Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெயராஜ் பென்னிக்ஸ்
படக்குறிப்பு,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ்.

15 நிமிடங்களுக்கு முன்னர்

‘பாலு சத்தம் கேட்கவில்லை, ஏன் சும்மா நிற்கிறீர்கள்’ என சாத்தான்குளம் காவல் நிலையத்தின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் சொல்ல, ‘நீ செத்தாலும் பரவாயில்லை. என் சொத்தை வித்தாவது வெளியில் வந்துவிடுவேன்’ எனக் கூறிக்கொண்டே அந்தக் காவல்நிலையத்தின் முன்னாள் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அடித்தார்" என்பது நீதிமன்றத்தில் சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலம்.

இந்தக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உட்பட ஒன்பது காவலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணைக் காவலில் மரணமடைந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகின்றது.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வழக்கை முதலில் விசாரித்த அப்போதைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், கடந்த 25 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார்.

அவர் முதல் நாள் சாட்சியம் அளித்தபோது, சம்பவம் நடந்த ஜூன் 19 மற்றும் 20 ஆம் தேதி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் என்ன நடந்தது என்று தன் விசாரணையின் மூலம் அறிந்துகொண்டதை சாட்சியமாக அளித்தார்.

 

"ரத்தம் வடியவடிய அடித்த காவல்துறை"

விசாரணை
படக்குறிப்பு,

அப்போது, ஏற்கனவே ரத்தக்கறைகள் மற்றும் முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்ட, பாரதிதாசன், காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரது லத்திகளையும் கைப்பற்றியுள்ளார்.

தந்தை மகன் மரணத்திற்கு பிறகு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டபோது காவல்நிலையத்தில் இருந்த இரண்டு பெண் காவலர்கள், நீதித்துறை நடுவர் பாரதிதசானிடம் ஜூன் 19 தேதி இரவு முழுவதும் என்ன நடந்தது என்பதை கூறியுள்ளனர்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் பாரதிதாசன் அளித்த சாட்சியில்,“அவர்(பெண் காவலர்) தனது வாக்குமூலத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இருவரையும் போலீசார் காவல்நிலைய மேஜையின் மீது படுக்க வைத்து ஒரு இரவு முழுவதும் லத்தியால் அடித்து இருவருக்கும் ரத்தக்காயம் ஏற்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கறைகளில் பெரும்பாலாவனை ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டதாகவும், லத்தி மற்றும் அந்த மேஜையினை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.” என்றார்.

அப்போது, ஏற்கனவே ரத்தக்கறைகள் மற்றும் முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்ட பாரதிதாசன், காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரது லத்திகளையும் கைப்பற்றியுள்ளார்.

“விசாரணையின் போது, காவலர் சாமதுரையிடம் அவரது லத்தியை கேட்டபோது, அவர் ஓடிச் சென்று காவல்நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த காரின் மீது ஏறி குதித்து இருட்டில் மறைந்துவிட்டார்,” என நீதிமன்றத்தில் வாக்குமூலமாக கொடுத்துள்ளார் பாரதிதாசன்.

காவல் நிலையத்தில் இருந்த பெரும்பாலான ரத்தக்கறைகள், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது ரத்தக்கறைதான் என்றும் பாரதிதாசன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“காவல் நிலையத்தில் காணப்பட்ட இரத்தக்கறைகளில் பெரும்பாலானவை சுவற்றின் கீழ்பகுதியில் காணப்பட்டது. அது காயமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் பிட்டத்தில் இருந்த காயத்தின் உயரத்திற்கு ஒத்திசைவதாக அமைந்திருந்தது, என்றார் பாரதிதாசன்.

 

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சிறையில் எப்படி இருந்தார்கள்?

சிறையில் விசாரணை
படக்குறிப்பு,

ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்

ஜூன் 19 ஆம் தேதி இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் ஜெயராஜூம், பென்னிக்சும் நடக்கக்கூட முடியாமல் சிரமப்பட்டதாகவும், அவர்களின் பிட்டத்தில் இருந்து தண்ணீர் போல வடிந்துகொண்டே இருந்ததாக, அவருடன் இருந்த சிறைவாசிகள் நீதிமன்ற நடுவர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

“சிறையில் இருந்தபோது, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சுக்கும், பின்பக்கம் நிற்காமல் நீர் வடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் லேசான ஈரம் இருந்தது, மூன்றாம் நாள் தான் அதிகமாக நீர் வடிந்தது.

சிறையில் அடைத்த முதல் இரண்டு நாட்கள் அவர்கள் கொஞ்சம் அருகில் இருந்த சுவரை பிடித்தும், கழிவறை சுவற்றை பிடித்தும் தான் நடக்க முடிந்தது.

அனைத்து கைதிகளையும் மூன்று வேளை சாப்பிடும்போது வரிசையாக அமரச் சொல்லி எண்ணும்போது கூட பென்னிக்சாலும், அவரது அப்பாவாலும் தரையில் அமர முடியாமல் அருகில் உள்ள சுவற்றை பிடித்தபடியே நிற்பார்கள்.

மூன்றாவது நாள் பென்னிக்சால் கொஞ்சம் கூட நடக்க முடியாமலும், நிற்க முடியாமலும், படுக்க முடியாமலும், சாப்பிடும்போது கூட, இரண்டு கைகளையும் தரையில் ஊற்றி, இரண்டு கால் முட்டிகளையும் தரையில் முட்டி போட்டக் கொண்டும், மிகவும் சிரமப்பட்டு கொஞ்சமாக சாப்பிட்டு, மிச்சம் வைத்துவிடுவார்,”

இவ்வாறு ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுடன் இருந்த சிறைவாசி ஒருவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

‘அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான்?’

ஜெயராஜ் பென்னிக்ஸ்
படக்குறிப்பு,

கிடைசியாக ஜெயராஜ் தனது குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளும்படி சொன்னதாகப் பகிர்ந்தார் பென்னிக்சின் நண்பர் சங்கரலிங்கம்.

ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இறந்து மூன்றாண்டுகளானாலும், தங்களால் இன்றளவும் அந்த சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை என்கிறார்கள் பென்னிக்சின் நண்பர்கள்.

“நாங்கள் இரண்டாம் வகுப்பிலிருந்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். வெவ்வேறு வேலைக்கு சென்றாலும், நாங்கள் தினமும் சந்தித்துக்கொள்வோம். இன்று அவன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இதே ஊரு தான், இதே தெரு தான். நாங்க சேர்ந்து சுத்துன இடத்திற்கு இப்போது சென்றாலும், எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அழுகை வரும். அந்த கடைத்தெருவை கடக்கும்போதெல்லாம் விவரிக்க முடியாத பதற்றமும், அழுத்தமும் ஏற்படுகிறது,”என்றார் சங்கரலிங்கம்.

கடைசியாக ஜெயராஜ் தனது குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும்படி சொன்னதாகப் பகிர்ந்தார் சங்கரலிங்கம்.

“அம்மாவை பத்திரமாக பார்த்துக்கோடா, இதுதான் பென்னிக்ஸ் ஜெயிலுக்கு செல்லும் முன் கடைசியாக என்னிடம் சொன்னது. அவனுக்கு அம்மா என்றால் உயிர்,” என்றார் சங்கரலிங்கம்.

பென்னிக்சின் மற்றொரு நண்பரான ராஜ்குமார் கூறுகையில், பென்னிக்ஸ் தான் செய்த குற்றம் என்ன எனத் தெரியாமல் மிகவும் வேதனையடைந்ததாகக் கூறினார்.

“அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான் என்று தான் அவனுக்கு உறுத்திக்கிட்டே இருந்தது. எங்களுக்கும் அந்த ஒரு கேள்விதான் இப்போதும் இருக்கிறது. அவன் இரவு காவல்நிலையம் சென்றதில் இருந்து விடியும்வரை நாங்கள் வெளியே தான் இருந்தோம்.

அவனுக்கு பதிலாக நாங்கள் நண்பர்கள் ஆளுக்கு இரண்டு அடி வாங்கியிருந்தால் கூட, இந்நேரம் அவன் உயிருடன் இருந்திருப்பான்,” என்றார் ராஜ்குமார்.

 

‘ஊருக்கு போகவே முடியலை; பயமாக இருக்கிறது’

ஜெயராஜ் பென்னிக்ஸ்
படக்குறிப்பு,

இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் நாங்கள் இத்தனை காலம்பட்ட கஷ்டங்களுக்க நீதி கிடைக்கிறதா இல்லையா எனத் தெரியும் என்றார் பென்னிக்சின் மைத்துனர் வினோத்.

அந்த சம்பவத்திற்கு பிறகு தங்களுடைய சொந்த ஊருக்கே செல்ல பிடிக்கவில்லை என்கிறார் பென்னிக்சின் மைத்துனரான வினோத்.

“நான் பென்னிக்சின் தங்கையை திருமணம் செய்துள்ளேன். எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடிதான். முன்பெல்லாம் எப்போது ஊருக்கு சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும், நல்ல நினைவுகள் இருக்கும். ஆனால், இப்போது ஊருக்கு செல்லும்போதெல்லாம், அந்த இருவரை இழந்தது மட்டும்தான் நினைவுக்கு வருகிறது,” என்றார்.

மேலும், பேசிய வினோத், “இப்போது வரை எந்த தரப்பில் இருந்தும் எந்த அழுத்தமும் வரவில்லை. ஆனால், இருந்தபோதும், அந்த சம்பவத்திற்கு பிறகு, எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியே தனியாக செல்வதற்கே பயப்படுகிறோம்.

மனைவியோ மற்ற உறவினர்களோ வெளியே சென்றால், அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் அவர்கள் இத்தனை காலம் பட்ட கஷ்டங்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா எனத் தெரியும் என்றார் வினோத்.

ஆனால், இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்திருந்தால், இன்னும் பலர் இதுபோல பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள் என்கிறார் மற்றொரு மைதுனரான பொன்சேகர்.

“இப்போதும் ஊருக்கு சென்றால், இதே நினைவுகள் தான் உள்ளது. ஆனால், இந்த வழக்கை மட்டும் எப்படியாவது நடத்திவிடுங்கள் என்று தான் ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். நாங்களும் நீதி கேட்காமல், சென்றிருந்தால், பல பேர் இன்னும் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என ஊர் மக்கள் எங்களிடத்தில் கூறுகிறார்கள்,” என்றார் பொன்சேகர்.

 

வழக்கின் நிலை என்ன?

முதலில் தமிழ் நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பின் சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட காவலர்களை கைது செய்தது. பின், இவ்வழக்கு மத்திய புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது.

“அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, தற்போது நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாட்சியம் அளித்து வருகிறார். அவருக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசாரும், தமிழ்நாடு போலீசாரும் சாட்சியம் அளிப்பார்கள். பின், வழக்கின் வாதம், பிரதிவாதங்கள் நடைபெறும்,” என்றார் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ்.

இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது, வழக்கு நடந்துகொண்டிருப்பதால் கருத்துக் கூற விரும்பவில்லை என்றனர்.

https://www.bbc.com/tamil/articles/clje3xll33zo

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் மரணத்தில் நீதி கிடைத்துவிட்டதா? - திருப்புவனத்தில் மீண்டும் ஒரு லாக் அப் மரணம் நிகழ்ந்தது ஏன்?

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு, லாக்-அப் மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெயராஜ் - பென்னிக்ஸ்

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"ஐந்து ஆண்டுகளாகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் நாங்கள் உயிருடன் இருக்கும் வரை வேதனையைத் தரும்."

இவை பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸின் வார்த்தைகள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்து ஐந்தாண்டுகளாகி விட்டன. ஆனாலும், ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்த இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை, அவர்களது குடும்பத்தினர் நீதிக்காக காத்துக் கிடக்கின்றனர்.

இதனிடையே தான், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"காவல்நிலைய மரணங்களில் விரைந்து நீதி கிடைத்தால் தானே, இனி இப்படி செய்யக் கூடாது என்ற பயம் காவல் துறையினருக்கு இருக்கும்." என்கிறார் பெர்சிஸ்.

ஜெயராஜ் - பென்னிக்ஸுக்கு என்ன நடந்தது?

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர், சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.

2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்ஸுக்கும் இடையே சிறு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, முதலில் ஜெயராஜை காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற நிலையில், பின்னாலேயே பென்னிக்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ பின்னர் வெளியானது.

இதையடுத்து, அன்றைய தினம் பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

பின்னர், காவல்நிலையத்தில் வைத்து ஜெயராஜ் -பென்னிக்ஸை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஜூன் 20 அன்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வெண்ணிலா, இருவரின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக சான்று அளித்ததைத் தொடர்ந்து, இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதையடுத்து, இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன்பின், அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு, ஜூன் 22 அன்று பென்னிக்ஸும் 23ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர். பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, அப்போதைய அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு, லாக்-அப் மரணங்கள்

பட மூலாதாரம்,TNPOLICE

படக்குறிப்பு,இடமிருந்து வலமாக ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்

"அப்பா (ஜெயராஜ்) மீதும், பென்னிக்ஸ் மீதும் எந்த குற்ற வழக்கும் இதற்கு முன்பு இருந்ததில்லை. கடைக்கு வந்து அப்பாவை ஏன் காவல்துறை அழைத்துச் சென்றனர் என்பது தெரியவில்லை, அப்பாவை அடித்துக் கீழே தள்ளியுள்ளனர். இதை பென்னிக்ஸ் கேள்வி கேட்டதற்கு, "போலீஸையே எதிர்த்துப் பேசுகிறாயா?" என கேட்டுதான் போலீஸார் தாக்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க போலீஸின் 'ஈகோ'வால் நிகழ்ந்தது" என்கிறார், பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸ்.

ஜெயராஜ் - பென்னிக்ஸ் மீது காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது.

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு, லாக்-அப் மரணங்கள்

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு, காவலர் தாமஸ் பிரான்சிஸ்

ஆரம்பத்தில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்ததாக, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியது. இதனிடையே, சம்பவம் நடந்து சில தினங்களிலேயே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது.

காவலர் ரேவதியின் சாட்சியம்

இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியம் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின்படி, "காவலர் முத்துராஜா, என் அப்பாவின் தொடை மீது ஏறி நின்றுள்ளார்." என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார் பெர்சிஸ்.

மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உள்ளார். இவர் தவிர, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு, லாக்-அப் மரணங்கள்

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த பால்துரை

தாமதம் ஏன்?

"பொதுமக்கள், இயக்கங்கள் என பலதரப்பினரும் இதற்கு எதிராக போராடியும் இன்னும் வழக்கில் விசாரணையே நிறைவு பெறவில்லை. இத்தனை ஆண்டுகளாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக இந்த வழக்குக்கு நீதிபதியே இல்லாமல் இருந்தது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நீதிபதி முத்துக்குமரன் நியமிக்கப்பட்டார். பொறுப்பு நீதிபதி இருக்கும்போது வாரத்தில் ஒருமுறைதான் வழக்கை விசாரிக்க முடியும்." என்கிறார் பெர்சிஸ்.

சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி மாற்றப்பட்டது குறித்த சர்ச்சைகள் முன்பு எழுந்துள்ளன. இந்த வழக்கை விசாரித்து வந்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 2022, ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது சர்ச்சையானது.

அந்த சமயத்தில் பிபிசி தமிழிடம் பேசிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை." என தெரிவித்திருந்தார். ஆனாலும், இதுபோன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை முடிவடையும் வரை நீதிபதிகளை மாற்றாமல் இருக்க வேண்டிய தேவை உள்ளது குறித்தும் அவ்வப்போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கு தாமதமானதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.

"குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் தனித்தனி வழக்கறிஞர்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு வழக்கறிஞரும் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்கின்றனர், அதனாலும் மிகுந்த காலதாமதம் ஆகிறது." என கூறுகிறார் பெர்சிஸ்.

மீளா துயரத்தில் குடும்பத்தினர்

நேரடி சாட்சியங்கள், காவல் நிலையத்துக்கு வெளியே இருந்தவர்களின் சாட்சியங்கள், மருத்துவமனை காணொளிகள், ஆடைகளில் ரத்தக் கறை உள்ளிட்ட ஆதாரங்கள் தெளிவாக உள்ளதாக குறிப்பிடுகிறார் பெர்சிஸ் . "மருத்துவமனை வாயிலில் இருவருடைய உடைகளிலும் ரத்தம் கசிந்திருந்ததை சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் காட்டுகின்றன."

"இருவருடைய மரணத்துக்குப் பிறகு வாழ்க்கையில் எந்த நல்ல காரியங்களுக்கும் மகிழ்ச்சியாக செல்ல முடியவில்லை, எங்கள் குடும்பத்தினர் அழாமல் உறங்கிய நாட்களே இல்லை. அவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறோம். நீதி வேண்டி ஐந்தாண்டு கால அலைச்சலும் இதனுடன் சேர்ந்திருக்கிறது." என வேதனைப்படுகிறார் பெர்சிஸ்.

பென்னிக்ஸுக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் ஒரு இளைய சகோதரியும் உள்ளனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு, லாக்-அப் மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பென்னிக்ஸின் நண்பரும் வழக்கறிஞருமான ராஜாராம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் இரவில் இருந்தபோது வெளியே தான் இருந்துள்ளார். இருவருடைய அலறல் சத்தமும் தனக்கு கேட்டதாக நினைவுகூர்கிறார் ராஜாராம்.

"அப்பாவை (ஜெயராஜ்) காவல்துறையினர் அழைத்துச் சென்றதால் தான் பென்னிக்ஸ் காவல் நிலையம் சென்றார். இருவருடைய அலறல் சத்தமும் கேட்டது. என் சாட்சியத்தை நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கிறேன். மருத்துவமனை வாயிலில் பென்னிக்ஸை சந்தித்தபோது, 'என்னை விரைவில் வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்' என தெரிவித்தார்" என கூறுகிறார் ராஜாராம்.

ஜாமீன் கேட்டு இழுத்தடிப்பு

ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர் சார்பாக இந்த வழக்கில் வாதாடிவரும் வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸிடம் பேசினோம்.

"இந்த வழக்கில் இதுவரை ஐந்து நீதிபதிகள் மாறியுள்ளனர், இது எதேச்சையாக நடக்கிறதா, அரசியல் அழுத்தமா என்பது தெரியவில்லை. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்றே குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு நினைக்கிறது. குறிப்பாக, ஏ1 ஸ்ரீதர் ஆரம்பத்தில் நானே எனக்காக வாதாடுகிறேன் என்றார். பின்னர், சட்ட உதவி மையத்திலிருந்து அவருக்கு வழக்கறிஞரை அமர்த்தினர். ஆனால், மீண்டும் எனக்கு நானே தான் வாதாடுவேன் என கூறினார் ஸ்ரீதர். அதன்பின், இன்னொரு வழக்கறிஞரை வைத்து நடத்த அனுமதியுங்கள் என மனு போட்டார், திரும்பவும் நானே வாதாடுகிறேன் என கூறுகிறார். வேண்டுமென்றே கேட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டு விசாரணையை இழுத்தடிக்கிறார்." என காலதாமதத்துக்கான காரணத்தை விளக்கினார் அவர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக ஜாமீன் கேட்டு மனு போடுவதன் மூலமும் வழக்கை இழுத்தடிப்பதாகக் கூறுகிறார் அவர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த வழக்குக்கு என ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, தினமும் விசாரித்திருந்தால் வழக்கு முடிவுக்கு வந்திருக்கும் என்கிறார் அவர்.

"ஆனால், சிபிஐ நடத்தும் வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது, விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் என, அரசு அறிக்கை வேண்டுமானால் வெளியிடலாம். அரசு இதில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என கூறுகிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு, லாக்-அப் மரணங்கள்

படக்குறிப்பு, ஜெயராஜின் மனைவி செல்வராணி இன்னும் அந்த கொடூர சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை

சிபிஐ தங்களால் முடிந்தளவுக்கு சாட்சிகளை விசாரித்திருக்கிறது எனக்கூறிய வழக்கறிஞர் ராஜீவ், மருத்துவமனைக்கு அவர்கள் இருவரையும் ரத்தம் சொட்ட அழைத்துச் சென்ற காட்சிகள், அவர்கள் அமரவைக்கப்பட்ட இருக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"காவல்நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் அவர்களுடையதுதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம், "விரைவான விசாரணை நடந்தால்தான் நீதி கிடைக்கும். மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 50 முறைக்கு மேல் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். இத்தனை பேரின் கடும் உழைப்புக்கு மத்தியிலும் இவ்வழக்கில் இன்னும் நீதி கிடைக்காதது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பெரியளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கிய சாட்சியான ரேவதி மன அழுத்தத்தில் உள்ளார், அவரால் இன்னும் சுதந்திரமாக வெளியே செல்லக்கூட முடியவில்லை." என்றார்.

இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்துக்கு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் வழக்கு விசாரணை முடிவடையவில்லை.

"உயர் நீதிமன்றம் தலையீடு செய்யும் வழக்கிலேயே இந்த நிலை என்றால், மற்ற வழக்குகளின் நிலை என்ன" என கேள்வி எழுப்புகிறார் ஆசீர்வாதம்.

"மாநில அரசின் வழக்கறிஞர் விரைவான நீதி வேண்டி தலையீடு செய்யலாம். தங்கள் அரசுக்கு அழுத்தம் இருக்கிறது என்றவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. காவல்துறை தவறு செய்தால் அதை மறைக்க வேண்டும் என்பதே எந்த அரசாக இருந்தாலும் நினைக்கின்றன." என்றார்.

தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

சமீபத்திய உதாரணமாக, காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் உள்ளது.

"காவல் நிலைய மரணங்களை இந்த அரசு மூடி மறைக்கவில்லை. அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கிறது. அதைத் தடுக்க வேண்டும் என உறுதியுடன் இருக்கிறது. எல்லா சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன்.

இவை அனைத்துக்கும் மத்தியில், விரைந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgjgg670jv0o

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அலறல் சத்தத்தை ரசித்தவர் அப்ரூவரா?" - ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை சந்தேகிக்கும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர்

சாத்தான்குளம், பென்னிக்ஸ், ஜெயராஜ், காவல்நிலைய மரணம், ஆய்வாளர் ஸ்ரீதர்

பட மூலாதாரம்,SPL ARRANGEMENT

படக்குறிப்பு, வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்ரீதர்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் முதல் நபராக (A1) குற்றம் சுமத்தப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாறி உண்மையைக் கூற விரும்புவதாக மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

"இது வழக்கை இழுத்தடிப்பதற்கான நாடகம்" என ஜெயராஜ் குடும்பத்தினர் கூறுகின்றனர். அப்ரூவர் ஆக மாறுவதால் என்ன நடக்கும்? தண்டனை கிடைப்பதில் இருந்து விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா?

2020 ஜூன் 19. கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் இது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர். பொதுமுடக்கம் காரணமாக இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்ஸ் மற்றும் போலீஸார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஜெயராஜ் - பென்னிக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தந்தை-மகன் என இருவர் மீதும் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்தனர். இதன்பிறகு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் உடல்நிலை நன்றாக இருப்பதாக, ஜூன் 20 அன்று மருத்துவ அலுவலர் சான்று அளித்ததால் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜூன் 22 அன்று பென்னிக்ஸும் ஜூன் 23 அன்று ஜெயராஜும் உயிரிழந்தனர்.

காவல் மரணத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட பத்து காவலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. (குற்றம் சுமத்தப்பட்டவர்களுள் ஒருவரான பால்துரை 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்)

ஜெயராஜ் - பென்னிக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெயராஜ் - பென்னிக்ஸ்

2,427 பக்க குற்றப்பத்திரிகை

வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், மத்திய புலனாய்வு துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. இதில் தொடர்புடையதாக கூறப்பட்ட காவலர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இரு கட்டங்களில் 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. கைதான நாளில் இருந்து காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உள்பட ஒன்பது பேரும் மதுரை மத்திய சிறையில் அடைபட்டுள்ளனர்.

தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில், வழக்கில் இருந்து தான் அப்ரூவராக மாற விரும்புவதாக காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு, ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கு, போலீஸ் காவல் மரணங்கள், அப்ரூவராக மாறிய ஸ்ரீதர்

பட மூலாதாரம்,TNPOLICE

படக்குறிப்பு, இடமிருந்து வலமாக முதலில் இருப்பவர் ஸ்ரீதர். அடுத்ததாக, சிறையில் உள்ள பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்

அந்த மனுவில், அரசுக்கும் காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாக இருக்க விரும்புவதால் அப்ரூவராக மாற விரும்புவதாக கூறியுள்ளார். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

'மனசாட்சிக்கு உட்பட்டு தந்தை-மகனை இழந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்' எனவும் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டுள்ளார். மனுவுக்கு பதில் அளிக்குமாறு சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பட்டியலில் முதல் நபராக ஸ்ரீதர் இருப்பதால், அவர் தாக்கல் செய்த மனு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஜெயராஜ் குடும்பத்தினர் கூறுவது என்ன?

"ஐந்தாண்டுகளாக எதுவும் பேசாமல் தற்போது அப்ரூவராக மாற உள்ளதாக ஸ்ரீதர் கூறுகிறார். இது வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம்" எனக் கூறுகிறார், ஜெயராஜின் மகள் பெர்சிஸ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குற்றம் சுமத்தப்பட்டவர்களில் முதல் நபராக ஸ்ரீதர் இருக்கிறார். என் அப்பா-தம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட அன்று காவல்நிலையத்தில் அவர் இருந்துள்ளார். பெண் காவலரின் சாட்சியத்தில், இவரது பங்கு குறித்தும் கூறியுள்ளார்" என்கிறார்.

"காவல்நிலையத்தில் இருந்தபோது, 'சத்தம் வரவில்லை, நன்றாக அடி' என உதவி ஆய்வாளரிடம் இவர் கூறியதாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு அவர் ரசித்ததாகவும் சாட்சி கூறியுள்ளார். அந்தவகையில், அப்ரூவர் என்ற பெயரில் தற்போது நாடகமாடுவதாகவே பார்க்கிறோம்" எனக் கூறுகிறார், பெர்சிஸ்.

வழக்கை இழுத்தடிக்கும் வேலைகளை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மேற்கொள்வதாகக் கூறும் பெர்சிஸ், "தனக்கென எந்த வழக்கறிஞரையும் ஸ்ரீதர் வைத்துக்கொள்ளவில்லை. தானே வாதாடுவதாகக் கூறி, குறுக்கு விசாரணை என்ற பெயரில் தலையிட்டு தாமதம் செய்கிறார்" என்கிறார்.

"தற்போது நடக்கும் வழக்கின் விசாரணை முறை திருப்தியளித்தாலும் இன்னும் வேகமாக நடக்க வேண்டும் என விரும்புகிறோம். அப்ரூவராக மாற உள்ளதாக ஸ்ரீதர் தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்" என்கிறார், பெர்சிஸ்.

"சட்டத்தின்படி இரண்டு வழிகள்"

"அப்ரூவர் ஆக மாற உள்ளதாகக் கூறும்போது முதல் நபராக (ஏ1) குற்றம் சுமத்தப்பட்டவருக்கு மன்னிப்பு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதா?" என, பெர்சிஸின் வழக்கறிஞர் ராஜிவ் ரூஃபஸிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"சட்டத்தின்படி இரண்டு வழிகள் உள்ளன. அவரது கோரிக்கையில் அர்த்தம் உள்ளதாக நீதிமன்றம் கருதினால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 305, 306 ஆகிய பிரிவுகளின்படி மன்னிப்பு கோருவதை (Tendor of burden) ஏற்றுக்கொள்ளும்.

அடுத்து, ஸ்ரீதரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, அப்ரூவராக வைத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என நீதிமன்றம் முடிவெடுக்கும். அதுதொடர்பாக நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.

"அதேநேரம், காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரின் கோரிக்கை ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனக் கூறும் ராஜிவ் ரூஃபஸ், "வழக்கில் முறையான சாட்சிகள் ஏராளமானோர் உள்ளனர். கண்ணால் கண்ட சாட்சிகளும் உள்ளனர்" என்கிறார்.

"சாட்சிகள் இல்லாத வழக்குகளில் இதுபோன்ற கோரிக்கைகள் தேவைப்படலாம். அந்தவகையில் ஸ்ரீதரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வது கடினம் என்றே பார்க்கிறேன்" எனவும் குறிப்பிட்டார்.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் வகையில் அப்ரூவர் ஆகும் முயற்சியை ஸ்ரீதர் தரப்பினர் கையில் எடுத்துள்ளதாக தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"அப்ரூவர் என்ற வாதம் எடுபடாது"

"தனக்குக் கீழ்நிலையில் உள்ள காவலர்கள் மட்டுமே தவறு செய்ததாகக் கூறி அப்ரூவர் ஆவதற்கு ஸ்ரீதர் முயற்சித்தாலும், நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்புகள் குறைவு" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

"ஆய்வாளரின் காவல் எல்லைக்குள் தவறு நடந்திருப்பதால் அவர் மட்டுமே பொறுப்பாவார். தனக்குத் தெரியாது என அவர் கூற முடியாது. நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டாலும் ஸ்ரீதர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் கருணாநிதி.

தொடர்ந்து பேசிய அவர், "குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களில் முதல் நபராக குறிப்பிடப்பட்டிருப்பதால், குற்றத்தில் அவர் பிரதான பங்கு வகித்ததாகவே பார்க்கப்படும். தன் மீது தவறு இல்லை என்பதை அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

சாத்தான்குளம் வழக்கு, ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கு, போலீஸ் காவல் மரணங்கள், அப்ரூவராக மாறிய ஸ்ரீதர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆய்வாளரின் காவல் எல்லைக்குள் தவறு நடந்திருப்பதால் அவர் மட்டுமே பொறுப்பாவார் - ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி

"ஸ்ரீதருக்கு எதிரான சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை இருந்தால் தான் வழக்கில் முதல் நபராக சேர்க்கப்படுவார். இந்த வழக்கில், 'ஆய்வாளர் கூறுவது தவறு. அவர் முன்னிலையில் தான் செய்தோம்' என மற்ற காவலர்கள் கூறினால், அப்ரூவர் என்ற வாதம் எடுபடாது" எனவும் அவர் தெரிவித்தார்.

"சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, புலனாய்வு அதிகாரி கூறியுள்ள விவரங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றைப் பார்த்து அப்ரூவராக ஏற்கலாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். அவ்வாறு கேட்பதாலேயே ஏற்றுக்கொண்டதாக பார்க்க முடியாது" எனவும் கருணாநிதி குறிப்பிட்டார்.

"சமீபத்தில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது இறந்துள்ளார். காவல் மரணங்களில் வழக்குகளை விரைந்து நடத்தும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்" என்கிறார்.

தூத்துக்குடியில் உப்பளத்தில் வேலை பார்த்து வந்து ஒருவர் காவல் மரணத்தில் இறந்து போன வழக்கில், 24 வருடங்களுக்கு பிறகு நீதி கிடைத்த சம்பவத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்.

24 வருடங்களுக்கு பிறகு தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் என்ற தொழிலாளியை 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி, தாளமுத்து நகர் காவல்நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர்.

மறுநாள் (18.9.1999) காவல்நிலைய லாக்கப்பில் அவர் உயிரிழந்தார். தனது கணவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக வருவாய் கோட்டாட்சியரிடம் அவரது மனைவி கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார்.

விசாரணையில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்பட 11 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளராக உள்ள ராமகிருஷ்ணன் உள்பட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

"24 வருடங்களாக மிகவும் சிரமப்பட்டுத் தான் கிருஷ்ணம்மாள் குடும்பத்தினர் வழக்கை நடத்தியுள்ளனர். விரைந்து நீதி கிடைக்கும்போது தான் தவறு செய்யும் காவலர்களுக்கு பாடமாக அமையும்" எனக் கூறுகிறார் பெர்சிஸ்.

"கடந்த ஐந்தாண்டுகளாக குடும்ப உறவுகளின் சுக, துக்க காரியங்களுக்குச் செல்ல முடியவில்லை. நாங்கள் ஏதோ குற்றம் செய்தது போல சிலர் பேசும்போது வேதனையாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"அப்பாவும் தம்பியும் இறந்தபிறகு அங்கு வசிப்பது பாதுகாப்பில்லை என்பதால் தென்காசிக்கு குடிபெயர்ந்துவிட்டோம். இன்று வரை எங்கள் குடும்பத்தினர் யாரும் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை" எனக் கூறுகிறார் பெர்சிஸ்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce8z76k5319o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.