Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேர்த்திக் கடன்  - எஸ்.அகஸ்தியர்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்த்திக் கடன்  - எஸ்.அகஸ்தியர்-

 

 

- எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அவரது நினைவாக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. இதனை அனுப்பியுதவிய அவரது புதல்வி நவஜோதி யோகரட்னம் அவர்களுக்கு நன்றி. - பதிவுகள்.காம் -

 

‘உவள் ஒரு சரியான திடுமலிக் குமரி, சோக்கான வெள்ளைப் பொட்டை. அறுவாள் நல்ல சட்டையாப் போட்டுக்கொண்டு ஒதுக்கமா நில்லாம, இந்த நடுச்சந்தியில் இளிச்சுப் பிடிச்சுக்கொண்டு என்ன கண்டறியாத விடுப்புப் பாக்குது....!’

‘போச்சுடா, ஆரோ அவசரமாக வாறான். வாறவனும் இளவட்டம் தான்....?’

‘உவள் ஒரு நாய்ப் பிறவி, சிரிச்சமணீயம் அவனைத் தேடியல்லோ போறாள்? படு தோறை....’

‘சனியன் இளிக்கிற விறுத்தத்தைப்பார். மூதேவி, போற வாறவங்களுக்கெல்லாம் வாயத் துறந்து காட்டுதே?’

மரியாம்பிள்ளை அண்ணர் மனுசனாய் நிற்கவில்லை, அவர் நெஞ்சு கெந்தகித்தது.

அப்போது.....

‘அய்யா துரோய், ஏதாச்சும் தாங்கையா’ என்ற குரல் கேட்கவே, அண்ணர் திரும்பிப் பார்த்தார்.

துரை அசட்டையாகச் சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துழாவி, சில சில்லரைகளை எடுத்து அவள் ஏந்திய குவளைக்குள் எறிந்து விட்டு நடந்தார்.

‘அச்சாத் தொரை, நீங்க நல்லாயிருக்கோணும் துரை’

‘சிச்சீ இவளின்ர தொழில் இதுதானா?’

இதுவரை தொண்டைக் குழியில் ஊனம் வழிய ‘அவவைப் பார்த்த மரியாம்பிள்ளை அண்ணை கண்ணில் இவ இப்படி ஏந்தி ‘வாங்கும்’ காட்சி மிளகாய்ப்பொடி தூவிற்று.

மரியாம்பிள்ளை அண்ணருக்கு இது முகத்தில் ‘பளார்’ அடி, ‘சடா’ ரென்று அங்கிருந்து விலகினார். இருப்பினும் அண்ணனுக்கு எந்த ஒரு வேலையும் நேர் சீராக ஓடவில்லை. அனலாக உந்திய அவர் மேனியில் இப்போது சோர்வு தட்டிற்று. அதனால் ‘ஹாவ்டே லீவ்’போட்டு விட்டு மத்தியானத்தோடு ‘போடிங்’கிற்குத் திருப்பினார்.

மரியாம்பிள்ளை அண்ணன் அசல் யாழ்ப்பாணி. வலு கடுவலான மத விஸ்வாசி. கொழும்பிலே துறைமுகக் கப்பல்களில் வேலை, சீவியம் ‘போடிங்’கில் தான். ஆள் தனிக்கட்டையல்ல, பெண் கொள்ளாத இளந்தாரியுமல்ல. கலியாணம் செய்து பதினைந்து பதினாறு வருஷம் அரை டசினுக்கு மேல் பெத்துப் பெருக்கி விட்டார். பெரிய குடும்பஸ்தர். பொடி பொட்டைகளாக மொத்தம் ஆறுக்கு அண்ணன் அப்பன். இந்த ஆறும் போக அவவுக்கு வயிறு அழித்தது’ மூன்று உருப்படியாகப் பார்த்தால் கணக்கு ஒன்பதாகிறது. அவவுமோ வருஷக் கொத்தி. இந்தக் கோசும் அவ பெறு மாதம். ‘ஏழு மாசத்தில் ஆறு கடக்கப்படாது’ என்று நாலு பத்துத் தெரிந்தவர்கள் எழுதியிருந்தார்கள். என்றாலும், அண்ணர் கடைசிவரை வைத்திருந்து விட்டுப் போன கிழமைதான் பெறுவுக்காக அவவை யாழ்ப்பாணத்தில் விட்டு வந்து ஆறியிருக்கிறார்.

வந்து கால் ஆறவில்லை, அதற்கிடையில் இந்தக் கூத்து. அது அந்தப் போடிங்கின் சாக்குக் கட்டுவால் வந்த சூடோ, அவரோடு இருந்த தங்கராசா மாஸ்டரின் பழக்க வழக்கத்தால் ஏற்பட்ட தோஷமோ சொல்ல முடியாது. தங்கராசா மாஸ்டர் பள்ளிக்கூடச் சட்டம்பியல்ல, அவருக்கு இவர் ‘மாஸ்டர்’ அவ்வளவுதான்.

மரியாம்பிள்ளை அண்ணன் மாசத்தில் முதல் வெள்ளிக்காரன். ஒரே கோயிலும் ஜெபமும் தான். ஆளும் தானும் தன் பாடுமாயிருப்பார். வலிய இழுத்துப் பேசினாலும் ஏனென்று வாய்விட்டுக் கேளார். சாரைப்; பாம்பு போல ஒருவித சோலி சுரட்டுக்குமே போகமாட்டார். ஒரு பரம சாது.

இப்பேர்ப்பட்ட மரியாம்பிள்ளை அண்ணன்தான் இப்போ போடிங்கிற்கு வந்து அமைதியாக இருக்க முடியாமல் அந்தரப்படுகிறார்.

‘அப்போதை அவளைக் காணேக்க பட்டப் பகலாப் போச்சு. அப்பமட்டும் எப்பன் மைம்மல் பட்டிருந்தால் ஆளை வடிவாய் அமத்தியிருக்கலாம். எண்டாலும், அந்தக் கொழும்பாளவைக்கு எந்த நேரமென்டிருக்கே?’ என்று ஒரு கணம் நினைவூறினார்.

மறு கணம் அவர் ஆசை முயல் பாய்ந்தது.

‘மருதானையிலிருந்து ‘வசு. எடுத்து, கோட்டைப் பொலிஸ்ரேசனுக்குப் பின்னால் றங்கி, ஆசுப்பத்திரி றோட் முச்சந்தியில் ஏறினா, அங்கினேக்க அவளைக் காணலாம் நிண்டாளெண்டா, வாச்சுப்போம்....’

உடனே வெளிக்கிட்டுப் போக ‘அவுக்’கென்று உன்னி எழுந்தார். நாரி இழுப்பு வந்து தடி முறிந்தமாதிரி ‘நொறுக்’கிட்டது. ‘கோதாரியில போன நாரிப்பிடிப்பு இன்னும் விட்டபாடில்லை’ என்று மனம் வெதும்ப வெளியில் வந்தார்.

அப்படிக் ‘குஷி’யாக வரும்போது சொல்லிவைத்தாற்போல அன்றைக்கென்று தான் யாழ்ப்பாணத்திலிருந்து ‘அவ’வுடைய கடிதமும் வந்தது.

அக்காவின் கடிதத்தைக்கண்ட போது அண்ணனின் இதயம் கலங்கிக் கூழ் முட்டையாகி விட்டது.

‘வயித்தில வாயில இருக்கிறவ, என்னபாடோ? தனது கட்டிய புருஷனுக்கென்று ஏதாவது விசேஷமாக எழுதியிருப்பா’

பிள்ளைப் பெறுவுக்கு முந்தியே லீவு போட்டுவிட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் வீட்டுக்குப் போய் வருவது அண்ணன் வழக்கம். அப்படித்தான் அவ எழுதியிருப்பா என்ற நினைப்பில் அதைப் பிரித்து வாசித்தார். அண்ணன் எதிர் பார்த்தபடி தான் அவவும் எழுதியிருந்தா.

அதிலே குருசு அடையாளம் உட்பட எழுதியிருந்த வெவ்வேறு தெய்வ வேண்டுதல்கள் போக, இஞ்ச ஆளணியில்லை ‘நாள்ச் சரக்கும்’ நேர காலத்தோட வேண்ட வேணும், ஆனமட்ட, முந்தின பிள்ளைப் பெத்துகளுக்கு வந்துபோன மாதிரி, இந்தக் கோசும் வாருங்கோ! என்று கண்டிருந்தது வாசகம்.

அவ அவரை நம்பித்தான் அப்படி எழுதினா. ஆனால், அண்ணன் இந்தக் கோசு குந்தகம் பண்ணி, ‘இப்ப லீவு கீவு எடுக்க ஏலாது. பிள்ளையை நல்ல சுகமாகப் பெற வேணுமெண்டு இஞ்ச கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலுக்கு நேந்து ஒரு கட்டு மெழுகுதிரி கொழுத்திறன். நீ ஒண்டுக்கும் யோசியாதை, அந்தோனியார் சுகம் தருவார். எல்லாத்துக்கும் பிறகு வாறன்’ என்று நாலு வரி எழுதி அனுப்பிவிட்டு, போகவேண்டிய ஸ்தலமான கொழும்புக் கோட்டைக்கு. ‘சடா’ரென்று கிளம்பினார்.

பொழுது மைமல் பட்டுப் பூமியும் கருகிக் கொண்டு வர, அண்ணனும் கோட்டைச் சந்திக்கு வந்து விட்டார். அவரது துரதிஷ்டம், சந்தியில் அவர் எதிர்பார்த்த அந்தப் பெட்டையைக் காணவில்லை.

அவர் முகம் தொட்டாற் சுருங்கிபோல் ‘சட்’டென்று சூம்பியது.

‘பொக்கட்’டுக்குள் போட்ட கைகள் தாமாகத் துழாவ நாலா பக்கங்களும் கண்களைச் சுற்றிக் கொண்டு பெரிய ஒரு ‘துரை’ போல, சாலை ஓரம் அங்குமிங்குமாகக் கால்களை எறிந்து மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.

அச்சா, அண்ணனுடைய ‘அது’ இரண்டு நிமிஷத்தில் அங்கே வந்து விட்டது.

அண்ணன் தலை கால் தெரியாமல் பதறினார்.

ஆசை, நாணம், பயம் ஆகிய உணர்ச்சிகளால் தாக்குண்டு, அவற்றைத் தன்னுள்ளே அடக்கி கனலாய் எரிந்து தீயும் உடற்கட்டை, கேவலம், ஒரு சாதாரண நாணத்தின் உள்ளடக்க நரம்புகளால் தாக்குப் பிடித்தபடி அவர் மறுபடியும் சுற்றிப் பார்த்தார்.

அறிந்த முகங்கள் அங்கே தென்படவில்லை.

இனி என்ன, யோகம்தான். யாரும் நின்றால் கூட இனங்கண்டு கொள்ள முடியாது.

நல்ல செக்கல் பொழுது.

கொட்டுக்குள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, அவராக வலிந்துகொண்ட தென்பும் உறுதியும் ஒருவாறு அவரை ஆட்கொண்டன.

அப்பவும் ஒரு கணம் அவர் யோசனை பயங்கரமாகத் திசை திரும்பியது.

‘கடையங்கள் ஆரெண்டாலும் இந்த நேரம் நிண்டு இதைக் கவனிச்சா....?’

கிலுக்கட்டியாக ஆடும் உடலையும், வெடவெடத்து உதறி எடுக்கும் நெஞ்சையும் அவருடைய ஒரு அற்ப ‘ஆசை’யானது உள்ளுர அவரை மாய்த்துக் கொண்டது.

அவ்வேளை யாராவது இனந்தெரியாமல் மெதுவாக வந்து ஒரு ‘டேய், போட்டால், ஆள் அப்படியே காலியாகி விடுவார். அப்படி அண்ணன் அங்கே அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்.

சற்றுக் கொஞ்ச நேரம் சுணங்கி, பின் பக்கமாகக் கழுத்தைத் திருகிப் பார்த்துவிட்டு, ‘அவுக்’கென்று ‘அவ’வுக்குக் கிட்டப் போய், ஏய்..... ஏய்.... இஞ்ச வா - இப்படி வா’ என்று நாக்குதறி அவர் வாய் அழைக்க, சரீரமோ மிருதங்க ஆவர்த்தனம் செய்து ஒரு ‘கிறுத்தா’ போட்டது.

‘ஐயா தொரை, ஏதாச்சும் தாங்க தொரை’ என்று வழக்கம் போல கேட்டுக் கையை நீட்டினாள் அவள்.

உடனே அண்ணன் பெரும் அந்தரக்காரரானார்.

அண்ணன் எடுத்துக்கொடுத்த ஐந்து ரூபாய் நோட்டையே அவ பவ்வியமாக வாங்கி, அதைச் சற்று உற்றுப்பார்த்து, பின் ஒரு சந்தேக வினா எழுப்பி, வியப்பில் மூழ்கிய முகத்தோடு மௌனமாகச் சாரை போல் திரும்பினா.

தொரை சல்லியைப் பார்க்காம தந்திட்டு முழுசிறாரோ? என்று நினைத்தவள், திரும்பி நின்று, நீங்க நல்லாயிருக்கோனு தொரை’ என்றாள்.

அண்ணன் நிலத்தில் நிற்கவில்லை, தேகம் பஞ்சடித்தது.

‘ஏய், இந்தா, ஏய் இஞ்ச வா’

‘சல்லியைத் திருப்பி வாங்கிறத்துக்கோ!’

தாமரை இலைமேல் குதித்த நீரோட்டத்தில் மனம் தவிக்க, வெள்ளைக் கடதாசியில் தெளித்த மையாக அவ முகம் கறுத்தது.

‘என்னது, என்னைக் கூப்பிட்டீங்களா?’

நுனி விரலின் விளிம்பு நகத்தை, நாணிய முக வாயில் கோணி வைத்துக் கடித்தபடி திரும்பி வந்து சிரித்துக் கொண்ட அவள், அவர் முன்னால் இடுப்புக் குத்தி, ஒரு சள்ளைத் தாக்கில் நின்றாள்.

அவள் பார்வையில் பெரும் பசி

‘உன்ர பேரென்ன?’

‘ம் பேரோ? ’

அவவுக்கு வெட்கக் களிப்பில் சாடையா முகம் சளித்தது. ஓட்டுக்குள்ளே வாங்கியிழுக்கும் நத்தையாக விழிகள் மேலிட, வார்த்தைகள் பிணமாகின . தலையைக் கவிழ்த்துக் கொண்டே, காற்பெரு விரலால் நிலத்தைச் சுரண்டிக் குழி பறித்த வண்ணம், ‘ஏன் தொரை பேர் கேக்கிறீங்க ‘ என்றா எடுப்பாக.

மரியாம்பிள்ளை அண்ணனுக்கு அப்போது ‘கிளக்’கிட்டு மின்னல் ஊசி ஊடுருவுவதாகப் பிரமை தட்டிற்று. ஆள், அந்தரமாகினார்.

‘வேணும், சும்மா கேட்டனான்’

‘என்னத்த வேணும்ங்கிறீங்க,’

அவ திமிறித் திமிறிச் சிரிக்கும்போது முகத்தில் மத்தாப்புப் பூக்கள் சொரிந்து கொண்டிருந்தன.

‘நீ எங்க இருக்கிறனி?’

‘அய்யய்ய, அவற்ர ஆசையைப் பாருங்களேன்’

அவ நினைவில் மிடுக்கு ஏறி, பரிகாசம் துள்ளியது.

‘ ஏன் தொரை, ஓங்களுக்கு ‘வேணும்டா பேசாம அப்படியே வர்றத்துக்கு அங்கால ஏன் ‘சும்மா’ என்னத்தையோ ஒப்பினைக்குக் கேக்கிறீங்க?’

அவர் நோக்கத்தை அவ அறிந்து விட்டா, விஷயம் பெரும் வெற்றி.

அண்ணர் பறக்கச் செட்டை கட்டினார்.

‘எங்க வாறது?’

தீவிர எடுபிடியில் குருக் குத்திய அவவின் கேள்வியில், அண்ணர் தீய்ந்து போய் நின்றார்.

‘அப்படீன்னா வாறீங்களோ?’

‘ஓம், வாறன்!’

‘அது சரி, எப்பன் நிலத்தில் நில்லுங்க’

‘எட பகுடி கூட விடுறாளே. இடம் கண்ட வேளை மடம் பிடுங்குற வேலை’

‘ ஹி....ஹி.....ஹி....’

பற்களெல்லாம் மல்லிகைப் பூக்களாகத் தெரிய, அண்ணன் வாய் ‘ஆ’ வென்று அகன்று இளித்தது.

அண்ணன் எதிர்பாராத ஒரு எரிசரப் பாணத்தைத் திடீரென்று தொடுத்தாள்.

‘தொரை, கலியாணம் செஞ்சனிங்களோ?’

‘ம்........’

‘என்ன தொரை, வாய்க்குள்ள முட்டையா?’

‘ஆங்’.....?’

‘கல்யாணம் செஞ்சனீங்களோ’ன்னு கேட்டேன்?’

‘.......இல்......லியோம்!’

அசல் துரோகம் தான். ஆனாலும், அண்ணன் இதிலே வலு துணிச்சல்காரன் என்பதை எப்படியோ பிரகடனமாக்கினார்.

‘சரி, வாங்க போவம்’

‘கிண்’ணென ஒரு எரி நட்சேத்திரக்கதிர் அவர் உடம்பில் ஊடுருவி எரிந்தது, கண் மூக்குத் தெரியவில்லை.

‘வேகமாகக் கிளம்பின புயல் தன் பாட்டுக்கு அடித்த பின் தான் அமைதி கொண்டுறையும்’

அண்ணனின் உவமானம் அசல்.

‘அற நனைந்தவனுக்குக் கூதல் என்ன கொடுகடி என்ன?’ என்றது, அவர் மனம்.

ஒருநாள் யாழ்ப்பாணத்திலிருந்து அண்ணன் பெண்சாதியின் பிள்ளைப்பெறுவை அறிவித்து அவருக்கு ஒரு தந்தி வந்தது.

அந்த வருஷ லீவு கொழும்பிலே கழிந்து விட்டதால் அவர் ‘மெடிக்கலில் ‘ தான் யாழ்ப்பாணம் போனார்.

போன இரண்டாம் நாளே யாழ்தேவியில் திரும்பி வந்து குதித்தார். வந்ததும் சிந்தனையில் ஆழ்ந்தார்.

அக்காவோ பெரும் நுணுக்கக்காரி.

அதனால் அவ, ‘நான் செத்தாலும் என்ர பிள்ளைப் பெத்துக்குத் தரும ஆசுப்பத்திரியை எட்டியும் பார்க்க மாட்டேன்’ என்று ஒரே பிடிவாதமாகச் சொல்லிவிட்டா. இதை அறிந்த அவ மாமிக்காரி ‘என்னடியாத்தை, எக்கணம் ஏதேன் வில்லங்கமெண்டால் பிறகு குத்தி மாயுறதே?’ என்று விஷயத்தைக் கேட்ட போது, அதற்கு அக்கா, ‘ஆசுப்பத்திரி வளிய போனா, ஆம்புளை டாக்குத்தர்மார் வந்து பாப்பினம், அது பெரிய கிலிசகேடு, மானம் மருவாதையான பொம்புளையள் சம்மதியாளவை. எனக்கும் அதுதான் கூச்சமாயிருக்கு’ என்று தனது ‘புருஷபக்தி’யையும் காட்டிப் பெருமை கொண்டா.’

அதனிமித்தம் வீட்டில்தான் பிள்ளை பெறுவும் நடந்தது. மரியாம்பிள்ளை அண்ணன் உண்மையில் வெறும் நோஞ்சல் தான். என்றாலும், அக்கா பெற்றெடுத்ததோ நல்ல ஆண் குஞ்சு.

இதனாலும் மரியாம்பிள்ளை அண்ணருக்கு ஒரே யோசனை.

கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கழித்து, ஒருநாள் குழந்தை சம்பந்தமாக அக்கா ஒரு கடுதாசி எழுதியிருந்தா.

‘... புள்ளய மாதா கோயில்ல அடைக்கல ஆச்சியின் காலடிக்குக் கொண்டு போய் அவவின்ர சந்நிதியில் வைச்சு ‘நாளுக்கு’ச் சோறு தீத்த வேணும். ஆன மட்ட, அதுக்குக் கட்டாயம் அல்லத் தட்டாமல் வந்திடுங்கோ’

இதற்கும் அண்ணர் ‘மெடிக்கலி’ல் தான் போனார்.

பாவம், ஆறு ஏழு மாசமாக என்ர முகம் காணாமல் தவிச்சிருந்தவர்.

அக்காவுக்குப் பரிவும் வாஞ்சையும் இரக்கமாகப் பரிணமித்தன. அவவாகவே, பாயைப் போடட்டோ?’ என்று ஆசையுடன் கேட்டு வைத்தா.

அவ்வேளை அவர் தன்னுள் ‘இது பாவத்துக்குத் துரோகம் செய்யப்படாது. செய்தால் அது பெரும் கறுமம்’ என்று எண்ணிக்கொண்டு, சூம்பிப்போன தனது கைவிரல்களைச் சாடையாகத் தூக்கிப்பார்த்தார்.

அவருக்கு அருவருத்தது. கடவாய்க் கணுக்குகளோ பொருக்கு விட்டு, வெடித்து, புண்ணாகப் புரையோடிக் கிடந்தன. ஒரு தடவ காறித் துப்பிவிட்டு, பெண்சாதியைப் பரிதாபம் நிறைந்த கண்களால் நுணுகினார்.

மனம் சஞ்சலப்பட, இருமல் வேறு குமைந்து தொல்லைப் படுத்திற்று. ஒரு சவாலாக மூச்சைப் பிடித்து இருமியதால் ஆள் நன்றாகக் களைத்து விட்டார். பேசுவதற்கு வாய் திறபடாமல் இளைப்பு வேறு. அவர் கோது நெஞ்சை உயர்த்தித் தாழ்த்தியது.

. உதென்ன உந்தக் கை விரலெல்லாம் குண்டூறு மாதிரி பொருக்கு வெடிச்சிருக்கு?’

அழுகின்ற பாவனையில் அக்காவிடம் வெடித்துக் கிளம்பிய சந்தேக வினா, கிழித்த பனங்கிழங்கில் சதை வறுகி எடுத்த நிலைக்கு அவரை ஆளாக்கியது, அதற்கும் அண்ணர் ஒரு விளக்கம் கொடுத்தார்.

‘ஒருநாள் ராத்திரி, கக்கூசுக்குப் போக வாளிய எடுத்தன். ‘அவுக்’கடியேண நிலம் சறுக்கிப் போட்டுது. அந்தடியலா வாளியோட மலாரடிச்சுக்கீழே விழேக்க போணி ஒண்டுக்க கிடந்த நெருப்புத் தண்ணி தெறிச்சுக் கை முழுதும் பட்டிட்டுது.

அக்காவுக்குச் சொல்லித் தீராத கவலையாயிற்று.

‘நல்லவேளை, அது கண்ணில் பட்டிருந்தால்? ஏதோ கண்ணுக்க வாறதப் புருவத்தோட வைச்சி அந்தோனியார் காப்பாற்றியிருக்கிறார். என்ர மண்டாட்டம் வீண் போகேல்ல, என்று அவ எண்ணிய போது, அக்காவின் இருதயம் கரைந்தது, கண்கள் கசிந்து கண்ணீராகக் கொட்டின.

‘தேகத்தைக் கீகத்தைக் கவனிக்கிறேல்ல, சுகமில்லாம இருந்தாலும் ‘ஓவர் ரைம்’ எண்டு சொல்லி நித்திரை முழிச்சு ஓயாம வேலை செய்யிறது. உப்பிடி அக்கப்பாடு பட்டு எங்களைக் காப்பாத்த வேணுமே? சுவர் இருந்தால் தானே சித்திரம் கீறலாம்?’

அவ சொல்ல வாய் மூடவில்லை, கண்ணீர் பொலு பொலுத்துக் கொட்டியது. துக்கம் தொண்டையை அடைக்க வாள்கள் இதயத்தினூடாகப் பாய்ந்தன.

‘என்ர அடைக்கல ஆச்சி, அவருக்க நல்ல சுவத்தைக் குடண தாயே!’

நெஞ்சு கரைய மனசுள்ளே மன்றாடி, மாதா கோயிலுக்கு ஒரு நோர்த்திக் கடன் வைத்துப் பிரலாபித்த தனது மனைவியை, அண்ணன் ஏக்க விழிகளால் நோக்கிக் கொண்டேயிருந்தார்.

காலையில் அவர் தானாக எழுந்திருக்கவில்லை. பாயில் தீய்ந்து போய்க் கடந்த அவரை, அக்கா போட்டுக் கொடுத்த முட்டைக் கோப்பிதான் தட்டி எழுப்பியது.

அந்த வாரத்துடன் ‘மெடிக்கல் லீவு’ம் முடிந்தது.

அண்ணன் சேமமே கொழும்புக்குத் திரும்பினார். கொழும்பு அவரை உறங்க வைத்தாலும், அண்ணனோ கொழும்பை உறங்க விடாது ‘தொடு தொடு’த்துக் கொண்டிருந்தார். கொழும்பிலே யார் கேட்க இருக்கிறார்கள்?

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ஒருநாள் அவர் மனைவி, பச்சாத்தாபத்தோடு எழுதிய ஒரு கடிதம், உண்மையாகவே அவரின் இருதயத்தைக் கசக்கிச் செக்காட்டியது.

கண்ணீர் வெதும்ப அதை வாசிக்கலானார்.

‘அன்னை மேரி மாதாதவை முன்னிட்டு வாழும் என்மேல் பட்சம் மறவாத ஆசை நாயகர் அறிவது என்னவெண்டால், நாங்கள் எல்லோரும் அச்சேட்ட அடைக்கல மாதாவின் கிருபையால் நல்ல சுகமாக இருக்கிறோம். அதுபோல நீங்களும் உவ்விடம் நல்ல சுகமே இருக்க, கோடி கோடி அற்புதரான கொச்சிக்கடை அந்தோனியாரைப் பாத்து அனுதினமும் மண்டாடி வருகிறோம்.

ஒரு வியளம், அது என்னவெண்டால், நீங்கள் இந்தக் கோசு வந்திட்டுப் போன் பிறகு, என்ர வாயில கொஞ்சம் அவியல் தாவியிருக்கு தேகமும் ஈக்கில் மாதிரி மெலிஞ்சு வருகுது. பால் குடிக்கிற புள்ளையும் இருமுது. அது கறுமம். அதுக்கு வாய் கீய் எல்லாம் அவிஞ்சு போய் இப்ப பரியாரி சுப்புறுமணியத்திட்டக் காட்டுறம். அது பச்சைப் பாலன், வாய் துறந்து பால் குடிக்குதில்லை. எல்லாம் ஆண்டவன் சித்தம் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம். அச்சேட்ட அந்தோனியாரும் அடைக்கல மாதாவும் எப்படியோ சுவம் தருவினம்.

நீங்கள் நல்லாச் சாப்பிட்டுத் தேகத்தைக் கவனியுங்கோ, அதுதான் முக்கியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் கீறலாம்? உங்கட சுகமே எங்கட பாக்கியம்.

உங்கள் அன்பான மனைவி,

ம. பெர்ணபேத்தம்மா.

கடிதத்தை வாசித்து முடிக்க, அவருக்கு ‘விஷயம்’ முற்றாகப் புரிந்து விட்டது. அப்போது அவரின் சுய உணர்வு செத்து, அவர் முகத்தில் கண்ணீர் வழிந்தது.

நெஞ்சு கரித்து அழுந்த, விறைப்பெடுத்த முகவாய்க் கட்டையைச் சால்வையால் அப்பியபடி எழுந்த போது, விம்மி வந்த அழுகையை அவரால் அடக்க முடியவில்லை.

பனங்கற்றாளைச் சாறாகக் கண்கள் நீர்த்து மினுமினுக்க, எடுத்த துவாயால் வாயைப் பொத்திக்கொண்டு, விழியுருட்டி மேலே பார்த்துப் பிரலாபித்து அழுதார்.

‘அச்சேட்ட அந்தோனி முனியோரே! அது ஒண்டும் அறியாத பாவி, எப்பனும் வஞ்சகம் இல்லாதது. அதுக்கு எந்தக் கெட்ட வருத்தமும் வராமல் காப்பாத்து ராசா. நான்தான் பாவக்காறன். வேணுமெண்டா என்னை வருத்திச் சாக்கொல்லு. அதி அற்புதரே! வாற கிழமை நான் சம்பளம் எடுத்த கையோட உன்ர ஆலயத்துக்கு ஓடி வந்து ஒரு கட்டு மெழுகுதிரி கட்டாயம் கொழுத்திறனனை.. அதுக்கு மட்டும் நோய்வராமல் காப்பாத்தி நல்ல சுகத்தைக் குடுராசா.

இப்படியெல்லாம் மனசு கதற ஒரு நேர்த்திக் கடன் வைத்து மரியாம்பிள்ளை அண்ணன் சாறு பிழிந்த தக்காளிப்பழமாக, துவைத்த கண்களும், நெகிழ்ந்த நெஞ்சுமாக அழுது கொண்டு கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலைத் தேடி விரைந்தார்.

போய்க்கொண்டிருக்கும்போது, அந்தக் கோயில் வீதி யோரத்திலே, அந்தக் கொழும்பு – கோட்டைச் சந்தியிலே சந்தித்த அவரின் ‘ஆசை’க்கினிய பிச்சைக்காரி, புழுக்கள் கெந்த, தேகம் பொருக்கடித்துப் பிரேதமாய்ச் செத்துக் கிடந்தாள்.

ஐயோ என்று அவர் ஆத்துமா வாயடங்கிக் குழறியது.

அண்ணன் அன்று வேலைக்குப் போக விலலை. ஆள் ‘அப்ஸ்ன்ற்’

* 1963 இல் தேனருவி இதழில் வெளியான சிறுகதை.

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/8292-2023-12-08-14-26-22

  • கருத்துக்கள உறவுகள்

படலைக்கு வெளியே தொடரும் பாலியல் சீண்டல்கள் படலைக்கு உள்ளேயும் புகுந்து பத்தினியையும் பரிதவிக்க வைத்துவிடும் என்பதை சொல்லும் அருமையான கதை......!  👍

நன்றி கிருபன்.......!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.