Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Play video, "அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?", கால அளவு 2,40
02:40p0h4ncm9.jpg
காணொளிக் குறிப்பு,

அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?

2 மணி நேரங்களுக்கு முன்னர்

பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'அயலான்' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கலகலப்பான படமாக வந்துள்ளது.

வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், பணத்தாசை பிடித்த தொழிலதிபர் ஒருவரின் பிடியிலிருந்து சமூகத்தைக் காக்க, விவசாயியான சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுகிறது.

படத்தின் முதல் பாதியில், ஏலியனின் பார்வையில் உலகைக் காட்டும் காட்சிகள் சிரிப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. கருணாகரன், யோகி பாபு ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர். இரண்டாவது பாதியில் படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது என்று ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளன.

ஏலியன் படங்கள் புதிதல்ல என்றாலும் அவை பெரும்பாலும், ஹாலிவுட் படங்களிலேயே பயன்படுத்தப்பட்டது. தமிழ் ரசிகர்கள் அதை மொழிபெயர்ப்புப் படமாக மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கதை ஒன்றில் ஏலியனை பொருத்திப் பார்த்து ரசிக்கும் வாய்பை இயக்குநர் ரவிக்குமார் உருவாக்கி தந்திருக்கிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, உருவாகி வரும் அயலான், கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தாமதமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களை இனி பார்க்கலாம்.

அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

 

அயலான்: தமிழ் பேசும் ஏலியன்

Ayalaan movie review

பட மூலாதாரம்,THEAYALAAN/@X

முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை நம்பியே படக்குழு இதில் இறங்கியிருப்பதைக் காண முடிவதாக தினமணி தன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “அதற்கேற்ற தகுந்த உழைப்பை கிராபிக்ஸ் குழு சரியாகக் கொடுத்திருக்கிறது. ஏலியனை திரையில் துறுத்தல் இல்லாமல் கொடுத்து ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறது படக்குழு.

ஏலியனை முகபாவனைகளுடன் நடிக்க வைத்திருப்பது, அதற்கு உணர்ச்சிகளைப் பயன்படுத்தியிருப்பது என மெனக்கெட்டிருந்தனர்,” என்று தினமணி விமர்சனம் செய்துள்ளது.

மேலும், “நாம் யூகிக்கக்கூடிய கதை என்றாலும் அதை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதில் அடங்கியிருக்கிறது இயக்குநரின் திறமை. படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று நீண்டதாக இருந்தாலும், அதன் பின் மெதுவாக மெதுவாக வேகமெடுக்கத் தொடங்குகிறது திரைப்படம், ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால நடிப்பு சாயல் படத்தில் தெரிகிறது.

ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு அவரின் பழைய பாணியிலான நடிப்பை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது,” என்றும் அயலான் திரைப்படத்தைப் பற்றி தினமணி கூறுகிறது.

 

ரசிக்க வைக்கும் ஏலியன்

Ayalaan movie review

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

ஹாலிவுட் படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலப்பயணம் என்ற கருவை இயக்குநர் ரவிக்குமார், 'இன்று நேற்று நாளை' என்ற படத்தில் எளிய தமிழ் கதை மூலம் அனைவருக்கும் புரியும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். ஒன்பது ஆண்டுகள் கழித்து, அவருடைய இரண்டாவது படத்திலும் சையன்ஸ் ஃபிக்ஷன் கருப்பொருளைக் கொண்டுள்ளார்.

அதுகுறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், "ஹீரோ அறிமுக பாடல், காதல், இரண்டு நகைச்சுவை நடிகர்கள், ஒரு கார்ப்பரேட் வில்லன், கொஞ்சம் அம்மா சென்டிமென்ட், இயற்கை முறை விவசாயம் குறித்த சில அறிவுரைகள் என தமிழ் படத்துக்கான எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன," என்று விமர்சித்துள்ளது.

எனினும், சூப்பர் பவர், பறக்கும் தட்டு, ரோபோக்கள் என ஹாலிவுட் படங்களில் பார்த்த விஷயங்களுக்கு நிகராக இயக்குநர் ரவிக்குமார் கதையில் நிறைய டிவிஸ்டுகள் வைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.

இந்தப் படம் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளதற்கு இதுவே காரணம் எனப் பாராட்டியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், "படத்தின் முதல் பாதியில் டாட்டூ என்ற ஏலியனை ரசிக்கும்படியான கார்ட்டூன் கதாபாத்திரம் போல் பயன்படுத்தி நகைச்சுவையைத் தூண்டியிருக்கிறார் இயக்குநர்.

விசுவல் எஃபெக்ட்ஸ் திரையில் காண்பதற்குத் தங்கு தடையின்றி இருப்பது, படத்தில் கூடுதல் மேஜிக் செய்கிறது,” என்று தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.

 

அயலான் காட்டும் புதிய உலகம்

Ayalaan movie review

பட மூலாதாரம்,THEAYALAAN/@X

இந்து தமிழ் திசை நாளிதழ் தனது விமர்சனத்தில், “தமிழில் இதுவரை பார்த்திராத அளவு கிராபிக்ஸ் காட்சிகளில் அத்தனை நேர்த்தி. குறிப்பாக, ஏலியனின் உடல் பாகங்கள் தொடங்கி அதன் அசைவுகள், உடல்மொழி வரை துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன," எனப் பாராட்டியுள்ளது.

"தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். வழக்கமாக இந்திய சினிமாக்களில் கிராபிக்ஸ் சொதப்ப காரணம், அதன் லைட்டிங்கில் கவனம் செலுத்தாததுதான் என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் இதில் படம் முழுக்க அப்படியான குறை எதுவும் இல்லாமல் துல்லியமான கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு. ஏலியனும் கியூட்டாக வடிவமைப்பட்டுள்ளதால் குழந்தைகளைக் கவர வாய்ப்புள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது.

 

ஏ.ஆர்.ரஹ்மான் நடனம்

Ayalaan movie review

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், “அசர வைக்கும் காட்சிகள் மூலம், இந்த திரைப்படம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். திகைப்பூட்டும் காட்சிகள் வேறொரு உலகத்துக்கு உங்களை எடுத்துச் செல்லும்,” என்று கூறுகிறது.

“படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள். அதை ஓரிடத்தில்கூட பிசிறு தட்டாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது கிராஃபிக்ஸ் குழு. ஏலியனுக்கு பின்னணிக் குரலாக வந்திருக்கும் சித்தார்த்தின் குரல் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது,” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர் ரஹ்மான், ஒரு பாடலில் சிவக்கார்த்திகேயனுடன் சேர்ந்து நடனமாடியும் உள்ளார். மேடைகளில் அதிக சத்தம் போட்டுக்கூட பேசாத ரஹ்மானை பார்த்த ரசிகர்களுக்கு, அவர் நடனமாடியிருப்பது கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. இயக்குநர் ரவிக்குமாரும் அதே பாடலில் நடனமாடியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cmmddq9jne4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ayalaan Review: தமிழ் பேசும் Alien; SK-ன் ஆக்‌ஷன் அவதாரம் - அயலானை ரசிகர்களுக்கு பிடிக்குமா?

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் அயலான் - 1,500 பேரின் உழைப்பில் தத்ரூபமாக உருவானது எப்படி?

அயலான் உருவான கதை

பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம், உண்மைக்கு மிக நெருக்கமான முழுநீள VFX காட்சிகளுக்காக அதிகம் பாராட்டை பெற்றுள்ளது. தமிழில் பேசும் ஏலியனாக தோன்றியுள்ள ‘டேட்டூ’ கதாபாத்திரம் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த ஏலியனை உருவாக்க 1,500 பேர் சேர்ந்து உழைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

“இந்திய சினிமாவிலேயே VFX கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட முழு நீளக்கதை இதுவரை வெளிவந்ததில்லை. அதை முதலில் செய்திருப்பது அயலான் என்பதில் எங்களுக்கு பெருமை” என்றார் VFX காட்சிகளை தயாரித்த பேந்தம் எஃப் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிஜாய் அற்புதராஜ்.

“இந்தப் படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. அப்போது வெளிவந்திருந்தால், இந்த முயற்சிகள் இன்னமும் புதிதாக பார்க்கப்பட்டு இருக்கும். கடந்த ஆறு ஆண்டுகளில் வேறு பல படங்கள் VFX தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளன. இருந்தாலும் நாங்கள் அயலானில் செய்திருப்பதை எந்த படமும் செய்யவில்லை” என்று அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

Ayalaan VFX

பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ

Ayalaan VFX

பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ

அம்பத்தூரில் உருவாக்கப்பட்ட VFX

ஹாலிவுட் படங்களைத்தான் தமிழில் மொழி மாற்றம் செய்து பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் அயலான் திரைப்படம் அதை மாற்றியமைத்துள்ளது என்கிறார் படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார், “அயலான் படத்துக்கு அவதார் படக்குழுவினர் பங்களித்ததாக சமூக ஊடகங்களில் சிலர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. அம்பத்தூரில் உள்ள குழுவினர் தான் இந்த VFX அனைத்தையும் உருவாக்கியது” என்கிறார்.

அடுத்தடுத்த திரைப்படங்களும் அறிவியல் தொழில்நுட்பத்துடனே அமைந்திடும் என்பதுடன், இன்னும் பிரமாண்டமான வடிவத்தில் அயலான்-2 உருவாக்கப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் அவர்.

Ayalaan VFX

பட மூலாதாரம்,RAVIKUMAR

ஏலியனுக்கு எது அடிப்படை?

அயல் கிரகத்தில் வாழும் உயிரினங்களை காட்சிப்படுத்துவதற்கு கற்பனையை மட்டுமே நாட வேண்டியுள்ளது. இப்போது பயன்படுத்தப்பட்டுள்ள ஏலியன் உருவத்திற்காக ஆய்வுகள் செய்து முடிவுக்கு வந்தோம் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். அதுபற்றி அற்புதராஜ் கூறும்போது “இந்த கதாபாத்திரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. எனவே ஏலியனின் உருவம் குள்ளமாக இருக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே இயக்குநர் சொல்லிவிட்டார். பார்ப்பதற்கு க்யூட்டாக கார்ட்டூன் கதாபாத்திரம் போல இருக்க வேண்டும் அதேநேரம் பொம்மை படம் என்றும் யாரும் கூறிவிடக்கூடாது அதற்கேற்ற வகையில் உருவம் மற்றும் நிறம் தேர்வு செய்யப்பட்டது.

கிரே ஏலியன் (Grey alien) என்று கருத்தாக்கத்தை கொண்டுதான் இந்த ஏலியன் உருவாக்கப்பட்டது. கிரே ஏலியன் என்பது உலகம் முழுக்க இருக்கக்கூடிய ஒரு கருத்தாகும். ஏலியன் வந்ததை நேரில் பார்த்ததாக சொல்லக் கூடியவர்கள் அது எப்படி இருந்தது என்று விவரித்த விவரங்களைக் கொண்டு ஹாலிவுட் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட உருவம் தான் இந்த கிரே ஏலியன். எனவே இது யார் ஒருவருக்கும் சொந்தமானது அல்ல. அதன் அம்சங்களை எடுத்துக்கொண்டு நமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொண்டோம்” என்கிறார் அற்புதராஜ்.

Ayalaan VFX

பட மூலாதாரம்,X/@BEJOYRAJ

ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் டைனோசர் என்ற அழிந்துபோன உயிரின வகையின் தோற்றத்தை மீண்டும் வடிவமைத்திருப்பார்கள். அதே போன்ற ஒரு முயற்சிதான் அயலான் என்கிறார் ரவிக்குமார், “ஜுராசிக் பார்க், டைட்டானிக் போன்ற படங்கள் எப்படி பிரமாண்டமாக இருக்கின்றனவோ, அதுபோன்ற படங்களை தமிழில் உருவாக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறோம். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் நம் ஊரிலேயே இருக்கின்றன.” என்று குறிப்பிட்ட அவர் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளன என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

“ஹாலிவுட் நம்மை விட இன்னும் முன்னேறியதாக இருக்கிறது. அவர்களின் சந்தை பெரியது. எல்லா துறைகளிலும் இருப்பது போல, அவர்களின் நிபுணத்துவமும் இதிலும் அதிகம். எனவே, இப்போதிருக்கும் சூழலில் நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன” என்று அவர் கூறினார்.

Ayalaan VFX

பட மூலாதாரம்,X/@@RAVIKUMAR_DIR

 

அயலானின் தமிழ் முக பாவனைகள்

டேட்டூ என அழைக்கப்படும் தமிழ் ஏலியன், பேச்சில் மட்டுமல்லாது முக பாவனைகளின் வழியாகவும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. “ஏலியன் திரையில் தோன்றினால் மட்டும் போதாது. இந்தப் படத்தில் ஏலியன் சிரிக்க வேண்டும், அழ வேண்டும், கோபப்பட வேண்டும். மனிதரை போல பல உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதை பார்க்கும் ரசிகர்களுக்கு புரியும்” அதற்காக பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம் என விவரித்தார் அற்புதராஜ்.

“முக பாவனைகளை துல்லியமாக வெளிக்கொணர ஏலியனின் வாய், கண் மற்றும் கன்னத்தில் உள்ள சதைகள் மிக முக்கியமானவை. Performance capture என்ற தொழில்நுட்பத்தின் மூலம், எங்கள் குழுவினர் பல பேரின் முக பாவனைகள் பதிவு செய்யப்பட்டு, அவை ஏலியனுக்கு ஏற்ற விதத்தில் பொருத்தப்பட்டன. இதனை சாத்தியமாக்கிட ஒருவர் ஹெல்மெட் போன்ற கருவியை தலையில் மாட்டிக் கொள்ள வேண்டும். அதன் மீது இருக்கும் ‘கோ ப்ரோ’ என்ற கேமரா முகபாவனைகளை பதிவு செய்துகொள்ளும். பின்னர் அதனை கணிணி வழியாக அயலானுக்கு மாற்றினோம்” என்று விளக்கினார்.

Ayalaan VFX

பட மூலாதாரம்,RAVIKUMAR

மேலும் உடல் அசைவுகளை மொத்தமாக பதிவு செய்துகொள்ளும் தொழில்நுட்பமும் இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது, அதுபற்றி அற்புதராஜ் விளக்கும்போது, “மற்ற படங்களில் ஸ்டுடியோவில் தான் மோஷன் கேப்சர் நடைபெறும். அதாவது ஒரு நபரின் உடல் அசைவுகளை பதிவு செய்யும் முறை. ஆனால் அயலான் திரைப்படத்திற்காக படப்பிடிப்பு தளத்திலேயே, பாடி சூட் என்பதை ஒருவர் அணிந்து கொண்டு, அவருடைய அசைவுகள் பதிவு செய்யப்பட்டன” என்று விளக்கினார்.

Ayalaan VFX

பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ

 

1,500 பேர் உழைப்பு

அயலான் திரைப்படத்தை உருவாக்குவதில் 1,500 பேர் உழைத்துள்ளார்கள் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, Phantom FX என்ற நிறுவனத்தில் மட்டும் 650 பேர், மற்றும் அந்த நிறுவனத்தை சார்ந்து இயங்கிய சிறிய நிறுவனங்களின் வழியாக 800 பேர் பணியாற்றியுள்ளனர். ஒரு வாகனம் உற்பத்தி செய்யும்போது எப்படி துணை நிறுவனங்களிலும் உற்பத்தி நடக்குமோ அப்படித்தான் இந்த படத்திற்கான வேலைகளும் நடந்தன என படக்குழுவினர் விளக்கினார்கள்.

“VFX குழுவில் 16 துறைகள் உள்ளன. இந்த துறையின் செயல்பாடுகள் ஒரு பொம்மலாட்ட தயாரிப்பு போன்றவைதான். முதலில் பொம்மைகளுக்கான உருவத்தை தயாரிக்க வேண்டும். அது VFX -ல் மாடலிங் எனப்படும். அந்த பொம்மைக்கு கம்பிகள் கட்டி அதை அசைக்க வேண்டும். அது ரிக்கிங் எனும் துறையால் செய்யப்படும். அடுத்து அந்த பொம்மையை நடக்க வைக்க வேண்டும். அது அனிமேஷன் என்னும் துறை செய்யும். அதன் சருமம் எப்படி இருக்க வேண்டும் என்பதை டெக்ஸ்சர் துறை தீர்மானிக்கும்.

அதே போன்று ஆடைகள், தலைமுடி என ஒவ்வொரு சிறு சிறு விஷயத்தையும் வெவ்வேறு துறையினர் செய்தனர். ஒரு ஷாட் முழுமை பெற 40 பேர் தேவைப்படும். அயலான் படத்தின் மொத்த செலவில் 50%க்கும் மேல் VFXக்காக செலவிடப்பட்டது. ஏனென்றால், VFXஎன்பது இந்தப் படத்தில் ஒரு பகுதி அல்ல, படம் முழுக்கவே VFX தான்.” என்று கூறுகிறார் அற்புதராஜ்.

Ayalaan VFX

பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ

 

ஒரு திரைப்படத்தை முழு நீள VFX தொழில்நுட்பத்துடன் உருவாக்கும் போது அதற்கான செலவுதான் முதல் சவாலாக உள்ளது. இத போன்ற தமிழில் செய்ய முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. இதுபோன்ற தடைகளையும் தயக்கங்களையும் அயலான் உடைத்துள்ளதாக அற்புதராஜ் கூறுகிறார். தற்போது வரை இந்தப் படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

“VFX செய்ய, மும்பை செல்ல வேண்டும், ஹாலிவுட் செல்ல வேண்டும். அங்கு சென்று அதிகமான செலவு செய்தால் தான் தரமான VFX கிடைக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் அயலான் உடைத்துள்ளது. எங்கள் நிறுவனம் 15 வருடங்களாக இங்குதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்களை முழுமையாக யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என நம்பிக்கையுடன் பேசுகிறார் அற்புதராஜ்.

https://www.bbc.com/tamil/articles/ce4d3dv777do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.