Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதறடிக்கப்படும் தமிழ் கவனக் குவிப்பு – நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிதறடிக்கப்படும் தமிழ் கவனக் குவிப்பு – நிலாந்தன்.

August 20, 2023
dispersion.jpg?fit=1170%2C702&ssl=1

குருந்தூர் மலை,  வெடுக்குநாறி மலை, பறளாய் முருகன் கோயில், தையிட்டி, திருகோணமலை, பெரியகுளம் உச்சிப்பிள்ளையார் மலை மாதவனை மயிலைத்த மடு மேய்ச்சல் தரை ராவணன் தமிழனா இல்லையா? மேர்வின் டி சில்வா தமிழர்களின் தலைகளைக் கொய்வாரா. என்றிவ்வாறாக அண்மை காலங்களில் தமிழ்க்கட்சிகள் செயற்பாட்டாளர்கள் ஊடகங்களின் கவனம் வெவ்வேறு திசைகளில் ஈர்க்கப்படுகின்றது .கிழமைக்கு ஒன்று அல்லது நாளுக்கு ஒன்று என்று ஏதோ ஒரு விவகாரம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

எங்காவது ஒரு புதிய விகாரை கட்டப்படுகிறது, அல்லது எங்காவது ஒரு தொல்லியல் சின்னம் அபகரிக்கப்படுகிறது, எங்காவது ஒரு நிலத்துண்டு அளவீடு செய்யப்படுகிறது அல்லது அல்லது பறிக்கப்படுகின்றது, அல்லது யாராவது ஒரு சிங்கள அரசியல்வாதி தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுகிறார்…. இப்படியாக அடிக்கடி புதிதுபுதிதாக விவகாரங்கள் மேலெழுகின்றன. தமிழ் அரசியல்வாதிகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களில் கவனங்கள் புதிய விடயங்களின் மீது குவிக்கப்படுகின்றன.

இவ்வாறு தமிழ்ச்சமூகத்தின் கவனத்தை அடுத்தடுத்து புதிய விடயங்களின் மீது குவியவைப்பதன்மூலம் திட்டமிட்டுத் தமிழ்ப் போராட்டசக்தி சிதறடிக்கப்படுகின்றதா? அரசாங்கம் திட்டமிட்டு “ட்ரெண்ட்களை செற்” பண்ணுகின்றதா?

சரத் வீரசேகர சொல்லுகிறார் ராவணன் ஒரு தமிழ் அரசன் இல்லையென்று. மேர்வின் டி சில்வா சொல்கிறார்… விகாரைகள் கட்டப்படுவதை எதிர்த்தால் தமிழ் மக்களின் தலைகளைக் கொய்து வருவேன் என்று. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மினக்கெட்டுப் பதில்கூற வேண்டிய விடையங்கள் அல்ல. அவர்கள் திட்டமிட்டு தமிழ்மக்களின் கவனத்தை சிதறடிக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டு தமிழ் மக்களை ஆத்திரப்படுத்துகிறார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் இது விடயத்தில் அரசாங்கம் விரும்புவதுபோல அல்லது சிங்களபௌத்த தீவிரவாதிகள் விரும்புவதுபோல அவர்கள் இழுக்கும் திசைக்கெல்லாம் எடுபடக்கூடாது. நிதானமாக விடயங்களை அணுக வேண்டும். அரசாங்கம் அல்லது சிங்கள பௌத்த தேசியசியவாதிகள் திட்டமிட்டு ட்ரெண்ட்களை செட் பண்ணுகின்றார்கள். அந்த ட்ரெண்டின் பின் தமிழ்மக்கள் அலையத் தேவையில்லை. அலையவும் கூடாது.

இந்த விடயத்தில் ஒரு மையத்திலிருந்து முடிவெடுக்கும் மக்களாக, ஒரு மையத்திலிருந்து விவகாரங்களை விளங்கிக் கொள்ளும் மக்களாக, ஒரு மையத்திலிருந்து எதையும் அணுகும் மக்களாக தமிழ்மக்கள் திரள வேண்டும். பிரச்சினைகளை அவற்றின் தொகுக்கப்பட்ட வடிவத்தில், அவற்றுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த வரைபடம் ஒன்றுக்குள் வைத்து தமிழ்மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே சிதறிப்போயிருக்கும் தமிழ்மக்களின் கவனத்தை மேலும் சிதறடிப்பதன்மூலம் அரசாங்கம் தான் விரும்பியதைச் சாதித்து விடும்.

இங்கே நான் கட்சிகளின் ஐக்கியத்தைப் பற்றிக் கதைக்க வரவில்லை. பல மாதங்களுக்கு முன் காரைநகர் பிரதேச சபையில் யாரைத் தவிசாளராகத் தெரிவது என்று விவகாரத்தின்போது தமிழ்த் தேசிய முன்னணியோடு நான் உரையாடினேன். அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் என்னிடம் சொன்னார்… சாதி ஏற்றத்தாழ்வுகள் போன்ற விவகாரங்களில் நீங்கள் சுட்டிக்காட்டும் பிரச்சினைகளை நாங்கள் உடனடியாகத் தீர்த்து வைப்போம். ஆனால் ஐக்கியம் என்ற ஒரு விடயத்தை மட்டும் தயவு செய்து எங்களிடம் கேட்க வேண்டாம்… என்று.

இக்கட்டுரை கட்சிகளின் ஐக்கியத்தைப்பற்றி உரையாடவில்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது பற்றியே உரையாடவிழைகிறது. தேசியவாத அரசியல் என்றால் ஒரு மக்கள் கூட்டத்தை பெருந்திரளாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்கள் ஒரு பெரும் திரளாக, தேசமாக விவகாரங்களை எதிர்கொள்ள வேண்டும். நடைமுறையில் அவ்வாறு தமிழ்மக்களை ஒரு தேசமாகத்திரட்டும் பொழுது புனிதர்களையும் விசுவாசிகளையும் உண்மையானவர்களையும் மட்டும் வைத்து ஒரு தேசிய இயக்கத்தை கட்டியெழுப்புவது அம்புலி மாமாக் கதைதான். ஏனென்றால் ஒரு மக்கள் கூட்டம் எனப்படுவது பல்வேறு அடுக்குகளை கொண்டிருக்கும். பல்வேறு அபிலாசைகளை கொண்டிருக்கும். பல்வேறு நோக்குநிலைகளைக் கொண்டிருக்கும். ஒரு மக்கள்கூட்டத்தைத் தட்டையாக, ஒற்றைப் பரிமாணத்தில் விளங்கிக் கொள்ள முடியாது. அதற்குள் பல்பரிமாணம் இருக்கும் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு மக்கள் கூட்டத்துக்குள் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள். ஒரு நபர் ஒரே நேரத்தில் தேசியவாதி போலவும் இருப்பார் அதே சமயத்தில் ஆண் ஆதிக்கவாதியாகவும் இருப்பார். ஒரு நபர் ஒரே நேரத்தில் சாதிவாதியாகவும் இருப்பார் தமிழ் தேசியவாதியாகவும் தோற்றம் காட்டுவார். ஒரு நபர் ஒரே நேரத்தில் மதவாதியாகவும் இருப்பார் தமிழ் தேசியவாதியாகவும் தோற்றம் காட்டுவார். தேசியவாதம் எனப்படுவது பல்வகைகளில் மீது ஒரு மக்கள் திரளைக் கட்டியெழுப்புவது என்ற கோட்பாட்டு விளக்கத்தின் அடிப்படையில் சிந்தித்தால் மதவாதி, சாதிவாதி, பிரதேசவாதி, ஆணாதிக்கவாதி போன்றவர்கள் தேசியவாதிகளாக இருக்கமுடியாது. ஆனால் தமிழ்க் கட்சிகளில் காணப்படும் முக்கியஸ்தர்களில் எத்தனை பேர் அவ்வாறு முழுமையாக தேசிய பண்பு மிக்கவர்களாக இருக்கிறார்கள்? ஏன் ஆயுதப் போராட்டத்திலேயே அந்த பிரச்சினை இருந்ததுதானே? ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் மத்தியில் காணப்பட்ட போராளிகள் எத்தனை பேர் அவ்வாறு தேசியப் பண்பு மிக்கவர்களாக காணப்பட்டார்கள்? இது ஒரு அடிப்படைப் பிரச்சினை.

ஒரு மக்கள் இயக்கம் என்று வரும்பொழுது ஒரு பெரிய கட்சி என்று வரும் பொழுது அதற்குள் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். ஒரு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய இயக்கம் எனப்படுவது அந்த மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய நல்லதையும் கெட்டதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் என்பது யதார்த்தமாகும். ஒரு பெரிய மக்கள் இயக்கம் எனப்படுவது அல்லது ஒரு பெரிய தேசிய இயக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க கொள்கைவாதிகளையும் தூய்மைவாதிகளையும் புனிதர்களையும் மட்டும் வைத்து கட்டியெழுப்பப்படும் ஒன்று அல்ல. யதார்த்தத்தில் அது ஒரு மக்கள் கூட்டத்தில் காணப்படும் எல்லா அடுக்குகளையும் ஏதோ ஒரு மையத்தில் இணைப்பதாகவே காணப்படும். இது தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கும் பொருந்தும்.

புனிதர்களையும், நல்லவர்களையும், கொள்கைவாதிகளையும், இலட்சியவாதி ளையும் மட்டும்வைத்து ஒரு தேசிய இயக்கத்தைக் கட்டமுடியாது. ஆனால் குறிப்பிட்ட இயக்கத்தில் அல்லது கட்சியின் மையத்தில் இருப்பவர்கள் அல்லது வழிகாட்டும் பொறுப்புகளில் இருப்பவர்கள் ஒப்பீட்டளவில் அதிகம் தேசிய பண்பு மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாகும். ஒரு கட்சியின் அல்லது மக்கள் இயக்கத்தின் முடிவெடுக்கும் பொறுப்புகளில் இருப்பவர்கள் கொள்கைவாதிகளாக இலட்சியவாதிகளாக தேசிய பண்பு ஒப்பிட்டுளவில் அதிகம் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம். கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள் எல்லாரிடமும் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது. அவர்களிடமிருக்கும் எதிர்த்தேசிய அம்சங்களைக் களைநீக்கம் செய்ய வேண்டியது அல்லது இருள் நீக்கம் செய்ய வேண்டியது மையக்குழுவின் பொறுப்பு. அல்லது தலைமை தாங்கும் நபர்களின் பொறுப்பு.

எனவே ஐக்கியத்தை கட்டியெழுப்பும் பொழுது அந்த ஐக்கியத்துக்குள் பலதும் பத்தும் இதுக்கும் என்ற யதார்த்தத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு ஐக்கியத்தைக் கட்டியெழுப்பிய பின் அந்த ஐக்கியத்திற்கு தலைமைதாங்கும் தரப்புகள் அந்த ஐக்கியத்தை எப்படிக் கொள்கை அடிப்படையில் பலப்படுத்துவது; இறுக்கமாக்குவது என்று சிந்திக்கலாம். புனிதர்களையும் நீதிமான்களையும் மட்டும் வைத்துக்கொண்டு ஐக்கியத்தை கட்டியெழுப்பலாம் என்றால், தமிழ்மக்கள் என்றைக்குமே ஒரு பெருந்திரளாக வர முடியாது. நீதிமான்களிடந்தான் நீதியைக் கேட்கலாம் என்றால் தமிழ் மக்கள் யாகந்தான் செய்யவேண்டும்.

எதிரிக்கு எதிரான கோபந்தான் கடந்த பல தசாப்தங்களாக தமிழ்மக்களை ஒப்பீட்டளவில் பெருந்திரளாகக் கூட்டிக்கட்டி வைத்திருக்கிறது. அதாவது இன எதிர்ப்புணர்வு அல்லது இனமான உணர்வு போன்றவைதான் தமிழ்மக்களைப் பெருமளவுக்கு ஒரு தேசமாகத் திரட்டி வைத்திருக்கின்றன. மாறாக தேசியவாதம் தொடர்பான அறிவுபூர்வமான விஞ்ஞானபூர்வமான கொள்கைகளை விளங்கி தமிழ்மக்கள் ஒரு பெருந் திரளாக மேல்லெழுந்தார்கள் என்பது உண்மையல்ல. உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான எல்லாத் தேசியஇன விடுதலைப் போராட்டங்களுக்கும் இது பொருந்தும். கருத்து மக்களை திரட்டுவதை விடவும் எதிரிக்கு எதிரான கூட்டுணர்ச்சி ஒரு மக்கள் கூட்டத்தை இலகுவாகத் திரட்டிவிடும்.

ஒரு பெருந்திரளைக் கட்டியெழுப்புவது அல்லது ஒரு பேரியக்கத்தை கட்டியெழுப்புவது அல்லது ஒப்பீட்டளவில் பெரிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது அதாவது தமிழ்மக்களை ஆகக்கூடியபட்சம் ஒரு பெருந்திரளாகக் கட்டியெழுப்புவது என்பது கொள்கையின் அடிப்படையில் அல்லது, புனிதமான, விட்டுக்கொடுக்கப்பட்ட அளவுகோள்களின் அடிப்படையில் என்றைக்குமே சாத்தியப்படப் போவதில்லை. தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமல்ல இப்பூமியில் எந்த ஒரு மக்கள் கூட்டத்தையும் அவ்வாறு புனிதமான அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனமயப்படுத்த முடியாது.

இது மக்கள் இயக்கங்களுக்கு மட்டுமல்ல மத நிறுவனங்களுக்கும் பொருந்தும். உலகில் உள்ள எல்லா மத நிறுவனங்களிலும் அதன் மூலப் புத்தகங்களில் உள்ள புனிதமான அம்சங்கள் பேணப்படுகின்றனவா? மதங்களில் மட்டுமல்ல மதங்களை நிராகரித்த இடதுசாரி இயக்கங்கள் மத்தியிலும் அதே பிரச்சினை உண்டு.

மக்களை நிறுவனமயப்படுத்தும் பொழுது அந்த மக்கள் மத்தியில் இருக்கும் பலங்களை மட்டுமல்ல, பலவீனங்களையும் சேர்த்து நிறுவனமயப்படுத்தாமல் இருப்பது என்பது மிகவும் சவால் மிகுந்தது. ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருக்கும் பலவீனங்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களை நிறுவனமயப்படுத்திய பின் தலைமை தாங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அந்த பலவீனங்களை படிப்படியாக அகற்ற வேண்டும். அதுதான் நடைமுறைச் சாத்தியமானது.

தமிழ்மக்கள் மத்தியில் இதுவரையிலும் தோன்றிய எல்லா ஐக்கியங்களும் எல்லா சிவில் கட்டமைப்புகளும் மக்கள் அமைப்புகளும் அவ்வாறு பலங்களையும், பலவீனங்களையும் வைத்துக்கொண்டுதான் கட்டியெழுப்பப்பட்டன. புனிதமான கூட்டு என்று எதுவுமே இந்தப் பூமியில் கிடையாது. முழுக்கமுழுக்க கொள்கை ரீதியிலான கூட்டு என்பதும் இந்த பூமியில் கிடையாது. தூய தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. தங்கத்தை ஆபரணமாக்குவதென்றால் அதில் செப்பைக் கலக்கவேண்டும். நாங்கள் அணியும் எல்லாத் தங்க நகைகளிலும் கலப்பு உண்டு என்ற நடைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது அரசியலுக்கும் பொருந்தும். மக்கள் இயக்கங்களுக்கும் செயற்பாட்டு இயக்கங்களுக்கும் பொருந்தும். தலைமைகள் உறுதியாக இருந்தால்சரி. “ஆயிரம் ஒட்டகங்களுக்கு ஒரு சிங்கம் தலைமை தாங்கலாம். ஆனால் ஆயிரம் சிங்கங்களுக்கு ஒர் ஓட்டகம் தலைமை தாங்க முடியாது. சிங்கமாக இருப்பதா ஒட்டகமாக இருப்பதா என்பதனை தமிழ்த் தலைமைகள் தீர்மானிக்க வேண்டும். இல்லையென்றால் புதிய தலைமைகள் மேலெழ வேண்டும்.

ஏனெனில் தமிழ் மக்களின் கவனக்குவிப்பு திட்டமிட்டுச் சிதறடிக்கப்படுகிறது. தமிழ்மக்களால் ஒருமித்துப் போராட முடியவில்லை. அது அதன் எதிர்மறை விளைவாக ரணில் விக்கிரமசிங்கவின் சிங்களபௌத்த வாக்கு வங்கியைத்தான் வளர்க்கும். தமிழ்மக்கள் சிதறி நின்று போராடினால் அது எதிரிக்கு சேவகம் செய்யும். திரண்டு போராடினால் அங்கே அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும்.
 

 

https://globaltamilnews.net/2023/194261/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.