்துக்கேயர் ஆட்சியிலிருந்து இந்தக்கோட்டைகள் மிகப் பெரிய அரண்கள், அகழிகள், பீரங்கித்தளங்கள் கொண்டு அமைக்கப்பட்டாலும் கி. மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே மிகச் சிறிய அளவிலான கோட்டைகள் இலங்கையில் பயன்பாட்டிலிருந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன.

INSCRIPT

கி.மு 2ஆம் நூற்றாண்டில் எல்லாள மன்னனுக்கும் துட்டகாமினிக்குமிடையே நடந்த போராட்டத்தில் அநுராதபுரத்திற்கு தெற்கே இருந்த கோட்டை பற்றி மகாவம்சம் கூறுகின்றது. இதன் சமகாலத்தைச் சேர்ந்த கிழக்கிழங்கை பிராமிச் சாசனம் ஒன்றில் கொடவேள் என்ற பெயர் காணப்படுகின்றது. அதைப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் “கோட்டை வேள்” எனப் பெயர் கொண்டுள்ளார். இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 21 பிராமிக் கல்வெட்டுக்களில் வேள் எனும் தமிழ்ப் பெயர் காணப்படுகின்றது. இப்பட்டப்பெயர் சங்ககாலத் தமிழகத்தில் குறு நில அரசர்கள் பயன்படுத்திய வேள் ”வேளீர்” என்ற பட்டப் பெயர்களை ஒத்ததாகும். பேராசிரியர் ரோமிலா தாபர் வட மொழியில் “ராஜா” என்ற பட்டப் பெயர் என்ன பொருளைக் குறித்ததோ அதே பொருளை தமிழில் “வேள்” என்ற பட்டப் பெயர் குறித்ததாக கூறுகின்றார். மகாவம்சத்திலும் வேள் நாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. இதனால் கிழக்கிலங்கைப் பிராமிச் சாசனத்தில் வரும் “கோட்டை வேள்” என்பது வேள் என்ற பட்டத்திற்குரியவனின் கோட்டையாகக் கருத இடமுண்டு. 

மேலும் பொலநறுவை அரசு காலத்திலிருந்து கோட்டைகள் பற்றிய செய்திகள் பாளி, சிங்கள இலக்கியங்களில் காணப்படுகின்றன. 11 ஆம் நூற்றாண்டில் 1ஆம் விஜயபாகுவின் ஆட்சிக் காலத்தில் பௌத்த மதத்திற்கு பாதுகாப்பளித்த சோழர்கால வேளைக்காரப் படையினர் நிலைகொண்டிருந்த இடங்களாக வட இலங்கையில் மாதொட்ட,மட்டிகாவாட்ட தீர்த்த ஆகிய இடங்கள் சூளவம்சத்தில் குறிப்பிடப்படகின்றது. அதில் மாதொட்ட என்ற இடம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாதோட்டம் என்ற இடத்தை குறிக்கின்றது. மட்டிகாவட்ட தீர்த்த என்ற இடம் அடையாளம் காணப்படாது இருந்தாலும் இவ்விடம் பூநகரியிலுள்ள மட்டுவில் நாடாக இருக்கலாம். இதைப் பொருத்தமென முடிவாக எடுத்துக் கொள்ளும் பேராசிரியர் பொ. இரகுபதி பாளி இலக்கியம் கூறும் மட்டிகாவத்த என்பதை களிமண்ணால் வட்டமாக (மட்டி, களி மண், வட்ட, வட்டம்) அமைக்கப்பட்ட கோட்டை எனப் பொருள் கொள்கின்றார். பொலநறுவை இராசதானி வீழ்ச்சியைத் தொடர்ந்து சிங்கள இராசதானி தெற்கு நோக்கி தம்பதெனியா, யாப்பகூவா, குருநாகல், கோட்டை ஆகிய இடங்களுக்கு இடம் மாறிய போது அங்கெல்லாம் அரசின் பாதுகாப்பு கருதி கோட்டைகள் அமைக்கப்பட்டதை பாளி, சிங்கள இலக்கியங்கள் உறுதிசெய்கின்றன. இந்நிலையில் சிங்கள இராசதானிகள் தென்னிலங்கையில் தோன்றிய போது வட இலங்கையில் கலிங்கமாகன், சாவகன் தலைமையில் தமிழர் சார்பான அரசு தோன்றியது. சூளவம்சம், இராஜவலிய முதலான பாளி, சிங்கள இலக்கியங்கள் அவ்வரசின் படை வீரர்கள் நிலைகொண்டிருந்த இடங்களாக மன்னார் பட்டினம், மாதோட்டம், கோண, பதி மாவட்டங்கள், புலைச்சேரி, வலிகாமம், ஊர்காவற்றுறை முதலான இடங்களைக் குறிப்பிடுகின்றன. இவ்விடங்கள் சில சமகாலத்திலும் பிற்காலத்திலும் துறைமுகங்கள், கோட்டைகள் இருந்த இடங்களாகக் காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக இரண்டாம் இராசாதிராச சோழனது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவராயன் பேட்டை மற்றும் திருவாலங்காட்டு கல்வெட்டுக்கள்  வட இலங்கை மீது படையெடுத்த சோழப் படை வீரர்கள் மட்டிவாள், ஊராத்தோட்டை, வலிகாமம், மாதோட்டம் ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்த படை வீரர்களையும், யானைகளையும் சிறைப்பிடித்து தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்றதாக கூறுவதை குறிப்பிடலாம். இவற்றுள் ஊர்காவற்றுறை, மாதோட்டம் ஆகிய இடங்களில் போர்த்துக்கேயர் கட்டிய கோட்டைகள் உள்ளன. மட்டிவாள் என்ற இடம் தற்போது பூநகரியிலுள்ள மட்டுவிலைக் குறிப்பிடுகின்றது. இவ்விடத்தில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் மீளமாற்றி அமைக்கப்பட்ட  பூநகரிக் கோட்டை அமைந்திருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. 

fort

ஆகவே தற்போதைய யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தில் அந்நியர் ஆதிக்கம் நிலவியதன் அடையாளமாக இருப்பினும் இவ்விடத்தில் கோட்டை கட்டுவதற்கு பொருத்தமான  இடமாக போர்த்துக்கேயர்  தெரிவு செய்தமைக்கு  அவ்விடத்தின் பாரம்பரிய வரலாற்றுப் பின்னணியும் அவர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போது இவ்விடம் யாழ்ப்பாண அரசின் மேலாதிக்கத்தின் கீழ்  இருந்தமையும்  முக்கியமான காரணங்கள் என்பதில் சந்தேகமில்லை.  பண்டு தொட்டு கடல் சார் வாணிபத்தில் முக்கிய கேந்திர மையமாக விளங்கிய இவ்விடம் யாழ்ப்பாண அரசின் மேலாதிக்கத்திற்கு வருவதற்கு முன்னர் சோழர் ஆட்சியில் அவர்களின் வணிக மையமாகவும்  பாதுகாப்புத்  தளமாகவும் இருந்திருக்கலாம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன. இலங்கையில் உள்ள புராதன இந்து ஆலயங்கள் பற்றி ஆராந்த பேராசிரியர் சி. பத்மநாதன் சோழர் கால ஆலயங்களில் கருங்கற்களைப் பயன்படுத்திய போது யாழ்ப்பாண அரசர்கள் சுண்ணாம்புக் கற்களைப் பயன்படுத்தியே ஆலயங்களை அமைத்ததாகக் கூறுகின்றார். யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருவகைக் கற்களையும் பயன்படுத்தி கட்டப்பட்டமைக்கான அழிபாடுகள் பரந்தளவில் காணப்படுகின்றன. 1980 களில் கோட்டை வாசல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கி. பி. 11 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க் கல்வெட்டு இங்கிருந்த ஆலயம் ஒன்றுக்கு இராஜேந்திர சோழ மன்னன்  தானம் வழங்கிய செய்தியைக் கூறுகிறது. கோட்டை அழிபாடுகளிடையே கண்டுபிடிக்கப்பட்ட கருங்கல்லால் கட்டப்பட்ட இந்து  ஆலயங்களின் அழிபாடுகளின் கலைமரபு சோழர் கலை மரபைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. கோட்டையின் பழைய பெயரான ஐநூற்றுவன் வளவு   இலங்கையில் சுயாட்சி கொண்ட நகரங்களை உருவாக்கிய சோழர்கால ஐநூற்றுவன் என்ற வணிகக்கணத்தினை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது சோழர் காலத்தில் கோட்டைப் பிரதேசம் முக்கியமான துறைமுக நகராக வளர்ச்சியடைந்ததைக் காட்டுகிறது. இப்பின்னணியில் நோக்கும் போது கோட்டையில் கிடைத்து வரும் கருங்கல்லாலான ஆலய அழிபாடுகளை சோழர் காலத்தில் இங்கிருந்த ஆலயங்களாகக் கொள்வது பொருத்தமாகவிருக்கலாம்.

யாழ்ப்பாணக் கோட்டையில் கிடைத்த ஆதாரங்களில் கணிசமானவை யாழ்ப்பாண அரசு காலத்திற்குரியவை. இங்கு கிடைத்த நாணயங்களில் யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்ட சேது நாணயங்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுண்ணக்கல்லாலான ஆலய அழிபாடுகள் யாழ்ப்பாண அரசு காலத்தில் கட்டப்பட்டவையாக கருத இடமுண்டு. யாழ்ப்பாண அரச காலம் தொடர்பாக தோனறிய யாழ்ப்பாண வைபவமாலை போன்ற தமிழ் இலக்கியங்களில் யாழ்ப்பாண அரசகாலக் கோட்டை பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண அரசின் மீதான செண்பகபெருமாள் படையெடுப்பு பற்றிக் கூறும் கோகிலசந்தேஸய என்ற சிங்கள இலக்கியம் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த காவலரண்கள்,கோட்டைகள் பற்றியும் கூறுகிறது. தென்னிலங்கையில் கொட்டகம என்ற இடத்தில் கிடைத்த யாழ்ப்பாண மன்னன் வெளியிட்ட கல்வெட்டில் பொங்கொழில் சிங்கை நகர் என்ற குறிப்புக் காணப்படுகிறது.இதிலிருந்து கடற்கரை சார்ந்த இடத்தில் யாழ்ப்பாண அரசின் முக்கியமான நிர்வாக மையம் இருந்துள்ளமை தெரிகிறது. கடல் வழியாக யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்த போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசின் படைகளுடன் போரிட்ட இடங்களில் தற்போதைய கோட்டை அமைந்துள்ள பண்ணைத்துறை முக்கியமாகக் இடமாகக் குறிப்பிடப்படுகிறது. நல்லூரை யாழ்ப்பாண அரசின் தலைநகராக போர்த்துக்கேய ஆவணங்கள் குறிப்பிட்டாலும் அவர்களின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் பண்ணைத் துறைமுகத்தை மையப்படுத்தியே நடந்ததாகக் கூறுகின்றன. பண்ணை என்ற சொல்லுக்கு மரக்கலன்கள், பண்டங்கள், களஞ்சியப்படுத்தும் இடங்கள் எனும் பதங்கள் உள்ளன. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் வந்த போது கோட்டை அமைந்த பிரதேசம் பண்ணைத் துறை என அழைக்கப்பட்டிருப்பது கோட்டைக்கும் யாழ்ப்பாண அரசிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததைக் காட்டுகின்றது. இதனால் யாழ்ப்பாண அரசு காலத்தில் களிமண், மரம் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கோட்டையையே போர்த்துக்கேயரும், பின்வந்த ஒல்லாந்தரும் கற்களைப் பயன்படுத்தி தமது நாடுகளின் கலைமரபுகளில் கட்டினர் எனக் கூறலாம். இதை கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகள் எதிர்காலத்தில் மேலும் உறுதி செய்யலாம்.

உசாத்துணைகள்

  1. இந்திரபாலா,கா., 1972, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், கண்டி.
  2. பத்மநாதன்,சி., 2004, ஈழத்து இலக்கியமும் வரலாறும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
  3. Abeysinghe, T,.1966, Portuguese Rule in Ceylon 1594- 1612, Colombo.
  4. Codrington, H.W. 1924, Coins and Currency, Memoirs of the Colombo Museum, Series A, No.3, Colombo.
  5. Conigham,Robin.,2002, “Beyond and Before the Imperial Frontiers: ERLY Historic Sri Lanka and the Origins of Indian Ocean Trade” Man and Environment, Journal of the Indian Society for Prehistoric and Quaternary Studies;Vol.XXVII,No.1:99-107.
  6. Culavamsa, 1953, Geiger. W. [E.D.], Ceylon Government Information Department, Colombo.
  7. Davis,C.E., Coningham, R.A.E., Gunawardhana, Pushparatnam, PSchmit, A, A. &Manuel,M.J. (2019) The Antiquity of Jaffna Fort: New Evidence from post-disaster archaeological investigations in Northern Sri Lanka. Antiquity 93(368): e13.
  8. Mahavamsa, 1950, (E.D.) Geiger, W., The Ceylon Government Information Department, Colombo.
  9. Paranavitana, S., 1970, Inscription of Ceylon: Early Brahmi Inscrip¬tions, The Department of Archaeology Ceylon, Colombo, I.
  10. Pushparatnam, P., 2010, “Hindu Ruins Found in Jaffna Fort” in VaralāṛṛuUlā, (ed) Nadaraja R.,C. Published by CivattamiḷMāṇiṭaviyalKaḷakam, Jaffna. 
  11. Pushparatnam, P., 2014, commercial Ties Between Northern Sri Lanka and Foreign Countries up to 13th Century AD” in National Archaeological Symposium,  Department of Archaeology, Colombo
  12. Pushparatna, P., 2014, “Jaffna-Multi Lateral Views”, in Essay on History Culture and Foreign Relations: Festschrift for Professor S.Pathmanathan [eds], MahindaSomathilake and Wimalasena,, Colombo.
  13. Pushparatnam, P.,2014, Tourism and Archaeological Heritage Monuments in Northern Sri Lanka, Colombo.
  14. Pushparatnam, P., 2017, “Nallur- The Capital of Jaffna Kingdom” in Commemoration Volume in Honour of Rev. Prof. HangurankethaDheerananda : 373- 387
  15. Ragupathy, P., 1987, Early Settlements in Jaffna: An Archaeological Survey, Mrs.Thillimalar Ragupathy, and Madras.
  16. Rasanayagam, C., 1926, Ancient Jaffna, A.S., Everyman’s Publishers Ltd, Madras.
  17. Queroz,FrFernaode, 1930, The Temporal and Spiritual Conquest of Ceylon, Fr. S.G. Perera, Colombo.
  18. Sitrampalam, S.K., 1990, Proto Historic Sri Lanka: An Inter-disciplinary Perspective in Journal of the Institute of Asian Studuies, VIII [1]: 1-8.

தொடரும்.

https://ezhunaonline.com/jaffna-fort-3/?fbclid=IwAR2b7733XOoVYEaEv_ZATgIIRcBn86BRgAowh722dcFCXR02Aa15JOb-MHA

ஒலிவடிவில் கேட்க

 
 

ஒலிவடிவில் கேட்க

 
  • spotify.png
 
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
    • என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
    • வஞ்சகத்தையும் கபடத்தனத்தையும் பற்றி எழுதுவதற்கும் ஒரு யோக்கியதை வேணுமெல்லோ என்று பட்சி  ஒன்று சொல்லுது........🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.