Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணிப்பூர் வன்முறையும், மக்களாட்சி விழுமியங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர் வன்முறையும், மக்களாட்சி விழுமியங்களும்

Jul 31, 2023 07:00AM IST ஷேர் செய்ய : 
Manipur violence and democracy rajan kurai

ராஜன் குறை

மணிப்பூரில் இரண்டு மாதங்களில் ஓர் உள்நாட்டுப்போரே நடந்தாற்போல சூழ்நிலை உருவாகிவிட்டது. முதலில் பொதுவாக வடகிழக்கு மாநிலங்களுடன் கணிசமான உறவு எதுவும் இல்லாத மைய இந்திய மாநிலங்கள் சாதாரணமாக கலவரச் செய்திகளை உச்சுக்கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை காட்சிகளடங்கிய சில காணொலிகள் பரவியதில் இந்திய சமூகம் பெருமளவில் அதிர்ச்சியுற்றது.

இந்தக் காணொலிகளெல்லாம் சமூக ஊடகங்களில் பரவுவதால் நேரடியாக மக்களிடம் போய் சேர்ந்தன. அது பரவலாக மக்களிடையே அறச்சீற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தின. ஏன் மணிப்பூர் அரசும், ஒன்றிய அரசும் கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறின, ஏன் பிரதமர் அது குறித்து எதுவும் பேசவில்லை என்றெல்லாம் சாமானிய மனிதர்கள், குடும்பப் பெண்கள் எல்லோரும் கேட்கத் தொடங்கினார்கள். தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் மணிப்பூர் குறித்து விவாதிக்கத் தொடங்கின. அச்சு ஊடகங்களிலும் கட்டுரைகள் வரத் தொடங்கின.

காணொலி பரவத் தொடங்கியவுடன் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.  ஆனால், மணிப்பூர் பிரச்சினையை எப்படிப் புரிந்துகொள்கிறார், அவர் அரசு அதை எப்படி அணுக விரும்புகிறது என்றெல்லாம் எதையும் பேசவில்லை. இது மக்களாட்சி விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பிரதமரும் பங்கேற்று விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருகிறார்கள். அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தொடர்ந்து நாடாளுமன்ற அவைகள் முடங்குகின்றன.

In0y7T1gQfnlfd8kodRZ.jpg

மணிப்பூர் அரசு

மணிப்பூர் மாநில அரசு சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தவறிவிட்டது வெளிப்படையானது. மணிப்பூரைச் சேர்ந்த பலரும் அதற்கு அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் மீதுதான் குற்றம் சுமத்துகின்றனர். அவர் கலவரத்தைத் தடுக்கத் தவறியது மட்டுமல்ல, அவரது அரசியல் சார்பும், பேச்சுகளும், செயல்களும்தான் கலவரத்துக்கே காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இதை எளிதில் புறக்கணிக்க இயலாது.

பிரச்சினையின் பிரதான அம்சம் மலைவாழ் பழங்குடியினரான குக்கி, நாகா ஆகிய மக்களின் நிலம் சார்ந்த உரிமைகள். சமவெளியில் உள்ள மைத்தேய் இன மக்களுக்கும், மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையில் கணிசமான பண்பாட்டு இடைவெளி இருந்து வந்திருக்கிறது. ஒட்டுமொத்த மணிப்பூரும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதையும் ஏற்காத குழுக்கள் இருந்துள்ளன.

மணிப்பூருக்கும் பிரிட்டிஷ் காலனீய அரசுக்கும், அதன் தொடர்ச்சியாக இன்றைய ஒன்றிய அரசுக்குமான உறவு  மிகவும் சிக்கலான, நீண்ட வரலாறு கொண்டது. ஆனால், அதில் தற்போது பாரதீய ஜனதா கட்சியின் நுழைவுக்குப் பிறகு, அது ஆட்சியில் அமர்ந்த பிறகு முற்றிலும் ஒரு புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது. அதுதான் பெரும்பான்மையினரான சமவெளி வாழ் மைத்தேய் இனத்தவருக்கும், மலைவாழ் குக்கி, நாகா இனக்குழுவினருக்கும் இடையேயான கடும் மோதல். மலைப்பகுதியில் நில உடமை, உரிமை குறித்த தீவிரமான பிரச்சினை.

பிரேன் சிங் இரண்டாயிரத்துக்குப் பின்னர்தான் அரசியலுக்கு வந்தார். மைத்தேய் இனத்தைச் சேர்ந்தவர். முதலில் காங்கிரஸில்தான் இருந்தார். காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் 2016ஆம் ஆண்டுதான் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். அதிலிருந்து அவர் மலைவாழ் பழங்குடியினருக்கு எதிராகப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இவை மேம்போக்கான குற்றச்சாட்டுகள் அல்ல. பத்திரிகையாளர்கள் பல ஆதாரங்கள் தருகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும், நாட்டையே உலுக்கியுள்ள வன்முறை வெறியாட்டத்துக்கும், இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டதுக்கும் பொறுப்பேற்று பதவி விலகுவதுதான் ஒரு முதலமைச்சராக அவர் செய்ய வேண்டியது. அதனால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றால் நிச்சயம் அது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், மக்களாட்சியில் குறைந்தபட்சம் அப்படிப் பொறுப்பேற்பதுதான் மக்கள் பிரதிநிதிகளின் மேல், அவர்கள் ஆட்சியின் மேல் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.

ஒன்றியத்தில் ஆள்வதும் பாஜக, மணிப்பூரில் ஆள்வதும் பாஜக என்னும்போது, ஒன்றிய ஆட்சி அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில ஆட்சியைக் கலைக்கும் அளவுக்குப் போக வேண்டியதில்லை. முதல்வரை தாமாக முன்வந்து பதவி விலகச் சொல்லலாம். அவருக்கு பதில் பாஜக-விலேயே பரவலாக ஏற்புள்ளவரை முதல்வராக்கலாம் அல்லது மொத்த அமைச்சரவையும் பதவி விலகி, குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யலாம்.

இவ்வாறான பொறுப்பேற்பு என்பது மக்கள் பிரதிநிதித்துவத்துக்கு, மக்களாட்சிக்குச் செய்யும் ஒரு மரியாதை என்பதுதான் முக்கியம். மக்கள் அளித்த தீர்ப்புக்கு தகுதியாக நடந்து கொள்ளவில்லை என்பதே பிரச்சினை.

469805-ls-rs-face-adjournments-oppositio

நாடாளுமன்றத்தின் பங்கு என்ன?

மக்களாட்சியின் உயிர்நாடியே மக்கள் பிரதிநிதிகள் கூடி விவாதிக்கும் அவையான நாடாளுமன்றம்தான். அதில் பெரும்பான்மை உள்ள கட்சிதான் ஆட்சியமைக்கும் என்றாலும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளுமே முக்கியமானவர்கள். அவரவர் தொகுதியைச் சேர்ந்த பல லட்சம் பேர்களின் பிரதிநிதி. எதிர்க்கட்சியானாலும், ஆளும்கட்சியானாலும் அவரின் பெருமதி ஒன்றுதான். உள்ளபடி சிந்தித்தால் பிரதமராக ஒருவர் விளங்குவதற்கு அடிப்படை தகுதியே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதுதான்.

மணிப்பூர் பிரச்சினை நாடெங்கும் மக்களிடையே பரவி கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில் ஒன்றிய அரசு என்ன செய்ய வேண்டும்? நாடாளுமன்றத்தில் அந்தப் பிரச்சினை குறித்தும், கலவரம் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும். பிரதமரே முன்வந்து இந்த உரையாடலில் முழுமையாக பங்கேற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டலாம்; சாத்தியமற்ற ஆலோசனைகளைக் கூறலாம். ஆனாலும்கூட அவற்றை எதிர்கொண்டு விவாதிப்பதுதான் மக்களாட்சி.

ஆனால், எந்த காரணத்திலோ இந்த இயல்பான, இன்றியமையாத அணுகுமுறையைக்கூட மூர்க்கமாக மறுதலிக்கிறது பாஜக. பிரதமர் எதிர்க்கட்சிகளுடன் சமநிலையில் உரையாடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இந்தியா முழுவதும் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தவரான இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட, எதிர்க்கட்சியினருடன் நேருக்கு நேர் நின்று உரையாடியுள்ளார். கோபப்பட்டுள்ளார், வருந்தியுள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தில் மாற்றுக் கருத்துகளை ஓயாமல் எதிர்கொண்டுள்ளார்.

ஆனால் நரேந்திர மோடி தான் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமமான உறுப்பினர் இல்லை என்று நினைக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அவர் ஒரு பேரரசர் போல உணர்கிறார். அவரை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோருவதை அவர் கெளரவத்துக்கு இழுக்கு என்று நினைக்கிறார். கெளதம் அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் சரி, மணிப்பூர் கலவரத்தின் கோரக்காட்சிகள் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தாலும் சரி, நான் நாடாளுமன்றத்தில் பிறருடன் அமர்ந்து பேச மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் பிரதமர்.

Manipur violence and democracy rajan kurai

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

குடியரசுக்கு முக்கியமான இரண்டு பரிமாணங்கள் உண்டு. ஒன்று மக்களாட்சி, இன்னொன்று சட்டத்தின் ஆட்சி. இரண்டுமே இணைந்து செயல்பட்டால்தான் அரசு சரிவர இயங்க முடியும். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. அதனால்தான் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுகளையும்கூட, குடிநபர்கள் எதிர்த்து முறையிட்டால், விசாரிக்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களும் மணிப்பூர் காணொலிகளால் அதிர்ச்சியடைந்துள்ளார். இவ்விதமான பெண்களுக்கு எதிரான பொதுவெளியில் ஒரு கும்பலின் வன்முறை என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் பாதுகாப்பு வெளியை முற்றிலும் சீர்குலைப்பது என்பதால் அவருக்கு அதில் ஒரு பொறுப்பு இருக்கிறது. எனவே, அவர் ஒன்றிய, மாநில அரசுகளை உடனே நடவடிக்கை எடுக்கும்படியும், தவறினால் தானே எடுக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார். அவர் நடவடிக்கை எடுப்பாரென்றால் அதன் பொருள் அவர் காவல்துறையை, அரசுத் துறைகளை நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார் என்றுதான் பொருள். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.

ஆனால், பாஜக கட்சியினர் நீதிபதியின் கோபத்தையும் மதிப்பதாயில்லை. யார் என்ன சொன்னாலும், பிரேன் சிங் அரசைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறது. அந்த அரசின் தார்மீக தோல்வி இது என்றுகூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காரணம், பிரதமர் மோடி 2002ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்றவுடன் நடந்த கலவரங்களுடன் ஒப்பிட்டால் இது பெரிய விஷயமா என்று பிரேன் சிங் கேட்கலாம். குஜராத்தில் கிட்டத்தட்ட இனப்படுகொலை (Genocide) என்று அழைக்குமளவு முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.

பாஜக கட்சியினர், ஆதரவாளர்கள், ஊடகங்கள்

முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலையில்தான் பாஜக கட்சியினர், ஆதரவாளர்கள், ஆதரவு ஊடகங்கள் செய்து வருகின்றனர். அவர்கள் ஏகப்பட்ட திரிபு வேலைகளை செய்து வருகிறார்கள். ஒரு சில முக்கிய அம்சங்கள்:

மைத்தேய், குக்கி மக்களுக்கிடையே உள்ள பிரச்சினை வெகுகாலமாக நிலவுவது. ராணுவத்தைக் கொண்டுதான் அங்கே அமைதி நிலவச்செய்ய முடியும். இல்லாவிட்டால் வன்முறை எப்போது வேண்டுமானால் வெடிக்கும்.

மலைவாழ் பழங்குடியினர் வந்தேறிகள், தீவிரவாதிகள், கஞ்சா பயிரிடுபவர்கள்.

கலவரங்களில் குக்கி, மைத்தேய் இருவருமே சம அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மைத்தேய் மக்கள் அதிக அளவில் அணிதிரண்டு தாக்கியுள்ளதாகக் கூறப்படுவது பொய்.

மைத்தேய் மக்களையும் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற விபரீத கோரிக்கைகள், குக்கி மக்களை ரிசர்வ்டு ஃபாரஸ்டு என்ற பெயரில் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள்,  மேலெழுவதற்கு பாஜக அரசியல் காரணமில்லை.

இவ்விதமான கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையைக் கடந்து விடலாம் என்றுதான் பாஜக நினைக்கிறது.

Manipur violence and democracy rajan kurai

மக்களின் அறச்சீற்றத்தை எதிர்ப்பது விபரீதமானது

இந்தக் காணொலிகள் பரவியதால்தான் நாடெங்கும் மக்களுக்கு அறச்சீற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மேலோட்டமானதாக சிலர் கருதும் போக்கு உள்ளது. ஆனால், கடந்த இருநூறு, முந்நூறு ஆண்டுகளாக ஊடகங்கள் பதிவு செய்யும் தகவல்கள், தரவுகளே மக்களை எழுச்சி கொள்ளச் செய்துள்ளன.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் மக்களின் அறவுணர்ச்சியை தீண்டியது வியட்நாம் போர். அமெரிக்கா தெற்கு வியட்நாமை ஆதரித்து, வடக்கு வியட்நாமில் இருந்த சுயேச்சையான இட து சாரி அரசை எதிர்த்து ராணுவத் தாக்குதல் நடத்தியது. அந்த சந்தர்ப்பத்தில் குண்டு வீச்சில் சிக்கி நெருப்பில் ஆடைகளைப் பறிகொடுத்து, அழுதபடி ஒடி வரும் ஒரு சிறுமியின் புகைப்படம் உலகெங்கும் அதிர்வலைகளை, அறச்சீற்றத்தை ஏற்படுத்தியது. புத்த பிட்சுக்குள் தங்களை தீயிட்டு எரித்துக்கொள்ளும் படமும் இவ்வாறே செயல்பட்டது.

மக்களின் அறச்சீற்றத்துக்கு மதிப்பளிக்காமல் மணிப்பூரில் பிரச்சினை நடந்தால் தமிழ்நாட்டில் ஏன் சீற்றம் கொள்கிறார்கள், கவிதை எழுதுகிறார்கள் என்றெல்லாம் கேட்பது எதிர் காற்றில் எச்சில் துப்புவது போல. பாஜக தன்னுடைய நலன் கருதியே மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடந்துகொள்வதுதான் நல்லது. மணிப்பூர் பிரச்சினையை நியாயமாகக் கையாள்வது என்பது இந்திய அரசியலில் அதன் வெற்றிக்கு இன்றியமையாதது.

அதற்கு முதல்படி பிரேன் சிங் அரசை பதவி விலகச் சொல்வது. என்ன ஆனாலும் அதைச் செய்ய மாட்டோம் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஒன்றைத்தான் குறிக்கிறது. அது 2002 குஜராத்தின் மறுநிகழ்வுதான் 2023 மணிப்பூர் என்பதே.  

கட்டுரையாளர் குறிப்பு:

 

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
 

 

https://minnambalam.com/political-news/manipur-violence-and-democracy-rajan-kurai/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.