Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

08 OCT, 2023 | 01:50 PM
image
 

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA)  23 ஆவது அமைச்சர்கள் மட்டக்  கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதன் உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஏனைய சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA)  23 ஆவது அமைச்சர்கள் மட்டக்  கூட்டம் எதிர்வரும்  ஒக்டோபர் 11 ஆம் திகதி  கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/166385

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பு : பிராந்திய நாடுகளுடனான கலந்துரையாடலுக்கும் ஒத்துழைப்புக்குமான வாய்ப்பை வழங்குகிறது - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

Published By: DIGITAL DESK 3

12 OCT, 2023 | 09:04 AM
image

(நா.தனுஜா)

பிராந்தியத்தின் பல்வகைமைத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பானது இப்பிராந்தியம் சார்ந்த முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குமான வாய்ப்பை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின்  (Indian Ocean Rim Association) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நேற்று புதன்கிழமை (11) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 2023 - 2025 ஆம் ஆண்டு வரை இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பிரதித்தலைமை நாடான இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இதற்கு முன்னரான காலப்பகுதியில் தலைமைப்பொறுப்பை வகித்த பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே.அப்துல் மொமீன், இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி சல்மான் அல் ஃபாரிஸி மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரின் பங்கேற்புடனான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று பி.ப 2.30 மணிக்கு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அச்செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது,

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பானது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் 2003 - 2005 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இவ்வமைப்பின் தலைமைப்பொறுப்பை வகித்த இலங்கை, தற்போது மீண்டும் 2023 - 2025 வரையான காலப்பகுதிக்கு இதன் தலைமையை ஏற்றுள்ளது. இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் உறுப்புநாடுகள் மற்றும் ஊடாடல் பங்குதாரர் நாடுகள் உலகின் சகல பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதனால், இதனை ஓர் 'உலகளாவிய அமைப்பாகவும்' கருதமுடியும்.

பிராந்தியத்தின் பல்வகைமைத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கும் இவ்வமைப்பு, கடற்சூழல் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள், மீள்வள முகாமைத்துவம், அனர்த்த அச்சுறுத்தல் தொடர்பான அறிவூட்டல், கல்வி மற்றும் விஞ்ஞானபூர்வ ஒத்துழைப்பு, சுற்றுலா மேம்பாடு மற்றும் கலாசாரப் பரிமாற்றம் ஆகிய 6 விடயங்களுக்கு விசேட முன்னுரிமை வழங்கிவருகின்றது.

மேலும், இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பானது இப்பிராந்தியம் சார்ந்த முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குமான வாய்ப்பை வழங்குகின்றது என்று சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இச்செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமீன், அமைதியானதும், பாதுகாப்பானதும், சுபீட்சமானதுமான இந்து சமுத்திரப்பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இயங்கிவரும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். 

https://www.virakesari.lk/article/166673

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திரம் வெறும் நீர்ப்பரப்பு அல்ல : பிராந்திய நாடுகளின் அபிவிருத்தியில் முக்கிய வகிபாகத்தைக்கொண்ட பொருளாதார இராஜதந்திர வலயம் - இந்திய வெளிவிவகார அமைச்சர்

Published By: VISHNU

11 OCT, 2023 | 06:44 PM
image

(நா.தனுஜா)

இந்து சமுத்திரம் என்பது வெறுமனே நீர்ப்பரப்பு மாத்திரமல்ல. மாறாக அது இப்பிராந்தியத்திலும், இதற்கு அப்பாலும் உள்ள நாடுகளின் அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் இராஜதந்திர வலயமாகும். அதன்படி சட்ட அடிப்படையிலான சர்வதேச செயலொழுங்குக்கு, சட்டவாட்சி, நிலைபேறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான உட்கட்டமைப்புசார் முதலீடுகள், சுதந்திரமான கடல் மற்றும் ஆகாய மார்க்கப் போக்குவரத்து, இறையாண்மைக்கான மீயுயர் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான இந்திய - பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதே இந்தியாவின் பரந்துபட்ட இலக்காகும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் (Indian Ocean Rim Association) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நேற்று புதன்கிழமை (11) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 2023 - 2025 ஆம் ஆண்டு வரை இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பிரதித்தலைமை நாடான இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இதற்கு முன்னரான காலப்பகுதியில் தலைமைப்பொறுப்பை வகித்த பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே.அப்துல் மொமீன், இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி சல்மான் அல் ஃபாரிஸி மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரின் பங்கேற்புடனான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று பி.ப 2.30 மணிக்கு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட எஸ்.ஜெய்சங்கர் மேலும் கூறியதாவது:

 இந்தியா பிரதித்தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இம்முறை மீண்டும் கொழும்புக்கு வருகைதந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 2023 - 2025 வரையான காலப்பகுதிக்கான இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கைக்கும், இதுவரையான காலமும் தலைமைப்பொறுப்பை வகித்த பங்களாதேஷுக்கும் வாழ்த்துக் கூறுகின்றேன். இப்பிராந்தியத்தில் சுபீட்சத்தைக் கட்டியெழுப்புவதும், சுதந்திரமானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான இந்து சமுத்திரப்பிராந்தியத்தை உறுதி செய்வதுமே எமது பொதுவான நோக்கமாகும். 

முதலாவதாக உதவியையும், பாதுகாப்பையும் வழங்குவதுடன் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைந்திருக்கும் நாடுகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கும் நாடு என்ற ரீதியில் இந்தியாவானது 'அயலகத்துக்கு முதலிடம்' என்ற கொள்கையைப் பின்பற்றிவருகின்றது. சட்ட அடிப்படையிலான சர்வதேச செயலொழுங்குக்கு, சட்டத்தின் ஆட்சி, நிலைபேறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான உட்கட்டமைப்புசார் முதலீடுகள், சுதந்திரமான கடற்போக்குவரத்து, இறையாண்மைக்கான மீயுயர் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான இந்திய - பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவது என்பது எமது பரந்துபட்ட இலக்காகும். 

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் இந்து - பசுபிக் பிராந்திய திட்டம் கடந்த 22 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் எதிர்வரும் நாட்களில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

 இந்து சமுத்திரம் என்பது வெறுமனே நீர்ப்பரப்பு மாத்திரமல்ல. மாறாக அது இப்பிராந்தியத்திலும், இதற்கு அப்பாலும் உள்ள நாடுகளின் அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் இராஜதந்திர வலயமாகும்.

 அதன்படி அனைவருக்கும் நன்மையளிக்கக்கூடியவகையில் இப்பிராந்தியத்தின் உச்சபட்ச இயலுமையைக் கூட்டாகப் பயன்படுத்துவதை இலக்காகக்கொண்டு இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் கீழ் இந்தியா உள்ளடங்கலாக 23 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. அதன்பிரகாரம் இப்பிராந்தியத்தில் கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தியா முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது. அதேபோன்று இவ்வமைப்பு சார்ந்த இந்தியாவின் கடப்பாடானது அமைதியான நிலைத்திருப்பு, பகிரப்பட்ட சுபீட்சம் மற்றும்  பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது.

 மேலும் இவ்வமைப்பின் உறுப்புநாடுகள் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை அடைந்துகொள்வதற்கு அபிவிருத்திசார் சவால்கள் செயற்திறன்மிக்கவகையில் உரியவாறு கையாளப்படவேண்டும். குறிப்பாக சமுத்திர பொருளாதாரம், வளப்பயன்பாடு, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

 இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நிலைபேறான அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி, சுபீட்சம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கானதொரு கட்டமைப்பாகவே இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பை இந்தியா கருதுகின்றது. அதன்படி இவ்வமைப்பின் உறுப்புநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும், பிராந்திய வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இந்தியா தொடர்ந்து செயலாற்றும் என்று அவர் உறுதியளித்தார்.

https://www.virakesari.lk/article/166665

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றது இலங்கை

Published By: DIGITAL DESK 3

12 OCT, 2023 | 08:57 AM
image

(நா.தனுஜா)

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 2023 - 2025 வரையான காலப்பகுதிக்கான தலைமைப்பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்டது.

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின்  (Indian Ocean Rim Association) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நேற்று புதன்கிழமை (11) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பில் 23 உறுப்புநாடுகளும் 11 ஊடாடல் பங்குதாரர் நாடுகளும் அங்கம்வகிக்கின்றன. 

இவ்வமைப்பில் ஸ்தாபக உறுப்புநாடான இலங்கைக்கு மேலதிகமாக அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமோரொஸ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், கென்யா, மடகஸ்கார், மலேசியா, மாலைதீவு, மொரீஷியஸ், மொஸாம்பிக், ஓமான், சீஷேல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாபிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் யேமன் ஆகிய நாடுகள் அங்கம்வகிக்கின்றன. அதேபோன்று சீனா, எகிப்து, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், சவுதி அரேபியா, தென்கொரியா, ரஷ்யா, துருக்கி, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா என்பன இவ்வமைப்பின் ஊடாடல் பங்குதாரர் நாடுகளாக உள்ளன.

அதன்படி, கடந்த இருவருடகாலமாக இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புக்கு பங்களாதேஷ் தலைமைதாங்கிவந்த நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 2023 - 2025 வரையான காலப்பகுதிக்குரிய தலைமைப்பொறுப்பை இலங்கையும், பிரதித்தலைமைப்பொறுப்பை இந்தியாவும் ஏற்றுக்கொண்டன.

அதேபோன்று இக்கூட்டத்தில் '2030 மற்றும் அதற்கு அப்பால் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் இலக்கு' என்ற ஆவணம் அனைத்து உறுப்புநாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

மேலும், கடந்த காலங்களில் உணவு மற்றும் விவசாய அமைப்பு, யுனெஸ்கோ உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்கள், சர்வதேச புதுப்பிக்கத்தக்க சக்திவலு முகவரகம், சர்வதேச சோலார் கூட்டிணைவு, இந்து சமுத்திர ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு கட்டமைப்புக்களுடனும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பு இணைந்து பணியாற்றியமை தொடர்பில் தமது திருப்தியை வெளிப்படுத்திய உறுப்புநாடுகள், எதிர்வரும் காலங்களிலும் இந்த ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்திக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின.

இக்கூட்டத்துக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பிராந்தியத்தின் பல்வகைமைத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பானது இப்பிராந்தியம் சார்ந்த முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குமான வாய்ப்பை வழங்குவதாக சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/166672

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்தினுள் இந்து சமுத்திரத்தின் பங்களிப்பு முக்கியமானது - ஜனாதிபதி

Published By: VISHNU

12 OCT, 2023 | 07:18 PM
image

ஆரம்ப காலம் முதலே சிறப்புமிக்க கேந்திர நிலையமாக விளங்கும் இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

எமக்குரிய கலசாரம், வர்த்தகம் மற்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்து காணப்படும் நாகரிக பாரம்பரியத்தை கொண்ட இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்கவோ துடைத்தெறியவோ  முடியாதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

காலி ஜெட்வின் ஹோட்டலில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற "காலி கலந்துரையாடல் 2023" சர்வதேச மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

இம்முறை "இந்து சமுத்திரத்தில் உருவாகும் புதிய ஒழுங்கு முறை" தொனிப்பொருளின் கீழ் 11 சர்வதேச அமைப்புகள் மற்றும் 44 நாடுகளின் சமுத்திரவியல் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை பிரதானிகளின் பங்கேற்புடன் இன்றும் நாளையும் (13) இந்த  நிகழ்வு நடைபெறுகிறது.  

மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதன் அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக, 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காலி கலந்துரையாடல் சமுத்திரவியல் மாநாடு இம்முறை 11 ஆவது தடவையாக இடம்பெறுகின்றது.  

இதனூடாக வலயத்தினதும் உலகத்தினதும் தலைவர்களை ஒரே மேடைக்கு வரவழைத்து கடற்படை, சுற்றாடல்,சமுத்திர மற்றும் அரசியல் கலந்துரையாடல்களை ஏற்படுத்தல் மற்றும் உலக பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராய எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த மாநாட்டினை இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் அண்மை காலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதனை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.  

 இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைமைப் பதவி இலங்கைக்கு கிடைத்தன் பின்னர் நடத்தப்படும் முதலாவது மாநாடாக இது அமைந்திருக்கிறது.  

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க;

இந்த காலி கலந்துரையாடலில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய துறைகள் தொடர்பில் பங்குபற்றியுள்ள உங்கள் அனைவரினதும் கருத்துக்களை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.  

இந்திய சமுத்திர  மாநாட்டின் முன்னோடியான கலாநிதி ராம் மஹாதேவ் அவர்களும் இங்கு இருக்கிறார். அதனால் போட்டித்தன்மையின் ஒரு பகுதியாக அல்லாது, ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்தியாவின் பின்புலத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்போது நாம் இந்து சமுத்திரத்தில் வளர்ந்துவரும் புதிய ஒழுங்குமுறை தொடர்பில் கலந்துரையாடுகிறோம். குறிப்பாக கலாநிதி மஹாதேவ் அவர்களின் உரையின் பின்னர் இந்திய சமுத்திரம் என்பது யாது? ஆசிய - பசுபிக், இந்து - பசுபிக் மற்றும் ஒரே தடம் - ஒரே பாதையுடன் உள்ள தொடர்பு குறித்து கேள்விகளை கேட்க நினைத்தேன். 

ஆசியா - பசுபிக் என்பது ஒருவகை சித்தரிப்பாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பசுபிக் வலயத்திற்குள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் கேந்திர நிலையம் மற்றும் கலந்துரையாடல் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சீனா உட்பட ஏனைய நாடுகள் ஒன்றிணைந்து ஆசிய - பசுபிக் பொருளாதாரத்தை கட்டமைத்தலே இதன் ஆரம்பமாகும். அது பொருளாதார எழுச்சி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

ஒரே தடம் - ஒரே பாதை என்றால் என்ன? அதனை பாதுகாப்பு எழுச்சியென சிலர் கூறினாலும், ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிற்கு இடையில் காணப்படும் வரலாற்று வர்த்தக தொடர்பின் ஊடாக எழுச்சி பெரும் சீனாவை மையப்படுத்திய வர்த்தக வேலைத்திட்டம் என்பதே எமது நிலைப்பாடாகும். அதேபோல் இந்து, பசுபிக் என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு எழுச்சியாகும். 

இருப்பினும் இந்து சமுத்திரம் என்பது ஒரு எழுச்சி அல்ல. அது நாகரிகமாகும். எழுச்சிகள் ஏற்படலாம், மறைந்தும் போகலாம். ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியம் இருந்ததை போல ஐரோப்பாவின் எழுச்சிக்கான மேற்கத்திய குழுக்களும் இருந்தன. தற்போது அவை அனைத்தும் மாயமாகிவிட்டன. தற்போது ஐரோப்பிய சங்கம் இருந்தாலும் உக்ரைன் யுத்தம் நிலவுகிறது. இவ்வாறான எழுச்சிகள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் மறைந்து போகும். அவர்களின் எழுச்சிகள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அறிவியலின் மீது தங்கியுள்ளது. 

ஆனால் இந்து சமுத்திரம் ஒரு நாகரிகமாகும். உலக நாகரிகம் இங்கிருந்தே தோற்றம் பெற்றது. மொகான்தாஸ்கே முதல் பாராவோவினர் வரையிலான அனைத்தும் எமது வசமாகவிருக்கும் நாகரிகத்தின் ஒரு பகுதியாகும். இந்த நாகரிகம் தான் உலகின் சிறந்த ஆகமங்களையும் தோற்றுவித்துள்ளது. 

இந்து சமயம், புத்த சமயம், சீக் சமயம், சமண சமயம் ஆகியன இந்த நாகரிகத்திலேயே தோற்றம் பெற்றன. இஸ்லாம் ஆகமும் அரேபிய தீபகற்பங்களிலிருந்து வந்தவையாகும் என்ற வகையில் இவை அனைத்தும் எமது சிந்தனைகளின் தாக்கத்தை கொண்டுள்ளன.

பிரித்தானியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட கலாசாரம் காணப்படுகின்றமை, ஒவ்வொருவருடனும் வர்த்தக் தொடர்புகளை கொண்டுள்ளமை, மோதல்களில் ஈடுபட்டுள்ளமை, ஒவ்வொருவருடனும் நாகரிக தொடர்புகளை கொண்ட பாரம்பரியங்களுக்கும் உரிமை கோருகிறோம். அதனை அழிக்கவோ துடைத்தெறியவோ எவராலும் முடியாது. 

அதேபோல் பிரித்தானிய பொதுநலவாய சபை என்றால் என்ன? அதன் அதிகளவான உறுப்பினர்கள் இந்த வலயத்தை சேர்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் தொடர்புகள் உள்ளன. அதனால் எமக்கு பொருத்தமான சில எழுச்சிகள் காணப்படுகின்றன. எமது எழுச்சிக்கு பொருத்தமான நடவடிக்கைகள் தொடர்பில் நாம் ஆராய வேண்டும். 

இந்து சமுத்திரம் என்பது ஆசிய - பசுபிக், இந்து - பசுபிக்,  மற்றும் ஒரே தடம் - ஒரே பாதை என்று எவருக்கும் சொந்தமில்லாத அரசியல் அமைப்பாகும். பல நாகரிகங்கள் இங்கிருந்தே தோற்றம் பெற்றுள்ளன. பிரித்தானிய மற்றும் மேற்கத்திய ஆதிக்கம் என்பன இந்து சமுத்திரத்திலேயே சரிவடைந்தன. 

கொழும்பு மாநாடு, கொழும்பு பலவான்களின் மாநாடு, பென்டுன் மாநாடு, ஆபிரிக்க - ஆசியவாதம் என்பனவும் இங்கிருந்தே ஆரம்பித்தன. அணிசேரா நாடுகளின் மாநாடும் இங்கிருந்தே ஆரம்பமாகியது. அதனால் நாம் அடிப்படையில் ஓர் அரசியல் அமைப்பாவோம். 

காலனித்துவம் சரிவடைந்தன் பின்னர் ஐரோப்பா தவிர்ந்த தரப்புக்களுக்களை நாமே ஏற்றுக்கொண்டோம். நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட இந்து சமுத்திர வலயத்தின் அமைதிக்கான யோசனை எம்மிடத்தில் உள்ளது. அது மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் சமூக -  பொருளாதார மற்றும் ஏனைய அணுகுமுறைகள் , இந்து சமுத்திரம் தொடர்பான எண்ணக்கரு, ஜகார்த்தா ஒப்பந்தமும் எம்மிடத்தில் உள்ளன.   

இவ்வாறு இந்து சமுத்திரம் தொடர்பில் பல்வேறு விளக்கங்கள் இருப்பதால், நாம் அரசியல் ரீதியாக ஆசிய - பசுபிக் அல்லது ஏனைய அமைப்புக்களிலிருந்து வேறுபட்டவர்கள். நாம் அரசியல் மயமானவர்கள் என்ற  வகையில் அரசியல் ரீதியில் சிந்திக்கிறோம். 

யுக்ரேன் யுத்தம் தொடர்பில் அனைவருக்கும் பல்வேறு எண்ணங்கள் இருக்கின்றன. அது பற்றிய தீர்வுகளின் நிலைப்பாடுகள் யாது? சீஷெல்ஸ் நாடு என்ன நினைக்கிறது? அது மிகச் சிறியதாக இருந்தாலும் மிகவும் முக்கியமான நாடாகும்.  மாலைதீவு என்ன நிலைப்பாட்டில் உள்ளது? அவர்கள் எவ்வாறு பதிலளிக்க போகிறார்கள். என்ற விடயங்கள் பாதுகாப்பு ஆய்வாளர்களினால் கருத்தில் கொள்ளப்படாவிட்டாலும் அவை முக்கியமான விடயங்களாகும். 

அடுத்ததாக கலாநிதி மஹாதேவ அவர்கள் கூறியது போல கிழக்காசியாவில் ஏற்பட்ட அபிவிருத்தி தடைப்படாது. இந்து சமுத்திரத்தின் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இணையாக "கல்ப்" சமவாயத்தின் நாடுகளையும் நாம் சந்திக்கிறோம். அதனால் இந்து சமுத்திரத்திற்குள் பாரிய இரு பொருளாதார மத்தியஸ்தானங்கள் உருவாகி வருகின்றன. 

2050 களில் ஆபிரிக்கா துரித வளர்ச்சியை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றி அறியாதவர்கள் 2063 ஆபிரிக்க ஒழுங்கு பத்திரத்தை பார்க்க வேண்டும். மற்றுமொரு பாரிய பொருளாதார கேந்திர நிலையமாகவும் மாற்றமடையலாம். மேற்கு, ஆசிய மற்றும் இந்திய பொருளாதார கேந்திர நிலையங்கள் என மூன்று பிரிவுகள் உருவாகலாம்.  

வர்த்தக்கத்திலும் எமக்கான தனித்துவங்கள் உள்ளன. இந்து சமுத்திரத்தில் இலங்கை மூலோபாய அமைவிடத்தை கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்தால் வலயத்தின் மிகப்பெரிய விநியோக மத்தியஸ்தானமாக உருவெடுக்கும். அதனால் கிழக்கு இந்திய சமுத்திர அபிவிருத்தியின் பிரதிபலன்களை நாமும் அடைந்துகொள்ள முடியும். 

அதேபோல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஆபிரிக்காவுடன் தொடர்புபடுத்தினால் அதனையும் வர்த்தக துறைமுகமாக மாற்ற முடியும். நாகரிகம் மற்றும் வர்த்தகத்திற்கு இடையிலான தொடர்புகளை உரிய வகையில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். 

எமக்கு துறைமுகங்கள் முக்கியமானதாகும். இன்று உலகின் பிரதான துறைமுகங்கள் வரிசையில் டுபாய் துறைமுகம் இணைந்துள்ளது. அதேபோல் மேலும் பல துறைமுகங்களும் இணைந்துள்ளன. இலங்கையும் இந்த போட்டிக்குள் இருக்க வேண்டும் என்பதால் எம்மால் முடியுமாயின் மற்றுமொரு துறைமுகத்தையும் உருவாக்குவோம்.

குறிப்பாக இன்று ஐக்கிய அரபு  இராச்சியம்  மற்றும் கத்தார் ஆகியவை விமான நிறுவனங்கள் உலக அளவில் பிரதானமாக  ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், கத்தார் இன்று விமான நிலையத் துறையில் பிரவேசித்துள்ளது. எனவே உங்களுக்கு இந்தத் துறையிலும் மேம்படும் புதிய போக்குகள் உருவாகுவதைக் காணும் திறன் உள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டில்  இடம்பிடித்து விட்டன. குறிப்பாக ஐ.பி.எல் போட்டியில் இந்தியா அதை  வெளிப்படுத்தி வருகிறது. மெரிலபோன் கிரிக்கெட் கழகம் தொடர்ந்தும் கிரிக்கெட் விளையாட்டின் தாயகமாக இருக்காது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் ஐ.பி.எல் போட்டியைப் பாருங்கள்.  மேலும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார், ஐரோப்பாவின் கால்பந்து கழகங்களைக் கைப்பற்ற முயற்சிப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே இதுதான் இப்போது நிகழும் புதிய நிலைமையாகும்.

இன்று நாம் ஆசியாவின் எல்லா இடங்களிலும் பயணிக்கிறோம். அந்த நிலையில் நாம் இந்து-பசுபிக் பகுதியை நிராகரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. இந்து சமுத்திரத்திற்கும் பசுபிக் சமுத்திரத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது.

இஸ்லாம் மத்தைப் பாருங்கள். அது மத்திய கிழக்கில் இருந்து வந்து இன்று பிலிப்பைன்ஸ் வரை பரவியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் நேபாளம், பூட்டான், இந்தியா, மற்றும் இலங்கை ஆகிய நான்கு நாடுகள் மாத்திரமே இஸ்லாம் அல்லாத நாடுகளாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இலங்கையில் தேரவாத பௌத்தத்தை கவனித்தால், அது மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, தென் வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவியது.

மேலும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பட்டுப்பாதையில் பெரும் தொடர்புகள் உள்ளன. இந்தியா புத்த மதத்தை நாடு முழுவதும் பரப்பியது. சீனா இந்தப் பக்கம் வந்தது. எனவே, இந்த எல்லா விடயங்களிலும் ஒரு தொடர்பு உள்ளது.

இலங்கையில் உள்ள நாம் இந்து-பசுபிக் பிராந்தியத்தை ஆசியானின் பார்வையின்படி இரண்டு வெவ்வேறு சமுத்திரங்களாக அங்கீகரிக்கிறோம்.

அது ஒரு தனி சமுத்திரம் என்று ராம் குறிப்பிட்டார். இது ஒரு தனித்துவமான சமுத்திரமாகும்.

உலகளாவிய புவிசார் அரசியலில் நாம் எடுக்கும் நிலைப்பாடு நமது போக்கைத் தீர்மானிக்கும். ஆனால் இந்து சமுத்திரத்தில் கடல்சார் சுதந்திரம் மற்றும் கடலுக்கடியில் அமைக்கப்படும் கேபிள்களின் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும். அதனால்தான் நாம் இப்போதே முன்னேற முயற்சி எடுக்க வேண்டும்.

புதிதாக உருவாகும் ஒழுங்கு என்ன? கடந்த வாரம் நான் ஓய்வாக இருக்கும்போது இந்தப் புதிய வளர்ந்து வரும் ஒழுங்கைப் பற்றிக் கூற சில விடயங்களைக் குறித்துக் கொண்டேன். ஆனால் நேற்று நான் அதைக் கிழித்துவிட்டேன். இந்த இடைவெளிக்குள் என்ன நடந்தது என்று நான் கூற வேண்டியதில்லை. ஆனால் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இப்போது என்ன நடக்கப் போகிறது என்பதில் இது தாக்கம் செலுத்துகின்றது.

அரசியல் அந்த இடத்திற்கு வந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். இஸ்ரேல் ஏற்கனவே ஒரு ஐக்கிய அரசாங்கத்தை அமைத்துள்ளது. ஹமாஸை அழிப்பது ஒரு விடயம்.  கு அதற்கு எதிராக அவர்கள் இராணுவ நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் காசா பகுதி அழிக்கப்பட்டால் என்ன பதில் கிடைக்கும்? 24 மணி நேரத்தில் முழுமையாக நிலை மாறிவிடும்.

இங்கு அரசாங்கங்களால் கட்டுப்படுத்த முடியுமான எதுவும் இல்லை. இங்கிருந்து இந்தோனேஷியா வரை அல்லது வேறு இடங்களில், அரசாங்கங்கள் நிலைமையினைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இழந்து வருகின்றன. இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றாலும் அதைப் பற்றி நான் எதுவும் கூறமாட்டேன். ஆனால் நாம் என்ன செய்ய முடியும், இஸ்ரேலில் ஜக்கிய அரசாங்கம் உள்ளது,  காஸாவை நோக்கினால், மத்திய கிழக்கு முழுவதும் தீப்பிடித்துவிடும் என்பதால், இங்குள்ள நம் அனைவரையும் இது பாதிக்கிறது.

ஒரு எல்லையில் துருக்கி வரையிலும், மறுமுனையிலிருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் சின்ஜியாங் உட்பட மத்திய ஆசியாவையும் இது பாதிக்கிறது.

இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன் என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கலாநிதி ராம் மகாதேவ, தொற்றுநோய்க்குப் பிறகு, உலகில் ஒரு புதிய முறைமையொன்று  வடிவம் பெறுகிறது. இது பலமுனை மாத்திரமல்ல, எதிர் துருவங்கள் ஆகவும் இருக்கும். இதன் மூலம் நான் குறிப்பிடுவது தொழில்நுட்ப ஜாம்பவான்கள், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகளாவிய அரச சாரா அமைப்புகள், நாடுகடந்த பயங்கரவாத குழுக்கள், அடிப்படைவாத ஆன்மீக மற்றும் மத இயக்கங்கள் போன்ற அரச சாரா செயற்பாட்டாளர்கள், இவை அனைத்தும் மக்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

நண்பர்களே, மாற்றங்கள் எப்போதும் அமைதியாக இருப்பதில்லை. கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் நாம் காணும் போர்கள் மற்றும் வன்முறைகளும் அவற்றில் அடங்கும். இஸ்ரேலில் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளாலும், அந்த பிராந்தியங்களில் நடந்த போர்களாலும் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, இந்து சமுத்திர பிராந்திய எல்லை நாடுகள் ஒன்றியத்தின் அமைச்சர்கள் குழுவின் 23 ஆவது கூட்டத்தை இலங்கை நேற்று நடத்தியது மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த முக்கியமான பிராந்திய சங்கத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.

கௌரவ ஜனாதிபதி அவர்களே, நான் உங்களை வாழ்த்துகிறேன். தற்செயலாக, இந்த சங்கத்தின் உப தலைவர் பதவியையும் இந்தியா ஏற்றுக்கொண்டது.

பிராந்தியத்தின் நிலைபேறான அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், வளர்ந்து வரும் உலக ஒழுங்கில் செல்ல உதவுவதற்கும் ஒரு தளமாக இந்து சமுத்திர எல்லை நாடுகள் ஒன்றியத்தை உருவாக்க எங்கள் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தப் பிராந்தியம், அனைவரினதும் செயற்பாடுகளுக்கும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான வழிகாட்டும் சுதந்திரம், வெளிப்படையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பிராந்தியமாகக் கட்டியெழுப்ப நாம் அரப்பணிக்க வேண்டும். மேலும் கடல் எல்லைகளை கடற்கொள்ளை, அதிகப்படியான சுரண்டல் மற்றும் பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்த இடமளிக்கக் கூடாது.

நண்பர்களே, இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்திற்கு 25 ஆண்டுகள் ஆகிறது. என்னைப் பொறுத்தவரை இது வரை பயணித்த பாதையில் அது பல மைல்கற்களைக் கடந்திருக்கிறது. ஆனால் இந்து-பசுபிக் என்ற புதிய பெயரில் அறிமுகமாதல் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததுடன், அது விரைவில் உலகளாவிய கவனத்தையும்  ஈர்ப்பையும் பெற்றது.

25 வருடங்களில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்திற்கான இந்து சமுத்திர மூலோபாயத் திட்டத்தை எந்த நாடும் வெளியிடவில்லை.எவ்வாறு இருந்தாலும்,  தற்போது, கனடா முதல் தென் கொரியா வரையிலான பல நாடுகள் இந்து-பசுபிக் வியூகம் என்று அவர்கள் அழைப்பவற்றை வெளியிட்டுள்ளன. இந்து-பசுபிக் பிராந்தியமான இந்து சமுத்திர எல்லை நாடுகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான அதிகார வழித்தடங்களாக உருவெடுத்துள்ளன என்பதை மறுக்க முடியாது என்றார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தென் மாகாண ஆளுநர் விலி கமகே, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல்  குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2023-10-12_at_18.13.49_22

WhatsApp_Image_2023-10-12_at_18.13.48_ca

WhatsApp_Image_2023-10-12_at_18.13.34_09

WhatsApp_Image_2023-10-12_at_18.13.48_12

WhatsApp_Image_2023-10-12_at_18.13.27_66

WhatsApp_Image_2023-10-12_at_18.13.27_8b

https://www.virakesari.lk/article/166737

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.