Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் மற்றும் மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக கடந்த 3-3-1941-ல் பிறந்தாா். பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று பொருள். இவர், ஆசிரியராக பணிபுரிந்தவரும்கூட. ஆசிரியர் பணியில் இருந்தபோது உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.

1970-களின் தொடக்கம் முதல் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்த இவர், 1978-ல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன.

பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரை பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளார் ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிதத்து என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு: மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக மிகச் சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார். அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.

கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது. அவரது ஆன்மிக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது.

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு | Melmaruvathur Bangaru Adigalar dies at the age of 83 - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

பங்காரு அடிகளார் செல்வாக்கு மிக்க நபராக வளர்ந்தது எப்படி?

பங்காரு அடிகளார் யார், அவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?

பட மூலாதாரம்,ACMEC TRUST

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 20 அக்டோபர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்

தற்போது காலமாகியிருக்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் பீடாதிபதியான பங்காரு அடிகளாருக்கு அஞ்சலிகள் குவிகின்றன. பிரதமர் முதல் முதலமைச்சர் வரை இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் யார், ஏன் இவருக்கு இவ்வளவு செல்வாக்கு?

தலைநகர் சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 90 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்.

இந்தப் பீடத்தின் பீடாதிபதியான பங்காரு அடிகளார் வியாழக்கிழமையன்று காலமான நிலையில், செவ்வாடை அணிந்த பக்தர்களின் கூட்டம் அவரது உடலைப் பார்த்து இறுதி அஞ்சலி செலுத்த முட்டி மோதிக் கொண்டிருக்கிறது.

இப்படிக் கதறி அழும் பக்தர்கள் கூட்டத்தில் ஆண்களும் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதுதான் இந்த இடத்தை மற்ற ஆன்மீக தலங்களில் இருந்து வேறுபடுத்துகிறது. பிற ஆன்மீகத் தலங்களில் பெண்களுக்குத் தரப்படாத முக்கியத்துவம், இங்கே பெண்களுக்குத் தரப்பட்டது. அதைச் செய்த அடிகளாரின் மரணம், பக்தர்களை உலுக்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என அறிவித்திருக்கிறது. பிரதமர் முதல் முதலமைச்சர் வரை இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

பல தரப்பினராலும் மதிக்கப்பட்டும் வணங்கப்பட்டும் வந்த பங்காரு அடிகளார் யார்? இந்த பீடம் இவ்வளவு பெரியதானது எப்படி?

 

'அம்மா'வாக உருவெடுத்த பங்காரு அடிகளார்

பங்காரு அடிகளார் யார், அவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?

பட மூலாதாரம்,MELMARUVATHUR SIDDHAR PEEDAM/FB

இன்று மேல் மருவத்தூர் எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு சிறு நகரம். ஆனால், 1940களில் ஒரு குக்கிராமம். இந்த கிராமத்தில் வசித்த கோபால நாயகர் - மீனாட்சி அம்மாளின் இரண்டாவது குழந்தையாக 1941ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பிறந்தார் பங்காரு அடிகளார்.

இவருக்கு ஒரு அக்காவும் தம்பியும் தங்கையும் உண்டு. மூத்த சகோதரி சிறு வயதிலேயே பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

பங்காரு அடிகளார் சிறு வயதாக இருக்கும்போதே இவருக்கு அம்மனின் அருள் கிடைத்ததாக அவரது பெற்றோர் நம்பினர். அவ்வப்போது அவரது உடலில் சாமி வருவதும் நடந்தது. ஆனால், பள்ளிப் படிப்பை விடாமல் தொடர்ந்த அவர், ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார். அதற்குப் பிறகு, அச்சிரப்பாக்கம் அரப்பேடு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

கடந்த 1968ஆம் ஆண்டு செப்டம்பரில் உத்திரமேரூரைச் சேர்ந்த லக்ஷ்மியுடன் இவருக்குத் திருமணமானது. இவர்களுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் பிறந்தனர்.

பங்காரு அடிகளார் 1970வாக்கில் குறிசொல்ல ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் குறி கேட்க சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஆட்கள் வர ஆரம்பித்தனர். ஆதிபராசக்தியே தன் மீது இறங்கி, பக்தர்களுக்கான செய்தியைத் தெரிவிப்பதாகச் சொன்னார் அடிகளார். இந்தக் காலகட்டத்தில் பங்காரு அடிகளார் 'அம்மா' என்று அழைக்கப்பட ஆரம்பித்தார்.

இந்தப் பகுதியில் இருந்த வேப்ப மரம் ஒன்று 1966வாக்கில் காற்றில் சாய, அப்போது வெளிப்பட்ட லிங்கத்தை மக்கள் வணங்க ஆரம்பித்தனர். இதற்குப் பிறகு அந்த லிங்கத்திற்கு சிறிய அளவில் ஒரு கோவில் கட்டப்பட்டது. 1975இல் அங்கு ஆதிபராசக்தியின் சிலை நிறுவப்பட்டது. இப்படியாகத்தான் மிகப்பெரிய ஆன்மீக சாம்ராஜ்யத்தின் விதை ஊன்றப்பட்டது.

 

பெண்களுக்கு ஆன்மீக அதிகாரம்

பங்காரு அடிகளார் யார், அவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?

பட மூலாதாரம்,MELMARUVATHUR SIDDHAR PEEDAM/FB

இந்தக் கோவிலில் பூஜை செய்வதற்கென பூசாரிகளை அணுக வேண்டியதில்லை. பெண்கள் தாங்களே கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. பெண்கள் மாதவிலக்கான நாள்களில் வரக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் இந்தக் கோவிலில் கிடையாது.

மற்றொரு பக்கம் இந்த சித்தர் பீடத்தை பிரபலமாக்க தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வார வழிபாட்டு மன்றங்கள் துவக்கப்பட்டன. இப்போது சுமார் 7,000 வார வழிபாட்டு மன்றங்கள் இந்த பீடத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மேல்மருவத்தூர் கோவிலும் அங்குள்ள பிரத்யேகமான வழிபாட்டு முறையும் 1980களில் தமிழ்நாடெங்கும் பிரபலமாயின. ஆடி மாதத்திலும் தைப்பூசத்தை ஒட்டியும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்தபடி வேண்டிக்கொண்டு, பாத யாத்திரையாகவும் வாகனங்கள் மூலமும் சாரைசாரையாக மேல் மருவத்தூருக்கு வர ஆம்பித்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ஆதிபராசக்தியின் மகிமையைச் சொல்லும் விதமாக 'மேல்மருவத்தூர் அற்புதங்கள்' என்ற பெயரில் ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு, மேல்மருவத்தூருக்கு வரும் கூட்டம் இன்னும் அதிகரித்தது.

பக்தர்கள் குவியும்போது, அங்கு பணமும் குவிய ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளும் கொஞ்சம் கொஞ்சமாக வேர்விடத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. சித்தர் பீடத்தின் சார்பிலும் பல கல்லூரிகள் துவங்கப்பட ஆரம்பித்தன.

 
பங்காரு அடிகளார் யார், அவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?

பட மூலாதாரம்,MELMARUVATHUR SIDDHAR PEEDAM/FB

தற்போது இந்த சித்தர் பீடத்தின் சார்பில், மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, இயன்முறைக் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்தொழில்நுட்பப் பயிலகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, விவசாயக் கல்லூரி, பள்ளிக்கூடங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பாரம்பரியமாக பல சைவ மடங்களும் அத்வைத, ஸ்மார்த்த மடங்களும் வைணவ மடங்களும் இயங்கி வந்தாலும், அவையெல்லாம் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

மாறாக, ஆதிபராசக்தி சித்தர் பீடம், 'அம்மா' என்ற தனி நபரை முன்னிறுத்தி சக்தி வழிபாட்டில் ஈடுபட்டது. ஒரு வகையில் இந்த பீடத்தில் இருந்த ஆண் - பெண் பாகுபாடில்லாத நிலையும் யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம் என்ற ஜனநாயகத் தன்மையும் இந்த வழிபாட்டு முறை பெரிதாக வளரக் காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்.

"சாதிய அடக்குமுறை காரணமாகவோ அல்லது உள்ளூர் காரணங்களாலோ ஒரு தெய்வத்தை வழிபடத் தடை ஏற்படும்போது நாட்டார் தெய்வ வழிபாட்டு நெறி அதற்கு ஒரு மாற்று வழியை முன்னிறுத்துகிறது.

 
பங்காரு அடிகளார் யார், அவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?

பட மூலாதாரம்,MELMARUVATHUR SIDDHAR PEEDAM/FB

அதாவது எந்த தெய்வத்தின் கோவிலில் இருந்தும் யாராயினும் பிடி மண் எடுத்துக்கொண்டு சென்று தன்னிடத்தில் அந்த தெய்வத்திற்கு ஒரு கோவிலை உருவாக்கிக் கொள்ளலாம். இதை யாரும் எதிர்க்க இயலாது.

கேரளத்தில் நாராயண குரு ஈழவர்க்கான சிவன் கோவிலை உருவாக்கியபோது அவரை யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால், தமிழகத்தின் பண்பாட்டுச் சூழலில் அவ்வாறு யாரும் முன்வரவில்லை.

பின்னாட்களில் பங்காரு அடிகளார் அதை வெற்றிகரமாகச் செயல்டுத்தினார். அவரது வெற்றி தனி ஆய்வுக்குரியது," என பங்காரு அடிகளாரின் வழிபாட்டு முறை பற்றித் தனது பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும் கட்டுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.

பெண்களுக்கு அதிகாரம் அளித்ததே ஆதிபராசக்தி பீடத்தின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார் தொ. பரமசிவன். அதற்கு உதாரணமாக இந்து முன்னணியின் சார்பில் நடத்தப்படும் திருவிளக்குப் பூஜைக்கும் ஆதிபராசக்தி வழிபாட்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 
பங்காரு அடிகளார் யார், அவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?

பட மூலாதாரம்,MELMARUVATHUR SIDDHAR PEEDAM/FB

"திருவிளக்கு பூஜை இப்போது தளர் நிலையை எட்டிவிட்டது. ஏனென்றால் எந்தவிதமான அதிகாரத்தையும் அந்த பூஜை பெண்களுக்குத் தரவில்லை. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் பெண்களுக்கு ஆன்மீக அதிகாரத்தை அளித்தபோது பெருந்திரளான மக்கள் அங்கே திரண்டார்கள். எந்தத் தீட்டுக் கோட்பாட்டைக் கூறிப் பெண்களை ஒதுக்கி வைத்தார்களோ, அதை மேல் மருவத்தூர் உடைத்தபோது பெண்கள் அங்கே போனார்கள்.

ஒரு ஆதிபராசக்தி மன்றத்தில் இருபது பெண்கள் இருந்தார்கள் என்றால் அவர்கள் 20 பேருக்கும் பொறுப்புகள் தரப்படுகின்றன.

'வழிபாட்டு மன்றத்து மகளிர் அணிச் செயலராக நான் இருக்கிறேன்' என மகிழ்ச்சியோடு சொல்லக்கூடிய பெண்களைப் பார்த்திருக்கிறேன். அதாவது உறுப்பினர் என்பதைத் தாண்டி இருபது பேருக்கும் சிறு அளவிலான அதிகாரம் தரப்பட்டது," என்கிறார் தொ. பரமசிவன்.

பெண்களின் ஆன்மீக அதிகாரம் குறித்து யாரும் பேசாதபோது, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம், அதை அளித்ததாகச் சொல்கிறார் அவர்.

"பெண்ணுரிமை பேசுகிற இயக்கங்கள் எதுவும் பெண்களின் ஆன்மீக அதிகாரம் பற்றிப் பேசுவதில்லை. தமிழ்நாட்டுப் பெண்ணிய இயக்கங்கள்கூட மேல் மருவத்தூர் பற்றி நல்ல அபிப்ராயத்தையோ, கெட்ட அபிப்ராயத்தையோ இதுவரை கூறவில்லை," என்கிறார் தொ. பரமசிவன்.

 

குவிய ஆரம்பித்த சொத்துகள், பிரச்னைகள், சர்ச்சைகள்

பங்காரு அடிகளார் யார், அவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?

பட மூலாதாரம்,MELMARUVATHUR SIDDHAR PEEDAM/FB

ஆனால், 2010க்குப் பிறகு மெல்ல மெல்ல ஆதிபராசக்தி பீடத்தின் பிரபலம் குறைய ஆரம்பித்தது. மோசமான காரணங்களுக்காக அந்த அமைப்பு செய்தியில் அடிபடத் தொடங்கியது.

இவரது நிறுவனங்களில் 2010இல் வருமான வரிச் சோதனைகள் நடந்திருக்கின்றன. ஆதிபராசக்தி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடுகள் இருந்ததாக சி.பி.ஐ. அதே ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது.

கடந்த 2012ஆம் ஆண்டில் போதுமான வசதிகள் இல்லாத தங்களது பல் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியைப் பெற இந்திய பல் மருத்துவக் கழக உறுப்பினர் முருகேசனுக்கு ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுக்க முயன்றபோது, முருகேசனையும் கல்லூரியைச் சார்ந்த பலரையும் சி.பி.ஐ. கைது செய்தது. பங்காரு அடிகளாரின் மருமகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது.

 
பங்காரு அடிகளார் யார், அவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?

பட மூலாதாரம்,MELMARUVATHUR SIDDHAR PEEDAM/FB

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிகக் கட்டடங்கள், வாகன நிறுத்துமிடம், சித்தர் பீடத்தின் சில பகுதிகள் என எல்லாமே அரசு புறம்போக்கு நிலங்களிலும் நீர்நிலைகளிலும் கட்டப்பட்டிருப்பதால் அவற்றை அகற்ற வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை இடித்து அகற்ற உத்தரவிட்டது.

இந்த வழக்கைத் தொடர்ந்த ராஜா என்ற நபரை ஆதிபராசக்தி பீடத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதாக புகார்களும் எழுந்தன.

கடந்த 2018ஆம் ஆண்டில் பங்காரு அடிகளாரின் மகனான செந்தில்குமார், தங்களது கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர், கல்லூரியில் உள்ள வசதிக் குறைவுகள் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் அவரைத் தாக்கியதில், அந்த மாணவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து செந்தில்குமார் மீது கொலை முயற்சி உள்படப் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரைத் தேட ஆரம்பித்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆதிபராசக்தி மன்றத்தின் பிரபலம் குறைய ஆரம்பித்தபோது, அதன் சொத்துடைமைதான் அதற்குக் காரணம் என்றார் தொ. பரமசிவன். "ஒரு அதிகாரத்தை உடைத்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் இன்னொரு அதிகாரத்தை உருவாக்கியது," என்றார் அவர்.

இப்போது பங்காரு அடிகளார் மறைந்திருக்கும் நிலையில், இந்த சித்தர் பீடம் எப்படி நிர்வகிக்கப்படும் என்பது குறித்தும் அதன் ஆன்மீக எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/cje9qxz4y4yo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.