Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

தங்கமீன் : விஜய ராவணன்

 

 

IMG_20230723_214635.jpg?resize=842%2C792

நண்பா! நம் இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் பல வருடப் போரில் நான் இரவை விட, பகலைக் கண்டு தான் அதிகம் அஞ்சுகிறேன். உனக்குத் தெரிந்தது தான். போர்க் காலத்தின் விடியல் பொழுது ஏமாற்றங்கள் நிறைந்தவை. இரவின் இருட்டில் நடந்தேறிய கொடுமைகளை பகல் அப்படியே திரைதூக்கிக் காட்டிவிடும். உயிர்வாழ இன்னுமொரு பொழுது போராட வேண்டியிருக்கும் என்ற அறிவிப்புதான் இங்கு விடியல்.

உள்ளங்கையில் மினுங்கும் தோட்டாக்களை ஆட்காட்டி விரலால் உருட்டியபடி மேலும் சொன்னான், யோசித்துப் பார்த்தால் போர் சூழ்ந்த இந்நிலத்தில் இரவு பகல் இரண்டுக்கும் பெரிய வித்தியாசமொன்றும் இருந்ததில்லை. ஆனால் அப்போது கண்ணாடித் தொட்டியில் இரு அழகிய தங்கமீன்களை வளர்த்த என் சிறுவயது உற்சாகத்துக்கு முன்னால் இவை எதுவும் ஒரு பொருட்டில்லை தானே!

கேட்டுக்கொண்டிருந்த எதிர்த்தரப்பு இராணுவவீரன் ஆமோதிப்பதைப் போல் தலையசைத்தான். தங்கமீன்கள் என்றதும் அவனது முகத்தில் வெளிப்படையான  உற்சாகம் தெரிந்தது. தன் ஒடிசலான இளமுகத்துக்குச் சற்றும் பொருந்தாத பெரிய கரும்பச்சைநிறத் தலைக்கவசத்தைக் கழட்டி முள்வேலியோரம் வைத்துவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தான். இருவரும் சில நிமிடங்கள் சிகரெட்டைப் பகிர்ந்துகொண்டு மௌனமாக அமர்ந்திருந்தனர். சற்று தொலைவில் துப்பாக்கிகள் இயங்கும் சத்தம் விட்டுவிட்டு கேட்டபடி இருந்தது.

தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஆயுதப் போராளி மீண்டும் பேசத் தொடங்கினான்…

சிறுவயதில் எனக்கு இப்போதிருக்கும் உறுதியான உடற்கட்டு வாய்த்திருக்கவில்லை. தோல் மேலாடையால் எலும்புக்கூட்டைப் போர்த்தியது போன்றுதான் நோஞ்சானாக இருப்பேன். ஆனால் என் மெலிந்த கைகளுக்குக் கண்ணாடி மீன்தொட்டி என்றுமே பாரமாக இருந்ததில்லை. நான் வளர்த்த இரு மீன்களும் அத்தனை அழகு. அச்சு அசலாக ஒரே மாதிரியான பளபளக்கும் நிறக்கலவை. சின்னது பெரியது என்பதைத் தாண்டி இரண்டுக்கும் வேறு எந்த வேறுபாடும் கிடையாது. மினுங்கும் முட்டை வடிவ உடல்வாகு. வழமையான தங்க நிறத்தில் அடர் சிவப்பும் மஞ்சளும் சேர்ந்த ஒற்றைவால் தங்கமீன்கள் அவை.

முகத்தை எதிர்த்தரப்பு இராணுவவீரனுக்கு மிக நெருக்கத்தில் கொண்டுபோய்க் கிசுகிசுக்கும் குரலில் கூறினான், ஒரு ரகசியம் சொல்லட்டுமா? என் தங்கமீன்கள் இரண்டையும் ஒரு அழகிய இளம்பெண் தான் பிரசவித்தாள் என்றால் நீ நம்புவாயா நண்பா! சொல்லப்போனால் அவை இரண்டுமட்டுமல்ல. நூற்றுக்கணக்கான தங்கமீன்களை உங்களின் குண்டு பொழிவுகளுக்கு மத்தியில் அவள் ஈன்றெடுத்துக் கொண்டிருந்தாள்!

அவன் சொல்லப் போவதைக் கேட்க, எதிர்த்தரப்பு இராணுவவீரன் தன் ரேடியோவை அணைத்து வைத்தான். அதன் கரகர சத்தம் முற்றிலும் ஓய்ந்ததும் இரவு மேலும் அமைதியானது. மிகத் தீர்க்கமான குரலில் போராளி பேசத் தொடங்கினான்…

எங்கள் நகருக்கு முற்றிலும் பரிச்சயப்படாத முகம் அவளுடையது. போர்ச்சூழலுக்கு மத்தியில் திடீரென்று ஒருநாள் தோன்றினாள். அதற்குமுன் யாரும் அவளைப் பார்த்ததில்லை. ஏழே நாட்களில் பிரபஞ்சம் படைக்கப்பட்டதைப் போல் அவளது வண்ணமீன் கடையும் திடீரென முளைத்திருந்தது. அவளைச் சுற்றி இதேபோன்ற மர்மங்களுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால் ஊரார் முணுமுணுப்புகளுக்கு வேறொரு காரணமும் இருந்தது. அது அவளின் வசீகர அழகு. இளம் பெண்களைக் கூட ஒருகணம் வெறித்துப் பார்க்கச் செய்யும் அவளது நடையின் வேகமும் அழகும் அலாதியானது. வெயிலின் பிரதிபலிப்பில் கூடுதலாகப் பளபளப்பாள். அவள் கடந்து போகும் நொடியில் அரிய நறுமணம் காற்றில் நிறைந்திருக்கும்

இதைச் சொல்லி முடித்ததும் போராளி பெருமூச்சுவிட்டான். அவன் தோளில் தட்டி இராணுவவீரன் கேட்டான்

அப்போது உனக்கு எவ்வளவு வயதிருக்கும்?

என்ன பதினொன்றோ பன்னிரண்டோ இருக்கும்…

விளையும் பயிர் என்று இராணுவவீரன் கேலியாகச் சிரித்தான். பின் தன் நீண்ட பாரமான பூட்சை மிகுந்த பிரயாசையுடன் கழட்டி வைத்தான். பெரியதொரு எடையை உடல் உதிர்த்துவிட கண்கள் அனிச்சையாக மூடித் திறந்தன.

வளரிளம் பிராயத்தில் வேறென்ன வேலை? என்ற போராளி தன் சட்டையைக் கழட்டி ஆலிவ்மரக் கிளையில் தொங்கவிட்டான். பின் அதே மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்து அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தபடி சொன்னான்…

என் நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் உதவி முகாமில் தான் வசித்து வந்தேன். அங்கிருந்து நகரம் அத்தனை தொலைவில்லை. பகல் பொழுதுகளில் உணவு சமைக்கவும் முகாமைச் சுத்தம் செய்யவும் ஏதேனும் ஒத்தாசை செய்யவேண்டும் என்பதால் எப்படியாவது வெளியேறிவிடுவேன். இரவு வேளைகளில் எங்களின் பெரும்பாலான பேச்சுகள் அவளைச் சென்றுதான் முடியும். அவளின் உதட்டுச் சாயம்… கூந்தல் நிறம்… உடல் கட்டமைப்பு… சுண்டி இழுக்கும் கண்கள்… நான் ஒருவித கூச்சத்தோடு இதேபோன்ற பேச்சுகளில் இருந்து விலகி படுக்கைக்குச் சென்றுவிடுவேன். ஆனால் இமைகள்மூடி அவர்கள் பேசுவதைக் கேட்டபடியே இருப்பேன்.

இப்போதும் நினைவு இருக்கிறது. அவள் கண்களில் அப்படியொரு ஈர்ப்பு. நீலநிறக் கண்கள் ஏதோ அதிசய கற்களைப் போல் ஒளிவீசின. அன்றுதான் அவளை அத்தனை நெருக்கத்தில் பார்க்கிறேன். நல்ல உயரமும் கம்பீரமும் கூடிய உடல்வாகு. எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தபடியே இருந்தேன். காற்றில் அளவளாவிய முடிக்கற்றையை எடுத்து காதுமடலுக்குப் பின்னால் சொருகிக்கொண்டாள். என் உயரத்துக்குக் குனிந்து, என்ன வேண்டும் என்று அவள் கேட்ட நொடியில் தான் அவளின் வண்ணமீன் கடையை உற்றுக் கவனித்தேன். மிகச்சிறிய கடை தான், ஆனாலும் மேசைகளிலும் அலமாரிகளிலும் வெவ்வேறு வடிவ கண்ணாடி பாட்டில்கள் முதல் பெரிய கண்ணாடித் தொட்டிகள் வரை நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அனைத்திலும் விதவிதமான தங்கமீன்கள்.

உங்களைப் போல் அழகான கோல்ட் ஃபிஷ் வேண்டுமென்றேன்.

சிவந்த உதடுகளில் மிதமான புன்னகையோடு, என்னை விட அழகான மீன்கள் இங்கு நிறையவே இருக்கின்றன என்றாள். நான் கற்பனித்திருந்ததைக் காட்டிலும் மிகமென்மையான குரல்.

சாய்த்து வைத்திருந்த தானியங்கித் துப்பாக்கி சரிந்து விழவும் இரும்புச் சத்தம் இரவின் மௌனத்தைச் சலனப்படுத்தியது. பேசிக் கொண்டிருந்த போராளி சட்டென பதட்டமடைய இராணுவவீரன் கேலியாகச் சிரித்தான். குழந்தையைப் போல் துப்பாக்கியை மடியில் எடுத்து வைத்து கைப்பிடியில் படிந்திருந்த மணலைத் தட்டிவிட்டபடி போராளி பேச்சைத் தொடர்ந்தான்…

சமாதான முன்னெடுப்பு என்று உங்கள் இராணுவத்தின் சிறு பிரிவு எங்கள் எல்லைக்குள் புகுந்தது தான் தொடக்கப்புள்ளி. வீதியில் இறங்கி மக்கள் இராணுவத்தை எதிர்த்துப் போராட்டம் செய்தனர். பதாகைகள் ஏந்தியபடியும் கும்பலாகப் பாட்டு பாடியபடியும் ஒன்றாகக் கூடி நின்று சமைத்தபடியும் இராணுவத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். எனக்கு அது கொண்டாட்டம் என்பதைத் தாண்டி வேறெதுவும் நினைவில் இல்லை. ஊரே மைதானத்தில் திரண்டிருக்க அவளின் வண்ணமீன் கடை மட்டும் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது.

ஒரு பெண் இப்படித் தன்னிச்சையாக இயங்குவது கொஞ்சமும் உவப்பில்லை என்று வயதான முல்லா ஒருவர் வெளிப்படையாகவே முணுமுணுத்தார். சொல்லப்போனால் போராட்டத்தின் முக்கிய பேச்சுப்பொருளாக அவள் மாறிப் போனாள். ஆண்களை விட பெண்களின் மத்தியில். தலைநகரில் நடந்த வான்வெளித் தாக்குதலில் அவள் தன் குடும்பத்தை இழந்துவிட்டாள் என்றனர் சிலர். அதேநேரம் அவள் எதிரியின் உளவாளி என்றும் இராணுவ அதிகாரியின் ரகசியக் காதலி என்ற பேச்சும் இருந்தது.

நீயே சொல் நண்பா, உங்கள் இராணுவத்தின் ஒத்தாசை இல்லாமல் ஆக்கிரமிப்பு நகரில் ஒரு இளம்பெண்ணால் எப்படிக் குடிபெயர்ந்திருக்க முடியும்?

இதில் தனக்கு எந்தக் கருத்தும் இல்லை என்பது போல இராணுவவீரன் தோள்களைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கவும், போராளி புன்னகைத்தபடி மேலும் தொடர்ந்தான்… 

அவள் திருமணமானவள் எனக் கூட்டத்தில் ஒருவன் சொல்ல உனக்கு கண் அவிந்துவிட்டது, அவளைப் பார்த்தால் யார் அதை ஒப்புக்கொள்வார்கள் என்று மற்றவன் வெளிப்படையாக மறுத்துக் கொண்டிருந்த வேளையில், தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். கானல்நீரிலிருந்து அவள் மெல்ல மேலெழும் போது கூட்டம் சலசலத்தது. நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட கம்பளி ஒன்றை தன் ஆடைக்கு மேல் சுற்றியிருந்தாள். அவளின் வாளிப்பான உடலை அது மேலும் இரு சுற்று மறைத்திருந்தது. கொஞ்சமும் கசிய விரும்பாத மர்ம அழகு. பார்வை விலகாது பல கண்கள் உற்றுப் பார்த்தபடி இருக்க, பெண்கள் சிலர் சத்தமாக முணுமுணுத்தனர், நடையப் பாரு! வேசி மகள்!

அன்றுதான் அவளை முதல்முறை பின்தொடர்ந்தேன். மாலை கவியத் தொடங்கியதும் கடையைப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினாள். அவளால் எல்லா திசைகளிலும் ஒரே நேரத்தில் பார்வையைச் செலுத்த முடிந்திருந்தது. அவளின் குதிகால் காலணியின் சத்தம் தனியாக எதிரொலித்தபடி தொடர்ந்தது. என் கால்களுக்கு எட்டாத வேகத்தில் போய்க் கொண்டிருந்தாள், மீன்குஞ்சைப் போல் வீதியில் வேகவேகமாக நீந்தியபடி.

அவள் போகும் பாதை நேராக எங்கள் சோலைக்குச் செல்லக் கூடியது என்பதை பாதி வழியிலே புரிந்து கொண்டேன். ஏன் என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது. நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்நேரம் இராணுவ வாகனம் ஒன்று எதிர்ப்பட்டது. ஆள் இல்லா வீட்டு வெளிச்சுவருக்குப் பின்னால் சட்டென ஒளிந்து கொண்டேன். உள்ளூர மெல்ல நடுக்கம் மேலிட்டது. ஜீப்பை நிறுத்தி அவளிடம் ஏதோ விசாரித்தனர். தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்ட நான்கு இராணுவவீரர்களும் அவளைச் சூழ்ந்து கொண்டனர். எந்த எதிர்வினையும் இன்றி தலைகுனிந்தபடி நின்றிருந்தாள். அவள் சுற்றியிருந்த கம்பளித் துணியைத் தொட்டுப் பார்த்தனர். ஒருவன் அதை விளையாட்டாக இழுத்தான். அவள் உடல் லேசாக நடுங்கிற்று. ஒளிந்திருந்த என்னுள் ஆத்திரமும் அழுகையும் மேலிட கையில் கிடைத்த சிறு கற்களை எடுத்து வீசினேன். பயன் ஏதுமின்றி எங்கோ போய் விழுந்தன.

அந்நேரம் கறுப்புப் புள்ளிகள் கொண்ட பச்சைநிற ஜீப் ஒன்று அங்கு வரவும் நான்கு இராணுவவீரர்களும் விறைப்பாக நின்று வணக்கம் வைத்தனர். அவர்களின் உயரதிகாரியாக இருக்க வேண்டும் என்பது அவன் ஜீப்பில் இருந்து இறங்கி நின்ற தோரணையில் தெரிந்தது. அவளைக் காட்டி நான்கு வீரர்களையும் பார்த்து ஏதோ கோபமாகப் பேசினான். தலைகுனிந்தபடி நின்றிருந்தனர். அவளிடம் வலுக்கட்டாயமாகப் பேச முனைந்தான். அவளும் தயங்கி தயங்கி ஏதோ பதில் சொன்னாள். மேல்பக்கம் மூடாமல் திறந்திருந்த ஜீப்பின் டயர்கள் அவர்களின் பாதி உயரமிருந்தது. இரண்டு இருக்கைகள் மட்டுமே கொண்டிருந்த ஜீப்பின் பின்பக்கம் காக்கிநிற இராணுவப் பைகளும் தலைக்கவசங்களுமாக நிறைந்து கிடந்தன. அப்போதுதான் கவனித்தேன். அடர்கறுப்புநிற நாய் ஒன்று ஜீப்பின் பின்புறம் எழுந்து நின்றது. நிச்சயம் என் உயரமிருக்கும். சுற்றி நோட்டமிட்டு செக்கச் சிவந்த நாக்கை வெளியே துருத்தி இரண்டு மூன்று முறை சத்தமாகக் குரைத்தது. உயரதிகாரி அதை முறைத்துப் பார்க்கவும் அமைதியானது. ஆனால் அடுத்த நிமிடமே வீதியை அதிரச்செய்யும் குரைப்புச் சத்தம். கூரிய பற்கள் மின்ன அது குரைக்கும் திசையில் நான் மட்டுமே இருக்கிறேன் என்ற எண்ணம் உறைத்தபோது என் உடல் எடையைப் பாதி இழந்தேன். ஓட நினைத்ததும் கால்கள் துவண்டு விழுந்தன. சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது. ஜீப்பிலிருந்து என்னை நோக்கிப் பாய அது எத்தனித்த போது அதன் கழுத்துப்பட்டையின் சங்கிலி தடுத்ததும் பெருமூச்சுவிட்டேன். இருந்தும் குரைப்புச்சத்தம் ஓய்ந்தபாடில்லை. இரு கைகளால் காதைப் பொத்திக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன். நாக்கு வறண்டிருந்தது. இனி எதுவும் செய்வதற்கில்லை என அப்படியே சுவருக்குப் பின்னால் மண்தரையில் படுத்துக் கிடந்தேன். காட்சிகள் முன்னும்பின்னுமாக மனதுக்குள் ஓடின. உயரதிகாரி என் திசையைக் காட்டி இராணுவ வீரர்களிடம் என்ன என்று பார்க்கச் சொல்கிறார். ஜீப்பின் பின்புறம் கட்டியிருந்த நாயையும் அவிழ்த்து விடுகிறார். நீண்ட நாக்கில் எச்சில் சொட்ட சொட்ட கறுப்புருவம் என்னை நோக்கி ஓடிவருகிறது. நான் பயத்தில் கத்தியபடி பதறி எழுகிறேன். என்னைத் தொகுத்துக் கொள்ள சில விநாடிகள் தேவைப்பட்டன. சுவரின் மறுபக்கம் மெல்ல எட்டிப்பார்த்த போது வீதி ஆளரவமற்றுக் கிடந்தது. மண் சாலையில் புழுதி பொங்க தூரத்தில் ஜீப் ஒன்று போவது மட்டுமே தெரிந்தது.

இதைச் சொல்லிமுடித்ததும் போராளி அப்போது தான் மூச்சிரைக்க ஓடி வந்தவனைப் போல் வேகவேகமாகத் தண்ணீர் குடித்தான். இன்னும் பதட்டம் போகவில்லை போல என இராணுவவீரன் கேலி செய்யவும் போராளி அவன் புஜத்தில் குத்தினான். சமீபத்தில் பெய்த மழையில் தேங்கியிருந்த நீரை போராளி தன் தண்ணீர்க் குடுவையில் நிறைத்துக் கொண்டிருந்தான். உன் வண்ணமீன் கடைப்பெண் என்ன ஆனாள்? என்று இராணுவவீரன் கேட்கவும், தண்ணீர்க் குடுவையுடன் மரத்தடியில் கால்களை நீட்டி அமர்ந்த போராளி மேலும் சொன்னான்…

போர்க் காலத்தில் யார் வண்ண மீன்களை விரும்புவார்கள்? என்று தான் நினைத்தனர். ஆனால் அவளது கடைக்கு தினமும் கூட்டம் வரத்தான் செய்தது. ஆனால் அவள் யாரோடும் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. போராட்டக்காரர்களுக்குள் தீவிரவாதிகள் புகுந்து இருப்பதாக உங்கள் இராணுவம் குற்றம்சாட்டியது. அமைதி ஊர்வலங்களுக்கும் போராட்டங்களுக்கும் தடை விதித்தனர். விசாரணை என்று காரணமின்றி கைதுகள் நடந்தன. பொது இடங்களில் கூடவும் மக்கள் அஞ்சினர். இருந்தும் அவளின் வண்ணமீன் கடைக்குப் போய்வருவதை நான் நிறுத்தவில்லை.

கையில் ஊசியும் நூலுமாக கம்பளி ஒன்றை நெய்தபடி இருந்தாள். அவளது நீளமான விரல்கள் ஒவ்வொன்றும் மீன்களைப் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இராணுவம் ஊருக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. இனி ஒவ்வொன்றாகப் பறிபோகும். அதற்குமுன் கடையைக் காலிசெய்துவிடு என்று பழக்கடைக்காரப் பெரியவர் அவளிடம் சொல்ல, அப்படியானால் எனக்கு இந்த கோல்ட் ஃபிஷ்களை இலவசமாகத் தர முடியுமா? என்று இருப்பதிலேயே பெரிய கண்ணாடிமீன் தொட்டியைக் காட்டி நான் கேட்டதும் சத்தமாகச் சிரித்தாள்.

செவ்வகவடிவ கண்ணாடி மீன்தொட்டியில் ஒரு பெரிய தங்க மீனையும் மீன் குஞ்சு ஒன்றையும் அன்றுதான் வாங்கினேன். மீன் தொட்டிக்கோ பெரிய தங்க மீனுக்கோ என்னிடம் தனியாகப் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் நான் கொடுத்த சில்லறைகளை அவள் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அன்றிரவு உறங்காமல் என் தங்கமீன்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். அவளது அருகாமையில் நான் உணர்ந்த பரவசத்தையும் சலனமற்ற அமைதியையும் அது உண்டாக்கியது.

உங்களின் இராணுவ முகாம்களை அலங்கரிக்கவும் அவளின் வண்ண மீன்களே தேவைப்பட்டன. உள்ளூர் இளைஞர்களும் உங்களின் இராணுவமும் நேரெதிர் சந்தித்துக் கொண்டாலும் சண்டை மூளாத சிறு நிலம், அவளின் பத்துக்குப் பத்து மீன் கடையாக மட்டுமே இருந்தது. பொதுவாக தன் மீன்களை அவள் பாதி விலைக்கே விற்று வந்தாள். இருப்பதைக் கொடு போதும் என்பாள். யாரிடமும் வற்புறுத்தி விலை பேசியதில்லை. அவளைப் பொறுத்தவரை வண்ண மீன்கள் வெறும் அழகுக்கோ அலங்கரிப்புக்கோ அல்ல. சாந்தமான சூழலை உருவாக்க!

அவளது மீன்கள் என்ன உலக அமைதியையா போதிக்கப் போகின்றன? என்று எதிர்த்தரப்பு இராணுவவீரன் சொல்ல இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். அந்நேரம் பக்கத்துப் புதரில் லேசாக சலசலப்பு கேட்கவும் பதட்டமடைந்தனர். உதட்டின் மீது ஆட்காட்டி விரலை வைத்து போராளியை அசையாமல் இருக்கும்படி சைகை செய்த இராணுவவீரன், தன் துப்பாக்கியை ஓசையின்றி எடுத்துக்கொண்டான். காலடிச்சத்தமும் மரக்குச்சிகள் மிதிபடும் ஓசையும் நெருங்கி வரும் திசையில் துப்பாக்கியை இறுகப் பற்றினான். குறி வைத்த நொடியில் சாம்பல்நிற கழுதை ஒன்று பயத்துடன் புதரில் இருந்து வெளிப்பட பதட்டம் நீங்கி சத்தமாகச் சிரித்தனர். அவர்களின் திடீர்ச் சிரிப்பொலி இரவின் அமைதியைக் குலைத்தது. தங்கள் மடத்தனத்தை உணர்ந்து உடனே மௌனமாகினர். ஆயுதப் போராளி சன்னமான குரலில் தன் பேச்சைத் தொடர்ந்தான்…

அவள் அப்போது தங்கியிருந்த குடியிருப்புப் பகுதி எங்கள் ஆயுதக் குழுவுக்கும் உங்கள் இராணுவத்துக்கும் இடையேயான சுதந்திரப் போர்க்களம். இருவரும் தன் பலத்தை மாறிமாறி பரிசோதிக்கும் அப்பகுதியைச் சபிக்கப்பட்டக் குடியிருப்பு என்று தான் சொல்வோம். பொது ஜனங்களின் நடமாட்டம் அங்குக் குறைவாகவே இருக்கும். ஆனால் மர்மங்களோடு வாழ்பவளுக்கு அதுதானே ஏற்ற இடம்.

தனியாக அங்குச் செல்வதில் எனக்கும் பதட்டம் இருந்தது. நண்பன் ஒருவனை வலுக்கட்டாயமாக என்னோடு கூட்டிச் சென்றேன். ஏன் அவளைப் பின்தொடர வேண்டும்? எதற்கு அவளது வீட்டிற்கு ஆள் இல்லா நேரமாக நுழைய வேண்டும்? இனம்புரியாத குறுகுறுப்பைத் தவிர வேறு பதிலொன்றும் இல்லை.

அவளது வீட்டின் ஒருபக்கச் சுவர் கீறல் விட்டிருந்தது. கூரையில் பெரிய வெடிப்பு வேறு. ஒரு காலத்தில் அது இரண்டு படுக்கையறைகள் கொண்ட வசதியான குடியிருப்பாக இருந்திருக்கும். ஜன்னல்கள் திரையிடப்பட்டிருந்தாலும் வெளிச்சம் மெல்லிய கீற்றாக அதனூடாய் இறங்கிக் கொண்டிருந்தது. பக்கத்தில் நீர்த்தாவரங்கள் மிதக்கும் பெரிய சிமென்ட் தொட்டி ஒன்று பச்சை பூத்திருந்தது.காலில் நறுக்கென ஏதோ குத்த இருட்டில் துழாவிக் கையிலெடுத்துப் பார்த்தேன். சிப்பி ஒன்று காலைக் கிழித்திருந்தது.

அறையின் ஓரமிருந்த பழைய இரும்பு பெட்டியைச் சத்தமின்றி திறந்தோம். இதுநாள் வரை அவள் நெய்து வைத்திருந்த கம்பளித் துணிகள்! பலவகை வண்ண மீன்களின் நிறங்களில் இருந்த கம்பளிகள் உறுதியாகப் பின்னப்பட்ட மீன்பிடி வலைகள் போல் சிக்குண்டுக் கிடந்தன. அறை முழுவதும் ஒருவித நமைச்சல் வாடை. ஒரு மாபெரும் மீன் தொட்டிக்குள் நுழைந்திருப்பதாகத் தோன்றிற்று.

தண்ணீரில் ஏதோ தப் தப் என்று அடிக்கும் சத்தம் கேட்பதை உணர்ந்தோம். அவள் உள்ளதான்டா இருக்கா. குளிச்சிட்டு இருக்கா. நண்பன் கைகாட்டிய திசையில் பழைய பாணியிலான மரக்கதவுகள் கொண்ட பெரிய குளியலறை. உள்ளிருந்து நீரின் சலசலப்பு கேட்டபடி இருந்தது. நண்பன் பதட்டத்தில் அங்கேயே நின்று விட்டான்.

ஆர்வம் உந்தித்தள்ள கீறல் விட்ட குளியலறைக் கதவினூடே பார்த்தேன். நீர் ததும்பி வழியும் பழுப்பு வெள்ளைக் குளியல் தொட்டியின் இருபக்கமும் கைகளைப் பரத்தி அதனுள் படுத்திருந்தாள். தேகம் தண்ணீரில் மறைந்திருக்க அவளின் செம்பழுப்புநிறக் கேசம் தொட்டியைத் தாண்டி பழைய மொசைக் தரையில் பரந்து கிடந்தது. கண்கள் அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தபடி இருந்தன. தன் கீழ்த்தாடையைக் குளியல் தொட்டியில் தாங்கலாக வைத்துத் திரும்பிப் படுத்தாள். உடைந்த சாளரத்தின் வெளிச்சத்தில் அவளின் முகம் தங்கமீனைப் போல் ஜொலித்தது. கைகளை விலக்கி தன் நீண்ட கேசத்தைக் கோதியபோது அவளின் வெளிர் மார்பகங்களைக் கண்டு என் உடல் விழித்துக் கொண்டது. முதல்முறை பாதி நிர்வாணத்தைப் பார்த்த தருணம். பஞ்சுபொதி என மிதந்த மார்பகங்கள். காட்சி கண்களுக்குள் உறைந்து ஸ்தம்பித்து நின்றேன். அலைகளற்ற கடலில் மிதக்கும் படகைப் போல் அசைவற்றுக் கிடந்தாள். பிரமிப்பும் மிரட்சியும் கலந்து அவளையே வெறித்துக் கொண்டிருந்தேன். இடுப்புப்பகுதி நீரினுள் மறைந்திருக்க முதுகு தெரிய அவள் ஒருபக்கமாகத் திரும்பிப் படுத்த நொடியில் என் உடல் ஜில்லிட்டது. கால்கள் பதட்டத்தில் தன்னிச்சையாக இரண்டடி பின்னோக்கி நகர்ந்தன.

நான் இதை இப்போது சொல்லும்போதும் என் மயிரிழைகள் குத்திட்டு நிற்கின்றன எனப் போராளி தன் புறங்கைகளை உயர்த்திக் காட்டினான். முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டு பதட்டம் தொனிக்கச் சொன்னான்…

தொட்டியின் மறுமுனையிலிருந்து வழவழப்பான நீண்ட வால்பகுதி நீரின் மேல்மட்டத்தில் வெளிப்பட்டது. பெரிய மேல்துடுப்பும் சிறிய கீழ் துடுப்பும் கொண்ட அடர்பச்சை நிற வால்பகுதி. தப்தப் எனத் தண்ணீரில் அது ஓங்கி அடிக்கும் சத்தத்தினூடாய் எச்சிலை மெல்ல விழுங்கிக் கொண்டேன். வாலிலும் துடுப்புகளிலும் ஒழுங்கற்ற மஞ்சள்நிறப் புள்ளிகள்.  குளியல் தொட்டியின் குறுகிய எல்லைகள் போதாமல் வேகவேகமாகத் தன் வாலை நீரில் அடித்தாள். நான் நனைந்திருந்தேன். வியர்வை ஆறாய் ஊற்றெடுத்தது. லேசாய் உடல் அதிர்ந்தது.

அந்நேரம் வீதியில் இராணுவ வாகனத்தின் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியே நண்பன் எட்டிப் பார்த்தான். கறுப்புப் புள்ளிகள் கொண்ட பச்சை நிற ஜீப். அதே ஒடிசலான இராணுவ அதிகாரி. பதட்டமடைந்த நண்பன் என்னைப் பிடித்து இழுத்தான். அவன் கைகளை உதறிவிட்டு மீண்டும் அக்கதவின் துளை வழியே பார்த்தேன். குளியல் தொட்டி காலியாக இருந்தது.

IMG_20230723_214922-1-1.jpg?resize=840%2

மறுநாள் கடைக்குச் சென்ற என்னிடம் நேற்று மாலை எங்கு இருந்தாய்? என்று அவள் கேட்டதும் தடுமாறினேன். கண்ணாடி மீன் தொட்டிகளினூடே அத்தனை தங்கமீன்களும் என்னை வேவு பார்ப்பதைப் போல் ஒருசேர உற்று நோக்கின.

சிகரெட் புகை இரவின் குளிர்ச்சிக்குப் போதுமானதாக இல்லை. போராளியும் இராணுவவீரனும் உள்ளங்கைகளை அழுத்தமாகத் தேய்த்துக் கொண்டனர். இரவுப் பூச்சிகளின் சத்தம் அமைதியின் பின்னோட்டமாய் ஒலித்தது. காற்று வீசியதும் இலைகளின் சலசலப்பு கூடியது. இருளுக்குள் பளபளக்கும் இலைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த இராணுவவீரன் போராளியைத் திரும்பிப் பார்த்தான். பேசுவதைக் கேட்கத் தயாராக இருப்பதைப் போன்ற  பார்வை. போராளி தான் சொல்ல நினைத்தவற்றை மனதுக்குள் முறையாக ஒழுங்கு செய்து கொண்டு பேசினான்…

எங்கள் குடியிருப்புக்கு மிக அருகாமையான இடம் குண்டுவீச்சுக்கு உள்ளாகியிருந்தது. முன்னெச்சரிக்கையாக நாங்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டோம். யாரும் எந்த உடைமையும் எடுத்துச் செல்ல நேரமில்லை. மறுநாள் முகாம் திரும்பியபோது பெரும்பாலான கட்டிடங்கள் சிதிலமடைந்திருந்தன எங்களுடையது உட்பட. ஆங்காங்கே கான்க்ரீட் குவியல்கள். சிதைந்த ஜன்னல் கதவுகள். எங்கள் முகாமின் சமையலறை பொருட்கள், புத்தக அலமாரி, மேசை நாற்காலி உட்பட அத்தனை பொருட்களும் புழுதிக் குவியலில் புதைந்து கிடந்தன.

இதைச் சொன்னால் நம்ப மாட்டாய் நண்பா! பாதி இடிந்த கூரையினூடாய்ச் சரிந்து விழும் பகல் வெளிச்சத்தில் பார்த்தேன். சேதாரமான மேசைப் பலகையின் மீதிருந்த என் கண்ணாடி மீன்தொட்டிக்கு மட்டும் சிறு பாதிப்பும் இல்லை. இடிந்த கூரையினூடாய் விழும் சூரிய வெளிச்சத்தில் தங்கமீன்கள் இரண்டும் மேலும் அதிகமாக ஜொலித்தன. நண்பா, அவளது மீன்கள் எதுவும் போரில் இறப்பதில்லை!

நான் அன்றிலிருந்து என் மீன்தொட்டியை எங்கும் சுமந்தே திரிந்தேன். பள்ளி செல்லும் போதும் கூட. வகுப்பு முடியும்வரை ஆசிரியரிடம் மீன்தொட்டியைக் கொடுத்து வைப்பேன். தன் மேசையில் வாங்கி வைத்துக் கொள்வார். பள்ளி முடிந்து வந்ததும் மீன்களைக் கண்காணிப்பதே என் முக்கிய பொழுதுபோக்கு. தொட்டியைக் கழுவும்போது வேண்டுமென்றே மீன் குஞ்சை முதலில் பிடித்து வெளியே பாத்திரத்தில் இடுவேன். அப்போது பெரிய மீனின் கண்களில் பரிதவிப்பைப் பார்க்கணுமே! இங்குமங்கும் வேகவேகமாக நீந்தியபடி இருக்கும். நான் அதற்காகவே குஞ்சை அதன் பார்வையில் இருந்து சிலநிமிடங்கள் அப்புறப்படுத்தி வைப்பேன்.

அதேநேரம் கூரைகள் மீதான அச்சம் என்னை நிரந்தரமாகத் தொற்றிக் கொண்டது. எந்தக் கணமும் எந்தக் கூரையும் என் மீது இடிந்து விழலாம் என அஞ்சினேன். இரவுகள் தூங்காமல் விழித்திருப்பேன். எங்கள் நிலம் நாலாப்பக்கம் சுருங்கிக் கொண்டே வந்தது. ஆனால் அவள் மட்டும் தன் கண்ணாடி மீன் தொட்டிகளை நித்தம் புது புது வண்ண மீன்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தாள்!

உணவுப் பொருட்களுக்கே தட்டுப்பாடு வரும் போர்க் காலத்தில் அவளுக்கு மட்டும் எங்கிருந்து அத்தனை அலங்கார மீன்கள் கிடைத்தன? இராணுவவீரன் இடைமறித்துக் கேட்டான்.

கடவுளின் சுனையில்… என்றான் ஆயுதப்போராளி.

இராணுவவீரனின் முகத்தில் வெளிப்படையான ஆச்சரியம்.

ஆமாம் என்ற போராளி உறுதியான குரலில் சொன்னான்…

உனக்குத் தெரிந்தது தான். பூமியில் நீராட கடவுள் தனக்கென படைத்த பிரத்யேகச் சுனை அது. அதன் சோலை பலநூறு வருடங்கள் முதிர்ந்த மரங்களால் நிறைந்தது. குறிப்பாக தங்கநிற இலைகள் கொண்ட பொன்னிற விருட்சங்கள். அச்சுனை தான் எங்கள் நிலத்தின் ஆதி ஊற்று. மோசமான வறட்சியிலும் கூட அச்சுனை வற்றியதில்லை. சுற்றி இருக்கும் வறண்ட பகுதிகளுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் அச்சிறு நிலம் மட்டுமே எல்லா காலங்களிலும் செழித்திருக்கும். அந்நிலத்துக்காகத் தானே நாம் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

எதிர்த்தரப்பு இராணுவவீரன் ஆமாம் எனத் தலையசைத்தான். மறுப்பேதும் இல்லாத சலனமற்ற பார்வை.

போராளி சொன்னான்… உனக்கு இதுவும் தெரிந்திருக்கும். பொன்னிற விருட்சங்கள் வேர்விட்டிருக்கும் சுனையில் கர்ப்பம் தரித்த பெண்ணின் வீங்கிய வயிற்றின் வடிவில் சிறு பாறைகளின் அடுக்கு இருக்கிறது. அங்கு தான் ஆதி மனிதன் வசித்தான் என்று நம்புகிறோம். வற்றாத சுனையும் நம் நாகரீகமும் ஊற்றெடுப்பதும் அங்கிருந்து தான். அவள் கடவுளின் சுனையால் ஆசிர்வதிக்கப்பட்டவள்.  

அன்று வெண்திரையைப் போல் பனிமூட்டம் சுனையை மறைத்திருந்தது. இரவு வேளையில் சுனைக்கு யாரும் வருவது கிடையாது. அது படைத்தவனுக்கான நேரம். அவள் ஆடைகளைக் களைந்து நீரில் இறங்கினாள். இடுப்பு வரையான நீர் மட்டத்தினுள் புகைமூட்டமாய் நடந்து சென்றாள். அவளின் நீண்ட கூந்தல் பின்னுடலை மறைத்திருக்க, தலைக்கு மேலே வவ்வால் கூட்டம் வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஈரம்கனிந்த காற்று என் முகத்தில் ஓங்கி அடித்தது. லேசாகத் தூறத் தொடங்கிற்று. சிறிது சிறிதாக அவள் நீரினுள் முழுவதுமாய் மறைந்தாள். அடுத்த சில நிமிடங்களில் ஆள் நடமாட்டமற்ற இரவின் அமைதியைக் கனியச் செய்யும் மெல்லிய இசை. யாரோ ஷெப்பாப் இசைக்கருவியை மிக நயமாக மீட்டுவதை உணர்ந்தேன். என் கண்ணிமைகள் கிறங்கின. அவளது குரல் நீர்ச்சுழலாய் என்னை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. ஆவி வெளியேறிவிட்டதைப் போல் என்னுடல் லேசாகிவிட, அங்கேயே மயங்கிச் சரிந்தேன்.

கண் விழித்தபோது இசை நின்றிருந்தது. பொன்னிறக் கூந்தலில் ஈரம் சொட்ட சொட்ட அடர்ந்த மரங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். இரு கைகளையும் இறைவனிடம் தொழுவதைப்போல் ஏந்தியிருந்தாள். அக்கரங்களின் இடையே விரித்திருந்த கம்பளித் துணியில் பலவகை தங்கமீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. நட்சத்திரங்களின் மினுமினுப்புடன்.

ஆம்! யாரும் அறியாமல் அவள் தங்கமீன்களைப் பிரசவித்துக் கொண்டிருந்தாள்!

போராளி தன் மனதில் இருந்த நினைவுகளை உதிர்த்துவிட்ட வேகத்தில் தலையாட்டினான். சாந்தமாகவும் அமைதியாகவும் கேட்டுக் கொண்டிருந்த இராணுவவீரனின் முகக்குறிப்பில் சிறு மாற்றமும் இல்லை. போராளியின் கண்கள் இராணுவனிடமிருந்து விலகி, தூரத்தில் தெரியும் நகரின் இரவு வெளிச்சத்தைப் பார்த்தபடி இருந்தன. அவனது கவனத்தைத் திருப்ப திடமான குரலில் இராணுவவீரன் கேட்டான், அதன்பின் அவளை எப்போது பார்த்தாய்?

ஒரேயொரு நீண்ட அறை கொண்ட தற்காலிகக் கட்டிடம் தான் முகாமை ஒட்டி நடக்கும் எங்களின் பள்ளிக்கூடம். அன்று வானில் தூரத்து ஹெலிகாப்டர்களின் சத்தம் அருகாமையில் கேட்டபடி இருந்தது. ஆசிரியர் அடிக்கடி ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். முகத்தில் வெளிப்படையான பதட்டம். அவர் எதிர்பாரா நொடியில் குண்டு வெடிப்பதைப் போல் நாங்கள் மொத்தமாகச் சத்தம் போடவும் சட்டென அரண்டு போனார். நாங்கள் கேலி செய்து சிரித்தோம். கோபத்தில் வகுப்பு முடிந்துவிட்டது எனச் சொல்லி, அவசர அவசரமாக மிதிவண்டியில் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். பள்ளிமுடிந்த வேகத்தில் எல்லாரும் முகாமுக்கு ஓட நான் மட்டும் நேராக அவளின் வண்ணமீன் கடைக்குச் சென்றேன்.

கடையைச் சுற்றி வழக்கத்துக்கு மாறான கூட்டம். எல்லாம் பரிச்சயப்பட்ட ஊர் முகங்கள். அக்கூட்டத்தில் பெண்களே அதிகம். ஆக்ரோஷமாகப் பேசுவதும் வசை மொழிவதுமாய் இருந்தனர். கூட்டத்தை விலக்கி சிலர் முன்முடிவோடு அவளது கடைக்குள் நுழைந்தனர். என்ன நடக்கிறது என்று உணரும் முன் எல்லாம் முடிந்திருந்தது.

கடைக்குள் நுழைந்த கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் கண்ணாடித் தொட்டிகளை அடித்து நொறுக்கின. அவளை இழுத்து வந்து வீதியில் தள்ளினர். மீன் தொட்டிகளைச் சாலையில் வீசி உடைத்தனர். மனிதர்களைக் காட்டிலும் மீன்கள் முடிந்தமட்டும் மரணத்தோடு போராடக் கூடியவை. வெயில் உறிஞ்சும் சாலையில் தங்கமீன்கள் துடிதுடித்தன. அவள் பெருங்குரல் எடுத்துக் கத்தினாள். ஓடிச்சென்று தடுக்கச் சென்றவளைப் பிடித்து வைத்தனர். ஒவ்வொரு கண்ணாடித் தொட்டியும் சில்லுசில்லாக உடைந்து கடைசி மீனும் நம் நிலத்தின் சூட்டில் வெந்து இறக்கும் வரை அவளைக் கட்டி வைத்துப் பார்க்கச் செய்தனர். பழக்கடைக் கிழவர் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது. அவளின் கம்பளித் துணிகள் கிழித்து எறியப்பட்டன.

சாலை எங்கும் அலங்கார மீன்கள். இரு தினங்களுக்கு, தாழப்பறக்கும் பறவைகளின் சிறகடிப்பு கேட்டபடி இருந்தது. அவளால் மீண்டும் அத்தனை மீன்களையும் ரகசியமாகப் பிரசவிக்க முடியும் தான். ஆனால் யாருக்காக? கைகளைக் கட்டி நின்று வேடிக்கை பார்த்த யாரும் அவளின் உதவிக்கு வரவில்லையே! நான் உட்பட என்ற போராளி அமைதியானான். தன்னை நியாயப்படுத்தும் சொற்கள் எதுவும் அவன் பேசவில்லை. விநாடிகளின் மௌனத்துக்குப் பின் புதிய தீவிரத்துடன் பேசினான்…

அதன்பின் அவள் நகரத்துக்கு வரவில்லை. ஊரைவிட்டு ஓடிவிட்டாள் என்று சிலாகித்தனர். ஆனால்…

தன் குளியல் தொட்டியில் படுத்தபடி உடைந்த சாளரத்தினூடே அவள் வானை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறாள். இருண்ட வானில் ஈசல்களைப் போல் உங்களின் போர் விமானங்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. அவள் மெல்ல பாடத் தொடங்குகிறாள். பாரம்பரிய ஷெப்பாப் கருவியை மீட்டியபடி. அவளது குரல் மெல்ல வலுக்கிறது. இசையின் இனிமை விமானியைச் சீண்ட அவன் கவனமிழக்கிறான். அவள் பாடுவதை நிறுத்தவில்லை. அத்தனை இனிமையான குரலை அலட்சியம் செய்யும் மடத்தனம் அவனை உசுப்புகிறது. குண்டுகளைப் பொழிய இருந்த விரல்கள் நிம்மதி இழக்கின்றன. ஒரு கணம் எல்லாமுமே தேவையற்றதாகத் தோன்றுகிறது அவனுக்கு. விமானத்தை வானில் வட்டமடித்துக் கொண்டே இருக்கிறான். கரும்புகை எழும் குடியிருப்பின் மத்தியில் அந்த இசை இன்னமும் அவனுக்காக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் மட்டுமே அதைக் கேட்க நினைக்கிறான். தனக்கான இசை. வாழ்தலின் உன்னதத்தை உணர்த்தும் இசை. கண்கள் கிறங்க, அவளின் குரலைத் தேடி விமானத்தைக் கீழ்நோக்கிச் செலுத்துகிறான். வேகமாக… மிக வேகமாக… இசையின் வேகமும் மட்டுப்படவில்லை. அவள் குரலின் திசையை நோக்கி போர் விமானம் கட்டுப்பாடின்றி விரைகிறது. தரையில் விழுந்து நொறுங்கும் வரை.

உங்களின் போர் விமானங்களை வீழ்த்திக் கொண்டிருக்கிறாள். தனியொரு ஆளாக! யாருக்கும் தெரியாமல். குளியல் தொட்டியில் மறைந்தபடி. அவளின் செதில்செதிலான வால்துடுப்பு ஆக்ரோஷமாக தண்ணீரில் தப் தப் என அடித்துக் கொண்டிருக்கிறது.

தற்காலிகச் சிறை வளாகத்திற்கு அவளைக் காணச் சென்றேன். மீன் தொட்டியை நெஞ்சோடு அணைத்தபடி வாசலில் நின்றிருந்தேன். இராணுவத் தளபதியைக் கொல்ல ரகசிய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் அவளும் ஒருத்தி. உண்மை பலருக்குத் தெரியும். என்னை உள்ளே அனுமதிக்க மறுத்த இராணுவவீரன் சிரித்தபடி கேட்டான், உனக்கு அவள் என்ன உறவு வேண்டும்? நான் பதிலேதும் சொல்லாமல் அங்கேயே நின்றிருந்தேன். சரி! ஐந்து நிமிடங்கள் மட்டும் எனச் சொல்லி என் சட்டைப்பையைப் பார்த்து பணம் வைத்திருக்கிறாயா? என்று கேட்டான். நான் இல்லை எனத் தலையசைத்தேன். என் கையிலிருக்கும் மீன்தொட்டியை உற்றுப் பார்த்து அழகான மீன்கள் என்றான் கைகளை நீட்டியபடி.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த இராணுவவீரனின் முகப்போக்கு சட்டென மாறியது. ஏதோவொரு அசூயை குரல்வளையைக் கவ்வுவதைப் போல் தலையைச் சிலுப்பினான். சணல்துணியால் சுற்றப்பட்ட தண்ணீர்க் குடுவையை எடுத்து போராளி நீட்ட இராணுவவீரன் மறுக்கவில்லை. மீண்டும் அவன் இயல்புக்குத் திரும்பும்வரை காத்திருந்த போராளி நட்சத்திரங்கள் பளிச்சிடும் வானைப் பார்த்தபடியே சொன்னான்…

நண்பா இதை நீ யோசித்தது உண்டா? சகமனிதன் எப்போது மிருகமாகிறான் என்று. கையில் ஆயுதம் கிடைக்கும் நொடியில். அப்போது வன்மமும் கொடூரமும் நம் ஆழத்திலிருந்து நேர்மையாக வெளிப்படும். அதுவரை ஒரு பொறுப்புள்ள தந்தையாக அன்பான கணவனாக போட்டிருந்த வேஷங்களைக் களைந்துவிடுவோம். அதிலும் எதிரே இருப்பவன் கையில் ஆயுதம் இல்லையென்றால் அதுவொரு போதை. யோசித்துக் கூட பார்க்காத கொடூரங்களை வெகு இயல்பாகச் செய்வோம்.

சிறை வளாகத்தில் நான் அவளைப் பார்த்தபோது அவளின் முகம் தடித்து வீங்கியிருந்தது. உதட்டோரம் உறைந்த ரத்தக்கறை. தன் மென்மையான உடலே பாரமாகி விட்டதைப் போல் கால்களைப் பரத்தி பக்கவாட்டுச் சுவரைப் பற்றிக்கொண்டு கெந்தி கெந்தி நடந்து வந்தாள். பார்வை கீழ்நோக்கி இருந்தது. கிழிந்து கந்தலாகிப் போன ஆடையில் தெரிந்த பால்வண்ண தேகத்தில் அங்கங்கே ரத்தச்சிவப்புக் கோடுகள். என்னைப் பார்த்ததும் அவள் தேகம் வெளிப்படையாக நடுங்கிற்று. என்னை அப்போது அங்கு பார்க்க விரும்பாதவளாய்க் கத்தினாள். அவளது ஆள்காட்டி விரல் என்னைச் சுட்டியது. ஒருவேளை அவள் அழுகிறாளா? மீன்கள் அழுவதில்லை தானே.

பேசி பேசி உதடும் தொண்டையும் உலர்ந்து போயிருந்தன. பிடித்து வைத்திருந்த தண்ணீர் முழுவதையும் ஒரே வீச்சில் குடித்து முடித்த போராளி, மனதில் ஓடும் எண்ணச்சிதறல்களை முறைப்படுத்திக் கொண்டு பொறுமையாகப் பேசினான்…

மழையின் காரணமாகவா இல்லை பொது அச்சத்தாலோ இல்லை அவள் தன்னைச் சுற்றி கட்டமைத்திருந்த மர்மத்தாலோ அவளின் இறுதி ஊர்வலத்தில் அத்தனை கூட்டமில்லை. நேசிக்கப்படாத ஒருவரின் கைவிடப்பட்ட மரண யாத்திரையாகவே அது இருந்தது.

அவள் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தாள். நீண்ட கேசத்தை வெட்டியிருந்தார்கள். வீங்கிய முகத்தில் இரத்தக் காயம் கருத்திருந்தது. அது நிச்சயம் அவளாக இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் நான் அன்று போயிருக்கக் கூடாது. அதேநேரம் நான் அவளை இறுதியாக ஒருமுறை பார்க்கவும் விரும்பினேன். நிச்சயம் ஏதாவதொரு அற்புதம் நிகழும். உடலை மூடியிருந்த வெள்ளைத் துணிக்குள் யாருமறியாமல் தங்கமீனாக மெல்ல உருமாறித் தப்பி விடுவாள். சவக்குழியின் நிலத்தடி நீரில் நீந்தியபடி மீண்டும் கடவுளின் சுனையை அடைவாள். அங்கு ஆயிரமாயிரம் மீன் குஞ்சுகளைக் கருத்தரிப்பாள்.

அவளின் இறுதி ஊர்வலத்தைத் தாண்டி உங்களின் இராணுவ வாகனங்கள் வரிசையாக நகருக்குள் நுழைந்தன. அத்தனை டாங்கர்களையும் கவச வாகனங்களையும் அன்று தான் அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறேன். வெற்றி முழக்கங்களோடு கனரகப் போர்  ஊர்திகள் எங்களைக் கடந்து போனபோது, எழுந்த புழுதிக் காற்றில், அவளது உடலை மூடியிருந்த வெள்ளைத் துணி விலகியது. வழவழப்பான மீன் உடலையும் கரும்பச்சைநிற வால்துடுப்பையும் எதிர்பார்த்து என் கண்கள் அகல விரிந்தன.

நண்பா நீ கேட்டாயே? நான் ஏன் ஆயுதம் ஏந்துகிறேன் என்று?

என் பால்யமும் அவளோடு இங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறது. உன்னிடமிருந்து என் மண்ணை மீட்டதும் வெறிபிடித்த நாயைப் போல் வீதி வீதியாக ஓடுவேன். அவளைப் புதைத்த இடத்தை யாரும் அறியாமல் தோண்டிப் பார்ப்பேன். அங்கு பெயர்தெரியா அழகிய இளம்பெண்ணின் எலும்புகள் இருக்கலாம் இல்லை நூற்றுக்கணக்கான தங்கமீன்களின் முள்எலும்புகள் கொட்டிக் கிடக்கலாம். 

போராளியின் குரல் கரகரத்திருந்தது. எதிர்த்தரப்பு இராணுவவீரன் அவன் முதுகில் மெல்ல தட்டி தன் மேலாடைப் பையில் இருந்து ரம் புட்டியை எடுத்து நீட்டினான். போராளி வேண்டாம் என மறுக்கவும் இரு மிடறுகள் பருகிவிட்டு ஆழமாக மூச்செறிந்தான். அமைதி பனிபோல் மெல்ல கவிந்தது. இணக்கமான குரலில் இராணுவவீரன் பேசத் தொடங்கினான்…

2

வீசப்படும் ராக்கெட் குண்டுகள் கீழே விழுவதைப் பார்த்திருக்கிறாய் தானே நண்பா? தூக்கத்தில் லேசாய் அசையும் கண் விழிக்காத குழந்தை மாதிரி ஆடிக்கொண்டே தரையை நோக்கி இறங்கும். திடீரென்று எங்கிருந்தோ ஒரு வேகம்! இரையைப் பார்த்த பருந்தின் வேகம். யார் இரை? எத்தனை பெரிய இரை என்றெல்லாம் பொருட்படுத்தாத வேகம். அடுக்குமாடி குடியிருப்பிலோ… பள்ளிக்கூடத்திலோ… ஆஸ்பத்திரியிலோ இறங்கிப் பசியாறும்வரை அந்த வேகம் குறையாது. யார் எதற்கு தன்னை வீசினார்கள் என்ற ரகசியத்தை மரணித்தவனிடமும் சொல்லாது. இறந்தவனுக்கான இறுதிச் சடங்கில் கூட குண்டு விழலாம் இல்லை இறந்தவன் மீதே இன்னொருமுறை விழலாம். மீண்டும் ஒருமுறை சவம் செத்து மடியும். என் அப்பாவுடையதைப் போல்.

எந்தவித தடங்கலும் இன்றி இராணுவவீரன் சரளமாகப் பேசினான்…

நண்பா, நாங்கள் தஞ்சம் புகும் நிலங்களை எல்லாம் சொந்தம் கொண்டாட நினைத்ததில்லை. ஆனால் துரத்தப்படுவதும் வேட்டையாடப்படுவதுமாய் எங்களின் ஓட்டம் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இனியும் ஓடுவதற்குத் திசைகள் இல்லை என்ற நிலையில் தான் ஆரம்பித்த புள்ளிக்கே திரும்பினோம். அது இப்போது உங்கள் நிலமாக இருப்பது நம் இருவரின் துரதிர்ஷ்டம். நீ சொன்னாயே, கடவுளின் சுனையும் வளம் குன்றாத சோலையும். உண்மையில் அவைதான் எங்களின் மீட்சி. அந்த வற்றாத ஊற்றில் கால்நனைத்த நொடியிலே மீண்டும் புத்துயிர் பெற்றோம். எங்களின் பல வருட ஓட்டத்தின் தாகமும் தீர்ந்தது. அதுவரை எங்களை விரட்டிவந்த கால்களும் ஓய்ந்திருந்தன. ஒருவேளை நாங்கள் விரட்டப்பட்டது கூட இந்நிலத்தை எங்களுக்கு மீண்டும் நினைவூட்டத் தானோ என்னவோ!

நீயே சொல், உலகின் முதல்மனிதன் வாழ்ந்ததாக நம்பப்படும் நிலம் எப்படி ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க முடியும்?

இதைச் சொல்லி முடித்ததும் இராணுவவீரன் பக்கவாட்டுப் பார்வையால் போராளியைக் கவனித்தான். மனதில் அழுத்தமாய்ப் பதியக் கூடிய சாந்தமான முகத்தோடு அவன் இருந்தான். எந்தவொரு விவாதங்களுக்கும் இப்போது தயாராக இல்லை என்பது போல. இராணுவவீரன் மீண்டும் பேசினான்…

நமக்கென ஒரு தேசம் இறுதியாக அமையப் போகிறது என்ற ஒற்றைச் செய்தி கிடைக்கப்பெற்றதும், பெரிதும் யோசிக்காமல் பனிப்பொழியும் தேசத்தில் அனுபவித்துக் கொண்டிருந்த வசதியான வாழ்வையும் செல்வத்தையும் விட்டுவிட்டு இங்குக் கிளம்பி வந்தோம். ஆனால் அப்பாவைப் போல் அம்மாவால் அத்தனை எளிதாக இந்தப் புதிய தேசத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியவில்லை. தான் பிறந்த நிலத்தையும் வாழ்ந்த வீட்டு முற்றத்தையும் ஆப்பிள் தோட்டத்தையும் மறக்க முடியாமல் திரும்பிப் போய்விட வேண்டும் என்ற ஆசையை உளறல்களாக தூக்கத்தில் முணுமுணுப்பாள். எனக்கும் சில வருடங்கள் வரை அந்த விலகல் இருந்தது. ஆனால் நீ சொன்னதைப் போல்தான். சிறு வயதில் இவை எதுவும் ஒரு பொருட்டில்லை தானே.  

உன்னிடம் ஒன்று சொல்லியாக வேண்டும். அப்போது நான் பள்ளிக்கூடம் செல்ல அடிக்கடி அப்பாவிடம் ஏதேனும் ஒன்று கேட்டு அடம்பிடிப்பேன். என்னை அமைதிபடுத்த, செல்லப்பிராணி ஒன்று வாங்கித் தருவதாகச் சொன்னார். நிச்சயம் அதுவொரு வளர்ப்பு நாயாகத் தானிருக்கும் என்று எண்ணியிருந்த என்னிடம் ஒருநாள் செவ்வகவடிவ கண்ணாடித் தொட்டியை அவர் நீட்டியபோது உண்மையில் ஏமாற்றம் அடைந்தேன். இருந்தும் மறுக்கவில்லை.

இதேபோல் அப்பா அவ்வப்போது கொண்டு வரும் பொருட்களை அம்மா விரும்ப மாட்டாள். வேண்டாம் என என்னையும் மறுக்கச் சொல்வாள். ஆனால் அன்று என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அந்தக் கண்ணாடித் தொட்டியின் இரு தங்க மீன்களும் அவ்வளவு அழகு. அச்சு அசலாக ஒரே மாதிரியான பளபளக்கும் நிறக்கலவை. சின்னது பெரியது என்பதைத் தாண்டி இரண்டுக்கும் வேறு எந்த வேறுபாடும் கிடையாது.

ஆயுதப் போராளி இராணுவனைத் தீர்க்கமாக உற்றுப் பார்த்தான். நம்பிக்கையற்ற கசப்பான சிரிப்பைச் சிந்தினான். இராணுவவீரன் அவனது கண்களைச் சந்திக்காமல் பார்வையைத் திருப்பிக்கொண்டான்

ஆமாம் நண்பா! அவை உன்னுடைய மீன்கள் தான்!! அந்தக் கண்ணாடி மீன்தொட்டி என்னைப் போன்ற ஒரு சிறுவனுடையது என்றோ அவனிடமிருந்து விருப்பமின்றி பெறப்பட்டது என்றோ அதே சிறுவனை ஒருநாள் போர்முனையில் சந்திக்க நேரிடும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை.

நம் புதிய எல்லைக்கோடு நெடுக நெடுஞ்சுவர் எழுப்பப்பட்ட காலத்தில் அப்பாவை அதன் கட்டுமானப் பணியின் பாதுகாப்பிற்காக இடம் மாற்றினார்கள். நிலங்களின் நடுவே சுவர்கள் எழத் தொடங்கியதும் உங்கள் போரட்டக் குழுவின் எதிர்த் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. பாதுகாப்பு கருதி அப்பா என்னை அம்மாவோடு அவரது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நாளடைவில் அம்மா எதற்கும் பெரிதாக எதிர்வினையாற்றுவதில்லை. அவள் கண்களில் எப்போதும் தவிப்பும் ஏக்கமும் மண்டிக்கிடந்தது. எல்லாவற்றுக்கும் வெற்றுப் புன்னகையே பதிலாக இருக்கும். என்னை உறங்கச் செய்ய விசித்திரமான கதைகள் சொல்வாள். எல்லா கதைகளும் அவள் விட்டுவந்த ஊர் பாதையில் சென்று முடியும்.

தற்கொலைத் தாக்குதலில் அப்பா இறந்து போனதாகச் செய்தி வந்தபோது நான் மீன்தொட்டியை அலங்கரிக்க உன் கடவுளின் சுனையில் வழவழப்பான கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன். அவரது உடல் மிச்சங்கள் வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு மூட்டையாக வந்தது. கண்ணீர் வற்றியவளைப் போல் அம்மா வெறித்தபடி இருந்தாள். துளியும் அழவில்லை.

அந்நாட்களில் துப்பாக்கியின் மீதான என் ஆர்வமும் அதிகரித்திருந்தது. என் வயது மூத்த சிறுவர்களோடு சேர்ந்து, வெடித்த துப்பாக்கி ரவைகளைச் சேகரிப்பேன். ஆரம்பத்தில் அவைகளைச் சேகரிப்பது கடினமாக இருந்தது. நாளடைவில் நிலத்தில் எந்தச் சிக்கனமுமில்லை. அம்மா என்னோடு பேசுவதைக் குறைத்துக் கொண்ட காலம். கூழாங்கற்களுக்குப் பதிலாக தோட்டா ரவைகளைக் கொண்டு மீன் தொட்டியை அலங்கரிக்கத் தொடங்கினேன்.

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுவதைப் போல் இரும்பு குண்டுகள் பொழிந்து கொண்டிருந்த இரவில் நான் ஜன்னலைப் பார்த்தபடியே இருந்தேன். இரவு முடிவதற்குள் வானில் நட்சத்திரங்கள் தீர்ந்து விடும் என்றே நம்பினேன். விடிந்ததும் கண்ணாடித் தொட்டியின் தங்கமீன்களை உற்றுப் பார்த்தேன். தன் சிறிய வாய்ப்பகுதியை மெதுவாக மூடியும் திறந்தும் மெல்ல சாயத் தொடங்கின. நீந்துதல் நின்றிருந்தது. தங்கமீன்களின் அசைவற்ற கண்கள் என்னை வெறித்து நோக்கின.

நண்பா, என் தந்தையின் மரணத்துக்காகவோ எங்கள் நிலத்தை விரிவுபடுத்தவோ நான் போரிடவில்லை. என் பால்யமும் இங்கு தான் இருக்கிறது. அதை இழந்துவிடக் கூடாது என்றே உன்னை எதிர்க்கிறேன். அது அத்துமீறலாக இருக்கலாம் ஆனால் வேறொரு நிலம்தேடி என்னால் மீண்டும் ஓடமுடியாது.  

ஒருவேளை நீ கடவுளின் சுனையை என்னிடமிருந்து மீட்டுவிட்டால், கட்டாயம் தோண்டிப் பார். உன் தங்கமீன்கள் இரண்டையும் மிகக் கண்ணியமாக அங்குதான் புதைத்துள்ளேன். உன்னுடைய கண்ணாடி மீன்தொட்டி என் மேசையில்  இன்னும் பத்திரமாகத் தான் இருக்கிறது. அதை யாரும் உடைத்துவிடாமல் பார்த்துக் கொள்.

3

விடியல் பொழுதின் வெளிச்சம் வானில் மெல்ல பரவத் தொடங்கிற்று. இராணுவவீரன் எழுந்து நின்று போராளியின் தோளில் கைகளை ஊன்றி தன் பாரமான பூட்ஸை அணிந்து கொண்டான். இதை அணிவதற்குள் நம் போரே முடிந்து விடும் என்றான்.

மரத்தடியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளைப் பார்த்தனர். இரண்டும் ஒரே நிறுவனத்தின் அதே மாடல் என்பதால் எது யாருடையது என்பதில் குழப்பம். வலதுபுறம் இருப்பதை இராணுவவீரன் எடுக்க இடதுபுறத் துப்பாக்கியை போராளி எடுத்துக் கொண்டான்.

போராளி தன் கண்களுக்கு கீழும் முகத்திலும் கறுப்பு மையைத் தடவிய பின் இயந்திரத் துப்பாக்கியைச் சரிபார்த்து முதுகில் மாட்டிக் கொண்டான். இராணுவவீரன் தன் உள்ளங்கையில் இருக்கும் தோட்டாக்களால் துப்பாக்கியை லோட் செய்து கண்களை இடுக்கி போராளியைக் குறி பார்த்தான். ஆட்காட்டி விரல் விசையை அழுத்துவதைப் போல் பாவனை செய்தது. போராளி மண்ணில் சரிந்து விழுந்த மாதிரி நடித்துக் காட்டினான். இருவரும் சிரித்துக் கொண்டனர். இராணுவவீரன் ரேடியோவை இயக்கி தன் அலைவரிசையை டியூன் செய்து கீழாடையில் சொருகிக் கொண்டான். குண்டுவெடிப்புகளின் சத்தம் தூரத்தில் கேட்கத் தொடங்கிற்று. கட்டியணைத்துக் கைகுலுக்கிக் கொண்டனர்.

அவரவரது பதுங்கு குழிகளை நோக்கி இருவரும் எதிர் திசையில் செல்லும்முன் தங்களுக்குள் ஆளுக்கொரு தோட்டாவை மாற்றிப் பரிசளித்துக் கொண்டனர். விரிந்த உள்ளங்கைகளில் தோட்டாக்கள் இரண்டும் தங்கமீன்களைப் போல் பிரகாசித்தன.

000

 
 
Vijayaragavan.jpg?fit=100%2C100&ssl=1
விஜய ராவணன்
 

திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய ராவணன் தற்சமயம் சென்னையில் வசித்துவருகிறார். ‘சால்ட்’ வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘நிழற்காடு’ இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பாகும்

https://akazhonline.com/?p=4688



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ மாவை மீது குற்றம்    ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது.   ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள்.  எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால்  திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும்   என குறிப்பிட்டுள்ளார்.  மாவை மீது குற்றம்    ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது.   ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள்.  எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால்  திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும்   என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/tamil-arasuk-katchi-internal-politics-1734860121?itm_source=parsely-detail
    • நோர்வேயும் ஒரு ஆணியும் புடுங்கவில்லை இந்த விசர் சுமத்திரனும் ஒன்றும் புடுங்கவில்லை இதை ஒரு செய்தியாய் போடுபவர்களை தான் குற்றம் சொல்லனும் .
    • தேர்தலில் தோல்வியுற்ற, “முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்” “சுத்துமாத்து சுமந்திரனுக்கு”, நோர்வே தூதரகத்தில் என்ன  வேலை. 😂 கடந்த 15 வருசமாய் புடுங்கின ஆணி காணாது என்று, வெட்கம் இல்லாமல்… இப்பவும் புடுங்க நிற்கிறார். 🤣
    • எலான் முன்னர் அறிவித்தது போல் முதலில் கலிபோர்னியா   நகரங்களான லொஸ்  ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே மணிக்கு 700 மைல் வேகத்தில் செல்லும் ஹப்பர் லூப் திட்டத்தை நிறைவேற்ற எலானிடம்  சொல்லுங்க அதன் பின் பார்க்கலாம் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.