Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 படிக்கறை                                                                                               -        சுப.சோமசுந்தரம்  

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                      படிக்கறை

                                                                                                   -   சுப.சோமசுந்தரம்

 

 

       படிப்பில் கரை காண வேண்டியவன் படியில் கறை கண்ட அவலத்தை என்னவென்பது ? நாங்குநேரியில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவன் மற்றும் அவன் தங்கையின் மீது வீடு புகுந்து நிகழ்த்திய கொலை வெறித் தாக்குதல் இன்னும் தமிழ் நிலத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சாதி வெறியின் குறியீடாய் வீட்டில் ரத்தக்கறை தோய்ந்த வாசற்படி சமூக வலைத்தளங்களில் வலம் வருவது ஈரக்குலை நடுங்க வைத்து நம் அடிவயிற்றைப் பிசைகிறது.

             சமூகப் பொறுப்புள்ள அனைவரும் நிலைகுலைந்து போய் நிற்கையில் சந்துக்குள் புகுந்து சிந்து பாடும் தீவினைகளுக்குப் பஞ்சமில்லை. பொதுவாக, என்ன தீமை நடந்தாலும் அரசியல்வாதிகளே காரணம் என்றும், மற்றபடி மாந்தர் அனைவரும் மகாத்மாக்கள் என்பது போலவும் வரும் பதிவுகள் Mr. வெகுசனம் திருந்த வழியே இல்லை எனும் விரக்தநிலையின் விளிம்புக்கே நம்மை இட்டுச் செல்வன. ஒவ்வொரு தொகுதியிலும் அங்கு பெரும்பான்மையான மக்கள் என்ன சாதியோ அந்த சாதியைச் சேர்ந்த வேட்பாளரையே எல்லா கட்சிகளும் நிறுத்துகின்றன என்று வெகுண்டெழுந்து குற்றம் சாட்டும் ஒவ்வொருவரும் கண்ணாடியில் தம் முகத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பெரும்பான்மை சாதியைச் சாராத ஒருவருக்கு அச்சாதியில் பெரும்பாலானோர் ஓட்டுப் போடும் பக்குவம் மக்களுக்கு வந்து விட்டதா ? சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு சாதிக்காரரும் வெறித்தனமாகப் பதிவு செய்வதைப் பார்த்த பின்பும் அந்த நம்பிக்கை வருகிறதா ? இந்த நிதர்சனம் நம் கண் முன்னேயே நிற்கையில், தோற்றுப் போவதற்கா எந்தக் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்துவார்கள் ?

            "சாதி ஒழிப்பு என்று சொல்லிவிட்டுப் பள்ளியில் சேர்க்கும்போதே சாதி கேட்பது இரட்டை நிலைப்பாடு இல்லையா ?" என்று இற்றுப்போன வாதங்களை முன்னிறுத்துவதும் 'உயர்'சாதியினரே ! இட ஒதுக்கீடு எனும் சமூகநீதியை நிலைநாட்டவே அது கேட்கப்படுகிறது என்பதும், இட ஒதுக்கீடு சாதியொழிப்பிற்கான ஒரு முன்னெடுப்பு என்பதும் அவர்களுக்குத் தெரியாமலில்லை. சமூக நீதிக்கு எதிரானவர்கள் அறிந்தும் அறியாதது போல்தான் செயல்படுவார்கள். இட ஒதுக்கீடு வேண்டாதவர்கள் 'சாதி இல்லை; மதம் இல்லை' என்று சொல்லிக் கடந்து செல்வதுதானே !

           அதே சமயம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியும் நிகழாமல் இல்லை. உதாரணமாக இந்த நாங்குநேரிக் கொடுமையில் அரிவாளால் வெட்டிய ஆதிக்க சாதியைச் சார்ந்த யாரோ ஒரு 'லெட்டர் பேட்' அமைப்பின் தலைவர் பாதிக்கப்பட்டோருக்கு நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு, ஆறு மாணவர்களைக் கைது செய்து சுமார் இருபது பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் குற்றவாளிகள் சார்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த அரசு தலித்துகளின் பக்கம்தான் நிற்கிறது என்று அவர் குற்றஞ்சாட்டுவதும், அதற்கு அச்சாதியைச் சார்ந்த சிலர் ஆகா, ஓகோ என்று பாராட்டுவதும் வெட்கக்கேடு. அதாவது ஆதிக்க சாதிகளில் சிலரை இந்த அரசுக்கு எதிராகத் திருப்பிவிடும் பாசிச அரசியலன்றி இது வேறென்ன ? சாதி அடையாளங்களைத் தாண்டி இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டோருக்குதானே மானிடம் குரலெழுப்ப வேண்டும் ? அந்த ரத்தக்கறை காயும் முன்பே தம் சாதியுணர்வு தலை தூக்கும் அளவுக்கு ரத்த வாடை நமக்குப் பழகிவிட்டதா ? வடக்கே எடுபட்ட மதவெறி இங்கே எடுபடவில்லை என்பதால், சாதிவாரியாக இங்கே ஆள் பிடிக்க ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட பாசிசத்திற்கு மேலும் நம்பிக்கையூட்டவா இந்தக் கொலைபாதகமெல்லாம் ? "இந்த இடத்தில் மட்டும் பேசுகிறார்களே, அந்தக் கிராமத்தில் எங்கள் ஆட்கள் வெட்டப்பட்டபோது இவர்கள் பேசினார்களா ?" என்று மேலும் உணர்ச்சியைத் தூண்டி விடுவது, என்ன பழக்கம்ணா இதெல்லாம் ? மணிப்பூருக்கு நியாயம் கேட்டால் ஈழத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்பதும், எங்களது பாசிசத்தைக் கேள்வி கேட்காதே என்பதும் ஒன்றுதானே ? அங்கே அப்போது என்ன நடந்தது என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்து வாதத்தில் ஒருவர் மற்றவரை வெல்லும் தருணமா இது ? சாக்கடை நீதி என்றெல்லாம் வன்மத்துடன் சமூகநீதியைக்  குறிப்பிடுவோர் எத்தகைய மானிடர்கள் ? இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வெட்டியவன் நம்ம ஆள், வெட்டுப்பட்டவன் வேற்று ஆள் என்ற கேவலமான உணர்வுதான். அந்த முடைநாற்றமெடுக்கும் உணர்வுக்குக் காரணம் நாம் சாதி என்னும் கந்தலான அழுக்குச் சட்டையைக் காலங்காலமாகக் கழட்டாமல் அணிந்திருப்பதுவே ! காலங்காலமாய் சாதிய அடக்குமுறையைக் கையாண்ட நாம் சாதிப் பெருமையை விடுத்து குற்ற உணர்வு கொள்வதும், சுயசாதி விமர்சனம் செய்வதும்தானே சரியாக இருக்க முடியும் ? எனக்குக் குற்ற உணர்வு உண்டு, தோழர் ! 'நாசகாரக் கும்பல்' என்று தலைப்பிட்டு, ஆதிக்க சாதியொன்றில் பிறந்த புதுமைப்பித்தன் தம் சாதியையே பழித்துரைத்துக் கதை எழுதினாரே, அந்த நேர்மை நம் அனைவருக்கும் வேண்டாமா ?

               அடுத்து ஆதிக்க சாதி வெறி கொண்டவர்கள் சாடுவது மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் போன்ற சமூகப் பொறுப்புள்ள திரைப்பட இயக்குனர்களை. அவர்கள் தாழ்த்தப்பட்டோரின் வலியை சமூகத்திற்குக் கடத்தியதன் பெயர் சாதி வெறியாம் ! பன்னெடுங் காலமாய் சமூகத்தில் அடி வாங்கியவர்கள் எழுந்து நின்றால் சாதி வெறியா ? என்னவோ இவர்கள் படம் எடுக்கும் முன் மாநிலத்தில் சாதிய சமரசம் நிலவியது போலவும் இவர்களால் தான் ஆதிக்க சாதிகளின் வெறி தூண்டப்பட்டது போலவும், என்ன பிதற்றல் இதெல்லாம் ? எப்போதோ நிகழ்ந்தவற்றை இப்போது ஏன் சொல்ல வேண்டும் என்று அந்தப் பக்கத்தில் நிற்போருக்கு வக்காலத்து வாங்க இந்தப் பக்கத்திலேயே சில அரசியலாளர்கள் நிற்பது வேதனை கலந்த வேடிக்கை. அந்தப்  பக்கத்தின் கணிசமான வாக்கும் இந்தப் பக்கத்தில் நின்று அரசியல் கட்சி நடத்தும் சிலருக்கு வேண்டுமாம்; பேராசைதான் போங்கள் ! (இந்த வேதனையிலும் "ஆசை, தோசை, அப்பளம், வடை !" என்று வேடிக்கையாகச் சொல்லத் தோன்றுகிறது). அடி வாங்கியவனுக்கு - இப்போதும் அடி வாங்குகிறவனுக்கு -  மக்கள் மன்றத்தில் முறையிடக் கூட உரிமை இல்லையா ? சமூக அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி சமீபத்தில் மாரி செல்வராஜ் பெற்ற வெற்றி அதிகமாகக் கண்ணடி பட்டது, அப்படத்தின் கொடுமைக்கார வில்லனை ஆதிக்க சாதியினர் தத்தம் சாதியனாய்க் கொண்டாடிய அநாகரிகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. இதற்கு முன் சாதியத்தை வைத்துப் படங்கள் வரவில்லையா ? தலைப்பிலேயே ஆதிக்க சாதிகளின் பெயர் கொண்ட படங்கள் வந்தபோது பரபரப்போ பிரளயமோ ஏற்படவில்லையே ? இப்போது மட்டும் என்ன ? ஏனென்றால் அவை ஆதிக்க சாதிப் பெருமை பேசின. இவை தாழ்த்தப்பட்டோர் பட்ட மற்றும் படும் காயங்களைக் காட்டுகின்றன.  இவர்களால் மட்டும் சமூகத்தை உலுக்கிப் பார்க்க முடிகின்றதே என்ற ஆதங்கத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

          சந்தில் புகுந்து சிந்து பாடுவதில் பாசிச இந்துத்துவா கும்பலின் திறமை குறைந்ததல்ல. "என்னவோ திராவிட மண்ணில் சமத்துவம் பெற்றாகிவிட்டது; சாதியை ஒழித்தாகிவிட்டது என்று முழங்கினீர்களே !" என்ற கொக்கரிப்பு அவர்கள் தரப்பிலிருந்து நாராசமாய் ஒலிக்கிறது. அவர்களுக்கு நம் பதில், "அடேய், வடக்கில் மதத்தின் பெயரால் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓட வைக்கும் நீங்கள் பேசலாமா ? பெரியாரையும் அண்ணாவையும் பேசும் திராவிட ஆட்சியில் வாசற்படியில் வழியும் ரத்தத்தோடு நின்றது. நீங்களாக இருந்தால் தமிழ் நிலத்தையே ரத்தக்காடாக மாற்றி இருப்பீர்கள்". ஆனாலும் இந்தக் கிராதகர்களுக்குப் பதில் இறுப்பதோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. சாதிய அரக்கனை முழுமையாக விரட்டினால் மட்டுமே தமிழ்ச் சமூகம் சற்று இளைப்பாற முடியும்.

              சாதி அடையாளம் நமக்கான அவமானம் என்று நாம் சொல்வதையே தாங்கவொண்ணாத சாதிவெறி அலப்பறைகள் இப்போதெல்லாம் நேருக்கு நேராகவும் சமூக வலைத்தளங்களிலும் அன்றாடம் நாம் எதிர்கொள்பவை. ஒரு முறை  ஒரு அன்பர் தந்த பதிலைப் பார்த்துப் புல்லரித்துப் போனேன். அந்த பதில், "உங்களுக்கு சாதி அடையாளம் அவமானமாக இருந்தால் விட்டு விடுங்கள். பெருமையாய்க் கருதுவோர் உண்டு; அது அவர்கள் உரிமை". மேலும், "பெருமை கொள்வதில் என்ன தவறு ? மற்றவரைத் தாழ்த்திப் பேசுவதுதான் தவறு" என்ற விளக்கம் வேறு. அந்தப் பெருமைதான் ஆணவக் கொலை வரை வந்து நிற்கிறது என்று அவருக்கு எப்படிச் எடுத்துச் சொல்லி விளங்க வைப்பது ? வீட்டிலும் சாதிக் குழுக்களிலும் பேசப்பட்ட சாதிப் பெருமைதானே இளம் மனதில் பசுமரத்தாணியாய்ப் பதிந்து நாங்குநேரியில் வாசற்படியில் குருதியாய் வழிந்தோடியது ? ஒரு குறிப்பிட்ட நிகழ்வை இங்கு நான் நினைவு கூர்ந்ததன் காரணம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் சமூகத்தில் சாதி புரையோடிப் போயிற்று என்பதேயாம்.

           என் வாழ்க்கையில் இது தொடர்பில் தனிப்பட்ட ஒரு நிகழ்வையும் இங்கு பதிய எண்ணம். மாநில அளவில் ஏதோ விருது பெற்றதற்காக நான் பிறந்த சாதிக்கான சங்கத்தில் என் போன்றோருக்கு சிறப்புச் செய்ய அழைப்பு விடுத்தார்கள். இயல்பாகவே தயங்கினேன். எனது குருநாதரான பேரா. தொ.பரமசிவன் அவர்களிடம் சொன்னேன். அந்த அழைப்பை ஏற்குமாறு அவர் சொன்னது முதலில் வியப்பாக இருந்தது. "பாராட்டிற்கான ஏற்புரையில் அவர்களது சிறப்பினைச் சொல்லிவிட்டு, உங்கள் சமூகத்தில் நிலவும் சில பழைய வழக்கங்களை மாற்றுவது மேலும் சிறப்பு என்று கோடிட்டுக் காட்டுங்கள். 'சாதிச் சங்கங்களின் நோக்கங்கள் முக்கியமாக இரண்டுதாம். ஒன்று, சமூகக் குழுவாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உரிய இடத்தில் முறையிட்டுத் தீர்வு காண்பது என்னும் குறுகிய கால நோக்கம்; இரண்டு, சாதி ஒழிந்த சமூகத்தை நோக்கிய நகர்வு எனும் நீண்ட கால நோக்கம்' என்பதை இறுதியாக வலியுறுத்துங்கள்" என்றார். பொதுவாக ஒரு அவையில் எனக்குப் பேசக் கற்றுக் கொடுத்ததே அவர்தாம். அவ்வகையில் பேசினேன். பண்பட்ட பேச்சு என்று சங்கத்தின் மலரில் பாராட்டினார்கள். வாழைப் பழத்தில் ஊசி ஏற்றிவிட்டு வெளியில் வந்ததை சாதனையாய்க் கருதுகிறேன். 'முற்போக்கு சிந்தனையாளர்கள் வெளியில் இருந்து பேசுவது போல் சாதிச் சங்கங்களின் உள்ளேயும் போய்ப் பேச வேண்டும்; சாதி ஒழிப்பிற்கான முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்று' என்பது எனது குருநாதரின் எண்ணம். இதில் மாற்றுக் கருத்தும் இருக்கலாம் என்ற அளவில் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

             எங்கள் தலைமுறையினருக்கு, சமூகத்திலிருந்து சாதி அகற்றப்பட வேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்தவும் வழிகாட்டவும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்ற சான்றோர் பெருமக்கள் இருந்தனர். நாங்கள் அவர்களைக் கேட்டோம்; அவர்களை வாசித்தோம். இப்போதும் அத்தகைய சான்றோர் பெருமக்கள் உண்டு. மற்றுப் பற்றில்லாத மக்கட்பற்றாளர் ஐயா இரா.நல்லகண்ணு அவர்கள் உண்டு; என்னதான் மற்றவர்கள் சாதி முத்திரை குத்தப் பார்த்தாலும், அதையெல்லாம் தாண்டிப் பரந்துபட்ட நிலையில் சமூகச் செயற்பாட்டாளர் தோழர் தொல்.திருமாவளவன் உண்டு; மேலும் சிலர் உண்டு. இன்றைய தலைமுறை இவர்களைக் கேட்க வேண்டும்; இவர்களோடு சேர்த்து எங்கள் காலத்துச் சான்றோரையும் வாசிக்க வேண்டும்.

            சாதி ஒழிப்பிற்கான முனைப்பு எனும் மாண்பு இன்று நேற்று தோன்றியதல்ல. குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பேசுபொருள் அது. 'தான் ஒரு படி மேல்' எனும் மானுட உளவியல் முறையிலான மேலாதிக்கச் சிந்தனையால் வெட்ட வெட்டத் தளைக்கும் விஷச் செடி சாதி. நாம் மீண்டும் மீண்டும் அச்செடியை வெட்டத்தான் வேண்டும்; மனிதர்களை அல்ல. காலங்காலமாய் நிகழும் சாதியொழிப்பு எனும் களையெடுப்பு, சுருக்கமாக மாணாக்கர்க்குச் சொல்லும் முகமாக கீழே பட்டியலிடப்படுகிறது. இப்பட்டியலில் ஒவ்வொன்றையும் வாசித்துப் புரிந்து கொண்டாலே மானுடம் வெல்லும்; மதத்தால் இவர்களைப் பிரிக்க முடியவில்லை என்பது போல சாதியாலும் பிரிக்க முடியாத பொன்னுலகம் தமிழ் நிலத்தில் கைகூடும்.

 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ......."

                (திருக்குறள் 972)

"ஒன்றே குலம் ஒருவனே தேவன் நன்றே நினைமின்"
                                                      (திருமந்திரம்; திருமூலர்)

 

"சாதி குலம் பிறப்பென்னும்

சுழிப்பட்டுத் தடுமாறும்

ஆதமிலி நாயேனை ........"

(திருவாசகம்; மாணிக்கவாசகர்)



"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்......."
                                                    (திருநாவுக்கரசர் தேவாரம்)

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்  -  மேதினியில்
இட்டார் பெரியோர்  இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி"
                                                     (நல்வழி; ஔவையார்)

"சாதி சமயச் சழக்கைவிட்டேன்

அருட்சோதியைக் கண்டேனடி – அக்கச்சி
சோதியைக் கண்டேனடி"
                                                    (திருவருட்பா; வள்ளலார்)

"சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்"
                                                     (அண்ணல் அம்பேத்கர்)

"மதம் மனிதனை மிருகமாக்கும்

சாதி மனிதனை சாக்கடையாக்கும்"     ‌‌                      (தந்தை பெரியார்)

"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
                         (பாப்பா பாட்டு; பாரதி)

"சாதிப்பிரிவு செய்தார்
     தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி-சகியே
     நீதிகள் சொன்னாரடி
       (சமத்துவப்பாட்டு; பாரதிதாசன்)

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

சாதிப்பிரிவு செய்தார் தம்மை உயர்த்துதற்கே

மதம் மனிதனை மிருகமாக்கும்
சாதி மனிதனை சாக்கடையாக்கும்

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

சாதி இரண்டொழிய வேறில்லை ]

மாற்று கருத்தே கிடையாது அய்யா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.