Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரக்குமாரின் வீடுவரை! - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரக்குமாரின் வீடுவரை! நிலாந்தன்.

September 3, 2023
spacer.png

இலங்கைதீவின் சமகால பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஜனநாயக உள்ளடக்கம் இல்லை. அது தனது அரசியல் அபிலாசைகளை ஜனநாயகத்தின் மொழியில் வெளிப்படுத்துவதும் இல்லை. அதுவும் பிரச்சினையின் ஒரு பகுதிதான்
-பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட

கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போலவே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானோடு பிக்குகள் மோதத் தொடங்கி விட்டார்கள்.

திருகோணாமலை கச்சேரியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குள் அத்துமீறிப் புகுந்த பிக்குகள் அடங்கிய குழுவை யாராலும் தடுக்க முடியவில்லை. அங்கே போலீஸ் இருந்தது. அரச உயர் அதிகாரிகள் இருந்தார்கள். அங்கிருந்த சிங்கள உயர் அதிகாரிகள் பிக்குகளைக் கண்டதும் எழுந்து நிற்கிறார்கள். சிறு தொகுதி தமிழ் அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. ஆளுநரும் எழுந்து நிற்கிறார். அவருடைய உதவியாளர் யாருக்கும் கைபேசியில் அழைப்பை எடுக்கிறார். ஆனால் யாராலும் அந்த இடத்திலிருந்து பிக்குக்களை அகற்ற முடியவில்லை. ஊடகவியலாளர்கள் சம்பவத்தை நேரலையாக ஒளிபரப்புகிறார்கள். அந்த இடத்தில் பிக்குவுக்கு பதிலாக வேறு யாராவது இருந்திருந்தால் சட்டப்படி கைது செய்திருப்பார்கள். ஆனால் இலங்கைத்தீவின் தேரவாத பிக்குகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்.

பிக்குகள் மட்டுமல்ல, சிங்கள பௌத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்தான். நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சரத் வீரசேகர இரண்டாவது தடவையாக முல்லைத்தீவு நீதிபதியை இழிவான வார்த்தைகளில் அவமதித்திருக்கிறார். நாடாளுமன்ற சிறப்புரிமை எனப்படுவது நீதிபதியை நீதிமன்றத்தை அவமதிப்பதற்கான ஒரு கவசமா? சரத் வீரசேகர அதை ஒரு கவசமாகத்தான் பயப்படுத்துகிறார். பிக்குகளும் சரத் வீரசேகரங்களும் சட்டத்தைக் கையில் எடுக்கிறார்கள். நீதிமன்றங்களை அவமதிக்கின்றார்கள்.

தையிட்டியில் விகாரை கட்டப்பட்டிருப்பது தனியார் காணியில். அது சட்டவிரோதம். தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் ஆணையை மதித்து நடக்கவில்லை. மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையிலும் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையை அமுல்படுத்த முடியவில்லை. செந்தில் தொண்டமான் கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்பட்டதும் அவ்வாறு சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த முற்பட்டார்.
திருக்கோணமலையில் சற்று உயரமாக, குன்றுகளாகக் காணப்படும் எல்லா இடங்களிலும் விகாரைகளைக் கட்டுவது என்று ஒரு பகுதி தேரர்கள் முடிவெடுத்து விட்டார்கள் போலத் தெரிகிறது.

ஏற்கனவே கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் ஒரு விகாரை கட்டப்பட்டு விட்டது. வெருகலில்,கல்லடியில், மலைநீதியம்மன் மலையில் 2006இல் ஒரு விகாரை கட்டப்பட்டு விட்டது. அந்த மலையில் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தகவற்தொடர்புக் கட்டுமானம் ஒன்று இருந்தது. அதில் இப்பொழுது விகாரை உள்ளது. அங்கு மேலும் நிலத்தைப் பிடிக்கும் நடவடிக்கைகளை மக்கள் எதிர்க்கிறார்கள்.

திருக்கோணமலை, குச்சவெளி ஆகிய இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளினதும் எல்லையில் உள்ள ஆறாங்கட்டை அல்லது பெரியகுளம் என்ற இடத்தில் திருகோணமலை-நிலாவெளி வீதியில் ஒரு விகாரையைக் கட்ட முயற்சிக்கப்படுகிறது. கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் அதற்கருகே காணப்படுகிறது. பிரதேச சபை அதற்கு அனுமதி வழங்கவில்லை. எனினும் வழிபாட்டிடங்களைக் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி தேவையில்லை என்று பிக்குகள் நேற்று வெள்ளிக்கு கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்திக் கூறியுள்ளார்கள்.

அடுத்தது, புல்மோட்டைப் பகுதியில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் அரிசி மலைப் பகுதி. அங்குள்ள கடற்கரையில் காணப்படும் குறுணிக் கற்கள் அரிசி போல அழகாய் இருப்பதால் அப்பகுதிக்கு அப்படி ஒரு பெயர். அங்கேயும் ஒரு விகாரையைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

அடுத்தது குச்சவெளியில்.குச்சவெளி போலீஸ் நிலையத்திற்கு எதிராக ஒரு சிறிய குன்று. அங்கே ஒரு விகாரை ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

அடுத்தது, தென்னை மரவாடியில் உள்ள சிறிய மலை. அது யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரைக்கு வரும் யாத்திரிகர்கள் இளைப்பாறும் ஒரு மலையடிவாரம். அதனால் அது கந்தசாமி மலை என்று அழைக்கப்படுகிறது. அங்கேயும் ஒரு விகாரையைக் கட்ட ஏற்பாடுகள் நடப்பதாகத் தகவல்.

தென்னை மரவாடிச் சந்தியில், முல்லைத் தீவுக்கு திரும்புமிடத்திலும் மூதூரில் மூன்றாங் கட்டைப் பகுதியிலும் விகாரைகளைக் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் செறிவாக வாழும் பிரதேசங்களில் குறிப்பாகப் பெரியகுளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை செந்தில் தொண்டமான் தடுக்க முற்பட்டார். அதனால் திருகோணமலை கச்சேரியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் குழப்புவதற்கு, கச்சேரிக்கு முன்பாக பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். முடிவில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குள் புகுந்து கூட்டத்தை குழப்பியிருக்கிறார்கள்.

செந்தில் தொண்டமான் மத்திய அரசின் அதிகாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மாகாண ஆளுநர். ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள், மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரை விடவும் ஆளுநருக்கே அதிகாரம் அதிகம். தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஆளுநர் பதவிக்கு ஒரு தமிழரை நியமித்ததன்மூலம் அவர் தீர்வைத் தரப்போகிறார் என்ற ஒரு தோற்றம் முதலில் கட்டியெழுப்பப்பட்டது. செந்தில் தொண்டைமானின் நியமனத்தின் பின்னணியில் இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நிகழ்ச்சிநிரல் உண்டு. ஆனால் பிக்குகள் ஆளுநரோடு மோதத் தொடங்கிவிட்டார்கள்.

அண்மை மாதங்களாக சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலப்பறிப்பு நடவடிக்கைகளில் பௌத்த மதகுருக்கள் முன்னிலையில் நிற்கிறார்கள். குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரகுமாரின் வீடு வரை பிக்குக்களே காணப்படுகிறார்கள். அது தற்செயலான ஒன்றாகத் தெரியவில்லை. திணைக்களங்களும் அரசபடைகளும் பொலிசும் வெளிப்படையாகச் செய்யமுடியாத விடயங்களுக்கு பிக்குக்கள் முன்னிறுத்தப்படுகிறார்களா? சிங்கள மக்கள் மத்தியில் பிக்குகளுக்கு மதிப்பு உண்டு. அவர்கள் சன்னியாசிகளாகப் பார்க்கப்படுகின்றார்கள். அதனால்தான் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் பல்சமயக் குழுவினரை முற்றுகையிட்டு வைத்திருந்த பிக்குவை அங்கு வந்த போலீஸ் அதிகாரி முதலில் காலில் விழுந்து வணங்கினார். அப்படித்தான் திருக்கோணமலைக் கச்சேரிக்குள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தைக் குழப்பிய பிக்குக்கள் மாநாட்டு மண்டபத்துக்குள் நுழைந்ததும் பெரும்பாலானவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் சன்னியாசிகள் என்பதனால் அந்த மதிப்பு. அந்த மதிப்பை ஒரு கவசமாகப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அவர்கள் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

அதாவது ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் வாக்களித்தபடி ஆயிரம் விகாரைகளைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாரா? அடுத்த ஆண்டு முடிவதற்கிடையில் அவர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டும். அதற்கிடையே நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியுமோ தெரியவில்லை. சஜித்தின் தலைமை பலவீனமாக இருப்பது ரணிலுக்கு ஒரு வரப்பிரசாதம். எனினும் சஜித் ஏனைய கட்சிகளோடு ஒரு பெருங்கூட்டை உருவாக்கினால் அது ஓப்பீட்டளவில் சவாலாக மாறும்.

இம்முறை தமிழ் வாக்குகள் தனக்குக் கொத்தாக விழப்போவவதில்லை என்று ரணிலுக்கு தெரிகிறது. ராஜபக்சகளின் அனுசரணையோடு அவர் தேர்தலில் போட்டியிட்டால் தமிழ் வாக்குகளை முழுமையாகப் பெறமுடியாது. எனவே தமிழ் வாக்குகளுக்காக தமிழ் உணர்வுகளோடு சமரசம் செய்வதை விடவும் சிங்கள பௌத்த வாக்குகளை கவர்வதே அவருக்கு உடனடிக்கு இலகுவான வழி.
மேலும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையோடு ஒரு புதிய தீர்மானம் நிறைவேற்றப்படலாம். தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாக அமையுமா அல்லது புதியதாக அமையுமா என்று பார்க்கவேண்டும். முன்னைய தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அத்த தீர்மானத்தில் முடிவெடுக்கப்படக்கூடும். எனவே அக்காலகட்டம் இலங்கையில் சிங்கள பௌத்த உணர்வுகளை அதிகம் தூண்டக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் வரும். அதில் ராஜபக்சகளின் அனுசரணையோடு ரணில் களமிறங்குவாராக இருந்தால் அவர் ஐநா தீர்மானத்தின் விளைவாகத் தூண்டி விடப்பட்ட சிங்கள பௌத்த உணர்வுகளுக்கு தலைமை தாங்கி எப்படி அடுத்த ஜனாதிபதியாக வரலாம் என்றுதான் சிந்திப்பார்.

அதனால் இப்பொழுது நடக்கும் சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலப்பறிப்பு நடவடிக்கைகள் மேலும் முடுக்கி விடப்படக்கூடிய அரசியற் சூழலே வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் சரத் வீரசேகர, உதய கமன்பில், விமல் வீர வன்ச, மேர்வின் டி சில்வா போன்றவர்கள் எழுப்பும் இனவாத அலையின் விளைவுகளையும் ரணில் தனக்குச் சாதகமாக அறுவடை செய்து கொள்வார். எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளைக் கவரத் தேவையான தனது தகைமையை எப்படி அதிகப்படுத்துவது என்றுதான் ரணில் சிந்திப்பார். அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களபௌத்த மயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவர் நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவு.

அண்மையில் தமிழ் கட்சித் தலைவர்கள் சிலரைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் குருந்தூர் மலை தொடர்பாக அமெரிக்கா உற்றுக் கவனிப்பதாகக் கூறியதாக ஒரு செய்தி வெளிவந்தது. அதில் அவர் இந்துத் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரித்திருக்கிறார். தமிழ் ஊடகங்களில் கூறப்படுவது போல அவர் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளைக் குறித்து எதுவும் பேசவில்லையாம். மேலும் அவர் உரையாடலின் போக்கில் குருந்தூர் மலை பற்றிச் சொல்லியிருக்கிறாரே தவிர, அதை அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக ருவிற்றரில் பதிவிட்டிருக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேற்கு நாடுகள், ஐநா போன்றன சிங்கள பௌத்த மயமாக்கலைக் குறித்து வெளிப்படையாக உத்தியோகபூர்வமாக எதையும் தெரிவித்திராத ஒரு சூழலில், பிக்குக்கள் அதைச் செய்யும்போது அதைத் தடுக்காமல் விடுவது ரணிலைப் பொறுத்தவரை தற்காப்பானது. அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவருடைய வெற்றி வாய்ப்புக்களைப் பாதுகாப்பது.
 

 

https://globaltamilnews.net/2023/194780/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.