Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப்பனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? நீடிக்கும் முரண்பாடுகளும் மர்மங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வீரப்பன்

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த தமிழ் நாடு காவல்துறைக்கு அக்டோபர் 18, 2004 ஆம் தேதி மறக்க முடியாத நாளாக அமைந்தது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 7 ஆகஸ்ட் 2023, 02:56 GMT

வீரப்பன் காட்டிற்குள்ளேயே இருந்திருந்தால், அவரை வீழ்த்தியிருக்க முடியாது.

இப்படிச் சொல்பவர், வீரப்பனின் கூட்டாளி இல்லை. வீரப்பனை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படையில் முக்கியப் பங்காற்றிய அப்போதைய காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன்.

அவருக்கு எந்த பலவீனமும் இல்லை. அவருக்கு மதுப்பழக்கமும் கிடையாது. பெண்களுடனும் பழக்கம் கிடையாது. கடவுளுக்குப் பயப்படுபவர். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். தனக்கு தோன்றுவதை செய்பவர். அவரது வாழ்க்கையில் நிறைய ரத்தம் பார்த்திருக்கிறார். அவர் கோழையோ அல்லது எதன் மீதும் பயம் கொண்டவரோ இல்லை,” இப்படித்தான் வீரப்பனை வர்ணிக்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த தமிழ் நாடு காவல்துறைக்கு அக்டோபர் 18, 2004 ஆம் தேதி மறக்க முடியாத நாளாக அமைந்தது.

 
ஆபரேஷன் குக்கூன்

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

தமிழ் நாடு அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜய்குமாரும், அதிரடிப்படையில் உளவுப்பிரிவு சிறப்பு எஸ்.பி.,யாக இருந்த செந்தாமரைக்கண்ணனும் ‘ஆபரேஷன் குக்கூன்’க்கு மூளையாக இருந்து செயல்பட்டனர்

ஆபரேஷன் ‘குக்கூன்’

காட்டிற்குள் இருந்து முதல் முறையாக வெளியே வந்த வீரப்பனை, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வைத்து, தமிழ்நாடு அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

தமிழ்நாடு அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜய்குமாரும், அதிரடிப்படையில் உளவுப்பிரிவு சிறப்பு எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக்கண்ணனும் ‘ஆபரேஷன் குக்கூன்’க்கு மூளையாக இருந்து செயல்பட்டனர்.

இந்நிலையில், சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துகொண்டே இருந்தாலும், அதிரடிப்படையினர் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

ஊகங்கள் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்தபோது, 2017-ல் விஜயக்குமார் ஐபிஎஸ் எழுதிய ‘சேசிங் தி ப்ரிகேண்ட்’ (Chasing the Brigand) என்ற புத்தகத்தில் முதன்முதலில் ‘ஆபரேஷன் குக்கூன்’ல் என்ன நடந்தது என்பதை அந்த ஆப்ரேஷனுக்கு தலைமை வகித்தவரே எழுதியிருந்தார்.

அப்போதே அதில் வீரப்பன் கொல்லப்பட்ட விதம் குறித்து அவர் எழுதியிருந்தது, உண்மைக்கு புறம்பானவை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், Netflix-ல் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 4) வெளியான ‘தி ஹன்ட் பார் வீரப்பன்’ (The Hunt for Veerappan) ஆவணத்தொடரில் வீரப்பனின் இறுதி நாட்கள் குறித்த முன்னாள் எஸ்.பி செந்தாமரைக்கண்ணன் கூறியுள்ளவற்றுக்கும், விஜய்குமார் எழுதியுள்ள புத்தகத்தில் இருப்பவைக்கும் சில முரண்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

வீரப்பன் தனது கண் பார்வைக் கோளறுக்காக சிகிச்சை பெற்றுவிட்டு, இலங்கைக்கு சென்று விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைவதற்கான முயற்சியில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட விஜய்குமார் மற்றும் செந்தாமரைக்கண்ணன், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தத் திட்டமிட்டனர். அப்படித்தீட்டப்பட்ட திட்டம்தான் ‘ஆபரேஷன் குக்கூன்’, அப்படித்தான் வீரப்பனை சுட்டக்கொன்றதாக விஜய்குமாரும், செந்தாமரைக்கண்ணனும் சொல்கிறார்கள்.

 
அதிரடிப்படையில் வீரப்பனுடன் தொடர்பில் இருந்தவர் யார் ?

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

வார இதழில் பணியாற்றிய சிவசுப்பிரமணியம் தான் வீரப்பனை முதன் முதலில் புகைப்படம் எடுத்தவர்

அதிரடிப்படையில் வீரப்பனுடன் தொடர்பில் இருந்தவர் யார் ?

அதில்தான் சந்தேகம் வருகிறது. வீரப்பன் கொல்லப்பட்டதில் இருந்து, அவரை எப்படிக்கொன்றார்கள் என்ற மர்மம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இருவரும் தெளிவாக சொல்லவில்லை. அவர் புத்தகத்திலும் நிறைய மறைத்திருக்கிறார், செந்தாமரைக்கண்ணன் பேசியதிலும் நிறைய மறைக்கிறார். ஏன், வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து அவர்கள் இருவர் சொல்வதுமே ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது,” என கேள்வி எழுப்புகிறார் சிவசுப்பிரமணியம்.

வார இதழில் பணியாற்றிய சிவசுப்பிரமணியம் தான் வீரப்பனை முதன் முதலில் புகைப்படம் எடுத்தவர். வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் பிணை வைக்கப்பட்டிருந்தபோது தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்காக அனுப்பப்பட்டிருந்த குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

இருவர் சொல்வதிலும் உள்ள முரண்கள் குறித்து பிபிசியிடம் விரிவாக பேசினார் சிவசுப்பிரமணியம்.

வீரப்பன் தனது கண் பார்வைக்காக சிகிச்சை பெற வேண்டும், விடுதலைப்புலிகளுடன் இணைய வேண்டும், ஆயுதங்கள் வேண்டும் என கேட்டபோது, அவரிடம் விடுதலைப்புலிகளை சேர்ந்தவராக அறிமுகப்படுத்தப்பட அழைத்து செல்லப்பட்டவர் உதவி ஆய்வாளர் வெள்ளத்துரைதான். அவர்தான், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவராக வீரப்பனின் ஆட்களிடம் அறிமுகம் செய்யப்பட்டவர் என்கிறார் விஜய்குமார். ஆனால், ஆவணத்தொடரில் பேசியுள்ள செந்தாமரைக்கண்ணன், தானே வீரப்பனிடம் உரையாடலில் இருந்ததாக கூறுகிறார். இவை இரண்டில் எது உண்மை, இதை யார் விளக்குவார்கள்,” என கேள்வி எழுப்பினார் சிவசுப்பிரமணியம்.

வீரப்பனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஜன்னலை உள்ளிருந்து திறக்க முடியாதா ?

வீரப்பன் பயணித்த ஆம்புலன்ஸ்

பட மூலாதாரம்,KATHIRAVAN

 
படக்குறிப்பு,

ஆம்புலன்ஸ் குறித்து விஜய்குமார் கூறுவதிலும், செந்தாமரைக்கண்ணன் கூறுவதிலும் முரண் இருப்பதாகக் கூறுகிறார் வீரப்பன் மகள் வித்யா

வீரப்பன் மகள் வித்யாவும் இதே கேள்வியை முன்வைத்தார். மேலும், வீரப்பன் இறுதியாக பயணித்த ஆம்புலன்ஸ் வாகனம் குறித்தும் இருவர் கருத்திலும் முரண்கள் இருப்பதாக பிபிசியிடம் கூறினார்.

விஜய்குமாரின் புத்தகத்தில், அப்பாவை (வீரப்பனை) அழைத்து வந்த ஆம்புலன்ஸில் கதவுகள் உற்பகுதியில் இருந்து திறக்க முடியாத வகையில் வாகனம் மறு சீரமைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களை அப்படியேதான் சுட்டதாகவும் குறிப்பிடுகிறார். ஆனால், ஆம்புலன்ஸ் நின்றபோது அப்பா தலையை வெளியே எட்டிப்பார்த்தார் என்கிறார் செந்தாமரைக்கண்ணன், இவற்றில் எது உண்மை. இரண்டுமே உண்மை இல்லை. அப்பாவை இவர்கள் உயிரோடுதான் பிடித்திருக்கிறார்கள்,” என்கிறார் வித்யா வீரப்பன்.

தொடர்ந்து பேசிய அவர், முன்பு காவல்துறை அதிகாரிகள் மீது தனக்கு மரியாதை இருந்ததாகவும், தற்போது தன் அப்பாவின் இறப்பு குறித்து முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் கூறுவதால், அந்த மரியாதை போய்விட்டதாக கூறுகிறார் வித்யா.

அவர் ஒரு அதிகாரியாக இருந்து என் அப்பாவை கொன்றிருக்கலாம். அது அவரது பணி. அதற்காக வெகுமதி வாங்குகிறார், தன் வாழ்நாள் சாதனையாகத் தூக்கிப்பிடிக்கிறார். ஆனால், ஒரு மனிதன் எப்படி இறந்தார் என்று மறைத்துவிட்டு, ஏன் புத்தகம் எழுத வேண்டும். முழுக்க முழுக்க நாடகம் நடத்தி, அதில் நிறைய மறைத்து, எப்படி புத்தகம் எழுத தோன்றுகிறது. செய்ததை சொல்லும் நேர்மை இல்லாதவர், தனது பணியில் எப்படி நேர்மையாக இருந்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது," என்கிறார்.

மேலும் பேசிய அவர், "என் அப்பாவும் அம்மாவும் காவல்துறையினரால் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எதுவும் தெரியாது. போலீசார் மீது எனக்கு மரியாதை இருந்தது. ஆனால், போலீசார் செய்த கொடூரங்களை எல்லாம் மறைந்து அப்பா செய்ததை மட்டும் ஊர் முழுக்க அவர்கள் சொல்லி வருவது அவர்கள் மீதான நம்பிக்கையும் மரியாதையும் குறைத்துவிட்டது," என்றார்.

"அம்மாவைத்தவிர, உண்மையாகவே காவல்துறையின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ‘வொர்க் ஷாப்’பில் உயிரிழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சதாசிவம் கமிஷன் அறிக்கைப்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் எதுவும் இதுவரை அம்மக்களுக்கு சென்று சேரவில்லை,” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் வித்யா.

 
ஆம்புலன்ஸ்

பட மூலாதாரம்,KATHIRAVAN

 
படக்குறிப்பு,

பிபிசியிடம் பேசிய செந்தாமரைக்கண்ணன், வீரப்பன் அப்படிக் கொல்லப்பட வேண்டிய நபர் அல்ல என்கிறார்

என்ன சொல்கிறார் செந்தாமரைக்கண்ணன்?

வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து எழும் கேள்விகள் மற்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் பேசிய செந்தாமரைக்கண்ணன், வீரப்பன் அப்படிக் கொல்லப்பட வேண்டிய நபர் அல்ல என்கிறார்.

உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அப்படி பேசுவார்கள். உண்மையில், ஒருவரை அப்படி பிடித்து வைத்து, அவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்தெல்லாம் கொன்றால், அது பெரிய சட்டசிக்கல் ஏற்படும். அதைவிட, வீரப்பன் ஒன்றும் கொல்லப்பட வேண்டிய ஆள் இல்லையே. ஆனால், அவரை விட்டால் பிடிக்க முடியாது என்ற சூழல்தான் இருந்ததே தவிர, அவரை உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் நோக்கமாக இருந்தது,” என்கிறார்.

இந்த விஷயத்தில் தொடர்ந்து முன்வைக்கப்படும் முரண்கள் குறித்து பேசியவர், “வாகனம் இந்த ஆபரேஷனுக்காகவே பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், ஜன்னல் மற்றும் பின் கதவை உற்புறம் இருந்து திறக்கும்படியாக அமைக்கப்பபட்டிருந்தது. வாகனத்தின் முன்புறமாக ஓட்டுநர் சரவணனும், துரையும் இருந்ததால், அவர்களின் பாதுகாப்புக்காக ஒட்டுநர் பக்கத்திற்கும் பின்னால் பயணிகள் பக்கத்திற்கும் நடுவில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ஜன்னால உள்ளிருந்து திறக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தது. அது அவர்கள் இருவரின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டது.” என்றார்.

வீரப்பன்

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

வீரப்பனின் மீசையை எடுக்கச்சொன்ன செந்தாமரைக்கண்ணன்

வீரப்பன் மீசையை எடுக்கச்சொன்ன செந்தாமரைக்கண்ணன்

வீரப்பனுடன் தொடர்பில் இருந்து அவரை வெளியே கொண்டு வருவதற்காக விடுதலைப்புலிககள் அமைப்பில் உள்ளவர்கள்போல வீரப்பனுடன் பேசிக் கொண்டிருந்தவர் யார் என்ற முரண் குறித்து பேசிய செந்தாமரைக்கண்ணன், ஆரம்பத்தில் இருந்தே வீரப்பனுடன் தான் தான் பேசிக்கொண்டிருந்ததாக கூறுகிறார்.

வெள்ளத்துரை, கடைசி ஆபரேஷனுக்கு ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் வரவழைக்கப்படுகிறார். ஆனால், அதற்கு முன்பிருந்தே வீரப்பனுடன் உரையாடலில் இருந்தது நான் தான். அது நேரடியாக உரையாடல் கிடையாது. தூதுவர்கள் மூலமாகவும், கடிதம் மூலமாகவும், நான் தான் பேசிக்கொண்டிருந்தேன். அப்படியான உரையாடலின்போது, அவர் மீசை எடுக்கச்சொன்னதே நான்தான்,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

நீங்களே சொன்னீர்களா எனக்கேட்டபோது, “நமக்கு அவர் மீசை வைத்திருப்பதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது. அவர்தான் கேட்டார். நான் காட்டிற்குள் இருந்து வெளியே வருவதால், மீசை இருக்கலாமா வேண்டாமா என்று, அப்போது தான், வீரப்பன் என்றாலே அந்த மீசை தான். நீங்கள் மருத்துவமனைக்கு போக வேண்டும், பின் அங்கிருந்து கப்பலில் இலங்கை செல்ல வேண்டும், அதனால், மீசையை எடுத்துவிட்டால், யாரும் அவ்வளவு எளிதில் உங்களை அடையாளம் காண முடியாது எனக்கூறினேன். அதன்படி, அவர் மீசையை எடுத்துள்ளார்,” என விளக்குகிறார் செந்தாமரைக்கண்ணன்.

மேலும் பேசிய அவர், “அவரை எங்கள் குழுவில் உள்ள யாரும் ஒரு முறைக்கூட நேரில் பார்த்ததில்லை. ஆபரேஷன் குக்கூன் முடிந்ததும், உடலைப் பார்த்து எங்களுக்கே அவர் மீசை இல்லாமல் அடையாளம் தெரியவில்லை. உண்மையில் இது வீரப்பன்தானா என்ற சந்தேகம் எங்கள் குழுவிலேயே பலருக்கு இருந்தது. ஆனால், எங்கள் அதிரடிப்படையில் வீரப்பனின் அண்ணன் மகன் பணியில் இருந்தார். அவர்தான், ‘ஆமா, இது எங்க சித்தப்பன் தான் சார்’ என உறுதிப்படுத்தினார்,” என விளக்கமளித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c98p2gpg13vo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆபரேஷன் குக்கூன்: வீரப்பனை உயிரோடு பிடித்திருக்க முடியாதா? அவரது வெளியுலக தொடர்புகள் என்ன?

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி-

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

வீரப்பன்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 21 ஆகஸ்ட் 2023, 13:32 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அக்டோபர் 18, 2004 - தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று, எதிரே வந்த கரும்பு லாரியால் வேகத்தை குறைத்து நின்றது. சந்தேகத்தில் ஆம்புலன்சில் இருந்து வெளியே பார்த்த சந்தனமரக்கடத்தல் வீரப்பன், கரும்பு லாரியால் ஆம்புலன்ஸ் நின்றதாக நம்பினார்.

ஆனால், அடுத்த நில நொடிகளிலேயே அந்த நம்பிக்கை தகர்ந்தது. நாலாப்புறமும் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க அவர் பயணித்த ஆம்புலன்ஸே சல்லடைப்போல் ஆனது.

இந்த ஆபரேஷனுக்கு குக்கூன்(Cocoon) என பெயரிட்டிருந்தார்கள் விஜயகுமார் ஐபிஎஸ் தலைமையிலான தமிழ்நாடு அதிரடிப்படை அதிகாரிகள். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போலீஸ் பிடியில் சிக்காத வீரப்பனை சுட்டுக்கொன்று சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இறப்பு குறித்த சந்தேகங்களும் மர்மங்களும் இன்றளவும் நீங்காமல் உள்ளது.

இந்த குக்கூன் ஆபரேஷனுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான செந்தாமரைக்கண்ணன் ஐபிஎஸ், இறுதியாக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி கடந்த வருடம் ஜுன் மாதம் ஓய்வு பெற்றார்.

 

ஆப்பரேஷன் குக்கூன் எப்படி சாத்தியமானது ?

செந்தாமரைக்கண்ணன்
 
படக்குறிப்பு,

காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய செந்தாமரைக்கண்ணன், கடந்த வருடம் ஜுன் மாதம் ஓய்வு பெற்றார்.

ஆபரேஷன் குக்கூன் குறித்து பிபிசியிடம் விரிவாக பேசிய செந்தாமரைக்கண்ணன், கடந்த காலங்களில் நடந்த ஆபரேஷனின் தொடர்ச்சிதான் குக்கூன் என்றார்.

ஆபரேஷன் குக்கூனுக்கு முன் ஒரு ஆபரேஷன் நடத்தினோம். அதில், நான்கு பேர் தீவிரவாதிகளைப் போல வேண்டும் என வீரப்பன் கேட்டதால், நான்கு பேரை எங்கள் சார்பாக அனுப்பிவிட்டிருந்தோம். அவர்கள் 20 நாட்கள் வீரப்பனுடன் தங்கியிருந்தார்கள். அதுதான், அதிரடிப்படையின் நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்த முதல் வெற்றி,” என்றார்.

இந்த ஆபரேஷன் தான், ஆபரேஷன் குக்கூனுக்கு அடித்தளம் எனக்கூறும் செந்தாமரைக்கண்ணன், அந்த 20 நாட்களில் வீரப்பனைப் பற்றி முழுமையான தகவல் கிடைத்ததாகக் கூறுகிறார்.

அவரது தொடர்புகள் யார், எப்படி காட்டிற்குள் போகிறார்கள், என்ன யோசிக்கிறார்கள், அவரை யார் சந்திக்கிறார்கள், யார் அவருக்கு ஆயுதம் கொடுக்கிறார்கள், என்பதெல்லாம் அந்த ஆபரேஷனில் தான் தெரிந்தது. அந்த ஆப்பரேஷனில் நிறைய ஆபத்து இருந்தது, தெரிந்து தான் அனுப்பினோம். ஆனால், அதில் நிறைய தகவல்கள் கிடைத்தன,” என்றார்.

 

வீரப்பனின் இரண்டு ஆசைகள் என்ன ?

வீரப்பன்

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

வீரப்பனை காட்டிற்குள் இருந்து வெளியே கொண்டு வர முடிவு செய்தது தமிழ் நாடு அதிரடிப்படை.

அந்த 20 நாட்களில் வீரப்பனை அடிக்கடி சந்திப்பவர்கள், துப்பாக்கி சப்ளை செய்யும் சப்ளையர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரின் தகவல்களைப் பெற்று, அவர்களைப் பயன்படுத்தி வீரப்பனை காட்டிற்குள் இருந்து வெளியே கொண்டு வர முடிவு செய்தது தமிழ் நாடு அதிரடிப்படை.

அந்த 20 நாட்களில் கிடைத்த தகவல்களில் இரண்டு தகவல்கள் முக்கியமானது. ஒன்று, அவருக்கு கண் தெரிவதில்லை, அதனால், அதனை சரி செய்ய வேண்டும். காட்டிற்குள் மருத்துவர்களை அழைத்து வர முடியாது. அதனால், வெளியே வந்து கண் பார்வையை சரி செய்ய வேண்டும் என்பது முதல் ஆசை.

இரண்டாவது, சில தமிழ் தீவிரவாதிகள் அவருடன் இரண்டு வருடங்கள் இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக, தமிழ் மீதான பற்றும், தனித் தமிழ்நாடு மேலான ஈடுபாடும் அவருக்கு இருந்தது. அதனால், ஈழத்தை பார்க்க வேண்டும். தலைவர் பிரபாகரனை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

ஈழத்தில் இருந்து ஆயுதங்களை கொண்டு வந்து தனி தமிழ்நாடே அமைத்துவிடலாம், தமிழ் தலைவராக மாறலாம் என வீரப்பன் ஆசைப்பட்டதாகக் கூறுகிறார் செந்தாமரைக்கண்ணன்.

“இந்த மாதிரியான தவறாக கொள்கைகளை அவர்கள் வீரப்பனுக்கு புகுத்தியிருந்தார்கள். அதுதான் திசை திருப்புதல். அதனை எங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, எங்கள் பக்கம் இருந்த சப்ளையர்களுக்கு சலுகைகள் கொடுத்து, அவர்களை மாற்றி, எங்கள் சார்பாக பேச வைத்து, அவருடைய எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றுவார்கள், உதவி செய்ய வழி முறை இருக்கென்று நம்ப வைத்து, அவரை காட்டில் இருந்து வெளியே கொண்டு வருவது தான் திட்டம்,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

 

வீரப்பனை எப்படி நம்ப வைத்தார்கள் ?

வீரப்பன்

பட மூலாதாரம்,KATHIRAVAN

 
படக்குறிப்பு,

இலங்கையை சேர்ந்தவராக செந்தாமரைக்கண்ணன்தான் வீரப்பனுடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார்

ஆனால், வீரப்பனை நம்ப வைக்க அதிரடிப்படையினர் போட்டிருந்த திட்டம் 100% வெற்றி பெறும் என யாருக்கும் நம்பிக்கை இல்லை என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

அதிரடிப்படையினர் பக்கம் இருந்த சப்ளையர்கள் மற்றும் வியாபாரிகள் மூலமாக இலங்கையை சேர்ந்தவராக செந்தாமரைக்கண்ணன்தான் வீரப்பனுடன் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

சப்ளையர்கள் மூலமாக பேசிக்கொண்டிருந்தாலும், அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகமாக நான் பதில் அனுப்பவில்லை. அதிகம் பேசினால், அதிகம் கேள்விகள் வரும் சந்தேகங்கள் வரும். அதனால், அதனை தவிர்த்தேன். நானும் இலங்கையில் உள்ள போராளியைப் போல அளவாக ஒரு தலைவரைப் போலத்தான் பேசினேன். அதனால், அவருக்கு அதிக சந்தேகம் வரவில்லை,” என்கிறார்.

வீரப்பன் ஆயுதங்கள் எடுத்து வரலாமா ?, உடைகள் எடுத்து வரலாமா ? வேறு என்னவெல்லாம் தேவை என்று கேட்டதாக பகிர்ந்தார் செந்தாமரைக்கண்ணன்.

எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் எதுவும் நிபந்தனைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. அவர் ஆயுதங்கள் எடுத்து வரலாமா என்று கேட்டார். இங்கேயே நிறைய இருக்கு, வேண்டும் என்றால் ஆளுக்கு ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள். நிறைய எடுத்து வர வேண்டாம் என்றோம்.

மீசை, தலை முடியை சரி செய்ய வேண்டுமா எனக் கேட்டு அனுப்பினார். மீசை இருந்தால் அடையாளம் தெரியும், எடுத்தால் அடையாளம் தெரியாது, எளிமையாக செல்லலாம் என்றேன். அவர் அதை எடுத்துவிட்டார்,” என்றார்.

அவருக்கு தேவையான ஆயுதங்களையும் சிலவற்றை தயார் செய்து அனுப்பியதாகவும் கூறினார் செந்தாமரைக்கண்ணன்.

உரையாடல் மட்டும் நம்பிக்கை கொண்டு வரவில்லை. சந்தேகமின்றி அவருக்கு தேவையாவற்றையும் செய்து கொடுத்தோம். அதற்கு பிறகுதான் நம்பினார்,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

 

ஆபரேஷன் குக்கூன் எப்படி நடந்தது ?

வீரப்பன்

பட மூலாதாரம்,KATHIRAVAN

 
படக்குறிப்பு,

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆம்புலன்சில், வீரப்பன் எந்த பக்கம் அமர்ந்திருக்கிறார், அவருடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க ஆம்புலன்சினுள் கேமரா பொருத்தியிருந்துள்ளனர்

வீரப்பனிடம் முன்னதாகவே கூறியிருந்தபடி, தர்மபுரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை பாடி வனத்தையொட்டியிருந்த தண்ணீர் தொட்டியின் அருகே அதிரடிப்படையினர் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது.

அந்த ஆம்புலன்சில் என்னுடைய ஓட்டுநர் சரவணனும், உதவி ஆய்வாளர் வெள்ளத்துரையும் இலங்கைக்கு அழைத்துச் செல்லும் நபர்களாக சென்றிருந்தார்கள். சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரையும் வீரப்பனி பிடித்து வைத்துக்கொண்டால், என்ன செய்வது என்று அவர்களின் பாதுகாப்புக்காக கைத்துப்பாகிகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல, அவர்களிடம் எரி குண்டுகளும் கொடுக்கப்பட்டிருந்தது,” என விவரிக்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

பாடி பகுதியில் இருந்து தர்மபுரிக்கு மூன்று சாலை வழியாக செல்லலாம் என்பதால், மூன்று சாலைகளிலும் தங்களது குழுவினர் தயாராக இருந்ததாகக் கூறுகிறார்.

நாம் திட்டமிட்ட பாதையில்தான் அவர் வர வேண்டும் என்பது இல்லை. அவர் திடீரென சந்தேகத்தில், வழியை மாற்றச் சொன்றால், அதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஆனால், நல் வாய்ப்பாக அவர் நாங்கள் திட்டமிட்ட சாலையில் தான் பயணித்தார்.

அதனை கண்காணித்து தெரிவிப்பதற்காகவே எங்கள் அதிரடிப்படையை சேர்ந்த குமரேசன் என்பவர் அந்த சாலையில் இரண்டு மாதங்களாக ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். அவர் ஆம்புலன்ஸ் வரும் வழியை கண்காணித்து நாங்கள் இருக்கும் சாலையில் தான் ஆம்புலன்ஸ் வருகிறது என்பதை உறுதி செய்து தகவல் கொடுத்தார்,” என்றார்.

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆம்புலன்சில், வீரப்பன் எந்த பக்கம் அமர்ந்திருக்கிறார், அவருடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க ஆம்புலன்சினுள் கேமரா பொருத்தியிருந்துள்ளனர்.

அவர் எந்தப் பக்கம் அமர்ந்திருந்தார் என்ற தகவல்தான் அவரை சரியாக சுடுவதற்கு உதவியாக இருந்ததாகக் கூறும் செந்தாமரைக்கண்ணன், ஆபரேஷன் குக்கூன் நடத்த திட்டமிட்டிருந்த இடத்தை ஆம்புலன்ஸ் வந்ததும், நான்கு புறங்களிலும் அதிரடிப்படையினர் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

“நாங்கள் குறித்து வைத்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தபோது, ஆம்புலன்ஸுக்கு முன் எங்கள் சார்பாக நிற்க வைத்திருந்த கரும்பு லாரி இருந்தது, பின் புறம் அதிரடிப்படையை சேர்ந்த திருநாவுக்கரசு ஒரு வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தார். வலது புறம் உள்ள ஒரு பள்ளியின் சுற்றுச்சுவருக்கு பின்னால் ஆயுதம் ஏந்திய அதிரடிப்படையினரும், இடது புறத்தில் பழைய பஞ்சரான ஒரு லாரியில் ஆயுதம் ஏந்திய அதிரடிப்படையினரும் இருந்தோம்.” என விவரிக்கிறார் செந்தாமரைக்ககண்ணன்.

 

10 அடி தூரத்தில் இருந்து வீரப்பனை சுட்ட போலீஸ்

வீரப்பன்

பட மூலாதாரம்,KATHIRAVAN

 
படக்குறிப்பு,

வீரப்பனை அருகில் இருந்து சுட்டுக்கொன்றதாக எழுப்பப்படும் கேள்வி உண்மைதான் என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

ஆம்புலன்ஸ் நின்றதும், அதில் இருந்து ஓட்டுநர் சரவணனும், உதவி ஆய்வாளர் வெள்ளத்துரையும் இறங்கி ஓட, நடப்பது புரியாமல் இருந்துள்ளார் வீரப்பன்.

வண்டி நின்றதும் வீரப்பன் வாகனத்தின் வெளியே பார்க்கிறார். முன்னால் கரும்பு லாரி இருந்ததால், அவர் சந்தேகிக்கவில்லை. பின், ஒட்டுநரும், உதவி ஆய்வாளரும் இறங்கி ஓடும்போது, வெள்ளத்துரையிடம் வாகனத்திற்குள் வீசுவதற்காக கொடுத்திருந்த எரி குண்டை அவர், பதற்றத்தில் வாகனத்திற்கு கீழ் போட்டுவிட்டார். அதற்கு பிறகு ஆம்புலன்சின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் எரியும்போதுதான், வீரப்பனுக்கு தான் போலீஸ் பிடியில் சிக்கியதையே உணர்கிறார்,” என்றார்.

வீரப்பனை அருகில் இருந்து சுட்டுக்கொன்றதாக எழுப்பப்படும் கேள்வி உண்மைதான் என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

வீரப்பன் எந்த திசையில் இருந்தார் என்பது எங்களுக்கு முன்னதாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சரியாக அந்த பஞ்சரான லாரிக்கு மிக அருகில் நின்றது. அந்தப் பக்கம்தான் வீரப்பனும் அமர்ந்திருந்தார். லாரிக்கும் ஆம்புலன்சுக்கும் இடையில் 10 அடி தூரம் கூட இருக்காது. அந்தப் பக்கம்தான் இருக்கிறார் ‘ஷூட்’ என நாங்கள் உத்தரவு கொடுத்ததும், அவரை சுட்டனர். அது நேரடியாக அவர் தலையில் பட்டது. பட்டதும், அவர் முன்னால் சாய்துவிடுகிறார்,” என விளக்கினார் செந்தாமரைக்கண்ணன்.

இந்த ஆப்பரேஷனில் வீரப்பன் பதிலுக்கு துப்பாக்கி எடுத்து வெளியே சுட முயற்சிக்கவில்லை என்கிறார் செந்தாமரைக்கணணன்.

அவர் ஒரு முறைக் கூட துப்பாக்கியால் சுடவில்லை. தலையில் காயம்பட்டதும் அவர் முன்னால் சாய்கிறார். அவர் மீது காயம்படக் கூடாது என அவருடன் இருந்த சேத்துக்குளி கோவிந்தன் அவரை மறைத்துக் கொண்டதால், கோவிந்தனுக்குத்தான் அதிக காயம்,” என்றார்.

அதிரடிப்படையினரின் இந்த ஆபரேஷனில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா, சேதுமணி ஆகிய நால்வரும் கொல்லப்பட்டனர்.

 

"ஆபரேஷனில் நிரப்பப்படாத வெற்றிடங்கள் இருக்கும்"

வீரப்பன்

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

ஆப்பரேஷனில் நிச்சயம் நிரப்பப்படாத வெற்றிடங்கள் இருக்கும் என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

பிபிசிக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், இந்த ஆபரேஷனில் நிச்சயம் நிரப்பப்படாத வெற்றிடங்கள் இருக்கும் என்கிறார்.

ஆம். இந்த ஆப்பரேஷனில் நிச்சயம் நிரப்பப்படாத வெற்றிடங்கள் இருக்கும். அது ஏன் என்றால், இது ஆவணப்படுத்தப்பட்ட ஆபரேஷன் இல்லை. அப்படி ஆவணப்படுத்தவும் முடியாது. இதில், ஏகப்பட்ட பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சொல்ல முடியாத விஷயங்களை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஊடகங்களும் விமர்சகர்களும் இதில் கேள்வி எழுப்புகின்றனர். அதற்காக, நான் காட்டிக்கொடுக்க முடியாது. ஆபரேஷன் நடந்தது உண்மைதான். அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்னுடைய தொழில் தர்மம்,” என்றார்.

குக்கூன் நுண்ணறிவு ஆபரேஷனில்(Intelligence Operation) அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு இருந்திருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

இது ஒரு புலனாய்வு ஆபரேஷனாக(Investigation Operation) இருந்தால், அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு, வெளிப்படையாக இருக்கும். ஆனால், இது ஒரு நுண்ணறிவு ஆபரேஷன் (Intelligence Operation). இதில் அனைத்துமே இந்திய தண்டணைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்டவையை பின்பற்றி செயல்படுத்த முடியாது,”என்கிறார் அவர்.

 

உயிருடன் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையா ?

வீரப்பன்

பட மூலாதாரம்,KATHIRAVAN

 
படக்குறிப்பு,

வீரப்பனைவிட அவருடன் இருந்த சந்திரே கெளடா சற்றும் இரக்கமற்றவர் என்றார் செந்தாமரைக்கண்ணன்.

அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றிவளைத்த பின்னர், எந்தச் சூழலிலும் வீரப்பனை உயிருடன் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையா என பிபிசி சார்பில் அவருடனான நேர்காணலில் கேட்டபோது, “அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுற்றிவளைத்தது உண்மைதான். ஆனால், அவரை பல முறை கிட்ட நெருங்கிப்போகியும், நாங்கள் தவறவிட்டிருக்கிறோம். அதனால், இந்த முறை சுடுவதை தவிர வேறு வாய்ப்பு இல்லை. எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது,” என்றார்.

மேலும் கூறுகையில், “ஒருவேளை வீரப்பனை நாங்கள் உயிருடன் பிடித்துவிட்டு, வேறு யாரையாவது நாங்கள் தப்பவிட்டால், அது வீரப்பன் பார்ட் - 2 ஆகிவிடும். வீரப்பனைவிட அவருடன் இருந்த சந்திரே கெளடா சற்றும் இரக்கமற்றவர். அவரை தப்பவிட்டிருந்தோம் என்றால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். அதனால், எங்களிடம் இருந்த ஒரே வாய்ப்பு அதுதான்,” என்றார்.

 

வீரப்பன் கொல்லப்பட வேண்டியவரா ?

வீரப்பன்

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

தன்னை போலீஸ் பிடித்தால் கொன்றுவிடும் என்றும் அவர் தீர்க்கமாக நம்பியதாகக் கூறுகிறார் செந்தாமரைக்கண்ணன்.

வீரப்பனை சுடுவதை தவிர வேறு வழியில்லை எனக்கூறிய செந்தாமரைக்கண்ணன், அவரை சுட்டதற்கு வருந்துவதாகவும் தெரிவிக்கிறார்.

நிச்சயமாக அவரை சுட்டதற்கு இன்றும் வருந்துகிறேன். அவர் சுடப்படவேண்டியவர் இல்லை. அவர் மிகவும் திறமைசாலி. அவரை வனப் பாதுகாப்பு அதிகாரியாகக் கூட நியமித்திருக்கலாம். வனத்தை பற்றி அந்தளவுக்கு அவருக்கு தெரியும். அவர் ஆரம்ப காலத்தில் பெரிய குற்றங்களில் ஈடுபடவி்ல்லை.

அவர் செய்தது அனைத்தும் வனக்குற்றங்கள்தான். ஆனால், அவரை தேடத்துவங்கிய பின்னர், அது அவருக்கும் போலீசாருக்கும் இடையிலான சண்டையாக மாறியது. அவர் சிறிய சிறிய குற்றங்கள் செய்து கொண்டிருந்தவர், ஒரு கட்டத்திற்கு மேல் அதிலிருந்து மீள முடியாதவராகிவிட்டார்.

தன்னை போலீஸ் பிடித்தால் கொன்றுவிடும் என்றும் அவர் தீர்க்கமாக நம்பினார். அவரும் இறுதிக்காலங்களில் பொது மன்னிப்பு பெற எவ்வளவோ போராடினார். ஆனால், எதுவும் கைகூடவில்லை,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c985lw05jlno

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று இரவு 'மடக்கியபோது' Veerappan என்ன செய்து கொண்டிருந்தார்? Senthamarai Kannan IPS Interview

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பனை காட்டிக்கொடுத்தாரா கொளத்தூர் மணி ? - என்ன சொல்கிறார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி

வீரப்பனை காட்டிக்கொடுத்தாரா கொளத்தூர் மணி ? - என்ன சொல்கிறார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM/KOLATHUR MANI/BBC

 
படக்குறிப்பு,

சந்தனமரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 19 ஆண்டுகளாகியும், அவர் மரணம் தொடர்பாகவும், அவர் செய்த கொலைகள் தொடர்பாகவும் இன்றளவும் மர்மங்கள் நீங்காமல் உள்ளன.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இன்னும் இரண்டு தினங்கள் தான் இருக்கிறது, இவனை சுடுவதற்கு. ஸ்ரீநிவாசா டிஎஃப்ஓ வந்ததும் இவனை சுடுவது நிச்சயம், அதில் ஒன்றும் மாற்றம் இல்லை.”

1986 வீரப்பனை முதலும் கடைசியுமாக கர்நாடக வனத்துறையினர் கைது செய்தபோது அவர்களுக்குள் கன்னடத்தில் பேசிக்கொண்ட வார்த்தைகள் இவை . வனத்துறையினரின் பிடியில் இருந்து வீரப்பன் தப்பியதற்கு இந்த நிகழ்வுதான் காரணம் என்கிறார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.

சந்தனமரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 19 ஆண்டுகளாகியும், அவர் மரணம் தொடர்பாகவும், அவர் செய்த கொலைகள் தொடர்பாகவும் இன்றளவும் மர்மங்கள் நீங்காமல் உள்ளன.

வீரப்பன் உயிருடன் இருந்தபோது தன்னிடம் பகிர்ந்தவற்றை பிபிசி உடனான நேர்காணலில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பகிர்ந்துகொண்டார்.

மேலும், வீரப்பன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறித்து பேசிய முத்துலட்சுமி, திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியை பயன்படுத்தி வீரப்பனை காட்டிற்குள் இருந்து வெளியே கொண்டு வந்து என்கவுண்டர் செய்திருக்கலாம் என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த கொளத்தூர் மணி, அதில் உண்மையில்லை எனக் கூறியுள்ளார்.

 

டிஎஃப்ஓ ஸ்ரீநிவாசாவை கொலை செய்யக் காரணம் என்ன?

டிஎப்ஓ ஸ்ரீநிவாசாவை கொலை செய்ய காரணம் என்ன ?
 
படக்குறிப்பு,

வன அதிகாரியின் பேச்சைக் கேட்டு வீரப்பன் மனமாற்றத்தில் இருந்ததாகக் கூறிய முத்துலட்சுமி, அவை அனைத்தும் ஸ்ரீநிவாசா டிஎஃப்ஓ வந்ததும் நிராசையானதாகக் கூறினார்.

வீரப்பன் செய்த கொலைகளில் கொடூரமானதாகக் கருதப்படும் கர்நாடக மாவட்ட வன அதிகாரி (DFO) ஸ்ரீநிவாசாவின் கொலைக்கு காரணம், அவர் செய்த சித்ரவதைதான் என்றார் முத்துலட்சுமி.

கர்நாடக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சாம்ராஜ் நகரில் உள்ள பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, திருந்தி வாழ நினைத்த வீரப்பனை வன அதிகாரி ஸ்ரீநிவாசா சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டினார் முத்துலட்சுமி.

நீ இனிமேல் தவறான பாதைக்கு போகக்கூடாது வீரப்பா. உன் மீது வழக்குப் பதிவு செய்து இரண்டு வருடம் உள்ளே இருக்கும்படி செய்து விடுகிறேன்.

நீ இரண்டு வருடம் கழித்து வெளியே வந்து, கல்யாணம் செய்துவிட்டு, விவசாயம் செய்து நல்லபடியாக இருந்துகொள். மீண்டும் இதுபோன்று தவறான பாதையில் போகக்கூடாது,” என வீரப்பனை முதலில் விசாரித்த அதிகாரி புஜாரா வீரப்பனிடம் கூறியதாக தெரிவித்தார் முத்துலட்சுமி.

வன அதிகாரியின் பேச்சைக் கேட்டு வீரப்பனும் மனமாற்றத்தில் இருந்ததாகக் கூறிய முத்துலட்சுமி, அவை அனைத்தும் ஸ்ரீநிவாசா டிஎஃப்ஓ வந்ததும் நிராசையானதாக தெரிவித்தார்.

இந்தச் சூழலில்தான் பெங்களூருவில் நடந்த ஒரு மாநாட்டிற்காக புஜாரி என்ற அதிகாரியை அனுப்பி வைக்கின்றனர். அதற்குப் பிறகு வந்த ஸ்ரீநிவாசா டி.எஃப்.ஓ.வும் அவருடன் இருந்த அதிகாரிகளும் தன்னை இரவு பகலாக அடித்து, சித்திரவதை செய்து கொலை செய்யத் திட்டமிட்டதாக என் கணவர் என்னிடம் சொன்னார். ஒழுங்காக விட்டிருந்தால், நான் திருந்தி வெளியே வந்து வாழ்ந்திருப்பேன். வாழப் போறவனை இப்படிச் செய்கிறார்களே என என் கணவருக்கு டி.எஃப்.ஓ மீது பயங்கரமான கோபம் இருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் அவரைக் கொலை செய்தார்,” என்றார் முத்துலட்சுமி.

 

வீரப்பன் குடும்பத்தை குறிவைத்தாரா ஸ்ரீநிவாசா டி.எஃப்.ஓ?

வீரப்பன் குடும்பத்தை குறிவைத்தாரா ஸ்ரீநிவாசா டிஎப்ஓ ?

பட மூலாதாரம்,PTI

 
படக்குறிப்பு,

வனத்துறை அதிகாரியின் சித்ரவதை தாங்காமல் வீரப்பன் அவரை கொன்றதாக கூறுகிறார் முத்துலட்சுமி.

வீரப்பன் பெங்களூருவில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கும், வன அதிகாரி ஸ்ரீநிவாசா கொலைக்கும் சுமார் மூன்று ஆண்டுகள் இடைவெளி உள்ளதே என பிபிசி கேட்டபோது, அந்த சித்ரவதை மட்டுமல்லாமல், தன் தங்கையின் வாழ்க்கையையும் ஸ்ரீநிவாசா கெடுக்கிறார் என்ற கோபமும் வீரப்பனிடம் இருந்ததாக் கூறினார் முத்துலட்சுமி.

என் கணவரின் தங்கைக்கு அப்போது திருமணமாகி வேறு ஊரில் இருந்தார். ஆனால், இந்த டி.எஃப்.ஓ என் கணவரை பிடிக்க வேண்டும் எனக் கூறி திட்டமிட்டே அவரை, எங்கள் ஊரில் தங்க வைத்தார். அது ஊரில் தவறாகப் பேசப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

என்னையும் வாழவிடவில்லை. இப்போது என் குடும்பத்தையும் தொந்தரவு செய்கிறாரே என்று என் கணவருக்கு இருந்த கோபத்தில்தான் அந்தக் கொலை நடந்தது,” என்றார் முத்துலட்சுமி.

 

டிஎப்ஓ ஸ்ரீநிவாசா வீரப்பனை சித்ரவதை செய்தாரா ?

டிஎப்ஓ ஸ்ரீநிவாசா வீரப்பனை சித்திரவதை செய்தாரா ?

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

கர்நாடகாவில் வீரப்பனை சித்ரவதை செய்தது உண்மைதான். ஆனால், அது இறந்த டிஎப்ஓ ஸ்ரீநிவாசா செய்யவில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் சிவசுப்பிரமணியம்.

கர்நாடகாவில் வீரப்பனை ஸ்ரீநிவாசா டிஎப்ஒ சித்ரவதை செய்தது உண்மையா என தெரிந்துகொள்ள, வீரப்பனை முதலில் புகைப்படம் எடுத்தவரும், வீரப்பனை நேரில் சந்தித்தவர்களில் ஒருவருமான பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியத்திடம் பிபிசி பேசியது.

கர்நாடகாவில் வீரப்பனை சித்ரவதை செய்தது உண்மைதான். ஆனால், அது இறந்த டிஎப்ஓ ஸ்ரீநிவாசா செய்யவில்லை.

புஜாரி என்ற அதிகாரி மாநாடு பணிக்கு சென்ற பிறகு, மூர்த்தி என்ற எஸ்பி.யும்(SP), ஸ்ரீநிவாசா டிஎப்ஓ.வும்(DFO) அடுத்ததாக இருந்த ஏசிஎப்(ACF) ஸ்ரீநிவாசன் என்ற அதிகாரியும் விசாரித்துள்ளனர்.

அப்போது, ஏசிஎப் ஸ்ரீநிவாசனும், மூர்த்தியும் தான் வீரப்பனை சித்ரவதை செய்துள்ளனர். ஆனால், டிஎப்ஓ ஸ்ரீநிவாசாவும் உடன் இருந்ததால், வீரப்பனின் அனைத்து கோபமும், அவர் மீது திரும்பியுள்ளது,”என்று சிவசுப்பிரமணியம் கூறினார்.

 

வீரப்பனை காட்டிக் கொடுத்தாரா கொளத்தூர் மணி?

வீரப்பனை காட்டிக்கொடுத்தாரா கொளத்தூர் மணி ?

பட மூலாதாரம்,KOLATHUR MANI/TWITTER

 
படக்குறிப்பு,

வீரப்பன் கொளத்தூர் மணியை முழுமையாக நம்பியிருந்ததாகக் கூறினார் முத்துலட்சுமி

வீரப்பன் மரணம் குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறார். இது குறித்து அவர் பிபிசியிடம் பேசியபோது, ‘அவரை நிச்சயம் சுட்டுக் கொல்லவில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்றார்.

என் கணவர் முழு நம்பிக்கை வைத்திருந்த நபர்கள் மூலமாக போலீசார் இலங்கையைச் சேர்ந்தவர்களைப் போல் நடித்து, அவரை காட்டில் இருந்து வெளியே வர வைத்து, சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொலை செய்திருக்கலாம்.

அது கொளத்தூர் மணி அண்ணனாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், என்னிடம் பேசியபோது, அவர் கொளத்தூர் மணி அண்ணன் மூலமாக இலங்கை சென்றுவிடலாம் எனக் கூறியிருந்தார்.

என் கணவர் மணி அண்ணாவைத்தான் முழுமையாக நம்பியிருந்தார். அதனால், ஒருவேளை மணி அண்ணாவை வைத்து போலீசார், இதை அரங்கேற்றி இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், இப்போது அதை உறுதிப்படுத்த முடியவில்லை,” என கூறினார் முத்துலட்சுமி.

கொளத்தூர் மணி மீது உள்ள சந்தேகத்திற்கான காரணத்தை விவரித்த முத்துலட்சுமி, “என் கணவர் அப்படி யாரையும் எளிதில் நம்பிவிடமாட்டார். அதேபோல, அவரை(கொளத்தூர் மணி) என் கணவர் அழைத்ததாகவும், அவர் சென்று பார்க்க முடியாமல், வேறு ஒருவரை அனுப்பியதாகவும் அந்த நேரத்தில் மணி அண்ணாவே என்னிடம் கூறியிருந்தார்,” என்றார் முத்துலட்சுமி.

 

என்ன சொல்கிறார் கொளத்தூர் மணி?

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக திராவிட விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், தன்னைப் பற்றி முத்துலட்சுமி கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

என்ன நடந்திருக்கும் என சிந்திப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் கற்பனைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதில் உண்மை இல்லை,” என்றார்.

மேலும், வீரப்பன் உயிரோடு இருக்கும்போதும், இறந்த பிறகும் தான் அவருக்கு ஆதரவு கொடுத்தாக தெரிவித்தார் கொளத்தூர் மணி.

வீரப்பன் இறந்த அன்று இரவு காவல்துறையினர் என் வீட்டிற்கு வந்து தகவல் சொன்னபோதுதான் எனக்கு நடந்ததே தெரியும். அன்று வீரப்பன் இறுதிச்சடங்கு, இறுதி ஊர்வலம் வரை அவரது உரிமைக்காக காவல்துறையிடம் சண்டையிட்டது நான்தான்,” என்கிறார் கொளத்தூர் மணி.

 

வீரப்பன் குறித்து தகவல் சொன்ன அந்த நான்கு பேர் யார்?

வீரப்பன் குறித்த தகவல் சொன்ன அந்த நான்கு பேர் யார் ?

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

நான்கு பேர் மூலமாக தகவல்கள் வெளியே வந்தது உண்மை என உறுதிப்படுத்தினார் முத்துலட்சுமி.

ஆபரேஷன் குக்கூனுக்கு முன்னதாக நடந்த ஒரு ஆபரேஷனில் நான்கு பேரை வீரப்பனின் கூட்டத்திற்குள் அனுப்பி அவர்கள் மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் ஆபரேஷன் குக்கூன் சாத்தியமானதாக பிபிசியுடனான நேர்காணலில் ஆபரேஷன் குக்கூனில் முக்கியப் பங்காற்றிய செந்தாமரைக்கண்ணன் ஐபிஎஸ் கூறியிருந்தார்.

அதுகுறித்து வீரப்பன் ஏதேனும் தகவல்களை பகிர்ந்திருக்கிறாரா என முத்துலட்சுமியிடம் கேட்டபோது, “அதுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு. அப்போதே அந்த நான்கு பேரையும் கொன்று விடலாம் என சேத்துக்குளி கோவிந்தன் அண்ணன் கூறியுள்ளார்.

ஆனால், என் கணவர்தான் இருக்கும் பிரச்னையில் இது வேண்டாம் என விட்டுவிட்டார்,” என்றார் முத்துலட்சுமி.

அந்தச் சம்பவம் குறித்து விரிவாக விவரித்த அவர், “ஆட்கள் வேண்டும் என என் கணவர் அவரது அண்ணன் மகன் மூலமாக கோவை சிறையில் உள்ள அவரது அண்ணன் மாதையனிடம் தகவல் சொல்லியிருக்கிறார்.

அவர் கோவை சிறையில் இருந்த ஒருவர் மூலமாக ஆட்கள் அனுப்புவதாகக் கூறி அனுப்பியுள்ளனர். அப்படித்தான் நம்பி அந்த நான்கு பேரையும் கூட்டத்தில் சேர்த்துள்ளனர்.

ஆனால், ஒரு முறை துப்பாக்கிப் பயிற்சியின்போது தான், அதில் ஒருவர் துப்பாக்கியைப் பிடிக்கும் தோரணையை வைத்து அவர் போலீசாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவர்களை கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பியுள்ளனர்,” என்றார்.

அந்த நான்கு பேர் மூலமாக தகவல்கள் வெளியே வந்தது உண்மைதான் என்றும், அந்தத் தகவலின்படியே உணவில் விஷம் கொடுத்து வீரப்பனை கொன்றிருக்கலாம் என்றும் கூறினார் முத்துலட்சுமி.

தனித் தமிழ்நாடு அமைக்க ஆசைப்பட்டாரா வீரப்பன்?

வீரப்பனுக்கு பிரபாகரனை பிடிக்கும் என்றார் முத்துலட்சுமி

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

 
படக்குறிப்பு,

வீரப்பனுக்கு விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை பிடிக்கும் என்கிறார் முத்துலட்சுமி

ஆபரேஷன் குக்கூனில் முக்கியப் பங்காற்றிய செந்தாமரைக்கண்ணன் பிபிசியுடனான நேர்காணலில் வீரப்பன் தனித் தமிழ்நாடு அமைக்கும் ஆசையில் இருந்ததாகக் கூறியிருந்தார்.

அது குறித்து முத்துலட்சுமியிடம் கேட்டபோது, “அவருக்கு தனித் தமிழ்நாடு அமைக்கும் ஆசையெல்லாம் இல்லை. அவருக்கு பிரபாகரனை பிடிக்கும். அதனால், அவர்களைப்போல ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார்.

அதே நேரத்தில், தமிழ் மற்றும் தமிழ் மக்கள் மீது அன்பு வைத்திருந்தார். கர்நாடகாவில் காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் காட்டுப் பகுதி வழியாகத்தான் கர்நாடகாவில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்குள் வந்தனர். நாங்கள் தான் வழியனுப்பி வைத்தோம்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cd1glq979gjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 மாநில போலீஸ்; Indian Military, Helicopter வச்சே பிடிக்க முடியல; ஆனா... Veerappan Wife Interview

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவு: இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன? முழு விவரம்

வீரப்பன்

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

படக்குறிப்பு,

ஆப்பரேஷனுக்கு குக்கூன்(Cocoon) என தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் பெயர் வைத்திருந்தனர்.

7 மணி நேரங்களுக்கு முன்னர்

அக்டோபர் 18, 2004, இரவு 10 மணி. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி வந்த ஆம்புலன்ஸ் பாடி அருகே வந்து நின்றது. வாகனத்தில் இருந்த இறங்கிய ஓட்டுநர், “கேங்(gang) உள்ள இருக்காங்கோ” எனக் கூறியபடி மரத்திற்குப் பின்னால் ஓடி மறைந்தார்.

ஓரிரு நிமிடங்களில், “சரண்டராகிடுங்க, உங்களை சுத்தி போலீஸ் இருக்கு” என மெகாஃபோனில் எச்சரித்தார் தமிழ்நாடு அதிரடிப்படையின் உளவுப்பிரிவு எஸ்பியாக இருந்த செந்தாமரைக்கண்ணன்.

ஒரு நிமிட நிசப்தத்திற்குப் பிறகு, அந்த ஆம்புலன்ஸின் பின்புறம் இருந்து ஏகே-47 துப்பாக்கியின் குண்டுகள் சத்தம் கேட்க, அந்த ஆம்புலன்ஸ் வேனை நாலாபுறமும் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. இதில், அந்த ஆம்புலன்ஸே சல்லடையைப் போலானது.

இப்படித்தான் சந்தனமரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதாக தான் எழுதியுள்ள ‘சேசிங் தி பிரிகேன்ட்’ (Chasing the Brigand) புத்தகத்தில் கூறியுள்ளார் அப்போதைய சிறப்பு அதிரடிப்படையின் தலைவர் விஜய்குமார் ஐபிஎஸ்.

இந்த ஆப்பரேஷனுக்கு குக்கூன்(Cocoon) என தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் பெயர் வைத்திருந்தனர்.

இந்த ஆபரேஷனில் சந்தனமரக்கடத்தல் வீரப்பன், அவருடைய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா, சேதுமணி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

 

வீரப்பனை அருகில் இருந்து சுட்டது ஏன்?

வீரப்பன்

பட மூலாதாரம்,KATHIRAVAN

படக்குறிப்பு,

ஆபரேஷனில் சந்தனமரக்கடத்தல் வீரப்பன், அவருடைய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா, சேதுமணி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 19 ஆண்டுகள் ஆனாலும், இன்று வரையிலும் அவர் இறப்பு குறித்து தொடர்ந்து சந்தேகங்களை எழுப்புகின்றனர். பிபிசியிடம் பேசிய வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி, அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவில்லை, ஆனால், நிச்சயமாக காவல்துறையினர் சுட்டுப் பிடிக்கவில்லை எனக் கூறினார்.

அதேபோல, 1995 முதல் 1997 வரை வீரப்பனுடன் வனத்தில் இருந்த அன்புராஜூம், அவர் இறப்பு குறித்து காவல்துறையினர் கூறுவதை நம்ப மறுத்துவிட்டார்.

ஆனால், ஆப்பரேஷன் குக்கூனில்தான் வீரப்பன் சுட்டக்கொல்லப்பட்டார் எனக் கூறுகிறார் இந்த ஆப்பரேஷனில் தலைமை வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி செந்தாமரைக்கண்ணன்.

“அவர்களின் சந்தேகம் நியாயமானதே. ஏனென்றால், அந்த வாகனத்தில் இருந்தவர்களிலேயே வீரப்பனுக்குத்தான் துப்பாக்கிக் குண்டு காயம் குறைவு. அதற்கு இரண்டு காரணம் உள்ளது,” என்கிறார் அவர்.

“ஒன்று, அவர்கள் வருவதற்கு முன்னதாகவே ஆம்புலன்சில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலமாக வீரப்பன் எந்தப் பக்கம் அமர்ந்துள்ளார் எனத் தெரிந்துகொண்டு, நாங்கள் அந்தப் பக்கம் ஆட்களை அமர்த்தியிருந்தோம். அதனால், வாகனம் நின்றவுடன், துப்பாக்கிச்சூடு தொடங்கிய சில நொடிகளிலேயே வீரப்பனின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்து அவர், சரிந்தார்,” என்கிறார்.

இரண்டாவதாக வீரப்பன் மீது துப்பாக்கிக்குண்டுகள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக சேத்துக்குளி கோவிந்தன் வீரப்பனை அரண்போல பாதுகாத்ததாகக் கூறுகிறார் செந்தாமரைக்கண்ணன்.

“அதனால், வீரப்பன் மீது பெரிதாக துப்பாக்கிக் குண்டுகளே படவில்லை. அதேவேளையில், சேத்துக்குளி கோவிந்தன் மீதுதான் அதிகமான குண்டுக் காயங்கள் இருந்தன,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

இதை உறுதிப்படுத்தியுள்ள விஜய்குமார் ஐபிஎஸ், ஆம்புலன்சில் இருந்து முதலில் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டது சேத்துக்குளி கோவிந்தன்தான் என ஆப்பரேஷன் முடிந்ததும் உறுதி செய்ததாகத் தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆப்பரேஷனில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினரால் 338 குண்டுகள் ஆம்புலன்ஸை நாேக்கிச் சுடப்பட்டதாகவும், அதில் ஏழு குண்டுகள் சேத்துக்குளி கோவிந்தன் உடலில் காணப்பட்டதாகவும், இரண்டு குண்டுகள் வீரப்பனின் உடலைத் துளைத்து மறுபக்கம் வெளியேறியதாகவும், ஒரு குண்டு மட்டுமே வீரப்பன் உடலில் இருந்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.

 

யார் இந்த சந்தனமரக் கடத்தல் வீரப்பன்?

வீரப்பன்

பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM

கூசு.முனிசாமி மற்றும் புலித்தாயம்மாள் தம்பதிக்கு இரண்டாவதாகப் பிறந்தவர் வீரப்பன். தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள கோபிநத்தம் கிராமத்தில் பிறந்த இவர், தனது 17 வயதில் முதல் முறையாக யானை வேட்டையாடியதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

வீரப்பனை தேடி வந்த தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினருக்கு அவரின் உண்மையான வயதும் பிறந்த தேதியும் தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் ஆனதாகச் சிறப்பு அதிரடிப்படையில் இருந்த காவலர்கள் கூறுகிறார்கள். இறுதியாக, வீரப்பனை சந்தித்துவிட்டு திரும்பியவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது ஜாதகத்தை வைத்துத்தான் அவர் ஜனவரி 18, 1952இல் பிறந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டதாகத் தனது நூலில் பதிவு செய்துள்ளார் விஜய்குமார் ஐபிஎஸ்.

வீரப்பனுக்கு ஆரம்பம் முதல் இறுதி நாட்கள் வரை எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனப் பகிர்கிறார் அவருடன் இருந்த அன்புராஜ்.

“அவருக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த அரசியல் நோக்கமும் இல்லை, புரிதலும் இல்லை. வீரப்பனை வீரப்பனாகப் பார்க்காததே இங்கு பிரச்னை. ராஜ்குமார் கடத்தலின்போது அவர் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளும் தமிழ்நாடு விடுதலைப்படையினர் வைத்த கோரிக்கைகளே,” என விவரிக்கிறார் அன்புராஜ்.

இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட பின்னர், வனத்திற்கு அருகில் இருந்த மக்களை அரசு கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவாக உருவானவர்தான் வீரப்பன் என்கிறார் அன்புராஜ்.

“அவர் விவசாயக் குடியாகத்தான் இருந்தார். ஆரம்பத்தில் அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்துக்கொள்வது இயல்பாக இருந்தது. ஆனால், 1960களுக்குப் பிறகு அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லாததால், அவர்கள் வேட்டைக்குடிகளாக மாறினர்.

அதில், அவர்களுக்கு அரசாங்கத்தைச் சேர்ந்த வனத்துறையுடன் ஏற்பட்ட முரண் காரணமாகத்தான் அவர் தொடர்ந்து யானை வேட்டை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால், அவர் செய்த எதையும் நான் நியாயப்படுத்தவும் இல்லை; அதேநேரத்தில், அதற்கு அவர் மட்டுமே காரணமும் இல்லை,” என்கிறார் அவர்.

 

சுட்டுக் கொல்லப்பட வேண்டியவரா வீரப்பன்?

வீரப்பன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான பெரியய்யா ஐபிஎஸ், வீரப்பன் மிருகத்தனமாக எதையும் சிந்திக்கமால் முடிவெடுக்கும் நிலைக்குச் சென்றிருந்ததாகப் பகிர்கிறார்.

“அவர் தனது கூட்டாளிகளையே நம்ப மாட்டார். அவர்களின் கூட்டாளிகளுடன் வனத்தில் இருந்தாலும், அவரும் சேத்துக்குளி கோவிந்தனும் மற்றவர்களைக் கண்காணிக்கும் வகையில் தனியாகத்தான் இருப்பார்கள். அதனால், அவர்களை நம்பி நாம் எந்தக் காரியத்திலம் இறங்க முடியாது,” என்கிறார் பெரியய்யா.

காவல்துறையைச் சேர்ந்த யாராக இருந்தாலும், ஒரு குற்றவாளியை உயிருடன் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உச்சபட்ச தண்டனை வாங்கித் தருவதைத்தான் பெருமையாகக் கருதுவார்கள் எனக் கூறிய பெரியய்யா, வீரப்பனைப் போன்ற ஆட்கள் அதற்கான வாய்ப்பையே காவல்துறைக்குத் தருவதில்லை என்றார்.

“அவர் நல்லவரைப் போன்ற போலி பிம்பத்தில் திகழ்கிறார். அவரது நம்பிக்கையின்மையால்தான் 123 பேரைக் கொலை செய்துள்ளார். அதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பொது மக்கள். அவரிடம் நீங்கள் என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்? சுற்றி வளைத்தபின், காவல்துறையினரை நோக்கி சுட்டதால்தான், அவரை அதிரடிப்படையினர் சுட்டுள்ளனர்,” என்றார் பெரியய்யா.

 

‘வீரப்பன் எதிற்கும் வருத்தப்பட மாட்டார்’

வீரப்பன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இதுவரை தான் செய்த எந்தக் கொலைக்கும் வீரப்பன் வருத்தப்பட்டதோ அல்லது தவறு என எண்ணியதோ இல்லை என்கிறார் அன்புராஜ்.

பெரியய்யா கூறியதை ஆமோதிக்கும் வகையில், இதுவரை தான் செய்த எந்தக் கொலைக்கும் வீரப்பன் வருத்தப்பட்டதோ அல்லது தவறு என எண்ணியதோ இல்லை என்கிறார் அன்புராஜ்.

“அவர் கொலை செய்வதற்கு முன் பல முறை யோசிப்பார். ஆனால், கொலை செய்த பிறகு அதற்காக ஒருமுறைகூட அவர் வருந்தியது இல்லை,” என்றார் அன்புராஜ்.

வீரப்பன் செய்த கொலைகளிலேயே டி.எஃப்.ஓ ஸ்ரீநிவாசன் கொலைதான் மிகவும் கொடூரமானதாகக் கருதப்படுகிறது. “அந்தக் கொலையையும் அவர் சரி என்றே நம்பினார். அவருடன் காட்டில் இருக்கும்போது நானும் அதைச் சரி என்றே நம்பினேன்.

ஆனால், காட்டில் இருந்து வெளியே வந்த பிறகுதான் டி.எஃப்.ஓ குறித்துத் தெரிந்தது. அவர் உண்மையிலேயே வனத்தின் நலனுக்காகவும் வீரப்பனின் நன்மைக்காகவும்தான் சரணடையச் சொல்கியிருக்கிறார்,” என்றார் அன்புராஜ்.

https://www.bbc.com/tamil/articles/c1r4zqy2v3vo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.