Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே பதினைந்து 2009 முள்ளிவாய்க்காலில் நடந்த சில சம்பவங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிபிசி தான் யுத்த காலத்தில் செய்திகளை வழங்கியதாம். 

 எங்களுக்கு புலிகளின் குரல் வழங்கியது. அதுவே எங்கள் மக்களையும் போராளிகளையும் கூட அருவமாய் இணைந்திருந்தது. புலிகளின் குரல் வானொலி தன் இயக்கத்தை நிறுத்தியபோது எம் ஒருகணம் இதயமும் நின்றே துடித்தது. அது எங்கள் ஈழத்தின் உயிர்க்குரல். 

மக்களுக்கான அறிவுறுத்தல்கள் நிறுத்தப்பட்டபோது மக்கள் மத்தியில் குழப்பம். அடுத்தது என்ன செய்வது.

 தமிழீழ அரச கட்டுமானத்தின் எஞ்சியிருந்த அலகுகள் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழக்கத் தொடங்கின. நேற்று முன்தினம் கூட தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகள் (கொடுப்பனவு வழங்கல்) நடைபெற்றதாக நினைவு. வைப்பகத்தின் இறுதிப் பணியாளர்கள் இருவர். ஒருவர் பொறுப்பாளர் வீரத்தேவன் மற்றவர் எனது மனைவி சுதா. சண்டையில் நிற்கும் திருமணமான போராளிகளின் குடும்பங்களுக்குரிய கொடுப்பனவுகள் . மற்றும் பணியாளர் காவல்துறை உறுப்பினர்களது கொடுப்பனவுகள். தேட்டக்கணக்குகளிலிருந்தான வரையறுக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். கடுமையான செல் தாக்குதல் கூவிச்செல்லும் ரவைகளுக்கூடாக தனது ஸ்கூட்டியிலும் இறுதியில் ஓரிரு நாட்கள் நடந்தும் வங்கியின் வேலைகளுக்காக சுதா சென்று வந்திருக்கிறா. இன்னும் வங்கிச் சேவை இயங்குகிறதா என நான் கேட்டதுண்டு.

  தமிழீழ அரசின் கொடுப்பனவுகளினால் தமது குடும்பங்களில் உள்ளவர்கள் தம்மைக் காத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் களமுனையில் போராடிக்கொண்டிருக்கும் வீரர்களின் நம்பிக்கை பொய்த்து விடக்கூடாது என்பது சுதாவின் வாதம். 

பிரிகேடியர் மணிவண்ணன் அண்ணை அடிக்கடி ஆட்லறி அணிகளுக்கு கூறுவது நினைவில் வந்து போனது . தம்பி ஒரு ஆள் இருக்கும் வரைக்கும் ஆட்லறி அடிக்கும் . அப்போது அப்படியொரு நிலை வருமென நான் நினைத்திருந்ததில்லை.

இப்போது எல்லா பிரிவுகளும் எல்லா அணிகளும் எல்லா நிறுவனங்களும் ஆட்களின் எண்ணிக்கையில் குறைந்து மூன்று இரண்டு ஒன்றாகி அனைத்துமே ஓய்ந்து போன கணங்கள் அவை. 

அங்கே சண்டையணியும் மக்களுக்கான ஒழுங்கு படுத்தல்களுக்கு காவல்துறையும் தலைவரையும் முக்கிய தளபதிகளுக்கான பாதுகாவலர்களும் காயமடைந்தவர்களும் பொதுமக்களும் மட்டுமே தமிழீழ தேசத்தின் கடைசி நிலத்தின் கடைசி உயிர்கள் .

ஒரு தேச மக்களை கொல்லும் அழிக்கும் அதிகாரத்தை உலகுக்கு யார் கொடுத்தது? ஏன் இப்படி செய்தார்கள்? நாங்கள் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்? பல்லாயிரம் உயிர்க்கொடையால் உருவான தேசம் நாங்கள் யாரையும் சுரண்டியோ களவாடியோ எம் தேசத்தை உருவாக்க வில்லையே. ஏன் எம் அழிவை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தது. 

அனைவரையும்போல எமக்கும் குழப்பம். தலைக்குள் எதுவும் தோன்றவில்லை. சரி எல்லோருக்கும் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தோம். அவரவர் உடுப்புப் பைகளுடன் நடந்து வந்தோம் . 

வழியில் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பாவின் பங்கர். அங்கே எமக்கு தெரிந்த பலர் நின்றார்கள். தமிழ்ச்செல்வன் அண்ணையின் மனைவி பிள்ளைகள்

மருத்துவப் பிரிவு ரேகா அண்ணை மனைவி பிள்ளைகள் நிதர்சனம் பாப்பா அண்ணை மனைவி பிள்ளைகள் என பலர் நின்றார்கள்.

நிதர்சனம் மிரேஸ் குடும்பம் நின்றதாக நினைவு.

காக்கா அண்ணா திருநாவுக்கரசு மாஸ்டர் மற்றும் ஜெகன் அங்கிள் திலீபன் அண்ணா ஆகியோரும் நின்றார்கள். 

 அநேகர் அங்கிருந்து புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். மக்களோடு மக்களாக அல்லது இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள். பாப்பா செய்மதித் தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார்.

திரு. மாஸ்டர் நடேசன் அண்ணையின் தொடர்பெடுத்துத் தாருங்கள். ஒரே ஒரு போன் கோலில் சண்டையை நிற்பாட்டுகிறேன் என மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கொண்டிருந்தார். 

"தம்பியாக்கள் நீங்கள் போகேல்லையே" பாப்பா அண்ணை என்னிடம் கேட்டார். இல்லை அண்ணை என்றேன்.

பயப்படத் தேவையில்லை கதைச்சு ஒழுங்கு படுத்தியிருக்கு. குறிப்பிட்ட நேரம்தான் பொயின்ரை திறந்து எடுப்பார்கள். என்றார். எனக்கு புரியவில்லை. அப்போது புாியவும் தேவையில்லை. 

பரவாயில்லை என்றேன்.  

ஆனால் திருமாஸ்டர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறார். 

இதற்கிடையில் மருத்துவப் போராளி அன்புக்குமரன் திலீபன் அண்ணாவுடன் வோக்கியில் கதைத்தார். 

  அண்ணா வோக்கிய அவங்களுக்கு கிட்ட பிடியுங்கள் நான் சொல்கிறேன் என்றார். அப்போதுதான் பார்த்தேன் அங்கே தலைவர் அவர்களின் அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு திலீபன் முயன்று கொண்டு இருந்தார். அவரோடு ஜெகன் அங்கிளும் இருந்தார். 

அவர் எனக்கு நேரடியா சொல்லாமல் நான் இங்கிருந்து வெளிக்கிட மாட்டேன். அப்பா அடம் பிடிக்கிறார். 

 அன்புக்குமரனும் விடுவதாக இல்லை. அவர் தான் சொல்லி விட்டவர் நீங்கள் இவர்களோடு போங்கோ. அப்படியா என்று அரை மனதுடன் சம்மதித்திருந்தார். ஜெகன் அங்கிளும் திலீபன் அண்ணாவும் அவர்களை அழைத்துச் சென்றிருந்தார்கள். 

நாங்கள் மீண்டும் சற்று முன்னகர்ந்து வந்தோம். பார்க்கும் இடமெல்லாம் தெரிந்த முகங்களும் மூத்த போராளிகளும் அவர்கள் குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களும் மக்களுமாக செறிவாக காணப்பட்டார்கள். 

கப்பல் அடி பக்கத்தாலும் வட்டு வாகலின் கடற்கரையோரத்தாலும் வந்த ராணுவம் ஒன்றிணைந்து கடற்கரை முழுவதையும் கைப்பற்றி விட்டது. இப்போது மூன்று புறமும் ராணுவம் ஒரு பகுதியின் நந்திக்கடல் நந்திக் கடலின் மறுகரையில் ராணுவம் இப்படி நான்கு பக்கமும் ஏறத்தாழ மூன்று சதுர கிலோமீட்டர் இடைவெளிக்குள் இரண்டரை இலட்சம் வரையான மக்களும் போராளிகளும் திறந்த வெளி சிறைப்படுத்தப்பட்டார்கள். இன்று இதுவரை பெரிய அளவிலான துப்பாக்கி சூடோ செல் தாக்குதல்களோ நடைபெற்று இருக்கவில்லை. . ஆனால் கடற்கரையை ராணுவம் கைப்பற்றி விட்டது. 

 எனக்கு என்னுடைய அம்மாவையும் அப்பாவையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவர்களை தேடிப் பார்க்க முயன்றேன். அப்போது அங்கிருந்து ஆலமரம் ஒன்றின் கீழ் நின்ற கடற்புலிகளின் 60 அடி படகை வெடிக்கவைக்கப் போகிறோம். அதன் அருகில் இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி சற்று தூரம் விலகிச் செல்லும்படி போராளிகள் கூறிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவ்விடத்தில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேறியே ஆக வேண்டிய நிலைமைக்கு வந்தார்கள். 

 இந்த இடைவெளியிலேயே நான் எனது தாயையும் தந்தையும் கண்டுபிடித்தேன். அம்மா ஏற்கனவே மிகவும் மெலிந்தவர். இன்னும் அதிக இளைத்துப் போயிருந்தார். அப்பா எப்போதும் போல பெரிதாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். அம்மா மட்டும் தம்பியை பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார். கரன் எப்படி இருக்கிறான்? 

 எங்களுக்கு தெரியாத ஏதோ ஒன்று அம்மாவுக்கு மட்டும் உணர்த்தப்பட்டு இருக்கிறது போலும்.

நாங்கள் மூன்று பேர் மூன்று பேரும் ஆண் பிள்ளைகள். அதனால்தான் குடும்பம் மீது பொறுப்பு வரவில்லை போலும். சிறுவயதில் அம்மாவிடம் அயலவர்கள் கூறுவார்கள். உனக்கென்ன மூன்று சிங்கக் குட்டிகள் பிற்காலத்தில் கஷ்டப்படத்தேவை இல்லை….. ஆனால் சிங்கக் குட்டிகள் எல்லாமே புலிக்குட்டிகள் ஆகி இருந்த போது அம்மா பட்ட கஸ்டங்கள் கொஞ்சமல்ல. 

சில இடங்களில் எழுத முயலும் போது என்னால் முடியவில்லை. மிகவும் உணர்ச்சி வசப்பட்டு போகிறேன். அதனால் தான் ஒரு நாள் தாமதமாக எழுத வேண்டி வருகிறது. இன்று மட்டும் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் ஒற்றைத் தலைவலி வந்துவிட்டது. 

அண்ணாவை காணவில்லை அண்ணியும் பிள்ளைகளும் இருந்தார்கள். மூவரும் சிறு பிள்ளைகள். நிலைமை நல்லா இல்ல நீங்கள் வெளிக்கிட்டு போங்கோ நாங்கள் பின்னால வாறோம். என்று விட்டு இப்ப உடனே இந்த இடத்தை விட்டு வெளிக்கிடுங்கோ அந்த படகு வெடிக்க போகுது என்று அவர்களைப் போக சொல்லிவிட்டு. அம்மாவை கட்டியணைத்து முத்தமிட்டு நாங்கள் புறப்பட்டு வந்தோம். அப்போது எனக்கு தெரியாது அதுவே இறுதி முத்தமாக அமைந்துவிடும் என்பது. 

வரும் வழியில் எனது பொறுப்பாளர்களில் ஒருவரான அறிவண்ணையிடம் எனக்குத் தெரிந்த நிலைமைகளை எடுத்துக் கூறினேன். எமது பிரிவின் காயக்காரர்கள் அனைவருக்கும் அவரே பொறுப்பாக இருந்தார். எனவே அவரிடம் கேட்டேன் அடுத்த கட்டம் என்ன என்று. தனக்கும் தெரியவில்லை இன்னும் இந்த முடிவும் சொல்லப்படவில்லை என்றார். இல்லை அண்ணை நீங்க போய் கேளுங்கோ இயக்கம் சொல்லாது . இந்த காயக்காரர்கள் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் அல்லவா நீங்கள் கேட்டு சொல்லாட்டி இங்கு யாரும் போக மாட்டாங்க தயவு செய்து போய் கேட்டுச் சொல்லுங்கோ. ஏனெனில் எனக்கும் கூட இந்த வழிக்கூடாகத்தான் கட்டளை வர வேண்டும். சற்று தாமதமாக வருமாறும் தான் கேட்டு வைப்பதாகவும் கூறியிருந்தார். 

 

எனவே நாங்கள் சற்று அங்கிருந்து நகர்ந்தோம். வரும் வழியில் படையத் தொடக்கப் பயிற்சி கல்லூரி பொறுப்பாளர் எழில்வாணனைக் கண்டோம். அவரது பதுங்க குழிக்குள் சென்றபோது அங்கு ராதா வான்காப்பு படையணியில் சிறப்பு தளபதிகளாக இருந்த சிலம்பரசன் மற்றும் செங்கையான் இருவரையும் கண்டோம். இருவருக்குமே காலில் பலத்த காயம் அவர்களால் நடக்க முடியாது. அவர்களைக் கண்டதும் எனக்கு பெருமையாக இருந்தது. ஆனந்தபுர எதிரியின் வியூகத்தை தகர்த்து வழியே வந்தவர் சிலம்பரசன். சிலம்பு யார் என்பது அனைவருக்கும் தெரியும். நிச்சயம் அவர்களால் தப்பி பிழைக்க முடியாது. என்ன நடக்கப் போகிறது கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 

 அவர்களுக்கு அருகாமையிலேயே சுகி அக்கா, மலைமகள், காந்தா, கோமதியக்கா ஆகியோருடன் பெண் போராளிகள் சிலரைக் கண்டோம். யாருடனும் நின்று கதைக்க அவகாசம் இல்லை அவர்களுக்கும் தான். 

அன்று தலைவர் அவர்கள் பணிப்பில் 10 நாட்களுக்கு போதுமான உணவு கையிருப்பை போராளிகளுக்காக வைத்துக்கொண்டு மிகுதியை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்குமாறு கூறியதாக அறிந்தோம். அதனால் வழமையை விட அன்று சற்று அதிகமாக உணவுப் பொருட்களும் பழச்சாறுகளும் பிஸ்கட்களும் சீனியும் கிடைத்திருந்தன. மாவும் எண்ணெய்யும் கூட. அவை அங்கிருந்த எல்லாருக்கும் கிடைத்திருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் மற்றவர்களை பற்றி சிந்திக்கும் மனநிலை அப்போது யாருக்குமே இல்லை. அப்படி எண்ணம் வந்தாலும் வலுக்கட்டாயமாக அதனை மறக்க வேண்டும். இல்லாவிட்டால் தொண்டையால் உணவு இறங்காது. 

பின்னர் அங்கிருந்த புறப்பட்டு செல்லும் வழியில் குகா அக்காவையும் குருவி அக்காவையும் பிள்ளைகளையும் கண்டோம். ஈழநாதம் பத்திரிகை குழுமம் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தது. நாமும் அவர்களோடு சேர்ந்து தங்கிக் கொண்டோம். அன்று இரவு மிகுந்த களைப்பில் சற்று தூங்கி விட்டோம். ஆளில்லா வேவு விமானம் எப்போதும் போல் தனது 24 மணிநேர கண்காணிப்பை செய்து கொண்டே இருந்தது. எனது கோள்சர் நெஞ்சு காயத்தில் உரசி உரசி வந்ததில் காயத்தில் ரத்தம் வந்திருந்தது. மருந்து இல்லாமல் வெறும் துணியை வைத்து கட்டியதாலும் போதிய சத்துணவுகளோ ஆரோக்கியம் இல்லாததாலும் காயம் பட்டவர்களுக்கு காயம் மாறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. நானும் களைப்பில் தூங்கி விட்டேன்.

 

https://tamilvisions.com/may-fifteenth-2009-mullivaikal

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to மே பதினைந்து 2009 முள்ளிவாய்க்காலில் நடந்த சில சம்பவங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.