Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா? என்ன நடந்தது?

கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,DIPR

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உட்பட 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து 'கலைஞர் 100' என்ற பெயரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தி முடித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், திரை பிரபலங்களான ரஜினி, கமல், சிவராஜ்குமார், சிவகுமார், கார்த்தி, சூர்யா, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஹினி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, கௌதமி, வடிவேலு, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, லட்சுமி மேனன், சாயிஷா, அதிதி சங்கர், இயக்குநர்கள் டி.ராஜேந்திரன், ஷங்கர், பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இதில் ஆந்திர அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ரோஜாவும் கலந்து கொண்டார்.

சுமார் 4.30 மணியளவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளோடு துவங்கிய கலை விழாவில் 100 குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நிகழ்வு நடைபெற்றது. பிறகு வேல்முருகன், ராஜலக்ஷ்மி, செந்தில், டிரம்ஸ் சிவமணி, லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்டோரின் இசை நிகழ்வுகள் நடைபெற்றது.

மேலும், இடையிடையே முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த ஆவணப் படங்கள் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய நாடகம் போடப்பட்டது. இந்நிகழ்விற்கு வந்திருந்த பல உச்ச நட்சத்திரங்களும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தங்களது அனுபங்கள் குறித்தும் பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 

சூர்யா மற்றும் தனுஷ்

கலைஞர் நூற்றாண்டு விழாவில் தனுஷ்

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

இந்த விழாவில் முதலில் பேசிய நடிகர் சூர்யா, "சினிமா மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்ற டிரெண்டை உருவாக்கியது கலைஞர்தான். அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர்," என்று பேசினார்.

“கடந்த 1952ஆம் ஆண்டு பராசக்தி படத்தில் கைரிச்ஷாவை ஒழிக்க வேண்டும் என்ற வசனம் எழுதியிருப்பார். அதை அப்படியே 17 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்து உண்மையாக்கிக் காட்டினார் அவர்,” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து பாராட்டிப் பேசினார் நடிகர் சூர்யா.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ், "கலைஞர் ஐயாவின் அரசியல் அல்லது திரை வாழ்வு குறித்துப் பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை," என்று தொடங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

முதன்முதலில் ஒரு பட பூஜைக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியை வரவேற்கச் சென்றிருந்தபோது “வாங்க மன்மத ராஜா” என்று அவரை வரவேற்று, வரவேற்பிதழைப் பார்த்துவிட்டு மொத்த கதையையும் சொல்லிவிட்டதாகக் கூறினார் தனுஷ்.

மேலும் எந்திரன் படத்தை அவரோடு அமர்ந்து பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து, "அவர் ஒரு மாபெரும் கலைஞர் மட்டுமல்ல, சிறந்த ரசிகரும் கூட' , ஒரு சிலர் மறைந்துவிட்டாலும், அவர்கள் நம்மோடு இருப்பது போலவே இருக்கும், எனக்கு கலைஞரும் அப்படித்தான்," என்று தெரிவித்தார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய அவர், இத்தகைய எளிய அணுகத்தக்க முதல்வர் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.

 

தொகுப்பாளராக மாறிய கமல்ஹாசன்

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கமல் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

"உயிரே உறவே , தமிழே வணக்கம்" என்று தனது உரையைத் தொடங்கிய நடிகர் கமலஹாசன் மேடையில் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த தொகுப்பாளர் பகுதியில் சென்று பேசத் தொடங்கினார். அதற்குக் காரணமாக, "கலைஞரின் மேடைகளில் எப்போதும் நான் ஓரமாகவே நிற்பேன்," என்று கூறினார்.

முதலில் விஜயகாந்த் இறுதி நிகழ்வை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் “கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாதவை" என்று பேசிய அவர் தன்னுடைய தமிழ் ஆசான்களில் முதன்மையானவர் "கலைஞர், அடுத்து சிவாஜி, எம்.ஜி.ஆர்,” என்று தெரிவித்தார்.

"பாடல்களின் பிடியில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவை வசனம் நோக்கித் திருப்பியவர் கலைஞர்தான்," என மேடையில் பதிவு செய்தார் கமலஹாசன்.

“எம்ஜிஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளைத் தன்னுடைய எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் அவர்” என்று கூறிய கமல்ஹாசன், "அவர் தமிழ் சினிமாவிற்கு மட்டும் சொந்தமில்லை என்பதற்கு உதாரணம் அமெரிக்க இயக்குநரான எல்லீஸ் ஆர். டங்கனுக்கு மிகவும் பிடித்தமானவர் கலைஞர் என்பதே," என்று தெரிவித்தார்.

"நேருவின் மகளே வருக துணிச்சலான ஆட்சி தருக” எனத் துணிச்சலாகச் சொல்லும் ஒரு தைரியமான தலைவர் அவராக மட்டுமே இருந்திருக்க முடியும் என்று கூறினார் நடிகர் கமல்ஹாசன்.

மேலும் அவருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள தனிப்பட்ட உறவு குறித்துப் பேசிய கமலஹாசன், “அவரைப் பார்க்கப் போனால் யாராவது இருந்தால் வாயா கமல் என்பார், தனியாகச் சென்றால் வா என்று அழைப்பார்,” அந்தளவு நெருக்கமானவர் எனக் கூறினார்.

"கலைஞர் எனக்கு அன்பாகச் சூட்டிய 'கலைஞானி' என்ற பட்டம் இன்னமும் என்னைத் தொடர்கிறது. தமிழ் சினிமாவில் நீள அகலம் எதுவானாலும், மக்களுடன் பேசும் ஒரு வாய்ப்பை அவர் விட்டதே இல்லை. இது அவரிடம் இருந்து நான் கற்ற பாடம். அதனால்தான், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நான் பேசி கொண்டிருக்கிறேன்," என்று தெரிவித்தார் கமல்ஹாசன்.

 

ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா?

கலைஞரின் பேச்சாற்றல் குறித்துப் பேசிய ரஜினிகாந்த், "சில பேர் பேசுவார்கள், அவர்களுடைய மொழி திறமை, பேச்சாற்றல், அவர்களுடைய அறிவு ஆகியவற்றைக் காட்டுவதற்காகவே பேசுவது போல் இருக்கும்.

அவர்கள் பேசத் தொடங்கினால் எப்போது முடிப்பார்கள் எனத் தோன்றும் (இந்த வசனத்தை ரஜினி மேடையில் பேசும்போதே கீழே இருந்த ரசிகர்கள் கமல்ஹாசனைதான் சொல்கிறார் என்று சிரிக்க சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது).

இதுவே, சிலர் பேசத் தொடங்கினால் ஐய்யோ இவர்கள் முடிக்கக் கூடாதே எனத் தோன்றும். கலைஞரின் பேச்சு அப்படி இருக்கும். அவரின் பேச்சில் தெனாலிராமனின் நகைச்சுவை இருக்கும், சாணக்கியரின் ராஜதந்திரம் இருக்கும், பாரதியாரின் கோபம் இருக்கும்.

பாமரர்கள் இருக்கும் சபையில் பாமரனுக்கே பாமரனைப் போல் பேசுவார். அறிஞர்கள் இருக்கும் சபையில் அறிஞர்களுக்கே அறிஞராகப் பேசுவார். கவிஞர்கள் இருக்கும் அவையில் கவிஞர்களுக்கே கவிஞராகப் பேசுவார்" என்று கூறினார் ரஜினிகாந்த்.

‘கலைஞர் எளிமையானவர்’

கலைஞர் நூற்றாண்டு விழா

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

அடுத்ததாக மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “மு.க.ஸ்டாலினை எனக்கு 1974இல் இருந்தே தெரியும். அப்போதே ராயப்பேட்டை வீதிகளில் பொதுக் கூட்டங்களில் அவர் பேசுவதை இரவு முழுவதும் கேட்டிருக்கிறேன். அப்போது இருந்த அதே பேச்சு இப்போதும் அவரிடம் இருக்கிறது. கடினமாக உழைத்து தற்போது முதல்வராகியுள்ளார்," எனத் தெரிவித்தார்.

எஸ்.பி.முத்துரமான எப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தே பேசிக்கொண்டிருப்பார் எனத் தெரிவித்த ரஜினிகாந்த், "அதன் மூலமாகத்தான் அவரை அதிகம் தெரிந்துகோள்ள முடிந்தது" எனவும் கூறினார்.

"கடந்த 1955இல் மலைக்கள்ளன் படத்திற்கு வசனம் எழுதிய பணத்தில் வாங்கிய வீடுதான் கோபாலபுரம் வீடு. அதில்தான் அவர் கடைசி வரை வாழ்ந்தார். அந்த வீட்டில் எதையுமே மாற்றவில்லை. மிகவும் எளிமையாக ஆடம்பரமே இல்லாது வாழ்ந்தார்," என்று குறிப்பிட்டார்.

இதுமட்டுமின்றி, கருணாநிதி மட்டும் சினிமா துறையிலேயே இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ எம்.ஜி.ஆர், சிவாஜிகளை உருவாக்கியிருப்பார் என்றும் ஆனால் அவரை அரசியல் எடுத்துக்கொண்டது என்றும் வியந்தார் ரஜினிகாந்த்.

கருணாநிதியின் திறமை குறித்து வியந்து பேசிய ரஜினிகாந்த்

கலைஞர் நூற்றாண்டு விழாவில் நயன்தாரா

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

எப்போதும் ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனால், கருணாநிதிக்கு இரண்டுமே கைகூடியிருந்தது என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

"எழுத்து இல்லை என்று சொன்னால் மதங்கள், புராணங்கள், சரித்திரம், வரலாறு, அறிவியல், விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசாணை, அரசன் எதுவுமே இல்லை.

எழுத்து, ஓர் இயற்கை சக்தி, அது கலைஞருக்குக் கைகூடி இருந்தது. அவருடைய சில கடிதங்களைப் படித்தால் இன்னமும் கண்ணில் கண்ணீர் வரும்," என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்.

 
கலைஞர் நூற்றாண்டு விழா

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

கருணாநிதி - ரஜினிகாந்த் சந்திப்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின்

பட மூலாதாரம்,TNDIPR

முதல் முறையாக நேரடியாக முன்னாள் முதல்வரைச் சந்தித்த தருணம் மறக்கவே முடியாதது என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த் அந்த சந்திப்பு குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

“என் இத்தாலியன் பியட் காரை எடுத்துக்கொண்டு ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் விடும் நேரடத்தில் கையில் சிகரெட்டை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னாடி திடீரென சில கார்கள் வந்தன. நான் வழி விட்டேன். திடீரென அதில் ஒரு கார் மெதுவாக என் பக்கத்தில் வந்தது. அதன் கண்ணாடி இறங்கியது. யார் எனப் பார்த்தால் உள்ளே கலைஞர் இருந்தார். சிகரெட்டை தூக்கிப் போட்டுவிட்டு பார்த்தால், அவர் கையை அசைத்தவாறு புன்னகைத்தார். அது இன்னும் ஞாபகம் இருக்கு.”

“"அடுத்ததாக, நான் நடித்த ஒரு படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் தீவிர ரசிகன். நல்ல நண்பரும்கூட. அவர் ஒருநாள் என்னிடம், நமது படம் சூப்பர் ஹிட் ஆகப் போகிறது. கலைஞர் வசனம் எழுதுகிறார் எனக் கூறினார். ஆனால், ஏதோ ஒரு மாதிரியாகத் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறேன். கலைஞருடைய வசனங்கள் கடினமாக இருக்குமே என அஞ்சினேன்.

பின்னர் இருவரும் கோபாலபுரம் சென்று கலைஞரைப் பார்த்தோம். நானே அவரிடம், 'உங்கள் வசனத்தை என்னால் பேச முடியாது. கொஞ்சம் கடினமாக இருக்கும்' என்று கூறினேன். அதற்கு அவர் முதலில் எனக்கு ஏற்றவாறு எழுதிக்கலாம் எனச் சொன்னாலும் நான் அடம் பிடித்த காரணத்தால் தயாரிப்பாளரைக் கூப்பிட்டு படப்பிடிப்பு தேதியைக் குறிப்பிட்டு, அதற்குள் தர முடியாது என்பதால் வேறு ஒருவரை வைத்து எழுதிக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார். அப்படிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் கலைஞர்," என்று தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த்.

மேலும் பேசிய அவர், “மேலும் பேசிய அவர், "வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அப்போது அந்த நடிகர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அவரை யாருக்கு ஓட்டு போட்டீர்கள் எனக் கேட்க அவர் இரட்டை இலை எனச் சொல்லிவிட்டார். அது டிரெண்டானது.

அன்று மாலை படம்‌ பார்க்கப் போக வேண்டும். ஆனால் எப்படிப் போவது என்று தெரியாமல் குளிர்க் காய்ச்சல் என்று கூறிவிட்டார் அந்த நடிகர். ஆனால் அவர் எப்படியாவது வர வேண்டும் என்று கலைஞர் கூறிவிட்டார். அதற்குப் பிறகு அந்த தியேட்டருக்கு சென்றபோது 'வாங்க காய்ச்சல் என்று சொன்னீர்களாமே, வாங்க வந்து சூரியன் பக்கத்துல உக்காருங்க' என்று கூறினார் கலைஞர். அந்த நடிகர் நான்தான்,” என்று கூட்டத்தில் போட்டு உடைத்தார் ரஜினிகாந்த்.

இப்படி முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்த் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருடன் சேர்ந்து 'கலைஞர் சிறப்புக் கலை மலரை' வெளியிட்டார். இதை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் பெற்றுக்கொண்டனர்.

 

நன்றியுரை கூறிய முதலமைச்சர்

கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின்

பட மூலாதாரம்,DIPR

பிரபலங்கள் உரைக்குப் பின்னால் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் உரையாற்ற வரவில்லை, நன்றி கூற வந்திருக்கிறேன் என்றார்.

மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். இங்கு முதல்வர் அல்லது திமுக தலைவராக அல்ல, கலைஞரின் மகனாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் திரைத் துறையினருக்கு சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அதில், நான்கு படப்பிடிப்பு தளங்களோடு எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டி 25 கோடி செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், மேலும் பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி செலவில் திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

அதில் எல்இடி வால், அனிமேஷன், விஎப்எக்ஸ், போஸ்ட் மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் வசதிகள், 5 ஸ்டார் ஓட்டல்கள் வசதி ஆகியவை இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

https://www.bbc.com/tamil/articles/cyr3j3ykpxvo

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்100 படுதோல்வி! கமல் ஜால்ராவும் - கருணாநிதி வகையறாவும்! 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.