Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு அரசு இந்துக் கோயில்களின் உண்டியல் பணத்தை எடுத்துக் கொள்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வரலாறு என்ன?

செவ்வாய்க் கிழமையன்று தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாட்டில் கோவில்கள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி பல விமர்சனங்களை முன்வைத்தார்.

"தெற்கில், குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. கோவில்களின் சொத்துகள் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகின்றன. கோவில்கள் சூறையாடப்படுகின்றன. கோவில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன.

ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது கை வைக்கப்படுவதில்லை. அவற்றின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக்கொள்வதில்லை. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் தெற்கில் உங்கள் (காங்கிரஸ்) கூட்டாளிகள் கைப்பற்றுவார்களா? தன் வசம் எடுத்துக்கொள்வார்களா? சொத்துகளை மக்கள் பணிக்காக பயன்படுத்துவார்களா?" என்று கேள்வியெழுப்பினார் பிரதமர் மோதி.

 

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அங்கு பேசிய பிரதமர் அந்த மாநிலத்திற்குத் தொடர்பே இல்லாத தமிழ்நாடு குறித்து பேசியது, குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறை குறித்துப் பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாகவே பாரதிய ஜனதா கட்சியும் இந்துத்துவ அமைப்புகளும் இது தொடர்பாக பேசி வந்திருக்கின்றன. பா.ஜ.கவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிரான நிலைப்பாட்டை நீண்ட காலமாக வலியுறுத்திவருகிறது.

ஆர்எஸ்எஸ்சின் சர்சங்கசாலக்கான மோகன் பகவத்தும் அரசு தங்கள் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டுமென தொடர்ந்து பேசிவருகிறார். 2021ஆம் ஆண்டு விஜயதசமியன்று பேசிய மோகன் பகவத், தென்னிந்திய மாநிலங்களில் பெரும்பான்மையான கோவில்கள் அரசின் கண்காணிப்பின் கீழ் இருப்பது குறித்து சுட்டிக்காட்டி, அவற்றை விடுவிக்க வேண்டுமெனப் பேசியிருந்தார்.

2012ஆம் ஆண்டில் சுவாமி தயானந்த சரஸ்வதி, கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு கையில் எடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் பிரதமர் மோதி.

 

இருந்தபோதும் இந்த விவாதம் தீவிரமடைந்தது 2017 - 18ஆம் ஆண்டுக்குப் பிறகுதான். அந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது குறித்து பா.ஜ.க. தீவிரமாகப் பேச ஆரம்பித்தது. குறிப்பாக, அப்போது அக்கட்சியின் தேசியச் செயலராக இருந்த எச். ராஜா, இந்த விவகாரத்தை தீவிரமாக பேச ஆரம்பித்தார். அதே தருணத்தில், ஜக்கி வாசுதேவும் "கோவில் அடிமை நிறுத்து" என்ற பரப்புரையை முன்னெடுத்தார்.

ஆனால், 2021ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத் துறை குறித்த விவாதங்கள் சற்று குறைந்தன. ஒரு பக்கம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது போன்ற விவகாரங்களில் தீவிரம் காட்டிய அதே நேரத்தில், இதுவரை, 1,000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருப்பதாக அறிவித்ததன் மூலம், கோவில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாகவே இயங்குகின்றன என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது தி.மு.க. அரசு.

இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருப்பது குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் கோவில்கள் அரசின் கண்காணிப்பில் வந்ததற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

 
தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோவில்களைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை இருப்பதைப் போல ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் துறைகள் இருக்கின்றன.

இந்து சமய அறநிலையத் துறையின் நீண்ட வரலாறு

மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் சோழமண்டலக் கடற்கரையில் கால் பதித்த பிறகு சட்டம் - ஒழுங்கு என்பது அவர்கள் வசம் சென்றது. அந்தத் தருணத்தில் கோவில்கள், அறக்கட்டளைகள் தொடர்பான சில புகார்கள் கம்பெனிக்குச் சென்றன. ஆனால், இதனை ஒழுங்குபடுத்த விதிகள் ஏதும் இல்லாத நிலையில், புதிய சட்டத்தை உருவாக்க கிழக்கிந்திய கம்பெனி முடிவுசெய்தது.

அதன் அடிப்படையில்தான் 'மதராஸ் நிலைக் கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் 1817'ல் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் 1817 செப்டம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வந்தது. கொடைகளை, கோவில் சொத்துகளை பராமரிப்பதுதான் நோக்கமே தவிர, அவற்றிலிருந்து வரும் வருவாயை அரசுக்கு பயன்படுத்துவதல்ல என இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

கோவில்களைக் கண்காணிக்கும் பொறுப்பு அப்போதைய Board of Revenueவிடம் வழங்கப்பட்டது. இந்த வேலைகளைச் செய்ய உள்ளூர் அளவில் முகவர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்குக் கிடைத்தது.

ஆனால், இந்த உள்ளூர் முகவர்கள் சரியாக செயல்படாத நிலையில், இந்தச் சட்டம் திறனற்றதாக இருக்கிறது என்பது விரைவிலேயே உணரப்பட்டது. விக்டோரியா மகாராணி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு 1863ல் புதிய சட்டம் இயற்றப்பட்டது. 'சமயக் கட்டளைகள் சட்டம் 1863' என்று இந்தச் சட்டத்திற்குப் பெயர். இந்தச் சட்டத்தின் மூலம் உள்ளூர் முகவர்களைக் கண்காணிக்க உள்ளூர் கோவில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தக் குழுக்கள் நிர்வாகத்திலும் பிரச்சனைகள் இருந்தன.

 

இதற்குப் பிறகு, 1908ல் உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் - பிரிவு 92 - இயற்றப்பட்டது. திருக்கோவில்கள் தொடர்பான வழக்குகளை உரிமையியல் நீதிமன்றங்கள் நடத்த ஆரம்பித்தன. ஆனால், இந்த நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்துவது கடினமாக இருந்ததால், திருக்கோவில் வசம் இருந்த பெரும் அளவிலான வளங்களும் சொத்துகளும் தனியார் வசம் சென்றன.

இந்த நிலையில்தான் சென்னை மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக் கட்சி அரசு, 1927ல் மெட்ராஸ் இந்து சமய அறநிலையங்கள் சட்டத்தை இயற்றியது. அதன் அடிப்படையில், மதராஸ் இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. நிர்வாகம் சரியாக இல்லாத கோவில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு வழங்கியது.

ஆனால், இந்தச் சட்டத்திற்கு உயர் வகுப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசு மதத்தில் தலையிடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அப்போதைய வைசிராயாக இருந்த இர்வினிடம் சென்னை மாகாணப் பிரதமர் பனகல் அரசர் விளக்கமளித்து இந்தச் சட்டத்திற்கு ஒப்புதலைப் பெற்றார்.

இதற்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக தொடர்ச்சியாக சட்டங்கள் 1947வரை இயற்றப்பட்டன. பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1951ல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் சென்னை மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் பரம்பரை அறங்காவலர் முறை ஒழிக்கப்பட்டது.

ஆனால், இந்தச் சட்டத்திலும் சில குறைகள் இருந்தன. இவை களையப்பட்டு 1959ல் 'தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959' இயற்றப்பட்டது. இதன்படி கோவில்களையும் சமய நிறுவனங்களையும் நிர்வகிக்க புதிய அரசுத் துறை உருவாக்கப்பட்டது. இதன்படி, இந்து அறநிலையைத் துறை ஆணையர் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு கோவிலின் துணை, இணை ஆணையர்களையோ, அறங்காவலர்களையோ அழைத்து கணக்கு வழக்குகளைக் கேட்க முடியும்.

1959ஆம் ஆண்டின் இந்தச் சட்டமே தற்போதுவரை அமலில் இருக்கிறது.

பிரதமரின் குற்றச்சாட்டு சரியா?

கோவில்களின் சொத்துகள் அரசால் சூறையாடப்படுவதாக பிரதமர் மோதி குற்றம்சாட்டியிருக்கிறார். அப்படிச் செய்ய முடியுமா?

"கோவில் சொத்துகள் தனியாரால் சூறையாடப்பட்டதால்தான் இந்து சமய அறநிலையத் துறை சட்டமே உருவாக்கப்பட்டது. அரசு தலையிட வேண்டுமென இந்து பக்தர்கள்தான் வேண்டுகோள் விடுத்ததால்தான் இந்தத் துறையே உருவானது. எந்த அரசும் கோவில்களின் பணத்தை தன்னுடைய விருப்பப்படி செலவழிக்க முடியாது.

கோவில்களுக்கு வரும் வருவாய் சம்பந்தப்பட்ட கோவில்களில் உள்ள கடவுள்களின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில்தான் வரவுவைக்கப்படும். அந்தப் பணத்தை செலவழிக்கவென விரிவான விதிமுறைகள் உள்ளன. முதலில் கோவிலின் நிர்வாகச் செலவுக்கான பணம் அதிலிருந்து எடுக்கப்படும். அதற்குப் பிறகு, உபரியான பணத்தை எந்தெந்த வகைகளில் செலவழிக்கலாம் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு பெரிய கோவிலின் உபரி வருவாயை எடுத்து நலிவடைந்த கோவில்களுக்கு செலவழிக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். கல்விக் கூடங்களை நடத்தலாம். மருத்துவமனைகளை நடத்தலாம். தொழுநோயாளிகளுக்கான இல்லமோ, முதியோர் இல்லமோ நடத்தலாம். "

தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1959ல் 'தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959' இயற்றப்பட்டது.

கோயில் உண்டியல் பணத்தை அரசு எடுத்துக் கொள்கிறதா?

இந்த விதிமுறையின்படிதான் சில கோவில்களில் அன்னதானம் அளிக்கப்படுகிறது. தவிர, கோவிலின் வருவாயில் இருந்து செலவு செய்ய முடிவுசெய்தால், அதற்கு கோவிலின் அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படிதான் செலவுசெய்ய முடியும்" என்கிறார் இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் அதிகாரியான சி. ஜெயராமன்.

மேலும், கோவில்களின் நிலத்தையோ, உண்டியலில் விழும் பணத்தையோ அரசு எடுக்கவே முடியாது என்கிறார் அவர். "உண்டியலில் விழும் பணத்தை அரசு எடுத்துக்கொள்கிறது என்ற தவறான குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகச் சொல்லப்பட்டு வருகிறது. உண்டியலில் விழும் பணம் பொதுமக்கள் முன்னிலையில், பொதுமக்களின் பங்கேற்போடு எண்ணப்பட்டு, அந்தந்த கடவுள்களின் பெயரில் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. இப்போதெல்லாம் வங்கி அதிகாரிகளே கோவிலுக்கு வந்து பணத்தை வாங்கி, சாமியின் பெயரில் வரவு வைத்து, அதற்கான சான்றை அளித்துவிட்டுச் செல்கிறார்கள்.

நிலத்தைப் பொறுத்தவரை, தனி நபர்களின் நிலத்தை அரசு விரும்பியதைப்போல கையகப்படுத்தலாம். ஆனால், கோவில்களின் நிலத்தை அப்படிச் செய்ய முடியாது. அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். நிலத்தின் சந்தை மதிப்பைவிட இரண்டரை மடங்கு அதிக தொகை அளிக்க வேண்டும்.

 

"நிலத்தை குத்தகை விடுவதற்கும், வாடகை விடுவதற்கும் இதுபோல பல விதிகள் உள்ளன. ஆகவே அரசு தனது நலத்திட்டங்களுக்காக கோவிலின் பணத்தை எடுப்பதாகச் சொல்வது முழுக்க முழுக்கத் தவறு" என்கிறார் ஜெயராமன்.

இந்து சமய அறநிலையத் துறையின் செலவுகளுக்கு, பொதுமக்களின் வரி வருவாயில் இருந்து மாநில அரசு எடுக்க முடியாது. எனவே கோவில்கள் தங்களது வருவாயில் வருமான வரி செலுத்த வேண்டிய பணம் எவ்வளவு எனக் கணக்கிட்டு, அந்தத் தொகையில் 7 முதல் 14 சதவீதத்தை அரசுக்குக் கட்டணமாகச் செலுத்துகின்றன. 1959ஆம் ஆண்டில் தற்போதுள்ள இந்து அறநிலையத் துறைச் சட்டத்தின் கீழே கோவில்கள் கொண்டுவரப்பட்டபோது எந்தக் கோவிலிலும் நிலையான வைப்புத் தொகை கிடையாது. தற்போது எல்லாக் கோவில்களிலும் சேர்த்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நிலை வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளன. அரசின் கண்காணிப்பின் கீழ் கோவில்கள் இருந்ததால்தான் இது சாத்தியமானது என்கிறார் ஜெயராமன்.

தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம்,அமைச்சர் சேகர்பாபு

படக்குறிப்பு,

கோவில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாகவே இயங்குகின்றன என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது தி.மு.க. அரசு.

இந்து சமய அறநிலையத் துறை சரியாக செயல்படுகிறதா?

இந்து சமய அறநிலையத் துறையில் தற்போதுள்ள சில பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகிறார் ஜெயராமன். "கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே பல கோவில்களில் அறங்காவலர்கள் முழுமையாக நியமிக்கப்படுவதில்லை. பல கோவில்களில் ஒரே ஒரு அறங்காவலரை தக்கார் என்ற பெயரில் நியமிக்கிறார்கள். இதெல்லாம் தவறு. எல்லாக் கோவில்களிலும் அறங்காவலர் குழுவை முழுமையாக நியமித்தால் இவ்வளவு குற்றச்சாட்டுகள் வராது. அதனை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்" என்கிறார் ஜெயராமன்.

கோவில்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிந்தால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் புதிய அறங்காவலர்களை நியமிக்கும் விதியைக் கொண்டுவர வேண்டும் என்கிறார் அவர்.

அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் கோவில் தொடர்பான முடிவுகளை நிர்வாக அதிகாரிகள் மேற்கொள்வது குறித்து பலரும் ஆட்சேபங்களைத் தெரிவித்து வருகின்றனர். பல கோவில்களில் நிர்வாக அதிகாரிகளுக்கான வசதிகளை கோவிலின் நிதியில் இருந்து செய்துகொள்வது தொடர்பான குற்றச்சாட்டுகளும் இருந்து வருகின்றன.

 

பிற மாநிலங்களில் என்ன நிலை?

சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை அரசு கட்டுப்படுத்துவதில்லை என்பதும் சரியான தகவல் இல்லை என்கிறார் ஜெயராமன். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள், சொத்துகளை நிர்வகிக்க நீண்ட காலமாகவே வக்பு வாரியம் இயங்கிவருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

கோவில்களைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை இருப்பதைப் போல ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் துறைகள் இருக்கின்றன. உத்தராகண்ட் மாநிலத்தில் சில கோவில்களை மட்டும் கண்காணிக்க 'சார் தாம் தேவஸ்தான வாரியச் சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு, 2021ல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

 

1960ல் இந்திய அரசு டாக்டர் சி.பி. ராமசாமி ஐயர் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் அளித்த அறிக்கையில், கோவில்கள் நன்றாக நிர்வகிக்கப்பட அவற்றின் மீது அரசின் கண்காணிப்பு அவசியம் என குறிப்பிட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 38,635 இந்து மத நிலையங்கள் உள்ளன. இவற்றில் கோவில்களின் எண்ணிக்கை 36,595. திருமடங்கள் 56. திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் 57. குறிப்பிட்ட பணிக்கான அறக்கட்டளைகள் 1,721. அறக்கட்டளைகள் 189. சமணக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையே நிர்வகிக்கிறது. அப்படி 17 சமணக் கோவில்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பில் இல்லாமலும் ஆயிரக்கணக்கான கோவில்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டில் இருந்துவருகின்றன.

https://www.bbc.com/tamil/articles/cjm42409gpgo

  • கருத்துக்கள உறவுகள்

திமுக பற்றி மோடி அவதூறு பரப்புவது சரியா? – ஸ்டாலின் கேள்வி!

SelvamOct 06, 2023 07:30AM
mk stalin says modi tamilnadu temple

திமுக ஆட்சிக்கு வந்தது முதல்‌ கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும்‌ பொய்யான செய்தியை பிரதமர்‌ கட்டமைக்க வேண்டிய அவசியம்‌ என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வள்ளலார் 200-ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் “வள்ளலார் 200” நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 5) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “இந்தக்‌ காலக்கட்டத்துக்குத்‌ தேவையான மிகமுக்கியமான வழிகாட்டிதான்‌ அருட்திரு வள்ளலார்‌. இறையியல்‌ என்பது அவரவர்‌ விருப்பம்‌. அவரவர்‌ தனிப்பட்ட உரிமை.

ஆனால்‌ அந்த இறையியலை  ஆன்மீக உணர்வை ஒரு கூட்டம்‌ அரசியலுக்கு பயன்படுத்தி, அதன்‌ மூலமாக குளிர்காயப்‌ பார்க்கிறது. அரசியல்‌ வேறு – ஆன்மீகம்‌ வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும்‌ பகுத்தறிவாளர்கள்தான்‌ தமிழ்நாட்டு மக்கள்‌. அந்த மக்களைக்‌ குழப்ப சிலர்‌ முயற்சித்து வரும்‌ காலத்தில்‌, வள்ளலார்‌ அவர்கள்‌ நமக்கு அறிவுத்‌ திறவுகோலாகக்‌ காட்சி அளிக்கிறார்கள்‌.சாதியும்‌ மதமும்‌ சமயமும்‌ பொய்யென ஆதியில்‌ உணர்த்தியவர்அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலார்‌‌, கண்மூடி வழக்கம்‌ எல்லாம்‌ மண்மூடிப்‌ போக எனப்‌ பாடியவர்‌ அவர்‌.

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச்‌ சந்தடிகளிலே கோத்திரச்‌ சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்‌ அலைந்து அலைந்து வீணே நீர்‌ அழிதல்‌ அழகலவே” – என்று பாடியவர்‌ வள்ளலார்‌ பெருமான்‌.

mk stalin says modi tamilnadu temple

அனைத்துயிரும்‌ ஒன்று என்ற வள்ளல்‌ பெருமானாரின்‌ எண்ணத்தை இன்று நாம்‌ விதைக்க வேண்டும்‌. சட்டமன்றத்‌ தேர்தலுக்கு முன்னதாக, திமுக வெளியிட்ட தேர்தல்‌ அறிக்கையில்‌ 419-ஆவது வாக்குறுதியாக ‘வடலூரில்‌ வள்ளலார்‌ சர்வதேச மையம்‌’ அமைக்கப்படும்‌ என்று சொல்லி இருந்தோம்‌. “சாதி சமய நல்லிணக்கத்தைப்‌ பேணும்‌ வகையில்‌ அருட்பிரகாச வள்ளலாரின்‌ சமரச சுத்த சன்மார்க்கப்‌ போதனைகளைப்‌ போற்றும்‌ வகையில்‌, இது அமையும்‌” என்று சொல்லப்பட்டது.

அந்த மையத்தின்‌ ஆணையினை இன்று உங்கள்‌ முன்னால்‌ வழங்கியிருக்கிறோம்‌. விரைவாக அந்தப்‌ பணிகள்‌ எல்லாம்‌ மேற்கொள்ளப்பட்டு மிகச்‌ சிறப்பாக அது கட்டிமுடிக்கப்படும்‌. சென்னையில்‌ முதன்முதலாக வள்ளலார்‌ நகரை உருவாக்கியவர்‌ முதலமைச்சராக இருந்த தலைவர்‌ கலைஞர்‌‌. நாம்‌ ஆட்சிக்கு வந்ததும்‌ வள்ளலார்‌ பிறந்தநாளை தனிப்பெரும்‌ கருணை நாளாக அறிவித்துக்‌ கொண்டாடி வருகிறோம்‌. வள்ளலாரின்‌ அறிவு ஒளியில்‌ இதுபோன்ற பிளவுசக்திகள்‌ மங்கிப்‌ போவார்கள்‌. நாம்‌ வள்ளலாரை உயர்த்திப்‌ பிடிப்பது, சிலருக்கு பிடிக்கவில்லை.

பெரியாரையும்‌ போற்றுகிறோம்‌, வள்ளலாரையும்‌ கொண்டாடுகிறார்களே, என்பதுதான்‌ அவர்களால்‌ ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல்‌ அரசு என்று சொல்லிக்‌ கொள்கிறார்கள்‌. கோவில்கள்‌ அனைத்தையும்‌ பொன்போல போற்றிப்‌ பாதுகாக்கிறார்களே இவர்களை என்ன சொல்லி குற்றம்‌ சாட்டுவது என்று சிலருக்கு குழப்பமாக இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “இரண்டு நாட்களுக்கு முன்பு, தெலங்கானா மாநிலத்தில்‌ தேர்தல்‌ பரப்புரை செய்ய வருகை தந்த பிரதமர்‌ நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்‌ கோவில்களைப்‌ பற்றிப்‌ பேசி இருக்கிறார். அவர்‌ மத்தியப்‌ பிரதேசத்திற்கு சென்று பேசினாலும்‌ அந்தமானில்‌ பேசினாலும்‌  தெலங்கானாவில்‌ பேசினாலும்‌ தமிழ்நாட்டைப்‌ பற்றித்‌ தான்‌ பேசுகிறார்‌. அவரால்‌ மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. “தமிழ்நாட்டில்‌ உள்ள இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில்‌ சொத்துகள்‌ மற்றும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது” என்று பகிரங்கமாக அவர்‌ பேசி இருக்கிறார்‌. இந்தக்‌ குற்றச்சாட்டை நான்‌ திட்டவட்டமாக மறுக்கிறேன்‌.

பிரதமருக்கு நான்‌ எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதனை ஒரு தமிழ்‌ நாளிதழ்‌ தலைப்புச்‌ செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழின்‌ நிர்வாகி ஒருவர்‌, புகழ்பெற்ற திருக்கோவில்‌ ஒன்றில்‌ அறங்காவலர்களில்‌ ஒருவராக இருக்கிறார்‌.

அப்படியானால்‌ அவர்‌, அந்த கோவிலை ஆக்கிரமித்துள்ளார்‌ என்று அர்த்தமா? அதே நாளிதழில்‌ கடந்த ஜுன்‌ மாதத்தில்‌ அறநிலையத்‌ துறையின்‌ சிறப்பான செயல்பாடு பற்றி ஒரு கட்டுரையும்‌ வந்திருக்கிறது.

அந்த கட்டுரையை நான்‌ படிக்கிறேன்‌. அந்தக்‌ கட்டுரைக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய தலைப்பு: “கோவில்‌ உண்டியல்‌ பணம்‌ எங்கும்‌ போகாது” யூகப்‌ பேச்சுக்களும்‌, உண்மை நிலையும்‌ அதில்‌ அடங்கும்‌. கோவில்களில்‌ உண்டியல்‌ வைக்கப்பட்ட காலம்‌ முதல்‌ இன்று வரை பக்தர்களின்‌ காணிக்கைகள்‌ பத்திரமாகத்தான்‌ இருக்கின்றன. மிகுந்த முன்னெச்சரிக்கையுடனே கையாளப்படுகின்றன. காணிக்கை குறித்த பதிவேடுகள்‌ எண்ணி முடிக்கப்பட்ட மறுநாளே அறநிலையத்‌ துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்குள்ள பதிவேடுகளில்‌ ஏற்றப்படுகின்றன. அதிலிருந்து ஒரு நகல்‌ தணிக்கைப்‌ பிரிவுக்கும்‌ அனுப்பப்படுகிறது. தனியார்‌ நிறுவனங்களில்‌ இல்லாத அளவுக்குக்‌ கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ கடைப்பிடிக்கப்படுகின்றன” இப்படிச்‌ சொல்வது இந்த ஸ்டாலின்‌ அல்ல, அந்த நாளிதழின்‌ வெளியீட்டாளரே சொல்லி இருக்கிறார்‌.

mk stalin says modi tamilnadu temple

இன்னொன்றையும்‌ சொல்கிறார்‌ அவர்‌… எந்த நாளிதழ்‌ என்று பெயர்‌ சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கே புரியும்‌. அதில்‌ என்ன சொல்கிறார்‌ என்றால்‌, “ஒரு சிலர்‌ அவரவர்‌ கற்பனைச்‌ சிந்தனைக்கு ஏற்றாற்போல உண்டியல்‌ காணிக்கைகள்‌ இந்த அமைச்சருக்கு பத்து சதவிகிதம்‌ போகிறது – அந்த அமைச்சருக்கு 10 சதவிகிதம்‌ போகிறது எனச்‌ சொல்வது – அவர்களின்‌ அறியாமையன்றி வேறில்லை” – என்று சொல்வதும்‌ இந்த ஸ்டாலின்‌ அல்ல, அந்த நாளிதழின்‌ வெளியீட்டாளரே சொல்லி இருக்கிறார்‌. அதே நாளேட்டில்தான்‌ பிரதமர்‌ சொன்ன பொய்யை தலைப்புச்‌ செய்தியாக போட்டிருக்கிறார்கள்‌.

பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின்‌ பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநிலத்தின்‌ செயல்பாடு குறித்து  இன்னொரு மாநிலத்தில்‌ போய்‌ பேசுவது முறையா? தர்மமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல்‌ கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும்‌ பொய்யான செய்தியை இந்திய நாட்டின்‌ பிரதமர்‌ கட்டமைக்க வேண்டிய அவசியம்‌ என்ன? அவர்‌ யாருக்காக பேசுகிறார்‌? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்‌? இந்த இரண்டு ஆண்டு காலத்தில்‌ 3,500 கோடி ரூபாய்க்கும்‌ அதிகமான மதிப்பிலான கோவில்‌ நிலங்கள்‌ மீட்கப்பட்டுள்ளது. இது தவறா? சொல்லுங்கள்‌ இது தவறா? 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம்‌. இது தவறா?

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச்‌ சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல்‌ சீர்செய்வதற்கும்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவறா?

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ வசிக்கும்‌ பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள்‌ மற்றும்‌ 1250 கிராமப்புறத்‌ திருக்கோயில்களின்‌ திருப்பணிகளையும்‌ சேர்த்து இந்த நிதியாண்டில்‌ மட்டும்‌ 5078 திருக்கோயில்களில்‌ திருப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன. இது தவறா?

எதைத்‌ தவறு என்கிறார்‌ பிரதமர்‌? பிரதமர்‌ அவர்களின்‌ பார்வையில்தான்‌ தவறு இருக்கிறது. எங்களைப்‌ பொறுத்தவரையும்‌ – “எல்லார்க்கும்‌ எல்லாம்‌” என்ற பொதுத்‌ தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம்‌. கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம்‌. அதனால்தான்‌ கருணை வடிவிலான வள்ளலாரைப்‌ போற்றுகிறோம்‌.

அதற்கு அடையாளமாக வள்ளலார்‌ – 200 நிகழ்ச்சியில்‌ ஒர்‌ அறிவிப்பை நான்‌ வெளியிட விரும்புகிறேன்‌. கடலூர்‌ மாவட்டத்‌ தலைநகரில்‌ 17 ஏக்கரில்‌ அமைக்கப்பட இருக்கின்ற புதிய பேருந்து நிலையத்திற்கு “அருள்பிரகாச வள்ளலார்‌” பெயர்‌ சூட்டப்படும்‌ என்பதை மகிழ்ச்சியோடும்‌ பெருமையோடும்‌ இந்தத்‌ தருணத்தில்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. வாடிய பயிரைக்‌ கண்டபோதெல்லாம்‌ வாடினேன்‌ என்ற வள்ளலார்‌ வழியில்‌, வாடிய உயிர்கள்‌ அனைத்தையும்‌ வாழ வைக்கும்‌ ஆட்சியாக திமுக ஆட்சி என்றைக்கும்‌ செயல்படும்‌” என்று தெரிவித்தார்.

செல்வம்

 

 

https://minnambalam.com/political-news/mk-stalin-says-modi-tamilnadu-temple/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.