Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஒலி  மாசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

80 முதல் 100 டெசிபல் வரையிலான ஒலியை தொடர்ந்து கேட்டால் காது கேளாமை பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

மகாராஷ்டிரா மாநிலம், சாங்லி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அண்மையில் நிகழ்ந்துள்ளது.

இளைஞர்களின் இந்த திடீர் மரணத்துக்கு திருவிழாக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெரும் சத்தத்துடன் இசைக்கப்படும் DJ ஓசைதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

சேகர் பாவ்ஷே (வயது 32), பிரவீன் யஷ்வந்த் ஷிர்டோட் (வயது 35) ஆகிய இளைஞர்கள், டிஜே இசையின் விளைவால் ஏற்பட்ட உடல்ரீதியான பாதிப்புக்கு இரையாகியுள்ளனர்.

இளைஞர்கள் உயிரிழந்தது எப்படி?

சாங்லி மாவட்டம், தாஸ்கான் தாலுகாவில் உள்ள காவ்தீகண்டிலை சேர்ந்த இளைஞர் சேகர் பாவ்ஷே. இவருக்கு இதயக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதாக சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதையடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே அவர், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தனது கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் வைபவத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தை காணச் சென்றிருந்தார்.

 
ஒலி  மாசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒலி மாசுபாட்டின் விளைவாக ரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அங்கு டிஜே இசை ஒலிக்கவிடப்பட்டது. அப்போது எழுந்த பலத்த சத்தம் காரணமாக, இரவு 10 மணியளவில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனால், சேகர் பாவ்ஷே வீடு திரும்பினார். வீட்டிற்குச் சென்றதும் அவருக்கு தலைசுற்றலுடன் நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

துதாரி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் பிரவீன் யஷ்வந்த் ஷிர்டோட். கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 25) தனது சொந்த கிராமத்தில் விநாயகர் சிலையை நீர்நிலையில் கரைக்கும் ஊர்வலத்தில் பங்கேற்றார்.

ஊர்வலத்தில் பெரும் சத்தத்துடன் ஒலிபரப்பப்பட்ட டிஜே இசைக்கு, பிரவீன் தனது நண்பர்களுடன் நடனமாடினார். அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கீழே சரிந்தார்.

அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

ஒலி  மாசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அளவுக்கு அதிமாக எழுப்பப்படும் அல்லது கேட்கப்படும் சத்தத்தால் மனிதனின் உடல் மட்டுமின்றி மனநலமும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

சாங்லியில் பிரபலமான காது, மூக்கு, தொண்டை நிபுணராக இருப்பவர் அசோக் புரோஹித்.

அதிகமான சத்தத்தைக் கேட்பதால் உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் இவ்வாறு விவரிக்கிறார்.

“எழுபது டெசிபல் அளவு வரையிலான சத்தத்தை நமது காதுகள் தாங்கும். 80 முதல் 100 டெசிபல் வரையிலான ஒலியைத் தொடர்ந்து கேட்டால் காது கேளாமை பாதிப்பு ஏற்படும்."

“நூறு முதல் 120 டெசிபல்களுக்கு இடைப்பட்ட ஒலிகள் செவிப்பறை வெடிப்பு, தலை சுற்றலை ஏற்படுத்தும். இந்த ஒலி இதயத்துடன் இணைக்கப்பட்ட செவிப்புலத்தைத் (Auricle) தூண்டுகிறது. இதனால் இதயத் துடிப்பு நின்று மாரடைப்பு ஏற்படலாம்,” என்கிறார் மருத்துவ நிபுணர் அசோக் புரோஹித்.

பொது ஊர்வலங்களில் பங்கேற்ற பிறகு காது கோளாறு பிரச்னையுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது, “நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) காது சம்பந்தமான சிகிச்சைக்காக 18 பேர் என்னிடம் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஆர்வலர்களாகவும், ஊர்வலங்களில் பங்கு கொண்டவர்களாகவும் இருந்தனர்,” என்றும் அவர் கூறினார்.

 

இதய நோய் ஏற்படும் அபாயம்

டிஜே இசையால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஔரங்காபாத்தை சேர்ந்த இதய நோய் நிபுணர் துக்காராம் அவுட்டி இவ்வாறு கூறுகிறார்.

“ஒலி மாசு ஒரு நபரின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். இது தமனி உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். அதாவது இதயத்தில் அழுத்தம், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது," என்கிறார் துக்காராம்.

மேலும், “ஒலி மாசுபாட்டின் விளைவாக ரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதிக சத்தத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்துவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்," என்றும் எச்சரிக்கிறார் அவர்.

 

கேட்கும் திறன் மீதான விளைவுகள்

டிஜே இசையால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒலி மாசுபாட்டின் விளைவுகள் குறித்து காது-மூக்கு-தொண்டை சிறப்பு மருத்துவர் நீதா காடே இவ்வாறு கூறுகிறார்.

"பலத்த ஓசையைத் தொடர்ந்து கேட்பது ஒருவரின் காது கேளாமைக்கு வழிவகுக்கும். உரத்த சத்தம் காதுக்குள் உள்ள செல்களை சேதப்படுத்துகிறது. இது ஒரு நபரின் கேட்கும் திறனை பாதிக்கிறது," என்கிறார் அவர்.

“இந்த சத்தம் நீண்ட காலம் நீடிக்கும் ஆபத்தும் உள்ளது. அடிக்கடி காதுகளில் தேனீக்கள் சத்தம் போடுவது போலவும், தொடர்ந்து விசில் சத்தம் கேட்பது போன்ற உணர்வும் உண்டாகும். ‘டின்னிடஸ்’ என்று அழைக்கப்படும் இந்த நிலை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம்," என்றும் நீதா காடே கூறுகிறார்.

அதே நேரம், அதிக சத்தத்தால் ஏற்படும் காது கேளாமை அல்லது செவி சம்பந்தமான பிரச்னைகள் தடுக்கப்படக் கூடியவைதான் என்கிறார் அவர். அதற்கு Dolby DJ தொழில்நுட்பத்தைக் கையாளும்போது ஒலி வரம்பு கடைபிடிக்கப்பட வேண்டும்.

 

மனரீதியான பாதிப்புகள்

டிஜே இசையால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அளவுக்கு அதிமாக எழுப்பப்படும் அல்லது கேட்கப்படும் சத்தத்தால் மனிதனின் உடல் மட்டுமின்றி மனநலமும் மோசமாகப் பாதிக்கப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம், கோலாப்பூரில் உள்ள சைக்கோதெரபிஸ்ட் ஷுபாங்கி கர்கானிஸ் கூறும்போது, "ஒவ்வொருவருக்கும் இசையின் மீது விருப்பம் உண்டு. அதைக் கேட்கும்போது ஓசை குறைவாக அல்லது அதிகமாக இருக்க வேண்டுமா என்று தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.

ஆனால் டிஜே - டால்பி இசையில் இந்த வாய்ப்பு இல்லை. இது அவர்களின் காதுகளுக்கு இனிமையாக இருக்காது,” என்கிறார் ஷுபாங்கி.

"டிஜே இசையைக் கேட்டால் சாமானியர்களுக்கு எரிச்சல் அதிகமாகிறது. இது அவர்களின் தூக்கத்தைக் கெடுத்து, மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது,” எனவும் ஷுபாங்கி கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c19rnnrgrdmo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர் தமிழ் ஆக்களின் பார்ட்டிக்கு போனால்.. டி ஜே ஒரு பக்கம் கத்தும்.. அதுக்கு மேலால.. தமிழ் சனம் இன்னொரு பக்கம் கத்தும். அப்ப.. மாரடைப்பு வராமல்..???!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.