Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகாந்த்: தமிழ் சினிமாவில் நிற பிம்பத்தை உடைத்தவர், அரசியலில் சாதித்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விஜயகாந்த்
 
படக்குறிப்பு,

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

நூறு வருடத்தைக் கடந்து, பல்லாயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கனவோடும், உழைப்போடும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கறுப்பு நிறம், பளீர் சிரிப்பு, வீர நடை, எப்பொழுதும் சிவந்த கண்கள், கணீர் குரல் என தனது தனித்தன்மைகளால் 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம்பிடித்தவர் நடிகர் விஜயகாந்த் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

 

விஜயராஜ், விஜயகாந்தாக மாறியது எப்படி ?

விஜயகாந்த்
 
படக்குறிப்பு,

1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்ற விஜயகாந்த். படிப்பில் பெரிதாக ஆர்வமில்லாமல், விஜயகாந்த் தினமும் நண்பர்களுடன் இணைந்து தியேட்டருக்குச் சென்று எம். ஜி. ஆர் திரைப்படங்கள் பார்ப்பது வழக்கம்.

"ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் திரைப்படங்களை ஒவ்வொரு காட்சியையும் விளக்குமளவிற்கு சினிமாவின் மீது ஆர்வமானார். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் சென்னைக்குச் சென்று சினிமாவில் சாதிக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டார்." என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

சென்னை வந்தவரை தமிழ் சினிமா உடனே அள்ளி அணைத்துக் கொள்ளவில்லை. எங்கு சென்றாலும் விஜயகாந்த் கறுப்பு என அவரது நிறத்தைக் காரணம் காட்டியே பல நிராகரிப்புகளை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

தொடர் முயற்சியால், 1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

எம். ஏ. காஜாவிற்கு விஜயராஜ் என்ற பெயரில் விருப்பமில்லை; அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சத்திலிருந்ததால் அவரது பெயரிலிருந்த காந்த் என்பதை எடுத்து, விஜயராஜ் என்ற பெயரில் இணைத்து விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தார்.

 

அதிக எண்ணிக்கையில் படங்களில் நடித்த விஜயகாந்த்

விஜயகாந்த்

பட மூலாதாரம்,DMDK

 
படக்குறிப்பு,

1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து வரலாற்றுச் சாதனை புரிந்தார், விஜயகாந்த்.

'சட்டம் ஒரு இருட்டறை', 'தூரத்து இடி முழக்கம்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'உழவன் மகன்', 'சிவப்பு மல்லி' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவரானார்.

'வைதேகி காத்திருந்தாள்', 'உழவன் மகன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஜயகாந்த், 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும் தான் விஜயகாந்தின் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கினார்கள். அவை பெரும்பாலும் வசூலைக் குவித்தன.

 

நடிகராக இருந்தவர் நடிகர் சங்கத் தலைவரானார்

நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

 
படக்குறிப்பு,

“நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை” என்ற மாபெரும் போராட்டத்தை நெல்லையில் நடத்தினார்.

விஜயகாந்த் 1999-ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார். அவர் நடிகர் சங்கத் தலைவரானபோது, நடிகர் சங்கம் மிகப் பெரும் கடன் சுமையில் இருந்தது.

அதனை வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கடன்களை அடைத்தார். அதோடு மட்டுமல்லாமல், நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து “நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை” என்ற போராட்டத்தை நெல்லையில் நடத்தினார்.

 

”மனிதாபிமானமிக்கவர் விஜயகாந்த்”- நடன இயக்குநர் பிருந்தா

விஜயகாந்த்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

 
படக்குறிப்பு,

விஜயகாந்த் போன்று ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது என்கிறார் நடன இயக்குனர் பிருந்தா.

விஜயகாந்த் குறித்து நடன இயக்குனர் பிருந்தாவிடம் பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம். அவர் விஜயகாந்த் குறித்துப் பேசும்போது, “விஜயகாந்த் சினிமா படப்பிடிப்புத் தளங்களில் ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பார். அவரது 'ஷாட்' முடிந்தவுடன் சென்று கேரவனில் அமர மாட்டார்." என்றார்.

"விஜயகாந்த் போன்று ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது. அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் சங்கத்தின் கடன்களை அடைக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, நடன இயக்குனர்களையும், நடனக் கலைஞர்களையும் மிகவும் அன்போடு கவனித்துக் கொள்வார். "

"நடன இயக்குனர்களுக்கு சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவிற்குச் செல்லும்போது விமான டிக்கெட்டுகளையே முன் பதிவு செய்து கொடுத்தார். நடனக் கலைஞர்கள் தானே என அவர் எங்களை பேருந்தில் பயணம் செய்யவிடவில்லை. அவரது நற்பெயரே அவருக்கு இன்னும் நிறைய நன்மைகளைச் செய்யும். மிகவும் அற்புதமான மனிதர்”, என்றார்.

 

விஜயகாந்த் அரசியலில் சாதித்தது என்ன?

விஜயகாந்த்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

 
படக்குறிப்பு,

தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கத் தொடங்கியவர் விஜயகாந்த்

சினிமாவில் பல உச்சங்களைத் தொட்ட விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடை நடத்தி, அதில், ”தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார்.

விஜயகாந்த் 2006-இல் கட்சி தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைபிடித்து வருகிறார்.

அந்நாளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்தின் வழியைப் பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கான நலதிட்ட உதவிகளை 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற முழக்கத்தோடு செய்து வருகின்றனர்.

 

ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் விஜயகாந்த் போல் யாரும் இல்லை: நடிகர் ரமேஷ் கண்ணா

விஜயகாந்த்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

 
படக்குறிப்பு,

லைட் யூனிட்டிலிருந்து, சவுண்ட் யூனிட்டிலிருந்து அனைவருக்கும் ஒரே சாப்பாடு தான் வழங்கச் சொல்வார் என்கிறார் நடிகர் ரமேஷ் கண்ணா

விஜயகாந்த் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா அவர்களிடம் பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.

அவர், "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, நான் இணைந்து கொள்ள விருப்பப்பட்டேன். அவர் என்னை அழைத்து நீ என் கட்சியில் சேர்ந்தால் ஓரு சார்பாளனாகிப் போவாய். நீ எல்லாருக்கும் பிடித்தவனாக இரு என அறிவுரை வழங்கினார். " என்றார்.

"பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு சாப்பாடு இருக்காது. வறுமை தான். அப்பொழுதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு நாங்கள் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்குச் செல்வோம். அதேபோல், அவர் என்ன உணவு உண்பாரோ அதே உணவைத் தான் அனைவருக்கும் வழங்கச் சொல்வார்."

"படப்பிடிப்புத் தளத்திலும் இதே தான், லைட் யூனிட்டிலிருந்து, சவுண்ட் யூனிட்டிலிருந்து அனைவருக்கும் ஒரே சாப்பாடு தான் வழங்கச் சொல்வார். படப்பிடிப்புத் தளத்தில் பாகுபாடு பார்க்காமல் அனைவருடனும் அமர்ந்து ஒன்றாக உணவு உண்பார். " என்றார் ரமேஷ் கண்ணா.

https://www.bbc.com/tamil/articles/cv2vpz9ydp7o

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்தின் அரசியல் பயணமும் சினிமா பயணமும்!

JegadeeshAug 25, 2023 14:15PM
 
WhatsApp-Image-2023-08-25-at-13.10.55-1.

விஜயகாந்திற்கு இன்று (ஆகஸ்ட் 25)  71வது பிறந்தநாள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், இந்திய சினிமா வரலாறுகளில் தவிர்க்க முடியாதவராக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவராக இருக்கிறார் விஜயகாந்த்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரண்டு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த சூழலில் விஜயகாந்த், தான் நடித்த இரண்டாம் படத்தில்தான் கதாநாயகனாக அறிமுகமானார் அந்தப் படம் கதை வசனகர்த்தா ஆர்.செல்வராஜ் இயக்கிய ‘அகல் விளக்கு’ (1979 டிசம்பர் 4).

அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தனுஷ்கோடி. படத்தின் கதைப்படி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞரான அவர், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மதுரை மாநகரமேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரது குடும்பத்தினர் அவர் பெயரைப் பயன்படுத்தி லஞ்சம் ஊழலில் ஈடுபட்டு அதிகமாகச் சொத்து சேர்த்துவிடுவார்கள். இறுதியில் இதை அறிந்த விஜயகாந்த் தனது நேர்மையை நிரூபிக்கச் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார். திரைப்படம் என்பதால் அவருடைய குடும்பத்தினர் தங்கள் தவற்றை உணர்ந்து திருந்திவிடுவார்கள். விஜயகாந்த் மீதான கறை துடைக்கப்பட்டுவிடும். இந்தப் படத்தின் ‘ஏதோ நினைவுகள்…’ பாடல் இன்றளவும் பலரது விருப்பத் தேர்வில் ஒன்று.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.25.jp

இந்தப் படத்தைப் பார்க்கும்போது சினிமாவில் இருந்து கட்சி தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலில்சட்டமன்ற உறுப்பினர் போட்டியிட்ட இரண்டாவது சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு சட்டமன்ற கட்சி தலைவராகி சாதனை நிகழ்த்திய விஜயகாந்த்தின் பிற்கால அரசியலை நினைவூட்டுவதாகவே இருக்கிறது.

விஜயகாந்த்தின் திரையுலக பயணத்தையும், தமிழ் சினிமாவிற்கு அவரின் எதிர்பர்ப்பு இல்லாத பங்களிப்பையும் வாசகர்களுக்கு பகிர்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.
பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.

மாந்தோப்புக் கிளியே’ படத்தை இயக்கிய எம்.ஏ.காஜாவின் ‘இனிக்கும் இளமை’ என்னும் படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த். அந்தப் படத்தின் நாயகன் சுதாகர்.

அவரது அறிமுகப்படம் என்று பலராலும் இன்றளவும் நினைவுகூறப்படும் ஒரு படம் என்றால் அது, ‘தூரத்து இடிமுழக்கம்’. கே.விஜயன் தயாரித்து இயக்கிய படமிது. மீனவர் வாழ்க்கையை மையப்படுத்தியிருந்த இந்தப் படம் அப்போதைய மாற்றுப்பட முயற்சி வகையிலானது. படத்துக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி. படத்தின் பாடல்களை எழுதியிருந்தவர் கு.மா.பாலசுப்ரமணியன். 1981-ல் டெல்லியில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் இது. அங்கே திரையிடப்பட்ட மற்றுமொரு தமிழ்ப் படம் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.27.jp

அதிரடி கதாநாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் ‘சாதிக்கொரு நீதி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘நீதி பிழைத்தது’ என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது.

ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார்.
ஏவி.எம். தயாரிப்பில், இராம நாராயணன் இயக்கத்தில் நாயகனாக நடித்த, ‘சிவப்பு மல்லி’ தான் விஜயகாந்தை கிராமங்கள் வரை கொண்டு சென்றது. 1981 ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் தொழிலாளர் வர்க்கத்தில் ஒருவராக அவர்களுடைய நம்பிக்கைக்குரியவராக இவரை மாற்றியது.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.27.jp

வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்…’ பாடல் அனல் கக்கும் ஒன்று என்றால், இதே படத்தில் இடம்பெற்ற ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’ பாடல் காதல் களிப்பின் உச்சம்.

விஜயகாந்தை அதிகப் படங்களில் இயக்கியவர் இயக்குநர் இராம நாராயணன்தான். ‘சிவப்பு மல்லி’ தொடங்கி, ‘சபாஷ்’, ‘தண்டனை’, ‘கரிமேடு கருவாயன்’, ‘வீரன் வேலுத்தம்பி’ எனப் பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
கலைஞரின் வசனத்தை ‘வீரன் வேலுத்தம்பி’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய படங்களில் பேசி நடித்துள்ளார்.

இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் முறியடிக்க முடியாத சாதனையாக தொடர்கிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர், இராமநாராயணன் இயக்கிய படங்களில் விஜயகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இடதுசாரி, முற்போக்கு எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருந்ததால்1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் ‘புரட்சிக்கலைஞர்’ என அழைக்கப்பட்டார்.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.30.jp

இந்தக் காலகட்டத்தில் வெளியான ‘வெள்ளைப் புறா ஒன்று’ என்ற படத்தில் ஒரு காட்சியில் அவரது கழுத்தில் அணிந்திருக்கும் அரிவாள் சுத்தியல் டாலர் அணிந்த சங்கிலி சட்டையைத் தாண்டி தென்பட்டு அவரதுரசிகர்களைப் புரட்சி நீரில் நனைக்கும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிப்பதில்லை என்ற கொள்கையை கடைசிவரை கடைப்பிடித்த ஒரே தமிழ் நடிகர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். ‘பி’ மற்றும் ‘சி’ சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்க்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ… அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருந்தது.

கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் ஏதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது மாற்றுத் தீர்வாக பயன்பட்டு வந்தது.

புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவாணன் – ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’ போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’ R.V.உதயகுமார் இயக்கத்தில் சின்னக்கவுண்டர்போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த்.

1990 காலகட்டத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்க்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது சினிமாவில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என காக்கி உடை அணிந்து அநீதிக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் (சுமார்40 படங்கள்) அதிகம் நடித்தவர் விஜயகாந்த் மட்டும் தான்.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.29.jp

இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘கேப்டன்’ ஆக மாறிப்போனார்.

ரஜினியின் 100-வது படமான ‘ராகவேந்திரா’, கமல்ஹாசனின் 100-வது படமான ‘ராஜபார்வை’ இரண்டும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான்.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.31.jp

ஊமை விழிகள், புலன் விசாரணை, செந்தூரப்பூவே, சத்ரியன், பெரியண்ணா, வானத்தைப் போலபோன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.
ஆக்க்ஷன் கதாநாயகர்கள் படத்தின் முடிவில் மரணம் அடைவதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே செந்தூரப் பூவே, வைதேகி காத்திருந்தாள், ரமணா ஆகிய படங்களில் நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.

ஏழைப் பங்காளனாகவும் கோபக்கார இளைஞனாகவும் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களிலும் புரட்சிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்திய, அவரைப் பாசக்கார மனிதனாக ஆக்கிய படம் விசுவின் ‘டௌரி கல்யாணம்’. இதற்கு இசையமைத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானதொரு படம் ‘வெற்றி’. இதில் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டி வெற்றி பெறுபவராக விஜயகாந்த் நடித்தார். இந்தப் படத்தில் சிறுவன் விஜயகாந்தாக அறிமுகமானார் நடிகர் விஜய். பின்னாளில் நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்காக செந்தூரப்பாண்டியில் நடித்துக்கொடுத்தவர் இவர்.

சிறுமுகை ரவி இயக்கிய ‘அலை ஓசை’ படத்தின்‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடல் ஒடுக்கப்பட்டோரின் இதய கீதமாக இப்போதும் ஒலிக்கிறது. பாலு ஆனந்தின் இயக்கத்தில் இவர் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நகைச்சுவையைவிட ரசிகர்கள் மனத்தில் நிற்பது ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ என்னும் காதல் பாடல்தான்.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.31.jp

காவல் துறை அதிகாரியாக ஏராளமான படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளபோதும் ‘ஊமை விழிகள்’ படத்தின் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரம் காலம் கடந்து சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் வழக்கமான விஜயகாந்த் படங்கள் போன்று வசனங்களை அள்ளி வீசாமல் மிகவும் இயல்பாகத் தனது நடிப்பை அதில் அவர் தந்திருப்பார்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உழைப்பில் உருவான இந்தப் படத்துக்கு விஜயகாந்த் பெரிய ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார். இந்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நடிகர் சிவகுமார்தான் என்கிறார்கள். பத்திரிகையாளர்களின் உணர்வை வெளிப்படுத்திய இப்படத்தின் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாடல் தளர்வுற்றவர்களின் ஊக்க மருந்தாக இன்றுவரை செயல்படுகிறது.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.28.jp

விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுடன் ‘வீரபாண்டியன்’ படத்திலும், பிரபுவுடன் ‘காலையும் நீயே மாலையும் நீயே’ படத்திலும் விஜயகாந்த் இணைந்து நடித்துள்ளார்.

இவர் நடித்து, டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்த ‘கூலிக்காரன்’ படத்தில் முதலில் நடிப்பதற்காகப் பேசப்பட்டவர் ரஜினிகாந்த். ஆனால், அப்போது அவர் கேட்ட சம்பளத்தில் அந்தப் படமே எடுக்கப்பட்டுவிட்டதாக அந்த நேரத்தில் பத்திரிகைகள் எழுதியிருந்தன. இந்தப் படத்தைத் தயாரித்த தாணுவின் இயக்கத்தில் ‘புதுப்பாடகன்’ படத்தில் பின்னர் அவருக்கு நடித்துக் கொடுத்தார்.

விஜயகாந்த் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகனாக உச்சம் தொடஉறுதுணையாக இருந்தவர் அவரது நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோருக்கும் உதவுபவராகத் திரைப்படத்தில் நடிப்பதைவிட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகப் பிறருக்குத் தன்னால் இயன்றவரை உதவியவர் இவர். நடிகை வடிவுக்கரசிக்காக ‘அன்னை என் தெய்வம்’, நடிகர் சரத்குமாருக்காக ‘தாய்மொழி’ எனத் தன்னைப் போன்ற சக நடிகர் நடிகைகளுக்காகப் படங்களில் நடித்துக்கொடுத்தவர் விஜயகாந்த்.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.32.jp

விஜயகாந்த் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த தொடக்ககாலத்தில் சென்னை தி.நகர் ராஜாபாதர் தெருவில் அவரது அலுவலகம் இயங்கியது. திரைப்படத்துறை சார்ந்த எவர் அங்கு சென்றாலும் அவர்கள் வந்த காரணத்தை கேட்பதற்கு முன்பாக முதலில் உணவு அருந்திவிட்டு வருமாறு அலுவலக ஊழியர்கள் கூறுவார்களாம். உணவு விஷயத்தில்தான் நடிக்கும் படங்களில் தனக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதுவே கடை நிலை ஊழியருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை விஜயகாந்த் உறுதியாக கடைபிடித்து வந்ததால் சினிமா தொழிலாளர்கள் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்றே அழைத்தனர்.

விஜயகாந்த் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வசதி இல்லாதவர்களுக்கு கல்வி கற்க உதவி செய்வதை வெளிப்படையாக அறிவிக்காமல் செய்து வந்தார். அவரது உதவியால் கல்வி கற்று இந்திய ஆட்சிப் பணி, மருத்துவர்களாக ஏராளமானோர் உள்ளனர்.

WhatsApp-Image-2023-08-25-at-11.01.33.jp

‘சிறைப்பறவை’, ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’, ‘பூந்தோட்ட காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ (இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது).

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி சங்கத்திற்கு வாங்கப்பட்ட இடத்திற்காக பெற்ற கடனை அடைத்து நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார்.

தனது ரசிகர் மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.

சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம்.
சினிமா, அரசியல் இரண்டிலும் உச்சம் தொட்டவர் விஜயகாந்த் என்பது வரலாறாகி போனது.

– தொகுப்பு: இராமானுஜம்

 

https://minnambalam.com/cinema/vijayakanth-birthday-august-25-2023-political-and-cinema-travel/

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.