Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாளை முன்வைத்துத் தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டியவை – நிலாந்தன்!.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

மாவீரர் நாளை முன்வைத்துத் தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டியவை – நிலாந்தன்!.

ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் மாவீரர் நாள் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒரு கருநிலை அரசு இருந்தது. கட்டுப்பாட்டு நிலம் இருந்தது. எனவே மாவீரர் நாள் ஓர் அரச நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டது. மாவீரர்களின் குடும்பத்தவர்களுக்கு அரச அனுசரணையும் அரச வசதிகளும் கிடைத்தன. துயிலுமில்லங்களை அக்கருநிலை அரசு புனிதமாக, ஒரு மரபாகப் பராமரித்தது.

ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் கடந்த 15 ஆண்டுகளாக நினைவு கூர்தலே ஒரு போராட்டமாக மாறியிருக்கிறது.

நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளது. அதைத் திருத்தி ஒரு புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் எத்தனிக்கின்றது. இப்படிப்பட்டதோர் சட்டச் சூழலில், சட்டரீதியாகத் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை நினைவு கூர்வது சட்டப்படி குற்றமாகும்.

அந்த அடிப்படையில்தான் போலீசார் கடந்த 15 ஆண்டுகளாக நீதிமன்றங்களை நாடி நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு எதிராக தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றங்கள் அவ்வாறு தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பது இல்லை. சிலசமயம் நிபந்தனைகளோடும் சில சமயம் நிபந்தனைகள் இன்றியும் நினைவு கூர அனுமதிக்கப்படுகின்றது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் நினைவு கூர்தலுக்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். மாவீரர் நாள் ஒப்பீட்டளவில் பரந்த அளவிலும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்படும். இம்முறையும் அப்படித்தான். வடக்கில் பெரும்பாலான நீதிமன்றங்களில் நினைவு கூர்தலுக்குச் சாதகமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. கிழக்கில், மட்டக்களப்பிலும் அப்படித்தான்.

அதாவது கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நினைவு நாளுக்குமாக தமிழ் மக்கள் வழக்காட வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. ஆனால் அது ஒரு சட்ட விவகாரம் மட்டுமல்ல. ஒரு சட்டப் போராட்டம் மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில், அது ஓர் அரசியல் போராட்டம். அது ஒரு அரசியல் விவகாரம். அதனை அரசியல்வாதிகள் அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.ஆனால் தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்படி ரிஸ்க் எடுத்துப் போராடவும்,சிறைகளை நிரப்புவதற்காகப் போராடவும் தயாராகக் காணப்படுகின்றார்கள்?
சட்டதரணிகள் அதிகம் செலுத்தும் தமிழ்த் தேசிய அரசியலில், அது பெருமளவுக்கு ஒரு சட்டப் போராட்டமாகத்தான் காணப்படுகின்றது. அதை ஓர் அரசியல் போராட்டமாக ; நினைவு கூர்வதற்கான கூட்டுரிமைக்கான, பண்பாட்டு உரிமைக்கான,ஒரு போராட்டமாக முன்னெடுப்பதற்கு தமிழ் கட்சிகளால் முடியவில்லை. நினைவு கூரும் உரிமைக்காக மட்டுமல்ல ஏனைய எல்லா விடயங்களுக்காகவும் பொருத்தமான விதங்களில் தொடர்ச்சியாகவும் பெருந்திரளாக மக்களைத் திரட்டியும் போராட முடியாத தமிழ் கட்சிகள், நினைவு கூர்தலை ஒரு போராட்டமாக மாற்றி விட்டன.

2009க்கு பின்னரான நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் நினைவு கூர்தல் ஒரு பிரிக்கப்படவியலாத பகுதி என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இறந்த காலத்தைத் தத்தெடுக்கும் அரசியல்வாதிகள், ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசுகளாகத் தங்களை காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள், அந்த ஆயுதப் போராட்டம் வெளிப்படுத்திய வீரத்தையும் தியாகத்தையும் பின் தொடரத் தயார் இல்லை.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பொறுப்பு அதிகம். அக்கட்சி தன்னை ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசு போல காட்டிக் கொள்கிறது. விட்டுக்கொடுப்பற்ற சமரசத்துக்கு இடமற்ற ஒரு தரப்பாகவும் தன்னை காட்டிக் கொள்கின்றது. அப்படியென்றால், ஆயுதப் போராட்டத்தில் வெளிப்பட்ட வீரத்தையும் தியாகத்தையும் அக்கட்சியானது அறவழிப் போராட்டத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

தையிட்டி விகாரைக்கு முன்பு ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் அக்கட்சி போராடி வருகிறது. திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அக்கட்சி வடக்கு கிழக்காக வாகன ஊர்தியைக் கொண்டு போன போது திருகோணமலையில் திட்டமிட்டு இறக்கப்பட்ட சிங்கள மக்கள் அந்த ஊர்தியைத் தாக்கினார்கள். இது விடயத்தில் ஏனைய கட்சிகளை விடவும் முன்னணி ஒப்பீட்டளவில் ரிஸ்க் எடுக்கிறது என்பது உண்மை. ஆனால் அது போதாது. ஏனைய கட்சிகளை போராட்டத்துக்கு விசுவாசம் அற்றவை என்றும், உண்மையாகப் போராடாதவை என்றும், வெளிநாடுகளின் கைக்கூலிகள் என்றும், அதனால் நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தகுதியற்றவை என்றும் விமர்சித்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தனக்கு அந்தத் தகுதி அதிகம் என்பதனை போராட்டக் களத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர நினைவு கூர்தல் களத்தில் அல்ல.

அதாவது ஆயுதப் போராட்டத்தின் நேரடி வாரிசுகளாக தங்களைக் கருதும் எந்த அரசியல்வாதியும் அந்த ஆயுதப் போராட்டம் வெளிப்படுத்திய வீரத்தினதும் தியாகத்தினதும் தொடர்ச்சியாகவும் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும்.ஆனால் அவ்வாறான வீரத்தையோ தியாகத்தையோ கடந்த 15 ஆண்டுகளிலும் எந்த அரசியல்வாதியிடமும் காண முடியவில்லை.

அதற்காக அவர்களை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லியோ இரத்தம் சிந்திப் போராடச் சொல்லியோ இக்கட்டுரை கேட்கவில்லை. மாறாக இப்போது இருக்கும் தமிழ்த் தேசிய அரசியலில் எங்கே அதியுச்ச தியாகமும் வீரமும் தேவைப்படுகின்றனவென்றால் அது தேசத் திரட்சியைப் பாதுகாப்பதில் தான். தமிழ் மக்களை ஒரு பெரிய மக்கள் கூட்டமாகக் கட்டியெழுப்புவதில்தான். அதற்குத்தான் அதிக புத்திசாலித்தனமும் தீர்க்கதரிசனமும் தேவைப்படுகின்றன. அதுதான் இறந்தவர்களின் ஆன்மாவைக் குளிரச் செய்யும். அதுதான் தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான வணக்கம். கடந்த 14 ஆண்டுகளாக தங்களுக்குள் தாங்களே உடைந்துடைந்து போகும் தமிழ்க்கட்சிகள் இறந்தவர்களுக்கு செய்யும் ஆகப்பெரிய மரியாதை அதுவாகத்தான் இருக்கும்.

2009க்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்டுவதில்தான் தங்கியிருக்கின்றது. தேசியவாத அரசியல் எனப்படுவது மிகப்பெரிய திரளாக மக்களைக் கூட்டிக் கட்டுவதுதான்.ஆனால் எந்த ஒரு கட்சியாலும் அவ்வாறு மக்களை பெருந்திரளாகக் கூட்டிக்கட்ட முடியவில்லை என்பதைத்தான் கடந்த 15 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.

2009இல் கூட்டமைப்பு இருந்தது. அதிலிருந்து முதலில் 2010ல் கஜேந்திரகுமார் வெளியேறினார். அவருக்கு பின் 2015ல் தமிழரசு கட்சிக்குள் இருந்து பேராசிரியர் சிற்றம்பலம்,சிவகரன்,அனந்தி,அருந்தவபாலன்,உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறினார்கள். அதன் பின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வெளியேறியது. அதன் பின் இடையிலே வந்த விக்னேஸ்வரன் இடையிலேயே வெளியேறினார். அதன்பின் தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒன்றாக நின்ற கட்சிகள் உடைந்து சிதறின. அதன் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் உடைவு ஏற்பட்டு மணிவண்ணன் வெளியேறினார். அதன் பின் கூட்டமைப்பில் இருந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறின. அதன்பின் பங்காளி கட்சிகளும் விக்னேஸ்வரனும் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கவிருத்த பின்னணியில், விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் சேர்ந்து அக்கூட்டை விட்டு வெளியேற்றினார்கள்.

இப்பொழுது உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி எழுந்திருக்கிறது. அடுத்த தலைவர் யார் என்பதைத் தெரிவதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் . இத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான மோதல் முகநூலில் ஒரு புதிய மோது களத்தைத் திறந்து விட்டிருக்கிறது. இரண்டு தலைவர்களுடைய விசுவாசிகள் மிகக் கேவலமாக ஒருவர் மற்றவரை வசை பாடுகிறார்கள். ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கப் பார்க்கின்றார்கள். இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரே கட்சிக்குள் ஒன்றாக இருந்தவர்கள்.

இதுதான் மணிவண்ணன் கட்சிக்குள் இருந்து பிரிந்த போதும் நடந்தது. அங்கேயும் முன்னாள் தோழர்கள் பின்னாள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். கட்சி ரகசியங்கள் வெளியரங்கிற்கு வந்து நாறின. முன்னணிக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை போலவே இப்பொழுது சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான மோதலானது முகநூலில் மற்றொரு அசிங்கமான மோதல் களத்தைத் திறந்து விட்டிருக்கிறது.

இப்படிப்பட்டதோர் அரசியற் சூழலில், சிதறிக்கொண்டு போகும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இறந்தவர்களுக்கும் தியாகிகளுக்கும் செய்யும் ஆகக்கூடிய மரியாதை எதுவென்று சொன்னால் ஒரு தேசமாக திரண்டு காட்டுவதுதான். செய்வார்களா?

https://athavannews.com/2023/1360742

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் 2023 – நிலாந்தன்.

November 26, 2023

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான பதினைந்தாவது மாவீரர் நாள் இது. கடந்த 15 ஆண்டுகளாக மாவீரர் நாள் போன்ற நினைவு நாட்களை ஒரு கட்டத்துக்கு மேல் பரவலாக மக்கள் மயப்படுத்துவதில் சட்டப் பிரச்சினைகள் இருந்தன. நீதிமன்றங்கள் நினைவு கூர்தலுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கும் போது, நினைவு கூர்தலை ஒப்பீட்டுளவில் மக்கள் மயப்படுத்த கூடியதாக இருந்தது. எனினும் கடந்த 15 ஆண்டுகளிலும் மக்கள் மத்தியில் இருந்து பயத்தை முழுமையாக அகற்ற முடியவில்லை. அது ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல. அரசியல் பிரச்சினையுந்தான். அரசியல் தலைமைத்துவப் பிரச்சினையுந்தான்.


விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட நினைவு நாட்களின்போது நீதிமன்றங்களின் முடிவுகளே பெருமளவுக்கு நினைவு கூர்தலைத் தீர்மானிக்கும் ஒரு நிலைமைதான் கடந்த 15 ஆண்டுகளாகக் காணப்படுகின்றது.

இம்முறை வடக்கிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நீதிமன்றங்கள் சாதகமாக முடிவெடுத்துள்ளன. இந்த விடயத்தில் சட்டவாளர்களாகக் காணப்படும் தமிழ் அரசியல்வாதிகள் ஒப்பீட்டளவில் நிரந்தரமான ஒரு சட்ட ஏற்பாட்டைக் குறித்துச் சிந்தித்திருக்கக்கூடிய ஒரு காலகட்டம் இருந்தது என்று ஒரு சட்டவாளர் சில ஆண்டுகளுக்கு முன் சுட்டிக்காட்டினார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான 30/1 தீர்மானத்தின்படி மக்களுக்கு நினைவு கூரும் உரிமை உண்டு. தனிப்பட்ட அல்லது பொது நினைவுச் சின்னங்களை உருவாக்கும் உரிமையும் உண்டு. நிலை மாறுகால நீதியின் நான்கு பெரும் தூண்களில் ஒன்று ஆகிய இழப்பீட்டு நீதியின் கீழ் அது குறித்து பேசப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க இழப்பீட்டு நிதிக்கான அலுவலகத்துக்குரிய சட்ட வரைவைக் கொண்டு வந்த பொழுது அதில் நினைவு கூர்தல் தொடர்பாக தமிழ் நோக்கு நிலையில் இருந்து சில ஏற்பாடுகளைத் தமிழ் அரசியல்வாதிகள் இணைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அவ்வாறு முன் யோசனையோடு செயற்பட்டு இருந்திருந்தால், இப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றம் ஏறும் நிலைமை ஒப்பீட்டளவில் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அதி உயர் சட்டமாகிய யாப்பில் இருப்பதையே அதாவது 13-வது திருத்தத்தையே முழுமையாக அமல்படுத்தாத ஓர் அரசியல் பாரம்பரியமுடைய நாட்டில், நினைவு கூர்தல் பொறுத்து உருவாக்கப்படும் சட்ட ஏற்பாடுகள் எந்தளவுக்கு மதிக்கப்படும் என்ற கேள்வியும் இங்கு உண்டு.

எதுவாயினும் கூட்டமைப்பு நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயற்பட்ட அக்காலகட்டத்தில்,தென்னிலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக உழைத்த அக்காலகட்டத்தில்,தமிழ் மக்களின் நினைவு கூரும் கூட்டுரிமை தொடர்பில் ஏன் முன்யோசனையோடு செயல்பட்டிருக்க வில்லை என்று மேற்படி சட்டவாளர் கேள்வி எழுப்பினார்.

அரசியல்வாதிகளாக உள்ள தமிழ்ச் சட்டவாளர்கள் இந்த விடயத்தில் மட்டுமல்ல நினைவு கூர்தல் சம்பந்தப்பட்ட வேறு ஒரு விடயத்திலும் பொருத்தமான,தாக்கமான விதங்களில் செயல்பட்டிருக்கவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அது என்னவேனில் படை முகாம்களாக மாற்றப்பட்டிருக்கும் துயிலுமில்லங்கள் பற்றிய விவகாரம் ஆகும்.

1996 இல் யாழ் குடாநாடு முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்,கடந்த 28 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு விடயம் இது. யாழ்.குடாநாட்டில் கோப்பாய், கொடிகாமம், வடமராட்சி எள்ளங்குளம் ஆகிய மூன்று துயிலுமில்லங்கள் படைத்தளங்களாக மாற்றப்பட்டன. அதுபோலவே 2009க்கு பின் வன்னியில், கிளிநொச்சியில் தேராவில் துயிலுமல்லத்திலும் முல்லைத்தீவில் ஆலங்குளம், முள்ளியவளை, அளம்பில் ஆகிய துயிலுமில்லங்களிலும் படைக்கட்டுமாணங்கள் உண்டு. மட்டக்களப்பில் தாண்டியடி துயிலுமில்லம், வவுனியாவில் ஈச்சங்குளம் துயிலுமில்லம் ஆகியவற்றில் படை முகாம்கள் உண்டு. மொத்தம் ஒன்பதுக்கும் குறையாத துயிலுமில்லங்களில் படைமுகாம்கங்கள் உண்டு.

போரில் வெற்றி கொள்ளப்பட்டவர்களின் புதை மேட்டை அவமதிப்பது என்பது நவீன அரசியலில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு நடைமுறை. மன்னர்களின் காலத்தில்கூட துட்டகெமுனு தோற்கடிக்கப்பட்ட எல்லாளனுக்கு அனுராதபுரத்தில் ஒரு நினைவுத் தூபியைக் கட்டினான். அதைக் கடந்து போகின்றவர்கள் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டான். மன்னர் காலத்தில் பேணப்பட்ட அந்த அரசியல் மாண்பைக்கூட நவீன காலத்தில் இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசியல் பேணவில்லை.

தோற்கடிக்கப்பட்டவர்களின் புதைகுழிகளின் மீது வெற்றி பெற்றவர்கள் தமது படை முகாம்களைகக் கட்டுவது என்பது எதிரியை இறந்த பின்னரும் தண்டிக்க விரும்பும் ஒரு கூட்டு மனோநிலையின் வெளிப்பாடுதான். இறந்த பின்னும் அவர்களை நிம்மதியாகத் துயில விடக்கூடாது, இறந்த பின்னும் அவர்களுடைய நெஞ்சை மிதித்து கொண்டு நடக்க வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்ச்சியை அது வெளிப்படுத்துகின்றது. போரில் உயிர்நீத்தவர்களின் மார்பின் மீது குந்தியிருப்பது என்பது போர் வெற்றியைக் கொண்டாடுவதில் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா வரையறைகளையும் அவமதிக்கும் ஒரு நடைமுறைதான்.

அண்மையில் ரணில் விக்கிரமசிங்க ஒரு பொது நினைவு சின்னத்தை உருவாக்குவதற்கான நிபுணர் குழு ஒன்றை உருவாக்கினார். அக்குழுவினர் திலீபனின் நினைவு நாட்களின்போது யாழ்.கச்சேரியில் ஒரு சந்திப்பை ஒழுங்கு படுத்தினார்கள். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இரண்டு சிங்கள நிபுணர்களும் அழகியல் துறை பேராசிரியர்கள் ஆகும். அவர்களிடம் இவ்வாறு துயிலுமில்லங்களில் படைத்தளங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வாறு இறந்தவர்களையும் அவமதிக்கும் ஓர் அரசியல் ராணுவச் சூழலில், எப்படி பொதுவான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கலாம் என்றும் அவர்களிடம் கேட்கப்பட்டது.

இந்த விடயத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒரு விவகாரமாக எழுப்பியிருக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக அதை அவர்கள் செய்திருக்கிறார்களா? குறிப்பாக நிலை மாறுகால நீதியின் பங்காளியாக கூட்டமைப்பு செயற்பட்ட காலகட்டங்களில் ஏன் அந்த விவகாரத்தை ஐநாவில் எழுப்பவில்லை? ஏனைய உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுப்பவில்லை? அண்மையில் சிறீதரன் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் பேசியிருக்கிறார். அந்த உரையில் இதுதொடர்பான புள்ளி விபரங்கள் உண்டு .

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களை தத்தெடுக்க முற்பட்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்த விடயத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டியிருக்கிறது? பெரும்பாலான கட்சிகள் இறந்த காலத்தைத் தத்தெடுக்க முயற்சிக்கின்றன. தமிழ் அரசியலில் பெரும்பாலானவர்கள் தங்களை இறந்த காலத்தின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாகக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள். துயிலுமில்லங்களை எப்படித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று சிந்திக்கிறார்கள். ஆனால் மேற்சொன்ன விடயத்தில் அவர்கள் பயன் பொருத்தமான விதங்களில் அக்கறை காட்டியிருக்கிறார்களா?

அண்மையில் விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தை விடுவிக்க கோரி ஒரு போராட்டம் இடம்பெற்றது. அத்துயிலுல்லத்தின் ஒரு பகுதி இப்பொழுதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதை விடுவிக்க வேண்டும் என்று போராடியது சரி. ஆனால் அந்தப் போராட்டத்தை மாவீரர் நாளுக்கு சில கிழமைகளுக்கு முன்னதாக முன்னெடுப்பது என்பது, வளமையான தமிழ் அரசியலின் மந்தத்தனத்தையே காட்டுகிறது.

இது துயிலுமில்லங்களை அல்லது நினைவுத் தூபிகளை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக சென்று துப்புரவாக்குவதற்கு நிகரானது. கடந்த 15ஆண்டுகளாக பெரும்பாலும் அதுதான் நடந்து வருகிறது. துயிலுமில்லங்களை நொவம்பர் மாதங்களில் மட்டும் துப்புரவாக்குவதும்,நொவம்பர் மாதங்களில் மட்டும் அவற்றைப் புனிதமான இடங்களாக உருவகிப்பதும் சரியா? புனிதமான நினைவிடங்கள் என்றால் அவை ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் அப்படித்தான் அவை பராமரிக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது எத்தனை துயிலுமில்லங்கள் அவ்வாறு தொடர்ச்சியாகப் பராமரிக்கப்படுகின்றன? அவ்வாறு பராமரிக்கத் தேவையான கட்டமைப்புக்கள், ஏற்பாடுகள் உண்டா? அப்படித்தான், மாவீரர்களின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், உடலுறுப்புக்களை இழந்த போராளிகள், யுத்த விதவைகள், யுத்த அனாதைகள் போன்றோரைத் தொடர்ச்சியாகப் பராமரிக்கும் கட்டமைப்புகள் எத்தனை உண்டு?

மாவீரர்களின் பெற்றோரை மாவீரர் மாதத்தில் மட்டும் அழைத்து அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்குவதும் உதவிப் பொதிகளை வழங்குவதும் போதாது. அவர்களுக்கு தொடர்ச்சியாக உதவி வழங்க வேண்டும். அல்லது அவர்கள் உழைத்து சம்பாதிக்க கூடிய விதத்தில் பொருத்தமான முதலீடுகள் செய்யப்பட வேண்டும். அப்படித்தான் மாவீரர்களின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற  போராளிகள், உடலுறுப்புக்களை இழந்த போராளிகள், யுத்த விதவைகள், யுத்த அனாதைகள்… போன்றோரின் விடயத்திலும். ஆனால் அவற்றுக்குரிய கட்டமைப்புகள் அதிகரித்த அளவில் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட கிழமையில் மட்டும் தியாகிகளையும் தியாகிகளின் குடும்பங்களையும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் கௌரவிப்பது அல்லது அவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு விதத்தில் அரசியல் சடங்குதான். அதை அதற்குரிய புனிதத்தோடு விசுவாசமாகச் செய்வது என்று சொன்னால், அதைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். புனிதம் என்பதே தொடர்ச்சிதான். அதைத் தொடர்ச்சியாகச் செய்வது என்று சொன்னால், அதற்கு வேண்டிய கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்களில் கோடிக்கணக்கான காசு புரள்கிறது. உதாரணமாக அண்மையில் சிட் சிறீராமின் இசை நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட தொகை மிகப்பெரியது. இருபது லட்ஷம் கனேடிய டொலர்கள். அதில் சிறு துளி போதும். மாவீரர்களின் குடும்பங்களையும் புனர்வாழ்வு பெற்ற போராளிகளையும் பராமரிப்பதற்கு. எனவே தமிழ் அரசியல்வாதிகள் காசு இல்லை என்ற ஒரு காரணத்தை கூற முடியாது. உரிய கட்டமைப்புகளை பொருத்தமான விதங்களில் உருவாக்கினால்,காசை வெளியில் இருந்து எடுக்கலாம். நினைவு நாட்களுக்கும், நினைவுகூரும் நிகழ்வுகளுக்கும், நினைவிடங்களுக்கும் உரிமை கோரும் அரசியல்வாதிகள், இந்த விடயத்தில் நினைவு கூர்தலின் புனிதத்தைத் தொடர்ச்சியைப் பேணத்தக்க விதத்தில் கட்டமைப்புகளை உருவாக்குவார்களா? கட்டமைப்புகளை கட்சிசாரா பொதுக் கட்டமைப்புகளாக உருவாக்கினால். அது மேலும் பொருத்தமாக இருக்கும்.

https://globaltamilnews.net/2023/197803/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.