Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒசைரிஸ் - ரெக்ஸ்: பென்னு எரிகல் பூமியை தாக்குமா? அதில் நாசா மண்ணை சேகரித்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பென்னு, நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜானதன் ஏமோஸ்
  • பதவி, அறிவியல் செய்தியாளர், யூடாவிலிருந்து
  • 23 செப்டெம்பர் 2023, 15:29 GMT
    புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்

நாசாவின் ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலத்தில் உள்ள கொள்கலன் வரும் ஞாயிற்றுக்கிழமை பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். இது ஒரு துப்பாக்கித் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் வரும்.

அது வளிமண்டலத்தில் நுழையும் போது வானத்தில் ஒரு தீப்பிழம்பாய் தோன்றும். ஆனால் அதன் வெப்பக் கவசம் மற்றும் பாராசூட்டுகள் அது இறங்கும் வேகத்தை குறைத்து, அமெரிக்காவின் யூடா மாகாணத்தின் மேற்குப் பாலைவனத்தில் மெதுவாகத் தரையிறக்கும்.

இந்தக் கொள்கலனுக்கு அப்படி என்ன சிறப்பு?

இது ஒரு விலையுயர்ந்த பொருளை எடுத்து வருகிறது.

இது ‘பென்னு’ என்னும் எரிகல்லில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை கொண்டுவருகிறது.

‘பென்னு’ என்பது ஒரு மலை அளவு பெரிய விண்வெளிப் பாறை.

இதிலிருந்து எடுத்து வரப்படும் மண் மிகவும் ஆழமான கேள்விகளுக்கு விடையளிக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்தக் கேள்வி: பூமி எப்படி உருவானது?

 
பென்னு, நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/GODDARD/UNIVERSITY OF ARIZONA

படக்குறிப்பு,

‘பென்னு’ என்பது ஒரு மலை அளவு பெரிய விண்வெளிப் பாறை

பூமியின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி

இந்த விண்வெளி ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரான தாந்தே லாரெட்டா, பென்னு எரிகல்லில் இருந்து எடுக்கப்பட்ட 250 கிராம் மண், பூமி உருவாவதற்கு முன்னரே உருவானது, ஏன் ஒருவேளை நமது சூரிய குடும்பத்திற்கு முன்பே உருவானதாகக் கூட இருக்கலாம், என்று கூறுகிறார்.

"நாங்கள் நமது பூமியின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். பூமி எப்படி உருவானது? இது ஏன் நாம் வாழக் கூடிய வகையில் இருக்கிறது? பெருங்கடல்கள் தண்ணீரை எங்கிருந்து பெற்றன? நமது வளிமண்டலத்தில் காற்று எங்கிருந்து வந்தது? மிக முக்கியமாக, உயிர் அங்கக மூலக்கூறுகளின் ஆதாரம் என்ன?" என்கிறார் லாரெட்டா.

பென்னு, நாசா, விண்வெளி ஆராய்ச்சி
படக்குறிப்பு,

பென்னு எரிகல்லின் அளவு

ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலத்தின் பாதையில் இறுதி மாற்றங்களைச் செய்ய பொறியாளர்கள் கட்டளையிட்டுள்ளனர். இந்த விண்கலத்திலிருக்கும் கொள்கலன், இந்த வார இறுதியில் பூமியில் தரையிறங்குவதற்கான கட்டளை மட்டுமே எஞ்சியுள்ளது.

பென்னுவிலிருந்து கற்களையும் மண்ணையும் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி 2016-இல் துவங்கியது. இதற்காக நாசா இந்த 500மீ (1,640 அடி) அகலமான எரிகல்லை நோக்கி ஒசைரிஸ்-ரெக்ஸ் ஆய்வுக்கலனை அனுப்பியது. பென்னு எரிகல்லை அடைய இந்த விண்கலம் இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மேலும் இரண்டு ஆண்டுகள் செலவிட்டு, ஆராய்ச்சிக் குழு, எரிகல்லில் எங்கிருந்து ‘மண்’ மாதிரியை எடுக்கலாம் என்பதைத் தீர்மானித்தது.

பென்னு, நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,BBC/KEVIN CHURCH

படக்குறிப்பு,

பிரிட்டனின் ராக் இசைக் கலைஞர் மற்றும் வானியற்பியல் விஞ்ஞானியான முனைவர் சர் பிரையன் மே (Dr Sir Brian May) இந்த ஆராய்ச்சியில் இந்தத் தேர்வில் முக்கியமான நபராகத் திகழ்ந்தார்

கலையும் அறிவியலும் இணைந்த முயற்சி

இந்தத் தேர்வில் முக்கியமான நபராகத் திகழ்ந்தவர் பிரிட்டனின் ராக் இசைக் கலைஞர் மற்றும் வானியற்பியல் விஞ்ஞானியான முனைவர் சர் பிரையன் மே (Dr Sir Brian May).

‘Queen’ என்ற ராக் இசைக்குழுவின் கிட்டார் கலைஞராக இருந்த இவர் ஸ்டீரியோ இமேஜிங்கிலும் (stereo imaging) நிபுணர் .

ஒரு பொருளை இருவேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு படங்களைச் சரியான கோணத்தில் பொருத்தி, அதனை ஒரு முப்பரிமாணக் காட்சியாக மாற்றும் திறன் இவருக்கு உண்டு.

பென்னு எரிகல்லில் மண் மாதிரி எடுப்பதற்கான தளங்களைக் கண்டறிய இவரும், இவரது கூட்டாளியான கிளாடியா மன்சோனியும் வேலை செய்தனர்.

"கலை மற்றும் அறிவியல் இரண்டுமே முக்கியம் என்று நான் எப்போதும் சொல்வேன்," என்று சர் பிரையன் பிபிசியிடம் கூறினார்.

"விண்கலம் கீழே விழ வாய்ப்பிருக்கிறதா, அல்லது ‘நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இறங்குதளத்தின் விளிம்பில் இருந்த ஒரு பாறையில் சென்று மோதுமா என்பதை அறிய நிலப்பரப்பை நாம் உணர வேண்டும். அப்படி நடந்திருந்தால் அது பேரழிவாக இருந்திருக்கும்,” என்கிறார் பிரையன் மே.

பென்னு, நாசா, விண்வெளி ஆராய்ச்சி
படக்குறிப்பு,

ஒசைரிஸ்-ரெக்ஸ், பென்னுவின் தரை வரை தாழ்வாகச் சென்றது. பிறகு, அதன் 3 மீட்டர் (10 அடி) நீளமான ‘கரத்தால்’ மண்ணை அள்ளி எடுக்கும் பொறிமுறையைப் பிடித்துக் கொண்டது

மண்ணைச் சேகரித்த ‘அற்புத தருணம்’

2020-ஆம் ஆண்டு, அக்டோபர் 20-ஆம் தேதி, பென்னு எரிகல்லில் ‘மண்’ மாதிரி எடுக்கப்பட்ட தருணம் அற்புதமான ஒன்றாக இருந்தது.

ஒசைரிஸ்-ரெக்ஸ், பென்னுவின் தரை வரை தாழ்வாகச் சென்றது. பிறகு, அதன் 3 மீட்டர் (10 அடி) நீளமான ‘கரத்தால்’ மண்ணை அள்ளி எடுக்கும் பொறிமுறையைப் பிடித்துக் கொண்டது.

பென்னுவின் மேற்பரப்பைத் தாக்கி, அதே நேரத்தில், கற்கள் மற்றும் மண்ணை மேலெழ வைக்க நைட்ரஜன் வாயுவை வெடிக்கச் செய்வதே திட்டமாக இருந்தது.

ஆனால், அடுத்து நடந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

விண்கலத்தின் பொறிமுறை பென்னுவைத் தொடர்பு கொண்டபோது, அதன் மேற்பரப்பு ஒரு திரவம் போலப் பிரிந்தது.

நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்ட போது, பொறியின் வட்டு 10செ.மீ cmகீழே இருந்தது. நைட்ரஜனின் அழுத்தம் 8 மீ (26 அடி) விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியது. கல்லும் மண்ணும் எல்லா திசைகளிலும் பறந்தன. ஆனால் முக்கியமாக சேகரிப்புப் பொறிமுறையின் கொள்கலனுக்குள்ளும் சென்றன.

பென்னு, நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,BBC/KEVIN CHURCH

படக்குறிப்பு,

லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் (Natural History Museum) சேர்ந்த முனைவர் ஆஷ்லீ கிங், இந்த மண் மாதிரியை தீண்டும் முதல் விஞ்ஞானிகளில் ஒருவராக இருப்பார்

‘இது மிக அரிய ஆராய்ச்சி’

இப்போது சில மணி நேரங்களில், ஏழு ஆண்டுகள் பயணித்த ஒசைரிஸ்-ரெக்ஸ், தனது 700 கோடி கிலோமீட்டர் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பென்னுவின் மண் மாதிரியை பூமிக்குக் கொண்டுவரும்.

அதன் கொள்கலன் பாதுகாப்பாக தரையில் வைக்கப்பட்டவுடன், அது டெக்சாஸில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு இந்த மண் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய ஒரு துப்புரவான பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது.

லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் (Natural History Museum) சேர்ந்த முனைவர் ஆஷ்லீ கிங், இந்த மண் மாதிரியைத் (கையுறைகள் அணிந்து) தீண்டும் முதல் விஞ்ஞானிகளில் ஒருவராக இருப்பார். ஆரம்ப பகுப்பாய்வைச் செய்யும் குழுவின் உறுப்பினராக அவர் உள்ளார்.

"ஒரு எரிகல்லில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வருதல் அடிக்கடி செய்யப்படும் ஒன்றல்ல. எனவே அதன் முதல் அளவீடுகளைச் செய்வது மிகநன்றாக செய்ய வேண்டும்.," என்று அவர் கூறுகிறார். "இது நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருக்கிறது," என்கிறார்.

பென்னு, நாசா, விண்வெளி ஆராய்ச்சி
படக்குறிப்பு,

விண்வெளியில் பென்னுவின் பாதை, அறியப்பட்ட எந்த ஒரு எரிகல்லையும்விட பூமியைத் தாக்கும் அதிக சாத்தியக்கூறைப் பெற்றிருக்கிறது.

மிகவும் ஆபத்தான எரிகல், ஆனால்...

நாசா, பென்னுவை சூரிய குடும்பத்தில் இருக்கும் மிகவும் ஆபத்தான ஒரு பாறையாகக் கருதுகிறது. விண்வெளியில் அதன் பாதை, அறியப்பட்ட எந்த ஒரு எரிகல்லையும் விட பூமியைத் தாக்கும் அதிக சாத்தியக்கூறைப் பெற்றிருக்கிறது.

ஆனால் பயப்பட வேண்டாம், அது நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒரு நாணயத்தைத் டாஸ் போட்டு ஒரே வரிசையில் 11 தலைகளைப் பெறுவது போன்றது. அடுத்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

பென்னுவில் நிறைய நீர் இருக்கவும் வாய்ப்புள்ளது. அதன் எடையில் 10% உள்ள இந்த நீர் அதன் தாதுக்களில் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த நீரில் உள்ள பல்வேறு வகையான ஹைட்ரஜன் அணுக்களின் விகிதம் பூமியின் பெருங்கடல்களில் உள்ளதைப் போலவே உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்.

சில வல்லுநர்கள் நம்புவது போல, ஆரம்ப காலத்தில் பூமி மிகவும் சூடாக இருந்ததாலேயே தன் நீரின் பெரும்பகுதியை இழந்திருந்தால், பென்னுவுடன் H₂O பொருத்தத்தைக் கண்டறிவது, நமது பெருங்கடல்களுக்கு அவற்றின் கொள்ளளவை வழங்குவதில் எரிகற்களின் தாக்குதல் எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பது தெரிந்துவிடும்.

பென்னு, நாசா, விண்வெளி ஆராய்ச்சி
படக்குறிப்பு,

இந்த விண்வெளி ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரான தாந்தே லாரெட்டா

‘பூமியில் உயிர்கள் எப்படி வந்தன என்பதற்கான விடையைத் தேடுகிறோம்’

பென்னுவில் எடையில் 5-10% கார்பன் இருக்கலாம்.

இதில்தான் நாம் அதிக ஆர்வமாக உள்ளோம்.

நமக்கு தெரிந்தபடி, பூமியில் உயிர் கரிம வேதியியலை அடிப்படையாகக் கொண்டது.

விண்வெளியில் இருந்து சிக்கலான மூலக்கூறுகள் பூமிக்கு வந்ததால்தான் இங்கு உயிர்கள் தோன்றினவா?

"பென்னுவின் மண் மாதிரியில் செய்யப்படும் முதல் பகுப்பாய்வுகளில் ஒன்று, அதில் உள்ள கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகளின் பட்டியலைத் தயாரிப்பது," என்று NHM-இன் பேராசிரியர் சாரா ரஸ்ஸல் கூறுகிறார்.

"விண்கற்களைப் பார்ப்பதன் மூலம், எரிகற்களும் வெவ்வேறு கரிம மூலக்கூறுகளைக் கொண்டிருக்கக் கூடும் என்பதை நாம் அறிவோம். ஆனால் விண்கற்களில் உள்ள மூலக்கூறுகள் பெரும்பாலும் மிகவும் அசுத்தமானவை. எனவே பென்னுவின் மண் மாதிரி நமக்கு உண்மையான கரிமக் கூறுகள் என்ன என்பதைக் கண்டறிய வாய்ப்பளிக்கும்,” என்கிறார் அவர்

பேராசிரியர் லாரெட்டா மேலும் கூறுகையில், இந்த மாசுபாட்டின் காரணமாக, புரதங்களில் பயன்படுத்தப்படும் அமினோ அமிலங்கள் விண்கற்களில், உள்ளனவா என்று நாங்கள் தேடவில்லை. “எனவே எரிகற்கள் பூமியில் உயிர்கள் தோன்ற ஆதாரமாக இருந்தனவா என்ற புரிதலை மேம்படுத்தப் போகிறோம்,” என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c5161j6mzpro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒசைரிஸ்-ரெக்ஸ்: 200 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகோளின் மண்ணை எடுத்து வந்த நாசா - எப்படி தெரியுமா?

ஒசைரிஸ் - ரெக்ஸ்

பட மூலாதாரம்,X/NASA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜானதன் ஏமோஸ்
  • பதவி, அறிவியல் செய்தியாளர், யூடாவிலிருந்து
  • 23 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்

நாசாவின் ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலத்தில் உள்ள கொள்கலன் திட்டமிட்டபடி பூமியின் வளிமண்டலத்திற்குள் இன்று நுழைந்தது. இது ஒரு துப்பாக்கித் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் சீறி வந்தது.

அது வளிமண்டலத்தில் நுழைந்த போது வானத்தில் ஒரு தீப்பிழம்பாய் தோன்றியது. ஆனால் அதன் வெப்பக் கவசம் மற்றும் பாராசூட்டுகள் அது இறங்கும் வேகத்தை குறைத்து, அமெரிக்காவின் யூடா மாகாணத்தின் மேற்குப் பாலைவனத்தில் மெதுவாகத் தரையிறக்கின.

இந்தக் கொள்கலனுக்கு அப்படி என்ன சிறப்பு?

இது ஒரு விலையுயர்ந்த பொருளை எடுத்து வந்துள்ளது.

இது பூமியில் இருந்து 200 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ‘பென்னு’ என்னும் சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை கொண்டு வருகிறது.

‘பென்னு’ என்பது சூரிய மண்டலத்தில் உள்ள ஒரு மலை அளவு பெரிய விண்வெளிப் பாறை.

இதிலிருந்து எடுத்து வரப்பட்டுள்ள மண் மிகவும் ஆழமான கேள்விகளுக்கு விடையளிக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்தக் கேள்வி: பூமி எப்படி உருவானது?

 
பென்னு, நாசா, விண்வெளி ஆராய்ச்சி
 
கொள்கலன் பூமியை நோக்கி பயணம்

ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலத்தில் இருந்த கொள்கலன் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. பூமிக்கு நெருக்கமாக வந்த பிறகு, பென்னு எரிகல்லில் சேகரித்த மண் மாதிரிகள் நிரம்பிய கொள்கலனை அந்த விண்கலம் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி விடுவித்தது. அந்த கொள்கலன் விநாடிக்கு 12 கி.மீ. அதாவது மணிக்கு சுமார் 43,500 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி விரைந்தது.

அடுத்த 20 நிமிடங்களில் ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலம் தனது என்ஜினை இயக்கி புதிய பாதையில் பயணத்தை தொடங்கியது. ஒருவேளை அது தனது பாதையை மாற்றிக் கொள்ளா விட்டால், அது விடுவித்த கொள்கலனை பின்தொடர்ந்து சென்று அந்த விண்கலமே கொள்கலன் மீது அழித்துவிட்டிருக்கும்.

விண்வெளியில் தனது பாதையை மாற்றிக் கொண்ட ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலம் பூமியில் இருந்து 800 கி.மீ. உயரத்தில் சென்றது. அதுதான், பூமியை கண்காணிக்கும் பல செயற்கைக்கோள்களின் சுற்றுவட்டப் பாதையாகும். ஆனால், ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலம் அங்கேயே நிலைகொண்டிருக்கப் போவதில்லை.

மாறாக, அபோஃபிஸ் என்ற மற்றொரு எரிகல்லை சந்திக்க புறப்பட்டுச் சென்றிருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அந்த சந்திப்பு 2029-ம் ஆண்டு நிகழும்.

வெற்றிகரமாக தரையிறங்கிய கொள்கலன்

ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலத்தால் விடுவிக்கப்பட்ட, பென்னு சிறுகோளின் 250 கிராம் மண் மாதிரிகளை சுமந்து கொண்டிருந்த கொள்கலன் திட்டமிட்டபடி அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 8.52 மணிக்கு இந்த அற்புத தருணம் நடந்தேறியது. இதையடுத்து நாசா விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தரையைத் தொடுமுன் கொள்கலனில் இருந்து தனியே விடுவித்துக் கொண்ட பாராசூட்டும் அருகிலேயே விழுந்தது.

ஒசைரிஸ் - ரெக்ஸ்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின் மாதிரிகளுடன் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா கலம்

Published By: RAJEEBAN

25 SEP, 2023 | 06:35 AM
image
 

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின் மாதிரிகளுடன் நாசாவின் கலமொன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

 

சிறுகோள்கள் என அழைக்கப்படும் சூரியனை சுற்றிவரும் எரிகற்களின் மாதிரிகளுடன் நாசாவின் விண்வெளி கலமொன்று அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த மாதிரிகள் சூரிய குடும்பத்தின் உருவாக்கம் -பூமி எவ்வாறு வாழக்கூடியதாக மாறியது என்பதை புரிந்துகொள்வதற்கு உதவும் என விஞ்ஞானிகள் பெரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஏழுவருட விண்வெளி பயண முயற்சியின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

பெனும் எனும் சிறியகோளின் மேற்பரப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலம் தரையிறங்கியுள்ளது.

விண்கலம் தரையைநோக்கி வருவது உறுதியானதும் நாசாவில் பெரும் மகிழ்ச்சி காணப்பட்டது.

https://www.virakesari.lk/article/165354

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் கிணத்தடியில் சுடுதண்ணீர் வைக்கிற கிடாரம் மாதிரிக்கு கிடக்கு.......வெள்ளைக்காரன் நம்ம நாடுகளைப் பிடித்து எங்கட தொழில் நுட்பத்தையெல்லாம் தங்கட விஞ்ஞனத்துக்கு பயன் படுத்துறான்.....!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக ஆபத்தான Aestroid எனும் சிறுகோளில் இருந்து மண்ணை சேகரித்த, நாசாவின் ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலத்தில் உள்ள கொள்கலன் அமெரிக்காவின் Utah பாலைவனத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக ஆபத்தான பென்னு சிறுகோள் மண் மாதிரியில் நாசாவுக்கு என்ன கிடைத்தது?

கிடைத்தது?

பென்னு

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 செப்டெம்பர் 2023

உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அடுத்த பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் உள்ள பென்னு என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரியை சேகரித்து வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு வந்துள்ளது.

7 ஆண்டுகள் நீடித்த இந்த திட்டம் எப்படி நிறைவேறியது? இதற்கு பயன்படுத்தப்பட்ட ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலத்தின் சிறப்பு என்ன? சிறுகோளின் மண் மாதிரிகளை சுமந்து வந்த கொள்கலன் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழைந்த போது என்ன நிகழ்ந்தது? கொள்கலன் தரையில் பத்திரமாக இறங்கியது எப்படி? தற்போது அந்த மண் மாதிரிகள் எங்கே இருக்கின்றன? இந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

பென்னு சிறுகோளை நாசா தேர்வு செய்தது ஏன்?

பென்னு என்பது பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் இருக்கும் சிறு கோளாகும். அது சூரிய மண்டலத்தில் உள்ள மலையளவு பெரிய விண்வெளிப் பாறையாகும். அது சுமார் 500 மீட்டர் அதாவது 1,640 அடி அகலம் கொண்டது.

"இந்த பென்னு சிறுகோள் பூமியின் தோற்றத்திற்கு முன்பே உருவானது. ஏன் நமது சூரிய குடும்பத்திற்கு முன்பே கூட உருவானதாகக் கூட இருக்கலாம் என்று இந்த விண்வெளி ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரான தாந்தே லாரெட்டா. ஆகவே அதனை ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் தோற்றம், பூமியில் உயிர்களின் தோற்றம் பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலன் எப்போது புறப்பட்டது?

பென்னு சிறுகோளில் இருந்து கற்களையும் மண்ணையும் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி 2016-ம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலத்தை பென்னு சிறுகோளை நோக்கி நாசா செலுத்தியது. பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் உள்ள அந்த சிறுகோளை அந்த விண்கலம் நெருங்க 2 ஆண்டுகளாயின.

பென்னு சிறுகோளில் எந்த இடத்தில் மண் மாதிரிகளை சேகரிப்பது என்பதை தீர்மானிக்க மேலும் 2 ஆண்டுகளை நாசா எடுத்துக் கொண்டது. இந்த காலத்தில் பென்னு சிறுகோளின் அமைப்பை விண்கலத்தின் மூலமாக ஒவ்வொரு அங்குலமாக நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் முடிவில், பென்னு சிறுகோளில் எந்த இடத்தில் மண் மாதிரிகளை சேகரிப்பது என்று அவர்கள் தீர்மானித்தனர்.

பென்னு சிறுகோளில் மண்ணை சேகரித்த ‘அற்புத தருணம்’

2020-ஆம் ஆண்டு, அக்டோபர் 20-ஆம் தேதி, பென்னு சிறுகோளில் ‘மண்’ மாதிரி எடுக்கப்பட்ட தருணம் அற்புதமான ஒன்றாக இருந்தது.

ஒசைரிஸ்-ரெக்ஸ், பென்னுவின் தரை வரை தாழ்வாகச் சென்றது. பிறகு, அதன் 3 மீட்டர் (10 அடி) நீளமான ‘கரத்தால்’ மண்ணை அள்ளி எடுக்கும் பொறிமுறையைப் பிடித்துக் கொண்டது.

பென்னுவின் மேற்பரப்பைத் தாக்கி, அதே நேரத்தில், கற்கள் மற்றும் மண்ணை மேலெழ வைக்க நைட்ரஜன் வாயுவை வெடிக்கச் செய்வதே திட்டமாக இருந்தது.

ஆனால், அடுத்து நடந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

விண்கலத்தின் பொறிமுறை பென்னுவைத் தொடர்பு கொண்டபோது, அதன் மேற்பரப்பு ஒரு திரவம் போலப் பிரிந்தது.

நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்ட போது, பொறியின் வட்டு 10செ.மீ கீழே இருந்தது. நைட்ரஜனின் அழுத்தம் 8 மீ (26 அடி) விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியது. கல்லும் மண்ணும் எல்லா திசைகளிலும் பறந்தன. ஆனால் முக்கியமாக சேகரிப்புப் பொறிமுறையின் கொள்கலனுக்குள்ளும் சென்றன.

பென்னு சிறுகோளில் மண் மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்த பின்னர் ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

ஒசைரிஸ் - ரெக்ஸ்

பட மூலாதாரம்,X/NASA

கொள்கலன் பூமியை நோக்கி பயணம்

ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பூமியை நெருங்கியவுடன், தம்மிடம் இருந்த சிறுகோளின் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலனை பூமியை நோக்கி விடுவித்தது. அந்த கொள்கலன் விநாடிக்கு 12 கி.மீ. அதாவது மணிக்கு சுமார் 43,500 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி விரைந்தது.

துப்பாக்கித் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் சீறி வந்ததால் வானத்தில் ஒரு தீப்பிழம்பைப் போல கொள்கலன் காட்சியளித்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த வெப்பக்கவசம் அதனை அந்த நெருப்பில் இருந்து காப்பாற்றியது. அதில் பொருத்தப்பட்டிருந்த பாராசூட் அதனை வேகத்தை தணித்து மெதுவாக தரையை நோக்கி பயணிக்க உதவியது.

கொள்கலன் வெற்றிகரமாக தரையிறங்கிய தருணம்

பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த 13 நிமிடங்களில் அந்த கொள்கலன் பத்திரமாக தரையைத் தொட்டது. ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலத்தால் விடுவிக்கப்பட்ட, பென்னு சிறுகோளின் 250 கிராம் மண் மாதிரிகளை சுமந்து கொண்டிருந்த கொள்கலன் திட்டமிட்டபடி அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 8.52 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8.22 மணி) இந்த அற்புத தருணம் நடந்தேறியது. இதையடுத்து நாசா விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தரையைத் தொடுமுன் கொள்கலனில் இருந்து தனியே விடுவித்துக் கொண்ட பாராசூட்டும் அருகிலேயே விழுந்தது. அங்கே தயாராக காத்திருந்த நிபுணர்கள் அந்த கொள்கலனை ஆய்வு செய்தனர். பின்னர், அந்த கொள்கலன் உட்டாவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பிறகு, அங்கே நாசா ஏற்கனவே தயாராக நிறுத்திவைத்துள்ள ஹெலிகாப்டர் மூலம் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அந்த கொள்கலன் கொண்டு செல்லப்படும்.

ஒசைரிஸ் - ரெக்ஸ்

பட மூலாதாரம்,X/NASA

ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலம் எங்கே?

ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலம் சிறுகோளின் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலனை பூமியை நோக்கி விடுவித்த பிறகு, அடுத்த 20 நிமிடங்களில் தனது என்ஜினை இயக்கி புதிய பாதையில் பயணத்தை தொடங்கியது. ஒருவேளை அது தனது பாதையை மாற்றிக் கொண்டிருக்கா விட்டால், அது விடுவித்த கொள்கலனை பின்தொடர்ந்து சென்று அந்த விண்கலமே கொள்கலன் மீது மோதி அழித்துவிட்டிருக்கும்.

விண்வெளியில் தனது பாதையை மாற்றிக் கொண்ட ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலம் பூமியில் இருந்து 800 கி.மீ. உயரத்தில் சென்றது. அதுதான், பூமியை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பல செயற்கைக்கோள்களின் சுற்றுவட்டப் பாதையாகும். ஆனால், ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலம் அங்கேயே நிலைகொண்டிருக்கப் போவதில்லை.

மாறாக, அபோஃபிஸ் என்ற மற்றொரு எரிகல்லை சந்திக்க புறப்பட்டுச் சென்றிருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அந்த சந்திப்பு 2029-ம் ஆண்டு நிகழும்.

கனடா, ஜப்பானுக்கு மண் மாதிரியை வழங்கும் நாசா

பென்னு சிறுகோளின் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலன் டெக்சாஸில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு இந்த மண் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய ஒரு துப்புரவான பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது.

மண் மாதிரியின் பெரும் பங்கு நாசா வசம் இருக்கும். 4 சதவீத பங்கை கனடா விண்வெளி மையத்திற்கும் பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீத பங்கை ஜப்பான் விண்வெளி மையத்திற்கும் நாசா அனுப்ப இருக்கிறது. ஏற்கனவே ஹயாபுசா 2 திட்டத்தின் மூலம் எரிகல்லில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை நாசாவுக்கு ஜப்பான் வழங்கியதற்கு பிரதிபலனாக தற்போது பென்னு எரிகல்லில் இருந்து எடுக்கப்பட்ட மணலை ஜப்பானுக்கு நாசா வழங்குகிறது. இதுதவிர, உலகின் பல பகுதிகளில் இருந்து விஞ்ஞானிகள் சில மணல் மாதிரிகளை கேட்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் (Natural History Museum) சேர்ந்த முனைவர் ஆஷ்லீ கிங், இந்த மண் மாதிரியைத் (கையுறைகள் அணிந்து) தீண்டும் முதல் விஞ்ஞானிகளில் ஒருவராக இருப்பார். ஆரம்ப பகுப்பாய்வைச் செய்யும் குழுவின் உறுப்பினராக அவர் உள்ளார்.

"ஒரு சிறுகோளில் இருந்து மாதிரிகளை கொண்டு வருதல் அடிக்கடி செய்யப்படும் ஒன்றல்ல. எனவே அதன் முதல் அளவீடுகளைச் செய்வது மிக நன்றாக செய்ய வேண்டும்.," என்று அவர் கூறுகிறார். "இது நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருக்கிறது," என்கிறார்.

ஒசைரிஸ் - ரெக்ஸ்

பட மூலாதாரம்,X/NASA

பென்னு சிறுகோள் பூமி மீது மோதுமா?

நாசா, பென்னுவை சூரிய குடும்பத்தில் இருக்கும் மிகவும் ஆபத்தான ஒரு பாறையாகக் கருதுகிறது. விண்வெளியில் அதன் பாதை, அறியப்பட்ட எந்த ஒரு விண்கல்லையும் விட பூமியைத் தாக்குவதற்கான அதிக வாய்ப்புள்ளது அல்லது அதற்கான அதிக சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கிறது.

ஆனால் பயப்பட வேண்டாம், அது நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒரு நாணயத்தைத் டாஸ் போட்டு ஒரே வரிசையில் 11 தலைகளைப் பெறுவது போன்றது. அடுத்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

பென்னுவில் நிறைய நீர் இருக்கவும் வாய்ப்புள்ளது. அதன் எடையில் 10% உள்ள இந்த நீர் அதன் தாதுக்களில் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த நீரில் உள்ள பல்வேறு வகையான ஹைட்ரஜன் அணுக்களின் விகிதம் பூமியின் பெருங்கடல்களில் உள்ளதைப் போலவே உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்.

சில வல்லுநர்கள் நம்புவது போல, ஆரம்ப காலத்தில் பூமி மிகவும் சூடாக இருந்ததாலேயே தன் நீரின் பெரும்பகுதியை இழந்திருந்தால், பென்னுவுடன் H₂O பொருத்தத்தைக் கண்டறிவது, நமது பெருங்கடல்களுக்கு அவற்றின் கொள்ளளவை வழங்குவதில் எரிகற்களின் தாக்குதல் எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பது தெரிந்துவிடும்.

ஒசைரிஸ் - ரெக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பென்னு சிறுகோளில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதா?

பென்னு சிறுகோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதே விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள விரும்பும் முதல் விஷயம் ஆகும். இதற்கான விடை, இல்லை என்பதாகவே இருக்கும் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் அனுமானிக்கின்றனர். ஏனெனில், பென்னு சிறுகோளில் நிலைமை மிகவும் கடினமானதாகவும், வளங்கள் மிகவும் குறைவாகவும் இருப்பதாகத் தெரிகிறது.

வெப்பம் மற்றும் குளிர், கதிர்வீச்சு மற்றும் கனரக உலோகங்களின் நச்சுத்தன்மையைக் கூட அடக்கி, மிகவும் ஆபத்தான சூழல்களில் வாழும் சில நுண்ணுயிரிகள் பூமியில் உள்ளன என்பது நிச்சயமாக உண்மை.

உதாரணமாக, டார்டிகிரேட்கள் என்ற நுண்ணுயிரி. ஆனால், அவை குறுகிய காலத்திற்கு விண்வெளியின் வெற்றிடத்தை தாங்கும் என்பதை ஏற்கனவே சோதனைகளில் நிரூபித்துள்ளன.

ஆனால் ஒரு சிறிய சிறுகோள் மீது உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில், வெப்பநிலையில் ஏற்படும் அதீத ஏற்றத்தாழ்வுகள், விண்வெளித் துகள்களின் தொடர்ச்சியான மோதல்கள் போன்றவை உயிர் வாழ மிகவும் சவாலானதாக அதனை மாற்றி விடுகின்றன.

பூமியில் உயிர்களின் தோற்றம் பற்றிய கேள்விக்கு விடை கிடைக்குமா?

பென்னு சிறுகோளின் எடையில் 5-10% கார்பன் இருக்கலாம். இதுவரை நடந்துள்ள ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நமக்கு தெரிந்தவரை,, பூமியில் உயிர் கரிம வேதியியலை அடிப்படையாகக் கொண்டது.

விண்வெளியில் இருந்து சிக்கலான மூலக்கூறுகள் பூமிக்கு வந்ததால்தான் இங்கு உயிர்கள் தோன்றினவா? என்ற கேள்வி இன்னும் விடை தெரியாமல் நீடிக்கிறது.

ஒசைரிஸ் - ரெக்ஸ்

பட மூலாதாரம்,X/NASA

"பென்னுவின் மண் மாதிரியில் செய்யப்படும் முதல் பகுப்பாய்வுகளில் ஒன்று, அதில் உள்ள கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகளின் பட்டியலைத் தயாரிப்பது," என்று NHM-இன் பேராசிரியர் சாரா ரஸ்ஸல் கூறுகிறார்.

"விண்கற்களைப் பார்ப்பதன் மூலம், எரிகற்களும் வெவ்வேறு கரிம மூலக்கூறுகளைக் கொண்டிருக்கக் கூடும் என்பதை நாம் அறிவோம். ஆனால் விண்கற்களில் உள்ள மூலக்கூறுகள் பெரும்பாலும் மிகவும் அசுத்தமானவை. எனவே பென்னுவின் மண் மாதிரி நமக்கு உண்மையான கரிமக் கூறுகள் என்ன என்பதைக் கண்டறிய வாய்ப்பளிக்கும்,” என்கிறார் அவர்

பேராசிரியர் லாரெட்டா மேலும் கூறுகையில், இந்த மாசுபாட்டின் காரணமாக, புரதங்களில் பயன்படுத்தப்படும் அமினோ அமிலங்கள் விண்கற்களில், உள்ளனவா என்று நாங்கள் தேடவில்லை. “எனவே எரிகற்கள் பூமியில் உயிர்கள் தோன்ற ஆதாரமாக இருந்தனவா என்ற புரிதலை மேம்படுத்தப் போகிறோம்,” என்கிறார் அவர்.

ஒசைரிஸ்-ரெக்ஸ்: மிக ஆபத்தான பென்னு சிறுகோள் மண் மாதிரியில் நாசாவுக்கு என்ன கிடைத்தது? - BBC News தமிழ்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒசைரிஸ்-ரெக்ஸ்: பூமிக்கு தண்ணீர் எப்படி வந்தது? பென்னு சிறுகோளின் மண்ணில் கிடைத்த பதில்

ஒசைரிஸ்-ரெக்ஸ்: பூமிக்கு தண்ணீர் எப்படி வந்தது? பென்னு சிறுகோளின் மண்ணில் கிடைத்த பதில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோனதன் ஏமோஸ்
  • பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பூமியில் இருந்து 200 கோடி கி.மீ தொலைவில் இருக்கும் ‘பென்னு’ என்னும் சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, நாசாவின் ஒசைரிஸ் ரெகஸ் விண்கலம் சென்ற மாதம் பூமிக்குக் கொண்டு வந்தது.

ஏழு ஆண்டுகள் பயணித்து 700 கோடி கி.மீ. சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு ஒசைரிஸ் ரெக்ஸ் பூமிக்குக் கொண்டு வந்த பென்னு சிறுகோளின் மண் மாதிரியை இப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த ஆய்வில், பூமியில் உயிர் எப்படித் தோன்றியது என்னும் மிகப்பெரிய கேள்விக்கான விடை கிடைப்பதற்கான முதற்கட்ட அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன.

 
பென்னு சிறுகோள், ஒசைரிஸ் ரெக்ஸ், நாசா, விண்வெளி

பட மூலாதாரம்,NASA

சிறுகோளின் மண்ணில் என்ன இருந்தது?

இந்த ஆய்வில், பூமியில் உயிர் எப்படித் தோன்றியது என்னும் மிகப்பெரிய கேள்விக்கான விடை கிடைப்பதற்கான முதற்கட்ட அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன.

இந்த விஞ்ஞானிகள் குழுவில் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி முனைவர் ஆஷ்லி கிங்-கும் ஒருவர்.

அவர் பிபிசியிடம் பேசுகையில், இதுவரை அவர்கள் ஆராய்ந்திருக்கும் பென்னுவின் மண் மாதிரி மிகவும் ‘அழகாக இருப்பதாகக்’ கூறினார்.

பென்னு சிறுகோளின் இந்த மண் மாதிரி, தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சிறப்பு ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

"சரியான சிறுகோளை நோக்கித்தான் நாம் சென்றிருக்கிறோம் என்பதை உறுதி செய்துவிட்டோம்," என்று கூறுகிறார் ஆஷ்லி கிங்.

பென்னு சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கருப்புத் தூளில், கரிமம் மற்றும் நீர் நிறைந்த தாதுக்கள் அதிகம் இருந்ததாகக் கண்டறிந்துள்ளது அதை ஆய்வு செய்த குழு.

 
பென்னு சிறுகோள், ஒசைரிஸ் ரெக்ஸ், நாசா, விண்வெளி

பட மூலாதாரம்,BBC/KEVIN CHURCH

படக்குறிப்பு,

பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி முனைவர் ஆஷ்லி கிங் பென்னுவிலிருந்து எடுத்துவரப்பட்ட மாதிரியை ஆராயும் குழுவில் உள்ளார்.

இது நம்பிக்கை தரக்கூடிய விஷயம்.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி இளமையாக இருந்தபோது, அதற்கு முக்கிய சேர்மக்கூறுகளை வழங்குவதில் பென்னுவை போன்ற கரிமமும் நீரும் நிறைந்த சிறுகோள்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று ஒரு கோட்பாடு உள்ளது.

பெருங்கடல்களில் உள்ள நீரையும், உயிர்களின் உருவாக்கம் தொடங்குவதற்குத் தேவையான சில சேர்மங்களையும் பூமி எப்படிப் பெற்றது என்பதற்கான விளக்கம்தான் இது. இந்தக் கோட்பாட்டைச் சோதிக்க பென்னு சிறுகோளின் மாதிரிகள் பயன்படும்.

முன்னர் இந்த ஆராய்ச்சி பற்றிப் பேசுகையில், நாசா நிர்வாகி பில் நெல்சன், “நாம் யார், எங்கிருந்து வந்தோம், பிரபஞ்சம் என்று அழைக்கப்படும் இந்தப் பரந்த வெளியில் நமது இடம் என்ன என்பன போன்ற மிகப்பெரும் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முயல்வதாக" கூறினார்.

பென்னு சிறுகோள், ஒசைரிஸ் ரெக்ஸ், நாசா, விண்வெளி
படக்குறிப்பு,

பென்னு சிறுகோளின் அளவை விளக்கும் படம்

இந்த அரிய மண் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது?

ஓசைரிஸ் ரெக்ஸ் பென்னு சிறுகோளில் இருந்து அதிகப்படியான மண்ணை எடுத்து வந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அதன் எடை சரியாக எவ்வளவு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் துல்லியமாகக் கணக்கிடவில்லை.

செப்டம்பர் 24 அன்று அமெரிக்காவின் யூடா பாலைவனத்தில் தரையிறங்கிய பென்னுவின் மண் மாதிரி நிரம்பிய குப்பி திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஓசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் சிறுகோள் மாதிரியைச் சேமிக்கப் பயன்படுத்திய அதன் உள் அறையின் உள்ளடக்கம் இன்னும் முழுமையாகக் காலி செய்யப்பட்டு அதன் எடை அளக்கப்படவில்லை.

மொத்தம் சுமார் 250 கிராம் மண் மாதிரி இருப்பதாக ஆய்வுக் குழு நினைக்கிறது. இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்த இன்னும் சில நாட்கள் பிடிக்கும்.

 
பென்னு சிறுகோள், ஒசைரிஸ் ரெக்ஸ், நாசா, விண்வெளி

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,

ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளைச் செய்வதற்காக ஒசைரிஸ் ரெக்ஸ் கொண்டு வந்திருந்த கொள்கலனின் மூடியைத் திறந்ததும், அதனுள்ளே இந்தக் கருப்பு பொடி கிடந்தது

பூமிக்கு தண்ணீர் எப்படி வந்தது என்பது பற்றிய புரிதல்

ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளைச் செய்வதற்காக ஒசைரிஸ் ரெக்ஸ் கொண்டு வந்திருந்த கொள்கலனின் மூடியைத் திறந்ததும், அதனுள்ளே இந்தக் கருப்பு பொடி கிடந்தது. அதைக் கண்ட குழு மிகவும் உற்சாகமடைந்தது என்கிறார் ஆஷ்லி கிங்.

“முதற்கட்ட ஆய்வுகளுக்கே எராளமான மண் மாதிரி இருந்தது. இது எங்கள் வேலையை எளிதாக்கியது," என்கிறார் அவர்.

இந்த சிறுகோளின் தூசு, ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கியின் அடியில் வைத்துச் சோதிக்கப்பட்டது. மேலும் எக்ஸ்-ரே டைஃப்ராக்ஷன் மற்றும் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆகிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. கூடுதலாக கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT) இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டது.

இவற்றின் மூலம் இந்த மாதிரியில் கரிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடையில் சுமார் 5% கரிமம் உள்ளது.

இதுவொரு பெரிய விஷயம், என்கிறார் நாசாவை சேர்ந்த ஆய்வாளரான முனைவர் டேனியல் கால்வின். “இந்தத் தரவு கிடைத்ததும், குழுவில் இருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் கூச்சலிடத் தொடங்கினர்,” என்கிறார் அவர்.

முதல்கட்ட ஆய்வில், கார்பனேட் சேர்மங்கள் மற்றும் சிக்கலான அங்ககச் சேர்மங்கள் கண்டறியப்பட்டன.

ஒசைரிஸ்-ரெக்ஸ் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் டான்டே லாரெட்டா, இந்த மாதிரியின் களிமண் தாதுக்களில் நீர் உள்ளடக்கத்தைப் பற்றிக் கூறினார். "அவற்றின் படிக அமைப்புக்குள் தண்ணீர் உள்ளது," என்கிறார் அவர்.

இதுபோன்ற சேர்மங்களின் முலம்தான் தண்ணீர் வந்தது என்று அவர்கள் நினைப்பதாகக் கூறுகிறார். “அதனால்தான் பூமி வாழக்கூடிய கோளாக இருக்கிறது. பென்னுவில் இருந்து வந்த மாதிரிகளில் நாம் பார்க்கும் சேர்மங்களைப் போன்றவர், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வந்து தரையிறங்கின," என்கிறார்.

 
பென்னு சிறுகோள், ஒசைரிஸ் ரெக்ஸ், நாசா, விண்வெளி

பட மூலாதாரம்,NASA

இனிமேல் பிறக்கவிருக்கும் விஞ்ஞானிகளும் ஆராய வழிவகை

ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 2020ஆம் ஆண்டு அக்டோபர் பென்னுவிலிருந்து மண் மாதிரியை எடுத்தது. அதை பூமிக்குக் கொண்டுவர அதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.

கொள்கலனில் இருக்கும் மண் மாதிரியை முழுவதும் வெளியே எடுத்த பிறகு, அது உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களோடு பகிர்ந்துகொள்ளப்படும்.

ஆனால் இந்த மாதிரியில் 75% வருங்கால தலைமுறையினருக்காகத் தனது காப்பகத்தில் நாசா பாதுகாத்து வைக்கும். இதை, எதிர்காலத்தில் பிறக்கப்போகும் விஞ்ஞானிகள் இனிமேல் கண்டுபிடிக்கப்பட இருக்கும் கருவிகளை வைத்து ஆராய்வர்.

https://www.bbc.com/tamil/articles/c4n8lg2xy12o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.