Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இமாலயப் பிரகடனம் – பின்னணியும் வரலாறும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இமாலயப் பிரகடனம் – பின்னணியும் வரலாறும்

 

–கூட்டங்களில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பல தாயக அரசியற் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் இயங்குபவர்களும் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், பிரித்தானியத் தமிழர் பேரவையின் தலைவர் ரவி குமார் (ரூட் ரவி) மற்றும் தாயக சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி குமாரவேல் குருபரன் உள்ளிட்டோர் பங்குபற்றியிருக்கின்றனர்— 

அ.நிக்ஸன்-

அதிகளவு சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை ஒற்றை ஆட்சி நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் தேசியச் சிக்கலுக்குரிய தீர்வை முன்வைக்க முடியாது என்பதாலேயே ‘ஈழத்தமிழர் தேசியம்’ என்ற கோட்பாடு எழுந்தது.

சிங்களவர் ஈழத்தமிழர் ஆகிய இரு அரசியல் சமூகங்களும் தேசங்களாக ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட்டாக நின்று நிர்வாக அதிகாரத்தை அல்ல ஆட்சி அதிகாரத்தைப் பங்கிடுவதன் மூலமே இனப்பிரச்சினைக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை எட்ட முடியும்.

இதற்கான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாகச் செயற்பட்டு ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் வியூகங்களுடன் மாத்திரம் இயங்கி வருவதால் மிகவும் பலவீனமான நிலைமை அதலபாதாளமாக வெளித் தோற்றத்துக்குத் தெரிகிறது.

ஆனால், மக்கள் மட்டத்தில் நீறுபூத்த நெருப்பாக தேசிய நிலைப்பாடு வேரூன்றியுள்ளது.

இந்தச் சூழலில் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டு என்று தவறாகக் என்று கூறிக் கொள்ளும் சில தனிநபர்களின் கூட்டு ஒன்று வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களைக் கருத்திற்கொண்டு இயங்கும் தன்னார்வ சக்திகளால் தயார்ப்படுத்தப்பட்டு மக்கள் மயப்பட்ட தேசிய நிலைப்பாட்டை நிலைமாறச் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுவே உலகத் தமிழர் பேரவை.

‘யதார்த்த அரசியல்’ என்று பேசுவோரும் ‘முற்போக்குத் தமிழர்’ மற்றும் ‘மிதவாத அரசியல் தலைவர்கள்’ என்று மார் தட்டுவோரும்  2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் மிதமிஞ்சியுள்ள சூழலைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நுட்பமாக மறுதலிக்கவும், ‘இன நல்லிணக்கம’ ‘மத நல்லிணக்கம்’ என்ற போர்வையில் மீண்டும் இணக்க அரசியற் பொறிக்குள் ஈழத்தமிழர் தேசிய அரசியலைத்   தள்ளிவிடவும் வெளிப்பட்டுள்ளார்கள். இது ஒன்றும் புதிய போக்கு அல்ல. பழைய பொறிகளின் புதிய தொடர்ச்சியே.

2015 மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் ஆரம்பித்த இந்த ‘நல்லிணக்கப் பொறி’ கோட்டாபய ராஜபக்ச 2020 இல் ஜனாதிபதியான பின்னர் வேறொரு வடிவை எடுத்தது. தமது திட்டங்களுக்கு ஒத்துழைக்க கோட்டபாய மறுத்தபோது ஆட்சிமாற்ற வேலைத்திட்டத்துக்கு சிங்களத் தரப்புகள் தயார்ப்படுத்தப்பட்டன. அதற்கு தமிழர்களுக்கான சர்வதேச நீதியும் அரசியல் தீர்வும் கிடப்பில் போடப்பட்டது.

போலித் தன்மையுள்ள நல்லிணக்கம் என்ற பொருத்தமற்ற கதைக்கும், சென்ற மாதம் போலியாக சித்திரிக்கப்பட்ட துவாரகாவின் பெயரில் வெளியான மாவீரர் நாள் அறிக்கைக்கும் ஒரே பின்புலம் இருப்பது வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தெரியாது விட்டாலும் இவை இரண்டுக்கும் பின்னால் மறைமுகமான சக்திகள் பின்னணி என்பது பட்டவர்த்தனம்.

spacer.png

குறிப்பாக 2009 இற்குப் பின்னரான சூழலில் மேற்குலகின் புவிசார் அரசியல் பொருளாதார நலன்களைக் கருத்திற்கொண்டு அரசுகளுக்கும் அவற்றின் தூதரகங்களுக்கும் அப்பால் ஆனால் அதே நலன்களுக்கு ஏற்பச் செயற்படும் பிராந்திய, சர்வதேச மற்றும்  உளவு மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் செயற்பாடுகள் ஊடாக விளைந்ததுதான் இந்த இமாலயப் பிரகடனம்.

சுரேன் சுரேந்திரன் என்பவரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை என்ற தனிமனிதர் குழு இந்தச் சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் தேவைக்கு இயைந்துள்ளது கண்கூடு.

சிறந்த இலங்கைக்கான சங்கபீடம் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் சுரேந்திரனின் திட்டத்துடன் இணைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் அப்போதைய அமைச்சரான மறைந்த மங்கள சமரவீரவின் மறைமுக அனுசரணையுடன் இலங்கைக்கு வந்து சில பௌத்த துறவிகளுடன் சுகாதார வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட புலம்பெயர் ஈழத்தமிழர் தனிநபர்ச் செயற்பாட்டாளர் குழுக்கள் அப்போதே தயார்ப்படுத்தப்பட்டிருந்தன.

சுயநிர்ணய உரிமையைக் கைவிடுதல், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை தொடர்பான கோரிக்கைகளைத் தவிர்த்தல், இலங்கை அரச கட்டமைப்புக்குள் ஐக்கியம் என்ற பெயரில் ஒற்றையாட்சிக்குள்ளும் ஒத்துப்போதல் மற்றும் ஈழத்தமிழர் என்ற அடையாளத்தைக் கைவிட்டு இலங்கையர் என்ற அடையாளத்தைத் தழுவுதல் போன்றவற்குத் ஈழத் தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை இணங்க வைப்பது இந்தத் தன்னார்வ நிறுவனங்களின் உத்திகளில் ஒன்று.

இதனை அடிப்படையாகக் கொண்டு வெளிநாடுகளில், குறிப்பாக ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, ஒஸ்ரியா, ஸ்கண்டிநேவிய நாடுகளில் 2009 ஆம் ஆண்டின் பின்னர் அவ்வப்போது கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டிருக்கின்றன.

இக் கூட்டங்களில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பல தாயக அரசியற் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் இயங்குபவர்களும் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், பிரித்தானியத் தமிழர் பேரவையின் தலைவர் ரவி குமார் (ரூட் ரவி) மற்றும் தாயக சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி குமாரவேல் குருபரன் உள்ளிட்டோர் பங்குபற்றியிருக்கின்றனர்.

இவர்களில் ஒரு சாரார் மேற்கின் நலன்களுக்கு ஒத்துப்போய் தமிழர் நலன்களை ஆகுதியாக்கக் கூடியவர்கள் மறுசாரார் மேற்கின் நலன்களோடு ஒத்துப்போய் பேரம் பேசக் கூடியவர்கள். இரண்டு முனைகளுக்கும் மாறி மாறிப் பயணித்து தாம் யார் என்பதைத் தெளிவாகச் சமுதாயத்துக்கு அடையாளம் காட்டாதவர்களும் இவர்களுள் அடங்குவர்.

ஆகவே, எவர் எவர் எப்படிப்பட்டவர் என்ற விவாதம் இங்கு அவசியமற்றது. என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக விளங்கிக்கொள்வதே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அவசியமானது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் நடந்த இக் கூட்டங்கள் வெவ்வேறாகவும், கூட்டாகவும் தனித் தனியாகவும் மிக இரகசியமான முறையில் மேற்கு நாடுகளின் நகரங்களில விமானப் பயண மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கி நடத்தப்பட்டன. இக் கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்கள் எந்த ஒரு ஊடகங்களிலும் நேரடியாக வெளிவராது.

ஏனெனில், அவ்வாறு எழுதப்படக்கூடாது என்பது அக்கூட்டத்தை நடாத்திய தன்னார்வ நிறுவனங்களின் ஏற்பாட்டாளர்களால் நிலைப்பாடாக இருந்தது. எங்கே ஒளிவு மறைவாக இருக்கவேண்டும் என்கே வெளிப்படைத் தன்மை பற்றி பேசவேண்டும் என்பதை ஏற்பாட்டாளர்களே கையாளுவர்.

ஆனாலும் கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்களை இந்தத் தன்னார்வ நிறுவனங்களின் ஏற்பாட்டாளர்கள் ஒரு விடயத்தில் குறியாக இருப்பர்.  பேசி உடன்பட்டவற்றை, அல்லது உடன்படாதவற்றைக் கூட ஏதோ ஒரு வகையில் ஒரு அறிக்கையாகத் தொகுத்துக்  கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரின் ஒப்புதலைப் பெற்றது போல ஆவணப்படுத்திக் கொள்வர்.

இருந்தபோதும், இக் கூட்டங்களில் நடந்த பல விடயங்கள் வெளியே அரசல் புரசலாக அவ்வப்போது கசிந்திருக்கின்றன. இக் கூட்டங்களில் கலந்துகொண்ட சுரேன் சுரேந்திரன் போன்ற சிலரைத் தவிர்ந்த ஏனைய ஈழத்தமிழர் பிரதிநிதிகளுள் பலர் ஈழத்தமிழர்களின் அரசியல் பயணம் தொடர்பான பிரதான காரண-காரியங்களை விட்டுக்கொடுக்காமல் வலியுறுத்தியும் வந்துள்ளார்கள்.

ஆனாலும் ‘உங்கள் இலக்கு’ அதாவது சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட அரசியற் தீர்வு என்ற இலக்கை அடைவதற்கு கூட்டத்தில் தங்களால் முன்மொழியப்பட்ட விடயங்களை ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் பின்னர் பையப்பைய உங்கள் இலக்கை அடைய முடியும் எனவும் இந்தத் தன்னார்வ நிறுவனங்கள் தமது போதனைகளாக அவ்வப்போது அறிவுறுத்தி வந்துள்ளன.

சுயநிர்ணய உரிமையைக் கைவிடுதல், இன அழிப்பை சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கவேண்டும் என்ற கோரிக்கையை நழுவவிடுதல், இலங்கையர் என்ற அடையாளத்தை ஒப்புக்கொள்ளுதல் என்ற பிரதான நோக்கங்களை சுமந்திரன், சுரேன் சுரேந்திரன் ஆகிய சிலரைத் தவிர ஏனையோர் ஏற்க மறுத்திருந்தனர்.

spacer.png

இதன் காரணமாக இத் தன்னார்வ நிறுவனங்களின் இத்தகைய செயற்பாடுகள் பிசுபிசுத்துப் பேயிருந்தன.

2009 இற்கு முன்னர் அல்லது 2009 இல் உருவாகி உலகம் முழுவதிலும் மக்கள் ஆதரவோடு செயற்பட்டு வந்த பதினான்கு புலம்பெயர் அமைப்புகளை இணைத்து கூட்டாக உலகத் தமிழர் பேரவை 2009 இல் உருவாக்கப்பட்டது.

அந்தக் கூட்டின் முதல் தலைவராக இலங்கையில் கடந்த காலத்தில் ஒலிம்பிக் வீரராக புகழ்பெற்று பின்னர் அமெரிக்காவில் வதிந்துவரும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் என்பவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவரின் நண்பர்கள் பலரும் இவரை ‘எதிர்’ என்று அழைப்பர்.

இவர் ரவி குமாருடைய நெருங்கிய நண்பராகவும் பல காலத் தொடர்புடையவர் என்று இவர்கள் இருவரையும் நன்கு அறிந்த பிரித்தானிய வட்டாரங்கள் கூறுகின்றன.

2010 இல் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியபோது தமிழர்கள் சார்பான பொது வேட்பாளராக எதிரைப் போட்டியிடுமாறு அமெரிக்கத் தரப்புகள் அறிவுரை வழங்கியிருந்தன. இது அப்போதிருந்த உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பின் அங்கத்துவ அமைப்புகள் பலவற்றுக்கும் கேள்வியை எழுப்பியது.

இலங்கையின் கட்சி அரசியலுக்குள் செல்லுமாற வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி உள்ளிட்ட தமிழர் தரப்புக் கட்சிகளை எதிர்வீரசிங்கம் நாடியிருந்தார். ஆனால் கஜேந்திரகுமார் போன்றோர் அதை நுட்பமாக மறுத்துவிட்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைப்பதன் மூலம் இலங்கையர் என்ற அடையாளத்துக்குள் ஈழத்தமிழர்களைத் தள்ளிவிட்டு நல்லிணக்க அரசியலைத் தனது நலன்களுக்கு ஏற்றவாறு முன்னெடுக்கலாம் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் அமெரிக்கத் தரப்பு எதிருக்கு இதை அறிவுறுத்தியிருந்ததாக தகவல் அறிந்த வட்டாரஙகள கூர்மைக்குத் தெரிவித்தன.

இந்த நிலையில் எதிரை உலகத் தமிழர் பேரவையில் இருந்து ஓய்வு பெறுமாறு புலம் பெயர் அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டதால் அவர் நாகரீகமாக ஒதுங்கிக்கொண்டதாகவும் தகவல்.

இப்படிப் பல முயற்சிகள் தோல்வியடைந்த பின்னணியிலேதான் 2013 இல் முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீரவை மையப்படுத்தி சிங்கப்பூரில் நடத்தப்பட்ட மாநாட்டில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

இந்த மாநாட்டில் சுமந்திரன், சுரேன் சுரேந்திரன் மற்றும் கொழும்பில் இருந்து நிமல்கா பெர்ணாண்டோ போன்ற சிங்கள மிதவாதிகள், உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கையர் என்ற அடையாளத்துடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதை மையமாகக் கொண்ட சிங்கப்பூர் தீர்மானங்கள் ஏறத்தாழ இரண்டுவருடங்களாக இரகசியமாகப் பேணப்பட்டன.

இருந்தபோதும் 2015 இல் இவை மெதுவாகக் கசிய ஆரம்பித்தன.

காலப் போக்கில் சிங்கப்பூர் தீர்மானமும் பிசுபிசுத்துப் போகவே சுரேன் சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் தமிழ்த் தரப்பின் வெறுப்புக்கு மேலும் உள்ளானார்கள்.

இதையெல்லாம் அறிந்து கொண்ட தன்னார்வ நிறுவனங்கள் தமது திட்டங்களை மீளாய்வு செய்து மேலும் இரகசியமாக செயற்பட்டனர். அந்த முயற்சியின் தற்போதைய வெளிப்பாடுதான் இமாலய பிரகடனம்.

ஒருபுறத்தில் உலகத் தமிழர் பேரவை எனும் தனிநபர்க்குழுவின் நகர்வுகள் மேற்கு நாடுகளில் இருக்கின்ற தன்னார்வ நிறுவனங்களையும்  தென்னாபிரிக்காவையும் மையப்படுத்தி செயற்படும்போது, மறுபுறத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையானது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்திய ஆளும் தரப்பான பா.ஜ.கா வையும் நோக்கிச் செயற்படுகின்றது.

அதுமட்டுமல்ல, பிரித்தானியத் தமிழர் பேரவை பிரிக்க முடியாத இலங்கை தான் தீர்வு என்று வெளிப்படையாகச் சொல்லத் தயங்கும். ஆனால் உலகத் தமிழர் பேரவை அவ்வாறு வெளிப்படையாகவும் கூறத் தயாராக இருக்கும்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஈழத்தமிழர் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்துவதில் பிரித்தானிய தமிழர் பேரவையும் பின்னணியில் இயங்கியிருந்தது.

இந்த விவாதத்தில் சுயநிர்யணய உரிமை, இன அழிப்பு மற்றும் பொறப்புக் கூறல் தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இலங்கை அரசு என்பவை சுட்டிக்காட்டப்பட்டுக் கேள்விகள் எழுப்பப்ட்டபோதும் பிரித்தானிய அரசின் பிரதிநிதி அவற்றுக்குப் பதிலளிக்காமல் சுற்றிவளைத்துப் பதிலளித்தார்.

குறிப்பாக போர்க்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்படும் இராணுவத் தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா போன்றவர்கள் மீது தடைகளைக் கொண்டுவரவேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்குப் பகிரங்கமாகப் பதலளிக்க முடியாது என்ற தோரணையில் அவரது பதில் அமைந்திருந்தது.

பிரித்தானிய தமிழர் பேரவையையும் உலகத் தமிழர் பேரவை என்ற தனிநபர்க் குழுவையும் ஒப்புநோக்கினால், இரண்டும் ஏறத்தாழ சிறுமைப்பட்டுப் போயுள்ளன என்பதும், இவை இரண்டில் ஒன்று முழுமையாகவே தனிநபர்க் குழு என்பதும் மற்றையது ஓரளவுக்காவது மக்கள் தளத்துக்குக் கட்டுப்படும் போக்குடையது என்பதும் வெளிப்படும்.

ஆனால், அடிப்படைக் கோரிக்கைகளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடகுவைக்கும் சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் நோக்கங்கள் இந்த அமைப்புகளைக் குறிவைக்கும் போது ஏட்டிக்குப் போட்டியாகச்  செயற்படும் ஒரு மனநிலையை இந்த இரண்டு அமைப்புகளைச் சார்ந்த முக்கிய நபர்களிடம் காண முடியும். இந்தப் பின்னணியில் தான் சுரேன் சுரேந்திரன் உலகத் தமிழர் பேரவையின் ஊடாக இமாலயப் பிரகடனம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

எதிர்வீரசிங்கம் தலைமைப் பதவியில் இருந்து விலகிச் சென்றதும் அப்போது ஜேர்மனியில் இருந்த அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவல் 2010 இல் உலகத் தமிழர் பேரவைக்குத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வீரசிங்கம் இணக்க அரசியலுக்குள் செல்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே அப்போது அருட்தந்தை இமானுவல் உலகத் தமிழர் பேரவையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை திரும்பியிருந்த எதிர், 2013 ஜனவரி மாதம் அப்போதைய வடமாகாண  ஆளுநர் சந்திரசிறியின் கல்வி மற்றும் விளையாட்டுத்தறை ஆலோசகராக எதிர்வீரசிங்கம் பதவி ஏற்றிருந்தன் மூலம் அவரின் இணக்க அரசியல் அடுத்த படிநிலையில் வெளிப்பட்டது.

அப்போது, இமானுவல் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டியிலும் தெளிவுடன் செயற்பட்டார்.

ஆனால் தலைவராகப் பதவியேற்று அவர் அமெரிக்காவுக்குச் சென்றபோது அங்கு அறிவுறுத்தப்பட்டதன் பிரகாரம் ‘ஐக்கிய இலங்கை’  ‘இலங்கையர் என்ற அடையாளம்’ ஆகியவற்றைப் பேணி ‘இன அழிப்பு’ விசாரணையைக் கைவிட வேண்டும் என்ற வல்லரசுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார வியூகங்களுக்கு ஏற்பச் செயற்படும் நிலைமைக்கு இமானுவல் அடிகளாரும் தள்ளப்பட்டார்.

அருட்தந்தை இமானுவல் வயது மூப்பின் காரணமாக செயற்பட முடியாமல் இருந்ததால் அதையும் சுரேன் சுரேந்திரன் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். பின்னாளில் தாயகம் திரும்பித் தற்போது யாழ் ஆயர் இல்லத்தில் இமானுவல் தங்கியுள்ளார். எதிர்வீரசிங்கமும் தாயகத்தில் குடியேறியுள்ளார்.

இந் நிலையில் தற்போது தனித்து இயங்கும் சுரேன் சுரேந்திரன் சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மிக இரசகியமாகத் தனிப்பட செயற்பட்டு இமாலயப் பிரகடனம் என்ற திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

அதன் முகவுரை மாத்திரமே ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. உண்மையான உள்ளடக்கத்தை வாசிப்பவர்களுக்குத் தான் அதன் ஆழமான சிக்கல்கள் தெரியவரும்.

முன்னர் சிங்கப்பூர் தீர்மானம் இரண்டு வருடங்களின் பின்னர் வெளியே கசிந்தது போன்று இந்தப் பிரகடனமும் ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் கசிய முன்னதாக, தாமாகவே அதை அவர்கள் பகிரங்கமாக கையளித்து பேசி வருகிறார்கள்.

நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹேய்ம் காலநிலை மாற்றம் குறித்த விவகாரங்களுக்கான இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகராகக் கடமையாற்றினாலும் அவர் சீனாவை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டும் பேசியும் வருகிறார்.

தமிழ் நாட்டுக்குள் எரிக்சொல்ஹேய்ம் சில நகர்வுகளை சொல்ஹேயம்  முன்னெடுத்தும் வருகிறார். புதுடில்லியுடன் உறவைப் பேணக்கூடிய முறையில் அவருடைய வியூகங்கள் அமைந்துள்ளன.

சுரேன் சுரேந்திரனைப் பொறுத்தவரை ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் எவருடனும் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறார்.

அந்த அடிப்படையில் அமெரிக்காவுடன் மட்டுமல்ல இந்தியா, தென்னாபிரிக்கா, சீனா போன்ற நாடுகளுடனும் சேர்ந்து பயணிக்கக் கூடிய ஒருவர். இமாலயப் பிரகடனத்தை அவர் எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லக்கூடியவர்.

இமாலயப் பிரகடனம் தொடர்பாக இந்தியாவுடனும் பேசக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. எவ்வாறாயினும் இத் திட்டம் இலங்கையை கையாளுவதற்கான இணக்க அரசியலை முன்னெடுக்கும் திட்டம்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இத் திட்டம் உண்மையில் யாருக்கானது என்பது, சுரேன் சுரேந்திரனை இயக்கும் குறித்த சர்வதேச தன்னார்வ நிறுவனத்துக்கு மாத்திரமே தெரிந்திருக்கும்.

அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மங்கள சமரவீரவின் முயற்சியைத் தொடருகிறார் என்பதற்கும் இத் திட்டம் சிறந்த உதாரணம். சுமந்திரன் பின்னணியாக இல்லாதது போலக் காட்டிக்கொண்டு இருக்கிறாரா என்ற கேள்விகளும் ஐயங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

ஏனெனில் 2015 இல் ரணில் பிரதமராக இருந்தபோது ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி சாத்தியம் என்ற தோரணையில் முன்வைக்கப்பட்ட தீர்வுப் பொதிக்கு ஒப்பானதாகவே இமாலயப் பிரகடனத்திற்குரிய அணுகுமுறை அமைந்துள்ளது.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென மார் தட்டிய மிலிந்த மொறகொட, இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சர்களுக்குரிய முழு அந்தஸ்துடனும் இந்தியாவில் இலங்கைக்கான தூதுவராகக் கடமையாற்றுகிறார். இவர் எரிக்சொல்ஹேய்முடன் மிக நெருக்கமானவர்.

ஆகவே இலங்கை ஒற்றையாட்சி என்ற கட்டமைப்புக்கு ஏற்றவாறும் வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கிலும் இமாலயப் பிரகடனம் அமைந்துள்ளது என்பது பகிரங்கமான உண்மை.

உலக அரசியல் ஒழுங்கு இன்று குழப்பியுள்ள நிலையிலும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு வெளிப்படுள்ளது. இதனால் ‘இரு அரசுகள்’  என்பதுதான் தீர்வு என்ற கருத்து உலகில் தற்போது பலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

இப் பின்னணியில் ஏற்கனவே புஸ்வாணமாகிப் போய்விட்ட போலித் துவாரகா பற்றி இன்னும் தொடர்ச்சியாகப் பல முனைகளில் ஆராய்ந்து கொண்டிருக்கும் சில தமிழ் ஆய்வாளர்கள், இமாலயப் பிரகடனத்தின் பின்புலம் பற்றி ஆராயாமல் அமைதியாக இருப்பதன் நோக்கம் தான் என்ன?

இத் திட்டத்தை அமெரிக்காவும் சுவிஸ்லாந்து மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளும் பகிரங்கமாக வரவேற்றிருக்கின்றன. தென்னாபிரிக்க வாழ்த்தியுள்ளது.

அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நலன்கள் சார்ந்து செயற்பட்டு வரும் ஜேர்மன். சுவிஸ் நாடுகளை மையமாக் கொண்ட சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள், ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆங்கில மொழி பேசும் நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் நபர்களையே இந்தத் திட்டத்தின் முதற்சுற்றில்  ஈடுபடுத்தியிருப்பதையும் இங்கு நோக்க வேண்டும்.

இத் தன்னார்வ நிறுவனங்களின் தேவைக்கும் அந்த நிறுவனங்களில் தலைமையிலும் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கொள்ளாமல், தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புலம்பெயர்த் தமிழ் அமைப்புகளும் ஒரு புள்ளியில் ஒருமித்த குரலில் செயற்பட்டால் வல்லாதிக்க சக்திகளையும் இலங்கை அரசையும் தமது நலன்களுக்கேற்ப ஒருசேர எதிர்கொள்ள முடியும்.

மாறியுள்ள உலகச் சூழலில், ஈழத்தமிழர் அரசியல் பேரம் பேசுவதற்கான ஏதுநிலை மீண்டும் தோன்றவுள்ளது என்பதை ஈழத்தமிழர்கள் உணர்ந்து செயற்பட முன்னரே, உளவு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மறுமுனையில் செயற்பட ஆரம்பித்துவிட்டன என்ற ஆபத்தின் அறிகுறியே இந்த இமாலயப் பிரகடனம்.

தனித்தனியே இதை எதிர்கொள்ளாது, கூட்டாக எதிர்கொள்வதிலேயே ஈழத்தமிழர் அரசியற் பலம் சர்வதேச, பிராந்திய அரங்குகளில் மீண்டும் கருக்கொள்ள முடியும்.

 

http://www.samakalam.com/இமாலயப்-பிரகடனம்-பின்னண/

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகள் சேர்ந்து புலிகளை அழித்தது போல

தன்னார்வ நிறுவனங்கள் எனும் பேரில் தமிழர்களையே அழிக்கப் போகிறதா?

நல்லதொரு கட்டுரை இணைப்புக்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பிரச்சினைகளை கூறிக் கொண்டிருக்கின்றோமே ஒழிய அதற்கான தீர்வை பெறுவதாக தெரியவில்லை. தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு சுய நிர்ணய உரிமையா? அல்லது தனித்தமிழ் ஈழமா? பதில் தனி ஈழம் என்பதுதான்.  சுயநிர்ணய உரிமையை இருக்கின்றது என்று சொல்லும் இலங்கையரசு பின்னொரு காலத்தில் அதை இல்லாமல் ஆக்கிவிட கூடும், ஆகவே அதுவும் நிலையற்றது தான்.

 இலங்கைத் தமிழர்களின் உரிமைக்கான பிரச்சனையில் தடையாக இருப்பது அருகில் உள்ள இந்தியா என்கின்ற நாடு. இது மிக வெளிப்படையான உண்மை. தமிழர்களை தனி நாடு அடைய விடாமல் தடுப்பதும் அதுதான், அதேநேரம் இலங்கை அரசோடு ஒன்றிணைந்து ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வர முடியாமல் பார்த்துக் கொள்ளும் நாடும் அதுதான். இலங்கையை கையாள தமிழர்களை பயன்படுத்திக் கொள்வது தான் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எப்படி தனி நாட்டைப் பெறுவது?

 சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தி( அதிகாரம் கொடுக்கப்பட்ட தமிழர்களை பயன்படுத்தி ) எவ்வாறாயினும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுப்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் யுக்தியாக இருக்கும்.

 ஏற்கனவே ஒரு சில தடவை குறிப்பிட்டது போல கடந்த மைத்திரி ரனில் அரசாங்கத்தில் இனப்பிரச்சனைத்தீர்வுக்கான ஒரு முஸ்தீவு எடுக்கப்பட்ட பொழுது அதை ஈஸ்டர்குண்டு வெடிப்பை நடத்தி குலைத்த பெருமை இந்தியாவையே சாரும்.

 இந்தியா,தமிழர்கள் தனி நாட்டை அடைய விடுவதுமில்லை, சிங்களவர்களோடு   இணைந்து தமிழர்கள் நல்லதொரு தீர்வை பெற்று வாழ விருப்பமும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் நாங்கள் நின்று தடுமாறி இலங்கைக்குள் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படவேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.

 இந்த நிலையில் இலங்கை அரசோடு   ஏதேனும் ஒரு வகையிலான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கைக்குள் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் ஈழத் தமிழர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு தீர்வு வந்தாலும் நான் அதை வரவேற்பேன்.

 இந்தியா என்கின்ற நாடு எங்களுக்கு அருகில் ஒரு வல்லரசாக இருக்கும் வரை எம்மால் தனித்து சுய நிர்ணய உரிமையோடு இயங்க முடியாது. இந்தியா உடைந்து  சிறு நாடுகளாக சிதறும் போது மட்டும் தான் எமக்கான வாய்ப்புக்கான கதவு திறக்கும். அதுவரை எமது கலாச்சாரங்களையும் அடையாளங்களையும் இயன்றவரை பாதுகாத்துக் கொள்வது தான் தூர நோக்கோடு சிந்திக்கும் ஒருவரால் எடுக்கப்படக்கூடிய முடிவு.

 பாலஸ்தீன மக்களின் பிரச்சினையோடு எங்கள்  பிரச்சனையை ஓரளவுக்கு மேல் ஒப்பிட முடியாது. பாலஸ்தீன  மக்களுக்கு இஸ்ரேலுக்கு மட்டும் தான் பிரச்சனை, ஆனால் அருகில் இருக்கும் அரபு நாடுகள் எல்லாம் அவர்கள் பக்கத்தில். எமக்கோ இந்தியா பக்கத்தில். ஆகவே இரண்டு பேருடைய பிரச்சனையை, சூழ்நிலையை ஒப்பிடுவது  சரியல்ல.

 

 

 

 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2023 at 08:22, கிருபன் said:

ஏற்கனவே புஸ்வாணமாகிப் போய்விட்ட போலித் துவாரகா பற்றி இன்னும் தொடர்ச்சியாகப் பல முனைகளில் ஆராய்ந்து கொண்டிருக்கும் சில தமிழ் ஆய்வாளர்கள், இமாலயப் பிரகடனத்தின் பின்புலம் பற்றி ஆராயாமல் அமைதியாக இருப்பதன் நோக்கம் தான் என்ன?

துவாரகா  -  கவுரவபடுத்தபட வேண்டிய மறைந்தவர்களை  தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காக அவர்களை அவமதித்து  செய்யபட்ட ஏமாற்று மோசடி முயற்சி. மற்றயது இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடைபெற வேண்டும் என்கின்ற முயற்சி  கட்டுரையாளருக்கு வேறுபாடு விளங்கவில்லையோ.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடைபெற வேண்டும் என்கின்ற முயற்சி 

நிக்சன் சிறந்த தமிழ் பற்றாளர் தான், யதீந்திரா போன்ற இந்தியாவுக்கு வால் பிடிக்கும் ஆள் அல்லர் நிக்சன். என்றாலும் தமிழ் மக்களின் இன்றைய கையாலாகாத நிலையை முற்றிலும் புரிந்து கொள்ளாத நிலையில் அவர் போன்ற தமிழப் பற்றாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது. இவர் போன்றவர்கள் புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அளவுக்கு மீறிய ஒரு கற்பிதத்தைக் கொண்டு இருக்கிறார்கள்.

புலம் பெயர் தமிழர்களின் பலம் இன்னும் பத்து ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும். இங்கே நாட்டில் உள்ள மக்களுக்காக கவலைப் படும், அமைப்புக்களில் இணைந்து செயல்படும் நபர்களின் வயது அறுபது ஆகின்றது. அவர்களின் பிள்ளைகளோ அல்லது கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர்ந்தோரோ இந்த அமைப்புகளில்  இல்லை, அதே நேரம் பலர் இன்னும் முழுமையாக இங்கு வீடு வாசல் வேலை என்று செட்டில் ஆகவும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தீர்வுக்கான குறைந்த பட்ச வாய்ப்பு இப்போது உள்ள எங்களின் குறைந்த பட்சப் பலத்தைப் பயன் படுத்தி ஏதாவது ஒன்றைப் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தான்.

காலமும் சூழலும் மாறட்டும். அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். அது வரைக்கும் இயன்ற வரைக்கும் எமது மொழியையும், நிலத்தையும், அடுத்து வரும் இளம் சந்ததியையும்  பாதுகாப்பதே புத்திசாலித்தனம்.

விரும்பாத தீர்வு ஒன்று கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்பது நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் எனில் அதை ஏற்போம்.

எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு.

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அளவுக்கு மீறிய ஒரு கற்பிதத்தைக் கொண்டு இருக்கிறார்கள்.

புலம் பெயர் தமிழர்களின் பலம் இன்னும் பத்து ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும். இங்கே நாட்டில் உள்ள மக்களுக்காக கவலைப் படும், அமைப்புக்களில் இணைந்து செயல்படும் நபர்களின் வயது அறுபது ஆகின்றது. அவர்களின் பிள்ளைகளோ அல்லது கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர்ந்தோரோ இந்த அமைப்புகளில்  இல்லை, அதே நேரம் பலர் இன்னும் முழுமையாக இங்கு வீடு வாசல் வேலை என்று செட்டில் ஆகவும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தீர்வுக்கான குறைந்த பட்ச வாய்ப்பு இப்போது உள்ள எங்களின் குறைந்த பட்சப் பலத்தைப் பயன் படுத்தி ஏதாவது ஒன்றைப் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தான்.

காலமும் சூழலும் மாறட்டும். அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். அது வரைக்கும் இயன்ற வரைக்கும் எமது மொழியையும், நிலத்தையும், அடுத்து வரும் இளம் சந்ததியையும்  பாதுகாப்பதே புத்திசாலித்தனம்.

விரும்பாத தீர்வு ஒன்று கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்பது நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் எனில் அதை ஏற்போம்.

எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு.

உங்களது நிக்சன், யதீந்திரா தவிர்ந்த   இதர கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.