Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராமக்கோட்டுச் சந்தி மதவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4258.jpg
மழை பெய்து
வெள்ளம் வந்தால் அதை கடலுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான வாய்க்கால் எங்கள் ஊரிலே இருந்தது. எங்கள் ஊர் கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த மதவின் கீழாக அந்த வெள்ளவாய்க்கால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கனமழை பெய்தால் அந்த வெள்ளவாய்க்காலில் வெள்ளம் கரைபுரளும். பலவிதமான பொருட்கள் அந்த வெள்ளத்தில் மிதந்து வரும். கூடைகள், பெட்டிகள், பாய்கள் என்று ஏகப்பட்ட பொருட்களுடன் சிலவேளைகளில் கோழிகள், பாம்புகளைக் கூட அந்த வெள்ள ஓட்டத்தில் காணலாம். கோடைகளில் தண்ணீர் இன்றி வாய்க்கால் காய்ந்திருக்கும். உடைந்த போத்தல் துண்டுகள், கற்கள் என பல குப்பைகள் அங்கே குவிந்திருக்கும்.

வெள்ளவாய்காலின் மேலே இருந்த சந்தி மதவை எப்பொழுது பார்த்தாலும் அழுக்காகவே தெரியும். எங்கள் ஊர் இளம் காளையர்கள் அதாவது கட்டுக்குள்ளே அடங்காத காளைகள் ஒரு காலை மடித்து வைத்து மதிலுக்கு முண்டு கொடுத்துக் கொண்டும் மறு காலை நிலத்தில் ஊன்றியும் ஆட்சி செய்யும் பீடம் அது. காலையில் எட்டில் இருந்து ஒன்பது மணிக்கும், பின்னர் மாலை நான்கு மணியில் இருந்தும் அந்த மதவில் காளைகளின்அரச தர்பார் அமர்க்களமாக இருக்கும். ஊரில் இருந்த இரண்டு பிரதான பெண்கள் பாடசாலைகளே அவர்களது அரச தர்பாருக்கான காரணிகள்.

காலையில் பாடசாலை கடைசி பஸ் போனதன் பின்னர் காளையர் கூட்டம் மெதுவாக கிழக்கு நோக்கி சந்தாதோட்டத்திற்கோ, அல்லது மேற்கு நோக்கி கூவிலுக்கோ நகரும் . சந்தாதோட்டமும், கூவிலும் கள்ளுக்குப் பேர்போன எங்கள் ஊர் கிராமங்கள்.

மாலை நான்கு மணிக்கு மீண்டும் மதவில் களை கட்டும் காளையர்களின் தர்பார் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கால நேரத்தை முடிவு செய்து கொள்ளும். கருத்துக்களில் உடன்பாடு ஏற்படாமல் அவர்களுக்குள் வாக்குவாதங்களுடன் சிலவேளைகளில் அடிதடிகளும் அங்கே இடம் பெறுவதும் உண்டு. என்னதான் வாக்குவாதங்களும், கைகலப்புகளும் அவர்களுக்குள் ஏற்பட்டாலும் அடுத்த நாள் காலையில் எதுவுமே நடக்காத மாதிரி ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் மதவில் இருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். குடிகாரன் பேச்சு மட்டுமல்ல அவர்கள் சண்டையும் 'விடிஞ்சால் போச்சு' என்பதை அங்கே நான் தெரிந்து கொண்ட ஒரு உண்மை.

இந்த காளையர்கள் கூட்டத்தின் முரட்டுக்காளைதான் கனகலிங்கம். அவன்தான் காளையர்களின் தளபதி. திருமணம் ஆனவன். மற்றவர்களின் காசில் குடித்துக்கொண்டும், மனைவி சமைத்துப் போட மாமியார் வீட்டில் இருந்து உண்டி நிரப்பிக் கொண்டும் உருண்டு திரண்டிருப்பான். ஊரில் இருப்பவர்கள் இவனிடம் எட்டியே நின்றிருந்தனர். பசுமாடுகள் கூட பயம் கொண்டு இவனிடம் இருந்து தள்ளியே நடந்தன. இப்படியானவனிடம் அவள் ஏன் மயங்கினாள் என்பதை இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் பெயர் கோகிலா. பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள். ஒரு சீவல் தொழிலாளியின் மகள். அவளது சமூகத்தில் நான் அறிந்தவகையில் படித்தவர் நாகேந்திரம் மட்டும்தான். அவர், கபொத சதாரணதரத்தில் வெற்றிகரமான சித்திகளைப் பெற்றுவிட்டு சீவல் தொழிலையே செய்ய ஆரம்பித்தார்.

அன்றைய காலத்தில் கபொத சதாரணதரத்துடனேயே அரச வேலைக்குள் சுலபமாக நுளைந்து விடலாம். ஆனால் நாகேந்திரமோ தங்கள் குலத் தொழிலையே செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரிடமே இதைப் பற்றிக் கேட்டேன். சிரித்துக் கொண்டே சொன்னார், 'அரச வேலை எண்டாலும் சுத்தி நிக்கிறவையளுக்கு கூனிக் குறுகி வளைஞ்சு நிக்கோணும். பள்ளிக்கூடத்திலை நான் இருக்கிற வாங்கிலிலை இருக்கவே சங்கடப்படுறாங்கள். வேலை இடத்தில என்ன மரியாதை தருவாங்கள் என்று யோசிச்சுப் பார்த்தன்.குலத் தொழிலுக்கே வந்திட்டன். எனக்கு இது பரவாயில்லை"

அன்று இப்படியான ஒரு நிலமை இருந்தும் தனது மகளை படிக்க வைத்துப் பார்க்க கோகிலாவின் தந்தை கனகனுக்கு ஆசை வந்திருக்க வேண்டும். அல்லது படித்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கோகிலாவுக்கு வந்திருக்க வேண்டும். அவர்களின் அந்த உந்துதல்தான் இன்று கோகிலாவை பத்தாவது வகுப்புவரை கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும். கோகிலாவுடன் இணைந்து பாடசாலைக்குச் செல்ல மேட்டுக்குடி விரும்பவில்லை என்றே நினைக்கிறேன் அவள் தனியாகத்தான் பாடசாலைக்குச் செல்வாள். அதுவே அவளுக்கு பின்னாளில் தொல்லையாகிப் போனது.

பாடசாலை கடைசி பஸ் போன பின் கூவிலுக்கு கள்ளு குடிக்கச் செல்லும் காளையர் கூட்டத்தினரின் கண்களில் கோகிலா அடிக்கடி தனியாகத் தென்பட, காளையர் கூட்டம் சந்தாதோட்டப் பக்கம் கள்ளுக்குப் போவதை விடுத்து கூவிலுக்குப் போவதையே வாடிக்கையாக்கி விட்டது. கோகிலாவை முன்னே விட்டு இவர்கள் பின்னாலேயே போவார்கள். அவள் மருண்டு அடிக்கடி திரும்பிப் பார்க்க "அவள் என்னைத்தான் பார்கிறாள்" என்று காளையர்களுக்குள் பிரச்சனையாகிப் போனது. தலைவனுக்குத்தானே பலம் அதிகம். கனகலிங்கத்துடன் பிரச்சனையை வளர்த்துக் கொள்ள மற்றவர்கள் விரும்பவில்லை. ஆளாளுக்கு ஒதுங்கிக் கொண்டார்கள். இப்பொழுது சந்தி மதவில் கனகலிங்கமும் அவனது வலது கையான சிவாவும்தான் எஞ்சி இருந்தார்கள்.

கூவிலுக்கு போகும் பாதையிலிருந்து வலது பக்கம் திரும்பும் பாதையில் போனால் பாடசாலையின் பின்புற வாசலால் பாடசாலைக்குப் போய்விடலாம். ஆனால் கோகிலாவின் பாதை இப்பொழுது மாறிப் போனது. அவள் வலது பக்கம் திரும்பாமல் நேர் பாதையால் போனாள். அந்தப் பாதையில்தான் கனகலிங்கம் தனது ஆட்சிக்குள் ஒரு பாழடைந்த வீட்டை வைத்திருந்தான். அந்த வீட்டின் காவலனாக சிவா இருந்தான்.

பாடசாலை பதிவேட்டில் கோகிலாவின் வரவு குறைந்து கொண்டு போனது. இதை பாடசாலை நிர்வாகம் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆகவே கனகனுக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்த ஆட்களில்லை. ஆனாலும் கனகனுக்கு ஒருநாள் எப்படியோ விடயம் தெரிந்து போயிற்று. அதன் பிறகு கோகிலாவுக்கு வீடே சிறையானது. காளையர்களுக்கு இது ஒரு சம்பவம் மட்டுமே. எதுவுமே நடக்காததைப் போல கனகலிங்கமும் சிவாவும் சந்தி மதவில் இருந்து வழமையான தங்களது வேலைகளைத் தொடர்ந்தார்கள். மேட்டுக்குடி அதனோடு சேர்ந்து மெகா குடி, சண்டியர் என பல கவசங்கள் அவர்களை காத்து நின்றன. தங்களை யாருமே எதுவும் கேட்க முடியாது,அசைக்க முடியாது என்ற அவர்களின் இறுமாப்பு ஒருநாள் இத்துப்போனது.

அன்று சனிக்கிழமை. சந்தி மதவில் சிவா மட்டுமே தனியாக அமர்ந்திருந்தான். மதவின் எதிர்த்திசையில் இருந்த நாகலிங்கம் தேனீர் கடையின் முன்பாக இருந்த தூணில் தனது சைக்கிளை சாத்தி வைத்து விட்டு மடித்துக் கட்டிய சாரத்துடன் நாகேந்திரம் கைகட்டி நின்றார். அவர் கனகலிங்கத்தைத்தான் எதிர்பார்த்து நிற்கின்றார் என்கிற விடயம் மதவில் அமர்ந்திருந்த சிவாவின் சிற்றறிவுக்கு புரியாமல் போயிற்று. நேரம் போனதே தவிர கனகலிங்கம் சந்திக்கு அன்று வரவேயில்லை.

காத்திருந்து சலித்துப்போன நாகேந்திரம், சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் மதவின் முன் நிறுத்தினார். சைக்கிளில் இருந்தபடியே இடது காலை மதவில் ஊன்றி, "சைக்கிளிலே ஏறு" என்றார். சிவா இதை எதிர்பார்க்கவில்லை. சைக்கிளின் முன் சில்லு அவனது இடது புறமும் நாகேந்திரத்தின் கால் வலது புறமும் அவனை அசைய விடவில்லை. போதாதற்கு நாகேந்திரம் தனது மடியில் சொருகி இருந்த பாளை சீவும் கத்தி சிவாவுக்கு மேலும் பயத்தை கூட்டியிருக்கலாம். மதவில் இருந்து வெள்ள வாய்காலுக்குள் குதித்து ஓடிவிடலாம் என்ற அவனது எண்ணத்தை வாயக்காலில், வெளியே நீட்டிக் கொண்டிருந்த உடைந்த போத்தல் துண்டுகள் தடுத்திருக்கும். அத்தோடு சேர்த்து காலையில் சில்வா பேக்கரியில் பாண் வாங்க வந்தவர்களின் பார்வைகள் சந்தி மதவுப் பக்கமாகத் திரும்பியிருந்ததால் அது தனியாக சண்டியர் சிவாவிற்கு சங்கடத்தை அதிகரித்திருந்திருக்கும். எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பாரத்திருப்பான் போலும், பேசாமல் சைக்கிளில் ஏறிக்கொண்டான். ஒரு நண்பனை ஏற்றிக்கொண்டு செல்வது போலவே நாகேந்திரம் சிவாவை சைக்கிளில் வைத்து சந்தாதோட்டம் பக்கமாக சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் சைக்கிள் பாரில் இருந்து கொண்டு எத்தனை தெய்வங்களை தனக்கு துணையாக சிவா அழைத்திருப்பான் என்பது யாருக்குமே தெரியப்போவதில்லை.

அன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வீதியில் ஆரவாரம் கேட்டது. சந்தாதோட்டத்து ஆண்கள் எல்லாம் திரண்டு வந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஊர்வலம் போகிறார்கள் என முதலில் நினைத்தேன். கொஞ்சம் கூர்ந்து பார்த்த பொழுதுதான் தெரிந்தது ஊர்வலத்தின் முன்னால் சிவா வந்து கொண்டிருந்தான். அவன் நடந்து வந்தான் என்று சொல்வது தவறு. அவன் தவழ்ந்து வந்தான் என்பதே சரியாக இருக்கும். ஆளாளுக்கு முறை வைத்து அடித்தார்கள், உதைத்தார்கள். "என்னாலே இதுக்கு மேலே நடக்க முடியாது" என்று சொன்ன சிவாவின் மடியை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து கிராமக்கோட்டுச் சந்தியில் போட்டு ஒரு கதகளி ஆடிவிட்டுப் போனார்கள்.

கட்டியிருந்த சாரம் கிழிந்து சண்டியர் என்ற சாயம் அழிந்து சந்தி மதவில் நீண்ட நேரம் இருந்த சிவாவை யாருமே கண்டு கொள்ளவில்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு சந்தி மதவு எதுவித தொந்தரவும் இல்லாது அமைதியாக இருந்தது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்ற நகரசபையும் மதவுக்கு வெள்ளை வர்ணம் அடித்து விட்டிருந்தது.

"
றோட்டிலைதான் ஆம்பிளைகள் அடிச்சாங்கள். நாகேந்திரம் கொண்டே விட்டவுடனேயே அங்கையிருந்த பொம்பிளைகளெல்லாம் விளக்குமாறாலை அடிச்சாளுகள்" என்று தனது சகாக்களுக்கு சிவா சொன்னது மெதுவாக வெளியே கசிந்து கொண்டிருந்தது. இது நடந்தன் பின்னர் கனகலிங்கத்தை யாருமே காணவில்லை. ஊரை விட்டே போய்விட்டான் என்று கதை உலாவியது. ஆனால் பகல் முழுதும் தாய் வீட்டில் அடைந்து கிடந்து விட்டு இரவானதும் தனது மனைவி வீட்டுக்கு கனகலிங்கம் போய் வருவது இரகசியமாகவே இருந்தது.

ஒரு மாதம் போயிருக்கும். ஒரு காலைநேரம், சந்தாதோட்டத்து குப்பை மேட்டில் பலத்த அடிகாயங்களுடன் மயக்கமாகக் கிடந்த கனகலிங்கத்தை அவனது மனைவியும், மச்சானும் சோமசெற் வாடகைக் காரில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிக்கொண்டு போனார்கள்.

கிராமக் கோட்டுச் சந்தி மதவு வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து அமைதியாக இருந்தது.

(
ஒரு உண்மைச் சம்பவம். பெயர்களில் மட்டும் சில மாற்றங்கள்)

 

  • கருத்துக்கள உறவுகள்

இரவிலே மலர்ந்து கருக்கலில் வாடிப்போகும் மலர்கள்போல் எவ்வளவோ சம்பவங்கள் அறிந்தும் அறியாமலும் அன்று அரங்கேறி இருக்கின்றன.......!  

நன்றி கவி. அருணாசலம்......! 

  • கருத்துக்கள உறவுகள்

பல கிராமங்களில் இப்படி நடப்பதுண்டு தலைவர் காலத்துக்கு முன். தற்போது வேறு வடிவங்களில்  போதை மயக்கத்தில் வாள் கத்தி பொல்லு கோடாரி ...கொண்டு நடக்கிறது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.