Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கால்நடைப் பண்ணைகள் தோல்வியடையும் வழிகள்

 

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

அண்மையில் இணையவழி ஊடகமொன்றில் சாவகச்சேரி பகுதியில்  உள்ள கறவை மாட்டுப் பண்ணை தொடர்பான காணொளியை காணமுடிந்தது. 34 கலப்பின மாடுகளைக் கொண்ட அந்தப் பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களை ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் செய்திருந்தார்கள். அங்குள்ள மாடுகள் உணவின்றி மெலிந்து போயிருந்தன. சிலது இறந்துமிருப்பதாக அந்தப் பண்ணையின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். இந்தக் கட்டுரை இது தொடர்பானதே. ஒரு நாணயத்தின் இரு பக்கமாக உரிமையாளரின் ஊதாசீனத்தையும் ஊழியர்களின் நிலையையும் ஆராயப் போகிறேன். எங்களது தொடருக்கு முக்கியமான பல தகவல்களை இந்த கட்டுரை கொண்டிருக்குமென நம்புகிறேன். இலங்கையின் பல கால்நடைப் பண்ணைகளின் வீழ்ச்சிக்கு  காரணமான பல விடயங்களை இது ஆராயும்.

அங்கு பணிபுரியும் ஊழியர்களான  ஒரு வயதான பெண்மணியும் ஒரு ஆண் நபரும் வெளிநாட்டிலுள்ள உரிமையாளரைப் பற்றி கடுமையாக விமர்சித்திருப்பார்கள். மாடுகளுக்குரிய தீவனத்துக்கான பணத்தை சரியாகத் தருவதில்லை. அடர்வுத் தீவனத்துக்கு பதில் அங்குள்ள வாழை இலைகளையும் தண்டுகளையும் வழங்கச் சொல்லுகிறார். நோய்க்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்துகளுக்குரிய  பணத்தை தருவதில்லை. விலங்குகளில் இரக்கமில்லை. செத்தால் சாகட்டும் எனும் இயல்பை உடையவர் என கடும் தொனியில் குற்றம் சாட்டியிருந்தனர். கால்நடைப் பிரிவின் வைத்தியர்கள் வந்து பார்த்ததாகவும், பண்ணையின் தன்மையை கருத்திற் கொண்டு, குறிப்பாக முறையான மருத்துவ ஆலோசனைகளைக் கடைப்பிடிக்காத தன்மை காரணமாக, அவர்களும் பண்ணைக்கு வருவதைத் தவிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அந்த காணொலியில் அந்தப் பகுதியின் கால்நடை வைத்திய அலுவலகத்தினர் மிக அண்மைக் காலத்தில் மாடுகளுக்கு காதடையாளமிட்டிருப்பதையும் காண முடிந்தது.

cow

இந்த மாதிரியான பல பண்ணைகளை குறிப்பாக பல வெளிநாட்டு நபர்களின்  பண்ணைகளை பார்த்திருக்கிறேன் என்ற வகையில் இந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை நான் இந்த கட்டுரையில் ஆராய்கிறேன். இந்த மாதிரியான வெளிநாட்டு உரிமையாளரின் பண்ணைகள் தோல்வியடைய இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று உரிமையாளரின் தவறான அணுகுமுறை (அதைத்தான் அந்த ஊழியர்கள் சொல்லியிருந்தார்கள்). மற்றையது ஊழியரின் தவறான நடத்தைகள் மற்றும் அனுபவமின்மை (இது தொடர்பான விடயங்கள் அந்தப் பேட்டியில் இருக்கவில்லை). எனினும் சைலேஜ் எனும் ஊறுகாய்ப் புல் தொடர்பாக அவர் பாவித்த ‘செத்தல் புல்’ எனும் வார்த்தை அவரின் நவீனப் பண்ணை தொடர்பான அறிவை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும் இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர் உரிமையாளர் தன் தரப்பு உண்மையை வெளிப்படுத்தியிருந்தார். அதிலே அவர் ஊழியர்களை கடுமையாகச் சாடியிருந்தார்.

silage

பல கால்நடைப் பண்ணைகள் மிகப்பெரிய முதலீட்டில் தொடங்கப்பட்டு, சிறிதுகாலம் சிறப்பாகச் செயற்பட்டு, தொடர்ச்சியான வருமானம் இன்மை மற்றும் வருமானக் குறைவு காரணமாக உரிமையாளர்களால் கைவிடப்படும் நிலை ஏற்படுகிறது. மேற்படி பண்ணைகளைத் தொடங்கும் உரிமையாளருக்கு மாடு வளர்ப்பு தொடர்பான பெரிய அனுபவம் இருந்திராது. பெரும்பாலும் வேறு தொழில்களைச் செய்பவராக இருப்பார். ஏதாவதொரு உந்துதல் காரணமாக மாடுகளை வளர்க்க விரும்பியிருப்பார் (youtube போன்ற இணையத்தளங்கள்). எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரும் முதலீட்டில் பெரும் கட்டிடங்களையும் பெரும் எண்ணிக்கையில் அதிக உற்பத்தியுடைய மாடுகளையும் ஒரே தடவையில் கொண்டு வந்திருப்பார். அவற்றை ஒருமித்துக் கவனிக்ககூடிய அளவில் அவர்களின் வேலையாட்களால்  முடியாமல் போயிருக்கும். மாடுகள் நோய்ப்படும்; இறக்கும்; சினைப்படாது; பாலுற்பத்தி குறையும். தொடக்கத்தில் சிறிதளவில் கிடைத்த  வருமானம் நாட் செல்லச் செல்ல  கடுமையாக குறைவடையும். இதன் காரணமாக உரிமையாளர் மனம் தளர்ந்து பண்ணைக்குரிய செலவுகளைக் குறைக்கிறார்; கைவிடுகிறார். உணவு, மருந்து போன்றவற்றை கைவிடுதல் கால்நடைகளின் நலிவுக்கும் இறப்புக்கும் காரணமாக அமைகிறது.

அத்துடன், ஊழியரின் சம்பளத்தில் கை வைக்கும் நிலையோ அல்லது வாங்கிய பொருட்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் செய்யும் நிலையோ ஏற்படுகிறது. இதனால் பொறுப்பான ஊழியர்கள் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். உரிமையாளர்கள் வெளிநாட்டிலோ தூரப்  பிரதேசங்களில் வாழ்ந்தால் வேறு வினையே வேண்டாம். தீவனம், மருந்துகளை வாங்கும் கடைகளுக்கு பணம் வழங்காததால் கடைக்காரர்களின் நெருக்கடியை ஊழியர்கள் சந்திக்க  நேரிடும். அவர்கள் பணம் கேட்டு நச்சரிப்பதும் நிகழ்கிறது.

கொள்ளளவை தாண்டிய அதிகளவான கால்நடைகளை பராமரிப்பது ஊழியருக்கு சிரமமாக இருக்கும். மாடுகள் நோய்ப்பட்டால் அதிகளவு கவனமும் வேலையும் தேவை. இதனால் மாடுகளுக்குரிய முறையான பராமரிப்பு, மருத்துவக் கவனிப்பு நிகழாத நிலை தோன்றும். சம்பளம் முறையாக கிடைக்காமலும் அதிகரித்த வேலைப்பளு காரணமாகவும் விலங்குகள் படும் வேதனையை பொறுக்க முடியாமலும் உரிமையாளருடன் முரண்பட்டு பல ஊழியர்கள் பண்ணையிலிருந்து விலகுவர். உரிமையாளரோ அவர்களுக்கு திருட்டுப் பட்டம் கட்டி வேறு ஒருவரை நியமிப்பார். அவருக்கு பண்ணையின் பிரச்சனை புரியவே பல காலம் பிடிக்கும். அதற்குள் பண்ணை மேலும் சிதைவடைந்து போயிருக்கும். ஊழியர்கள் மீண்டும் மாற்றப்படுவர். பண்ணை மேம்படாது. 

சில பண்ணைகளில் ஊருக்கு பொருத்தமற்ற, வயதான கால்நடைகள் வாங்கப்பட்டிருக்கும். வியாபாரிகள் பொருத்தமற்ற மாடுகளை இவர்களின் தலையில் கட்டியிருப்பார்கள் (விலங்குகள் கொள்வனவின் போது கால்நடை வைத்தியரின் ஆலோசனை பெறப்பட்டிருக்காது). அவ்வாறான கால்நடைகள் சில நாட்களில் சிக்கலைக் கொடுக்கத் தொடங்கும். மேலும் பல பண்ணைகள் பொருத்தமற்ற இடங்களில் அமைந்திருக்கும் (அதைக்கூட உரிமையாளரின் தலையில் யாரோ ஒருவர் கட்டியிருப்பார்). அங்கு வறட்சிக் காலத்தில் தண்ணீர் கிடைக்காது. காட்டு விலங்குகளின் பிரச்சினை காணப்படும். சில பண்ணைகள் மின்சார வசதியற்ற  இடத்தில் இருக்கும். அங்கு மின்சாரம் பெறவே உரிமையாளர் அதிக பணத்தை செலவிட்டிருப்பார். கால்நடைகளின் நோய் அவசரத்துக்குக் கூட கால்நடை வைத்தியரை கூட்டி வர முடியாது. பல பண்ணைகளில் சிகிச்சையளித்த மருத்துவ செலவுகளை கால்நடை வைத்தியருக்கு வழங்காத நிலை காரணமாகவும் பராமரிப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாததன் காரணமாகவும் கால்நடை வைத்தியர்கள் சிகிச்சைகளுக்குச் செல்லாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக தங்களுக்கு ஏற்ற பண்ணைக் கடைகளையும் சட்ட விரோத சிகிச்சையாளரையும் நாடி முறையற்ற சிகிச்சையளித்து மென்மேலும் கால்நடைகளை பலி கொடுப்பார்கள். கால்நடை வைத்தியரையும் திணைக்களத்தையும் திட்டித் தீர்ப்பார்கள். இங்கு குறிப்பிடப்பட்ட பண்ணையில் நான் மேற்கூறிய கணிசமான விடயங்கள் இடம்பெற்றிருககின்றன. வெளிநாட்டில் தங்கள் வரி விலக்குக்காக இங்கு பண்ணை நடத்தும் பல உரிமையாளரை நான் அறிவேன். அவர்களுக்கு இங்குள்ள பண்ணைகள் நட்டமடைவதோ கால்நடைகள் இறப்பதோ ஒரு பொருட்டு கிடையாது. அவை வெறும் கணக்குகள்; நட்டக் கணக்குகள், அவ்வளவுதான். 

dead cows

அடுத்து வேலையாட்களின் பிரச்சினையை ஆராய்வோம். பல பண்ணை உரிமையாளர்கள் பொருத்தமற்ற ஊழியர்கள் காரணமாக நட்டமடைந்து பண்ணைகளை மூடியிருப்பதை நான்  அறிவேன். குறிப்பாக வெளிநாட்டிலோ தூரப் பிரதேசத்திலோ உரிமையாளர் இருக்கும் நிலையெனில் வேறு கதையே வேண்டாம். ஊழியர்கள் சுருட்டும் வரை சுருட்டி பண்ணையைச் சிதைப்பார்கள். உரிமையாளருக்கு பொய்க் கணக்குக் காட்டுவார்கள். மாடுகளைப் பராமரிக்காமல் மதுபானம் மற்றும் ஏனைய களியாட்டங்களிலும் ஈடுபடுவர். கடைகளில் தீவனத்துக்கும் மருந்துக்கும் தரகு பெறுவார்கள். பொய் விற்பனைச் சிட்டையைக் காட்டுவார்கள். சில பண்ணைகளில் விலங்குகள் களவாக விற்கப்பட்டு இறந்ததாகக் கணக்குக் காட்டப்படும். பால் களவாக விற்கப்படும். நோய்ப்பட்ட விலங்குகள் முறையாக கவனிக்கப்படாது கைவிடப்படும். கால்நடை வைத்தியர் சொல்வதைச் செய்யமாட்டார்கள். ஆனால் தங்கள் விருப்பங்களுக்கு ஒத்துவராத கால்நடை வைத்தியர்களைப் பற்றி உரிமையாளருக்கு தவறான தகவல் கொடுத்து புதியவர்களை நியமிப்பார்கள். அவர்களும் இல்லை எனில் சட்ட விரோத சிகிச்சையாளர்கள். அதுவும் இல்லை எனில், பண்ணைக் கடைகளின் மூலம் சுய மருத்துவம்.

இலங்கையிலுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவென உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கால்நடைப் பண்ணைகளை நிறுவி, சிலரை பணிக்கு அமர்த்தி, அந்த ஊழியர்களின் தவறான செயற்பாடு காரணமாக, நட்டப்பட்டு பண்ணைகளை மூடியிருப்பதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் எனக்குத் தெரிந்து, பரம்பரை பரம்பரையாக கால்நடை வளர்ப்பவர்களின் பண்ணைகள்தான் வெற்றிகரமாக இயங்குகின்றன. அதுவும் தாங்கள் தாங்களே பராமரிக்கும் போது. விதிவிலக்காக ஓரிரு பண்ணைகள் தரமான வேலையாட்கள் கிடைக்கும் போது ஓரளவுக்கு வெற்றிகரமாக இயங்குகின்றன. முன்னைய தலைமுறை பண்ணையாளர்கள் நடத்தும் பண்ணைகளைத் தவிர ஏனைய பண்ணைகள், குறிப்பாக இளைய தலைமுறையின் பொறுப்பில் உள்ள பண்ணைகள், பெரும்பாலும் சிக்கலைச் சந்திக்கின்றன. இந்தத் தொழிலில் பொறுமை மிக முக்கியம். இலாபம் பெற சிலவேளை நீண்ட காலம் எடுக்கலாம். இந்த நிலையில் பல பண்ணைகள் உரிமையாளரின் அவசரத் தன்மை காரணமாக தொடங்கிய வேகத்திலேயே மூடுவிழாக் காண்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இளம் முயற்சியாளர்கள் தொடங்கியவை; வெளிநாட்டவரின் முதலீடு செய்யப்பட்டவை; உள்ளூர் உறவினராலோ வேலையாட்களாலோ நடத்தப்படுபவை. இவர்களில் பல உறவினர்கள், ஊழியருக்கு கால்நடை வளர்ப்பு அனுபவமோ நுட்பமோ இருக்காது. சிலர் சாதாரண நாட்டு மாடுகளை பராமரித்தவராக இருப்பர். நவீன பண்ணை முறை, உணவூட்டல், மருத்துவ தேவைகள் தொடர்பான அறிவும் அவர்களிடம் இருக்காது. அவர்களிடம் நல்ல, பராமரிப்பு தேவையுள்ள மாடுகளை வழங்கும்போது முறையற்ற பராமரிப்பு வழங்கப்படாமல் அவை  பாதிக்கப்படுகின்றன.

பாரம்பரியமாக வெற்றிகரமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் பிள்ளைகள் கூட இந்தத் தொழிலை விரும்பாமல் வேறு தொழில்களுக்குச் செல்வதைக் காண முடிகிறது. இதனால் அந்தக் கால்நடைகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது. பல பாரம்பரியப் பண்ணையாளர்கள் ஏற்கனவே வயது முதிர்வால் கால்நடைகளை பராமரிக்க முடியாது விற்றுவிட்டார்கள். வேலையாட்களை வைத்துப் பாராமரிப்பது, நட்டம் தரும் பல பிரச்சினைகளின் மூலப் புள்ளியாகவும் அமைகிறது.

இப்படியான பல விடயங்கள், இலங்கையின் தமிழர் பகுதியில் தோல்வியடையும் கால்நடைப் பண்ணைகளில் காணப்படுகின்றன. இங்கு கூறப்பட்டுள்ள பல காரணிகள் ஒரு பண்ணையில் இருக்கலாம். அதற்கு மேலதிகமாகவும் இருக்கலாம். இவை அனைத்தும் சேர்ந்து நல்ல தொழிலை பாதிக்கின்றன. பலரை நட்டப்படுத்துகின்றன. சிலர் தவறாக உழைக்கும் வழியாகவும் அமைகின்றன. அப்பாவி விலங்குகள் சீரழியும் நிலையையும் ஏற்படுத்துகின்றன.

(இந்த கட்டுரையில் பெரும்பாலான விடயங்களை நான் நேரடியாக கண்டிருக்கிறேன்.சில விடயங்கள் சக கால்நடை வைத்தியர்கள் மூலம் அறிந்தவை.)

தொடரும்.

 

ஒலிவடிவில் கேட்க

 
  • spotify.png
  •  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.