Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ஜனாதிபதியின் வடக்கு விஜயம்! நிலாந்தன்.

ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து தொடங்கியிருக்கிறார். நான்கு நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு வகைப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

வடக்கில் உள்ள தொழில் முனைவோர், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள், பல்கலைக்கழக சமூகம் ,வடக்கில் இருந்து நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியே சென்று சாதனை புரிந்தவர்கள்… போன்ற பலரையும் அவர் சந்தித்துப் பாராட்டிப் படமெடுத்துக் கொண்டார். நல்லூரில் அமைந்திருக்கும் ரியோ க்ரீம் ஹவுஸ்சில் ஐஸ்கிரீம் அருந்தினார். அப்பொழுது வடக்கின் சாதனையாளர்கள் பலரை அழைத்துப் பாராட்டிப் படம் எடுத்துக் கொண்டார்.

அவர் அழைத்த எல்லாத் தரப்புக்களும் அவரை சந்தித்தன.அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளாத ஒரே ஒரு தரப்பு நல்லை ஆதீனம்தான். வழமையாக அரசியல் தலைவர்களும் ராஜதந்திரிகளும் நல்லை ஆதீனத்தை அவருடைய இடத்துக்குச் சென்று சந்திப்பார்கள். அப்படித்தான் யாழ் மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரையும் தேடிச் சென்று சந்திப்பார்கள்.

ஆனால் இம்முறை நல்லை ஆதீனத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஆதீனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே ரணில் வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றும் ஆதீனம் குற்றம் சாட்டியது. அதனால் சந்திப்பில் ஆதீனம் கலந்து கொள்ளவில்லை. மட்டுமல்ல, ஒரு விளக்க அறிக்கையையும் வெளியிட்டது. ஒரு இந்து ஆதீனம் ஜனாதிபதியை சந்திக்க மறுத்திருக்கிறது.

அதேசமயம் கச்சேரியில் ஜனாதிபதிக்கு எதிராக காட்டப்பட்ட எதிர்ப்பில் ஒரு இந்துச் சாமியார் காவி உடையோடு காணப்படுகிறார். அவரோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் காணப்பட்டது.யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் காணவில்லை.அது ஒரு சிறிய எதிர்ப்பு என்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் அவருக்கு காட்டப்பட்ட ஒரே எதிர்ப்பு அதுதான்.

ஜனாதிபதி யூஎஸ் ஹோட்டலில் புத்திஜீவிகள் மற்றும் குடிமக்கள் சமூகம் என்று அழைக்கப்பட்ட ஒரு பகுதியினரைச் சந்தித்தார்.அதில் அதிகளவு அரசு அதிகாரிகளும் காணப்பட்டார்கள். சந்திப்பின் போது அவர் 13ஆவது திருத்தத்தை வலியுறுத்திப் பேசினார்.மேல் மாகாணத்தில் இருப்பது போல பிராந்திய பொருளாதார வலையங்களை வடக்கிலும் கட்டி எழுப்பலாம் என்று ஆலோசனை கூறினார் .13ஆவது திருத்தத்துக்குள் எல்லாமே இருக்கிறது, நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், நாங்கள் அதற்கு வேண்டியதைச் செய்வோம் என்றும் உறுதியளித்தார். தென்கொரியா,யப்பான்,பிரித்தானியா போன்ற நாடுகளை உதாரணமாகக் காட்டி, அங்கெல்லாம் கூட்டாட்சி கிடையாது, ஆனாலும் அபிவிருத்தி உண்டு, பொருளாதார வளர்ச்சி உண்டு என்று பேசினார். 13ஆவது திருத்தத்திற்குள் போதிய அதிகாரங்கள் உண்டு அதைப் பயன்படுத்துங்கள் என்று கூறினார் .

பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியில் உரையாற்றும்போது, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து உதவிகளைப் பெறலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் பல கேள்விகளோடு அங்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் மருத்துவ பீடத் தலைவர் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் கூறிய ஜனாதிபதி அப்பேராசிரியர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டபோது, நான் முதலில் சொல்வது உங்களுக்கு விளங்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அதன்பின் எனைய பேராசிரியர்கள் அந்த இடத்தில் கேள்வி கேட்பதற்கு விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.

அவருடைய பயண ஏற்பாடுகளையும் சந்திப்பு ஏற்பாடுகளையும் வடக்கில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி செய்ததாகத் தகவல்.அதனால் வடக்கில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மத்தியில் ஒருவித போட்டி உணர்வு ஏற்பட்டிருக்கிறது.அவர்கள் தங்களுடைய வல்லமையைக் காட்டுவதற்காக யாழ். கிரீன் கிராஸ் ஹோட்டலில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பெருந்தொகையான ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.சுமார் 800க்கும் குறையாத ஆதரவாளர்கள் அந்தச் சந்திப்பில் பங்கு பற்றியதாக ஒரு தகவல். அதில் பங்குபற்றிய எல்லாருமே கட்சிக்காரர்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து ரணில் வியந்ததாகவும் ஒரு தகவல்.

வவுனியாவில் அவர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் சந்தித்திருக்கிறார்.வன்னியில் உள்ள தொழில் முனைவோர்களைக் கண்டு கதைத்து, ஊக்கப்படுத்தி அவர்களோடு படம் எடுத்துக் கொண்டார்.

அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வடக்கிற்கு வந்து இவ்வளவு நாட்கள் தங்கியிருந்தமை என்பது இதுதான் முதல் தடவை. இவ்வளவு தொகையான தரப்புகளைச் சந்தித்தமையும் இதுதான் முதல் தடவை.

இது ஒரு தேர்தல் ஆண்டு. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு உண்டு. அப்படி என்றால் அவர் தமிழ் மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா?

தமிழ் அரசியலில் பொதுவாக தமிழரசுக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியோடுதான் இணக்கத்துக்கு வரும். இதற்கு முந்தைய ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் அப்படித்தான் நடந்திருக்கின்றது. ஆனால் இந்தத் தடவை யு. என். பி இரண்டாக உடைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதி தாமரை மொட்டுக்கட்சி அதாவது ராஜபக்சகளின் கட்சியின் தயவில் தங்கியிருக்கின்றது. மற்றொரு பகுதி சஜித் பிரேமதாசவால் தலைமை தாங்கப்படுகின்றது.இதில் சஜித் பிரேமதாசாவைத்தான் தமிழரசுக் கட்சி ஆதரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஏனென்றால்,ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் பதில் ஆளாகத் தேர்தலில் முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. இப்பொழுது ராஜபக்சக்கள் தம்மிக்க பெரேராவைக் களமிறக்கப் போவதாகக் கூறிவருகிறார்கள். ஆனால் அது ரணிலோடான தங்களுடைய பேரத்தை அதிகப்படுத்தும் நோக்கிலான ஒரு உத்தி என்று சந்தேகிக்கப்படுகின்றது. கடைசிக்கட்டத்தில் அவர்கள் ரணிலைத் தமது பொது வேட்பாளராக நிறுத்தம் கூடும் என்ற ஊகங்கள் அதிகம் உண்டு.

அவ்வாறு ராஜபக்சங்களில் தங்கியிருக்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கடந்த 15 ஆண்டுகளாக நடந்த எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்ற இடம் அதுதான். ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களிப்பது. இந்த முறையும் அதே வாக்களிப்பு நடைமுறை தொடருமாக இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சகளின் ஆளாகக் களமிறங்குவாராக இருந்தால்,அவருக்குத் தமிழ் வாக்குகள் கிடைப்பது சவால்களுக்கு உள்ளாகும்.அது அவருக்கும் தெரியும்.தெரிந்துகொண்டுதான் அவர் நிலப்பறிப்பையும் சிங்கள பௌத்த மயமாக்கலையும் முடுக்கி விட்டுள்ளார்.

மேலும் தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்கும் முடிவை வெளிப்படையாகத் தெரிவித்தால்,அங்கேயும் தமிழ் வாக்குகள் ரணிலுக்குக் கிடைப்பது சவால்களுக்கு உள்ளாகும்.

தமிழரசுக் கட்சி தனது தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தலில் மூழ்கியிருக்கின்றது.சுமந்திரன் அக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால்,பெரும்பாலும் சஜித்தை ஆதரிக்கும் முடிவு மேலும் உறுதிப்படுத்தப்படும்.ஏனென்றால் சுமந்திரன் நெருங்கிய சகாவாகிய சாணக்கியன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகத் தெரிவித்து வரும் கருத்துக்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. தமிழ் பொது வேட்பாளர் எனப்படும் தெரிவு ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கமுடையது என்று சாணக்கியன் கூறுகின்றார். தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால், அதற்காகக் கட்சிகள் கூட்டாக உழைத்தால், அது சஜித்துக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளை அப்பொது வேட்பாளரை நோக்கி மடை மாற்றி விடும்.அதைத் தமிழரசு கட்சிக்குள் சுமந்திரன் அணி விரும்பவில்லை என்று தெரிகிறது. அதைத்தான் சாணக்கியனின் கூற்று வெளிப்படுத்துகின்றது.

ஆனால் அக்கட்சி தனது தலைவர் யார் என்பதை தெரிந்து எடுத்த பின்னர்தான் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையை மதிப்பிடலாம். சில வாரங்களுக்கு முன்புவரை சுமந்திரனே கட்சியின் தலைவராக வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. அதற்கு வேண்டிய வேலைகளை அவர் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார். அதை நோக்கி ஒரு பலமான வலைப் பின்னலையும் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.ஒரு தேர்தலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக வைத்ததும்,அதை நோக்கிக் காய்களை நகர்த்தியதும் அவர்தான். ஆனால் அண்மை வாரங்களாக நடக்கும் உட்கட்சித் தேர்தல் பிரச்சாரங்களை வைத்து பார்த்தால், சிறிதரன் சுமந்திரனுக்குக் கடுமையான போட்டியைக் கொடுப்பது தெரிகின்றது.கடைசி நேரத்தில் சிறீதரனின் பிரச்சாரம் சுமந்திரனுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கலாம். அப்பொழுது வெல்பவரின் பக்கம் சாய்வதற்காகக் காத்திருக்கும் தரப்புக்கள், தளம்பக்கூடிய தரப்புகள், சிறிதரனை ஆதரிக்கலாம். அதனால் சிறீதரனுக்கு வெற்றி வாய்ப்புகள் இப்போதிருப்பதைவிட மேலும் அதிகரிக்கலாம். எனவே தமிழரசுக் கட்சிக்குள் யார் தலைவராகத் தெரிவு செய்யப்படுவார் என்பதிலும் அதன் அடுத்த கட்ட முடிவு தங்கியிருக்கின்றது.

சிறீதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறும் தரப்புகள் அவர் மீது செல்வாக்கு செலுத்துவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இப்படிப்பட்டதோர் தமிழ் அரசியல் சூழலில், தமிழ் வாக்குகளைக் கவர்வது தான் ஜனாதிபதியின் நோக்கம் என்று எடுத்துக் கொண்டால் அவருடைய வடக்கு விஜயம் அந்த விடயத்தில் அவருக்கு உதவி புரிந்திருக்குமா?

அல்லது ஐநாவுக்கு அவர் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளின் பிரகாரம் நல்லிணக்க நாடகத்தை அரங்கேற்ற அது அவருக்கு உதவுமா?

அல்லது பதிமூன்றாவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம் அவர் இந்தியாவை நெருங்கிச் செல்ல அது உதவுமா?

https://athavannews.com/2024/1365972

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் - நிலாந்தன்

FB_IMG_1704395304870-1-1024x768.jpg

புதிய ஆண்டு பிறந்த கையோடு  ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார்.

வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார். தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு துறையில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்தவர்கள், வடக்கில் கல்விப் பெறு பேறுகளில் சாதனை புரிந்தவர்கள், அரச உயர் அதிகாரிகள், தனது கட்சிப் பிரதிநிதிகள் என்றிவ்வாறாக பல்வேறு தரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார். அவர் யாரைச் சந்திக்க வேண்டும் ,சந்திக்கக் கூடாது என்பதனை அவருக்கு இணக்கமான வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

குறிப்பாக யூ எஸ் ஹோட்டலிலும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியிலும் உரையாற்றும் பொழுது, அவர் பேசியவற்றின் சாராம்சம் என்னவென்றால், மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உண்டு; மேல் மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டு இருப்பதுபோல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புங்கள்; மாகாண சபைகளின் நிதி அதிகாரம் அதற்குப் போதுமானது; முதலீட்டுக்கு எனது கையைப் பார்த்துக் கொண்டிராதீர்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளையும் துறை சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு நாம் ஒத்துழைப்போம்… என்பதுதான். அதிலும் குறிப்பாக அவர் பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணங்களாக ஜப்பான், கொரியா,பிரித்தானியா போன்ற ஒற்றையாட்சி நாடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். அங்கேயெல்லாம் கூட்டாட்சி இல்லை, ஆனாலும் அந்நாடுகள் பொருளாதாரரீதியாகச் செழிப்பாகக் காணப்படுகின்றன என்ற பொருள்பட யூஎஸ் ஹோட்டலில் அவர் பேசியிருக்கிறார்.

மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணியில், இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லாத ஒரு ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடமாகாண சபையானது முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்க முயற்சித்தது. ஏற்கனவே அதையொத்த நிதியம் மேல் மாகாணத்தில் உண்டு. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் ஜனாதிபதி கூறுகிறார், 13ஆவது திருத்தத்துக்குள் எல்லா அதிகாரங்களும் உண்டு என்று.

அப்படியென்றால் அவர் 2015 இலிருந்து பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட்டமைப்போடு சேர்ந்து உருவாக்க முயற்சித்த “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முயற்சிக்குப் பொருள் என்ன? மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் போதும் என்றால் எதற்காக அப்படி ஒரு ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்? இது பற்றி யாராவது அவர்களிடம் கேள்வி கேட்டார்களோ தெரியவில்லை. ஆனால் வழமையாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்கும் வடக்கு இந்த முறை அது போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு தகவல்.

416316680_844201874382871_22466238064437

இவ்வாறு ஜனாதிபதி வடக்கில்,படம் காட்டி,படம் எடுத்து,ரியோ கிறீம் ஹவுசில் ஐஸ்க்ரீமும் அருந்தி, பதின்மூன்றுக்குள் எல்லாம் உண்டு என்று கூறிய அதே காலப்பகுதியில்,கிழக்கில் அவருடைய ஆளுநர் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு பெருவிழாவை ஒழுங்குப்படுத்தியிருந்தார். கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன் நோர்வேயின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில், திருகோணமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலுக்குப்” பின் அங்கே நடந்த மிகப்பெரிய அளவிலான ஒன்றுகூடல் அதுவென்று கூறலாம். அதை ஒரு மெகா நிகழ்வாக ஆளுநர் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார். அதற்கு இந்தியாவின் உதவிகளையும் பெற்றிருக்கிறார். அதன்மூலம் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புக்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை வடக்கிலிருந்து கிழக்கிற்கும் விஸ்தரிக்கும் ஒரு எத்தனம் அது. அப்படி ஒரு பண்பாட்டு விழாவிற்கு இந்தியா பக்கத்துணையாக இருக்கிறது என்பது சிங்கள கடும்போக்குவாதிகளை கோபப்படுத்துமா? அல்லது பயப்படுத்துமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள் முதற்கொண்டு, சிறப்பு விருந்தினர்கள்,அறிவிப்பாளர்கள் வரை தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள். பொங்கல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களை அந்த மைதானத்தில் திரட்டி, நூற்றுக்கணக்கில் பெண்களை ஆட வைத்து, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். அந்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று உச்சரிக்கிறார்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் மாவட்டம் திருக்கோணமலை ஆகும். இப்பொழுதும் அங்கே குன்றுகளாகக் காணப்படும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படத்தை, வாகன ஊர்தியில் எடுத்துச் சென்றபோது தாக்கப்படும் அளவுக்கு அங்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உண்டு. அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில் பெருமெடுப்பில் ஒரு தமிழ்ப் பண்பாட்டு விழாவை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒழுங்கமைத்திருக்கிறார்.

அவர் ஓர் அரச ஊழியர். ஜனாதிபதியின் பிரதிநிதி. ஆனால் நிகழ்வில் அவருக்கு தரப்பட்ட முக்கியத்துவம்; அவரை அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்ற விதம்; என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது அவருக்கு அங்கே ஒரு கதாநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி வந்த பொழுது “அலப்பறை கிளப்புறோம்” என்ற ரஜினி படப்பாடல் ஒலிக்க விடப்பட்டது. அவர் ஒரு கதாநாயகனைப் போல மேடையை நோக்கி வந்தார். வரும் வழியில் நடனம் ஆடிய பெண்கள் அவரை நிறுத்தி கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதாவது ஒரு நிர்வாக அதிகாரி கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

418102724_7200318313340778_1511299177838

ஆனால் அந்த பண்பாட்டு விழா நடந்து கொண்டிருந்த அதே மாகாணத்தில், மட்டக்களப்பில், மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் 125ஆவது நாளைக் கடந்து விட்டது. அது மட்டுமல்ல, கிழக்கில் அண்மையில் பெய்த கடும் மழையால்,பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்படுகின்றன. ஒரு பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாணத்தில், இது போன்ற மெகா பண்பாட்டு நிகழ்வுகள் அவசியமா என்ற கேள்விகள் உண்டு. மேய்ச்சல் தரைக்காகப் போராடும் விவசாயிகள் வெள்ளத்தில் நிற்கிறார்கள்; அவர்களுடைய நாட்டு மாடுகளை வெட்டிக் கொல்லப்படுகின்றன அல்லது சுருக்கு வைத்துப் பிடிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒர் ஆளுநர்,காளை மாடுகளை அடக்கும் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்ய முயற்சிக்கின்றார். எனினும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை. அதில் அவருடைய அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதனை பௌத்த மதகுருமார் நிரூபித்து வருகிறார்கள். அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஓர் ஆளுநர், வெள்ள அனர்த்த காலத்தில், பெருமெடுப்பில், பெருந்தொகை நிதியைச் செலவழித்து, ஒரு பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் அவர் கதாநாயகனாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே கடந்த வாரம் வடக்கிலும் கிழக்கிலும் நடந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால், மிகத் தெளிவான ஒரு செய்தி கிடைக்கின்றது. வடக்கில் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்துக்குள் அதாவது மாகாண சபைக்குள் நிதி அதிகாரம் உண்டு என்று கூறுகிறார். கிழக்கில் அவருடைய ஆளுநர் கதாநாயகனாக மேலெழுகிறார். 13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார். அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன. 13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார். அதன் மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கப்படுகின்றது.

இவற்றின் மூலம் மாகாண சபையை ஒரு பலமான அதிகார கட்டமைப்பாக வெளிக்காட்டும் உள்நோக்கம் உண்டு. இதில்  இந்தியாவை திருப்திப்படுத்தும் உள்நோக்கமுமுண்டு. வடக்கில் ஒரு சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையிலான தரைப்பாலம் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்ற மாட்டார் என்பது புத்திசாலியான யாருக்கும் விளங்கும். ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார். 13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம்,இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம், கிழக்கில் பண்பாட்டு பெருவிழாவில் இந்தியாவின் உதவிகளை பெற்றதன் மூலம்,அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்த விளைகிறார். மாகாண சபைகளைப் பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றார்.

 

https://www.nillanthan.com/6477/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.