Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமிர் வரி என்பது என்ன? இந்தியாவில் கோவையில் மட்டும் பிரிட்டிஷார் வசூலித்தது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திமிர் வரி: கோவை மக்களின் சுதந்திர போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷார் கொடுத்த கொடூர தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 அக்டோபர் 2023

அன்று 1942 ஆகஸ் 26ஆம் தேதி. நள்ளிரவில் கோவையை அடுத்த சூலூரில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் சிறுமி கருப்பாத்தாள். திடீர் வெளிச்சமும், கூச்சல் சத்தமும் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்த கருப்பாத்தாள் என்ன நடக்கிறது என அறிய ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அப்போது, அவரது கருவிழிகளில் நெருப்புப் பிழம்பு கொளுந்துவிட்டு எரியும் காட்சி பிரதிபலித்தது. மிரண்டு போனார்.

அவரது வீட்டுக்கு அருகே உள்ள சூலூர் ராணுவ விமான நிலையம்தான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அச்சத்தில் அம்மாவுக்குப் பின்புறமாக ஓடி ஒளிந்து கொண்டார்.

மறுநாள் தனது அப்பா பல தூக்குப்போசிகளில் உணவுகளை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் கோணிப்பையைப் போர்த்தியபடி, பதுங்கிப் பதுங்கி எங்கோ சென்று கொண்டிருந்ததைக் கண்டார்.

துருதுருப்பான சிறுமி என்பதால் கருப்பாத்தாளுக்கு தன் அப்பா எங்கே செல்கிறார் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம். அதனால் அவரும் பின் தொடர்ந்து சென்றார்.

தங்களது சோளக்காட்டுக்குள் தனது அத்தை மகனும், 17 வயதான இளைஞருமான ஸ்டாலின் சின்னைய்யன் நண்பர்களுடன் பதுங்கி இருந்ததைக் கண்டார். தந்தையும்-அத்தை மகனும் பேசிக் கொண்டதில் இருந்து அவர்கள்தான் சூலூர் ராணுவ விமான நிலையத்துக்கு தீ வைத்த குழுவில் இருந்தவர்கள் என்றும், அவர்களது உயிருக்கு பிரிட்டிஷாரால் அச்சுறுத்தல் இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

ஸ்டாலின் சின்னையன்தான் பின்னாளில் அவரது கணவரும் ஆனதால் அந்த நிகழ்வு கருப்பாத்தாளுக்கு மறக்க முடியாத நிகழ்வாகவே இருந்தது.

 
திமிர் வரி
படக்குறிப்பு,

கருப்பாத்தாள்

பொறுமையிழந்த கோவை மக்கள்

தாய்நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாத நிலை. பிரிட்டிஷாரின் கொடுமையில் இருந்து விடிவுகாலம் பிறக்காதா என நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களைப் போன்றே ஏங்கிக் காத்திருந்த கோவை மக்கள் ஆகஸ்ட் புரட்சியிலும் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர்.

போராட்டக்காரர்களைக் காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக மக்கள் அனுபவித்த சித்ரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஏற்கெனவே மீசைக்கு வரி, மார்புக்கு மேல் பெண்கள் மாராப்பு அணிந்தால் அதற்கு ஒரு வரி என விதவிதமாக வரிவிதித்து கொடுமைப்படுத்தியது போல 'திமிர் வரி' என்ற பெயரில் கூடுதல் அபராதம் விதித்ததாகச் சொல்லப்படுகிறது.

பம்பாயில் இருந்து கோவைக்கு வந்த புரட்சி

திமிர் வரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பம்பாயில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் “செய் அல்லது செத்து மடி” என காந்தி கட்டளையிட்டார். இதைத் தொடர்ந்து காந்தி கைதாகினார். இதையடுத்து, காந்தியவாதிப் பெண் ஒருவர் கொடியை உயர்த்திப் பிடித்து மைதானத்தில் உரக்கக் கூறிய இதே கட்டளை வார்த்தை நாடு முழுவதும் பற்றிய சுதந்திர வேள்விக்கு தீப்பொறியானது.

பம்பாயில் நடந்த கூட்டத்தில் கோவையில் இருந்து பங்கேற்கச் சென்றவர் டிஎஸ் அவினாசிலிங்கம். அவர் சோசலிஸ்ட் போராட்ட நகலை அவசர அவசரமாக கோவைக்கு கொண்டு வந்தார்.

என்.ஜி.ராமசாமி, கே.பி.திருவேங்கடம், கே.வி.ராமசாமி, ப.சு.சின்னதுரை உள்ளிட்டோரிடம் கோவையில் புரட்சிகளைச் செய்வது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. பிறகு கோவையில் புரட்சித் திட்டங்களுக்கான வியூகமும், ஒண்டிப்புதூர் தோட்டத்தில் வைத்து வகுக்கப்பட்டது.

“செய் அல்லது செத்து மடி” என்ற இந்த அறைகூவல் மறுநாள் சிதம்பரம் பூங்காவில் திரண்டிருந்த கோவை மக்களிடையே பரப்பப்பாகப் பேசப்பட்டது. கூட்டத்துக்கு தலைமை வகித்த தியாகி என்.ஜி.ராமசாமி, கே.வி.ராமசாமி உள்ளிட்டோரின் உணர்ச்சி மிக்க பேச்சில் வீரம் தெறித்தது.

 
திமிர் வரி
படக்குறிப்பு,

ஸ்டாலின் சின்னையன்

அவர்களது பேச்சைக் கூடி நின்று கேட்ட கோவை மக்களின் ரத்தத்திலும் மின்சாரம் பாய்ச்சியது போன்றதொரு சுதந்திர வெறி ஏறியது. தாங்களே களமிறங்கி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற அவசரநிலையை அவர்கள் உணர்ந்தனர்.

ராணுவத் தளவாட ரயில் கவிழ்ப்பு, ராணுவ விமான நிலையம் எரிப்பு, கள்ளுக்கடை உடைப்பு, மத்திய சிறையில் சுதந்திரப் போராட்டக் கைதிகளை விடுவிப்பது என்பன போன்ற செயல்கள் மூலம் வெள்ளை அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தி, ஆட்சியர் அலுவலகத்தைப் பிடிப்பது, போட்டி சர்க்கார் நடத்துவது எனப் பல திட்டங்கள் அவர்கள் வசம் இருந்ததாக சி.கோவிந்தன் எழுதிய தியாகி என்.ஜி.ராமசாமி வரலாறு என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையறிந்த போலீசார் என்.ஜி.ராமசாமியை 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கைது செய்தனர். கோவையில் புரட்சி தொடங்க இதுவே காரணமானது. தான் எந்நேரமும் கைதாகலாம் என்பதை உணர்ந்திருந்தார் அவர். எனவே, ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒவ்வொரு கோஷ்டி, ஒவ்வொரு கோஷ்டிக்கும் ஒவ்வொரு தலைமை என 6 குழுக்கள் அமைத்து அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

என்.ஜி.ராமசாமி கைதான அன்று இரவே ரயில் கவிழ்ப்பும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 
திமிர் வரி

சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு

உதகை-அறவங்காடு ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயிரக்கணக்கான ராணுவத் தளவாடங்களை ஏற்றிய சரக்கு ரயில் 1942, ஆகஸ்ட் 13 அன்று இரவு கோவை வந்தது. போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து 1.50க்கு அந்த ரயில் புறப்பட்டது.

பதினைந்து நிமிடங்களில் ரயில் இளைஞர்களால் கவிழ்க்கப்பட்டது. 12 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டன என தியாகி என்.ஜி.ராமசாமி வரலாறு என்ற புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ரயிலின் பாதுகாப்புக்கு பிரிட்டிஷார் காவல் இருப்பார்கள். சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருந்தால் பிடித்து சிறைப்படுத்தி விடுவார்கள். இதனால், முட்கள் நிறைந்த காட்டில் கோணிச் சாக்குகளைச் சுற்றிக் கொண்டு, உருண்டபடியே சென்று தண்டவாளப் பிணைப்புகளைக் கழற்றிவிட்டனர்.

சடசடவென ரயில் பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கவிழ்ந்த சத்தம் கேட்ட பிறகே அங்கிருந்து புறப்பட்டனர். அதற்கு சற்று முன்பு தான் பயணிகள் ரயில் கடந்தது. எனவே மனிதாபிமானத்தோடு மக்கள் பயணிக்கும் ரயில் சென்ற பின்னரே, தளவாட ரயிலை இளைஞர்கள் கவிழ்த்தனர்,” எனக் கூறினார் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி சர்மா மாரப்பனின் மனைவி முத்தம்மாள்.

சூலூர் ராணுவ விமான நிலையம் எரிப்பு

அடுத்த திட்டம், சூலூர் ராணுவ விமான நிலையத்துக்கு தீ வைப்பது. இதுதொடர்பாக சூலூர் கண்ணம்பாளையம், குளத்தூர் பகுதிகளில் கே.வி. ராமசாமி தலைமையில் ஆயத்தமாகினர் அப்போதைய இளைஞர் படையினர்.

சம்பவத்தைச் செய்துவிட்டு தப்பி வர இயலாது என்பதால் முதியவர்களையும், சிறார்களையும் படையில் சேர்த்துக் கொள்ளவில்லை. துடிப்பான இளைஞர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.

சூலூர் ராணுவ விமான நிலையம் எப்படி இருக்கும், எங்கு கொட்டகை இருக்கும், எங்கு லாரிகள் நிற்கும், என அனைத்தையும் மண்ணிலேயே வரைபடம் வரைந்து விளக்கினர். யார் யாருக்கு என்னென்ன பணிகள் என ஆளுக்கு ஒரு பணியாக பிரித்துக் கொண்டனர்.

இதை நிறைவேற்ற அவர்களிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. அவர்களுக்கு கையெறி குண்டு போல வெண்டயம் என்ற ஒரு ஆயுதம் தயாரித்துக் கொடுத்தார் சலவைத் தொழிலாளி பழனியப்பன்.

 
திமிர் வரி

பயிற்சி

அந்த வெண்டயத்தை எப்படி எரிவது எனத் தெரிந்தவர்கள் முதலில் நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டனர். பின்னர் பிற இளைஞர்களுக்கும் அதைக் கற்றுக் கொடுத்தனர். வெண்டயம் எரியப்படும் தூரமானது தீவிர பயிற்சியின் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டது.

என்னதான் அவர்களுக்குள் தன்னம்பிக்கை இருந்தாலும், இதுவொரு குழு முயற்சி என்பதால் அனைவரும் திட்டமிடுதலை கச்சிதமாகச் செய்தனர்.

முன்னே சென்று வழி சொல்ல, ஆள்நடமாட்டம் அதிகமில்லாத நேரத்தை நோட்டமிட்டுத் தெரிவிக்க, சம்பவத்தின்போது யாரும் வருகிறார்களா என உளவு பார்க்க, தடுக்க வந்தால் அவர்களை அடித்து போராட்டக்காரர்களைப் பாதுகாக்க, வெண்டயத்தை எடுத்துப் பற்ற வைத்து விசிறி எரிய, தப்பிச் செல்வதற்கு உதவ என ஒரு பெரும் குழுவே அவரவர் பணியை சிரத்தையேற்று திறம்பட செய்யத் தயாராகினர்.

தீ வைப்பதிலும் மனிதாபிமானம்

சிறுமி கறுப்பாத்தாளின் கண்ணில் 1942 ஆகஸ்ட் 26ஆம் தேதி தென்பட்ட தீப்பிளம்புக்குக் காரணம் இந்தச் சம்பவம்தான்.

சூலூர் ராணுவ விமான நிலையத்துக்கு அருகே இரவில் தீப்பந்தங்களுடன் சென்றனர். முதலில் சத்தம் போட்டும், விசிலடித்தும் அங்கிருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றியதாகக் கூறுகிறார் ஸ்டாலின் சின்னையன்-கருப்பாத்தாள் தம்பதியின் மகன் விஜயகுமார்.

“தாக்குதல் நடத்தும்போதும் யாருடைய உயிருக்கும் சேதாரம் ஆகிவிடக் கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தது அந்த இளைஞர் படை. எனவே விடுத்த எச்சரிக்கை சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த சிலர் வெளியேறினர்.

எந்த திசையில் இருந்து தீப்பற்றி எரியும் வெண்டயம் வருகிறது என்பதுகூட விளங்கும் முன், பட படவென காற்றில் பறந்து தீக்கிரையாக்கியது. அடுத்தடுத்து 30 கொட்டகைகள், 25 லாரிகள் தீக்கிரையானதாக தியாகி என்.ஜி.ராமசாமி வரலாறு என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் பற்றி அங்கிருந்த லாரி ஓட்டுநர் லாரியை எடுத்துக் கொண்டு சூலூர் காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் கொடுத்தார். தீவைப்பு சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் எச்சரிக்கை அடைந்தனர்.

துப்பாக்கியும் கையுமாக பிரிட்டிஷார் துரத்தி வருவதை அறிந்த கண்ணம்பாளையம், குளத்தூரை சேர்ந்த இளம் போராளிகள் குறுக்கு வழிப் பாதையில் புகுந்து நாலா புறமும் தெறித்து ஓடினர். எருக்கஞ்செடிகள், முட்புதர்கள் நிறைந்த இடங்களில் சிலர் பதுங்கினர்.

பிரிட்டிஷார் ஒவ்வொரு புதராய் சுட்டுக் கொண்டே வந்தனர். உயிரே போனாலும் யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக்கூடாது என்பது அவர்களுக்குள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.

 
திமிர் வரி
படக்குறிப்பு,

முத்தம்மாள்

திமிர் வரி

கண்ணம்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம், குளத்தூர் முதலிய கிராமங்களில் பூட்ஸ் சத்தம் படபடத்தது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.

“சாமி, சாமி அவங்க எங்க போனாங்கனு எனக்குத் தெரியாது, எங்கள விட்ருங்க” எனக் கையெடுத்துக் கெஞ்சியும் விடவில்லை. பெண்கள் நடக்க முடியாதபடி அவர்களின் கால்களில் பலமான லத்தி அடிகள் விழுந்ததாக விவரித்தார் தியாகி சர்மா மாரப்பனின் மனைவி முத்தம்மாள்.

“பிரிட்டிஷ்காரர்கள் எவ்வளவு அடித்தாலும் ஒருவர்கூட துப்புக் கொடுக்கவில்லை. எத்தனை அடித்தாலும் ரத்தம் சொட்டுகிறதே தவிர அவர்கள் வாயில் இருந்து போராட்டக்காரர்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் ஒரு சொல்கூட வெளிவரவில்லை.

மேலும் ‘அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது’ என்றே பலரும் பதில் கொடுத்தனர். குறிப்பாக இந்த இளைஞர்களின் வீட்டில் உள்ள பெண்களின் நிலை மேலும் பரிதாபம். அவர்கள் வீட்டுக்கு வெளியில் தரதரவென இழுத்துவரப்பட்டு பூட்ஸ் காலால் உதைக்கப்பட்டனர்.

தப்பி ஓடிய போராட்டக்காரர்களைவிட அந்த கிராமத்தினர் அதிக கொடுமைகளுக்கு ஆளாகினர்,” என்று தான் கேள்வியுற்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் மூதாட்டி.

என்ன ஆனாலும் ஒரு வறட்டு வைராக்கியத்தை மனதில் கொண்டு யாரும் எவரையுமே காட்டிக் கொடுக்கவில்லை. எத்தனையோ அடி, எத்தனையோ பொருட்கள் சேதம், தொழில் நசிவு, ஆடு மாடுகள் இழப்பு, விவசாயப் பயிர்களின் மீது லாரி விட்டு ஏற்றி அழிப்பு என பிரிட்டிஷ்காரர்கள் பல தொல்லைகளைக் கொடுத்தனர்.

கிராமத்தினர் பல்லைக் கடித்தபடி அமைதி காத்தனர். யாரும் அடிபணிவதாக இல்லை. “ஆகட்டும் ஒரு கை பார்த்து விடுவோம்” என வாய்ப்பூட்டு போட்டதுபோல் பரம அமைதி காத்தனர்.

 
திமிர் வரி
படக்குறிப்பு,

தாயார் கருப்பாத்தாள் உடன் விஜயகுமார்

எதிர்த்து பதிலும் பேசாமல், திருப்பியும் அடிக்காமல், அடியை வாங்கிக்கொண்டு ஆளைக் காட்டிக் கொடுக்காத இந்த மௌனம் பிரிட்டிஷாருக்கு பெரும் குடைச்சலாய் மாறியது. இவர்களைப் பழிவாங்க வேண்டும், தண்டனை கொடுக்க வேண்டும் என்ற வெறி அவர்களுக்கு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே சென்றதாக அந்த கிராமத்தினர் குறிப்பிட்டனர்.

திமிர் வரி விதிப்பு பற்றிப் பேசிய ஸ்டாலின் சின்னையனின் மகன் விஜயகுமார், “எத்தனை அடித்தும் பலன் இல்லை. அந்த இளைஞர்களின் ஒற்றை வருமானத்தை நம்பியிருந்த குடும்பங்கள் பசியால் வாடின. ஒருவேளை கஞ்சிக்குக்கூட பணம் இல்லை.

இதை நன்கு தெரிந்துகொண்டே பிரிட்டிஷார் அவர்கள் மீது திமிர் வரி விதித்தனர். ‘எவ்வளவு திமிர் இருந்தால் இத்தனை அடி வாங்கியும் சுதந்திரப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுக்காமல் இருப்பார்கள்’ என்ற ஆவேசமே அவர்கள் மீது திமிர் வரியாக வந்து விழுந்தது,” என்றார்.

உண்மையில் அரசு சொத்தை சேதப்படுத்தியதற்கான பணத்தையே கூடுதல் அபராதத்தோடு சேர்த்து பிரிட்டிஷார் விதித்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர் சி.ஆர். இளங்கோவன் குறிப்பிட்டார்.

எப்படி “Quit India Movement” என்பதைத் தமிழ்ப்படுத்தும்போது, எதுகை மோனையோடு உணர்ச்சிவசமாக இருக்க “வெள்ளையனே வெளியேறு” என்ற இயக்கமாக மொழிமாற்றம் ஆனதோ, அதேபோலத்தான் சொத்துகளைச் சேதப்படுத்தியதற்கான தண்டம் வசூலித்தபோது அது “திமிர் வரி” எனப் பெயர் மாறியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
திமிர் வரி
படக்குறிப்பு,

சி.ஆர். இளங்கோவன்

அண்டா, குண்டா அடகு வைத்து தண்டம் கட்டினர்

ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் அவரவர் வசதிக்கும், அவர்களுடைய வீட்டில் இருந்த இளைஞர்களின் சுதந்திர போராட்டக் கலவரங்களுக்கும் ஏற்ப 5 ரூபாய் முதல் 100 ரூபாய், 500 ரூபாய் என தண்டம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதை 48 மணிநேரத்துக்குள் கட்ட வேண்டும் என்றும் பிரிட்டிஷாரால் அவர்கள் எச்சரிக்கப்பட்டனர். கட்டாவிட்டால் பல கொடுமைகளுக்கு ஆளாகினர்.

இதுபற்றி தொடர்ந்து விவரித்தார் ஸ்டாலின் சின்னையனின் மகன் விஜயகுமார். “வறுமையில் இருந்தபோதும் அண்டா, குண்டா, கம்மல், மூக்குத்தி நகை உள்ளிட்டவற்றை விற்று ஒரு சிலர் பணம் கொடுத்தாலும் பலரும் அந்த வரியை கட்டாமல் தண்டனைகளை எதிர்கொண்டனர்,” என்றார்.

ஏற்கெனவே செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற பிரிட்டிஷார் தங்களது வயிற்றில் அபராதம் எனும் பெயரில் அடித்ததை அவர்களால் ஏற்கவே முடியவில்லை.

கண்ணம்பாளையத்தில் சம்பந்தம் வைத்தவர்கள்கூட அடிக்குத் தப்பவில்லை என விளக்கினார் கேவி ராமசாமியின் மகன் கேவிஆர் நந்தகுமார்.

“கல்யாணம், காது குத்து, திருமண மண்டபங்கள், வீடுகள், கடைகள் என ஓரிடம் பாக்கி இல்லாமல் பிரிட்டிஷ்காரர்கள் தேடித் திரிந்தனர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் குழந்தை, முதியவர் என்றும் பார்க்காமல் லத்தியைக் கொண்டு சரமாரியாக அடித்துக் கொடுமைப்படுத்தினர். ஊரே ரத்தக்களறியானது.

அதில் பலரும் தாங்கள் வெளியூரில் இருந்து விசேஷத்துக்கு வந்திருப்பதாகவும், தங்களுக்கும் இச்சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூற, பிரிட்டிஷார் அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர்.”

 
திமிர் வரி
படக்குறிப்பு,

கேவிஆர் நந்தகுமார்

அப்படி எங்குதான் போனார்கள் வீரர்கள்?

ஊர் மக்களே காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் சிலர் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். பிறர் தப்பிய விதம் பற்றிக் கூறினார் அரசுப் பேருந்து ஓட்டுநரான கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன்.

“அந்த வீரர்கள் யார் கண்ணிலும் சிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அவர்களது குடும்பத்தார் சிலருக்குக்கூட தெரியவில்லை. முக்கியமாகத் தேடப்பட்ட பலரும் முட்புதர்களில் பதுங்கியிருந்தனர். அங்கு பிரிட்டிஷார் வரத் தயங்கினர். மேலும், கிணற்றில் உள்ள பெரிய பொந்து போன்ற ஓட்டைகளிலும் நாட்கணக்கில் உணவின்றி அவர்கள் தவித்தனர்,” என விவரித்தார்.

ஒரு சிலர் ஆண்டுக்கணக்கில் குடும்பம், குழந்தைகள் என்ன ஆனது, சாப்பாட்டுக்கு என்ன வழி, என எதுவுமே தெரிந்துகொள்ள இயலாமல், பரிதவிப்போடு சொந்த ஊரை விட்டு விலகி இருந்தனர்.

“என் அப்பா கே.வி. ராமசாமி பள்ளானப்பட்டிக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் அவரை ஆட்டுக் குட்டிகளை அடைத்து வைக்கும் கொடாப்புக்களில் பதுங்கச் செய்தனர். அங்கு அவரைத் தேடி வந்த பிரிட்டிஷார், சரிவரத் தேடாமல் அவசரமாகச் சென்றுவிட்டதால் உயிர் தப்பினார் என் தந்தை,” என தன் தந்தை சொன்ன நினைவுகளை நம்மிடம் பகிர்ந்தார் அவரது மகன் கேவிஆர் நந்தகுமார்.

வெள்ளக்கிணறு கரும்புக் காட்டுக்குள் இருந்தவரை மோப்பம் பிடித்த பிரிட்டிஷார் அவரை எங்கு கண்டாலும் சுடச் சொல்லி உத்தரவிட்டு துரத்திச் சென்றனர். தகவலறிந்த அவர் அங்கிருந்து கேரளா, மதுரை, பாண்டிச்சேரி எனப் பல ஊர்களுக்கும் சென்று தப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

மாறு வேடத்தில் நடமாட்டம்

நாடு விடுதலை ஆனால்தான் சரணடைய வேண்டும் என காந்திஜியின் உத்தரவு இருந்ததைக் கருத்தில் கொண்டு தன் தந்தை பல வேடங்களைப் போட்டதாக விளக்கினார் கே.வி.ஆர்.நந்தகுமார்.

“தாடி வைத்த சாமியார் வேடத்தில் சில காலம் தப்பினார். மதுரையில் ஒருமுறை ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வீட்டில் தஞ்சமடைந்தபோது திடீரென அங்கு பிரிட்டிஷார் புகுந்தனர்.

உடனே அங்கிருந்த இஸ்லாமியர் ஒருவர் பெண்கள் அணியும் அங்கியான ஃபர்தாவை என் தந்தைக்கு அணிய வைத்து, பெண்கள் கூட்டத்தில் அவரை நிறுத்திவிட்டார். ஆண்களிடம் விசாரித்த பிரிட்டிஷாரோ பெண்கள் இருக்கும் பக்கமே செல்லாமல் வெளியேறிவிட்டனர்,” என தந்தையின் தலைமறைவு வாழ்க்கையை விவரித்தார்.

 
திமிர் வரி
படக்குறிப்பு,

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பதுங்கியிருந்த கிணறு

மிளகாய் பொடி தூவி ‘எஸ்கேப்’

பிரிட்டிஷார் பிடிக்க வரும்போதெல்லாம் அப்போதைய இளைஞர் படையினர் தப்பியதை சுவாரஸ்யமாகப் பகிர்ந்தார் சுதந்திரப் போராட்டத் தியாகி சர்மா மாரப்பனின் மகன் சர்மா சண்முகம்.

“பஞ்சும், வெங்கச்செங்கல் வைத்து தீப்பொறி எழுப்பி சமைத்து சாப்பிட்டனர். புகைவரும் புதரில் அறிகுறியைக் கண்டு பிரிட்டிஷ்காரர்கள் சுற்றி வளைத்ததால் சட்டை பாக்கெட்களில் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை, தங்களைத் துரத்தும் பிரிட்டிஷார் மீது வீசிவிட்டு தப்பினர்,” என விவரித்தார்.

மாட்டியது எப்படி?

இளைஞர்கள் அனைவரும் தப்பிவிட்டனரா என்றால் இல்லை. ஒரு சிலர் போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர்.

“ஏற்கெனவே வெண்டயம் என்ற ஆயுதத்தைத் தயாரித்த சலவைத்தொழிலாளி பழனியப்பன் நினைவிருக்கலாம். அவர் சற்று வேடிக்கையானவர். எப்போதும் துருத்துருவென குறும்பு செய்து கொண்டே இருப்பார்.

ஒருமுறை பிரிட்டிஷாரின் லாரியை மடக்கி அவற்றுக்குத் தீ வைக்க திட்டமிட்டனர். அப்போது லாரிகளில் ஹாரன் போன்ற ஒரு ஒலிப்பான் இருந்தது. தீ வைக்கும் முன் அதை எடுத்து தன் கக்கத்தில் வைத்துக்கொண்டு அழுத்தி அழுத்தி சிரித்து விளையாடிய படியே வந்தார் பழனியப்பன்.

இந்த சத்தம் கேட்ட பிரிட்டிஷார் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கைது செய்தனர். அதனால்தான் அவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்,” எனக் கூறினார் சர்மா சண்முகம்.

பின்நாட்களில் கட்சி அலுவலகத்தில் வைத்து, தாங்கள் சிறை செல்ல நேர்ந்த கதை பற்றிப் பேசும்போதெல்லாம், “உன்னால்தான் மாட்டினோம்” என சிரித்தபடியே கதை பேசி மகிழ்ந்ததை அப்போது இளைஞனாக இருந்த சர்மா சண்முகம் கேட்டிருக்கிறாராம்.

 
திமிர் வரி
படக்குறிப்பு,

சர்மா சண்முகம்

சிறையில் அனுபவித்த கொடுமைகள்

ஆந்திராவில் உள்ள அலிகர் சிறையில் கோமணத்துடன் அவர்கள் கொளுத்தும் வெயிலில் கைகளைப் பின்புறமாகக் கட்டி வெறும் தரையில் படுக்க வைக்கப்பட்டனர். இளைஞர்களுக்கு சரிவர உணவு அளிக்காது துன்புறுத்தினர். எதிர்த்துப் பேசியவர்களுக்கெல்லாம் அடி.

சுதந்திரத்துக்குப் பின்பே கண்ணம்பாளையத்து இளைஞர்கள் பலர் ஊர் திரும்பியதால் கே.வி. ராமசாமிக்கு சுதந்திரப் போராட்டத்தால் சிறை சென்று வந்த தியாகிகளுக்கான பென்ஷன்கூட கிடைக்காமல் இருந்தது. இதனால் பிற கண்ணம்பாளையத்துக்காரர்கள் போராடி அவருக்கு பென்ஷன் பெற்றுத் தந்ததாக கிராம மக்கள் கூறினர்.

எத்தனை பாடுபட்டு சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டாலும் தியாகிகளின் மனைவிமார்களுக்கு மட்டுமே பென்ஷன் தொகை கிடைக்கும் வகையில் திட்டம் உள்ளதாகவும், அவர்களிலும் கண்ணம்பாளையத்தில் உள்ளோரில் தற்போது 3 அல்லது 4 பேரே உயிரோடு இருப்பதாகவும் கூறினார்.

எனவே, வாரிசுகளில் யாருக்கேனும் அரசு வேலை கிடைத்தால், உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cv2lr8n4znlo

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் என்பது சும்மா வராது என்பதைக் கட்டுரை சுட்டுகின்றது........!  👍

நன்றி ஏராளன் ........!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் திமிர் வரி என்ற சொல்லிக் கேள்விப்படுகிறேன். பிரிட்டிசாரின் அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.