Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறைக் கொண்டாட்டம் - ராஜன் குறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறைக் கொண்டாட்டம்

ராஜன் குறை

spacer.png

னிதர்களைத் தவிர பிற விலங்கினங்கள் எதுவும் தன் இனத்தையே கொல்வதையோ, அழிப்பதையோ ஒரு பழக்கமாகப் பயில்வது இல்லை. அப்படி ஒன்றிரண்டு நிகழ்ந்தாலும் அது அபூர்வமானதே. ஒரு விலங்கு பிற விலங்கு இனங்களைக் கொல்வதுகூட உணவுக்காகவோ, தற்காப்புக்காகவோ இருக்குமே தவிர, தேவையற்று கொல்வது இல்லை. ஆனால், மனித இனம் போரை, கூட்டமாக பிற மனிதர்களைக் கொல்வதைத் தொழிலாக, வித்தையாக, கலையாக, அறிவியலாக, தத்துவமாக வளர்த்தெடுத்துள்ளது. விலங்குகளைக் கொல்வதோ ஒரு விளையாட்டாகவே கருதப்பட்டுள்ளது.

இப்படி ஒரு கொலையார்வம் இருந்தாலும் மிருகங்களைவிட நாகரீகமும், பகுத்தறிவும் உள்ள இனம் என்று மனிதம் தன்னைக் கருதிக்கொள்ளவும் செய்கிறது. மனித இனத்தின் அடிப்படை உள்முரண் ஒன்று உண்டென்றால் அது கொலையையும், தற்கொலையையும் தர்க்கரீதியாக, உணர்வுரீதியாக சிந்தித்துச் செய்ய முடியும் என்பதுதான். அதாவது உயிரைப் பறிப்பது, தன் உயிரையோ, பிற உயிரையோ பறிப்பது, ஒரு தேர்வாக மனிதர்கள் முன் எல்லா நேரமும் காணப்படுகிறது. 

இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், கொலைவெறி என்பதை மிருக உணர்வு என்று மனிதர்கள் எப்போதும் அபாண்டமாகக் கூறிவந்துள்ளார்கள். பண்பட்ட மனிதன் கொல்ல விரும்பமாட்டான்; பகைவனுக்கும் அருள்வான். ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டுவான் என்றெல்லாம் பலவாராக மானுட நாகரிக மேன்மையைக் கூறுவார்கள். எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும், உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்றெல்லாம் ஏராளமான தத்துவங்களையும் மானுடம் எழுதிவைத்துள்ளது. எல்லா உயிர்களையும், உலகங்களையும் படைத்த இறைவனை மானுடம் கற்பனை செய்து இறைவனை அன்பின் வடிவமாக நினைத்து பக்தி பரவசமாய் வாழ முனைந்துள்ளது. அதே இறைவன் பெயரால் ஏராளமான கொலைகளையும் செய்துள்ளது. 

கடந்த அறுநூறு ஆண்டுகளில் உலகில் பல மாற்றங்கள் நடந்தன. மானுடம் மிகப் பெரிய அளவில் பல்வேறு சமூகங்களின் அறிவைச் சேகரித்து உலகப் பொதுவான அறிதல்களை, சமூக முன்னெடுப்புகளை சாத்தியப்படுத்தியது. அதன் காரணமாக மானுடம் முன் எப்போதும் இல்லாத அளவு வன்முறையற்ற சகவாழ்வினை உருவாக்க விரும்பியது. அறிவியல், தொழில்நுட்ப உதவியுடன் மிகப் பெரிய சமூக ஒத்திசைவுகளைக் கட்டமைக்க முற்பட்டது. கூடவே, அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் உருவான கொலைக்கருவிகள், வெடி மருந்துகள் போன்ரவை, போர் நடவடிக்கைகளை விரிவாக்கின. ஒருபுறம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என மானுட ஒற்றுமையின் இலட்சிய பிரகடனங்கள், மற்றொருபுறம் பெரும் ராணுவ கட்டமைப்புகள், ஆயுதப் பெருக்கம், ஆக்கிரமிப்புகள், அடிமைச் சமூகங்கள் என முரண்பாடுகளின் பெருக்கம் மிகவும் கூர்மையடைந்தது. 

இந்தச் சூழ்நிலையில்தான் அழகியலின் பணி என்பது என்ன என்ற கேள்வியும் மீண்டும் துலக்கம் பெற்றது. போர் வீரர்களின் வீரத்தை, சாகசத்தை, தியாகத்தைப் போற்றிப் புகழ வேண்டுமா, அல்லது அமைதியை நாடும் ரசனையை, கொலைமறுப்பை, அன்பை, சகவாழ்வைக் கொண்டாட வேண்டுமா? கடந்த இருநூறு ஆண்டுகளில் அழகியலின் தத்துவம் குறித்து நடந்த விவாதங்களை எல்லாம் ஒரு மூச்சில் சுருக்கிச் சொல்லிவிட முடியாது. ஆனால் வன்முறையை, கொலையை எப்படி அணுக வேண்டும் என்ற கேள்வியை அழகியல் ஒருபோதும் அக்கறையின்றி கடந்து செல்லக் கூடாது. 

திரைப்பட அழகியலும், கதாநாயகனும் 

நம் புலனுலகை சிறு சிறு அசைபிம்பங்களாக பதிவுசெய்து அவற்றை குறிப்பிட்ட வரிசையில் தொகுத்து ஒரு கதையாடலாக மாற்றும் சாத்தியத்தைக் கண்டது திரைப்படக் கலை. முன்னெப்போதும் இல்லாத அளவு அது கண் முன்னே நிகழும் உலகியல் காட்சிகளாகவே கதையை நிகழ்த்திக் காட்டும் மாயத்தைச் செய்தது. கடல், மலை, காடு, இடி, மின்னல், மழை, காற்று என அனைத்தையும் அசைபிம்பங்களாக பிரதி செய்து திரையில் காட்டியது. ஆனால், அந்தப் பிம்ப உலகினுள் பார்வையாளர்கள் நுழைய, பிம்பங்களுள் பிம்பமாக அந்த உலகில் இயங்கும் ஒரு நாயகன் தேவைப்பட்டான்.

தங்கள் உளவியல் பதிலியாக அந்தப் பிம்ப உலகில் செயல்படும் நாயகனைப் பார்வையாளர்கள் கண்டார்கள். அதனால் உலகின் பல பகுதிகளிலும், கதையின் மையப்பாத்திரமான கதாநாயக பாத்திரத்தை ஏற்று நடிப்பவர்கள் நட்சத்திரங்களாக மாறினார்கள். ஒரு திரைப்படத்தின் பிரதிகள் ஏராளமான திரைகளில் காணப்பட முடியும் என்பதால், ஒட்டுமொத்த சமூகமும் கதாநாயக நடிகர்களிடம் கொள்ளும் ஈடுபாடே இந்த நட்சத்திரங்களை உருவாக்கியது. நட்சத்திர நடிகர்களே ஒரு தொழிலாக, வணிகமாக திரைப்படத் துறையினை நிலைபெறச் செய்தார்கள்.   

நட்சத்திரங்கள் மீதான வெகுஜன ஈடுபாடு வணிகம் தவிர பலவிதமான விளைவுகளைக் கொண்டிருந்தன. உலகம் முழுவதும் படித்தவர்களும், பாமரர்களும் ஒருசேரக் கொண்டாடிய சார்லி சாப்ளின் இரண்டாம் உலகப் போருக்கு இடையே போருக்கு எதிரான காவியமாக தன்னுடைய ‘தி கிரேட் டிக்டேடர்’ (1940) திரைப்படத்தை உருவாக்கினார்.

சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பிய எத்தனையோ திரைப்படங்கள் இந்த வெகுஜன நட்சத்திர ஈடுபாட்டினைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளிலும் உருவாகத்தான் செய்தன. இந்தியாவில், தமிழகத்தில் ஜாதீய ஆணாதிக்கச் சமூகத்தில் கட்டுண்டு இருந்த தன்னிலைகளை, தார்மீக சாகச கதாநாயக பிம்பங்கள் விடுவித்து அவர்களை சுயேச்சையாக செயல்படும் சாத்தியங்களை உருவாக்கின. அதேசமயம் எல்லா விளைவுகளும் நேர்மறையாகவும் அமைந்துவிடவில்லை.

நட்சத்திர பிம்பங்களின் கதாநாயக முன்மாதிரிகளிலிருந்து ஊக்கம் பெறுவதுடன் நிற்காமல், அந்த நட்சத்திர பிம்பங்களையே வழிபடும் சுயஇழப்பு மனோநிலையும் உருவாகத்தான் செய்தது. ஹாலிவுட் திரைப்படங்களும் சரி, பிற வணிக திரைப்படங்களும் சரி, வாழ்வியல் குறித்த திறப்புகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, நாயக பிம்பங்களின் செயல்வெளியாகவே திரைவெளியை மாற்றி மூளையை மழுங்கடித்தன. கடந்த நூறாண்டுகளில் திரைப்படங்களுக்கும் சமூகத்திற்குமான உறவு பல பிரம்மாண்டமான பரிமாணங்களைக் கொண்டது. இன்றைய நிலையில் அமெரிக்க திரைப்படமான ‘ஓப்பன்ஹைமர்’ இந்திய நகரங்களில் எல்லாம் திரையிடப்படுகிறது.

தமிழ் திரைப்படமான ‘ஜெயிலர்’ அமெரிக்க நகரங்களில் எல்லாம் வெளியாகிறது (பெரும்பாலும் அமெரிக்க வாழ் இந்தியர்களே பார்ப்பார்கள் என்றாலும்). இந்த இரண்டு படங்களுமே திரைப்பட அழகியலுக்கும் வன்முறைக்குமான தொடர்பைக் குறித்து சிந்திக்கச் செய்கின்றன. வன்முறை குறித்த நுண்ணுர்வை மழுங்கடிக்கச் செய்யும் பிற்போக்கு அழகியலையே இந்த இரண்டு படங்களும் இரு வேறு விதங்களில் பிரதிநிதித்துவம் செய்கின்றன. எதனால் அப்படி மதிப்பிடுகிறேன் என்பதைக் காண்போம்.  

 

64bc9fa40eeec.jpg

ஓப்பன்ஹைமர் 

மானுடம் நன்கு யோசித்து, தன் அறிவு, திறமை, ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி நிகழ்த்திய மாபெரும் கொலைபாதக, பேரழிவுச் செயல் என்றால் அது 1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது வீசிய அணுகுண்டுகள்தான்.  இந்தக் குண்டுகள் ஜப்பானிய ராணுவத்தின் மீது வீசப்படவில்லை. அப்பாவி மக்கள் மீது, தாங்கள் எப்படி எதற்காக கொல்லப்பட்டோம் என்றே தெரியாமல் எரிந்து மடிந்த மக்கள் மீது வீசப்பட்டவை. எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் கதிரியக்கத்தைத் தோற்றுவித்த குண்டுகள். உண்மையில் சொன்னால் அணு ஆயுதப் பயன்பாட்டினால் கொல்லப்பட்டது மானுடத்தின் ஆன்மா.   

‘ஓப்பி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் அந்தப் பேரழிவுக் குண்டுகளைத் தயாரித்து அளித்த அறிவியலாளர். இவர் தனிப்பட்ட முறையில் தீயவரா, நல்லவரா என்பது பிரச்சினையில்லை. நரகத்தின் பாதை நல்லெண்ணங்களால் செதுக்கப்பட்டது என்பது முதுமொழி. இன்று நாம் ஓப்பன்ஹைமர் என்று ஒருவரை நினைவில் கொள்கிறோம் என்றால் அதற்குக் காரணம் அவர் ஜப்பானில் வீசப்பட்ட அணு ஆயுதங்களைத் தயாரித்தவர் என்பதற்காகத்தான். 

யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் சுவாரசியமானதுதான். ஓப்பி பொதுவுடமை தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். பல மொழிகளைப் பயின்றவர். பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய விரும்பியர். ஆழ்ந்த தத்துவப் பார்வை கொண்டவர். கீதை வசனங்களைச் சொன்னவர். ஜெர்மனி அணு ஆயுதத்தை முதலில் கண்டுபிடித்துவிட்டால் உலகம் பேரழிவுக்கு உள்ளாகும் என்பதால், அமெரிக்கா முதலில் அதனை உருவாக்க வேண்டும் என்று நினைத்தவர். அதை வெற்றிகரமாகச் செய்து ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட பிறகு மீளா குற்றவுணர்வுக்கு ஆட்பட்டவர். அதன்பின் போரற்ற உலகை உருவாக்க முயற்சித்தவர். 

இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் வாழ்க்கை வரலாற்றை, அதன் சர்ச்சைகளை விரிவாக ஆராய்ந்து ‘அமெரிக்கன் ப்ரொமீத்யூஸ்: த டிரிம்ப் அண்ட் டிரேஜெடி ஆஃப் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர்’ (American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer) என்ற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளார்கள். அப்படி ஒரு நூலை படிக்கும்போது வாசகர்கள் ஓரளவு விமர்சனபூர்வமாக விலகி நின்று வாசிக்க முடியும். அந்த நூலை திரைப்படமாக்க கிறிஸ்டோபர் நோலன் முடிவுசெய்கிறார்.

நோலன் இருளும், ஒளியும் கலந்த நாயக பாத்திரங்களைக் கொண்டு பிரம்மாண்ட உலகளாவிய வெற்றிப் படங்களைத் தந்தவர். அணுகுண்டு தயாரிக்கும் திறமைக்கு நிகரான சுவாரசியமான கதையாடலை உருவாக்கும் திறன் கொண்டவர். இரண்டிலுமே தாக்கப்பட்டவர்கள் அவர்கள் அறியாமலேயே தாக்குதலுக்கு பலியாவார்கள் என்பதில்தான் ஒற்றுமை. ஒன்று இயற்பியல் தாக்குதல்; மற்றொன்று உளவியல் தாக்குதல். 

ஓப்பன்ஹைமர் இளம் அறிவியலாளராக பிரபஞ்சத்தின் ரகசியங்கள் குறித்து கனவு காண்கிறார். கோட்பாட்டுப் புலியாக இருந்தாலும், சோதனைச் சாலையில் நடைமுறைப் பயிற்சிகளில் திறமையில்லாமல் இருக்கிறார். கடும் ஏளனத்திற்கு ஆளாகி தற்கொலை முயற்சி வரை செல்கிறார். ஆனால் தக்க அறிவுரைகள், வழிகாட்டுதல் மூலம் தனக்கான பாதையைச் சமைத்துக்கொண்டு பெரும் அறிவியலாளர்களின் நன் மதிப்பைப் பெறுகிறார். அமெரிக்காவில் ஆணு அயுதம் தயாரிக்கும் திட்டத்தை தலைமை தாங்கி நடத்த தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த முயற்சியில் அவர் எப்படி திறம்பட செயல்பட்டார், அவருடைய ஐயங்களுக்கு எப்படி விடை கண்டார், விடா முயற்சியுடன் அணு ஆயுதத்தை எப்படி தயாரித்தார் என்பது திரைப்படத்தின் மைய பகுதியாக விளங்குகிறது. 

இங்கேதான் திரைப்படம் மிகப் பெரிய அழகியல், அறவியல் சிக்கலை உருவாக்குகிறது. திரைப்படத்தின் புலன்வெளியை தவிர்க்க முடியாமல் கதாநாயகன் வழியாகவே பார்வையாளர்கள் உள்வாங்குவார்கள். நாயகனின் போராட்டத்துடன் அவன் வெற்றி, தோல்விகளுடன் உணர்வுரீதியாக ஒன்றுவார்கள். அணு ஆயுதத்தை உருவாக்குவதில் ஓப்பி அடைந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடையும் நிலை அவர்கள் அறியாமலேயே உருவாகிவிடுகிறது. அதன் பிறகு ஓப்பி வருந்துகிறார். மனித குலத்தை அழிவுப்பாதையில் கொண்டுசென்றுவிட்டோம் என்று மறுகுகிறார். அதெல்லாம் சரிதான். ஆனால், அணு ஆயுதம் வெற்றிகரமாக உருவான தருணம் ஓப்பியின் வெற்றியாக அவருடன் சேர்ந்து கொண்டாடும் மனநிலை திரையரங்கில் தவிர்க்க முடியாமல் உருவாகிவிடுகிறது என்பதுதான் பிரச்சினை. அணு ஆயுத பரிசோதனை வெடிப்பிற்காக கவுண்டவுன் நடக்கிறது. அப்போது அனைவரும் அது வெடிக்கக் கூடாது என்றா நினைப்பார்கள்? அந்தக் கதையாடலின் கட்டமைப்பே வெற்றியை நோக்கியதுதானே? 

இதில் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் அணு ஆயுதம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட தருணத்தில் அது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், இன்றைக்குப் படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது என்பது தெரியும். அதிலிருந்து எழுபத்தெட்டு ஆண்டுகளாக எத்தனையோ கலைஞர்கள், சிந்தனையாளர்கள், தலைவர்கள் மனித குலத்தின் மனசாட்சியை ஓயாமல் தட்டியெழுப்பி வருகிறார்கள். அணுசக்தி பயன்பாடுகள் குறித்து ஏராளமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. செர்னோபில், ஃபூகுஷிமா அணு உலை விபத்துக்களுக்குப் பிறகு அணு சக்தி பயன்பாடு குறித்து சிந்திக்கச் சொல்லி மக்கள் மன்றத்தில் மன்றாடிவருகிறார்கள். அதெற்கெல்லாம் மிக முக்கியமான குறியீடு ஹிரோஷிமா. 

ஓப்பன்ஹைமர் திரைப்படம் ஹிரோஷிமாவிற்கு முந்தைய தருணத்தை, அணு ஆயுதம் ஒரு அறிவியல், தொழில்நுட்ப சாதனையாக தயாரிக்கப்பட்ட தருணத்தை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்துகிறது. ஹிரோஷிமாவுக்கு பிறகான உலகில் வாழும் நமக்கு அந்தத் தருணம் சாத்தியமற்றது, தேவையற்றது. ஆனால், அந்தத் தருணத்தை உணர்வுபூர்வமாக திரைவெளியில் உருவாக்குவதன் மூலம் ஹிரோஷிமா குறித்த குற்றவுணர்வை ஒப்பன்ஹைமர் திரைப்படம் மழுங்கடிக்கிறது. ஓப்பன்ஹைமருக்கு எப்படி தன் அறிவியல் தொழில்நுட்ப வெற்றி முக்கியமோ, அதேபோல நோலனுக்கு தன் திரைக்கதையாடலின் வெற்றிதான் முக்கியம். அதனால் பார்வையாளர்களை ஓர் இருண்ட தருணத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் கூட்டிவந்ததாக அவர் மகிழலாம். 

துரதிர்ஷ்டவசமாக மானுடம் ஏற்கெனவே அறம் பிறழ்ந்துதான் இருக்கிறது. வன்முறை நாட்டத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. அதைத்தான் படு அபத்தமான உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போர் நமக்கு உணர்த்துகிறது. எந்த நிமிடமும் உலகில் அணு ஆயுதம் மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்ற நிலையில்தான் வாழ்கிறோம். அந்த சூழ்நிலையை உணர்ந்த படமாக ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் அமையவில்லை. அருகாமை காட்சிகளில் ‘ஓப்பன்ஹைமர்’ பாத்திரமேற்று நடிப்பவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மூலம் கதையாடலின் தர்க்கத்தை சமன்செய்ய முடியாது.

கதையாடல் ஏற்கெனவே அணு ஆயுதத் தயாரிப்பைக் கொண்டாடிவிடுகிறது. அந்தப் பாவத்தை எதனாலும் கழுவ முடியாது என்பதே உண்மை. ஆனால், அமெரிக்க மனம் அதைக் கழுவத்தானே விரும்பும். இரண்டாம் உலகப் போர் குறித்த ஒரு பிரம்மாண்ட சுயநியாயப்பாட்டுக் கதையாடலை அமெரிக்கா தொடர்ந்து எழுபத்தெட்டு ஆண்டுகளாக திரைவெளியில் ஏராளமான திரைக்கதையாடல்கள் மூலம் உருவாக்கிவந்துள்ளது. அதன் உச்சகட்ட கண்ணிதான் ‘ஓப்பன்ஹைமர்.’ நம்மிடம் உள்ள மெல்லிய பாதுகாப்புக் கவசமே கூர்ந்த விமர்சனத்தின் மூலம் இந்தக் கதையாடல் தர்க்கங்களைக் கேள்விக்கு உள்ளாக்குவதுதான். 

 

64ca81584f090.jpg

ஜெயிலர் 

தமிழ்த் திரையுலகில், ஏன் இந்திய திரையுலகிலுமேகூட, நீடித்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட கதாநாயக நடிகராக ரஜினிகாந்த் விளங்குகிறார். திரைக் கதாநாயகனிலிருந்து வரலாற்று நாயகனாகவே உருமாறி அரசியலில் வெற்றி கண்ட எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கை முப்பதாண்டுகள்தான் நீடித்தது. ஆனால், ரஜினிகாந்த் நாற்பது ஆண்டுகள் கடந்தும் உச்ச நட்சத்திரமாக நீடிக்கிறார். அவரே கூறியபடி காக்கைகள் எட்ட முடியாத உயரத்தில் கழுகாக பறந்தபடி இருக்கிறார். 

ரஜினிகாந்த் நிறைய குட்டிக்கதைகள் சொல்வார். அறிவுரைகள் சொல்வார். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுள்ளவர். தன் படங்களிலும்கூட எளிமை, அன்பு, பாசம் ஆகியவற்றை நிறையவே வலியுறுத்தியுள்ளார். வாழ்க்கையின் நிலையாமை, பணம், பதவி, புகழ் போன்ற மாயைகள் எனப் பல தத்துவப் பார்வைகளைத் திரையிலும் சரி, பொதுவெளியிலும் சரி கூறக்கூடியவர். இந்தியப் பிரதமர்களே தேடிவந்து பார்க்குமளவு செல்வாக்கானவர். 

இவ்வளவு பெரும் சமூக மதிப்பு வாய்ந்த திரைப் பிம்பமான ரஜினி, 'ஜெயிலர்' படத்தில் வெளிப்படுத்தும் வெறித்தனமான வன்முறை அதிர்ச்சியளிக்கிறது. பென்சில் சீவுவது போல தலையைச் சீவுகிறார். டைனிங் டேபிளில் விழுந்து இறப்பவனின் ரத்தம் மனைவியின் முகத்தில் தெரித்தால் துடைத்துக்கொள்ளச் சொல்லி டிஷ்யூ பேப்பரைத் தருகிறார். தன் மனைவியையும், மருமகளையும் கொலைகளை இயல்பாக எடுத்துக்கொள்ள பயிற்றுவிக்கிறார். 

மிகக் கொடூரமான வில்லன் சட்ட விரோத செயல்களைச் செய்வதற்காக கொலைகளைச் செய்கிறான். கதாநாயகனான ரஜினி அவனைவிடக் கொடூரமாக ‘சட்ட’த்தின் சார்பாக கொலைகளைச் செய்கிறார். இதில் கொல்லாமை என்ற விழுமியத்திற்கு இடமே இல்லை; அது தேவையுமில்லை என்றாகிவிடுகிறது. 

ஆகப் பெரும்பாலான வணிக திரைக்கதையாடல்களின் தர்க்கமென்பது நாயகனுடன் பார்வையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதுதான். நிச்சலனமாகக் கொலைகளைச் செய்து குவிக்கும் ரஜினி பார்வையாளர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார், வன்முறை குறித்த அவர்கள் நுண்ணுணர்வுகள் என்னவாகும் என்று நினைக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே பள்ளிச் சிறுவர்களும் அரிவாளைத் தூக்கும் விபரீத போக்குகளைக் காண்கிறோம். 

இது வணிகத்திற்காகச் செய்யப்படுவதாக நான் நினைக்கவில்லை. ரஜினி நடித்து ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’ எல்லாம் ஓடவில்லையா என்ன? ‘எந்திரன்’ ஓடவில்லையா? அதிலும்தான் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றன. ஆனால், அவையெல்லாம் இப்படி இரக்கமற்ற கொலைகாரனாக கதாநாயகனை மாற்றவில்லையே? இங்கே நடப்பது என்னவென்றால் அழகியலின் அறம் பற்றிய குழப்பம். ஏதேதோ வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கிறார்கள். அதனால் வன்முறையைக் காட்சிப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அந்த வன்முறையை கதாநாயகனே செய்தாலும் தவறில்லை என நினைக்கிறார்கள். விமர்சனக் குரல்களுக்கு இடமில்லை. வசூலை மட்டும் பார்த்து மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டதாகக் கருதுகிறார்கள். அவர்களே விழா எடுத்துப் பாராட்டிக்கொள்கிறார்கள்.

நாம் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் கதாநாயகர்கள் வில்லன்களுடன் சண்டையிடுவார்கள். ஆனால், அவர்களைக் கொல்லும் சூழ்நிலை உருவாகும் முன்பு காவல் துறை வந்து கைதுசெய்துவிடும். வேறு சில படங்களில் வில்லன்கள் திருந்திவிடுவார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ (1965) படத்தில் விஷக் கத்தி பாய்ந்த மனோகரை எம்.ஜி.ஆரே சிகிச்சை செய்து காப்பாற்றுவார். மனோகர் மனம் திருந்திவிடுவார். சர்வாதிகாரியாக இருந்த அவரையே நல்லாட்சி தரச் சொல்லிவிடுவார் எம்.ஜி.ஆர்.  அதுவும் பிளாக் பஸ்டர் படம்தான். 

‘ஷோலே’ (1975) படத்தில் கப்பர் சிங் கொடூரமான சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரன். காவல் அதிகாரி சஞ்சீவ் குமாரின் குடும்பத்தையே கொன்றதுடன், அவர் இரு கைகளையும் வெட்டியவன். இறுதியில் அவனை கீழே தள்ளி, தன்னுடைய ஆணிகள் பதித்த பூட்ஸ் காலால் மிதித்து சஞ்சீவ் குமார் கொல்லப்போகும்போது போலீஸ் வந்துவிடும். இதுகுறித்து ஆய்வாளர்கள் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். தனிமனிதர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டிய தேவை அன்றைக்கு இருந்தது. இன்றைக்கு அதைவிட அதிகமாகவே இருக்கிறது. ஆனால், நமது கதாநாயகர்கள் வில்லன்களே வெட்கப்படும் அளவு கொடூரக் கொலைகளைச் செய்கிறார்கள். 

திரைப்படத்தின் சிறிய ஃபிளாஷ்பேக்கில் திஹார் ஜெயிலில் ஜெயிலராக இருக்கிறார் ரஜினி. ஜெயிலில் சட்ட விதிகள் இருக்கின்றன என்று கைதிகள் கூறும்போது, இங்கே நான் வைத்ததுதான் சட்டம் என்று கூறிவிடுகிறார். கேள்வி கேட்ட கைதியின் காதை வெட்டி எறிகிறார். சிறைவாசிகளின் உரிமைகளுக்காக மனித உரிமை ஆர்வலர்கள் எவ்வளவு போராடியுள்ளார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சிறைச்சாலைகள் குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் இலட்சியமே தவிர, அவர்களை மனிதத்தன்மையில்லாமல் நட த்த வேண்டும் என்பதல்ல. 

அதனால்தான் ஆறு கொலைக் குற்றவாளிகளை ஒரு சிறையதிகாரி தன் பொறுப்பில் கொண்டுவந்து அவர்களைக் கொண்டு விவாசாயம் செய்து புதிய விழுமியங்களை அவர்களைக் காணச் செய்யும் ‘தோ ஆன் கேன் பாரா ஹாத்’ (1957) என்ற படத்தை எடுத்தார் சாந்தாராம்.  அதைப் ‘பல்லாண்டு வாழ்க’ (1975) என்ற பெயரில் தமிழில் எடுத்தார் எம்.ஜி.ஆர். அதெல்லாம் லட்சியவாதப் படங்கள். அப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. வெற்றிமாறனின் ‘வட சென்னை’ போல யதார்த்தத்தில் நிலவும் வன்முறையைக் காட்டலாம். ஆனால், வன்முறையை நாயக வழிபாட்டுடன் இணைக்கக் கூடாது.  

தமிழ்நாடு அமைதிப் பூங்கா, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாதித்துள்ளது. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பிற இந்திய மாநிலங்களைவிட சிறப்பாக உள்ளது என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். ஆனால், இங்கே நீறுபூத்த நெருப்பாக வன்முறை கனன்று கொண்டுதான் இருக்கிறது. திரைப்பட அழகியல் ஆபத்தானது; அது நாயகர்களை முன்மாதிரிகளாகக் கொள்ள மக்களை தூண்டுவது. அந்த நாயகனை ஈவிரக்கமற்ற வன்முறையாளனாகச் சித்தரிப்பது விபரீதமானது. தணிக்கைக் குழுவால் இதையெல்லாம் சரிசெய்ய முடியாது. மானுடத்தின் தேவை என்பது சுய தணிக்கைதான். 

ரு தத்துவார்த்த மானுடவியல் ஆய்வாளனாக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் திரைப்படங்களைப் பொறுப்பாக்குவதை நான் சிறிதும் ஏற்பதில்லை. பிரம்மாண்டமான சமூக இயக்கத்தின் அலைகடல் பரப்பில் தோன்றும் நுரைகள்தான் திரைப்படக் கதையாடல்கள். ஆனால், அவற்றின் அழகியல் சமூகத்தின் ஆழ்மனதுடன் உரையாடக்கூடியது. அதனால் திரைப்படம் எடுப்பவர்களுக்கு நிச்சயம் பொறுப்புணர்வு வேண்டும். அதனை வலியுறுத்தும் விமர்சன சிந்தனையும் சமூகத்தில் வலுப்பெற வேண்டும். வன்முறையற்ற வாழ்வு என்ற லட்சியம் விருப்பத் தேர்வல்ல. அந்த இலட்சியம் இல்லாவிட்டால் மானுடம் அழிந்துவிடும். 

 

https://www.arunchol.com/rajan-kurai-krishnan-on-oppenheimer-and-jailer

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.