Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1158416.jpg  
 

காதல் என்பது விடுவித்தல். தன் துணையின் தேர்வை நோக்கி அவரைச் செல்ல அனுமதித்தல். தீர்க்க முடியாத பிரச்சினைகளைச் சுமந்து பாரமாக வாழ்வதிலிருந்து மீள்தல் என்கிறது ‘காதல் - தி கோர்’.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மூலம் சம்பிரதாய சடங்குகளால் சிறகொடித்து கிச்சனுக்குள் சிதைக்கப்படும் பெண்களின் பெருந்துயரை விமர்சித்த இயக்குநர் ஜியோ பேபி, இம்முறை காதலுக்குள் இருக்கும் வரையறைகளை புதிய பரிமாணங்களில் அணுகும் படைப்பை கொண்டு வந்திருக்கிறார். கேரளத்தின் டீகோய் கிராமத்தில், நடுத்தர வயது தம்பதிகளான மேத்யூ தேவஸி (மம்முட்டி) ஓமணா (ஜோதிகா) மற்றும் மேத்யூவின் தந்தையும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிகளின் ஒரே மகளான ஃபெமி (அனகா மாயா ரவி) கல்லூரி படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். மேத்யூவின் வீட்டைப்போலவே குடும்பத்திலும் கனத்த மவுனம் நிரம்பிக் கிடக்கிறது.

இடதுசாரிக் கட்சியின் ஆதரவாளரான மேத்யூ, கிராம பஞ்சாயத்தில் உள்ள 3-வது வார்டின் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார். இத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும்போது, மேத்யூவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறார் ஓமணா. அவர் தாக்கல் செய்யும் மனுவில், மேத்யூ ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால் விவாகரத்து கோருவதாக குறிப்பிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறது. தேர்தல் நேரத்தில் எழும் இந்தக் குடும்ப பிரச்சினை, சமூகத்தில் தனக்கு ஏற்படபோகும் விளைவுகளின் பாதிப்புகள் குறித்த எண்ணம் மேத்யூவை கடுமையாக பாதிக்கிறது. இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றனரா, தன்பால் ஈர்ப்பாளரான மேத்யூஸ் தேர்தலில் வென்றாரா, இல்லையா எனபதே திரைக்கதை.

ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் ஸ்கரியாவின் எழுத்தை படமாக்கியிருக்கிறார் ஜியோபேபி. சென்சிட்டிவான இந்தப் பிரச்சினையின் கனம் உணர்ந்து, வசனங்களை சுருக்கி, வெறும் உணர்வுகளின் வழியே அணுகியிருப்பது முழுமையான சினிமா அனுபவம். எந்த பிரச்சார வசனங்களோ, தன்பால் ஈர்ப்பாளர்களை புகழ்ந்தோ, இகழந்தோ, ஹைப் ஏற்றி பாடம் எடுக்காமல் படமாக எடுத்திருப்பது பலம். முதல் பாதியில் தன்பால் ஈர்ப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமலேயே பார்வையாளர்களை புரிந்துகொள்ள வைத்தது, அதற்கு பின் வரும் காட்சிகளில் கதை போக்கிலேயே அதனை வெளிப்படுத்தியிருப்பது தேர்ந்த திரைமொழி.

தன்பாலின ஈர்ப்பாளர்களாக அடையாளப்படுத்தப்படும் இருவர், சேர்ந்து பேசிக்கொள்ளும் ஒரு வசனமோ, தருணமோ படத்தில் இருக்காது. ஆனால், அவர்களுக்குள்ளான அந்த உறவின் அடர்த்தி கச்சிதமாக கடத்தப்பட்டிருக்கும். அதுவும் இடைவேளையின்போது இருவரும் சந்தித்துக்கொண்டு பேசாமல் நகர்ந்துசெல்லும் காட்சியில் உணர்வுமொழியில் நம்முடன் உரையாடும்.

படத்தில் மற்றொரு சுவாரஸ்யமான இடம், அதன் கோர்ட் ரூம் டிராமா. சமூகத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் அந்தக் காட்சிகளில் அடர்த்தியான வசனங்கள் தேவையான அளவில் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, ஓமணாவிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர், ‘அவர் உங்களிடம் ஆக்ரோஷமாகவோ, வன்முறையுடனோ நடந்துகொண்டாரா?’ என கேட்கும்போது, குறுக்கிடும் எதிர்தரப்பு வழக்கறிஞர், “தன்பால் ஈர்ப்பாளர்கள் அன்பும், கருணையும் காட்டாத இரக்கமற்றவர்கள் என கருதுகிறீர்களா?” என கேட்பார். இப்படியாக பொதுப்புத்தி கேள்விகளுக்கான பதில்கள் உரையாடல்களாக வெளிப்படும்.

எல்லாவற்றையும் தாண்டி, காதல் என்பது சகித்துக்கொண்டு கஷ்டப்பட்டு வாழ்வதல்ல என்பதை படம் நிறுவும் இடம் முக்கியமானது. மம்மூட்டி - ஜோதிகா இடையே எந்த பிரச்சினையுமில்லை. சொல்லப்போனால் மம்மூட்டிக்கு ஜோதிகாவை பிரிய மனமில்லை. ஆனால், இங்கே பாதிக்கப்பட்டவரான ஓமணா (ஜோதிகா) கதாபாத்திரம் 20 ஆண்டுகளில் வெறும் 4 முறை மட்டுமே உறவில் இருந்த மேத்யூஸை பிரிய முடிவெடுத்து, “நான் என்னை மட்டும் மீட்டுக்கொள்ளவில்லை, உன்னையும் சேர்த்து தான் மீட்டெடுக்கிறேன்” என்று கூறுவதன் வழியே மம்மூட்டியை அவரது அடையாளத்துடன் அவருக்கு பிடித்தமானவருடன் வாழ வழி செய்கிறது.

உண்மையில் அந்த சுதந்திரமும் விடுபடுதலும்தான் காதல். கஷ்டப்பட்டு சகித்து வாழ்வதைக் காட்டிலும், மனமுவந்து விலகி பிடித்த வாழ்க்கையின் தேர்வு தான் ‘காதலின் மையம்’ என்கிறது படம். அதேபோல “கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும்” என பழமைவாத சொல்லாடல் மீது ஓங்கி அறைகிறது.

கவிதையைப்போல நகரும் இடைவேளையும், க்ளைமாக்ஸ் காட்சியும் சிறந்த காட்சியனுபவ ரசனை. சாலு கே.தாமஸின் ஸ்டாட்டிக் ஃப்ரேம்கள் பல கதைகளைச் சொல்கிறது. தொடக்கத்தில் வரும் சர்ச் காட்சியிலேயே தனித்தனியாக பிரிந்து செல்லும் மேத்யூஸ் - ஓமணா தம்பதி, அப்பாவை பற்றிக்கொண்டு மகன் அழும்போது வரும் வைடு ஆங்கிள், இறுதிக்காட்சியின் சர்ப்ரைஸ் என மனிதர்களுடன் மனிதர்களாகவே மாறி அருகில் நின்று கதை சொல்கிறது கேமரா.

சூப்பர் ஸ்டார் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரும் கனவு. நடிப்பதுடன் அதை தயாரித்தும் கனவுக்கு உயிர்கொடுத்திருக்கும் மம்மூட்டியின் முயற்சி பாராட்டத்தக்கது. தன்பாலின அடையாளத்துடன் நிகழ்த்தும் போராட்டம், விருப்பமான வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கும் தவிப்பு, கட்டாய திருமணத்தால் பெண்ணை வதைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் ‘கடவுளே’ என அழுவதாகட்டும், தந்தையை பற்றிக்கொண்டு கதறும்போதும் கலங்கடிக்கிறார் மம்மூட்டி. இருண்ட வாழ்க்கையிலிருந்து மீள வழி தேடும் பெண்ணாக இறுக்கமான முகபாவனையுடன் நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார் ஜோதிகா.

‘விவாகரத்தை வாபஸ் வாங்கிட்டா அது எனக்கு நானே செஞ்சுக்கிற அநீதி’ என தனக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ளும் தெளிவான கதாபாத்திர வடிவமைப்பிலும், அதே சமயம் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இடங்களிலும் கவர்கிறார். அதிகம் பேசாமலேயே தனது அப்பாவியான நடிப்பிலும், தயங்கி உணர்வுகளை வெளிப்படுத்தும் இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார் தங்கன் கதாபாத்திரத்தில் நடித்த ஜிசு சென்குப்தா.

வழக்கறிஞர்களாக வரும் சின்னு சாந்தினி, முத்துமணியும் சிறிது நேரம் வந்தாலும் சிறப்பான பங்களிப்பை செலுத்துகின்றனர். இறுதியில் வரும் பாடலில் பார்வையாளர்களுக்கு ஃபீல்குட் உணர்வை கொடுத்தனுப்பும் மாத்யூஸ் புலிக்கன், லேசான மழைத்தூரல் போல படம் முழுவதும் பின்னணி இசையில் இதம் சேர்ப்பது பலம்.

20 வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மணவிலக்கு கேட்பதற்கு சொல்லும் காரணத்தில் வலுவில்லை. மதங்களும், மக்களும் தன்பாலின ஈர்ப்பாளர்களை ஏற்றுக்கொண்டு ஆதரவளித்து வெற்றிப்பெறச்செய்வது யதார்த்ததில் எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் எழாமலில்லை. ஆங்காங்கே சின்ன சின்ன லாஜிக்குகள் இடித்தாலும், சொல்ல வந்ததை தேர்ந்த திரைமொழியில் பதியவைக்கிறது ‘காதல் - தி கோர்’.

 

காதல் - தி கோர் Review: மம்மூட்டி, ஜோதிகாவின் நேர்த்தியான பங்களிப்பில் ஓர் உணர்வுப் போராட்டம்! | Mammootty starrer Kaathal The Core movie review - hindutamil.in

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த படத்தை பார்த்தேன் ...மம்முட்டி,ஜோதிகா , மற்றும் படத்தில நடிச்ச எல்லோரும் நல்லாய் நடிச்ச்சிருக்கினம்...எனக்கு பிடித்திருக்குது   

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2023 at 16:12, பிழம்பு said:

நான் என்னை மட்டும் மீட்டுக்கொள்ளவில்லை, உன்னையும் சேர்த்து தான் மீட்டெடுக்கிறேன்

நானும் இந்தப்படத்தை பார்த்தேன். மேத்யூ, ஓமணா கதாபாத்திரங்களை நிஜவாழ்க்கையிலும் நான் சந்தித்திருக்கிறேன். நிஜவாழ்க்கையில் நான் பார்த்த மேத்யூ இப்பொழுது உயிருடன் இல்லை. ஓமணா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் வரும் ஓமணாவின் துணிவு நிஜவாழ்க்கையில் நான் பார்த்த ஓமணாவுக்கு கிடைக்கவில்லை. சமுதாயத்துக்கு பயந்து வாழ்ந்த அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கைதான் என் கண் முன்னே ஓடிக் கொண்டிருந்தது.  

நல்லதொரு படம்.

  • 2 weeks later...

அண்மையில் பார்த்த நல்ல படங்களில் ஒன்று. கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் முடிவில் நல்லதொரு சினிமாவாக பரிணமித்து முடியும்.

தமிழ் super stars எல்லாம் வன்முறையையும், கடும் ஹீரோயிசத்தையும் கையில் எடுத்து சமூகத்தை மேலும் சீரழிக்கும் போது மலையாள மூத்த super star ஒரு homosexual ஆணாக ஆக நடித்தது மட்டுமன்றி அப் படத்தை தானே தயாரித்தும் உள்ளார்.

On 6/1/2024 at 02:58, Kavi arunasalam said:

நானும் இந்தப்படத்தை பார்த்தேன். மேத்யூ, ஓமணா கதாபாத்திரங்களை நிஜவாழ்க்கையிலும் நான் சந்தித்திருக்கிறேன். நிஜவாழ்க்கையில் நான் பார்த்த மேத்யூ இப்பொழுது உயிருடன் இல்லை. ஓமணா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் வரும் ஓமணாவின் துணிவு நிஜவாழ்க்கையில் நான் பார்த்த ஓமணாவுக்கு கிடைக்கவில்லை. சமுதாயத்துக்கு பயந்து வாழ்ந்த அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கைதான் என் கண் முன்னே ஓடிக் கொண்டிருந்தது.  

நல்லதொரு படம்.

என் மாமா ஒருவரும் இப்படித்தான். அவருக்கு 3 பிள்ளைகளும் உள்ளனர். அவருக்கும் மாமிக்கும் இடையில் ஒரு போதுமே ஒத்துப் போகாமல் சண்டை நிகழ்ந்து கொண்டே இருக்கும். சிறுவர்களாக நாம் இருந்த போது அதன் காரணம் புரியவில்லை. தன் மூன்று பிள்ளைகளும் படித்து முடித்த பின் அவர் தனக்கான ஒரு ஆண் துணையுடன் தன் இறுதிக் காலத்தை கழித்தார். 

இது தொடர்பாக அவரது சகோதரி, அதாவது என் அம்மாவிடம் கேட்டபோது... "ஓம் அவன் அப்படித்தான் என்று எங்களுக்கு அப்பவே தெரியும்.... ஆனால் அவனை அவன் போக்கில் விட்டு இருந்தால் எங்கள் குடும்ப மானம் என்னாவது" என்று கேட்டார் என்னிடம்.

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் மேன்மையை சொல்லும் கவித்துவ சினிமா!

 

-சாவித்திரி கண்ணன் & பீட்டர் துரைராஜ்

 

Kaathal-The-Core.jpg

‘காதல் the core’ காதலின் உன்னதத்தை இப்படியும் சொல்லலாமோ..! ஒரு சண்டை சச்சரவு இல்லை! இருவரும் பரஸ்பர மரியாதையும், அன்பும் கொண்டுள்ளனர். எனில், இப்படிப்பட்ட தம்பதினர் ஏன் விவாகரத்து கோருகின்றனர்! பேசவியலாத விஷயத்தைக் கூட, சூட்சுமமாக காட்சி மொழியில் கடத்துவதே படத்தின் வெற்றி:

இயக்குனர் ஜோ பேபி இயக்கியுள்ள இந்த மலையாளப் படம் பேசாப் பொருளை நுட்பமாகப் பேசுகிறது! இயக்குனரின் நயத்தக்க நாகரீக அணுகுமுறையாலும், மம்மூட்டி, ஜோதிகாவின்  பண்பட்ட தேர்ந்த நடிப்பாலும், விவாதமாக வேண்டிய  ஒரு கதையை அனைவரும் ஏற்கும்படி படைத்துள்ளனர்.

மாத்யூவும், ஓமனாவும் ஞாயிற்றுக் கிழமை கோவிலில் வேண்டிக் கொள்வதில் கதை தொடங்குகிறது. மாத்யூ, கிறிஸ்தவக் குடும்பத்தைச் சார்ந்தவன். வசதி உள்ளவன். அப்போது நடைபெற உள்ள வார்டுக்கான இடைத் தேர்தலில் அவனை நிற்க வைக்க விரும்புகிறது சிவப்புக்கட்சி. நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேசுபவனை கட்சி பயன்படுத்திக் கொள்ள விரும்புவது இயல்புதானே ! சிவப்புக் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளராக மேத்யூ களம் இறங்குகிறான்.

கல்லூரியில் படிக்கும் பெண் வீட்டிற்கு வந்த அன்றே தந்தையிடம்  சொல்லாமல் மீண்டும் விடுதிக்கு செல்கிறாள். மகளுக்கும் தாய்க்கும் நெருக்கமான பிணைப்பு ஏனோ இல்லை. அந்த ஊரில் வாடகை டாக்சி  ஓட்டும் தங்கனை ஊர் மக்கள் கிண்டல் செய்கிறார்கள். இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பல சம்பவங்கள் முதல் பாதியில் வருகின்றன. வெகுநேரம் கடந்தும் கதை ஓட்டம்  நமக்குப் புரிவதில்லை.

கேரளாவின் இயற்கை எழில் சூழ்ந்த சிற்றூர் ஒன்றில் நடக்கும் கதையில் தென்படும் அத்தனை கதாபாத்திரங்களும் அவரவர்களின் இயல்பு மாறாமல் வாழ்ந்து செல்கின்றனர்.

F_YzTiXasAA6RD1.jpg

மம்மூட்டி மாத்யூவாக நடிக்கிறார் என்றால், அவருக்கு சமதையாக ஓமனாவாக ஜோதிகா நடிக்கிறார். இருவருக்கும் திருமணமாகி இருபது ஆண்டுகள் முடிந்து விட்டன. ஓமனா எப்போதோ போட்ட விவாகரத்து வழக்கு இப்போது விசாரணைக்கு வருகிறது. தேர்தல் நேரத்தில் வழக்கு விசாரணைக்கு  வருவதால் அவர்களின் அந்தரங்கம் பொது வெளிக்கு வருகிறது.

இப்போது அதிகாரத்தில் இருக்கும் மூவர்ண கட்சி முதலில்  வீடு வீடாகத் தனியாகவும், பிறகு பகிரங்கமாகவும் மாத்யூவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது. அவன் சொந்த வாழ்க்கைப் பற்றி எங்களுக்கென்ன என்று எதிர்க் கேள்வி கேட்கிறார் ஒரு வாக்காளர். இப்படித் தான் அரசியல் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக இயக்குநர் இந்த காட்சியை வடிவமைத்து இருக்கலாம். விவகாரத்து வழக்கு தொடுத்த மனைவியே – பொதுவெளியில் கணவனின் கெளரவத்தை காப்பாற்ற – அவனுக்காக வீடுவீடாக பிரச்சாரம் செய்வது அந்தப் பெண் கதாபாத்திரத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

401485463_908470090642993_32397020175486

தேர்தல் நேரம் என்பதால் இப்போது வழக்கை திரும்பப் பெற்று விடு என்று நிர்பந்திக்கப்படுவதை ஓமனா ஏற்க மறுக்கிறாள். அவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்கள். அதைச் சார்ந்த மதகுரு இருபது ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இப்படி ஒரு விவாகரத்து வழக்கு தேவையா என ஆலோசனை கூறுகிறார். தன் மகளைப் போல நேசிக்கும் மருமகளை வழக்கை திரும்பப் பெறும்படி மாமனார் கூறுகிறார். அவளது மகளின் திருமணம் என்னவாகும் என்பதை யோசிக்கும்படி கூறும் அவளது சகோதரன் கூறுகிறான்.

சகோதரன், தந்தை, உறவினர், மதம், அரசியல் கட்சி போன்றவைகள் எடுக்கும் நிலைபாடுகள் திருமணம் என்கிற நிறுவனத்தை எப்படி பாதிக்கின்றன என்று நாம் பொருள் கொள்ளலாம். அவள்படும் துயரம் வெளியில் சொல்ல முடியாதது! தனிநபர்களுக்கு யார் பொறுப்பு ! அப்படியானால் அவர்கள் எவ்வளவு பொறுப்போடு கருத்து சொல்ல வேண்டும்; நடந்துகொள்ள வேண்டும்.

தன்பாலின ஈர்ப்பு குறித்த படத்தில் நடிக்க மம்மூட்டியைப் போன்ற ஒரு மூத்த நடிகர் ஒத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமானது. அதுவும் குற்றவுணர்வுடனே வாழுகின்ற ஒரு கேரக்டர்! இயல்பான  நடிப்பால் மம்மூட்டி அசத்துகிறார். கண்ணியமும், கடமை உணர்வுமிக்க குடும்பத் தலைவியாக வரும் ஜோதிகா இறுதியில் மிகத் துணிச்சலாக முடிவெடுக்கும் அசாத்திய துணிச்சல் மிக்கவராக வெளிப்படுகிறார்.

மாத்யூ தேர்தலில் நிற்பதை, அதே வீட்டில் இருக்கும் தந்தைக்கு சொல்லவில்லை; மனைவி மூலமாக சொல்லச் சொல்கிறான்.  தந்தையும் மகனும்  ஒரு வார்த்தைகூட நேரடியாக பேசிக் கொள்வதில்லை. ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு இடையில் அப்படி என்ன மனஸ்தாபம் இருக்க முடியும் ..? என்றெல்லாம் நாம் குழம்பித் தவிக்கையில் அதற்கான விடையும் கடைசில் வருகிறது.

poster2111202305_52_46.jpg

“நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாலும், ‘ஒரு கல்யாணம் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என என்னை திருமண பந்தத்தில் இணைத்தீர்களே..பார்த்தீர்களா..?” என மம்முட்டி ஒரு காட்சியில் கதறி அழும் போது, தந்தையும் சேர்ந்து அழுகிறார்! ஆக, மகனின் பலவீனத்தை மறைத்து தந்தை அவனுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார். இது தன் பாலினத்தவர்களால் இயல்பான திருமண வாழ்க்கைக்குள் ஒரு போதும் வாழ இயலாது என்ற யதார்த்தத்தை பொட்டில் அடித்தது போல உணர்த்தும் காட்சியாகும். தன் பாலினத்தவர்களின் பெற்றோர்கள் பெற வேண்டிய பாடமாகவும் இந்த படத்தை கருதலாம்.

அரசியல் கட்சிகளுக்கு உள்ள பொறுப்பையும் இயக்குநர் கேள்விக்கு உட்படுத்துகிறார். பொதுவாழ்வோடு தொடர்பற்ற, தனிப்பட்ட வாழ்வை தேர்தலில் கேள்விக்கு உள்ளாக்கலாமா? மூவர்ண கட்சி கேள்வி கேட்டு தவறு செய்கிறது? சிவப்புக் கட்சியோ அதிகாரப்பூர்வமாக ஆதரவளிக்காமல் தவறு செய்கிறது. இப்படி நுட்பமான பல செய்திகள் வருகின்றன.

வழக்கு நடக்கும் நீதிமன்றத்திற்கு கணவன் மனைவி இருவரும் ஒரே காரில் பயணிக்கின்றனர். சாட்சி சொல்கையில் ஓமனாவின் கைப்பையை மாத்யூதான் வாங்கி வைத்துக்கொள்கிறான். விவாகரத்து என்பது ஏதோ பாவமானது என நாம் நினைக்க வேண்டியதில்லை. ஒருவரை ஒருவர்  வெறுக்காமல் வாழ்வதற்காக கூட விவாகரத்து நடக்கலாம்.

223171_thumb_665.jpg

அவர்களுக்கு இடையில் எத்தனை முறை உடலுறவு நடந்தது என யாருக்குத் தெரியும்? ஏன் தெரிய வேண்டும்.? நீதிபதி கேட்டதால் மட்டுமே அதையும் அவள் தன் வழக்கிற்காகக் கூறுகிறாள்! இதில் தான் அவள் தரப்பு நியாயம் துல்லியமாக வெளிப்படுகிறது. நேர்மையாக நடப்பதாக காட்டப்படும் மாத்யூ, தன் மனைவியிடம் நேர்மையாக இருக்கிறானா..? இப்படி இயக்குநர் பல அடுக்குகளில் கேள்வி எழுப்புகிறார்.

இவர்களுக்கு ஆதரவாக வாதிடும் இரண்டு பேரும் பெண்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆத்திரமூட்டாமல் வாதிடுகிறார்கள். ஒருவேளை இப்படித் தான் உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள் இணைந்து பேச வேண்டுமோ! இத்தகைய ஆரோக்கியமான காட்சிகள் வேறு படத்தில் வந்ததில்லை.

கிறிஸ்தவத் திருமணம் என்பது சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் வருவது ! அதன்படி விவாகரத்து கிடைப்பது எளிதல்ல. கிறிஸ்தவ தம்பதியினரை தேர்ந்தெடுத்தற்கு ஏதும் சிறப்பான காரணம் இருக்குமோ !  பிரைம் தளத்தில் ஓடும் இந்த இரண்டு மணிநேர படம் ‘கரணம் தப்பினால் மரணம்’  என்ற பழமொழிக்கு ஒப்ப சிக்கலான விவகாரத்தை மிக நேர்மையாக கையாள்கிறது. அதனால் மரணம் நிகழவில்லை.

இருவரும் பிரிவதற்கு முன்பான அந்த கடைசி இரவில் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி அழுகிறார்களே..! இந்த ஒரு காட்சி போதாதா.. இருவரது காதலின் மேன்மையை விளக்க!

பாலியல் காட்சிகள் ஏதுமின்றி, ஒரு ஆழமான கதையை சித்தரித்த இயக்குநரை பாராட்ட வேண்டும். குடும்ப பெண்ணின் வலியைக் கூறும் தி கிரேட் இந்தியன் கிச்சனை இயக்கிய ஜோ பேபிதான் பெண்ணுரிமையை உரக்க பேசும் இந்தப் படத்தையும் இயக்கி உள்ளார். ஆபாசமான வசனங்களும் இல்லை; காட்சிகளும் இல்லை.

படத்தின் முடிவு அனைவருக்கும் ஏற்ற வகையில் இசைவாக இருப்பதற்காக யாரையாவது ஒருவரை மரணிக்கக் கூட வைத்திருப்பார்கள் சராசரி இயக்குனர்கள்! ஆனால், அதிர்ச்சி தரக்கூடிய முடிவென்றாலும், இப்படிப்பட்டவர்கள் இந்த முடிவைத் தான் எடுக்க முடியும் என்பதை ஏற்க வைக்கிறார் இயக்குனர்.

இப்படிப்பட் படைப்புகள், நாம் பார்க்க மறுக்கும் வாழ்வின் இருட்டான பக்கங்களை நமக்கு பார்க்கவும், உணரவும் கற்றுக் கொடுக்கிறது ஒரு கலைப் படைப்பின் மேன்மை என்பதே மனித மனதை இன்னும் பண்படுத்துவதில் தானே அடங்கியிருக்கிறது.

திரை விமர்சனம்; சாவித்திரி கண்ணன் & பீட்டர் துரைராஜ்

 

https://aramonline.in/16413/kadhal-the-core-review/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.