Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பிணைப்பும்  இனப்பிரச்சினையும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை – இந்தியாவுக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பிணைப்பும்  இனப்பிரச்சினையும்! நிலாந்தன்.

 

“இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை-இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓர் இந்திய ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான தனது இரு நாள் விஜயத்தைக் குறித்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தலைவர்கள் இந்தியாவிற்கு போகும்பொழுது இதுபோல கவர்ச்சியான பல பிரகடனங்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவை செயலுக்கு வந்ததில்லை. ஏனெனில் யதார்த்தத்தில் இலங்கைத் தீவுக்குள் சீனா கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு நிற்கப் போகின்றது. அம்பாந்தோட்டையில் 99 ஆண்டு கால குத்தகையை அது பெற்று விட்டது. துறைமுகப் பட்டினத்திலும் சீனா நிரந்தரமாகக் காணப்படும். இந்நிலையில் இந்தியாவுடனான உறவில் 25 ஆண்டுகள் என்று கூறப்படுவதை எப்படிப் பார்ப்பது?

ரணிலுடைய விஜயத்தின் முடிவில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்த தகவல்களின்படி, இந்தியா மேலும் புதிய பிணைப்புத் திட்டங்களில்- கனெக்ரிவிற்றி-ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.இப்பிணைப்புத் திட்டங்களை இலங்கையே முன்மொழிந்ததாகவும் கருதப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே வடக்குக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள் என்று கூறித் தொடக்கப்பட்ட பலாலிக்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான விமான போக்குவரத்து,காங்கேசன் துறைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான கடல் வழி, மன்னருக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான கடல் வழி,யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாச்சார மண்டபம் போன்ற விடயங்களில் எதிர்பார்த்த வேகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியவில்லை. பலாலி விமான நிலையத்தின் ஓடு பாதை சிறியது. அதனால் அங்கே சிறிய விமானங்கள்தான் தரையிறங்கலாம். அச்சிறிய விமானங்களில் 20 கிலோ ஏடையுள்ள பொருட்களைத்தான் கொண்டு வரலாம். இதனால் வர்த்தகர்கள் அந்த சேவையை பயன்படுத்த மாட்டார்கள்.புலம்பெயர்ந்த தமிழர்களும் அதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். எனவே அது ஒரு முழுமையான கனெக்டரிவிட்டி அல்ல.

அப்படித்தான் கடல் வழிப் போக்குவரத்துக்களும். அவை யாவும் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக “திருநாளைப்  போவாரின்” கதைதான். அடுத்தது கலாச்சார மண்டபம் அதை கட்டித் திறந்துமாயிற்று.ஆனால் அதனை நிர்வாகிப்பதற்கு உரிய கட்டமைப்புகள் இதுவரையிலும் ஏற்படுத்தப்படவில்லை.அதை யாரிடம் நிர்வகிக்க கொடுப்பது என்ற விடயமும் இதுவரையிலும் முடிவெடுக்கப்படவில்லை. இப்படித்தான் இருக்கிறது இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள்.

இந்நிலையில் புதிய பிணைப்புத் திட்டங்களைக் குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தின் போது உரையாடப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அல்லது ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஏன் அதிகம் உரையாடப்படுகிறது? ஏனெனில் இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கு அருகே இருப்பதான இலங்கைத் தீவின் புவியியல் அமைவிடந்தான் அதற்கு காரணம். இந்த புவியியல் அருகாமை-geographical proximity-காரணமாகத்தான் இந்தியா ஈழப்போரில் தலையிட்டது. ஈழப் போர் தமிழகத்துக்குள் நுழைந்தது.அது பழைய கதை. புதிய கதை என்னவென்றால்…. தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள் என்று கூறி கடந்த 14 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட மேற்கண்ட திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.அல்லது இதுவரை தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் புதிய பிணைப்பு திட்டங்களின் நோக்கம் என்ன?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவியியல் அருகாமை என்பது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்; சிங்கள மக்களுக்கும் பொருந்தும். ஆனால் பண்பாட்டு அருகாமை,இன அருகாமை என்று பார்க்கும் பொழுது தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவியியல் அருகாமைதான் அதிகம் இரத்தோட்டமானது;நெருக்கமானது.அந்த அருகாமை ஈழப் போரின் விளைவாக இப்பொழுது அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக ஈழப்போரின் முடிவுக்கு பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அருகாமை என்பது ஒப்பீட்டளவில் அதிகம் சோதனைக்கு உள்ளாகி வருகிறது. எனினும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான புவியியல் அருகாமைதான் இலங்கை இன விவகாரத்தில் இந்தியா எப்பொழுதும் தலையிடுவதற்குரிய பிரதானமான பிடி ஆகும்.

அதேசமயம் வடஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பண்பாட்டு பிணைப்புகளைக் குறித்த உரையாடலும் உண்டு. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக இருப்பவரும் அமைச்சரவை அந்தஸ்தைப் பெற்றவருமாகிய மிலிந்த மொரோகொட அவ்வாறு பௌத்தத்துக்கும் வட இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்புகளை புதிய திட்டங்களின் மூலம் ஒப்பிட்டுளவில் நெருக்கமானதாக்க முயற்சிக்கின்றார். ஆனால் இங்கே ஒரு வரலாற்று அனுபவத்தை சுட்டிக் காட்ட வேண்டும்.புவியியல் அருகாமை என்று பார்க்கும் பொழுது,அது தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் பொருந்தும். எனினும் கடந்த 14 ஆண்டுகளில் கொழும்பில் இருந்த சிங்கள ஆட்சியாளர்கள் அந்த புவியியல் அருகாமையை அதிகம் சோதனைக்கு உள்ளாக்கி வந்திருக்கிறார்கள்.சீனாவுக்கு அம்பாந்தோட்டையை கொடுத்தமை, துறைமுகப் பட்டினத்துக்கு அனுமதி வழங்கியமை போன்றவற்றின் மூலம் இச்சிறிய தீவை சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றியிருக்கிறார்கள். இந்த விடயத்தில் சிங்களத் தரப்பு இந்தியாவுடன் தனது புவியியல் அருகாமையைப் போற்றவில்லை; மதிக்கவில்லை; கொண்டாடவில்லை.அதைச் சோதனைக்குள்ளாக்கும் விதத்தில்தான் நடந்திருக்கிறது.

அதேசமயம்,தமிழகத்தில் இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலை உள்ளிட்ட படுகொலைகளின் விளைவுகள்,  மற்றும் இறுதிக்கட்டப் போரில் கலைஞர் கருணாநிதி நடந்து கொண்ட விதம், இந்தியா நடந்து கொண்ட விதம் போன்றவற்றின் திரட்டப்பட்ட விளைவாக, ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்புகளை அதிகம் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றன.

எனினும் அதற்காக தமிழ் மக்கள் சீனாவை நோக்கிப் போகவில்லை. அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் சீனாவை நோக்கிப் போவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு.புவியியல் அருகாமை மட்டுமல்ல, பண்பாட்டு அருகாமையும் இல்லை. இனத்துவ அருகாமையும் இல்லை. அருகில் உள்ள தமிழகத்தைத் தாண்டி சீனாவை நோக்கி செல்வதில் தமிழ் மக்களுக்கு அடிப்படையான உளவியல் தடைகள் உண்டு. புவியியல் தடைகளும் உண்டு. மேலும் தமிழகத்தில் இதுவரையிலும் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள். அவர்களில் எவருமே திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை கேட்டோ, அல்லது பலாலி விமான நிலையத்தை திறக்குமாறு கேட்டோ, அல்லது காங்கேசன் துறையிலிருந்து படகை விடச் சொல்லிக் கேட்டோ,அல்லது கலாச்சார மண்டபத்தைக் கேட்டோ தீக்குளிக்கவில்லை. எனவே அவர்களுடைய சாம்பலைக் கடந்து சீனாவை நெருங்க ஈழத் தமிழர்களால் முடியுமா?

சீனா யுத்த காலத்திலும் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நின்றது. இப்பொழுது ஐநாவிலும் இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கின்றது. அது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவு.ஆனால் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலானது இன அருகாமை; மொழி அருகாமை; பண்பாட்டு அருகாமை.இவற்றைப் பயன்படுத்தித்தான் இந்தியா இனப்பிரச்சினையில் தலையிட்டது.முடிவில் இந்தியா அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவின் அடிப்படையில் ஒரு உடன்படிக்கையை எழுதிக் கொண்டது.

ஈழத் தமிழர்கள் இந்தியாவோடான தமது புவியியல் அருகாமையைத் தாண்டி சீனாவை நெருங்கவில்லை. ஆனால் அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் தூரத்தில் இருந்த சீனாவை அம்பாந்தோட்டையில் கொண்டு வந்து அமர்த்தி விட்டார்கள். கொழும்புத் துறைமுகத்தில் கொண்டு வந்து அமர்த்திவிட்டார்கள். எனவே புவியியல் அருகாமை என்று பார்க்கும் பொழுது சிங்கள மக்கள் இந்தியாவுடனான புவியியல் அருகாமையை பொருட்படுத்தவில்லை; மதிக்கவில்லை.

இவ்வாறான ஒரு புவிசார் அரசியல் பின்னணியில்,இந்தியா புதிய பிணைப்புத் திட்டங்களைக் குறித்து ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இந்த பிணைப்பு திட்டங்களில் முக்கியமானவை தரைவழிப் பாலம் ஒன்றை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை பரிசீவிப்பது; இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மின்சார விநியோகக் கம்பிகளைத் தொடுப்பது; எரிபொருள் விநியோகக் குழாய்களைத் தொடுப்பது…போன்றன அடங்கும்.ஆனால் இப்பிணைப்புத் திட்டங்கள் யாவும் பொருளாதார மற்றும் வர்த்தக அடிப்படையிலானவை. கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையிலான,அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் பிணைப்புகள். இப்பிணைப்புத் திட்டங்களின் மூலம் கொழும்பு டெல்லியை நெருங்கி செல்ல முடியும். இப்பிணைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பதன்மூலம் இந்தியா இனப்பிரச்சினை தொடர்பில் தன்மீது அழுத்தம் கொடுப்பதை இலங்கை தவிர்க்க முடியுமா?

https://athavannews.com/2023/1341108

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எப்போது? ரணில் பயணத்தால் அதானிக்கு மட்டும்தான் லாபமா?

அதானிக்கு மட்டும்தான் லாபமா?

பட மூலாதாரம்,TWITTER/GAUTAM ADANI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 22 ஜூலை 2023

இலங்கை மற்றும் இந்திய நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தன.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இந்தியாவிற்கான விஜயத்தை நேற்று முன்தினம் மேற்கொண்டிருந்தார்.

ரணில் விக்ரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த விஜயத்தின் போது, பல்வேறு திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.

 

அத்துடன், அதானி குழுமத்தின் தலைவர் கௌத்தம் அதானியையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

அதானி - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம், காற்றாலை மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இலங்கையில் அதானி குழுமம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ காலப் பகுதியில் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், அதானி குழுமத்தின் அதிகாரிகள் வடக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்கள்.

இந்த பின்னணியிலேயே, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையிலான படகு சேவைகளை ஆரம்பித்தல், விமான சேவைகளை துரிதப்படுத்தல், தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான குழாய் மின்சக்தி இணைப்பு, இந்திய ரூபாவில் வணிகத்தை மேற்கொள்ளுதல், யுபிஐ முறையலான பணப் பரிமாற்றம், இரு நாடுகளுக்கும் இடையிலா தரைவழி இணைப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு பற்றி பேச்சு

அதானிக்கு மட்டும்தான் லாபமா?

பட மூலாதாரம்,PMD SRI LANKA

அதேபோன்று, இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் வாழும் இந்திய வம்வாசளித் தமிழர்களின் மேம்பாட்டிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 ஆயிரம் மில்லியன் ரூபாயை வழங்கவுள்ளதாக இந்திய விஜயத்தின் இணைந்துக்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் மலையக மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் மலையகத்திற்கான பல்கலைக்கழகம் ஆகியன இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல்கள் வழமையான விடயங்களையே பிரதிபலிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

'இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த இனப் பிரச்னை இந்தியாவுக்கு துருப்புச் சீட்டு'

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய சிரேஷ்ட பத்திரிகையாளர்களின் பார்வை எவ்வாறு அமைகின்றது என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் சிரேஷ்ட பத்திரிகையாளர் பாரதி ராஜநாயகம் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''இந்த விஜயமானது எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்கள்தான் வந்திருக்கின்றன. புதிதாக ஒன்றும் நடக்கவில்லை என்று தான் நினைக்கின்றேன். திரும்பவும் 13வது திருத்தத்தை பற்றியும், மாகாண சபை தேர்தல் நடக்க வேண்டும் என்பதை தான் மோடி சொல்லியிருக்கின்றார். ரணில் விக்ரமசிங்க, இந்திய செல்வதற்கு முன்னர் தமிழ் கட்சிகளை அழைத்து சந்திப்புகளை நடத்தியிருந்தார். அந்த பேச்சுவார்த்தையில் தன்னுடைய தீர்வு என்னவென்பதையும் அவர் சொல்லியிருக்கின்றார். தமிழர் பிரச்னையில் ஒரு நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றேன் என்பதை காட்டுவதற்கு அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தியிருக்கின்றார். இனப் பிரச்னையை பொருத்தவரை அதற்கு மேல் எந்தவொரு அழுத்தங்களோ நெருக்கடிகளோ அங்கு இருக்கவில்லை.

மோடியின் தேவைகள் என்ன, அவரின் எதிர்பார்ப்பு என்னவென்பதையும் ரணில் விக்ரமசிங்க நன்கு புரிந்துக்கொண்டிருக்கின்றார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு முற்பட்டுள்ள ஒரு தன்மை இருக்கின்றது. சீன அதிகளவில் கால் பதிக்கின்றமையினால், அதற்கு எதிராக ஒரு தங்களுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதை இந்தியா விரும்புகின்றது. அந்த ஒப்பந்தங்களும், அங்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் அதை ஓரளவுக்கு வெளிப்படுத்தியுள்ளன. வடக்கு, கிழக்கில் இந்திய ஏதோ ஒரு வகையில் தன்னுடைய மேலாதிக்கத்தையோ அல்லது பிரசன்னத்தையோ காட்ட முற்படுகின்றது. மோடிக்கும் அது தான் தேவை என்பதை ரணில் விக்ரமசிங்க நன்கு உணர்ந்திருக்கின்றார்.அதானிக்கு மட்டும்தான் லாபமா?

பட மூலாதாரம்,PMD SRI LANKA

இனப் பிரச்னை என்பது ஒரு துருப்பு சீட்டு. அதாவது 13வது திருத்தத்தை ஒரு துருப்பு சீட்டாக தான் பயன்படுத்துகின்றார். பிராந்திய மற்றும் பொருளாதார ரீதியான எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்வதன் ஊடாக, இனப் பிரச்னை நெருக்கடியிலிருந்து ஓரளவுக்கு தன்னால் விடுப்பட முடியும் என ரணில் விக்ரமசிங்க கருதியிருக்கின்றார். 13வது திருத்தத்தையோ நடைமுறைப்படுத்துவதோ அல்லது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதோ ரணில் விக்ரமசிங்கவின் எண்ணம் கிடையாது.

"ஜனாதிபதி தேர்தலை நடத்த ரணில் விருப்பம்"

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக முயற்சிக்கின்றார் என்றே தெரிகின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் கதைத்துள்ளார். ஜனவரியில் தேர்தலை நோக்கி செல்வதாக தெரிகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவர் எதுவும் செய்யமாட்டார்.

ஏனென்றால், சிங்கள மக்கள் மத்தியில் அது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும். ஒரு காலத்தை கடத்துவதற்கு இதை பயன்படுத்திக் கொள்கின்றார். இந்தியாவை சமாளிப்பதற்கு இதை பயன்படுத்துகின்றார். இதனை ராஜதந்திர ரீதியாக ரணில் விக்ரமசிங்க பயன்படுத்திக் கொள்கின்றார் என நான் நினைக்கின்றேன்" என அவர் பதிலளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான கூடுதலான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் தமிழகத்துடன் இணைந்ததாகவே இருந்தன. குறிப்பாக குழாய் மின்சக்தி, படகு போக்குவரத்து, விமான சேவைகள், இந்திய - இலங்கை தரைவழி போக்குவரத்து போன்றவை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தன. இது தொடர்பில் உங்களின் பார்வை என்ன?

''இலங்கையின் வடக்கையும், தமிழகத்தையும் இணைத்து வைத்திருப்பதன் ஊடாக, வடக்கு மற்றும் கிழக்கில் தங்களுடைய பிரசன்னத்தை அதிகரிப்பதற்கான தன்மை இந்தியாவிற்கு இருக்கின்றது. அதற்காக ஓரளவு ரணில் விக்ரமசிங்கவும் இணங்கி போவதை போன்று தெரிகின்றது. பொருளாதார ரீதியாக கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தை அதிகரிக்கும் போது வடக்கு கிழக்கு பகுதிகளிலும், நாடு முழுவதும் உல்லாச பயணிகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது. வர்த்தக ரீதியான தொடர்புகள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான தேவையொன்று இருக்கின்றது. அதுவும் ஒரு காரணம். இந்த காரணங்களினால் ரணில் விக்ரமசிங்க இணங்கி இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்." என கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பிலும் அவர், பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.

அதானிக்கு மட்டும்தான் லாபமா?

பட மூலாதாரம்,FB/BHARATI RAJANAYAGAM

 
படக்குறிப்பு,

பாரதி ராஜநாயகம், இலங்கை பத்திரிகையாளர்

''பாலம் அமைப்பது தொடர்பில் சரியாக கூற முடியாது. ஏனென்றால், அது உடனடியாக நடைபெறும் ஒன்றல்ல. கப்பல் போக்குவரத்து கூட இழுபறியில் நிற்கின்றது. நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேல் சொல்லப்பட்டாலும், அது இழுபறியில் உள்ளது. படகு சேவை தொடர்பில் காலத்திற்கு காலம் வெவ்வேறு கருத்துக்கள் வருகின்றன. இரு தரப்பினரும் சரியான தேதியை கூட குறிப்பிடவில்லை. விமான போக்குவரத்து மாத்திரம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து விமான போக்குவரத்து இடம்பெறும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் அது ஓரளவு பயனுள்ளதாக இருக்கின்றது. பாலம் போடுவது உடனடியாக சாத்தியமாகுமா என்று எனக்கு தெரியவில்லை." என அவர் கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் எவ்வாறான தாக்கம் காணப்படும் என நாம் அவரிடம் வினவினோம்.

''வடக்கில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கின்றமை தொடர்பில் இந்தியா அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தது. சீனாவின் கடலட்டை பண்ணைகள், வெவ்வேறு திட்டங்களின் ஊடான சீனா வடக்கில் கால் பதிப்பது இந்தியாவிற்கு நெருக்கடியை கொடுத்துக்கொண்டிருந்தது. அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது என நினைக்கின்றேன். இனி சீனா வடக்கில் அதிகளவில் கால் பதிக்க முடியாது என நான் நினைக்கின்றேன்." என கூறினார்.

"அதிகாரப் பகிர்வு குறித்தும் இன்னும் பேசுவது வெட்கக்கேடானது"

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்தியாவின் சிரேஷ்ட பத்திரிகையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''இந்த விஜயத்தை பாசிடிவாக நான் பார்க்கவில்லை. நாங்கள் பல காலமாக 13வது திருத்தச் சட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டம் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கனவே இருக்கின்றது. அதை நடைமுறைப்படுத்துங்கள் என ராஜீவ் காந்தி சமயத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், ஒரு காலத்திலும் இதற்கு இலங்கை செவி சாய்க்கவில்லை. இதனை பெரிய நகைச்சுவையாகவே பார்க்க வேண்டியுள்ளது. அரசியல் சாசன சட்டத்தில் இருக்கின்ற ஒரு விடயத்தை மறுபடியும் ஒரு அயல் நாடு வலியுறுத்த வேண்டிய ஒரு கட்டாயம் இலங்கைக்கு இருக்கின்றது. அதை வாயை கூசாமல் இந்தியாவிலிருந்த அனைத்து பிரதமர்களும் செய்து வந்திருக்கின்றார்கள். அதையே இன்றும் நரேந்திர மோடி செய்திருக்கின்றார்." என அவர் பதிலளித்தார்.

 
அதானிக்கு மட்டும்தான் லாபமா?

பட மூலாதாரம்,PMD SRI LANKA

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பல தொடர்புகள் குறித்து பேசப்பட்டுள்ளன. மின்சக்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளன. இது தொடர்பில் உங்களின் பார்வை என்ன?

''இதுவொரு தனியாருக்கான விடயமாகவே நான் பார்க்கின்றேன். நரேந்திர மோடி, அதானிக்காக பேசுகின்ற விடயமாகவே பார்க்கின்றேன். அவருக்கான பேச்சாளராகவே ஒரு பிரதமர் இயங்கிக் கொண்டிருக்கின்றார். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் உள்ளிட்ட திட்டங்களை நரேந்திர மோடி, அதானிக்காக பேசுகின்ற விடயமாக தான் பார்க்க வேண்டியுள்ளது." என அவர் கூறினார்.

''சென்னை மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான படகு சேவை மன்மோகன் சிங் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனால் அந்த சேவையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஆட்கள் இல்லை. ஒரு காலத்தில் விமான சேவைகளில் பயணிப்பது செலவு அதிகமாக காணப்பட்டது. அதனால், மக்கள் அந்த காலத்தில் படகு சேவையை பயன்படுத்தினார்கள். இன்றைக்கு அந்த சூழ்நிலை கிடையாது. இலங்கையிலிருந்து சிங்கள மக்களே அதிகமாக இந்தியாவிற்கு வருகின்றார்கள். புத்தகய போன்ற இடங்களுக்கே அவர்கள் செல்கின்றார்கள்.

சென்னைக்கு பொருட்களை வாங்கி இலங்கையில் விற்பது அல்லது தன்னுடைய உறவினர்களுக்காக வருகின்றார்கள். சரக்குகள் அதிகளவில் வருமா என்று தெரியவில்லை. ஏனென்றால், சீன பொருட்களின் ஆதிக்கம் இலங்கையில் மாத்திரம் அல்ல, இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னுடைய தொலைநோக்கு பார்வையில் என்ன சொல்ல முடியும் என்றால், இந்த படகு சேவையானது, முன்னர் ஆரம்பிக்கப்பட்ட படகு சேவையை போன்றே இருக்கும்."

அதானிக்கு மட்டும்தான் லாபமா?

பட மூலாதாரம்,TWITTER/R.K.RADHAKRISHNAN

 
படக்குறிப்பு,

ஆர்.கே.ராதாகிருஷ்ணன், இந்திய பத்திரிகையாளர்

"அதானியின் வர்த்தக திட்டம் செயலாக்கம் பெறுகிறது"

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இதன்படி, நரேந்திர மோடி, அதானி மற்றும் ரணில் ஆகியோர் தொடர்பில் உங்களின் பார்வை எவ்வாறு உள்ளது என பிபிசி தமிழ், அவரிடம் வினவியது.

''ஆம். இந்தியாவிற்கு பெரிய நபர் ஒருவர் விஜயம் செய்து விட்டால், அவர் பிரதமரை பார்க்கின்றாரோ, இல்லையோ... அதானியை பார்க்க வேண்டிய நிலைமை வந்துள்ளது. அதானி தனது வர்த்தக திட்டத்தை கூறியிருப்பார். அவரும் பிரதமரும் ஒன்றையே கூறியிருப்பார்கள். இலங்கை மின்சார சபையின் தலைவர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும், நேற்றைய சந்திப்புகள் ஏறத்தாழ உண்மை என்று உணர்த்தியிருக்கின்றன. அவர் கூறிய கருத்துக்கள் ஏறத்தாழ உறுதிப்படுத்தும் வகையிலேயே அனைத்தும் நடந்துக்கொண்டிருக்கின்றன. இதில் இலங்கைக்கு ஒரு நட்டம் கிடையாது. சிங்கள இனவாத பிரச்னையோ அல்லது தமிழர் இனப் பிரச்னை தீர்வோ கிடையாது. இதுவொரு வர்த்தகத்தை நோக்காக கொண்ட திட்டம். இந்த திட்டத்தில் அனைவரும் நன்மை பெறுவார்கள் என்ற அடிப்படையிலேயே முன்னெடுக்கின்றார்கள்." என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஜனாதிபதியாக பதவியேற்கும் ஒருவர் இந்தியாவிற்கு முதலாவது விஜயம் மேற்கொள்வதை கொள்கை ரீதியாக வழமையாக வைத்திருந்தார்கள். ஆனால், ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் பதவியேற்று ஒரு வருடம் ஆகின்ற நிலையிலேயே அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

''நிச்சயமாக. இலங்கை எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்து என்பது இலங்கை இந்தியாவிற்கு எந்தளவு முதன்மை அளிக்கின்றது என்ற விடயமாக இருந்தது. சீனாவின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒரு விடயத்தை பார்க்க வேண்டும். பெரிய திட்டங்கள் எதுவும் கிடையாது. 75 கோடி என்பது இந்தியாவை பொருத்தவரை மிக சிறியதொரு தொகையாகும். இலங்கை தமிழர்களுக்கு இந்த சிறிய அளவிலேயே செய்துக்கொண்டிருக்கின்றார்கள். வேண்டுமென்றால், அரசாங்கம் கூறிக்கொள்ளலாம் ரூ.3,500 கோடிக்கு நாங்கள் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கின்றோம் என்று கூறிக்கொள்ளலாம். அது எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் ஆரம்பித்த திட்டங்கள். 2011ல் ஆரம்பித்த திட்டங்கள். ஏறத்தாழ 13 வருடங்கள் ஆகின்றன. என்னை பொருத்த வரை இது அதானிக்கு இலாபத்தை கொடுக்கும் விஜயமாகவே நான் இதனை பார்க்கின்றேன்." என ஆர்.கே.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cl5e1j7wvdzo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.