Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - இந்தாண்டு புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 44 நிமிடங்களுக்கு முன்னர்

தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தென் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடி, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த மூன்று நாளும் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை அவனியாபுரத்தில் 3 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சாதியினரும் இடம்பெறுவது தொடர்பான பிரச்னை நீதிமன்ற படியேற நேரிட்டது. இதில் தீர்வு எட்டப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகமே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கு இல்லை. அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்தாண்டைப் போல இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாத நபர்கள் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவு 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், ஆயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிகட்டு உறுதி மொழி ஏற்க, அமைச்சர் மூர்த்தி போட்டிகளை கொடியசைத்து போட்டி துவங்கி வைத்தார்..

தற்போது நடைபெறும் முதல் சுற்றில் 50 பேர் களத்தில் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

சித்தரிப்புப்படம்

ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

சித்தரிப்புப்படம்

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் கூறும் விதிமுறைகள் என்ன?

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர்.

அரசு வழங்கிய டோக்கன்கள் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே களத்திற்குள் அவிழ்க்க அனுமதிக்கப்படும்.

அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. பிடித்தால் வீரருக்கு எச்சரிக்கை அளிக்கப்படும், அதனையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வெற்றி பெற்றதா அல்லது மாடுபிடி வீரர் வெற்றி பெற்றாரா என்பது குறித்து கமிட்டியினர் தான் முடிவு செய்வார்கள், அதேபோல், நீதிமன்றம் அறிவித்துள்ள சாதிப் பெயர்களை குறிப்பிடுவது கிடையாது என்கிறார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன்.

சாதி பெயர் குறிப்பிடப்படாது

மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளை அதன் உரிமையாளரின் சாதி பெயரை குறிப்பிட்டு அவிழ்க்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அமைச்சர் மூர்த்தியும் உறுதி செய்தார். அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜல்லிக்கட்டு போட்டியில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சாதிப்பெயர் குறிப்பிடப்படாமல் காளையின் பெயர், ஊர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும். ", என்று அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

காவல்துறை அறிவிப்புகள் என்ன?

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அளித்த அனுமதிச் சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.

காளைகளுடன் வரும் உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.

காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதி சீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டு வரவேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மதுபோதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி பெற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்து இருக்கிறது.

”காளையை களத்தில் சந்திக்க தயார்”

”கடந்தாண்டில் நடைபெற்ற பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றேன். இதில், அலங்காநல்லூர், சத்திரக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் மற்றும் இருசக்கர வாகனம் என பல்வேறு பரிசுபொருட்களை வென்றேன். இந்த ஆண்டும் அதேபோல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்த வீரராக விளங்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் சிவகங்கை மாவட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவன் எனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறேன். அவர்களும் மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்து இருக்கிறார்கள். காளைகளை களத்தில் இறங்கி சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்", என்கிறார் அவர்.

”மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட காளைகள் தயார்”

பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த என்பவர் தனது இரண்டு காளைகளை அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக டோக்கன் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கான டோக்கன் முன்பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

“எனது இரண்டு காளைகளையும் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் இறக்குவதற்காக தயார் செய்து இருக்கிறேன்.

மாடுபிடி வீரர்களுக்கு எனது காளைகள் களத்தில் ஆட்டம் காட்டி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்", என கூறுகிறார்.

 

இளைஞர்கள் மத்தியில் ஆர்வம்

மதுரை ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,

ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு அதன் மீதான தடை நீங்கிய பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதிலும், ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறங்கி விளையாடுவதில் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. இதனை முறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கொண்டுவரப்பட்டன.

அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் அரசு அறிவித்த இணையதளத்திற்கு சென்று மாட்டின் உரிமையாளர், மாடுபிடிவீரர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து உடல் தகுதியை உறுதி செய்து அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்த வேண்டும். அரசு சார்பில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

இந்தாண்டு ஜல்லிக்கட்டில் போட்டிகளில் பங்கேற்க காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர்.

 

எத்தனை பேர் பங்கேற்பார்கள்?

மதுரை ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை நிர்வாகத்தின் சார்பில் இணையதளம் முன்பதிவு கடந்த 10-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 11-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. இதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2,400 காளைகள், 1,318 காளையர்கள், பாலமேட்டில் 3,677 ஜல்லிக்கட்டு காளைகள், 1,412 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர்.

இந்த இரண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை விட உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 6,099 காளைகள், 1,784 மாடுபிடி வீரர்கள் என மொத்தமாக இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் சேர்த்து பங்கேற்க 12,176 ஜல்லிக்கட்டு காளைகளும் அவற்றுடன் போட்டியிட 4,514 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து இருந்தனர்.

இந்த வீரர்கள், காளைகள் ஜல்லிக்கட்டு நாட்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு களத்தில் 50 வீரர்கள் என்ற சுழற்சி முறையில் களமிறக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டி எப்போது?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் 66 ஏக்கர் பரப்பளவில் 61.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏது தழுவுதல் அரங்கம் இந்த மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c9x26l32pkjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 435 வீரர்கள், 817 காளைகள் - சிறந்த வீரர், சிறந்த காளை பரிசுகளை வென்றது யார்?

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 15 ஜனவரி 2024, 02:13 GMT
    புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியான மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு இன்று திங்கள் (ஜனவரி 15) நடைபெற்றது.

இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 435 மாடுபிடி வீரர்களும் 10 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 817 காளைகளும் அவிழ்க்கப்பட்டன. 9 சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 5 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர்.

சிறந்த மாடுபிடி வீரருக்கு 10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் கறவை பசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. சிறந்த காளைக்கும் கார் மற்றும் மற்றும் கறவை பரிசாக வழங்கப்பட்டது.

இந்தப்போட்டியில் 2 காவல்துறையினர் உள்ளிட்ட 51 பேருக்கு காயம் எற்பட்டது. இதில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போட்டியின் போது திறம்பட விளையாடி 17 காளைகளை அடக்கிய மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கு முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிசான் கார் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளைகளான அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த G.R.கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு முதல் பரிசாக நிசான் காரும், கன்றுடன் கூடிய கறவை பசுவும் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2 ஆவது மற்றும் 3 ஆவதாக சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு பரிசுகள் அறிவிக்கப்படாத நிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு களத்திலயே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து 2 ஆவது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிளும், 2ஆவது இடம் பிடித்த சிறந்த காளையான திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ SM சீனிவேல் பெயரில் அவிழ்த்த காளைக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிள் பரிசாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியின்போது 2400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள், சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.

காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5மணிக்கு நிறைவடைந்தது. தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தென் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த மூன்று நாளும் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தில் 3 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சாதியினரும் இடம்பெறுவது தொடர்பான பிரச்னை நீதிமன்ற படியேற நேரிட்டது. இதில் தீர்வு எட்டப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகமே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கு இல்லை. அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்தாண்டைப் போல இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாத நபர்கள் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவு 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், ஆயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிகட்டு உறுதி மொழி ஏற்க, அமைச்சர் மூர்த்தி போட்டிகளை கொடியசைத்து போட்டி துவங்கி வைத்தார். முதல் சுற்றில் 50 பேர் களமிறங்கினர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

திருமா காளைக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பரிசு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சார்பாக காளை ஒன்று களமிறக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி வந்த அந்த காளையை எந்தவொரு மாடுபிடி வீரராலும் பிடிக்க முடியவில்லை.

பிடிபடாத அந்த காளைக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தங்கக்காசு பரிசளித்தார்.

ஜல்லிக்கட்டு களத்திற்குள் புகுந்த நாய்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மூன்றாவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று திடீரென களத்திற்குள் புகுந்துவிட்டது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்த போதே, அந்த காளைகள் ஓடிச் செல்லும் பாதையில் அந்த நாய் படுத்துக் கொண்டது. ஆனாலும், ஜல்லிக்கட்டு எந்தவொரு தடங்கலும் இன்றி தொடர்ந்தது.

காளைகள் வாடிவாசலில் இருந்து சீறி வந்த போதும் அந்த நாய் அசராமல் களத்திலேயே படுத்திருந்தது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகே அந்த நாய் அங்கிருந்து எழுந்து சென்றது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களத்திற்குள் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் நாய்

கடந்த ஆண்டு முதல் பரிசு வென்ற கார்த்திக் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆறு சுற்றுகள் முடிவில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் பார்வையாளர் இருவர் உட்பட மொத்தம் 40 பேர் காயமடைந்துள்ளனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டு 15 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

முதலமைச்சர், உதயநிதி சார்பில் 2 கார்கள் பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த மாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் சார்பில் கார் பரிசாக அளிக்கப்படவுள்ளது.

மேலும், அமைச்சர் மூர்த்தி மாடுகளை பிடித்த வீரர்கள் மற்றும் பிடிபடாத மாடுகளுக்கு தங்கக்காசு பரிசளித்தார்.

இதுவரை ஆறு சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், 300 மாடுபிடி வீரர்களும் 510 காளைகளும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளன. அதிக காளைகளை பிடித்த 3 வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

அவனியாபுரம் வாடிவாசலில் பின்புறம் மாடுகளை அழைத்து வரும்போது மாட்டின் உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்வதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c9x26l32pkjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்றது யார்?

பாலமேடு ஜல்லிக்கட்டு
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மொத்தமாக 49 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலேயே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகுந்த பிரசித்தி பெற்றவை. இதில் அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான செவ்வாய்க் கிழமையன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசலில் மாவட்ட நிர்வாகமும் பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் குழுவும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின. இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்லாமல், மதுரையைச் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் தஞ்சாவூர், புதுக்கோட்டையைச் சேர்ந்த காளைகளும் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுகளும் மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி 3,500-க்கும் மேற்பட்ட காளைகளும் 1,400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவுசெய்தனர். அதில் 1,000 மாடுகளும் 600 மாடுபிடி வீரர்களும் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டனர்.

போட்டி துவங்குவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதற்குப் பிறகு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி போட்டிகளைத் துவக்கிவைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு

வெற்றியாளர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

மொத்தம் பத்து சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 60 வீரர்கள் களமிறங்கினர். ஒரு சுற்றில் அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கு அடுத்த சில சுற்றுகளில் வாய்ப்பளிக்கப்பட்டது. எல்லாக் காளைகளுமே கால்நடைத் துறையினரால் பரிசோதிக்கப்பட்டு போட்டிகளுக்கு அனுமதிக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை, மாடு அவிழ்த்துவிடப்பட்ட பிறகு, வீரர்கள் அதன் திமிலைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மாடு மூன்று சுற்று சுற்றும்வரை பிடித்திருந்தாலோ, 100 மீட்டர் தூரத்திற்கு திமிலைப் பிடித்தபடி சென்றாலோ வீரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இல்லாவிட்டால் மாடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். அதேபோல, இரண்டு பேர் சேர்ந்து ஒரு மாட்டை அடக்க முன்றாலோ, கொம்பைப் பிடித்தாலோ மாடு வெற்றிபெற்றதாகவே அறிவிக்கப்படும்.

போட்டி ஆரம்பித்து சில சுற்றுகள் வரை, அதிகமாக மாடுகள் பிடிபடவில்லை. இதனால், காளையின் உரிமையாளர்களை அதிகம் பரிசுகளை வென்றுவந்தனர். 2-3 சுற்றுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது.

 
பாலமேடு ஜல்லிக்கட்டு
 

நான்காவது முறை வெற்றி பெற்ற வீரர்

எல்லா ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் போலவே இந்தப் போட்டிகளிலும் சில பெண்களும் தங்கள் மாடுகளை அழைத்துவந்து உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

போட்டியின் பத்தாவது மற்றும் இறுதிச் சுற்று மாலை நான்கு மணியளவில் துவங்கியது. சுமார் நாலே முக்கால் மணியளவில் அந்தச் சுற்று நிறைவுக்குவந்தது. அதற்குப் பிறகு இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஒரு கார் பரிசளிக்கப்பட்டது. அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவர் 11 காளைகளை அடக்கியிருந்தார். அவருக்கு ஒரு மோட்டர் பைக் பரிசளிக்கப்பட்டது.

பிரபாகரன் இதற்கு முன்பும் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கான பரிசை வென்றிருக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், "2020, 21, 22 ஆகிய வருடங்களிலும் நான்தான் அதிக மாடுகளைப் பிடித்தேன். போன ஆண்டு என்னால் 15 மாடுகளைத்தான் பிடிக்க முடிந்தது. இந்த முறை மீண்டும் பரிசை வென்றிருக்கிறேன். ஆன்லைன் பதிவில் நன்றாக மாடு பிடிக்கும் வீரர்கள் சில சமயங்களில் தேர்வாவதில்லை. அதற்கு மாற்றுவழி ஏதாவது செய்ய வேண்டும்," என்றார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு
 

சிறந்த காளை பரிசு யாருக்கு?

சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரது காளையான சின்னக்கருப்பு என்ற காலை தேர்வுசெய்யப்பட்டது.

"மாட்டை வளர்ப்பதில் பெரும் செலவு இருந்தாலும், பெயர்தான் முக்கியம் என்பதால் காளையை வளர்க்கிறேன். கடந்த ஆண்டு எங்களுடைய இன்னொரு மாடு வெற்றிபெற்றது. வீட்டில் திட்டத்தான் செய்வார்கள். ஆனால், பல நேரங்களில் அவர்கள்தான் மாட்டைப் பார்த்துக்கொள்வார்கள்" என்று தெரிவித்தார் மருது பாண்டி.

இந்தக் காளையின் உரிமையாளருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவரின் காளை இரண்டாவது சிறந்த காளையாக தேர்வுசெய்யப்பட்டது. இவருக்கு ஒரு மாடும் கன்றும் பரிசளிக்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டு
 

எத்தனை பேருக்குக் காயம் ஏற்பட்டது?

சிறந்த காளைகளைப் பொறுத்தவரை, நீண்ட நேரம் களத்தில் இருப்பதோடு, சுற்றிச்சுற்றிவந்து எந்த வீரரையும் நெருங்கவிடாமல் செய்யவேண்டும். அப்படியாகத்தான் இந்த இரு காளைகளும் தேர்வுசெய்யப்பட்டன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் போலவே, இந்த ஜல்லிக்கட்டிலும் ஒரு நாய் குறுக்கிட்டது. ஆனால், நீண்ட நேரம் களத்தில் நிற்கவிடாமல் விரட்டப்பட்டது. ஒரு காளைக்கு காயம் ஏற்பட்டது.

இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தமாக 840 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 485 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தமாக 49 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் மட்டுமே மாடுபிடி வீரர்கள். 15 பேர் மாட்டின் உரிமையாளர்கள். இவர்கள் தவிர, காவலர்கள், பார்வையாளர்கள் ஆகியோரும் காயமடைந்தனர். இவர்களுக்கு பாலமேட்டில் இருந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 9 பேர் மட்டும் கூடுதல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மாடுகளை துன்புறுத்தாமல் இருக்க விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. மாடுகளின் கொம்புகளைப் பிடிக்கக் கூடாது எனவும், அவற்றின் கால்களைப் பின்னுவது கூடாது எனவும் மாடுகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஒரு வீரர், காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை இறுகப் பற்றியிருந்தாலோ அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றாலோ மட்டுமே மாடு பிடி வீரர் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார். ஒரே நேரத்தில் பலர் காளையைப் பிடிக்க முயல்வது கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டு
 
பாலமேடு ஜல்லிக்கட்டு
 

பார்வையாளர்களுக்கான வசதிகள்

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடர்ந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். குறைந்தபட்சம் எட்டு சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவர்.

போட்டியை பார்வையிட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. இந்தப் போட்டியை பாலமேட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்த்து ரசிக்க ஆங்காங்கே எல் இ டி திரைகளை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

போட்டியின் போது பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 
பாலமேடு ஜல்லிக்கட்டு

பாதுகாப்பு வசதிகள்

மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் காயம் ஏற்படும் வீரர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்திய செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்களும் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

காளைகள் வாடிவாசலுக்கு வரும் பிறவாடி பகுதிகளிலும், காளைகள் வாடிவாசலில் இருந்து செல்லும் காளை சேகரிப்பு இடத்திலும் (கலெக்சன் பாயிண்ட்) பாதுகாப்புக்காக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தப் போட்டியின் போது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த காளையின் உரிமையாளர் மாரியப்பனுக்கு கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

வேடிக்கை பார்க்க வந்த மேலூர் பகுதியை சேர்ந்த மனிஸ் வலிப்பு நோய் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மாட்டின் உரிமையாளர் ஒருவருக்கும், மாடுபிடி வீரர் ஒருவருக்கும் பேரிக்காடு கம்பி குத்தி படு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு காலிலும்., ஒருவருக்கு தொடையிலும், ஒருவருக்கு காதிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cv2ljd3nxm0o

Avaniyapuram Jallikattu 2024 Highlights: ஆட்டம் காட்டிய காளைகள்; அசத்தியது யார்?

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விறுவிறுவென பாய்ந்த மாடுபிடி வீரர்களை சுத்தவிடும் காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று காலை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்றைய போட்டியில் 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் அருண் விஜய் வந்துள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு அருகில் மேடையில் அமர்ந்திருந்த அவர், ஜல்லிக்கட்டை தான் நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை என்றும், தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளுடன் இதை நடத்தி வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் எட்டு சுற்றுகள் வரை இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 75 வீரர்கள் பங்கேற்பார்கள். ஒரு சுற்றில் காளையை அடக்கி வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்குத் தகுதி பெறுவர்.

மூன்றாவது சுற்று வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கான முதலுதவி வழங்க ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்திலேயே மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களும் தயாராக உள்ளன. இதுவரை ஒருவருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இதுவரை நடைபெற்ற சுற்றுகளில் எட்டு காளைகளை அடக்கி, அபிசித்தர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்தப் போட்டியில் வி.கே.சசிகலாவின் காளையும் பங்கேற்றது. அந்தக் காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், நாணயம், உள்ளிட்ட பரிசுகளை அமைச்சர் உதயநிதி வழங்கி வருகிறார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர்.

அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மருத்துவ காரணங்களுக்காக ஏழு மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அரசு வழங்கிய டோக்கன்கள் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே களத்திற்குள் அவிழ்க்க அனுமதிக்கப்படும்.

அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. பிடித்தால் வீரருக்கு எச்சரிக்கை அளிக்கப்படும், அதையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வெற்றி பெற்றதா அல்லது மாடுபிடி வீரர் வெற்றி பெற்றாரா என்பது குறித்து கமிட்டியினர்தான் முடிவு செய்வார்கள். அதேபோல், நீதிமன்றம் அறிவித்துள்ளதன்படி சாதிப் பெயர்களைக் குறிப்பிடுவது கிடையாது என்கிறார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன்.

 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை அதன் உரிமையாளரின் சாதிப் பெயரை குறிப்பிட்டு அவிழ்க்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விதிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என இந்த ஆண்டின் மூன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் கடைப்பிடிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்து வருவதாக விழா பொறுப்பான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c6p1y69nqmlo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு 2024 Highlights: அலைமோதிய கூட்டம்; மிரட்டிய காளைகள் - இன்று நடந்தது என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ....ஏராளமான பதிவுகள்.........நன்றி ஏராளன்........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறாவயல் மஞ்சுவிரட்டு: விதிகளை மீறுவதே விபத்துகளுக்கு காரணம் என ஆட்சியர் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?
படக்குறிப்பு,

சிராவயல் மஞ்சுவிரட்டில் 12 வயது சிறுவன் மற்றும் 32 வயது இளைஞர் மாடு முட்டி இறந்துள்ளனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் பிரபலமான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்நிலையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் மாடுபிடிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாடுகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மாடுபிடி நிகழ்வுகளில் வீரர்கள், மாடுகள், பார்வையாளர்கள் எனப் பலர் காயமடைந்த சம்பவங்களும் நேர்ந்துள்ளன. அதில் சிறாவயல் மஞ்சுவிரட்டில் 12 வயது சிறுவன் மற்றும் 32 வயது இளைஞர் ஒருவரும் மாடு முட்டி இறந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே போல் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டில் 52 வயதான பூமிநாதன் எனபவர் மாடு மோதியதில் உயிரிழந்தார்.

சிறாவயல் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நடப்பதற்குக் காரணம் என்ன? சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டுக்கும், இதர பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கும் வேறுபாடு என்ன? எதனால் சிராவயலில் இருவர் இறக்க நேர்ந்தது?

 

மஞ்சுவிரட்டு என்றால் என்ன?

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?
படக்குறிப்பு,

மந்தை விரட்டு என்பதே மஞ்சுவிரட்டு

பொதுவாகவே நம்மில் பலரும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் ஒன்றுதான் என்றே இத்தனை நாளாய் நம்பி வந்திருப்போம். ஆனால், என்னதான் இவற்றின் அர்த்தம் ஒன்று என்றாலும் அது நடைபெறும் விதமும், இடமும் ஒன்றல்ல. அதை வரலாற்றுப் பார்வையில் அணுகினால் மட்டுமே அதன் பரிணாம வளர்ச்சியை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதற்காக மஞ்சுவிரட்டு என்றால் என்ன என்ற கேள்வியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவரும், இலக்கிய செயற்பாட்டாளருமான அ. ராமசாமியிடம் கேட்டபோது ‘மந்தை விரட்டு என்பதே மஞ்சுவிரட்டு என்று மருவி விட்டதாகவும், மந்தையில் மாடுகளை விரட்டுவதே மஞ்சு விரட்டு’ என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, மாடு பிடிக்கும் நிகழ்வின் மூன்றாவது கட்டம்தான் ஜல்லிக்கட்டு. "இதன் முதல் கட்டம் என்பது ஏறு தழுவுதல். சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல்களில் காணப்படும் வார்த்தை இதுதான். அதற்குப் பிறகு வந்தது மஞ்சுவிரட்டு, அதற்குப் பின்பு மூன்றாவது கட்டமாக வந்ததுதான் இந்த ஜல்லிக்கட்டு.”

தனது சிறு வயதுகளில் பெரும்பாலான கிராமங்களில் ஏறு தழுவுதல் நடந்து வந்ததாகவும், பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டதாகவும் கூறுகிறார் இவர். அதற்குக் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் வேளாண் முறையில் ஏற்பட்ட மாற்றம், மாடுகளின் தேவை குறைப்பு, இயந்திர உபயோகம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் முந்தைய காலத்தில் ஏறு தழுவதல் என்று அழைக்கப்பட்ட மாடுபிடிக்கும் கொண்டாட்டமே தற்போது ஜல்லிக்கட்டு என்ற பெயரில் பெரும்பாலான இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் சில இடங்களில் மட்டும் இன்னமும் மஞ்சுவிரட்டு முறை இருக்கிறது. அதில் முக்கியமான இடங்களாக சிறாவயல், பொன்னமராவதி ஆகிய இடங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டு பிரபலமாக உள்ளது.

 

மஞ்சுவிரட்டுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?
படக்குறிப்பு,

மஞ்சுவிரட்டில் மாடுகளை பெரிய மைதானத்தில் விரட்டி விடுவார்கள்

ஜல்லிக்கட்டை போல மஞ்சுவிரட்டில் வாடிக்கட்டி அதன் வழியே மாடுகளை ஒவ்வொன்றாக அனுப்பும் வழக்கம் கிடையாது. ஆனால், தற்போது நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, மஞ்சுவிரட்டிலும் ஜல்லிக்கட்டை போல வாடி கட்டுதல், விதிமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவை கடைபிடிக்கப்படுகின்றன.

“மஞ்சுவிரட்டில் மாடுகளை பெரிய மைதானத்தில் விரட்டி விடுவார்கள். அதற்குள் மாடுகளும் இருக்கும், மனிதர்களும் இருப்பார்கள். அவர்கள் மாடுகளை விரட்டிக் கொண்டே சென்று அதை அணைய முயல்வார்கள். அப்படியான ஒழுங்கமைக்கப்படாத ஒரு முறைதான் அது,” என்கிறார் அ.ராமசாமி.

ஆனால், ஜல்லிக்கட்டு போலன்றி, மஞ்சுவிரட்டில் தொழுவம் போல வாடி அமைக்கப்பட்டிருக்கும் என்கிறார் ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத்தலைவர் பி . ராஜசேகரன். “மஞ்சுவிரட்டு தொழுவில் அறை அறையாக இருக்கும். அதில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். நிகழ்ச்சி தொடங்கிய பிறகு ஒவ்வொரு தொழுவாக அவிழ்க்கப்படும். வாடிவாசலின் அருகில் இருந்து இந்த மாடுகளைப் பிடிக்காமல் கொஞ்ச தூரம் ஓடவிட்டு விரட்டிப் பிடிப்பார்கள்.

பிடிக்கும் நபருக்கு பரிசுகள் எதுவும் கொடுக்கப்படாது. மாடு கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சலங்கை மணி அல்லது துணியை வீரர்கள் அவிழ்த்துக் கொள்வார்கள். அதுதான் வெற்றிச் சின்னம். பின்னர் அந்த மாட்டுக்காரரே வந்து ஏதாவது பணம் கொடுத்து அந்த மணியை வாங்கிக் கொள்வார்,” என்று மஞ்சுவிரட்டின் அமைவு குறித்து விளக்குகிறார் ராஜசேகரன்.

ஏறுதழுவலில் இருந்து ஜல்லிக்கட்டு வரை

எப்போதுமே ஒரு சிறிய விஷயத்தில் இருந்து ஒரு பழக்கம் தொடங்கும்போது பெரிய ஒழுங்கமைக்கப்படாத (Unorganized) நிலைக்குச் சென்று, பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட (Organized) நிலையை அடையும் என்கிறார் அ. ராமசாமி.

“முதலில் ஒவ்வொரு வீட்டிலும் ஏறுகளை(மாடு) வளர்த்து அதைக் கொண்டாடும் விதமாக கிராமங்களில் ஏறு தழுவுதல் எழுந்தது. இது ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி கொண்டாட்டமாக நடைப்பெறும்.

பின்னர் பெரிய கொண்டாட்டமாக ஒரு ஊர் மட்டுமில்லாமல், பல ஊர்கள் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வாக மஞ்சுவிரட்டு உருவானது. இதில் ஊர்களின் சார்பாக மாடுகள் கலந்துகொள்ளும். குறிப்பிட்ட மாட்டை தனிநபர் வளர்த்திருந்தால்கூட அந்த ஊரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்தான் மாடு களத்திற்குள் அறிவிப்போடு இறக்கப்படும். இதில் பரிசுகள் எதுவும் வழங்கப்படாது,” என்கிறார் அவர்.

 

ஜல்லிக்கட்டு உருவான காலம்

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?
படக்குறிப்பு,

‘ஜ’ என்ற சமஸ்கிருத வார்த்தையுடன் கூடிய ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை பெரியளவில் உருவானது 16-17ஆம் நூற்றாண்டில்தான்.

அடுத்தடுத்து வந்த சமூக வளர்ச்சியில் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் இருந்த நிலக்கிழார்கள் மற்றும் பெரும் நிலவுடைமைதாரர்களான ஜமீன்தாரர்கள், பாளையக்காரர்கள் மாடுகளை வளர்த்து தங்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளை அடக்கும் போட்டிகளை நடத்தியதாகக் குறிப்பிடுகிறார் அ. ராமசாமி.

அப்போதுதான் பரிசுகள் வழங்கும் வழக்கமும் உருவானதாகக் கூறுகிறோர் அவர். இந்த சமயத்தில்தான் ‘ஜ’ என்ற சமஸ்கிருத வார்த்தையுடன் கூடிய ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை பெரியளவில் உருவானது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

“சோழர் மற்றும் பாண்டிய மன்னர் காலகட்டங்களிலேயே அரசர்களின் நிலங்களை நிர்வகித்து வந்த மண்டலாதிபதிகளின் தலைமையில் ஏறு தழுவுதல் நடைபெற்றது. ஆனால், அது வேளாண்மைக்குப் பயன்படுத்தும் மாடுகளைக் கொண்டாடவும், பொழுதுபோக்காகவும் மட்டுமே நடத்தப்பட்டது.

ஆனால் தற்போது, மதுரை மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான ஜல்லிக்கட்டு உருவாக்கத்திற்குப் பின்னால் அந்தப் பகுதியில் இருந்த ஜமீன்களின் பாத்திரம் முக்கியமானதாக இருந்துள்ளது. அவர்கள்தான் பரிசுகள் கொடுத்துள்ளனர். இவர்களுடைய மாடுதான் பெரும்பாலும் முதலில் வாடியில் விடப்படும். அதை யாரும் தொட மாட்டார்கள். அப்படியான பாரம்பரியம் இருந்துள்ளது. அதன் பின்னர் பெரிய நிலக்கிழார்கள், பணக்காரர்கள் இந்த மாடுகளை வளர்த்துள்ளனர்,” என்கிறார் அவர்.

இப்படித்தான் ஏறுதழுவலில் தொடங்கி மஞ்சுவிரட்டாகி ஜல்லிக்கட்டாக பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் மஞ்சுவிரட்டின் விதிகள் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

சிராவயல் மஞ்சுவிரட்டு

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?
படக்குறிப்பு,

12 வயது ராகுல் என்ற அரசுப் பள்ளி மாணவனும், 32 வயது இளைஞர் முத்துமணி என்பவரும் மாடு மோதியதில் உயிரிழந்துள்ளனர்.

சிறாவயல் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுபினர் எஸ்.மாங்குடி அவர்கள் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டைத் துவக்கி வைத்தார். இதில் 271 காளைகள் மற்றும் 81 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை சில வீரர்கள் மற்றும் மாடுகள் மட்டுமே காயம் பட்டிருந்தனர்.

ஆனால், சிறாவயல் மஞ்சுவிரட்டில் பார்வையாளர்களாக வந்திருந்த 6ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது ராகுல் என்ற அரசுப்பள்ளி மாணவனும், 32 வயது இளைஞர் முத்துமணி என்பவரும் மாடு மோதியதில் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு முதலமைச்சர் நிதியிலிருந்து தலா 3 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் கேட்டபோது, “சிறாவயல் மஞ்சுவிரட்டைப் பொறுத்தவரை பெரிய அளவிலான பரப்பளவில் மைதானம் அமைத்து வாடிவாசல் வழியாகவே மாடுகள் வெளியே அனுப்பப்பட்டன. மற்றபடி மாடுகளுக்கான மருத்துவ தகுதிகள், பாதுகாப்பு அம்சங்கள், மாடுகளுக்கான பதிவு, வீரர்களுக்கான பதிவு என அனைத்துமே ஜல்லிக்கட்டு விதிகளை ஒத்தது போலத்தான் பின்பற்றப்பட்டன.

எனவே, வாடிவாசல் மைதானத்திற்குள் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஒரு சில மாடுபிடி வீரர்கள் மட்டுமே சிறிய அளவு காயமடைந்தனர். ஆனால், இது பெரிய மைதானம் என்பதால் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வெளியில் சிலர் விதிகளை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனர். இதனால், அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் சிலர் விபத்திற்கு ஆளாகியுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

இந்த முறை மூன்று அடுக்கு செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு பதிவுகளோடு வரும் மாடுகள் மட்டுமே அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்புப் பணியில் 800 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேநேரம் 1 லட்சம் பார்வையாளர்கள் மஞ்சுவிரட்டைக் காண வந்திருந்தனர். இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தும்கூட சிலர் இதைத் தாண்டி விதிகளை மீறி தங்களது கட்டுமாடுகளை கூட்டத்திற்குள் அவிழ்த்து விட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர்.

 

மாடுபிடி வீரர்கள் கூறுவது என்ன?

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?
படக்குறிப்பு,

கடந்த பத்து வருடங்களாகத்தான் வாடி முறையை பின்பற்றுகிறார்கள்.

சிறாவயல் மஞ்சுவிரட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாடு விட்டு வருபவர் செந்தில்குமார். எதனால் வாடியில் மாடுகளை விடாமல் மக்கள் கூடியுள்ள திறந்த வெளியில் மாடுகளை விடுகிறீர்கள் என்று கேட்டபோது, “முன்பெல்லாம் இதுபோன்ற வாடி முறைகள் கிடையாது. திறந்த வெளியில்தான் மாடுகள் அவிழ்த்து விடப்படும். அதுதான் பாரம்பரியமான வழக்கம். ஆனால், கடந்த பத்து வருடங்களாகத்தான் வாடி முறையைப் பின்பற்றுகிறார்கள். அதிலும் கடந்த 3 ஆண்டுகளாகவே டோக்கன் முறையில் நடத்தப்படுகிறது,” என்றார்.

மேலும், மஞ்சுவிரட்டுக்காக ரூ. 30,000 முதல் ரூ. 60,000 வரை செலவு செய்து இரண்டு மாதங்கள் மாட்டைத் தயார் செய்வதாகவும், அரசு விதிகளை மதித்து ஆன்லைனில் பதிவு செய்தாலும்கூட பலருக்கும் டோக்கன் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார் அவர்.

அதே நேரம் பெரும்பாலும் முக்கியஸ்தர்களின் மாடுகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

“இதுபோன்ற சூழலில்தான் நாங்கள் மாடுகளை வாடிக்கு வெளியில் திறந்த வெளியில் அவிழ்க்க வேண்டியிருக்கிறது. எனவே அனைவருக்கும் எளிய முறையில் அனுமதி வழங்கினால் நாங்களும் வாடி வழியாகவே மாடுகளை அவிழ்ப்போம்,” என்று உறுதியாகக் கூறுகிறார்.

ஆனால், “அப்படி முக்கியஸ்தர்கள் மாடுகள் என்று பார்த்தெல்லாம் யாருக்கும் டோக்கன் வழங்குவதில்லை. இந்த முறை விண்ணப்பம் செய்திருந்த 270க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது," என்றார் ஆஷா அஜித்.

"மாடுகளுக்கான தகுதியாக அதன் மருத்துவ சான்றிதழ் மட்டுமே பார்க்கப்படும். அதைத் தாண்டி அந்த மாடு மருத்துவ ரீதியாகத் தகுதியில்லை என்றால் மட்டுமே அவை நிராகரிக்கப்படும். எனவே இந்த குற்றச்சாட்டு உண்மையல்ல,” என்று பிபிசி தமிழிடம் கூறியுள்ளார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

 

மஞ்சுவிரட்டின் எதிர்காலம் என்ன?

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?
படக்குறிப்பு,

மஞ்சுவிரட்டும் தற்போது ஜல்லிக்கட்டு போலவே நடத்தப்படுகிறது.

சிவகங்கை பகுதியில் மட்டுமே அதிகமாக மஞ்சுவிரட்டு பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே பெரும்பான்மையாக ஜல்லிக்கட்டு விதிகள் மஞ்சுவிரட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முழுமையாக மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டாக மாறும் வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தோம்.

இதற்குப் பதிலளித்த அவர், “எதிர்காலத்தில் மஞ்சுவிரட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசியுள்ளோம். அது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். மஞ்சுவிரட்டும் தற்போது ஜல்லிக்கட்டு போலவே நடத்தப்படுகிறது. வாடியின் அமைப்பும், மைதானத்தின் அளவும் மட்டுமே வேறுபடுகிறது.

ஆகையால் ஏற்கெனவே ஜல்லிக்கட்டு விதிகளைப் போலவே இதிலும் பின்பற்றப்படுகிறது. விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது வழக்குகளும் போடப்படுகிறது. அதைத் தாண்டியும் ஒரு சிலர் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார் ஆஷா அஜித்.

https://www.bbc.com/tamil/articles/c04y37zk0v1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.